Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                  

                                                                                                                   வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.

 

வாழும்வரை போராடு....... 01.

 

                                                                        யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும்  மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது.

                                                         அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய்   கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன .  இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான்.

--- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது.

--- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா.

--- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும்.

                                                       சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்.

--- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........!

 

வாருங்கள் போராடலாம் .........  💪 .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, suvy said:

வாருங்கள் போராடலாம் .........  💪 .

கோட்டை முனியப்பர் மணியோசையோடு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். நீங்கள் போராடுங்கள்.நான் இருந்தபடி இரசிக்கின்றேன்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கும் காலத்தில் பாடசாலைக்கு போகாமல் முனியப்பர் கோவில் கோட்டை பண்ணை போன்ற இடங்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடையை திறங்க நாங்க சேலை வாங்க வருகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி மாதம் விடியுறதே உங்கள் படைப்புகளை வாசிக்கத் தான் சுவியர்….!

ஆரம்பமே நல்லாயிருக்கு..!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சுவி ஐயா. நாங்கள் தொடர்ந்து வருகின்றோம்.

நீங்கள் நலமாகி, எழுத ஆரம்பித்தது மிகவும் சந்தோசம், சுவி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....கொஞ்சம் உசார் வந்துட்டு போலும்.🤭நல்லது தொடருங்கள் சுவி அய்யா.எங்கயோ எழுபது வயதுக்கு மேலாகிட்டு என்று எழுதி கிடந்து பார்த்த நினைவு..ஆகையால் இனிமேல் அண்ணாவிலிருந்து, அய்யாவுக்கு மாற்றம் பெறுகிறீர்கள்.சரி தானே.தொடர்ந்து நலமோடு நடமாடுங்கள்.🤭🖐️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கே பாருங்கள் அங்கே ஒருத்தர் உங்களின் கருத்துக்கு சிரிக்கிறார் . ....... உந்த நக்களுக் கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது . ....... எப்போதும் போல அண்ணாவாகவே இருந்துட்டுப் போறேனே .......!  😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும்வரை போராடு . ........ 02.

                                                

--- உனக்கு எங்கட நண்பன் ஸ்ரீ காந்தை நினைவிருக்கா.

--- யார் அவன், சென்ற வருடம் கணக்கு ஆசிரியருடன் பிணக்குப் பட்டு பாடசாலை வருவதையும் விட்டு விட்டானே அவனா.

--- ஓமடா சந்துரு அவனேதான்.... அவனை சிலநாட்களுக்கு முன்பு லிங்கம் கூல்பாரில் சந்தித்திருந்தேன். இப்ப அவன் நல்ல நிலைமையில் மிகவும் வசதியாய் வாழுறானடா. இந்த இரு வருடங்களில் இரண்டு புதிய லொறிகள், அவனது ஊரில்  அழகான பெரிய வீடு, கார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் எல்லாம் அவனிடம் இருக்குடா.

--- அப்படியா எனக்குத் தெரியாதே, அப்படி என்ன வேலை செய்கிறானாம்.

--- எல்லாம் ஜவுளி வியாபாரம்தான் என்று கண்ணடித்துக் கொண்டே சொல்கிறான் இராகவ்.....ம்....நாங்களும் அவன்கூட சேர்ந்து செய்யலாமடா.

--- என்னது கள்ளக் கடத்தலா ...... இது உனது அப்பாவுக்குத் தெரியுமா.

--- தெரியாது.....ஆனால் நான் நேற்றிரவு வீட்டில் அப்பா அம்மாவுடன் கதைத்திருந்தேன்..இவையெதையும் சொல்லவில்லை. பொதுவாக வியாபாரம் செய்யப்போகிறேன் அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று மட்டும் சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. நிறைய புத்திமதி எல்லாம் சொன்னார். ஒரே போர்.... வியாபாரத்தில் பலப்பல நுணுக்கங்கள், தந்திரங்கள் எல்லாம் உண்டு.இப்ப ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகி விட்டார்கள். நீ ஓரிரு வருடங்கள் எங்கள் கடையில் வேலை செய். கொஞ்சமாவது வியாபாரத்தைக் கற்றுக்கொள், பின் தனியாக வியாபாரம் செய்யலாம் என்று. அதைக் கேட்டு கேட்டு எனக்கு ஒரே சலிப்பாகி விட்டது. பின்பு அம்மாதான் எனக்காக அப்பாவுடன் வாதாடி அவரை இறங்கி வரப் பண்ணிவிட்டா.

  --- அட இவ்வளவும் நடந்திருக்கா. நல்லா இருக்கு. பிறகு என்னடா நடந்தது சொல்லடா இராகவ்.

--- பிறகென்ன அப்பா சமாதானமாகி எனக்கு வியாபாரம் செய்ய இரண்டு இலட்சம் ரூபா தருவதாக சொல்லி இருக்கிறார். அம்மாவும் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அப்பாவுக்குத் தெரியாமல் தானும் ஒரு இலட்சம் ரூபா தருவதாக சொல்லியிருக்கிறா.

--- அட.... பரவாயில்லையே, நீ கெட்டிகாரனடா இராகவ்.

--- அதுதாண்டா சந்துரு நானும் சொல்கிறேன், நீ ஒரு இலட்சம் ரூபா போட்டால் கூடப் போதும், போட்ட பணத்துக்கு தகுந்த மாதிரி இலாபத்தைப் பிரித்துக் கொள்ளலாம்.

--- எனக்கு உடனடியாய் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதற்கும் வீட்டில் கதைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன், ஒரு வாரம் அவகாசம் தா என்கிறான்.

 

              இருவரும் இராகவனின் மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் செல்கிறார்கள்.

 

                          அடுத்தநாள் மதியம் கடந்து இரண்டு மணியிருக்கும் சந்துருவின் தந்தை நாகலிங்கம் வீட்டின் பின்னால் கொட்டிலில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்த்து படலையால் தெருவில் விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்குள் வருகிறார். உள்ளே நிலத்தில் புற்பாய் விரித்து அதில் உணவுகளை சட்டிகளுடன் கொண்டுவந்து வைத்துவிட்டு வந்து சாப்பிடும்படி அழைக்கிறார் பெரியப்பா பழனிவேல். சந்துருவோடு அவரது மகனும் சேர்ந்து நாலைந்து வாழையிலையுடன் வந்து அமர்கின்றார்கள். நாகலிங்கமும் வந்தமர பெரியப்பாவும் அவர்களுக்குப் பரிமாறி விட்டு தனது இலையிலும் சோறும் கோழி இறைச்சிக் கறிகளையும்  போட்டு விட்டு பிள்ளையள் இந்த எலும்பு ரசத்தைச் சூட்டோடு  குடியுங்கோ நெஞ்சுக்கு பிலமாய் இருக்கும் என்று சொல்லி எல்லோருக்கும் கிளாசில் ஊற்றி வைக்கிறார். அவர்களும் சூடான அந்த ரசத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டு எலும்புகளையும் கடித்து சுவைக்கின்றனர். அப்போது பக்கத்து வீட்டில் குஞ்சாச்சி சத்தம் போடுவதும் கந்தப்பு வேலிக் கதியாலால் இடறுபட்டுக்கொண்டு இவர்கள் வீட்டுக்கு ஓடிவரவும் சரியாய் இருக்கு.

