Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருந்தே இல்லா நோய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மாலை நேரச் சூரியன் மறையும் காட்சி அத்தனை அழகாய் இருந்தும் மதுவால் அதை இரசிக்க முடியவில்லை. பெரிய தோட்டத்துடனான வீடு. சமதரையாக இல்லாது மேடும் பள்ளமுமாக இருந்ததில் அதற்கேற்ற நிபுணர்களைக் கொண்டு காசைப் பார்க்காமல் வடிவமைத்ததில் எத்தனைத்தரம் பார்த்தாலும் சலிக்காத அழகுடன் அந்த வீட்டின் பின்பகுதியும் தோட்டமும் அழகாய் இருக்கும். வரும் நண்பர்கள் அதைப் பார்த்துப் பொறாமை கொண்டாலும்கூட வாய்விட்டு அதன் அழகைப் புழுகாமலும் போனதில்லை. நிபுணர்கள் ஒருதடவைதான் வந்து வடிவமைத்தார்கள். அதன்பின் அவளே சிலதை புதிதாக நட்டும் மாற்றியும் அமைத்திருக்கிறாள்.

ரோசாக் கன்றுகள் மட்டும் விவதவிதமாகப் பூத்துக் குலுங்குவதை எத்தனை தடவை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. மாதம் ஒரு தடவை ஒருவர் வந்து கத்தரிப்பதைக் கத்தரித்து இலைகளைக் கூட்டிச் சுத்தம் செய்து புற்களை எல்லாம் வெட்டி அழகுபடுத்திவிட்டுப் போவார். அவர் இறந்து நான்கு மாதங்களாகிவிட்டன. வேறு ஆளைத் தேடவேண்டிய மனோநிலையும் அவளுக்கு இல்லாததனால் தோட்டம் குப்பைகள் நிறைந்து செடிகள் கண்டபடி வளர்ந்து தோட்டத்தின் அழகைக் கெடுக்கிறதுதான். இருந்தும் மது அதைப்பற்றி அக்கறையே இல்லாது மனதை எங்கோ விட்டபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

விடாது அழைத்த தொலைபேசி அழைப்பு அவளை நிகழ்வுக்கு கொண்டுவர, எழுந்து சென்று தொலைபேசியை எடுக்கு முன்னர் அது நின்றுபோய் இருந்தது. திரையைப் பார்த்தவளுக்கு மனதில் குற்ற உணர்வு ஏற்பட உடனே வந்த இலக்கத்தை அழுத்தி, அந்தப்பக்கம் தொலைபேசி எடுக்கப்பட "மன்னிச்சுக் கொள்ளுங்கோ அக்கா. எதோ நினைப்பில இருந்திட்டன். உடன வாறன்"  என்றபடி சப்பாத்தைக் கொழுவிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

பள்ளி முடிந்து வந்ததும் பிள்ளைகளுக்கு கொறிக்க ஏதாவது கொடுத்து ஒருமணிநேரம் தொலைக்காட்சி பார்க்க விட்டுவிட்டு ஐந்து மணி தொடக்கம் ஏழு மணிவரை ஒரு தமிழ் பெண்ணிடம் ஆங்கில ரியூசனுக்கு விட்டுவிட்டு இவள் திரும்பிவந்து இரவு உணவைத் தயாரித்து பிள்ளைகளின் உடைகளை எடுத்து கூடையில் போட்டுவிட்டு வீட்டையும் கூட்டி எல்லாம் ஒழுங்காக்கிவிட்டு பிள்ளைகளைத் திருப்பிக் கூட்டிவந்து இரவு உணவை உண்பதற்கு மேசைக்கு அழைக்கிறாள்.   

"அப்பா எங்கை அம்மா?"

"அவருக்கு வேலை கூடவாம். கொஞ்சம் பொறுத்துதான் வருவார் அப்பா. நீங்கள் சாப்பிடுங்கோ "

"நீங்கள் சாப்பிடேல்லையே?"

"அப்பா வந்தபிறகு அவரோட சேர்ந்து சாப்பிடுறன்" என்றவள் மகனின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள்.

" அப்பா சொக்லற் கொண்டு வருவாரோ? " மகள் கேட்கிறாள்.

"அப்பான்ர செல்லமெல்லோ நீங்கள். கட்டாயம் கொண்டு வருவார்"

"நேற்று அப்பா கொண்டுவரேல்லையே"

"அப்பா கொண்டுவந்து குசினி மேசையில் வச்சவர். நரி வந்து கொண்டு போட்டுது. இண்டைக்கு கட்டாயம் கொண்டருவார்"

பிள்ளைகளிடம் பொய் சொல்கிறோமே என்ற வேதனையும் வெட்கமும் அவள் மனதைச் சூழ்கிறது.

நாளை நான் கட்டாயம் இருவருக்கும் சொக்ளற்  வாங்கிக் கொடுக்கவேண்டும். அல்லது அவர்களுக்கு இவளின் மேல் நம்பிக்கையே இல்லாது போய்விடும்.

தனக்குள் தீர்மானித்தவளாக மிகுதி வேலைகளை முடித்து பிள்ளைகளைப் படுக்கைக்கு அழைத்துப் போய் தூங்க வைத்தபின்னும்  அடுத்தநாட் காலை வெள்ளன எழுந்து சமைத்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் எழ, சாப்பிட வேண்டும் என்ற நினைப்பேயின்றி படுக்கைக்குச் செல்கிறாள் மது.

 

...........................................................................................................................................................

 

பிரான்ஸ்சில் பிறந்த மது படிப்பில் கெட்டிக்காரி மட்டுமன்றி அழகிலும் குறைந்தவளல்ல. அவளின் பன்னிரண்டு வயதில் சராசரித் தமிழ்ப் பெற்றோரின் ஆசைக்கிணங்க லண்டனுக்குப் பெற்றோரோடு இடம்பெயர்ந்தவளுக்கு முதலில் லண்டன் பிடிக்காவிட்டாலும் போகப்போக யூனியில் இடம் கிடைத்து படிக்கவாரம்பித்ததும் பிடித்துப்போய்விட்டது.

பெற்றோர்கள் அங்கு கஷ்டப்பட்டுச் சேர்த்த காசைக் கொண்டுவந்து ஒரு கடை எடுத்து நடத்தவாரம்பிக்க இவளுக்கு அவர்களின் தலையீடு குறைய நிம்மதியாகப் படிக்கவாரம்பித்து தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்தாள்.  இரவில் அவள் பெரிதாக வெளியே சென்றதில்லை. ஆனாலும் ஒரு கூடப் படிக்கும் நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற அழைப்பை ஏற்று தாயிடம் கெஞ்சி மண்றாடி இரவு வரப் பிந்தும். அவளின் தந்தையே எல்லாம் முடியக் கூட்டிக்கொண்டு வந்து விடுவார் என்று தாயைச் சம்மதிக்க வைத்தபோது  "இதுதான் கடைசி. இனிமேல் இப்பிடிக் கண்டபடி திரிய அப்பா சம்மதிக்க மாட்டார்" என்ற எச்சரிக்கையோடு தாய் அனுமதிக்க நண்பியுடன் சென்றவள், பிறந்தநாள் கொண்டாட்டம் பப் ஒன்றில் என்றதும் நடுங்கித்தான் போனாள்.

