Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கிலியன்

Featured Replies



சங்கிலியன்

 

sangilian.jpg

 

சங்கிலியன் அல்லது முதலாம் சங்கிலி அல்லது ஏழாம் செகராசசேகரன் (இறப்பு: 1565) என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.

முதலாம் சங்கிலி 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனுக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட அவனது மகனான பரராசசேகரனின் மகன் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இதே நூலின்படி, பரராசசேகரனுக்கு இராசலட்சுமியம்மாள், வள்ளியம்மை என இரண்டு மனைவிகளும் மங்கத்தம்மாள் என ஒரு வைப்புப் பெண்ணும் இருந்தனர். இராசலட்சுமியம்மாளுக்கு சிங்கவாகு, பண்டாரம் என இரண்டு ஆண் மக்களும், வள்ளியம்மைக்கு பரநிருபசிங்கம் உட்பட நான்கு பிள்ளைகளும் பிறந்தனர். சங்கிலி மங்கத்தம்மாளுக்குப் பிறந்தவன். எனினும் யாழ்ப்பாணத்தை நீண்டகாலம் ஆண்ட சங்கிலி வைப்பு பெண்ணின் மகன் என்பதைப் பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

பரராசசேகரனின் பட்டத்தரசியின் மூத்தமகன் சடுதியாக இறந்தான், பின்னர் இளவரசுப் பட்டம் சூட்டிக்கொண்ட இரண்டாவது மகனும் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டான். இருவரையும் சங்கிலியே கொன்றான் என்றும், இரண்டாவது மனைவியின் மூத்த மகனான பரநிருபசிங்கத்தை ஏமாற்றி அரசுரிமையைச் சங்கிலி கைப்பற்றிக் கொண்டான் எனவும் வைபவமாலை கூறுகின்றது .

போத்துக்கீசருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரின் சங்கிலியைப் பற்றிய குறிப்பு ஒன்றில் அவனைச் சியங்கேரி என்னும் பெயரால் குறித்துள்ளனர். இக் குறிப்பில் இவ்வரசன் 42 ஆண்டுகளுக்கு மேல் யாழ்ப்பாணத்தை ஆண்டதாகவும், பின்னர் போத்துக்கீசர் அவனது அரசாட்சியை அழித்துவிட்டுத் 97 ஆண்டுகள் ஆண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சுவாமி ஞானப்பிரகாசர் சங்கிலி ஆட்சி 1519 ஆண்டிலிருந்து 1561 வரை இருந்ததாகக் கணித்துள்ளார்.

சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். போத்துக்கீசர் இந்தியாவிலும் இலங்கையிலும் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் படை பலத்தை மட்டுமன்றிக் கத்தோலிக்க சமயத்தையும், வணிகத்தையும் கூட ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை அறிந்திருந்த சங்கிலி, போத்துக்கீசரின் இத்தகைய எல்லா நடவடிக்கைகளுமே கடுமையாக எதிர்த்துவந்தான். அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்குத் துணை போனவர்களையும் இரக்கம் பாராமல் தண்டித்தான். இதன் காரணமாகவே போத்துக்கீசர், முக்கியமாகப் போத்துக்கீச மத போதகர்கள் இவனை வெறுத்தனர். இதன் பின்னணியிலேயே சங்கிலியைப் பற்றிப் போத்துக்கீசர் எழுதிவைத்திருக்கும் குறிப்புக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற நாட்டவரான போத்துக்கீசர் மிக மோசமாகச் சங்கிலி மன்னனைத் தூற்றி எழுதியதானது சங்கிலி நாட்டுப்பற்று மிக்கவனாகவும், அந்நியர் ஆதிக்கத்தை வெறுப்பவனாகவும் இருந்தான் என்பதையே காட்டுவதாகச் சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். இவன் மிகவும் தைரியமுள்ள, கடும்போக்கான மன்னன் என்பது அவர்களது கருத்து.

