Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பவென்றாற் போல....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவென்றாற் போல....

அழுகையாய் வந்தது. யாரிடமும் கதைக்கவோ சிரிக்கவோ முடியாத நிலையில் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டது. காடுகள் மலைகள் தண்ணீர் நிரம்பிய கடல் கிணறுகள் என நிறையவே என்னை அங்குமிங்குமாய் அலைத்து இழுத்துக் கொண்டு ஓடுமாப்போல அலைகளும் கடல்களும் என்னை உள்ளிழுப்பது போலிருந்தது. கண்களுக்குள் எட்டிய பிள்ளைகளின் கைகள் என்னைவிட்டுத் தொலைவாகின.....நான் தனியனாய் எல்லாவற்றையும் எல்லோரையும் தொலைத்து....

கோழியின் கூவலும் மெல்லிய இசையுமாக மணிக்கூடு தனது இருப்பை உறுதிப்படுத்தி எழுப்புகிறது. நேரம் அதிகாலை 4.20. வேலைக்குப் போகும் அவசரத்தில் என்னவன் எழுந்து போகிறான். அட இதுவரையும் கண்டது கனவா ? பிள்ளைகள் உறக்கம் கலையாமல் தங்கள் படுக்கைகளில்....கதவு இடுக்குகளால் உறுதி செய்து கொள்கின்றேன்.

மறுபடி 6.00மணிக்கு எனது துயில் கலைத்தலுக்கு மணிக்கூட்டை சரி செய்து கொள்கிறேன். தடம்...தடம்....என மாடிப்படிகளில் ஏறி அறைக்குள் வந்தவன் தொலைபேசியை என்னிடம் நீட்டுகிறான். அதிகாலைத் தொலைபேசி அழைப்புக்கள் ஏனோ இதயத்துடிப்பை அந்தரத்துடிப்பாக்கி விடுகின்றன. கையில் வாங்கிய தொலைபேசியை காதுக்கருகில் கொண்டு செல்கிறேன்.

தொலைபேசிக்குள்ளால் வந்த அழுகையொலி என் இதய நாளங்களில் பயத்தை ஏற்றிவிடுகிறது. யாருக்கோ ஏதோ என்ன என்பதை சொல்லாத அழுகைநெஞ்சுக்கூட்டுக்குள் ஆயிரம் அதிர்வுகள். இதயம் தனது சாதாரண துடிப்பை விரைவாக்கியது.

என்ன.....என்ன...என் கேள்விக்கான பதிலாய் என் தங்கையின் உதடுகளிலிருந்து அழுகையூடு வெளிவருகின்றன....அப்பா.....அப்பா..

..அதற்கு மேல் அவளால் எதையும் தெளிவுபட எனக்குக் கூறமுடியவில்லை. அவள் பெலத்து அழுதாள். அப்பாக்கென்ன ? அப்பாக்கு மாரடைப்பு வந்து அதற்குமேல் அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. ஒப்பாரியால் உயிரை உலுக்கியெடுத்தாள். நேற்று முன்தினம் வரை அப்பா ஐரோப்பா வருவதற்கான அவசரமாக இருந்ததும் இதற்கிடையில் இதயம் நின்று அப்பா இறந்தது என்றதும் ஏதோவொரு கனவு காண்பது போலிருந்தது.

வெளிநாடு வருவதற்கான ஒழுங்குகள் செய்து கொண்டிருந்த அப்பாவுக்கு மாரடைத்து மரணம் என்பதை நம்பவா முடியும் ? மறுத்து ஒரு வார்த்தை வரவில்லை. விக்கித்து விழிகள் நிரம்பி வழிகிறது. அது ஒரு கனவாக இல்லையொரு கற்பனைக் கதையாக இருக்காதா ? நோய் பிடித்துப் படுக்கையில் விழுந்து போய்விடு போய்விடு என்று மற்றவர் சொல்லாமல் பொட்டென்று போய்விடுவேன். மரணம் பற்றிப் பேசிய நேரங்களில் அப்பா சொன்ன வார்த்தைகள் மெய்யாகி அப்பா இறந்துவிட்டதாய் அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புக்கள்.......