"எனக்குப் பயமாய் இருக்கு டொரத்தி, அம்மாக்குத் தெரிஞ்சா பிரச்சனை" என்று முனுமுனுதத்தவளை "கேய் யு ஆர் நொட் எ சைல்ட் " என்று நகைத்தபடி கேலி செய்தாள் டொரத்தி. அங்குதான் நவீனை முதல் முதலில் சந்தித்தது. கண்டதும் காதல் என்று ஒன்றும் ஏற்படாவிட்டாலும் அவனும் அதே யூனியில் படித்ததால் அதன்பின் தானாகவே நிகழ்ந்த சந்திப்புக்களும் அவனின் கண்ணியமும் அவளைக் கவர அவனே "நாளை என்னுடன் ரெஸ்ரோரன்ற் வருகிறாயா" என்று அழைத்தான்.

ஒருநாள் கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் என்னைப் போலத்தான் உனக்கும் இரவிலே தூக்க முடியாமலிருக்கா என்று அவன் கேட்டு தன் காதலை வெளிப்படுத்த, நிறையத் தமிழ்ப் படம் பார்க்கிறாயா என்று சினிமாப் பாணியிலேயே அவளும் வெட்கப்பட்டு காதலை வெளிப்படுத்த காலம் எப்படித்தான் விரைதோடியதோ இருவருக்கும் தெரியவில்லை.

பெற்றோருக்குச் சொல்லாமல் இரவில் அதிகம் வெளியே தாங்காமல் படிப்பையும் காதலையும் சமமாகப் பார்த்துக்கொண்டதால் எந்தத் தடங்கலும் ஏற்படாது போனது. படித்து முடித்த கையோடு பிரெஞ்சு விமான சேவை ஒன்றில் நல்ல ஊதியத்துக்கு உடனேயே அவளுக்கு வேலையும் கிடைத்தது. அவன் எத்தனை முயன்றும் ஒரு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கவே இல்லை.

"உமக்கு என்ன. நல்ல வேலையும் சம்பளமும். ஆண்களுக்கு ஏன் வேலை தரப்போறாங்கள்" என்பதாய் சலிப்புடன் அவன் கதை  நீளும்.

"நவீன், மனத்தைத் தளர விடவேண்டாம். எதுக்கும் சும்மா இருக்காமல் மாஸ்ரஸ் செய்யுங்கோ"

"மூண்டு வருடங்கள் படிச்சே அலுத்திட்டுது. இன்னும் ஒரு வருடமா?"

"கட்டாயம் அதுக்குப் பிறகு வேலை கிடைக்கும். ஒரு பகுதி நேர வேலை செய்து கொண்டு படியுங்கோ"

நவீனுக்கு நண்பர்களூடாக மதுவே வேலையும் ஒழுங்குசெய்து அவனுக்கு பலவகையிலும் உதவியாக இருந்ததுமல்லாமல் வாரம் ஒருதடவை இருவரும் நாள் முழுதும் எங்காவது சுற்றிவிட்டு வீடுவருவதுமாக காதலையும் தக்கவைத்துக் கொண்டிருக்க மதுவின் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது.

"மது, இங்க இந்தப் படத்தைப் பார். பெடியன் இன்ஜினியர். இரண்டே இரண்டு பெடியள்"

படத்தை மறுக்காமல் வாங்கி இரண்டு நாள் வைத்திருந்துவிட்டு "எனக்குப் பிடிக்கேல்லை" என்றவளை ஏன் எதுக்கு என்று கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டனர். ஒன்று இரண்டாகி நான்காகி ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு நொண்டிச் சாட்டுச் சொல்லிக் காலங்கடத்தி, நவீன் படித்து முடித்ததும் இனிச் சொல்லித்தான் தீரவேண்டும் என்று இருவரும் முடிவெடுத்துத் தாயிடம் வருகிறாள் மது. எல்லா விசாரணைகளும் முடிந்தபின்னர்

"உது சரிவராது. உந்த ஊர்ல செய்தால் எங்கட மானம் போயிடும்"

"நாங்கள் இரண்டுபேரும் லவ் பண்ணுறம். அவரை விட்டுட்டு வேற யாரையும் நான் கட்ட முடியாது"

"உதுக்குத்தான் நாங்கள் பெத்து வளர்த்தனாங்களோ" 

"அம்மா எனக்கு இப்ப 24 வயது"

"அதுக்காக கண்டவனையும் கட்டப்போறன் எண்ணுவியோ?"

"உங்கட சம்மதத்தோட தான் கட்டவேணும் எண்டுதான் எங்களுக்கும்  விருப்பம்"

"கடைசிவரை நாங்கள் சம்மதிக்கமாட்டம்"

"சரியம்மா இனி உங்கடை விருப்பம்"

அடுத்த ஒருவாரம் தாயோ தகப்பனோ இவளோடு கதைக்காமல் இவளை உதாசீனம் செய்ய, அடுத்தடுத்த நாட்களில் நவீனுடன் கதைத்து அவனை ஒருவாறு சம்மதிக்க வைத்து அவன் பெற்றோருடன் கதைக்கவைத்து எல்லாம் தோல்வியில் முடிய, "மது நாங்கள் அடுத்த மாதமே கலியாணம் கட்டுவம் என்று இவளுக்கு நம்பிக்கை குடுத்து இருவரும் பதிவுத் திருமணம் செய்தபின்னரும் இரு பக்கத்தாரும் இவர்களை ஒதுக்கிவைக்க,  நவீன் இவளை கவலை கொள்ளவிடாது தாங்கிப்பிடித்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கும் வேலை கிடைத்து இரண்டு ஆண்டுகளில் இருவர் பேரிலும் வீடு ஒன்றையும் வாங்கிய பின்னர்தான் அடுத்ததாக குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இருவரும் முடிவெடுத்ததும்.

குழந்தை வயிற்றில் வளர வளரப் பெற்றோரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் எழுந்ததை உணர்ந்தும் இவள் அடக்கிக்கொண்டாள். முதல் ஆண்குழந்தை பிறந்தபோது எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு நவீன் சென்று தன் பெற்றோரை மட்டுமன்றி மாமன் மாமியைச் சந்தித்ததில் பெற்றோரின் மனம் பெரிதாக இளகாவிட்டாலும் மதுவின் பெற்றோர் உடனே வந்து பேரப்பிள்ளையைப் பார்த்தது மதுவுக்கும் இவனுக்கும் ஆறுதலாகிப் போனதுதான்.  

ஒருமாதம் செல்ல பிள்ளையையும் தூக்கிக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குப் போன நவீனையும் மதுவையும் மன்னிக்க மனமில்லை தான் அவர்களுக்கு. ஆயினும் பேரனைப் பார்த்தபின் மனம் இளகியதில் உள்ளே வாங்கோ என்று  கூப்பிட்டு இருக்க வைத்தாலும் பெரிதாக அவர்களுடன் ஒட்ட மனம் ஒப்பவில்லை மதுமிதாவால்.