                              என்னனை குஞ்சியப்பு நெத்தி வீங்கிக் கிடக்கு முழங்கால் சில்லாலை இரத்தம் ஒழுகுது என்று சந்துரு கேட்க, அத விடுடா அப்பப்ப நடக்கிறதுதானே என்று சொல்கிறார்.அப்போது பெரியப்பா தனக்கு கிளாசில் ஊற்றி வைத்திருந்த ரசத்தை எடுத்து இந்தா முதல்ல இதைக் குடி என்று குடுக்கிறார்.அவர் அதைக் குடிக்கும் பொழுது தனக்குப் பக்கத்தில் அவருக்கும் ஒரு இலை போட்டு சோறும் கறிகளையும் பரிமாறி வைக்கிறார். பிறகு அண்ணை உந்த இரத்தத்தை துடையனை என்று ஒரு துண்டைக் குடுக்கிறார். அவரும் அதை வாங்கி துடைத்துக் கொண்டே அவளும் பாவம்தான், என்ன செய்யிறது நான் கலியாணம் கட்டேக்க எனக்கு இருபது வயது அவளுக்கு பதினாலு வயது இருக்கும். இப்ப எனக்கு எழுபது வயதாகுது. அம்மாவின்ர கையால சாப்பிட்டதை விட அவளின்ர கையாள சாப்பிட்ட காலம்தான் அதிகம். அவளிலும் பிழையில்லை கண்டியளோ. அவள் ஆசையாய் வளர்த்த சேவலை காலையில் இருந்து காணேல்லை என்று தேடிக் கொண்டிருக்கிறாள், அந்த நேரம் நானும் குடிச்சுட்டு வெறியில வீட்ட வந்ததும் ஏதோ நான்தான் அதை பிடித்துக் கொண்டுபோய் வித்துட்டு குடிச்சுட்டு வாறன் என்று நினைத்திட்டாள். உன்னாணை அதைநான் கண்ணிலும் காணேல்ல.

--- சரி சரி உதை விடு, அது உங்கனேக்கைதான் எங்காவது மேயப் போயிருக்கும் என்று பெரியப்பா சொல்லிவிட  எல்லோரும் சாப்பிடுகிறார்கள். கந்தப்பு அங்கேயே குந்தில துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறார். நாகலிங்கமும் பழனியும் முற்றத்தில் கை கழுவும்போது, அண்ணை நான் மாட்டுக் கொட்டிலில  கோழிச் செட்டைகளைப் பார்த்தேன், இனி இதுபோல செய்ய வேண்டாம் என்று சொல்ல பழனி தலை கவிழ்ந்து கொள்கிறார்............!

 

வாருங்கள் போராடலாம் . ........ 🐶 🐶 .

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயாவின் கதை ஒரு மார்க்கமாகப் போகின்றது. தொடருங்கள்..

நம்ம பாஷையில் ஜவுளிக்கடையை புடவைக்கடை என்றுதானே சொல்வது?🥹

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, suvy said:

வாருங்கள் போராடலாம் . ........ 🐶 🐶 

எழுத்துக்களும்,சம்பவங்களும் வாசித்ததையே மீண்டும் வாசிக்க தூண்டுகின்றது.👍🏼
தொடருங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும்வரை போராடு . ........ 03.

                                                                   

                                                                        பின்பு நாகலிங்கம் மகனைப் பார்த்து என்ன தம்பி நேற்றிரவு வீட்டுக்கு வர நேரமாயிட்டுது போல.  ஓமப்பா நேற்று மாலை நானும் இராகவனும் முனியப்பர் கோயிலடியில் இருந்து, படிப்பும் முடிந்து போட்டுது இனி நாங்கள் என்ன செய்யலாம் என்று கதைத்துக் கொண்டிருந்தனாங்கள் அதுதான் நேரம் போட்டுது.

--- அப்ப நீ மேற்கொண்டு படிக்கேல்லையோ.பெரியப்பா கேட்க,  இல்லையப்பா, அதுக்கு நிறைய பணம் செலவாகும். இப்ப எங்களிடம் அவ்வளவு வசதி இல்லையென்று எனக்குத் தெரியுமப்பா. தம்பியும் இரண்டு வருடங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விடுவான்.... ஒரு விரக்தியில் சிரிக்கிறான்.

--- ஏனப்பு ஒரு மாதிரிச் சிரிக்கிறாய். தந்தை வினவ சந்துரு சொல்கிறான் அதில்லையப்பா மேலே படிக்க என்னிடம் மார்க்ஸ் இருக்கு மணி இல்லை......இராகவ்விடம் மணி இருக்கு ஆனால் மார்க்ஸ் இல்லை. அதுதான் என்னையுமறியாமல் சிரிப்பு வந்து விட்டது.

--- அப்ப என்ன செய்யப் போகிறாய்.

--- அவன் ஜவுளி வியாபாரம் செய்யப் போகிறானாம். அதற்காக அவன் பெற்றோர்களும் அவனுக்கு மூன்று லட்சம்  ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னையும் விரும்பினால் கூட்டு சேரும்படி சொன்னான். இராகவனுக்கும் எங்கள் நிலைமை தெரியும்தானே. அதனால் என்னால் முடிந்தளவு பணம் போடு வரும் லாபத்தைப் பார்த்துப் பிரித்துக் கொள்ளலாம் என்று. என்ன செய்வது அவனுக்கும் மனம் கேட்கவில்லை. சிறுவயது முதல் இன்றுவரை நாமிருவரும் ஒன்றாய் இருந்து விட்டோம். இனியும் என்னைத் தனியே விடாமல் வியாபாரத்திலும் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறான்.

--- அப்ப நல்லதாய்ப் போச்சு நீயும் அவனுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். பணத்துக்கு அதிகம் யோசிக்காதை, நானும் கொஞ்சம் பணம் தருகிறேன். மனிசியின் நகைகளும் இருக்கு என்று  பெரியப்பா சொல்கிறார். நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள். சந்துரு கேட்கிறான்.

ஆனால் நாகலிங்கம் ஏதோ யோசனையில் இருந்து விட்டு சொல்கிறார். எனக்கென்னமோ இது அவ்வளவு நல்லதாய்ப் படேல்ல என்று சொல்லும்போது மேலே இருந்து பல்லியும் உச்சுக் கொட்டிவிட்டு போகிறது.

--- நான் அதுக்கு சொல்லவில்லை அண்ணா, பங்கு வியாபாரம் ஒருநாள் இல்லை ஒருநாள் பிரச்சினையில் கொண்டுவந்து விடும். "நட்போடு ஊடாடிய உறவு பொருளோடு உறவாடக் கெடும்" என்று ஆகிவிடக் கூடாது. இவன் எங்கட பிள்ளைதான் ஆனால் தனித்து ஒரு கைத்தொழிலும் தெரியாது. இந்தப் பிள்ளைகளின் நட்பும் இரு குடும்பங்களின் அந்நியோன்னியமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

                                                          இராகவன் தந்தையுடன் இருப்பதால் வியாபார அனுபவம் கொஞ்சமாவது இருக்கும். ஒருவேளை நட்டமேற்பட்டாலும் அவர்களால் சமாளித்துவர முடியும். ஆனால் இருக்கும் கொஞ்ச விதைநெல்லையும் இழந்தபின் நம்மால் மீளவே முடியாது போகலாம் இல்லையா. தந்தையின் பேச்சை சந்துரு உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

--- அப்ப அவன் என்ன செய்யலாம் என்று சொல்கிறாய், அதை முதல்ல சொல்லு.பெரியப்பா கேட்கிறார்.

--- ம்....முதலில் இவன் ஓரிரு வருடங்கள் ஒரு தொழிலைப் பழகட்டும். அதில் நல்ல அனுபவம் பெறட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.....அதுவரை நாங்கள் இப்ப வழமைபோல் செய்கிற பாய் பெட்டி இழைத்து விக்கிற வேலையை செய்து கொண்டிருப்போம் என்று முடிவாகச் சொல்கிறார்.

                                                                            

                                                     அன்று மாலை அவர்கள் வீட்டில் எடுத்த முடிவை இராகவ்விடம் சொல்வதற்காக சந்துரு இராகவ் வீட்டிற்கு செல்கிறான். வழியில் சிறு தோப்பு உண்டு. அதனூடாக சந்துரு செல்லும்போது எதிரில் இராகவனின் தந்தை தாமோதரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு நடந்து வருகின்றார்.அவரைக் கண்டதும் மிகவும் பணிவாக வணக்கம் சொல்கின்றான் சந்துரு.

--- அவரும் இயல்பாக என்ன சந்துரு நலமா ........ எங்கே இராகவனைப் பார்க்க வீட்டுக்குப் போகின்றாயா என்று விசாரிக்கின்றார்.

--- ஓம் ஐயா. அத்துடன்  உங்களையும் ஒருக்கால் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் வருகின்றேன்.

--- என்ன விஷயமென்றாலும் சொல்லு, உங்களின் வியாபாரம் சம்பந்தமாகவா......

--- ஓம் ஐயா.....