சங்கிலி மன்னன் காலத்தின் முற்பகுதியிலும், அதற்கு முன்னரும் யாழ்ப்பாண அரசு கடலில் குறிப்பிடத்தக்க பலம் கொண்டதாக இருந்ததுடன், கடல் கடந்த வணிகத்தின் மூலமும் பெருமளவு வருமானம் பெற்று வந்தது. இப்பகுதியில் போத்துக்கீசரின் வணிக முயற்சிகள் யாழ்ப்பாண நாட்டின் நலனுக்குப் பாதகமானது என்பதை உணர்ந்திருந்த சங்கிலி, 1940 களில், போத்துக்கீச வணிகக் கப்பல்கள் முதன் முதலாக யாழ்ப்பாணத் துறைமுகங்களுக்கு வர முயன்றபோது தனது படைகளை அனுப்பிக் கப்பல்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தான்.

தான் போத்துக்கீசருக்கு எதிராகச் செயற்பட்டது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிராகச் செயற்பட்ட சிங்கள மன்னர்களுடனும் சங்கிலி சேர்ந்து செயற்பட்டான். போத்துக்கீசருக்கு எதிராகப் போராடிய தென்னிலங்கை சீதாவாக்கை இராச்சியத்தின் மன்னன் மாயாதுன்னை தென்னிந்தியாவிலிருந்து படைகளை வரவழைத்தபோது, அப்படைகள் யாழ்ப்பாண நாட்டினூடாகச் செல்ல சங்கிலியன் உதவினான். அக்காலத்தில் கோட்டே அரசனான புவனேகபாகு போத்துக்கீசருடன் உறவு கொண்டு அவர்களுக்குத் தனது நாட்டில் பல வசதிகளையும் அளித்திருந்தான். அத்தோடு யாழ்ப்பாண அரசையும் தனதாக்கித் தந்தால் மேலும் பல சலுகைகளை அளிப்பதாகவும் உறுதி அளித்தான். இதனால் கோட்டே அரசனின் உடன்பிறந்தானும், அவனுக்கு எதிரியுமாயிருந்த சீதாவாக்கை இராச்சியத்தின் அரசனான மாயாதுன்னையுடன் கூட்டுச் சேர்ந்து, சங்கிலி புவனேகபாகுவை எதிர்க்க முற்பட்டான். கண்டியரசனான விக்கிரமபாகுவையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு 1545 ஆம் ஆண்டில் கோட்டே மீது இவர்கள் படையெடுத்தனர் ஆயினும் வெற்றி கிட்டவில்லை. இரண்டு ஆண்டுகளின் பின்னர் தஞ்சாவூர் நாயக்க மன்னனிடம் இருந்து பெற்ற படை உதவியுடன் மாயாதுன்னையையும் சேர்த்துக்கொண்டு சங்கிலி மன்னன் கோட்டேயைத் தாக்கினான். தொடக்கத்தில் போர் நிலை யாழ்ப்பாண-சீதாவாக்கைக் கூட்டுப் படைகளுக்குச் சாதகமாக இருந்தது எனினும், இறுதி வெற்றி கிடைக்கவில்லை.

1549ஆம் ஆண்டளவில் மாயாதுன்னை, கோட்டே அரசனுக்கு எதிராக போத்துக்கீசருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முற்பட்டான். போத்துக்கீசரும் கோட்டே அரசன் மீது ஐயுறவு கொண்டனர். இதை அறிந்த புவனேகபாகு, போத்துக்கீசருக்கு எதிராக இலங்கை அரசர்களை ஒன்றிணைக்க முற்பட்டான். அவனது வேண்டுகோளைப் பிற இலங்கை அரசர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், சங்கிலியன் தன் இனிமேல் கோட்டேயைத் தாக்குவதில்லை எனப் புவனேகபாகுவுக்கு வாக்குக் கொடுத்தான். இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து சங்கிலி மன்னனின் வெளியுறவுக் கொள்கை போத்துக்கீசரை எதிர்ப்பதையே மையமாகக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது.