என்ன செய்ய எவருடன் பேச எதுவும் முடியாமல்....மனசு அப்பாவின் நினைவுகளையே சுற்றிக் கொள்கிறது. ஓவென்று கத்தியழ வேண்டுமாப்போல் ஒருவருமற்ற வெளியில் போய் இருந்துவிடலாம் போல....கண்களில் கண்ணீரைத் தவிர வேறு எதையும் உதிர்க்கத் தெரியாத நாளது. துயர் பகிர வந்த அழைப்புக்களைக்கூடத் துண்டித்து விட்டு ஒரு அமைதியான வெளிக்குப் போய்விட வேண்டும் போல மனசு அந்தரித்துக் கொண்டிருந்தது.

அப்பாவை எல்லோரும் ஊருக்குள் ஒரு குடிக்கு அடிமையான காதலில் தோற்ற சங்கக்கடை மனேஜராகவே தெரியும். ஆனால் அப்பாவுக்குள்ளிருந்த மனிதத்தை எங்களுக்கு மட்டுமே தெரியும்.

அப்பா குடித்து விட்டு வசந்தமாளிகை வசனம் சொல்லியபடி வரும் அரவம் வடக்கே கேட்டாலென்ன மேற்கே கேட்டாலென்ன நாங்கள் வரிசையாய் வீதிக்குப்போய் சைக்கிளை ஒருவர் கள்ளுப்போத்தல்களை ஒருவரென அப்பாவைத் தாங்கியபடி வீட்டுக்குக் கொண்டு வருவோம்.

'குடிப்பதற்கு ஒரு மனமிருந்த அவளை மறந்துவிடலாம் அவளை மறப்பதற்கென ஒரு மனமிருந்தால் குடித்து விடலாம் ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்" என வசந்தமாளிகையில் சிவாஜி கணேசன் பேசிய அத்தனை வசனங்களையும் பேசிப்பேசி இடைக்கிடை எங்கள் பெயர்களையும் அழைத்து அத்தனைக்குள்ளும் அப்பாவின் முதற்காதலியின் பெயரையும் அழைத்து வசந்தமாளிகையை நாங்கள் திரையில் காணாமலேயே எம் மனங்களில் பதிய வைத்தவர்.

மழைநாட்களென்றால் ஊர் வயிரவர் கோவிலடி முதல் சமாதிகோவிலடியெங்கும் வெள்ளம் நிறைந்துவிடும். அம்மா அறியாமல் அந்த வெள்ளத்தில் கால் வைத்து குஞ்சியப்பு வாசலிலிருந்து சமாதிகோவிலடி வரையும் ஓடிப்போய் வந்து விடுவோம். நாகம்மா வீட்டில் கசிப்படித்துவிட்டு முறியல் செட்டியும் அப்பாவும் வெள்ளைச்சேட்டும் வேட்டியும் வெள்ளத்தில் செம்பாடாக ஆளையாள் தாங்கியபடி வருவதை விறாந்தை யன்னல்களுக்கால் கண்டதுமே மழையில் நனைந்து வெள்ளத்தில் அப்பா விழுந்துவிடாமல் நானும் தங்கைகளும் கையில் தாங்கி வருவோம். இரவிரவாக எங்கள் வீட்டு டேப்றெக்கோடரில் நாங்களும் அயல்வீட்டு சிறுவர்களுமாக வைக்கும் சங்கீதக் கச்சேரி அப்பாவின் கச்சேரியை மீறிவிடும். அந்த நாட்களில் 10மணி 11மணியென அயல்வீடுகளெல்லாம் விளக்குகளை நூர்த்துவிட்டு எங்கள் வீட்டைத்தான் புதினம் பார்க்கும். அதையெல்லாம் அப்போது வெறுப்பாகவே பார்த்த நான் இப்போது அப்பாவுடனான இனிய நினைவுகளாகவே நினைவுகளில் சேமித்துக் கொள்கிறேன்.

மறுநாள் காலையில் அம்மாவின் அம்மம்மாவின் திருவாசகம் தொடங்க அப்பா போர்வையால் தலையை மூடிக்கொண்டு சிரிப்பதும் 'இனிமேல் உந்தச் சனியனைக் கையாலையும் தொடுறேல்லயென்ற" சத்தியங்களும் பொய்த்து மறுபடியும் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனி சிலவேளை ஞாயிறுகளிலும் தொடரும் வசந்தமாளிகை வசனமும் வசந்தமாளிகை பாடல்களும் கதைவசனமும் இப்போ மீளவும் அனுபவிக்க விரும்பும் தருணங்கள்.

