காமனெயி கொலைக்குப் பிறகு இரான் அடுத்து என்ன செய்யக்கூடும்? பட மூலாதாரம்,Getty Images 6 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக இரானின் அதிஉயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் காமனெயியின் குடும்ப உறுப்பினர்கள் பலரும், இரானின் இஸ்லாமிய ஆட்சியின் பிற மூத்த தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த 86 வயதான காமனெயியின் மரணத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், பின்னர் இரானிய அரசு தொலைக்காட்சியால் உறுதிப்படுத்தப்பட்டது. காமனெயி உலகின் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவர். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இரானில் இரண்டு உச்ச தலைவர்கள் மட்டுமே உள்ளனர்: ஆயதுல்லா ருஹோல்லா கொமேனி மற்றும் ஆயதுல்லா அலி காமனெயி. இரானில் அதிஉயர் தலைவர் மிகவும் சக்திவாய்ந்த பதவியை வகிக்கிறார். அவர் நாட்டின் தலைவராகவும், இரானின் உயர்மட்ட புரட்சிகர காவல்படை (IRGC) உட்பட ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாகவும் உள்ளார். காமனெயியின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாரிசு யார், இரானின் எதிர்காலம் என்ன என்பதுதான் இப்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி. பட மூலாதாரம்,Reuters இரான் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஆயதுல்லா அலி காமனெயி இறந்ததைத் தொடர்ந்து, அவரது துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அப்படி நடந்தால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று டிரம்ப் பதிலளித்தார். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வியூக விவகார நிபுணர் பிரம்மா செல்லானி தனது எக்ஸ் பதிவில், "பழிவாங்கும் உணர்வு மத்திய கிழக்கு கலாசாரங்களில் ஆழமாக ஓடுகிறது, அது சுன்னி அல்லது ஷியாவாக இருந்தாலும் சரி. இரானின் அதிஉயர் தலைவரை படுகொலை செய்ததன் மூலம், டிரம்ப் மற்றும் நெதன்யாகு அங்கு ஆட்சி மாற்றத்திற்கான தங்கள் முயற்சியை மேலும் சிக்கலாக்கியுள்ளனர். ஆயதுல்லா அலி காமனெயியின் படுகொலை மிகவும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது, இது ஷியா சமூகத்தின் தியாகம் மற்றும் எதிர்ப்பு தத்துவத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ஷியா அரசியல் கலாசாரத்தில், ஓர் அதிஉயர் தலைவர் வெளிநாட்டு சக்திகளால் படுகொலை செய்யப்பட்டால், அது உடனடியாக ஆஷுராவின் (Ashura) கதையுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. அதாவது, கர்பலாவில் இமாம் ஹுசைன் உயிர்த்தியாகம் செய்த நிகழ்வுடன் இணைக்கப்படுகிறது. பொதுவாக தலைமைத்துவ செயலாகக் கருதப்படுவது இப்போது புனிதமான தியாகமாக முன்வைக்கப்படுகிறது." என்று அவர் எழுதினார். "40 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, காமனெயியின் மரணத்தை தியாகமாக விவரிப்பதன் மூலம், அரசாங்கம் "அடக்குமுறை" கொள்கையை ஊக்குவிக்கிறது, துக்கம் என்பது பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வழியாக மாற்றப்படுகிறது. டெஹ்ரான் மக்களின் துக்கத்தை "பழிவாங்க வேண்டிய கடமை" என்ற உணர்வாக" மாற்ற முயற்சிக்கிறது. மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணரான சுபாதா சௌத்ரி, இந்தத் தாக்குதலுக்கு இரான் நிச்சயமாகப் பழிவாங்கும் என்று நம்புகிறார். "ஊடுருவல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இரான் முதலில் அதன் புரட்சிகர காவல் படையை பாதுகாக்கும். வளைகுடா நாடுகளில் உள்ள செவ்ரான் மற்றும் எக்ஸான்மொபில் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகளையும் இரான் குறிவைக்கலாம். வளைகுடா நாடுகளில் அமெரிக்கா 19 ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. இரான் ஏற்கெனவே