நவீன் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவந்தாலும் இவள் எப்பவாவதுதான் சென்றுவருவாள். அவவின்ர சாதித் தடிப்பைப் பாரன் என்று நவீனின் தாய் கூறுவதை நவீன் ஏற்காது அவள் அப்பிடிப் பட்டவள் இல்லை அம்மா. நீங்களும் தானே அவள் வந்தால் முகம் குடுத்து பெரிசாக் கதைக்கிறேல்லை என்பான்.

இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பின் பெற்றவளே மதுவைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக்கொண்டாள். ஆனாலும் பேர்த்தியைப் பார்க்க நவீனின் பெற்றோர் வந்தபோது கதவைத் திறந்துவிட்டு வாங்கோ என்றுகூடச் சொல்லாமல் உன்ர மாமனும் மாமியும் வந்திருக்கினம் போய்ப் பார் என்றுவிட்டு சமையல் அறையில் போய்நிற்க, மதுவுக்குத் தாயின் மேல் கோபம் வந்ததுதான்.

எப்பிடிச் சொன்னாலும் அம்மா விளங்கிக் கொள்ளப்போவதில்லை. ஆனாலும் ஆறுதலா அம்மாவுக்கு விளங்கப்படுத்தவேணும் என எண்ணிக்கொண்டாள். அந்த நேரம் பார்த்து நவீனின் நண்பன் வேணுவும் மனைவியும் வீட்டுக்கு வந்ததில் நிலமை மோசமடையவில்லை. மதுவின் பெற்றோருடன் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு எங்கே நவீன் என்கிறாள் வேணுவின் மனைவி கலா. வேணு கேட்க வேண்டிய கேள்வியை இவள் ஏன் கேட்கிறாள் என்னும் நெருடல் மதுவுக்கு எழுந்தாலும் அவருக்கு இண்டைக்கு அரைநாள் வேலை. இன்னும் ஒரு மணித்தியாலத்தில வந்திடுவார் என்று மது கூறியவுடன் சரி அவர் வரும்வரை யும் இருந்திட்டுப் போவம் என்கிறாள் கலா.

அவளின் நடவடிக்கை மதுவுக்குப் பெரிதாகப் பிடிப்பதில்லை. ஆரம்பத்தில் திருமணமான புதிதில் இவர்கள் மனதை ஆற்றிக்கொள்ள நண்பன் வேணுவின் வீட்டுக்குப் போவார்கள். மது இருப்பதைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல் நவீனுடனேயே அவள் கதைத்துக்கொண்டே இருப்பாள். ஆரம்பத்தில் அது  சாதாரணம் என்றுதான் மதுவும் எண்ணினாள். ஆனால் போகப்போக மது அவதானித்துப் பார்த்ததில் நவீனைக் கண்டவுடன் அவள் கண்களில் ஒரு ஒளிர்வை அவதானித்தபின் மது அவர்கள் வீட்டுக்குச் செல்வதை குறைத்துக்கொண்டாலும் தொலைபேசியில் நவீனும் வேணுவும் கதைத்துக்கொள் வதை நிறுத்தவில்லை.

மாமியும் மாமாவும் வந்திருக்கும்போது தாம் வந்தது எத்தனை இடைஞ்சல் என்று விளங்காமல் நவீனைப் பார்த்துவீட்டுப் போவோம் என்றது எரிச்சலைக் கிளப்பியதுதான். ஆயினும் போங்கோ என்று சொல்லவா முடியும்? வேணு மிகவும் நல்லவர். மதுவைத் தன் தங்கை என்று கூறி நாகரீகமாக நடந்துகொள்வார். ஆனால் இவள் கலாதான் சரியில்லை என்று மதுவின் மனம் சொல்லிக்கொண்டே இருக்குது.

நவீன் வேலையால் வந்தவுடன் அவன் பெற்றோருடன் கதைக்கக்கூட விடாது. கலாவே அவனுடன் கதைத்துக்கொண்டிருக்க மதுவின் தாய்தான் இவளைக் குசினிக்குள் அழைத்துச்சென்று உவளை முதல்ல வெளியில கலை. மருமேன் வந்தநேரம் தொடக்கம் விடாமல் கதைச்சுக்கொண்டிருக்கிறாள். எனக்கெண்டால் நல்லதாப் படேல்லை என்றபின் இவள் சென்று நவீன் நீங்கள் குளிச்சிட்டு வந்து கதையுங்கோ என்று சொல்ல, நவீனின் தாயும் “தம்பி அவையை அனுப்பிப்போட்டு வந்து குளிக்கட்டன்” என்று சொன்னதுமில்லாமல் “நீங்கள் என்னொருநாள் வந்து ஆறுதலாக கதையுங்கோவன்” என்றதும் வேணு ஓமம்மா இன்னொரு நாளைக்கு வாறம் என்றபடி எழ, கலாவும் எழும்பவேண்டியதாகிவிட்டது.

 

**********************************************************************************************************

பிள்ளைகள் இருவரிலும் நவீன் உயிரையே வைத்திருக்கிறான். மூத்த மகன் பள்ளி செல்லும் வரையிலும் மதுவுக்கு எல்லா உதவிகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தது  நவீன்தான். அவனின் பெற்றோர் அங்கு வருவதற்கு முன்னர் அவன் இன்னொரு குடும்பத்தினருடன் தான் ஒரு அறையில் வசித்தான். அவர்களே இரண்டு நேர உணவும் கொடுத்து அவனை குடும்பத்தில் ஒருவானாக நடத்தினர். அவர்களின் இருகுழந்தைகள் கூட மாமா மாமா என்று இவனுடன் மிகவும் இயல்பாகப் பழகுவதில் இவன் தனிமையை உணர்ந்ததுக்கூட இல்லை. அவர்களைவிட இன்னும் இரண்டு நண்பர்களின் குடும்பங்களும் இருந்ததில் அவன் பொழுது மதுவைத் திருமணம் செய்த பின்னரும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.    

இப்ப ஒரு ஆண்டாக அவனுக்கும் வேலை வேறு இடத்தில். போவதற்கும் வருவதற்குமே இரண்டுமணிநேரம் எடுப்பதாக சொல்லிச் சலித்துக் கொண்டாலும் இவளும் கார் எடுத்தபடியால் இவளே பிள்ளைகளை நேசறிக்கும் பள்ளிக்கும் ஏத்தி இறக்குவதில் இவள் நேரம் போய்விடுகிறது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்  பிறந்தபின் பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என்று இவள் வேலையை விட்டுவிட்டாள். இப்ப அவர்கள் பள்ளிக்குச் செல்வதால் அவள் மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என எண்ணி அவள் இணையவெளியில் தேடி ஒரு தனியார் வைத்திய நிலையத்தில் வரவேற்பாளராக வேலையைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்து நவீனுக்கு போன் செய்ய எண்ணி போனை எடுத்தால் அவன் போன் நிறுத்திவைக்கப்பட்டிருக்கு. சரி அவனுக்கு வேலையில் பிஸி போல என்று எண்ணியபடி தன் காரில் ஏறி அமர்ந்து அதை செலுத்தத் தொடங்குகிறாள்.