தாம் அடிமைப்படுத்தக் கண்வைத்திருக்கும் நாடுகளில் தமது மதத்தைப் புகுத்துவதன் மூலம் தமக்கு ஆதரவான மக்களை உள்நாட்டிலேயே உருவாக்கிக் கொள்ளும் போத்துக்கீசரின் உத்தியும், தமது மத நிறுவனங்களைப் போர் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்த்து எடுத்தமையும், உள்நாட்டு அரசுகளைப் படைபலத்தின் மூலமாயினும் கட்டுப்படுத்தித் தமது செல்வாக்கை வளர்த்துக்கொள்வதில் போத்துக்கீசக் குருமார்கள் காட்டிய தீவிரமும் வரலாறு காட்டும் உண்மையாகும். இதை முன்னரே உணர்ந்து கொண்ட சங்கிலி மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராகவும் கடுமையாக நடந்து கொண்டான். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் வெட்டிக் கொன்றான்.

தமது மதமாற்ற முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சங்கிலியைப் பழி வாங்கவேண்டும் என்பதில் போத்துக்கீசக் குருவான புனித சவேரியார் மிகவும் தீவிரமாக இருந்தார். கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுநரைக் கண்டு தனது வேண்டுகோளை அவர் முன்வைத்தார். அவரது வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட ஆளுனர் அதை உடனடியாகச் செயல் படுத்த முடியாது என்றும் கூறிவிட்டார். இதனால் நேரடியாகவே லிசுப்பனில் இருந்த போத்துக்கலின் அரசனுக்குக் கடிதம் எழுதினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்கான அநுமதி லிசுப்பனில் இருந்து கோவாவுக்கு அனுப்பப்பட்டது. எனினும் சவேரியாரின் விருப்பம் எளிதில் கைகூடிவிடவில்லை. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்குச் சவேரியார் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள் பற்றி குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் விபரமாகக் குறித்துள்ளார்.

1543 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு எதிரான முதலாவது படையெடுப்பு முயற்சி நடந்ததாகத் தெரிகிறது. மார்ட்டின் அல்போன்சோ தே சோசா என்னும் போத்துக்கீசப் படைத்தலைவனின் தலைமையில் வந்த கப்பல்கள் காற்றினால் திசைமாறி நெடுந்தீவை அடைந்தன. அவர்கள் அங்கே தங்கியிருந்தபோது, அதையறிந்த, சங்கிலியால் ஏமாற்றப்பட்டதாகக் கருதப்படும் அவனது தமையனான பரநிருபசிங்கன் அங்கு சென்று சங்கிலியைப் பதவியிலிருந்து அகற்றித் தன்னை அரசனாக்கினால் அவர்களுடைய வணிக விருத்திக்கும், மத வளர்ச்சிக்கும் உதவுவதாக வாக்களித்து அவர்களது உதவியைக் கோரினான். அவ்வாறு செய்வதாக வாக்களித்து அவனிடம் இருந்து பெறுமதியான முத்துக்களைப் பெற்றுக்கொண்ட தளபதி, சங்கிலியுடனும் உடன்பாடு செய்துகொண்டு பெருந்தொகைப் பணம் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான்.

தென்னிலங்கையில் அரசுரிமைப் போட்டிகள் காரணமாக எதிரெதிராகப் போரிட்டுக்கொண்டவர்கள் தமது நலனுக்காக போத்துக்கீசரின் உதவியைப் பெறவேண்டி நாட்டு நலன்களை அவர்களுக்கு விலை பேசலாயினர். இந்த நிலைமையைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசர், நாட்டிலே தமது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்நிகழ்வுகளால் தூண்டப் பெற்ற சிலர் யாழ்ப்பாண இராச்சியத்திலும் போத்துக்கீசரின் தலையீட்டைக் கொண்டுவர முயற்சி செய்தனர். முக்கியமாக, அவனது தமையனான பரநிருபசிங்கன் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசுரிமையை தான் பெறுவதற்காகப் போத்துக்கீசரின் துணையை நாடினான். அத்துடன், மதம் மாறிக் கத்தோலிக்க மதத்தையும் தழுவிக்கொண்டான். எனினும், இவனுக்கு அரசுரிமையைப் பெற்றுக்கொடுக்கப் போத்துக்கீசரால் இயலவில்லை.