--- இதோ பார் சந்துரு, நீயும் என் பிள்ளை போலத்தான்.எதுவாயினும் என்னிடம் தயக்கமின்றிக் கேட்கலாம். மகன் சொன்னவன் உனக்கும் மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லையென்று சொன்னதாக. நீ விரும்பினால் நான் அதற்கும் உதவி செய்கின்றேன். அல்லது அவனோ வியாபாரம் செய்வதென்று பிடிவாதமாய் இருக்கிறான். அப்படியென்றால் கூட உனக்கு நான் கொஞ்சம் பணமும் தருகின்றேன்.

--- உங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் நான் அவற்றுக்காக உங்களைக் காண வரவில்லை என்று சொல்லியபின் அன்று மதியம் அவர்கள் வீட்டில் நடந்த விவாதங்களை சொல்கின்றான்.

--- அதைக் கேட்டதும் அவரும் உன் தந்தை சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். இதையேதான் நாங்கள் சிறுவயதில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது என் தந்தையும் எனக்கு சொன்னவர். இராகவ்வும் அவன் தாயாரும் கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்ந்தவர்கள். அதனால் பிடிவாதம் கொஞ்சம் அதிகம். சரி.....நீ இப்போது அவன்கூட சேர்ந்து வியாபாரம் செய்யப் போவதில்லை என்றால் என்னிடம் என்ன மாதிரியான உதவி எதிர்பார்கிறாய்.

--- நீங்கள் சொல்வது சரி ஐயா..... நான் இப்போது உங்களிடம் கேட்பது, எனக்கு ஒரு தொழில் கற்றுக் கொள்வதுபோல் ஒரு வேலை வேண்டும்.

--- இது நல்ல யோசனை......நீ நல்லா வருவாய்..... இப்போது நான் உனக்கு எனது கடையில் கூட வேலை தரலாம்.....கொஞ்சம் யோசித்து ஆனால் அது சரிவராது. பின்னாளில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். பின்னும் கண்களை மூடி யோசிக்கிறார். சந்துருவும் அவர் அருகே பவ்யமாக நிக்கிறான். சற்று நேரத்தின் பின்,  ம்....அதுதான் சரி என்று தெளிந்து, சந்துரு எதற்கும் நீ நாளை காலை ஏழு மணிக்கு மாணிக்கம் ஜுவல்லரிக்கு வந்துவிடு. நானும் அங்கு வந்து விடுகின்றேன் எனச் சொல்லிவிட்டு தனது நடைபயிற்சியைத் தொடருகின்றார்.....!

சந்துருவும் அவரது வீடு நோக்கிப் போகின்றான்...........!

 

வாருங்கள் போராடலாம் ............  🐇 🐇 🐇.

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சுவி . நாங்கள் தொடர்ந்து வருகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட பாதை வளைந்து, நெளிந்து, சுருங்கி, விரிந்து போகுது. நீங்களோ, நாங்களும் தொடருகிறோம் என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியேல்லை. நானும் ஏதோ கோட்டையை இடிக்கிற போராட்டமாக்கும் என்று ஆவலோடு தொடர்கிறேன். கதை எல்லோரின் ஆவலையும் தூண்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

போராட்ட பாதை வளைந்து, நெளிந்து, சுருங்கி, விரிந்து போகுது. நீங்களோ, நாங்களும் தொடருகிறோம் என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியேல்லை. நானும் ஏதோ கோட்டையை இடிக்கிற போராட்டமாக்கும் என்று ஆவலோடு தொடர்கிறேன். கதை எல்லோரின் ஆவலையும் தூண்டுகிறது. 

கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. 

கவலைப் படாதீங்க...இதைப் பார்க்கத்தன் விடாப்பிடியாகத் தொடருகின்றோம்☺️

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, alvayan said:

கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. 

கவலைப் படாதீங்க...இதுகுத்தான் விடாப்பிடியாகத் தொடருகின்றோம்☺️

சுவியர் கெட்டிக்காரன். எல்லோரையும் கட்டிப்போடும் விடயத்தை தெரிந்து, கதையை ஆவலோடு எதிர்பார்க்க வைத்து கடைசியில் கோட்டையை இடிக்க வாருங்கள் என்று கூப்பிட்டால் என்ன செய்வீர்கள், தொடருங்கள் நாங்களும் வருகிறோம் என்று பின்தொடரும் நீங்களெல்லோரும்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சுவியர் கெட்டிக்காரன். எல்லோரையும் கட்டிப்போடும் விடயத்தை தெரிந்து, கதையை ஆவலோடு எதிர்பார்க்க வைத்து கடைசியில் கோட்டையை இடிக்க வாருங்கள் என்று கூப்பிட்டால் என்ன செய்வீர்கள், தொடருங்கள் நாங்களும் வருகிறோம் என்று பின்தொடரும் நீங்களெல்லோரும்? 

அங்கும் அதையேதான் தேடுவோம்...நாம யாழ்ப்பாணீஸ்தானே..

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

வாழும்வரை போராடு . ........ 03.

                                                                   

                                                                        பின்பு நாகலிங்கம் மகனைப் பார்த்து என்ன தம்பி நேற்றிரவு வீட்டுக்கு வர நேரமாயிட்டுது போல.  ஓமப்பா நேற்று மாலை நானும் இராகவனும் முனியப்பர் கோயிலடியில் இருந்து, படிப்பும் முடிந்து போட்டுது இனி நாங்கள் என்ன செய்யலாம் என்று கதைத்துக் கொண்டிருந்தனாங்கள் அதுதான் நேரம் போட்டுது.

--- அப்ப நீ மேற்கொண்டு படிக்கேல்லையோ.பெரியப்பா கேட்க,  இல்லையப்பா, அதுக்கு நிறைய பணம் செலவாகும். இப்ப எங்களிடம் அவ்வளவு வசதி இல்லையென்று எனக்குத் தெரியுமப்பா. தம்பியும் இரண்டு வருடங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விடுவான்.... ஒரு விரக்தியில் சிரிக்கிறான்.

--- ஏனப்பு ஒரு மாதிரிச் சிரிக்கிறாய். தந்தை வினவ சந்துரு சொல்கிறான் அதில்லையப்பா மேலே படிக்க என்னிடம் மார்க்ஸ் இருக்கு மணி இல்லை......இராகவ்விடம் மணி இருக்கு ஆனால் மார்க்ஸ் இல்லை. அதுதான் என்னையுமறியாமல் சிரிப்பு வந்து விட்டது.

--- அப்ப என்ன செய்யப் போகிறாய்.

--- அவன் ஜவுளி வியாபாரம் செய்யப் போகிறானாம். அதற்காக அவன் பெற்றோர்களும் அவனுக்கு மூன்று லட்சம்  ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னையும் விரும்பினால் கூட்டு சேரும்படி சொன்னான். இராகவனுக்கும் எங்கள் நிலைமை தெரியும்தானே. அதனால் என்னால் முடிந்தளவு பணம் போடு வரும் லாபத்தைப் பார்த்துப் பிரித்துக் கொள்ளலாம் என்று. என்ன செய்வது அவனுக்கும் மனம் கேட்கவில்லை. சிறுவயது முதல் இன்றுவரை நாமிருவரும் ஒன்றாய் இருந்து விட்டோம். இனியும் என்னைத் தனியே விடாமல் வியாபாரத்திலும் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறான்.

--- அப்ப நல்லதாய்ப் போச்சு நீயும் அவனுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். பணத்துக்கு அதிகம் யோசிக்காதை, நானும் கொஞ்சம் பணம் தருகிறேன். மனிசியின் நகைகளும் இருக்கு என்று  பெரியப்பா சொல்கிறார். நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள். சந்துரு கேட்கிறான்.

ஆனால் நாகலிங்கம் ஏதோ யோசனையில் இருந்து விட்டு சொல்கிறார். எனக்கென்னமோ இது அவ்வளவு நல்லதாய்ப் படேல்ல என்று சொல்லும்போது மேலே இருந்து பல்லியும் உச்சுக் கொட்டிவிட்டு போகிறது.