மூன்று சந்திகள் கூடுமிடத்தை அடைந்து பச்சை விளக்குக்காய் காத்திருக்கிறாள். இவளின் முன்னே நான்கு கார்கள் நிற்க அந்தச் சுழற்சி வீதியில் பல கார்கள் வந்து வளைந்து செல்ல, இது நவீனின் கார் போல இருக்கே. பக்கத்தில் கலா இருக்கிறாள். என்ன நடக்குது/ இவர் எனக்கு ஒன்றும் சொல்லாமல் எதுக்கு அவளை ஏற்றிக்கொண்டு போறார் என்று எண்ணியபடி உடனே மீண்டும் அவனுக்கு போன் செய்ய அது அப்பவும் நிறுத்திவைக்கப்பட்டிருக்க மதுவின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைகிறது.

சைக் எனக்கு முன்னால் வாகனம் இல்லாவிட்டால் பின்னால் போய் பார்த்திருக்கலாம். சீச்சீ நவீன்  அப்படிப்பட்டவர் இல்லை என்று மனம் கூறினாலும் நிலைகொள்ளாமலும் அவன் வீடுவந்து சேரும்வரை தவித்ததுதான். அவளுக்கு வேலை கிடைத்த மகிழச்சியே தொலைந்துபோயிருக்க இரவு அவன் வீடுதிரும்பும் வரை ஒரு வாய் உணவுகூட உள்ளே செல்ல மறுத்தது.

 

வழமைக்கு மாறாக ஒரு மணிநேரம் பிந்தித்தான் அவன் வந்திருந்தான். அவள் அவசரப்படாமல் அவனுக்கு உணவைப் பரிமாற அவனும் உண்டுமுடித்துக் கைகழுவி வருமட்டும் பொறுமை காக்கிறாள்.

ஏன் நவீன் இண்டைக்கு லேட்?.

கொஞ்சம் வேலைகூட. அதுதான் முடிச்சிட்டு வந்தனான்.

நான் பதினொரு மணிக்கு உங்களுக்கு மூன்றுதரம் போன் செய்தனான். சுவிச் ஓஃப் என்று சொல்லிச்சு.

போன் அடிச்சனீரே. இரவு நான் சார்ச் போட மறந்திட்டன்.

பதினொரு மணி போல சட்டன் சிற்றிப்பக்கம் வந்தீங்களா?

ஓம் மது. உவன் வேணு போன் செய்து கலாவுக்கு கொஸ்பிற்றல்ல ஒரு அப்பொயின்ற்மென்ட் இருக்கு. ஒருக்காக் கூட்டிக்கொண்டு போய் விடுறியோ எண்டு கேட்டவன். அவன் ஏதோ அலுவலா மன்சஸ்ரர் போகவேண்டி வந்திட்டுதாம். நான் முதல்ல மாட்டன் எண்டுதான் சொன்னனான். அவன் டேய் மச்சான் கெல்ப் பண்ணடா எண்டு கெஞ்சினதாலதான் வேற வழியில்லாமல் ஓம் எண்டனான்.

ஏன் கலா சின்னப் பிள்ளையே? அவவுக்குத் தனியப் போக ஏலாதாமா?

நான் நெடுகவே கூட்டிக்கொண்டு போறன். ஒருக்காக் கேட்டான். மறுக்க முடியேல்லை.

போனுக்கு சார்ச் இல்லை எண்டு சொன்னியள். எப்பிடி வேணு போன் செய்தவர்?

அவன் விடிய போன் செய்த உடனதான் போன் நிண்டது. அவன்ர வீடு தெரிஞ்சதால அவன் இத்தனை மணிக்கு எண்டதும் நான் புறப்பட்டிட்டன். என்னை நீர் சந்தேகப்படுறீரோ?

நான் உங்களை சந்தேகப்படேல்லை. ஆனால் உப்பிடி இனிமேல் யாரையும் உங்கட வாகனத்தில ஏத்திக்கொண்டு திரியவேண்டாம். எனக்கு அது பிடிக்கேல்லை.

சரியெடா செல்லம். இனிமேல் உம்மைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டன்.

எனக்கு வேலை கிடைச்சிருக்கு. காலை ஒன்பதில் இருந்து பன்னிரண்டு வரை. அந்த நேர்முகத் தேர்வுக்குப் போட்டு சிக்னலில நிக்கேக்குள்ள தான் உங்களைக் கண்டனான்.

ஓ செல்லத்துக்கு வாழ்த்துகள். நீர் கட்டாயம் வேலைக்குப் போகவேணும் எண்டு இல்லை மது. என்ர சம்பளம் தாராளமாய்க் காணும்தானே.

எனக்கு வீட்டில இருக்க போரடிக்குது. பிள்ளையளைப் பள்ளிக்கு விட்டிட்டு நான் சும்மாதானே இருக்கப்போறன். வேலைக்குப் போனால் மனதுக்கு இதமாய் இருக்கும்.

உமக்கு வேலைக்குப் போறது மகிழ்ச்சி எண்டால் நான் தடுக்கேல்லை. என்ஜோய் என்கிறான்.         

மதுவுக்கு அவனைப்பார்க்கப் பாவமாக இருக்கு. அவர் எனக்குப் பொய் சொல்லேல்லை. நான் கேட்டது ஓம் என்று சொல்லிட்டார். நான் தான் அவரை வீணா சந்தேகப்பட்டிட்டன் என மனதுள் எண்ணியபடி அவனுடன் செல்கிறாள்.

நல்ல காலம் நான் மதியம் கலாவைக்கூட்டிக்கொண்டு போனது மதுவுக்குத் தெரியாது என எண்ணி இல்லை என்று பொய் சொல்லியிருந்தால் நல்லா மாட்டுப்பட்டிருப்பன். கடவுள்தான் என்னைக் காத்தது என மனதுள் எண்ணிக் கொள்கிறான்.

 

*********************************************************************************************************************

 

அதன் பின் நான்கைந்து மாதங்கள் எல்லாமே மகிழ்வாய்தான் போய்க்கொண்டிருந்தன. அவளும் வேலை பிள்ளைகள் சமையல் என பிஸியாகிவிட ஒருநாள் வேலை முடிந்து வரும்போது உணவுப்பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் செல்லும்போது நவீனின் இன்னொரு நண்பனின் மனைவி சுகியை கடை வாசலில் பார்க்கிறாள். இருவரும் சுகநலம் விசாரித்தபின் “நான் கேட்கிறேன் என்று குறை நினைக்காதையும். எனக்கு உம்மைக் கண்டபிறகு சொல்லாமலும் இருக்கமுடியேல்லை” என்கிறாள் சுகி.

“புதிர் போடாமல் விஷயத்தைச் சொல்லும்” என்கிறாள் மது சிரித்தபடி.

“உமக்கும் நவீனுக்கும் ஏதும் பிரச்சனையா”

“இல்லையே. ஏன் அப்பிடிக்க கேட்கிறீர்”

“சுதனும் நானும் இரண்டுதரம் இதுபற்றிக் கதைச்சனாங்கள். ஆனாலும் என்ன எண்டு தெரியாமல் உம்மோடை கதைக்கிறது எண்டு நான் பேசாமல் விட்டிட்டன்”.