1951 ஆம் ஆண்டில் திருகோணமலையை ஆண்டுவந்த வன்னியன் இறந்தான். அவனுடைய வாரிசான இளவரசன் எட்டு வயதே நிரம்பிய சிறுவனாக இருந்ததால், இன்னொரு வன்னியர் தலைவன் ஆட்சியை நடத்தலானான். திருகோணமலை வன்னிமை யாழ்ப்பாண அரசுக்குக் கட்டுப்பட்டது என்பதால் சங்கிலி இப் பிரச்சினையில் தலையிட்டான். ஆனால், வன்னியர் தலைவன் இளவரசனையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றான். அங்கே ஏற்கெனவே கத்தோலிக்கராக மாறிய பரதவர்களின் உதவியால் போத்துக்கீசருடன் தொடர்பு கொண்டு தானும் கத்தோலிக்கனாக மாறிப் போத்துக்கீசரின் உதவியைக் கோரினான். தொடர்ந்து 1000 பரதவர்களைக் கொண்ட படையுடன் திருகோணமலையில் இறங்கினான். ஆனால், சங்கிலி இந்த நடவடிக்கைகளை முறியடித்தான். இளவரசன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பினான். அங்கே இவன் போத்துக்கீசருடன் சேர்ந்து கொண்டு, கத்தோலிக்கனானான். சங்கிலியை யாழ்ப்பாண ஆட்சிசிலிருந்து இறக்கிவிட்டுத் திருகோணமலை இளவரசனையே யாழ்ப்பாண இராச்சியத்துக்கு மன்னனாக்கவும் போத்துக்கீசர் எண்ணியிருந்ததாகத் தெரிகிறது.

1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான். சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

இந் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்கிலியன் போர்த்துக்கேயப் பதிலாளுநனுக்குச் சமாதானத் தூது அனுப்பினான். சிக்கலான நிலைமையில் இருந்த ஆளுநன் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டான். போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட இந் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக, இளவரசன் ஒருவனையும், வேறொரு அதிகாரியையும் போத்துக்கேயர் பிணையாக வைத்திருப்பதற்கும் அரசன் இணங்கினான். சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். போத்துக்கேயர் அரசன் தருவதாக உடன்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். அதனைக் கொடாமல் போக்குக்காட்டிய சங்கிலி போத்துக்கேயரைத் தந்திரமாகத் துரத்திவிடுவதிலேயே கண்ணாக இருந்தான். ஒருநாள் ஒரே சமயத்தில் அங்கேயிருந்த போத்துக்கேயருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தனர். வெளியே சென்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கியிருந்த இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. போத்துக்கேயர் பெரும் சிரமத்தோடு தப்பியோடினர். எனினும், பிணையாகக் கொடுத்திருந்த இளவரசனையும், அதிகாரியையும் மீட்கும் சங்கிலியின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர்களைப் போத்துகேயர் கோவாவுக்குக் கொண்டு சென்றனர்.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மன்னனின் வரலாற்றை எழுதியமைக்கு நன்றி, எங்கிருந்து தொகுத்தீர்கள்? பல இடங்களில் ஆண்டு பிழையாக வந்திருக்கிறது-பார்த்துத் திருத்தி விடுங்கள்.

யாழ் கள வாசகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இப்படி நேரம் செலவழித்து வரலாற்றை இங்கு காவி வரும் இது போன்ற பதிவுகளை பச்சைப் புள்ளிகளால் ஊக்கப் படுத்துங்கள். எவராவது வந்து தங்கள் சுய தம்பட்டத்தை வரலாறாக எழுதினால் பச்சை பச்சையாய் குத்துறாங்கள். பயனுள்ள வரலாற்றை வாசிச்சுட்டுப் பேசாமல் போயிடுறாங்கள்!

  • தொடங்கியவர்

தமிழ் மன்னனின் வரலாற்றை எழுதியமைக்கு நன்றி, எங்கிருந்து தொகுத்தீர்கள்? பல இடங்களில் ஆண்டு பிழையாக வந்திருக்கிறது-பார்த்துத் திருத்தி விடுங்கள்.