--- நான் அதுக்கு சொல்லவில்லை அண்ணா, பங்கு வியாபாரம் ஒருநாள் இல்லை ஒருநாள் பிரச்சினையில் கொண்டுவந்து விடும். "நட்போடு ஊடாடிய உறவு பொருளோடு உறவாடக் கெடும்" என்று ஆகிவிடக் கூடாது. இவன் எங்கட பிள்ளைதான் ஆனால் தனித்து ஒரு கைத்தொழிலும் தெரியாது. இந்தப் பிள்ளைகளின் நட்பும் இரு குடும்பங்களின் அந்நியோன்னியமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

                                                          இராகவன் தந்தையுடன் இருப்பதால் வியாபார அனுபவம் கொஞ்சமாவது இருக்கும். ஒருவேளை நட்டமேற்பட்டாலும் அவர்களால் சமாளித்துவர முடியும். ஆனால் இருக்கும் கொஞ்ச விதைநெல்லையும் இழந்தபின் நம்மால் மீளவே முடியாது போகலாம் இல்லையா. தந்தையின் பேச்சை சந்துரு உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

--- அப்ப அவன் என்ன செய்யலாம் என்று சொல்கிறாய், அதை முதல்ல சொல்லு.பெரியப்பா கேட்கிறார்.

--- ம்....முதலில் இவன் ஓரிரு வருடங்கள் ஒரு தொழிலைப் பழகட்டும். அதில் நல்ல அனுபவம் பெறட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.....அதுவரை நாங்கள் இப்ப வழமைபோல் செய்கிற பாய் பெட்டி இழைத்து விக்கிற வேலையை செய்து கொண்டிருப்போம் என்று முடிவாகச் சொல்கிறார்.

                                                                            

                                                     அன்று மாலை அவர்கள் வீட்டில் எடுத்த முடிவை இராகவ்விடம் சொல்வதற்காக சந்துரு இராகவ் வீட்டிற்கு செல்கிறான். வழியில் சிறு தோப்பு உண்டு. அதனூடாக சந்துரு செல்லும்போது எதிரில் இராகவனின் தந்தை தாமோதரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு நடந்து வருகின்றார்.அவரைக் கண்டதும் மிகவும் பணிவாக வணக்கம் சொல்கின்றான் சந்துரு.

--- அவரும் இயல்பாக என்ன சந்துரு நலமா ........ எங்கே இராகவனைப் பார்க்க வீட்டுக்குப் போகின்றாயா என்று விசாரிக்கின்றார்.

--- ஓம் ஐயா. அத்துடன்  உங்களையும் ஒருக்கால் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் வருகின்றேன்.

--- என்ன விஷயமென்றாலும் சொல்லு, உங்களின் வியாபாரம் சம்பந்தமாகவா......

--- ஓம் ஐயா.....

--- இதோ பார் சந்துரு, நீயும் என் பிள்ளை போலத்தான்.எதுவாயினும் என்னிடம் தயக்கமின்றிக் கேட்கலாம். மகன் சொன்னவன் உனக்கும் மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லையென்று சொன்னதாக. நீ விரும்பினால் நான் அதற்கும் உதவி செய்கின்றேன். அல்லது அவனோ வியாபாரம் செய்வதென்று பிடிவாதமாய் இருக்கிறான். அப்படியென்றால் கூட உனக்கு நான் கொஞ்சம் பணமும் தருகின்றேன்.

--- உங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் நான் அவற்றுக்காக உங்களைக் காண வரவில்லை என்று சொல்லியபின் அன்று மதியம் அவர்கள் வீட்டில் நடந்த விவாதங்களை சொல்கின்றான்.

--- அதைக் கேட்டதும் அவரும் உன் தந்தை சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். இதையேதான் நாங்கள் சிறுவயதில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது என் தந்தையும் எனக்கு சொன்னவர். இராகவ்வும் அவன் தாயாரும் கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்ந்தவர்கள். அதனால் பிடிவாதம் கொஞ்சம் அதிகம். சரி.....நீ இப்போது அவன்கூட சேர்ந்து வியாபாரம் செய்யப் போவதில்லை என்றால் என்னிடம் என்ன மாதிரியான உதவி எதிர்பார்கிறாய்.

--- நீங்கள் சொல்வது சரி ஐயா..... நான் இப்போது உங்களிடம் கேட்பது, எனக்கு ஒரு தொழில் கற்றுக் கொள்வதுபோல் ஒரு வேலை வேண்டும்.

--- இது நல்ல யோசனை......நீ நல்லா வருவாய்..... இப்போது நான் உனக்கு எனது கடையில் கூட வேலை தரலாம்.....கொஞ்சம் யோசித்து ஆனால் அது சரிவராது. பின்னாளில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். பின்னும் கண்களை மூடி யோசிக்கிறார். சந்துருவும் அவர் அருகே பவ்யமாக நிக்கிறான். சற்று நேரத்தின் பின்,  ம்....அதுதான் சரி என்று தெளிந்து, சந்துரு எதற்கும் நீ நாளை காலை ஏழு மணிக்கு மாணிக்கம் ஜுவல்லரிக்கு வந்துவிடு. நானும் அங்கு வந்து விடுகின்றேன் எனச் சொல்லிவிட்டு தனது நடைபயிற்சியைத் தொடருகின்றார்.....!

சந்துருவும் அவரது வீடு நோக்கிப் போகின்றான்...........!

 

வாருங்கள் போராடலாம் ............  🐇 🐇 🐇.

 

தொடர் நன்றாகத் போகிறது வாழ்த்துக்கள் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும்வரை போராடு . .......... 04.

                                                              

                                                                                            காலங்கள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அவை தன் பாட்டுக்கு நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த இரு வருடங்களில் இராகவன் சந்துரு வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன.....ஒரே இடத்தில் வசித்தும் வேலைப்பளுவால்  அவர்கள் சந்திப்பதும் அரிதாகவே போய்விட்டிருந்தது.

                                           இராகவன் ஸ்ரீ காந்துடன் சேர்ந்து ஜவுளி வியாபாரமும் அதனூடே சிறிதாகவும் பெரிதாகவும் கடத்தல்களும் செய்து பெரும் முதலாளியாக வந்திருந்தான். யாழ்ப்பாணம் பெரியகடை வீதியில் ஒரு பெரிய ஜவுளிக்கடையும் வாங்கி விட்டிருந்தான் .  அத்துடன் இரண்டு புதிய இசுசு லொறிகளும் யாழ்ப்பாணம்--- கொழும்பு என்று ஓடுகின்றன. சராசரி பதினைந்துபேர்கள் அவன் கடையிலும் லொறியிலுமாக வேலை செய்கின்றார்கள். அவனும் ஸ்ரீகாந்தும் தங்களது ஒரு ஜீப்பிலோ காரிலோ திரிந்து திரிந்து இடையில் வரும் தடைகளை விலக்கி சுழன்று சுழன்று வேலை செய்கின்றார்கள்.

                                                                      சந்துருவும் இந்த இரு வருடங்களில் மாணிக்கம் ஜூவலரியில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து நகைத்தொழிலையும் அதன் நுணுக்கங்களையும் நன்றாகக் கற்றுக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இரு மகன்களுடனும் சேர்ந்து அவர்களுக்கு உதவியாக கடையில் வியாபாரம் செய்வதும், அன்றன்றைய வரவு செலவுகளைக் கணக்கெடுத்து வங்கிகளில் பணம் வைப்பிடுவது என்று மிகவும் நேர்மையாக அவர்களுக்கு உதவியாக இருந்தான். மற்ற நேரங்களில் கடையின் உள்ளே பட்டறையில் மோதிரம், காதணிகள்,வளையல்கள், சங்கிலிகள் என்று எல்லாம் துப்பரவாகவும் அழகாகவும் செய்யக் கற்றிருந்தான். கல்யாண நாட்களில் தாலிக்கொடி பின்னும் வேலைகள் அதிகம் வருவதால் அவர்களின் அனுமதியுடன் கடையில் இருந்து தங்கக் கம்பிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது தந்தை தம்பிகளுக்கும் அதை இழுத்துப் பின்னுவதற்கு பழக்கி விட்டிருந்தான். பாய், பெட்டி இழைப்பதில் வரும் வருமானத்தைவிட இதில் அதிக வருமானம் வருவதால் அவர்களும் இதை ஆர்வமுடன் பழகிச் செய்துகொண்டு வருகின்றார்கள் .  அதனால் மாணிக்கம் ஜுவல்லரியில் வாடிக்கையாளர்கள் குடுக்கும் வேலைகள் தாமதம் இல்லாமல் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.வியாபாரமும் அமோகமாய் நடந்து கொண்டிருந்தது. வீட்டிலும் அவர்களது வாழ்வும் மேம்பட்டிருந்தது.