“ஐ”யோ எனக்கு டென்சனாக்குது. முதல்ல என்ன எண்டு சொல்லும்”

எனக்கு வேணுவின் வைஃப் கலாவைப் பிடிக்கிறேல்லை. ஆனால் அதுக்காக நான் இதைச் சொல்லேல்லை”

“என்ன விசயம்எண்டு சொல்லாமல் என்ன பீடிகை. நேரா விசயத்தைச் சொல்லும்”

“சுதன் இரண்டுதடவை கலாவையும் நவீனையும் கண்டவராம். ஒருக்கா சொப்பிங்க் மோலுக்குள்ள, மற்றத்தரம் பக்கத்து சிற்றியில் உள்ள உணவகத்தில, நவீனைக் கேட்டவராம். அவர் ஏதோ சாக்குப்போக்குச் சொன்னவர் எண்டு சுதன் சொல்ல நீங்கள் உங்கட அலுவலைப் பாருங்கோ என்று நான் சொல்லீற்றன்”

“ஓ அப்பிடியே. சிலவேளை வேணு கேட்டால் கூட்டிக்கொண்டு போறவர்தான். எனக்கும் சொல்லுறவர்”

“எனக்கு ஒண்டும் இல்லை மது. வேணு நல்லவர்தான். ஆனால் கலா சரியில்லை. எதுக்கும் கவனமா இருங்கோ. உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன். நான் வாறன்”

சுகி சென்றபின்னும் மதுவால் அந்த இடத்தை விட்டு நகர விடாமல் கால்கள் இறுகிப்போயின. அடி வயிற்றிலிருந்து எதுவோ உருண்டு பிரண்டு நெஞ்சில் வந்து அடைத்ததுபோல் இருக்க சுவாசத்தை ஐந்துமுறை ஆழமாக இழுத்து காற்றை உள்வாங்கி வெளியே விட மனது சிறிது தளர்ந்ததுபோல் இருக்க, திரும்ப வீட்டுக்குப் போவோமா என எண்ணியவள் வேண்டாம் வந்த அலுவலை  முடித்துவிட்டே செல்வோம் என மனதை ஒருநிலைப்படுத்தியபடி கடைக்குள் செல்கிறாள். 

வீட்டுக்கு வந்தபின் பொருட்களை அந்தந்த இடத்தில் அடுக்கி வைத்தபின் மனதைக் குவித்து அவசரப்படவோ கோபப்படவோ கூடாது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் முன்னர் இவள் குழந்தை வயிற்றுடன் இருந்தபோது இவளின் பாதுகாப்புக் கருதி இவள் போனிலும் தன் போனிலும் நவீன் லைப் லொகேஷன் போட்டிருந்தான். குழந்தைகள் வளர்ந்தபின் தேவையில்லை என அதை இவளே நிறுத்தி வைத்திருந்தாள்.

மாலையில் அவன் வீட்டுக்கு வந்தபின் குளித்துவிட்டு வந்துதான் பிள்ளைகளுடன் விளையாடுவான். வெளியில் பல இடங்களுக்கும் செல்வதனால் பிள்ளைகளுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது என்பான். அத்தனை கவனம் குடும்பத்தின் மேல். அவன் வாங்கிக்கொண்டு வரும் சொக்ளற் மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்காக மட்டுமன்றி அவனிடமுள்ள அதீத விருப்பத்தில் எப்ப அப்பா வருவார் என்று இரு குழந்தைகளுமே தாயைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இன்று அவன் வந்ததும் எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாது குளிச்சிட்டு வாங்கோ என்று துவாயைக் கொடுத்துவிட்டு அவன் உள்ளே சென்றதும் அவனது போனை எடுத்து லைப் லொகேசனை அக்ரிவ் ஆக்கிவிட்டு திரும்ப வைத்துவிட்டு இருந்துவிட்டாள். அவனுடன் எதுவுமே நடக்காததுபோல சிரித்துக் கதைத்துவிட்டு தான் எத்தனை பொறுமையுடன் நவீனின் விடயத்தை கையாளக்கிறேன் என்று தன்னைத்தானே மனதுள் மெச்சிக்கொள்கிறாள்.

 

அடுத்து இரண்டு நாட்கள் கண்காணித்ததில் அவன் வீட்டுக்கும் வேலைக்குமாகத்தான் செல்வது தெரிய சுகியின் கதையைக் கேட்டு நான்தான் வீணாக நவீன் மேல் சந்தேகப்பட்டுவிட்டேனோ என்ற சந்தேகம் கூட எழுகிறது  அவளுக்கு. ஆனால் மூன்றாம் நாள் மதியம் அவனின் கார் வேணுவின் வீட்டு லொகேசனில் நிற்பது தெரிய மனதில் இனம்புரியாத குழப்பமும் கோபமும் எழுந்ததுதான். ஆனாலும் அங்கு வேணுவிடம் கூடப் போயிருக்கலாம் என்ற எண்ணம் எழ பதட்டப்படாது தொடர்ந்தும் கவனிக்கலானாள். அடுத்த இரண்டு நாட்கள் எதுவுமற்றுக் கழிய அதற்கு அடுத்தநாள் வீட்டில் இருந்து புறப்பட்ட கார் நேரே வேணுவின் வீட்டுக்குச் சென்றது மட்டுமன்றி கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அந்த இடத்திலேயே நிற்க, இவளின் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.

அவசரப்பட்டு அவனை எதுவும் இப்ப கேட்டுவிடக் கூடாது என எண்ணியவள், அதற்கேற்றாற்போல் தன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படாதவாறு  பார்த்துக்கொண்டாள். நவீனைக் கவனித்ததில் அவன் சாதாரணமாகத்தான் இருக்கிறான். ஆனாலும் யாரையும் நம்பமுடியாது என அவள் மனம் சொல்ல, தொடர்ந்தும் கண்காணிக்க இரு வாரங்களாக மதிய நேரத்தில் அவனின் கார் வேணுவின் வீட்டுக்குச் செல்வதும் போவதுமாக இருக்க இன்று அவனை அதுபற்றிக் கேட்பதென முடிவெடுத்துக் காத்திருக்கிறாள்.

வழமைபோல் அவன் குளியல் அறைக்குச் செல்ல அவனின் போனை எடுத்து லைப் லொகேசனை நிற்பாட்டிவிட்டு அவன் கதைத்த தொலைபேசி இலக்கங்களை பார்த்தபோது பெயர் இல்லாது ஒரு தொலைபேசி இலக்கம் பல தடவை அவனுக்கு வந்திருக்க, அந்த இலக்கத்தை அழுத்தி யார் என்று கேட்போமா என இவள் நினைத்த வேளை மீண்டும் அந்த போன் உயிர்பெற கலோ என்று பெண் குரல் ஒன்று கேட்கிறது. உடனே யார் நீங்கள் என்று கேட்போமா என்று எண்ணியவள் வேண்டுமென்றே மௌனம் காக்க, அந்தபக்கம் போன் கட்டாகிவிட இவள் போனை வைத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றுவிடுகிறாள். 

நவீன் உணவு அருந்தி முடிய பிள்ளைகளுடன் விளையாடி அவர்களும் களைப்புடன் தூங்கச் சென்ற பிறகு என்ன நவீன் வேணு வீட்டுக்கு அடிக்கடி உங்கட கார் போய்வருதாம். சிலபேர் பார்த்திட்டு எனக்கு போன் பண்ணிச் சொல்லிச்சினம் என்கிறாள்.