இவற்றை குறிவைத்துள்ளது, தொடர்ந்து அவ்வாறு செய்யக்கூடும். இது ஒரு பெரிய பிராந்தியப் போராக அதிகரிக்கும் என்றும் நான் நம்புகிறேன்." என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images ரியாத் மீதான தாக்குதலை இரான் நடத்தியதாக சௌதி அரேபியாவும் கூறியுள்ளது . இரானும் சௌதி அரேபியாவும் பிராந்திய போட்டியாளர்களாக இருந்தன, ஆனால் சீனாவின் மத்தியஸ்தம் மூலம் 2023 இல் ராஜ்ஜீய உறவுகள் மீட்டெடுக்கப்பட்டன. ஆனால், சௌதி அரேபியாவும் அமெரிக்காவை அதிகாரபூர்வமற்ற, ரகசியமான வழியில் இரானை தாக்குமாறு கேட்டுக்கொண்டதாக சுபாதா சௌத்ரி கூறுகிறார். "சௌதி அரேபியா இரட்டை வேடம் போடுகிறது. ராஜ்ஜீய ரீதியாக அதன் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய அதே வேளையில், இரானைத் தாக்க அமெரிக்காவிடம் கூறுவதற்கு பின்வாயில் வழிகளையும் பயன்படுத்துகிறது. இது வெறும் ஷியா-சுன்னி மோதல் மட்டுமல்ல. ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதால், சௌதி அரேபியா உடனடியாக பதிலடி கொடுக்க முடியாது, ஏனெனில் அதன் சொந்த நாட்டிலும் ஷியா மக்கள் உள்ளனர். சௌதி அரேபியாவும் முகமது பின் சல்மானும் காத்திருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்," என்று சுபாதா சௌத்ரி கூறினார். இந்திய உலக விவகார மன்றத்தின் உறுப்பினரும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணருமான ஃபஸ்ஸூர் ரஹ்மான் சித்திக், இந்த தாக்குதலின் மூலம், இரான் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டன என்று கூறினார். "ஆயதுல்லா அலி காமனெயி கொலை நேரடியான அரசியல் கொலை அல்ல. இது, மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர், ஷியா சித்தாந்தத்தின் பிரமுகர், புரட்சிகர கருத்துக்கள், இரானின் அரசியல் அடித்தளத்தின் சின்னம் ஆகியவற்றின் கொலை. இதன் விளைவாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போது இரானுடனான பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடிவிட்டன. அதே நேரத்தில், இரான் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images மத்திய கிழக்கு நாடுகளுக்கு எழுந்துள்ள சவால் இரானின் அரசு தொலைக்காட்சி ஆயதுல்லா அலி காமனெயியின் ஒவ்வொரு அசைவையும் முக்கியமாக ஒளிபரப்பியது. பொது இடங்களில் உள்ள விளம்பரப் பலகைகளில் அவரது படங்கள் இடம்பெற்றன, மேலும் அவரது புகைப்படம் கடைகளில் ஒரு பொதுவான அங்கமாக இருந்தது. இத்தகைய வன்முறை சூழ்நிலையில் அவரது மரணம் இரானுக்கும் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கும் ஒரு புதிய மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் அடையாளமாக நிபுணர்கள் பார்க்கிறார்கள். சுன்னி மற்றும் ஷியா அமைப்புகளுக்கிடையே இப்போது ஒரு புதிய பிளவு தோன்றக்கூடும் என்று ஃபஸ்ஸூர் ரஹ்மான் சித்திக் கூறுகிறார். இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகள் மீண்டும் தொடங்கிய பிறகு சற்று தணிந்ததாகத் தோன்றிய வேறுபாடுகள் இப்போது மீண்டும் வெளிப்படும். "அரபு நாடுகளில் இரான் தாக்கிய அனைத்து தளங்களும் அமெரிக்க நட்பு நாடுகளாகும், மேலும் அமெரிக்கா அங்கு ராணுவ தளங்களைப் பயன்படுத்துகிறது. இரான் தலைமையிலான 'எதிர்ப்பின் அச்சு' (அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் குழுக்களின் அமைப்பு) ஒரு புதிய வகையான பலத்தைப் பெறும். இப்போது, பேச்சுவார்த்தையின்போது நாட்டின் சின்னத்தை (காமனெயி) நீங்கள் அகற்றிவிட்டீர்கள் என்று சொல்லும் தற்காப்பு அதற்கு உள்ளது. இரான் வைத்திருக்கும் ஆயுதக்குழுக்கள் புதிய வழியில் எழுவார்கள். இரான் அவர்களுக்கு சுதந்திரமான கட்டுப்பாட்டை வழங்கும். காஸா பிரச்னை காரணமாக சௌதி அழுத்தத்தின் கீழ் இரான் செய்த குறைவான பின்வாங்கலும் ஒரு கட்டாயமாகும், ஏனெனில் அது