                                                              சென்ற சில மாதங்களுக்கு முன் மாணிக்கம் மூப்பின் காரணமாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.அதனால் அவர் தனது இரு மகன்களையும் குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்திருந்தார். அவர்களோடு அவர்களது குடும்ப வக்கீலும் வந்திருந்தார். அவரது மூத்த மகன் கொழும்பில் பெரிய ஷோரூமுடன் கூடிய நகைக்கடை வைத்திருக்கின்றார். அவருடைய கடைக்கும் இங்கிருந்தே நகைகள் எல்லாம் போய் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது பெரும்பாலும் சந்துருவே கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அவர்களுடைய  ஒரு வானில் பொருட்களை ஏற்றி இறக்கிக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின்  இளையமகன் தந்தையுடன் இருந்து இந்தக் கடையை நடத்தி வருகின்றான். மேலும் கடையில் ஆரம்பகாலத்தில் இருந்து அவருடன் கூடவே வேலைசெய்து வந்த தொழிலாளர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாணிக்கம் அவ்வப்போது  யாழ்பாணத்திலேயே ஆங்காங்கே வீடுகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய வீட்டு வைபவங்கள் மற்றும் பெரிய செலவுகள் யாவையும் மாணிக்கமே மனங்கோணாது செய்துகொண்டு வந்திருந்தார் . அதனால் அவர்கள் எல்லோருடைய  கணக்குகள் எல்லாம் அதிக சிரமமின்றி முடித்து தேவையான பணம் எல்லாம் குடுத்து அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்கள்.

                                    இக்காலகட்டத்தில்  மாணிக்கத்தின் கடையில் அவரது சகோதர சகோதரிகளின் பிள்ளைகள் என்று பலர் வந்து வேலை செய்கிறார்கள். அதனால் உறவினர்களுக்குள்ளே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவது வாடிக்கையாகி இருந்தது. அது சிலசமயங்களில் சந்துருவையும் பாதித்து வருகின்றது. அதனால் அவனும் இப்பொழுது ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறான்.

 

வாருங்கள் போராடலாம் . ........ 🐐 🐐 🐐 🐐.

  • கருத்துக்கள உறவுகள்

கதை அமைப்பு நன்றாக இருக்கிறது,

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை மழையில் தொடர்ந்தும் நனைகின்றோம்…!

தொடருங்கள்… 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும்வரை போராடு . .......... 05.

                                                                            

                                                                                  இப்பொழுது மாணிக்கம் நேராக சந்துருவைப் பார்த்து தன்னருகே அழைக்கின்றார். அவனைப் பார்த்து சந்துரு நீ இப்பொழுது என்ன செய்ய நினைக்கிறாய், எதுவாயினும் தயங்காமல் சொல்லு என்கிறார். அப்போது அவரது மூத்தமகன் குறுக்கிட்டு சந்துரு நீ பேசாமல் என்கூட கொழும்புக்கு வந்துவிடு. என் கடையையும் பார்த்துக் கொண்டு என் கூடவே இருக்கலாம் என்கிறார். இளையமகனோ நோ....நோ.....அதெல்லாம் முடியாது அவன் எப்பொழுதும் போல எங்ககூடவே இருக்கட்டும் என்னப்பா என்று தகப்பனையும் துணைக்கு அழைக்கிறான்.

--- நீங்கள் கொஞ்சம் பொறுங்கள், சந்துரு சொல்லட்டும். சந்துரு நீ என்ன சொல்கிறாய்.

--- சந்துரு சொல்கிறான் .....ஐயா இந்தக் கடை வணிகத்தில் நீங்களும் பெரியமுதலாளி, சின்ன முதலாளி மற்றும் இங்கு வேலை செய்யும் பெரியவர்களும் என்னைத் தங்களில் ஒருவராய் வளர்த்து வந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் மிக மிக நன்றி.நான் எப்போதும்போல் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பொருட்கள் யாவற்றையும் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பது உட்பட தனியாகத் தொழில் செய்ய விரும்புகின்றேன். அதுபோல் நீங்களும் உங்களுக்கு வரும் மேலதிகமான ஓடர்களை எனக்குத் தந்துதவ வேண்டும் என்று விரும்புகின்றேன். ஆயினும் அது செய்வதற்கு எனக்கு தனியாக ஒரு வேன் வேணும்.அதற்காக நான் வங்கியில் கடன் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்கிறான்.

--- கொஞ்சம் யோசித்த பெரியவர் அவனிடம் தம்பி நீ கொஞ்சம் வெளியில் இரு நான் பிறகு கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார்.அவனும் வெளியில் போகிறான்.

                          உடனே   இளையமகன் தந்தையிடம் என்னப்பா சந்துரு இப்படி சொல்கிறான் . சம்பளத்தைக் கொடுத்து நிப்பாட்டி விடலாமா என்று கேட்கிறான்.

--- சரி, நிப்பாட்டிப் போட்டு என்ன செய்யப் போகிறாய் . ......அவன் துடியாட்டமாய் செய்யும் வேலைகளை உன்னால் செய்ய முடியுமா ....... என்னுடைய அண்ணர், தங்கச்சி பிள்ளைகள் எல்லாம் இப்ப வளர்ந்து அஞ்சாறு பேர் எங்கள் கடையில் வேலை செய்யினம்தான் . ...... ஆனால் எப்ப பார் நான் பெரிசு நீ பெரிசு என்று தினம் தினம் சண்டையும் சச்சரவுமாய் கடை இருக்கு ......எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன் . ........ எங்கே சந்துருவின் இடத்தை நிரப்பக்கூடிய ஒருவரை நீங்கள் இருவரும் சொல்லுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன் . ......

--- மூத்தமகன் சொல்கிறார் . ....... தம்பி அப்பா சொல்வதும் சரியாத்தான் இருக்கு ....... தற்சமயம் சந்துருவைவிட நம்பிக்கையானவன் எங்களிடம் இல்லை . ..... நீ இங்கே கடை பார்க்க வேண்டும் . ..... நான் கொழும்பில் கடையை கவனிக்க வேண்டும் . ....... நாங்கள் கொஞ்சம் அசந்தாலும், இது மற்ற மற்ற வியாபாரம் போல் கிடையாது, எல்லாம் சேதாரமாய் போயிடும். அதனால் நாங்கள் நல்லா யோசித்து சந்துருவை எங்களில் ஒருவனாய் நினைத்து முடிவெடுப்போம் என்று சொல்கிறார் . 

--- மாணிக்கமும் தம்பி ,  நீ சொல்வது ரெம்பச் சரி . ....... பின் அவர்கள் கலந்துரையாடி .......

                                                                    சிறிது நேரத்தின்பின் அவர்கள் தங்களுக்குள் விவாதித்து சந்துருவை மீண்டும் உள்ளே அழைக்கின்றனர். அவன் வந்ததும் மாணிக்கம் முதலாளி அவனைப் பார்த்து சொல்கிறார், தம்பி சந்துரு நீ சொன்னதை நாங்கள் யோசித்துப் பார்த்தோம் அதுவும் ஒரு வகையில் சரியென்றே படுகின்றது. நீ விரும்பியபடியே செய்யலாம். எமக்கு வரும் மேலதிகமான ஓடர்களை உனக்குத் தருகின்றோம். நீயும் குறித்த நேரத்தில் தாமதமின்றிச் செய்து தரவேண்டும்.உனக்கு வேன் ஒன்று நாங்களே வாங்கித் தருகின்றோம். மூத்தமகனைப் பார்த்து நீ அவருக்கு ஒரு நல்ல வேன் ஒன்று வாங்கிக் குடு என்று சொல்ல அவரும் சரி என்கிறார்........ சிலநாட்களில் மினிபஸ் போன்ற ஒரு வானை  மாணிக்கம் சந்துருவிடம் கையளிக்கின்றார் .........  சந்துருவும் அந்த வானில் நகைகள் ,  பணம்கள் மறைத்துக் கொண்டு போகக்கூடியவாறு சில திருத்தங்கள் செய்து விடுகிறான் . .......