அவனின் கண்களில் ஒரு திடுக்கிடல் தெரிய உடனேயே தன்னை இயல்பாக்கிக்கொண்டு அவனும் நானும் ஒரு புரொஜெக்ட் சேர்ந்து செய்யிறம். அதுதான் அவனைச் சந்திக்க அவன் வீட்டுக்குச் செல்லவேண்டியதாப் போச்சு என்கிறான். ஒ அப்பிடியா என்றுவிட்டு அவள் ஏதும் பேசவில்லை. உங்கள் போன் றிங் பண்ணினது. துவா எடுத்திட்டா. ஏன் அப்பாவின் போனை எடுத்தீங்க என்று அவவை ஏசீற்று இனிமேல் எடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறன். சொல்லிவிட்டு கட்டிலில் அமர அவன் பதைப்புடன் போனை எடுத்துப் பார்த்துவிட்டு, புது இலக்கமாக இருக்கு. யார் என்று தெரியேல்லை. காலமைதான் அடிச்சுப் பார்க்கவேண்டும் என்கிறான். அந்த இலக்கத்தில் இருந்து பலதடவைகள் போனில் பேசப்பட்டிருப்பது தனக்குத் தெரியாது என்று நினைத்துக் கூறுகிறான்.   தீர விசாரிக்காது கதைப்பது சரியல்ல என எண்ணி மனதை அடக்கியபடி அடுத்தநாள் விடியலுக்காகக் காத்திருந்தாலும் எப்படி அதை அறிந்துகொள்வது என்று மனம் விடாப்பிடியாக யோசிக்க அவளுக்கு ஒரு வழி புலப்படுகிறது.

காலை எழுந்து இயல்பாக எல்லாவற்றையும் செய்து நவீனுக்கு உணவும் கட்டிக் கொடுத்து அவனுக்குத் தெரியாமல் வேணுவின் தொலைபேசி இலக்கத்தை எடுத்துவிட்டு மீண்டும் தொலைபேசியை அவன் வைக்குமிடத்தில் வைத்து சிரித்த முகத்துடன் அவனை வழியனுப்பி வைத்துவிட்டு யன்னலில் நின்று அவன் போவதை உறுதி செய்துவிட்டு உடனே வேணுவின் இலக்கத்தை அழுத்துகிறாள்.

மூன்று நான்கு தடவை போன் அடிக்கும் சத்தம் கேட்டும் அவன் எடுக்கவில்லை. விடாமல் தொடர்ந்தும் அடித்துக்கொண்டிருக்க மூன்றாம் தரம் தொலைபேசி எடுக்கப்பட்டு கலோ என்று கிணற்றுக்குள் இருந்து கதைப்பதுபோல் குரல் கேட்கிறது.

“வேணுவா கதைக்கிறீர்கள்?.

“ஓம் நான்தான் நீங்கள் யார்?

“சொறி நீங்கள் இன்னும் எழும்பவில்லைப் போல. நான் நவீனின் வைஃப் மது”

“ஓ ஓ சொறி போனில் நாங்கள் கதைக்காதபடியால் உங்கட குரல் விளங்கேல்லை. ஏதும் அவசரமோ?

“உங்கட வைஃப் கலாவிட போன் நம்பர் வேணும்”

“ஓ நான் உங்களுக்குப் போட்டுவிடுறன். நவீன் உங்களுக்குச் சொல்லேல்லையா? நான் இப்ப ஒரு வாரமாக் கனடாவில நிக்கிறன். நாளையிண்டைக்கு வந்திடுவன்”

“எனக்கு அவர் சொல்ல மறந்திட்டார். சரி நீங்கள் போட்டுவிடுங்கோ”

போனை வைத்தவுடன் அவளுக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று புரிய நெஞ்செங்கும் எரிகிறது. நவீன் நல்லவர்தான். அந்தக் கலாதான் வலியப் போய் அவர் மனதைக் கெடுத்திருப்பாள். அவசரப்படவே கூடாது. இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இரு என மனம் கூற என்ன செய்வது என்று பலவாறு யோசித்தும் விடை கிடைக்காது பிள்ளைகளை எழுப்பி அவர்களுக்கு எல்லாம் செய்து பள்ளிக்குக் கொண்டுசென்று விட்டபின் தன் வேலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துவிட்டு வந்து கட்டிலில் சரிய, கோகிலா அக்கா தொலைபேசியில் அழைக்கிறார்.

ஆரம்பத்தில் நவீன் இந்தக் கோகிலா குடும்பத்துடன் தான் வசித்தது. குழந்தைகள் பிறந்தபின்னர் அவர்கள் வீட்டுக்குப் போவது குறைந்தாலும் அவர்களுடனான உறவு பலமாகவே இருந்தது. நாளை அவர்கள் மகளுக்குப் பிறந்தநாள். அதனால் மாலை அந்நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள் என்று உரிமையுடன் கோகிலா அழைக்க சரி என்கிறாள். நவீன் வந்தவுடன் கோகிலா அக்காவின் அழைப்பு பற்றிக் கூற முதலில் ஏதோ எண்ணியவன் பின் “நீர் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போம். நான் வேலை முடிய அப்பிடியே வாறன்” என்கிறான்.

அடுத்தநாள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இவள் முன்னரே செல்ல அங்கு இன்னும் இவளுக்குத் தெரிந்த சிலரும் தெரியாதவர்களும் இருக்கின்றனர். மற்றவர்களுடன் கதைத்துக்கொண்டே அப்பப்ப தொலைபேசியில் பார்க்கிறாள். காலையில் திரும்பவும் நவீனின் தொலைபேசியில் லைஃப் லொக்கேசனை அக்ரிவ் ஆக்கியிருந்தாள். நவீனின் கார் இன்று பகல் எங்குமே செல்லாமல் நேரே வேலையிடத்துக்குச் சென்று நின்றதுதான். ஆனால் இப்ப பத்து நிமிடத்துக்கு முன்னர்தான் மீண்டும் கிளம்பி வேணுவின் வீடு இருக்கும் பக்கமாகச் செல்லத் தொடங்க இவளுக்கு மனம் பரபரப்பாகிறது.

உடனே நவீனுக்குப் போன் செய்ய நான் வேலையில் தான் நிற்கிறன். இன்னும் அரை மணித்தியாலத்தில் வந்திடுவன். நீர் போட்டீரோ என்கிறான். நான் இப்பதான் வந்தனான். எல்லாரும் வந்திட்டினம் கெதியா வாங்கோ என்றுவிட்டு மற்றவர்களுடன் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு அரை மணி நேரம் செல்ல மற்றவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் மகனிடம் “அம்மா ஒருக்கா வெளியே போட்டு உடன வாறன். தங்கச்சியைப் பார்த்துக் கொள்ளுங்கோ” என்றுவிட்டு தன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து வீதியைப் பார்த்தபடி இருக்க, ஒரு ஐந்து நிமிடத்தின் பின் நவீனின் கார் வருவது தெரிகிறது.