சனிக்கிழமை விடியப்பறம் நாள் வைத்து அப்பாவின் அப்புச்சயிக்கிளில் முன்னுக்கு இருவர் பின்னுக்கு ஒருவர் என மயிலிட்டிக் கடற்கரைக்கு மீன்வாங்கப் போகும் அப்பாவுடன் போவோம். மயிலிட்டிக்கடற்கரை மணலில் கால்புதையக் கால்புதைய சோழிபொறுக்கி பெரிய பெரிய மீன்களையெல்லாம் தொட்டுப் பார்த்து அதிகாலையில் நீலக்கடலில் அழகை நெஞ்சுக்குள் இருத்திய நாட்கள் தான் முதல் கடல்பார்த்த அனுபவம். கடற்கரை மணலில் குவிந்திருக்கும் மாம்பழங்கள் தந்த சுவையென அப்பாவின் நினைவுகள் நிறையவே....

எங்கள் சிறுவயது ஞாபகங்களைத் தேடினால் அப்பா எங்கள் கண்களில் ஒரு வேடிக்கையான மனிதர். என்றோ கரைந்துபோன அப்பாவின் காதல். அப்பாவை மறந்து இன்னொருவரின் காதலியாகிய அந்தக்காதலி அப்பாவுக்குள் உயிர் இருந்தவரை மறக்கமுடியாத வடுவாகவே இருந்தது. ஏன் அந்தக்காதலி இன்னொருவரின் காதலியானாள் ? சின்னவயதில் அப்பா தன் காதலியின் பெயரை வெறியில் உச்சரித்த போதெல்லாம் அது வெறிப்பாட்டென்று அக்கம்பக்கத்தில் சொல்வார்கள். அடிச்சனியன் தும்புக்கட்டையாலை தும்புபறக்கப்பறக்க வெழுக்க வேணுமென அப்பப்பா பேசும் போது சிரிக்கும் அப்பாவின் சிரிப்பு எல்லாம் அந்தநாட்களில் புதிராகத்தான் இருந்தது.

60தடவைகள் அப்பா பார்த்த வசந்தமாளிகை படத்தில் அப்படி என்னதான் அற்புதம் இருந்ததோ ? சாவீட்டில அழுறமாதிரி உதில என்ன கிடக்கு ? அப்பா வசந்தமாளிகை பாடல்களைப் போட்டு உரே கேட்கும்படியாக ஒலியைக்கூட்டி விட்டபோதெல்லாம் ஊர்கூடி நின்று அப்பாவின் குரலைத்தான் கேட்டது. அப்போதெல்லாம் வசந்தமாளிகை வசனமோ பாடலோ தராத பாதிப்பு அப்பா இல்லாது போன இந்த நாட்களில் அதையெல்லாம் கேட்க வேண்டும் போல் மனசுக்குள் அப்பாவின் குரல் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

நான் புலம்பெயரும் போது 43வயதில் காலடிவைத்திருந்து அப்பாவுக்கு 59வயதாகிவிட்டது. 13.03.2008 மாரடைத்து மரணம் என்பதை நம்ப மறுக்கிறது மனசு. நான் செத்தா வருவியோ ? 5ஆண்டு முன் ஊர் போனபோது அப்பா கேட்டதும்...விமான நிலையத்தில் இறுதிக் கடiவையில் நின்று அப்பா என் கைகளைப்பற்றி அழுததும்.....ஆருக்குத் தெரியுமப்பா....உங்களுக்கு முன்னம் நான் போறனோ தெரியாது என்றதும் இப்பவென்றாற் போல....

(ஒருபேப்பர்)

Edited by shanthy

சாந்தி அக்கா, வீட்டு விசயங்களை அப்பிடியே கதையாக சொல்லி இருக்கிறீங்கள். பெண் பிள்ளைகளுக்கு அம்மாவை விட அப்பாமாரில கூட விருப்பம்தானே. உங்கட அப்பா எவ்வளவு ஆழமாக ஒருத்தியை முன்பு மனதார நேசித்து இருக்கிறார் எண்டு அறியக்கூடியதாக இருக்கிது. உண்மையாக அவளை ஆழமாக நேசித்து இருந்தபடியாலதான் அப்பாவால அப்பிடி வெளிப்படையாக பாடல் எல்லாம் பாடி தண்ட பழைய காதலியை நினைவுபடுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்து இருக்கிது எண்டு நினைக்கிறன்.