                                இப்பொழுது சந்துருவிடம் ஒரு மினிபஸ் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஓடுகின்றது. அதில் அவனும் பீற்றர் என்றொரு பெரியவரும் சாரதிகளாக இருக்கின்றனர். பீற்றர் முன்பு ஒரு ஓவசியரிடம் டிப்பர் வண்டி ஓடிக்கொண்டிருந்தவர். ஓவசியர் ஒய்வு பெறும்பொழுது அவரின் சிபாரிசுடன் சந்துருவிடம் வேலைக்கு வந்து சேர்ந்தவர். அவருக்கு குடும்பம் என்று எதுவுமில்லை. ஒரு தமையனின் குடும்பம் அனுராதபுரத்தில் வசதியாக இருக்கின்றது. எப்போதாவது அங்கு போய் வருவது வழக்கம். மற்றும்படி வேனில்தான் அவரது வாழ்க்கை எல்லாம்.

                                                                                   சந்துருவும் அந்த வேனிலேயே பயணிகளை ஏற்றி இறக்குவதும், நகைக் கடைகளுக்கு பொருட்கள் பரிமாற்றத்தையும் செய்து வருகின்றான். தனது வீட்டையும் கொஞ்சம் பெரிதாகக் கட்டி அங்கு நகைகள் செய்வதற்குத் தேவையான சில யந்திரங்களையும் வாங்கிப் போட்டிருந்தான். அங்கும் சில பொற்கொல்லர்கள் வேலை செய்கின்றனர்.அவர்களுடன் அவனது தந்தையும் தம்பிகளும் கூடமாட ஒத்தாசையாய் இருக்கின்றனர்.

                                                                   அன்றைய பொழுது அவர்களுக்கு அவ்வளவு நல்ல பொழுதாக விடிந்திருக்கவில்லை. சந்துருவும் பீற்றரும் அவர்களது வாடிக்கையான கடைகளுக்குச் சென்று பொருட்களையெல்லாம் (நகைகள்,பவுன்கள் மற்றும் பணம் முதலியன) கணக்குப் பார்த்து எடுத்துக் கொண்டு அவற்றை வேனில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு நேராக பேரூந்து நிலையத்துக்கு வந்து கொழும்பு செல்லும் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் புறப்படுகின்றார்கள். ஆணையிறவைத் தாண்டும்பொழுது அங்கு சென்றியில் நிக்கும் போலீசார் பீற்றரிடம், பார்த்துப் போங்கள் பீற்றர். அனுராதபுரத்தில் கலவரம் ஏற்படும்போல் செய்திகள் வருகின்றன.என எச்சரித்து விடுகிறார்கள். பின் இருக்கையில் இருந்த சந்துரு என்ன அண்ணை என்று வினவ அவரும் அந்தப் போலீஸ்காரர் எச்சரித்ததை சொல்கிறார். சரி விடுங்க அண்ணை , வவுனியா மதவாச்சி வரை போய்ப் பார்க்கலாம் என்று  சந்துரு சொல்கின்றான்.வேனும் மிதமான வேகத்தில் செல்கின்றது. எதிரே வரும் வாகனங்களும் வழமைபோலன்றி குறைவாக இருப்பதையும் கவனித்துக் கொண்டு செல்கிறார்கள்....... சில வாகனங்கள் முன் லைற்றுகளால் அவர்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டு போகின்றன . ..... அவர்களுடைய வானும் தொடர்ந்து முறிகண்டியில் சாமி கும்பிட்டு கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பயணம் தொடங்கி வவுனியாவையும் மதவாச்சியையும் கடந்து அனுராதபுரத்துக்கு கிட்ட முட்டவா வந்தாச்சுது….........!

 

வாருங்கள் போராடலாம் ............ 🐈 🐈 🐈 🐈 🐈.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும்வரை போராடு . ...... 06.

                                          

                                                                            அனுராதபுரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்களுக்கு முன் காடையர்கள் வாகனங்களை மறித்து கொள்ளையடித்து பின் எரிக்கிறார்கள் என்னும் செய்தி இவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த இடத்தில் என்ன செய்வதென்று அறியாது முன்னும் பின்னுமாய் வாகனங்கள் தரித்து நிக்கின்றன. எல்லா சாரதிகளும் வீதிகளில் இறங்கி கும்பல் கும்பலாய் கதைத்துக் கொண்டு நிக்கிறார்கள். தூரத்தில் பார்க்க ஆகாயத்தில் ஒரே புகையும்,வாகனங்கள் எரியும் வெடிச்சத்தமும் கேட்கிறது. சந்துரு பீற்றரிடம் அண்ணை இப்ப என்ன செய்யலாம் என்று கேட்கிறான். அதுதான் தம்பி நானும் யோசிக்கிறன். அப்போது இவர்களின் பின்னால் ஒரு லொறி வந்து நிக்கின்றது. சந்துரு திரும்பிப் பார்க்க அது இராகவனின் இரண்டு லொறிகளில் ஒன்று என்று தெரிகின்றது. சந்துரு இராகவனோடு கதைத்தே நெடுநாட்களாகி விட்டன. அந்த லொறியில் இருந்து இறங்கி வந்த சாரதியும் கிளீனரும் சந்துருவை இனங்கண்டு, சந்துரு அண்ணே மேலே போகமுடியாது போல் இருக்கே, என்ன செய்வது. ஓம் தம்பி அதுதான் நாங்களும் யோசித்துக் கொண்டு இங்கு நிக்கிறம். ஆனால் இரவாகிக் கொண்டு போகுது அதனால் இங்கு அதிகநேரம் தங்குவதும் ஆபத்து, பாதுகாப்பில்லை.

--- அண்ணை, எங்கட முதலாளியின் மற்றலொறியும், ஸ்ரீகாந் அவர்களின் இரண்டு லொறிகளும் புல்லா லோட் ஏற்றிக்கொண்டு நேரத்தோடு எங்களுக்கு முன்னால் வந்தவை. இப்ப அவை இந்தக் கலவரத்தைத் தாண்டிப் போய் விட்டினமோ, அல்லது கலவரத்துக்குள் மாட்டுப் பட்டினமோ தெரியவில்லை.

--- நாங்கள் வரும்போது அவைகளைக் காணவில்லை தம்பி.

--- உங்களுக்குத் தெரியும்தானே அண்ணை, ஊருக்குள் பதுக்கி வைத்திருந்த அவ்வளவு பொருட்களும் இன்று கொழும்புக்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஏற்றிக்கொண்டு வந்தது. அது இன்று பார்த்து இப்படிக் கலவரம் வெடித்திருக்கு. அதுதான் பயமாய் இருக்கு.

--- சந்துரு அவரிடம் ஏன் தம்பி இவ்வளவு நாளும் இருந்திட்டு இப்ப எல்லாத்தையும் கொழும்புக்கு கொண்டு போகினம் என்று கேட்கிறான் . 

--- என்னண்ணா  தெரியாதமாதிரிக் கேட்க்கிறீங்கள் . 

--- எட உண்மையா எனக்குத் தெரியாது அப்பன் . 

--- அண்ணை இந்தக் கிழமை விடுமுறைகள் முடிந்து பாடசாலைகள் எல்லாம் திறக்குது எல்லோ, அதுதான் பொருட்கள் எல்லாம் இங்கு கொண்டு வருகினம் . பாடசாலை உடுப்புகள் வியாபாரமும் அதைவிட மாணவர்களிடம் கஞ்சா மற்றும் விதவிதமான போதைப்பொருள் விற்பனையும் அமோகமாய் நடக்கும் இவை மட்டுமல்ல இன்னும் இரண்டு படகுகளில் சாமான்கள் நிறைய படகுகளில் வருகுது . 

---  ஓ அப்படியா , முதல்ல நீ காடையர்களிடம் இருந்து மட்டுமல்ல காவலர்களிடம் இருந்தும் தப்ப வேணும்........மிகவும் கவனம் தம்பி . 