பலவீனமாகிவிட்டது. ஆனால், இப்போது இந்த ஆயுதக்குழுக்கள் ஒரு புதிய வழியில் தங்கள் தலைகளை உயர்த்துவதைக் காணலாம், அவர்களுக்குள் ஒரு புதிய வகையான வாழ்க்கை உருவாகும். மேலும், அவர்கள் முழு பிராந்தியத்திலும் மீண்டும் தீவிரமாக செயல்படுவார்கள்." பட மூலாதாரம்,ATTA KENARE/AFP via Getty Images பொருளாதார பலம் இருந்தபோதிலும் அரசியல் செல்வாக்கு இல்லாத வளைகுடாவின் பொருளாதார சக்திகளுக்கு நிலைமை சவாலானது என்று சித்திக் கூறினார். "கடந்த ஒரு வருடத்தில், டொனால்ட் டிரம்ப் 9 டிரில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டு வந்துள்ளார். இந்த 9 டிரில்லியன் டாலர்களில், சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளிலிருந்து நான்கரை டிரில்லியன் டாலர்களை அவர் கொண்டு வந்துள்ளார். ஆனால், இவ்வளவு முதலீடுகளை வழங்கிய போதிலும், இரானுக்கு எதிரான போரை நிறுத்த அமெரிக்காவை இந்த நாடுகள் சமாதானப்படுத்தத் தவறிவிட்டன. எந்தவொரு போர் நடந்தாலும், நாமும் அதனால் பாதிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்திருந்ததால், இந்த நாடுகள் போரைத் தவிர்ப்பது பற்றி தொடர்ந்து பேசின. அவர்களின் புரிதல் பெரிய அளவில் சரியாக இருந்தது. இரான் சௌதியைத் தாக்குவதால், நடுநிலை நாடுகளான குவைத் போன்ற நாடுகள் தாக்கப்படுகின்றன, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் தாக்கப்படுகின்றன." காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா, ஏமனில் ஹூத்திகள் மற்றும் இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்களை இரான் 'எதிர்ப்பின் அச்சு' என்று அழைக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தக் குழுக்கள் அனைத்தும் மீண்டும் வலுவடையும் என்றும் சுபாதா சௌத்ரி கூறுகிறார். இரான் இப்போது எப்படி இருக்கும்? காமனெயி ஒரு சிக்கலான மரபை விட்டுச் செல்கிறார். இரான் ஒரு வலுவான மத அமைப்பு மற்றும் சக்திவாய்ந்த துணை ராணுவப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடு. பல்வேறு இரானிய அதிபர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர், ஆனால் நாட்டுக்குள், உண்மையான கட்டுப்பாடு காமனெயியிடம் இருந்தது. காமனெயிக்குப் பிறகு இரானின் அரசியல் எந்தத் திருப்பத்தை எடுக்கும் என்பது குறித்து ஃபஸூர் சித்திக் கூறுகையில், "இந்தத் தாக்குதல் இரானுக்கு நல்லது, ஏனெனில் அங்கு எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை, குறைந்தபட்சம் சிறிது காலத்திற்கு". "இரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள் அங்குள்ள மக்களால் நடத்தப்பட்டன, அவர்கள் அங்குள்ள பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தனர், அது அரசியல் ரீதியில் இல்லை. இந்த போராட்டம் காமனெயிக்கு எதிரானது அல்ல. மக்கள் காமனெயிக்கு எதிரானவர்கள் என்பது அமெரிக்கா கூறிவருவது." "சாதாரண ஷியாக்கள் இன்னும் காமனெயியை போற்றுதலுக்குரிய நபராகவே பார்க்கிறார்கள். இப்போதைக்கு, இரானில் உள்ள அனைத்து எதிர்ப்புகளும் அடக்கப்படும். அங்கு எந்த எதிர்ப்பும் இருக்காது. இப்போதைக்கு, காமனெயியின் கொலை இரானை ஒன்றிணைக்கும்" என்று அவர் கூறுகிறார். "காமனெயியின் இடத்தை, அவரைப் போன்ற அந்தஸ்துள்ள ஒருவர் பிடிப்பார். இதன் பொருள் அவர் அவரைப் போலவே சிந்திப்பார், அவரைப் போலவே தீவிரமானவராக இருப்பார், அதே சித்தாந்தத்தைக் கொண்டிருப்பார். காமனெயி இல்லாத நிலையில், மதச்சார்பற்ற அரசியலுக்கு இடமில்லை. அமெரிக்கா அங்கு முழு அமைப்பையும் மாற்றும் என்று நினைத்தால், அங்கு ஆன்மிகத் தலைமைக்கு இடமில்லை, அங்குள்ள அரசியல் படிநிலை முடிவுக்கு வரும், அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காமனெயி கொலைக்குப் பிறகு இரான் அடுத்து என்ன செய்யக்கூடும்?
By
ஏராளன் · 5 minutes ago 5 min