காதலில தோற்கிறது ஒருபுறம் இருக்க... தோற்ற காதலை வெளிப்படையாக எல்லார் முன்னிலையிலும் சொல்லிறது எண்டால் அதுக்கு கொஞ்சம் துணிவு, அத்தோட நல்ல மனமும் வேண்டும். தண்ணி அடிச்சுப்போட்டு உங்கட அப்பா அப்படி கதைச்சு இருந்தார் எண்டு நீங்கள் சொன்னாலும், சிலது அவர் வெறிமாதிரி நடிச்சுக்கொண்டு தனது மனக்கவலைகளை, மனப்பாரத்தை இறக்கினாரோ யாருக்கு தெரியும். அவரிண்ட காதல் தோற்றபடியாலதானே நீங்கள் அவருக்கு பிள்ளைகளாக பிறக்க முடிஞ்சது. இந்தவிதத்தில சந்தோசப்படுங்கோ. ஒவ்வொரு செயலுக்கு பின்னாலையும், ஒவ்வொரு தீமைக்கு பின்னாலையும் சில நன்மைகளும் இருக்கக்கூடும்.

உங்கள் அப்பாவுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள். வாழ்க்கை எண்டால் இப்பிடித்தானே நாங்கள் தனியாக இந்த உலகத்துக்கு வந்து பிறகு பலருடன் கூட்டமாக சேர்ந்து கும்மாளம் எல்லாம் போட்டு, பிறகு போகேக்க மீண்டும் தனியாக போகவேணும். எனக்கு அம்மா, அப்பா என்னுடன் இருக்கின்றார்கள். நான் தினமும் அவர்களுடன் அன்பாக இருக்கிறது. ஒரு சின்ன அலுவலாக கடைக்கு, பள்ளிக்கூடத்துக்கு எண்டு வீட்டுக்கு வெளியில போகேக்க ரெண்டுபேருக்கும் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துபோட்டுத்தான் போறது. நாளைக்கு அவர்கள் இல்லாத நிலையில கவலைப்படாமல் இப்பவே இருக்கிற காலத்திலயே அவையுக்கு மதிப்பு கொடுத்து அன்போட இருக்கிறது நல்லதுதானே.

மயிலிட்டிக்கு மீன் வாங்க எல்லாம் போய் இருக்கிறீங்கள். நீங்களும் எங்களுக்கு கிட்டக்கிட்டத்தான் இருந்து இருக்கிறீங்கள் போல. உங்கட ஊர் எது? நாங்கள் சுமார் ஆறு, ஏழு வருசங்கள் சொந்த ஊரில இருந்தது பிறகு அகதியாக ஓடத்துவங்கின மரதன் ஓட்டம் கடைசியில ஒருமாதிரி முடிவுக்கு வந்திட்டிது.

வணக்கம் .சாந்தி ..நல்லாயிருக்கு ...

  • கருத்துக்கள உறவுகள்

தோற்ற காதலை மறக்க முடியாது ஆண்களால்............

சாந்தி அக்கா நன்று

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருக்கா நித்திரையில் ஒரு நடிகையின் பெயரை சொல்லி புலம்பினதுக்கு என்ற மனுசி இப்பவும் இடைக்கிட சண்டை பிடிப்பா ...........உங்களுடைய அம்மா சரியான முற்போக்கு வாதி போல கிடக்குது....

சாந்தி அக்கா, உங்கள் நிஜக் கதையை வாசித்த போது நெஞ்சம் கனத்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட முரளி , சின்னக்குட்டித்தாத்தா , முனிவர் , புத்தன் மற்றும் மல்லிகைவாசம் அனைவருக்கும் நன்றிகள்.

மயிலிட்டிக்கு மீன் வாங்க எல்லாம் போய் இருக்கிறீங்கள். நீங்களும் எங்களுக்கு கிட்டக்கிட்டத்தான் இருந்து இருக்கிறீங்கள் போல. உங்கட ஊர் எது? நாங்கள் சுமார் ஆறு, ஏழு வருசங்கள் சொந்த ஊரில இருந்தது பிறகு அகதியாக ஓடத்துவங்கின மரதன் ஓட்டம் கடைசியில ஒருமாதிரி முடிவுக்கு வந்திட்டிது.

மயிலிட்டியிலிருந்து சில மைல்கள் தள்ளியிருக்கும் குப்பிளான் தான் எனது ஊர். உங்களுக்கு மரதன் ஓட்டம் ஆறு ஏழு வருடங்களில் முடிந்திருக்கிறது. நாங்கள் 84இல் இருந்து 93வரையுமே யாழ்ப்பாணத்தில் அலையாத ஊரில்லை. நாய் குட்டிகாவுவது போல என்பார்களே அதே நிலையில். :rolleyes:

அப்பாவின் அந்தநாள் நினைவுகள் என்றுமே மறக்க முடியாதவை.