--- ஓமண்ணை ........!

--- சரி....சரி.....நீ பயப்பிடாதை ஏதாவது வழி இருக்கும் பார்க்கலாம். என்று சொன்ன சந்துரு பீற்றரின் பக்கம் திரும்பி, அண்ணா உங்களுடைய அண்ணரின் வீடும்கூட இங்குதான் எங்கோ இருப்பதாய் நீங்கள் சொன்ன ஞாபகம், இப்ப அங்கு சொல்லமுடியுமா வழியிருக்கா என்று கேட்கிறான் .......

--- ஓம் தம்பி, அதை நான் முதலில் நினைத்தனான், சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீங்களோ என்றுதான் சொல்லவில்லை. இங்கால மிகிந்தலை வீதியில்  பத்து கி.மீ  தூரம் போக அவரின் வீடு வயல் எல்லாம் வரும் என்று சொல்கிறார்.

--- நீங்கள் என்னண்னை ...... உங்களை நான் அப்படி நினைப்பேனா .....இனியும் தாமதிக்க வேண்டாம்.வாகனங்களைத் திருப்பிக்கொண்டு அங்கு செல்வோம்.பிறகு யோசிக்கலாம் என்று சொல்லிவிட்டு, லொறி சாரதியின் பக்கம்திரும்பி தம்பி நீங்களும் எங்களுடன் வாறீங்களா என்று கேட்க அவரும் சரி என்கிறார். பின் அவன் தனது மினிபஸ்சுக்குள் வந்து பயணிகளிடம் நிலைமையைச் சொல்லி அவர்களின் அனுமதியையும்  பெற்றுக் கொள்கிறான். இரு வாகனங்களும் மிகிந்தலை வீதிக்குள் திரும்பி பீற்றரின் வீட்டுக்குப் பயணிக்கின்றன.இரவு அங்கு தங்குகின்றார்கள். பீற்றரின் அண்ணன் குடும்பமும் அந்த அகால நேரத்தில் எல்லோருக்கும் உணவு தயாரிப்பதில் ஈடுபடுகின்றார்கள்.

                                                                         அங்கு இருக்க இருக்க சந்துருவுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. ஆதங்கத்துடன் பீற்றரைப் பார்க்கிறான். அவரும் அவன் பார்வையை உணர்ந்து, என்ன தம்பி செய்ய வேணும் என்று கேட்கிறார். அண்ணை என் நண்பர்களின் மற்ற லொறிகளும் சாரதிகளும் என்ன பாடோ தெரியவில்லை. அதோ அங்கு நிக்கிற மோட்டார் சைக்கிளில் கிட்டவா சென்று என்ன நிலைமை என்று பார்த்து வருவோமா என்று கேட்கிறான். அதுக்கென்ன தம்பி பார்த்துவரலாம். வாகனங்கள் இங்கு நிக்கட்டும். அண்ணர் இருக்கிறார் பயமில்லை என்று சொல்ல, இருவரும் கொஞ்ச உணவுகளும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கலவரம் நடக்கும் இடத்துக்குச் செல்கின்றனர்………………………………… 🐘 🐘 🐘 🐘 🐘 🐘.

வாருங்கள் போராடலாம் . .........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும்வரை போராடு . ........... 07.

                                                   

                                                                           அந்த இடம் ஒரே கலவர பூமியாய்க் கிடக்கு. யார் கொள்ளையடிக்கிறார்கள் யார் வாகனங்களைப் போட்டுக் கொழுத்துகிறார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் நிக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு கும்பலையும் விலக்கி விலக்கிப் பார்த்துக் கொண்டு போக அஞ்சாறுபேர் சந்துரு அண்ணா என்று கத்திக் கொண்டு ஓடிவருகிறார்கள். அவர்களது உடல்முழுதும் வெட்டுக்காயங்களும் இரத்தங்களும், அடிபட்ட இடங்கள் எல்லாம் வீங்கிக் கிடக்கு. அவர்களை பயப்பிடவேண்டாம் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தி முடிந்தளவு அங்கிருந்த எல்லோருக்கும் தண்ணீரும் உணவும் கொடுக்கிறான்.

--- அண்ணா ஒரு பத்து நிமிடத்துக்குள் வாகனத்துக்குள்  இருந்த முழுச் சாமான்களையும் கொள்ளை அடித்துவிட்டு கொழுத்திப் போட்டாங்கள் அண்ணா. நாங்கள் கொண்டுவந்த மூன்று லொறியையும் அங்கே பாருங்கண்ணா, சாம்பலாய் கிடக்குதுகள். என்று அவர்கள் மாறி மாறி சொல்லிக்கொண்டிருக்கும்போது அவ்விடத்துக்கு போலீசும் அம்புலன்ஸ் வண்டிகளும் இராணுவ வாகனங்களுமாய் வந்து குவிகின்றன.பெருங்காயம் பட்ட அவர்களையெல்லாம் ஆறுதல் சொல்லி அம்புலன்ஸ்களில் ஏற்றி விட்டு நாளைக்கு பீற்றரின் அண்ணர்  வந்து உங்களைப்  பார்ப்பார், ஆகவேண்டிய காரியங்கள் எல்லாம் செய்வார் பயப்பிட வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் இவர்கள் வீட்டுக்குவர விடிந்து விட்டிருந்தது. நல்லகாலம், ஒரு உயிர்சேதமும் ஏற்படவில்லை. சந்துருவுக்கு மனதில் இருந்த பாரமும் அகன்றிருந்தது.

                                                             அடுத்தநாள் காலை யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகளிலும்,அங்கிருந்து வந்தவர்கள் மூலமாகவும் அனுராதபுரத்துக் கலவரமே பேசுபொருளாக இருக்கின்றது. இராகவன் கையில் அன்றைய காலைப் பத்திரிகையுடன் தந்தையிடம் ஓடி வருகிறான். கூடவே ஒரு மனிதனும் வருகிறான். தகப்பன் தாமோதரம் ரூபவாஹினியில் அன்றைய அவசரச் செய்திகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அதிலும் இந்தக் கலவரச்செய்திகள்தான் முக்கிய செய்தியாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கு.

--- அப்பா தெரியுமா செய்தி என்னுடைய ஒரு லொறியும் சாமான்களும் முற்றாக எரிந்துபோய் விட்டது. இதோ இவன்தான் அதைப் பார்த்துக் கொண்டு எப்படியோ அந்தக் காடையர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்து வந்திருக்கிறான்.

--- தாமோதரம் அவனைப் பார்த்து தம்பி இங்கே வா, என்ன நடந்தது வடிவாய் சொல்லு.

--- ஐயா, அந்த அதிகாலைநேரம் முன்னுக்கு வந்த ஐந்தாறு லொறிகளை காட்டுக்குள் இருந்து திடீரென்று வந்த காடையர்கள் மறித்து வண்டிக்குள் இருந்தவர்களையெல்லாம் வெளியே இழுத்துப் போட்டு கத்திகளாலும் பொல்லுகளாலும் தாக்கிக் கொண்டிருக்க, மற்றும் பலர் ஓடிவந்து லொறிகள் எல்லாவற்றையும் உடைத்து பொருட்கள் எல்லாவற்றையும் தாங்கள் கொண்டுவந்த லொறி, டிராக்டர்,கார் போன்ற  வாகனங்களில் ஆளாளுக்கு கொள்ளையடித்துக் கொண்டு போகிறார்கள். பின் கும்பல் கும்பலாக அந்த வாகனங்களை எரியூட்டினார்கள்.

--- எங்கட லொறியின் சாரதி மற்றும் கிளீனரைப் பார்த்தாயா.

--- ஓம் ஐயா, அவருக்கும் அடியும் வெட்டும் விழுந்திருந்தது, கிளீனர் முதலே  இறங்கி காட்டுக்குள் ஓடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அவரைக் காணவில்லை.

--- அப்ப மற்ற லொறி என்னவானது என்று தெரியுமா.