யாழ் கள வாசகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இப்படி நேரம் செலவழித்து வரலாற்றை இங்கு காவி வரும் இது போன்ற பதிவுகளை பச்சைப் புள்ளிகளால் ஊக்கப் படுத்துங்கள். எவராவது வந்து தங்கள் சுய தம்பட்டத்தை வரலாறாக எழுதினால் பச்சை பச்சையாய் குத்துறாங்கள். பயனுள்ள வரலாற்றை வாசிச்சுட்டுப் பேசாமல் போயிடுறாங்கள்!

நன்றிகள் ஜஸ்ரின். :):) நான் யாழ்ப்பாணத்தல் நின்றபொழுது செங்கைஆழியானின் கடல்கோட்டையும் யாழ்ப்பாணவைபவமாலையும் வாசிக்கக் கிடைத்தது. யாழ்பாணவைபவமாலையின் எழுத்து நடை சிறிது கடினமாக இருந்தது. இவைகள் ஓரளவு எனக்கு உதவி செய்தன.மேலும் வரலாறு சரியாக சொல்லப்படவேண்டும் என்பதில் உங்களுடன் ஒத்துப்போகின்றேன். எனது பங்கிற்கு தெரிந்தவர்களிடம் கேட்டு மாற்றி விடுகின்றேன். உங்களுக்குத் தெரிந்தவற்றையும் சொல்லுங்கள். மாமன்னன் சங்கிலி எமது வரலாற்றுப்பதிவில் ஒரு மைல்கல். அவரது வரலாறும் சரி எமது கண்முன்னே விரியும் வரலாறும் சரி துரோகம் என்ற நேர்கோட்டில் பயணித்து மக்கியது தான் சோகம். எமக்குள் உள்ள களைகள் அற்றப்பட்டாலே பயிர் வளரும் இல்லையென்றால் எமக்கான விடிவு விடிவெள்ளியே :(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள வாசகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இப்படி நேரம் செலவழித்து வரலாற்றை இங்கு காவி வரும் இது போன்ற பதிவுகளை பச்சைப் புள்ளிகளால் ஊக்கப் படுத்துங்கள். எவராவது வந்து தங்கள் சுய தம்பட்டத்தை வரலாறாக எழுதினால் பச்சை பச்சையாய் குத்துறாங்கள். பயனுள்ள வரலாற்றை வாசிச்சுட்டுப் பேசாமல் போயிடுறாங்கள்!

உண்மைதான் Justin

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ மன்னர்களின் சிறிய அறிமுகத்திற்கு நன்றி..ம் அப்பொழுதும் குழிபறிப்புகள், அரியணை போட்டிகள்..இப்பொழுதிருக்கும் அதே மண்ணின் குண நலன்கள்... :(

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கோமகன்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு வரலாற்றுத்தொகுப்பு கோமகன்!

கடைசியாகப் போர்த்துக்கீசர்கள் சங்கிலியனைச் சாக்கில் கட்டி கோவாவுக்கு எடுத்துச் சென்றதாக ஒரு கதை!

தொடருங்கள், உங்கள் ஆக்கங்களை!!!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள வாசகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இப்படி நேரம் செலவழித்து வரலாற்றை இங்கு காவி வரும் இது போன்ற பதிவுகளை பச்சைப் புள்ளிகளால் ஊக்கப் படுத்துங்கள். எவராவது வந்து தங்கள் சுய தம்பட்டத்தை வரலாறாக எழுதினால் பச்சை பச்சையாய் குத்துறாங்கள். பயனுள்ள வரலாற்றை வாசிச்சுட்டுப் பேசாமல் போயிடுறாங்கள்!

ஜஸ்ரினின் ஆதங்கம் நியாயமானது.

11.pngsangiliyan.jpg200px-Sangkilithoppu.jpg

சங்கிலிய மன்னனின் அரண்மனை வாயில்.

இது பருத்தித்துறை வீதியில் உள்ளது. இதற்கு இன்னும் எவ்வளவு நாள் ஆயுளோ.... ஆர் கண்டது.