அம்மா அப்பா மீது நீங்கள் காட்டும் பாசத்தை மனதார பாராட்டுகிறேன்.

தோற்ற காதலை மறக்க முடியாது ஆண்களால்............

சாந்தி அக்கா நன்று

அட முனிவருக்கும் காதலை மறக்க முடியாதா ? :lol: முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள் என்பார்கள். :D

நினைவுகளை ஆணென்ன பெண்ணென்ன எல்லாராலும் தான் நினைவுபடுத்திப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் காதலென்ன நண்பர்களென்ன எல்லாருக்கும் பொதுவானது ஞாபகங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருக்கா நித்திரையில் ஒரு நடிகையின் பெயரை சொல்லி புலம்பினதுக்கு என்ற மனுசி இப்பவும் இடைக்கிட சண்டை பிடிப்பா ...........உங்களுடைய அம்மா சரியான முற்போக்கு வாதி போல கிடக்குது....

கனவில நடிகையின்ரை பேரைச் சொன்னா உங்களைப் பேசாமல் பின்னையென்ன செய்வா மனிசி ? :rolleyes: நான் நினைக்கிறேன் நீங்கள் சினேகாவை கனவு கண்டிருப்பியள். சிலவருசங்கள் முதல் ரீரீஎன்னில் ஒரு விளம்பரம் வந்தது. அப்ப சினேகா லண்டனுக்கு வரவிருந்தவா. ஒரு இளைஞன் கனவிலை சினேகாவோடை உலாத்திற மாதிரி பொடி நித்திரையில சினேகா சினேகா எண்டு புலம்பினது. நீங்கள் அந்த விளம்பரத்தை பாத்திட்டுத்தான் புலம்பினியளோ தெரியேல்ல. :lol:

இதில் என்ன முற்போக்கு இருக்கு. ஒருவர் தனக்குள் இருப்பதை வெளிப்படையா சொல்வது நல்லம் தானே. குடும்பம் என்றால் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம் என்பதன் அர்த்தம் இதுதானோ தெரியாது. எதற்கும் அம்மாவிடம் கேட்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட முனிவருக்கும் காதலை மறக்க முடியாதா ? :rolleyes: முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள் என்பார்கள். :huh:

நினைவுகளை ஆணென்ன பெண்ணென்ன எல்லாராலும் தான் நினைவுபடுத்திப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் காதலென்ன நண்பர்களென்ன எல்லாருக்கும் பொதுவானது ஞாபகங்கள்.

என்ன சாந்தியக்கா இப்படி ஒரு கேள்வி கேட்டு போட்டயல் யாரால்தான் காதலை மறக்கமுடியும்

என்னது முற்றும் துறந்தவரா?? துறக்கமுடியாது இங்கே சில ஜந்துக்கள் உள்ளன காந்து போட்டு விடும் எல்லாத்தையும் :lol::lol:

இந்த காதல் நினைவுகளை மீட்கும் போது என்னையறியாமலேயே ஒரு ஆனந்தம் அதனால் தான் அப்படி எழுதினேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் கதை சோகத்தை தந்தாலும் நீங்களும் உங்கள் சகோதரங்களும் அப்பாவின் மேல் வைத்திருந்த,வைத்திருக்கிற பாசம் நெகிழ்ச்சியாக உள்ளது.

ஓ சாந்தி அக்கா குப்பிளானோ? நான் ஏழாலைக்கு வந்து இருக்கிறன் சின்னனில. எனக்கு குப்பிளான் எண்டு ஊர் தெரியும். அங்க வந்து நினைவு இல்ல. ஏழாலையிலதான் நாங்கள் மாடு வாங்கினது. மாடு வாங்க வரேக்க அப்பாவோட வந்தது சின்னனில சைக்கிளில. குப்பிளான் எங்க இருக்கிது எண்டு அப்பாவை இப்ப கேட்டன். அவர் ஏழாலைக்கு கிட்ட இருக்கிறதாய் சொன்னார். அப்பிடியோ?