இரவு ஏழு மணியாகிவிட்டதில் இருள் எங்கும் சூழ்ந்திருக்க கண்களைப் பூதக்கண்ணாடியாக்கிப் பார்த்துக்கொண்டே இருக்க நவீனின் காரின் பின் கதவைத் திறந்து கலா இறங்கி அக்கம்பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு கடகடவென கோகிலா அக்கா வீட்டுக்குச் செல்ல நவீன் காரிலேயே இருக்கிறான். இவள் நினைத்ததுதான் அங்கு நடந்துகொண்டிருக்க இவளும் அசையாது பார்த்துக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் நவீனும் இறங்கி உள்ளே செல்ல, இவளும் இறங்கி காருக்குள்ளேயே வைத்துவிட்டு வந்த பரிசுப் பொதியை எடுத்துக்கொண்டு உள்ளே செல்கிறாள்.

இவளைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தவன் பிள்ளைகள் ஓடிவந்து அப்பா என்று கட்டிக்கொள்ள அவர்களைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள இவளும் வர சரியாக இருக்கிறது. சாப்பிட ஏதும் கொண்டுவரவா என்கிறாள் நவீனைப் பார்த்து. இப்ப வேண்டாம் என்று அவன் கூறும்போதே கோகிலா அக்கா பலகாரத் தட்டுடன் வந்து இவனுக்கும் கொடுத்துவிட்டு அந்தப் பக்கம் இருந்த கலாவுக்கும் கொடுக்கிறார்.

அவர்கள் இருவரையும் கண்காணித்தபடியே இவளும் இருக்கிறாள். கலாவோ அவனோ ஒருவரையொருவர் பார்க்கக்கூட இல்லை. நல்லா நடிக்கிறீர்கள் என இவள் மனம் எண்ணிக்கொள்கிறது. பிறந்தநாள் கேக் வெட்டி எல்லாரும் சேர்ந்து பாட்டுப்பாடி.. பிள்ளைகள் எல்லோரும் குதூகலமாக இருக்கின்றனர். கோகிலாவின் வீட்டு வரவேற்பறை மிகப் பெரியது. அதனால் சிறுவர்கள் எல்லோருக்கும் சங்கீதக் கதிரை விளையாட வருமாறு அழைக்க அவர்களும் ஆரவாரித்தபடி ஓடிவருகின்றனர். சிறுவர்கள் விளையாட பெற்றோர் தாங்களே விளையாடுவதாய் எண்ணி அவர்களை உற்சாகப் படுத்த விளையாட்டு சூடு பிடிக்கிறது. கடைசியில் இவர்கள் மகனே வெற்றி பெற இவள் மகிழ்ச்சியில் மகனைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறாள். நவீனும் அதையே செய்ய இவள் நிமிர்ந்து பார்க்கும்போது இவர்களையே பார்த்தபடி இருந்த கலா உடனே தலையைத் திருப்பிக்கொள்ள மதுவுக்கு சிரிப்பு வர அடக்கிக் கொள்கிறாள்.

அடுத்து “பெரியாக்களுக்கும் சங்கீதக் கதிரை உண்டு” என்று ஒருவர் கூற கோவெனச் சிலர் ஆர்ப்பரிக்க, வேண்டாம் நான் வரமாட்டான் என்றும் கட்டாயம் எல்லாரும் விளையாடவேணும் என்றும் மாறிமாறிக் குரல் ஒலிக்க ஆர்வமுள்ள பலரும் வந்து கதிரைகளுக்கு முன்னால் நிற்கிறார்கள். இவள் நவீனைப் போகச் சொல்ல நவீன் நீரும் வாரும் என்கிறான். நீங்கள் விளையாடுங்கோ. நான் வரேல்லை என்று ஒதுங்க ஆண்களும் பெண்களும் கலந்து நிற்க கலாவும் வந்து நிற்கிறாள்.

பாட்டைப் போட்டவுடன் சிறு பிள்ளைகளின் குதூகலத்துடன் பெரியவர்கள் கதிரை பிடிப்பதில் குறியாக இருக்கின்றனர். இத்தனைக்குப் பிறகுகூட மது நவீன்  வெல்லவேண்டும் என மனதில் எண்ணியபடி அவனை உற்சாகப்படுத்த பிள்ளைகளும் சேர்ந்து ஆரவாரம் செய்கின்றனர். கலா அவுட் ஆகவேணும் என மது மனதில் நினைத்தது நடக்காது கடைசியில் எல்லாரையும் பின்தள்ளி நவீனும் கலாவும் மட்டும் கதிரையை சுற்றுகின்றனர். எல்லோரும் பலமாகக் கை தட்டி ஆரவாரிக்க அவள் வெல்லக்கூடாது எனக் கடவுளை வேண்டியபடி நிற்க, இசை  நின்றுபோகிறது.

கலா கதிரையில் இருக்க எத்தனிக்க நவீன் அவளைத் தள்ளிவிட்டுத் தான் இருக்க முயல அவளும் விடாமல் இருக்க எத்தனிக்க எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்துமுடிந்திருக்க நவீனின் மடியில் கலா இருப்பதைக் கண்ட மதுவின் தலையில் இடிவிழுந்தது போலாகி அவமானத்திலும் கோபத்திலும்  முகம் வெடிப்பது போலாகி நவீன் என்று அவள் கத்திய கத்தில் நவீன் கலாவை அணைத்துப் பிடித்தபடி இருந்த கையை அகற்ற, கலாவும் எழுந்துகொள்கிறாள். அங்கு அப்படி ஒரு அமைதி. தலை குனிந்தபடி நவீனும் செய்வதறியாது சொறி மது என்கிறான். மது இரு பிள்ளைகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு விடிவிடுவென அங்கிருந்து வெளியேறி காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவள்தான். அதன்பின் நவீனை வீட்டுக்குள் விடவே இல்லை.

அதன்பின் கோகிலா அக்காதொட்டு இன்னும் சிலரும் கூட அது விளையாடும்போது வெல்லவேணும் என்று நிகழ்ந்தது. அதைப் பெரிதுபடுத்தாதேயும் என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தும் மதுவின் மனம் அசையவே இல்லை. நவீன் பள்ளிக்கூட வாசலில் வந்து நின்று இவளிடம் கெஞ்சிப் பார்த்ததும் பயனில்லை. விவாகரத்துக்குப் பதிந்து இவளின் பெண் லோயர் மேலதிக ஆதாரங்களைக் கேட்டபோதுதான் தான் அத்தனை நாட்கள் பத்திரப்படுத்தியிருந்த அவனும் கலாவும் வற்சப்பில் பரிமாறிய செய்திகளை அவளிடம் கொடுக்கிறாள்.

அவளுக்கு அவனிடமிருந்து விடுதலை கிடைத்துவிடும். ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் பிள்ளைகளை அவனிடம் விடும்படி அல்லது அவன் பார்த்துவிட்டுப் போக கோட் அனுமதிக்கும்தான். ஆனாலும் அவன் கண்ணில் படாமல் எப்படிப் பிள்ளைகளை வளர்ப்பது என்பதிலேயே அவள் சிந்தனை எல்லாம் செலவழிய அலங்கோலமாகிப் போயிருக்கும் அழகிய தோட்டத்தைப் பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டு நிற்கிறாள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அத்தனை நாட்கள் பத்திரப்படுத்தியிருந்த அவனும் கலாவும் வற்சப்பில் பரிமாறிய செய்திகளை அவளிடம் கொடுக்கிறாள்.