Edited by தமிழ் சிறி

எங்களில் பலருக்கு எமது இனத்தின் வரலாறே தெரியாது. உங்கள் பதிவிற்கு நன்றி கோமகன்.

  • தொடங்கியவர்

எங்களில் பலருக்கு எமது இனத்தின் வரலாறே தெரியாது. உங்கள் பதிவிற்கு நன்றி கோமகன்.

நன்றிகள் இணையவன். :):) தமிழர் பூமியை ஆண்ட மனர்களின் வரலாறுகளை வகைப்படுத்து எண்ணம் உள்ளது, உங்கள் அனுமதியிருப்பின். :):)

நன்றிகள் இணையவன். :):) தமிழர் பூமியை ஆண்ட மனர்களின் வரலாறுகளை வகைப்படுத்து எண்ணம் உள்ளது, உங்கள் அனுமதியிருப்பின். :):)

நல்லது கோமகன்.

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் இணையவன். :):) தமிழர் பூமியை ஆண்ட மனர்களின் வரலாறுகளை வகைப்படுத்து எண்ணம் உள்ளது, உங்கள் அனுமதியிருப்பின். :):)

மன்னர்கள் என்னும் போது.... இடைக்கிடை அந்தப்புரத்தை பற்றியும் எழுதினால் தான்.... மக்கள் ஆர்வமாக வாசிப்பார்கள். :lol:

Edited by தமிழ் சிறி

மன்னர்கள் என்னும் போது.... இடைக்கிடை அந்தப்புரத்தை பற்றியும் எழுதினால் தான்.... மக்கள் ஆர்வமாக வாசிப்பார்கள். :lol:

சிறி ஏன் கோமகனுக்கு வேலைப் பளுவைக் கூட்டுகிறீர்கள்.

பண்டைய அரசர்களின் அந்தப்புரங்களில் நிறைய சிக்கல் நிறைந்த கதைகள் உண்டு.

அவற்றை விபரிப்பதற்கு நீங்கள்தான் தகுதியானவர் என்பது எனது தாழ்மையான கருத்து. தனித் திரி தொடங்கி படங்களும் இணைப்பீர்களாயின், என்னைப் போன்ற பாமர வாசகனுக்கும் வரலாறு விளங்கக் கூடியதாக இருக்கும். :lol:

  • தொடங்கியவர்

ஜஸ்ரினின் ஆதங்கம் நியாயமானது.

11.pngsangiliyan.jpg200px-Sangkilithoppu.jpg

சங்கிலிய மன்னனின் அரண்மனை வாயில்.

இது பருத்தித்துறை வீதியில் உள்ளது. இதற்கு இன்னும் எவ்வளவு நாள் ஆயுளோ.... ஆர் கண்டது.

சங்கிலிமன்னின் ஓய்வெடுக்கும் மாளிகையும் , அதனை ஒட்டிய குத்தியடிக் குளமும் இன்றும் அவரது வரலாற்றை உறிதிப்படுத்தும் நிலையில் கோப்பாயில் உள்ளது .இன்றும் அந்தமாளிகைக்குப் போவதற்கான ஒழுங்கை "ஓல்ட் காஸ்ரில் லேன்" ( OLD CASTELE LANE ) என்றே அழைக்கப்படுகின்றது. அவரின் புகள்பாடும் ராஜவீதி (ராஜபாட்டை வீதியும்) ஆய்வுக்குட்படுத்த வேண்டியதே. இந்தவீதியானது பரித்தித்துறை வீதிக்கும் பலாலி வீதிக்கும் இடையில் வரும் நேர்கோட்டில் அமந்தவீதியாகும். மேலதிக படங்களை இணைத்த சிறியருக்கு நன்றிகள். :):)

மன்னர்கள் என்னும் போது.... இடைக்கிடை அந்தப்புரத்தை பற்றியும் எழுதினால் தான்.... மக்கள் ஆர்வமாக வாசிப்பார்கள். :lol:

கோமகன் கொஞ்சம் கவனத்தில் எடுப்பாராக...எங்களுக்கும் கொமன்ஸ் எழுத வசதியாய் இருக்கும்... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.