நாங்கள் மரதன் ஓடினது பதின்நாலு வருசம். ஊரில நிம்மதியா இருந்தது ஆக ஐஞ்சு ஆறு வருசங்கள் தான். அதுக்கு பிறகு அகதியா ஓடித்திறிஞ்சு பட்ட கஸ்டங்கள், அவமானங்கள், இழிவுகள், வேதனைகள் சொல்லில அடங்காது. எங்கட வாழ்க்கை, படிப்பு எல்லாம் பதின்நாலு வருச மரதன் ஓட்டத்தில சீரழிஞ்சு போச்சிது. பிறகு கனடாவுக்கு வந்து ஒருமாதிரி வாழ்க்கையை நிலைநிறுத்தி மூச்சுவிடக்கூடியதாக இருந்திச்சிது சாந்தி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா , உங்கள் உண்மை கதை சோகமாக உள்ளது.அதிலும் உங்கள் அப்பாவின் அடையமுடியா காதல், பின்னர் அவரின் இழப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :)

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பதிவை இன்று தான் வாசித்தேன். என்ன செய்வது , ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் எல்லா இடங்களும் ஓடி உலகின் பல் வேறு நாடுகளில் பிரிந்து எல்லோரும் வாழ்கிறோம். பெற்றோர்கள் ஒரிடம், பிள்ளைகள் ஒரிடம், சகோதர சகோதரிகள் வெவ்வேறு இடங்கள். அவர்களை அடிக்கடி சந்திக்க முடியாத வாழ்க்கை. இடையிடையே வரும் அவர்களின் நிரந்தரப் பிரிவுச் செய்திகள். சிலருக்கு தங்களது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத்தெரியாமல் ஒரு வாழ்க்கை. சிலரின் உறவுகள் வன்னித் தடுப்பு முகாம்களில். அவர்களை இனி எப்பொழுது பார்க்கலாம் என்று கூடத் தெரியாத அவல நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :(

கந்தப்புவின்ரை புண்ணியத்தில நானும் இண்டைக்குதான் இந்த பதிவைப் பார்த்தேன்.

சாத்திரிக்கும் எல்லாம நினைவிருக்கோ....என்ரை மரமண்டைக்கு தான் எதுவும் நினைவில்லாமல் இருக்கு. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி குப்பிளான் கேணியடியிலை இருக்கிற புளியமரத்தை பாத்து உங்கடையப்பா அடிக்கடி யாருக்காக இது யாருக்காக எண்டு வசந்த மாளிகை பாட்டு பாடினதின்ரை அர்த்தம் இப்பதான் விளங்குது. நானும் அவருக்கு அந்தப் புளியமரத்திலை ஏன் இவ்வளவு அன்பு எண்டு நினைச்சு குழம்பிப் போயிருந்தனான். :D

அழகான அந்தப் புளியமரம் அதோடை சேந்த அந்தப் பனைமரம் சாத்திரிக்கு அடிக்கடி நினைவில் வரும் :lol:

இப்ப பதிவை இன்று தான் வாசித்தேன். என்ன செய்வது , ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் எல்லா இடங்களும் ஓடி உலகின் பல் வேறு நாடுகளில் பிரிந்து எல்லோரும் வாழ்கிறோம். பெற்றோர்கள் ஒரிடம், பிள்ளைகள் ஒரிடம், சகோதர சகோதரிகள் வெவ்வேறு இடங்கள். அவர்களை அடிக்கடி சந்திக்க முடியாத வாழ்க்கை. இடையிடையே வரும் அவர்களின் நிரந்தரப் பிரிவுச் செய்திகள். சிலருக்கு தங்களது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத்தெரியாமல் ஒரு வாழ்க்கை. சிலரின் உறவுகள் வன்னித் தடுப்பு முகாம்களில். அவர்களை இனி எப்பொழுது பார்க்கலாம் என்று கூடத் தெரியாத அவல நிலை.

நினைவுகளுக்குள்ளே வாழும் உறவுகளும் ஊரும்...... :(

சாத்திரிக்கும் எல்லாம நினைவிருக்கோ....என்ரை மரமண்டைக்கு தான் எதுவும் நினைவில்லாமல் இருக்கு. :lol:

உங்களுக்கு சேது படத்தில வாற விக்ரமின் நிலைமைமாதிரி ஏதூவது நடந்ததூ ? :(

ஞாபகம் வருதே என பாடிப்பாடி ஞாபகப்படுத்திப் பாருங்கோ.....

எங்கள் ஊர் பனங்கூடல்....இலுப்பைமரம்.....புள

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,

அடிக்கடி உங்களின் அப்பா குறிப்பிடும் வசனம் ஒண்டு எண்டு ஒன்றை எழுதியுள்ளீர்கள்....முற்றிலும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.