என்ன நடந்தது உங்களுக்கு? “வரும், விரைவில் வரும்” என்று போடாமல் ஒரே மூச்சில் கதை சொல்லி விட்டீர்கள்

வயது வந்த (மூத்த) ஆணாக  இருப்பதால் இந்தப் பிரச்சினை எனக்கு இல்லை. வற்சப் கொஞ்சம் லேற்றாக வந்ததால் தப்பித்தேன். கண்ணதாசன் பாடல்வரி ஒன்று சொல்லட்டுமா?

“பொல்லாத பெண்களடா புன்னகையில் வேசமடா

நன்று கெட்ட மாதரடா நான் அறிந்த பாடமடா”

(சென்ஸாரின் ஆட்சேபணையால் ‘மாதரை’ ‘மாந்தர்’ என்று மாற்றிப் போட்டார் கண்ணதாசன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kavi arunasalam said:

என்ன நடந்தது உங்களுக்கு? “வரும், விரைவில் வரும்” என்று போடாமல் ஒரே மூச்சில் கதை சொல்லி விட்டீர்கள்

வயது வந்த (மூத்த) ஆணாக  இருப்பதால் இந்தப் பிரச்சினை எனக்கு இல்லை. வற்சப் கொஞ்சம் லேற்றாக வந்ததால் தப்பித்தேன். கண்ணதாசன் பாடல்வரி ஒன்று சொல்லட்டுமா?

“பொல்லாத பெண்களடா புன்னகையில் வேசமடா

நன்று கெட்ட மாதரடா நான் அறிந்த பாடமடா”

(சென்ஸாரின் ஆட்சேபணையால் ‘மாதரை’ ‘மாந்தர்’ என்று மாற்றிப் போட்டார் கண்ணதாசன்)

வருகைக்கு நன்றி அண்ணா. இனிமேல் எழுதி முடித்தபின் தான் போடுவதாக இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை முழுவதுமாக தந்ததுக்கு நன்றி........!

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருகைக்கு நன்றி அண்ணா. இனிமேல் எழுதி முடித்தபின் தான் போடுவதாக இருக்கிறேன்.

நல்லது சகோதரி......நீர்மேல் எழுத்தாக இல்லாதிருந்தால் இன்னும் நல்லது ......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

நல்ல கதை முழுவதுமாக தந்ததுக்கு நன்றி........!

நல்லது சகோதரி......நீர்மேல் எழுத்தாக இல்லாதிருந்தால் இன்னும் நல்லது ......!   😂

😂 வருகைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி அக்கா. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

கதைக்கு நன்றி அக்கா. 

வருகைக்கு நன்றி ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

கதையை முழுவதுமாய் எழுதிப் போட்டு இணைப்பது வாசிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாது ...நீங்கள் பாடசாலை வைத்திருப்பதால் ஊர் ,உலகத்தில் உள்ள அத்தனை கொசிப்புகளும் உங்களுக்கு தெரியுது😅

  • கருத்துக்கள உறவுகள்

ரீச்சர்மாருக்கு கொசிப்பை விட்டால் வேற என்ன வேலை........😆👋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ரதி said:

.நீங்கள் பாடசாலை வைத்திருப்பதால் ஊர் ,உலகத்தில் உள்ள அத்தனை கொசிப்புகளும் உங்களுக்கு தெரியுது😅

பொதுப்பணியிலை இருக்கிற ஆக்களுக்குத்தான் ஊர் உழவாரங்கள் முழுக்க தெரியுமாம்...🤣

கதைய இன்னும் வாசிக்கேல்ல 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

கதையை முழுவதுமாய் எழுதிப் போட்டு இணைப்பது வாசிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாது ...நீங்கள் பாடசாலை வைத்திருப்பதால் ஊர் ,உலகத்தில் உள்ள அத்தனை கொசிப்புகளும் உங்களுக்கு தெரியுது😅

அப்ப உங்களுக்கு நாட்டு மடப்பு ஒன்றுமே தெரியாதாக்கும் 😂

5 hours ago, குமாரசாமி said:

பொதுப்பணியிலை இருக்கிற ஆக்களுக்குத்தான் ஊர் உழவாரங்கள் முழுக்க தெரியுமாம்...🤣

கதைய இன்னும் வாசிக்கேல்ல 😎

முதல்ல கதையை வாசிச்சு அதுக்கு ஒரு கருத்துச் சொல்லுங்கோ 😀

7 hours ago, யாயினி said:

ரீச்சர்மாருக்கு கொசிப்பை விட்டால் வேற என்ன வேலை........😆👋

உங்களுக்குத் தெரிஞ்ச ரீச்சர்மார் கொசிப் கதைக்கிறவையோ??

  • கருத்துக்கள உறவுகள்

கன இடத்துல கதை இப்படித்தான் போகிறது  அநேகமாக பல விவகாரத்து வழக்குகள்  இந்த சமூக சீர்கேட்டாலே நடக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவை இடையிலேயே ஊகிக்க முடிகிறது.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என் கணனி  மக்கர் பண்ணியதால் சில நாட்கள் வர முடியவில்லை. ஒரே மூச்சில் வாசித்து   முடித்தேன். தொடரும் இல்லா மல்   எழுதியது மிகவும் வரவேற்க  தக்கது. வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்கள் குடும்பத்தை சீர்குலைகின்றன 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தொடரும் என்று இல்லாமல் முடித்ததில் மகிழ்ச்சி :)
இரண்டாம் பகுதி இறுதியில் முடிவு தெரிந்தாலும் உங்களின் சுவாரசிய எழுத்தும், ஊர் விடுப்பு ஆர்வமும் தொடர்ந்து வாசிக்காத தூண்டியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Sabesh said:

உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தொடரும் என்று இல்லாமல் முடித்ததில் மகிழ்ச்சி :)
இரண்டாம் பகுதி இறுதியில் முடிவு தெரிந்தாலும் உங்களின் சுவாரசிய எழுத்தும், ஊர் விடுப்பு ஆர்வமும் தொடர்ந்து வாசிக்காத தூண்டியது.

மிக்க நன்றி கருத்துக்கு சபேஸ் 

On 19/10/2023 at 01:56, நிலாமதி said:

என் கணனி  மக்கர் பண்ணியதால் சில நாட்கள் வர முடியவில்லை. ஒரே மூச்சில் வாசித்து   முடித்தேன். தொடரும் இல்லா மல்   எழுதியது மிகவும் வரவேற்க  தக்கது. வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்கள் குடும்பத்தை சீர்குலைகின்றன 

உண்மைதான் அக்கா

 

On 18/10/2023 at 14:06, ஈழப்பிரியன் said:

கதையின் முடிவை இடையிலேயே ஊகிக்க முடிகிறது.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

இடையிலேயே ஊகிக்க முடிவதால் நான் நன்றாக எழுதவில்லை 😀

On 18/10/2023 at 07:27, தனிக்காட்டு ராஜா said:

கன இடத்துல கதை இப்படித்தான் போகிறது  அநேகமாக பல விவகாரத்து வழக்குகள்  இந்த சமூக சீர்கேட்டாலே நடக்கிறது.  

இலங்கையிலுமா ??? நான் நினைத்தேன் வெளிநாட்டில்தான் இப்படி என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.