--- நானும் அடிவாங்கி நீண்ட தூரம் ஓடி ஒரு ட்ராக்டரில் தொத்திக் கொண்டு வரும்போது மிகிந்தலைச் சந்தியில் சந்துரு அண்ணாவின் மினிபஸ்சும் உங்களின் மற்ற லொறியும் திரும்பிப் போவதைப் பார்த்தேன் ஐயா. எங்கும் கலவரமயமாய் இருந்தபடியால் என்னால் மேற்கொண்டு எதையும் கவனிக்க முடியவில்லை ஐயா.

--- சரி, நீ போகலாம். தம்பி இவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பு என்று சொல்கிறார். இராகவனும் அவனுக்கு பணம் கொடுத்து நன்றியும் சொல்லி அனுப்பி விட்டு உள்ளே கோபத்துடன் வருகிறான்.............................!

 

வாருங்கள் போராடலாம் . .......... 🐪 🐪 🐪 🐪 🐪 🐪 🐪.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும்வரை போராடு ....... 08.

                                                                           

                                                                                        என்ன அப்பா இப்படி சொல்லி விட்டீர்கள். மற்ற லொறியை சந்துரு எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். அந்த வண்டியிலும் பல லட்ஷம் பெறுமதியான பொருட்கள் எல்லாம் இருக்கு. அவையெல்லாம் என்னவாயிற்றோ தெரியவில்லையே.

--- இந்தா பார் இராகவ். முதலில் எரிந்த வண்டியின் சாரதியும் கிளீனரும் என்ன ஆனார்கள் என்று பார். அவனை  வெட்டினது, அடித்தது என்று இவன் சொல்கிறான். முதலில் அவர்களின் நிலமையைக் கவனிக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் எங்கட ஆள் என்று சந்துரு அங்கிருக்கிறான். அவனது நிலைமையையும் நீ யோசித்துப் பார்க்க வேண்டும். உன்னுடைய லொறி மட்டுமல்ல, எங்களுடையதும் எம்போன்ற பல கடைக்காரர்களின் நகை, நட்டு, பணம் எல்லாம் அவன் பொறுப்பில் இருக்கு தெரியுமா ....

---  உங்களுக்கு என்ன தெரியும் அப்பா, நாங்கள் படிப்பை விட்ட காலத்தில் இருந்து நான் தனியாக உழைத்து நகரில் சொந்தமாய் ஒரு கடையும், எனக்கென்று ஒரு வீடு, மற்றும் இரண்டு புத்தம்புது லொறிகளும் சம்பாதித்திருக்கிறேன் என்று அவனுக்கு கொஞ்சம் பொறாமையுண்டு என்று எனக்குத் தெரியுமப்பா..... அவனுக்கு இன்னும் அந்தப் பழையவீடு ஒரு வேன் அதுவும் மாணிக்கம் மாமா வாங்கிக் கொடுத்தது .  வேறு என்ன இருக்கு அவனிடம். இப்ப என்னுடைய லொறியொடு அவ்வளவு பொருட்களையும் தான் எடுத்துக் கொண்டு விடலாம் என்று திட்டம் போட்டிருப்பான்.

---  பொத்தடா வாய்......என்னடா சொல்லுறாய். கோத்தை மாதிரி அறிவு கெட்ட கதை கதையாதை சொல்லிப் போட்டன்.  இதற்கு மேலும் ஒரு வார்த்தை தப்பாகப் பேசினால் பல்லுடைத்துப் போடுவன். நீ இங்க ஏ. சி வீட்டுக்குள் இருந்து கொண்டு விண்ணானம் கதைக்கிறாய். அவன் அங்கு கலவரம் நடக்கும் இடத்தில் உயிரைப் பணயம் வைத்து நிக்கிறான்.  அவனிடம் என்ன இருக்கென்று கேட்கிறியா நீதி நேர்மை, யாரையும் ஏமாற்றாத குணம் இருக்கு. உன்னிடம் இருக்கா.....செய்யிறது முழுக்க கள்ளக்  கடத்தலும் கஞ்சா விக்கிறதும் பெயருக்கு ஜவுளி வியாபாரம் செய்கிறன் என்று பினாத்தல் வேறு.

                  அப்போது வீட்டுத் தொலைபேசி அழைக்கிறது. இராகவன் சென்று எடுக்கிறான். எதிர் முனையில் மாணிக்கம் பேசுகிறார். தம்பி இராகவனோ , அப்பாவைக் கொஞ்சம் அழைக்கிறீர்களா. சரி ஐயா என்று சொல்லிவிட்டு போனைத் தந்தையிடம் தரும்போது " உங்கள் நண்பர் மாணிக்கம் பேசுகிறார். சந்துருவைப் பற்றி நல்லா "டோஸ்" தருவார் வாங்குங்கோ என்று சொல்லிக் கொடுக்கிறான்.

--- தாமோதரம் அதை வாங்கி ஹலோ மாணிக்கம் இங்கு நான் பேசுகிறேன், என்ன விஷயம்.

--- செய்திகள் பார்த்தனீங்களோ, அனுராதபுரத்தில் ஒரே கலவரமாம். தம்பி சந்துருவும் நேற்றுப் போனவர்.ஒன்றும் தெரியேல்ல. உங்களுக்கு ஏதாவது செய்திகள் தெரியுமோ என்றுதான் எடுத்தனான்.

--- நீங்கள் பயப்படாதையுங்கோ. அவன் பத்திரமாய் இருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன். எங்களுடைய ஒரு லொறியும் சாமான்களுடன் அவன் பொறுப்பில்தான் இப்போது இருக்குது. நீங்கள் நிறையப் பொருட்கள் குடுத்தனுப்பினனீங்களோ என்று கேட்க......

--- இல்லையில்லை, அவை போனாலும்கூட பிறகு சம்பாரிச்சுக் கொள்ளலாம், பொடியனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. அதுதான் விசாரிச்சனான். நீங்களும் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, எனக்குத் தகவல் ஏதாவது தெரிந்தாலும் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்  என்று சொல்லிப் போனை வைக்கிறார்.

--- பின் இராகவனிடம் திரும்பி பார்த்தியா அவர் அவன்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். அதில் கொஞ்சமாவது அவன் நண்பன் உன்னிடம் இருக்க வேண்டாமா.

--- ஓமப்பா நானும் எதோ கவலையில் அப்படிப் பேசிப்போட்டேன். அதற்காக மிகவும் மனம் வருந்துகிறேன் அப்பா. இப்பவே நானும் அங்கு சென்று நிலமைகளைப் பார்க்கின்றேன் என்று புறப்பட எத்தனிக்க ....

--- சரி.....சரி..... எதுக்கும்கடையில் இருந்து உன்னுடன் இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போ என்று சொல்கிறார்.

--- மறுபடியும் ஒரு போன் வருகின்றது. இம்முறை ஸ்ரீகாந்த்திடம் இருந்து இராகவனுக்கு.......என்னடா சொல்லு....

--- அதெடா இராகவ் எங்களுடைய சாமான்கள் கொண்டுவந்த போட் இரண்டும் நடுக்கடலில் அடிபட்டுப் போச்சுதடா....கடற்படையைக் கண்டதும் பொருட்களை கடலில் தள்ளிப் போட்டாங்கள். இப்ப நீ ஒரு இடமும் திரிய வேண்டாம், யாராவது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கவும். உங்கள் வீட்டிலும் நிக்காதே, நான் எல்லாவற்றையும் சரி பண்ணிப்போட்டு  மறுபடி உன்னைத் தொடர்பு கொள்ளும்வரை  எனது வீட்டுக்கும் போன் எடுக்காதே.  மிகக் கவனமாயிரு.

--- டே ....என்னுடைய ஒரு லொறியும் உன்னுடைய இரண்டு லொறிகளும் கலவரத்தில் எரிச்சுப் போட்டாங்களடா....மற்ற லொறி இப்பொழுது சந்துரு வசம் இருக்கு, அதுவும் என்னாகும் என்றே தெரியவில்லை.

--- டே இராகவ்......போனதைப் பற்றியெல்லாம் இப்ப யோசிக்கிற நேரமில்லை. சந்துரு சுழியன் எப்படியும் நல்ல செய்தியுடன்தான் வருவான். அதிகம் கவலைப்படாதே என்று சொல்லிப் போனை வைத்து விட்டான்...........!

வாருங்கள் போராடலாம் ........... 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.