வேலுப்பிள்ளைமார்
-------------------------------
காலையிலேயே வந்து விடுங்கள் என்று அவன் சொல்லியிருந்தான். இரண்டு தடவைகள் தொலைபேசியில் கூப்பிட்டு ஞாபகப்படுத்தினான். காலை 10 மணிக்கு முன்னரே அங்கே நிற்க வேண்டும், அப்புறம் அங்கிருந்து திரும்பி வர பின்னேரம் ஆகி விடும், அன்றைய பொழுது முழுவதும் இப்படியே போய்விடப் போகின்றது என்று தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படியாகிப் போவதில் இஷ்டமில்லை தான், ஆனாலும் அவனை மறுக்க முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து பாப்பாவை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.
இவர்கள் நேர ஒழுங்கில் மிக மோசமானவர்கள். உலகில் இந்தளவிற்கு நேரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வேறு எவரையும் என் அனுபவத்தில் நான் கண்டதில்லை. இலங்கையர்களும் மோசம் தான், ஆனாலும் இந்தியர்கள் மிக மிக மோசம். நானும் மனைவியும் ஒன்பதரைக்கு அங்கே போய் விட்டோம். அவனின் சொந்தபந்தங்கள் பலர் சில நாட்கள் முன்னரேயே வேறு நாடுகள், வேறு ஊர்களிலிருந்து வந்து நிற்பதாகச் சொல்லியிருந்தான். எல்லோரும் வந்து போகக் கூடிய நல்ல ஒரு கோடைக்கால நாட்கள் இவை. அவர்களே வீட்டையும், வளவையும் நிறைத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வர வேண்டிய சிலருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்கவில்லை என்று சொன்னான்.
அவர்கள் எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவனும், அவனின் மனைவியும் எங்களிருவரையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டனர். ' இல்லை........ வேண்டாம் அப்பா, நீ போய் ஆக வேண்டியதைப் பார்.........' என்று சொன்னாலும், அவன் கேட்பதாயில்லை. மஞ்சள் நீராட்டு விழா என்று தான் அவர்கள் சொன்னார்கள். இதையே நாங்கள் பூப்புனித நீராட்டு விழா என்றோ அல்லது சாமத்தியச் சடங்கு என்றோ சொல்லிக் கொள்வோம். இதற்கு பாக்கு நீரிணைக்கு இரண்டு பக்கங்களிலும் என்ன பெயர்கள் சொன்னாலும், இதற்கெல்லாமா நீங்கள் விழா எடுப்பீர்கள் என்று வேறு பல நாட்டு நண்பர்கள் சிரித்திருக்கின்றார்கள்.
விழாக்கள் என்பது ஒரு குடும்ப ஒன்றுகூடலிற்கான தருணம், ஒரு கட்டாயத்திலாவது பலரும் வந்து ஒன்றாகச் சேர்வார்கள் என்ற வகையில் கொண்டாடப்படலாம், முக்கியமாக குடும்பங்களே தனித்தனியாக உலகெங்கும் சிதறிக் கிடக்கும் இந்தக் காலத்தில். ஆனால், அதற்காக உலங்கு வானூர்தியில் இருந்து குதிப்பதோ அல்லது பல்லக்கில் ஏறுவதோ போன்ற சேட்டைகள் இந்த விழாக்களின் நோக்கத்தையே காலப் போக்கில் அழித்துவிடக்கூடும்.
அவனின் நண்பன் என்று ஒருவரைக் கூட்டி வந்து அறிமுகப்படுத்தினான். இருவரும் ஒன்றாக அங்கே ஒரே கல்லூரியில் படித்ததாகச் சொன்னான். சொல்லி விட்டு பெரிதாகச் சிரித்தான். அவனின் கல்லூரி பற்றியும், கல்லூரி நாட்கள் பற்றியும் பல கதைகளை முன்னர் சொல்லியிருக்கின்றான். எல்லாமே வேடிக்கையான கதைகள். அவன் பிளஸ் டூ சோதனையில் அவ்வளவு நல்ல புள்ளிகள் எடுக்காததால், இந்தக் கல்லூரியில் போய்ச் சேர வேண்டியதாகப் போய் விட்டது என்பான். நாங்கள் இருவரும் பதினொரு வருடங்கள் ஒன்றாக வேலை செய்திருக்கின்றோம். அவன் மிகவும் கெட்டிக்காரன். ஆனால் பிளஸ் டூ படிக்கும் காலத்தில், கவனம் முற்றாகச் சிதறும் அளவிற்கு, என்ன செய்து கொண்டிருந்தானோ தெரியவில்லை.
அவனின் நண்பன் என்னுடனேயே இருந்தார். எங்கே என் பிள்ளைகள் என்று கேட்டார் அவர். அவர்கள் வரவில்லை, இங்கு அவர்களின் வயதுகளில் எவரும் இல்லை, அதனால் வரவில்லை என்றேன். அப்படி விடக் கூடாது, இழுத்து கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர். எங்களின் கலாச்சாரமும், பண்பாடும் எங்களை விட்டுப் போகவே கூடாது என்றார். உங்களின் பிள்ளைகள்......... என்று நான் கேட்டேன். அங்கே ஓடித் திரிந்து கொண்டிருந்த இரு சிறுவர்களைக் காட்டினார். அவர்களின் வயது ஒன்பது, ஆறு என்றார். இன்னும் பதினெட்டு வருடங்களின் பின் நான் இவரைச் சந்திக்க வேண்டும், அப்ப நிலைமை என்னவென்று கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அவருடைய மாவட்டத்தின் பெயர் சொல்லி, அந்த மாவட்டம் எனக்குத் தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றேன். தன் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊரைத் தெரியுமா என்று கேட்டார். அவர் சொன்ன ஊரும் எனக்குத் தெரிந்திருந்தது. அங்கே பத்து குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக 90ம் ஆண்டுகளில் வந்து குடியேறி இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய குடும்பம் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ததாகச் சொன்னார். இன்னமும் அவர்கள் அங்கேயே இருக்கின்றார்களாம்.
பின்னர், மிக அருகில் வந்து, காதருகே, 'நாங்களும் பிள்ளைமார்கள் தான்.......' என்றார். பிள்ளைமார்கள்...........?? நாங்கள் எப்போதிலிருந்து பிள்ளைமார்கள் ஆனோம் என்று யோசிக்க, வேலுப்பிள்ளை என்ற பெயர் எங்கிருந்தோ நினைவுக்கு வந்தது. பத்து குடும்பங்கள் நன்றாக இருக்கின்றார்கள் தானே என்று, அதனால் மேலும் பிள்ளைமார்கள் பற்றிக் கதைக்காமல், 'இந்தியன் - 2' பற்றி அவருடன் கதைக்க ஆரம்பித்தேன்.