அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த சிங்கள இனவாத, இடதுசாரிகளின் கட்சியின் வேட்பாளர் திசாநாயக்க முதியான்சலாகே அநுர குமார திசாநாயக எனும் இனவாதியை சிங்களவர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களில் பெரும்பான்மையினர், குறிப்பாக இளைஞர்கள் போற்றிப் புகழ்வதும், இவரது ஆட்சியின் கீழ் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடப்போகின்றன என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் அணிவகுத்துச் செல்வதும் நடக்கிறது.
இத்தேர்தலில் வன்னியில் 16,000 வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 27,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதையடுத்து இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்த இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் அநுரவைக் கதாநாயகன் எனும் நிலைக்கு உயர்த்திவைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள் பாராளுமன்றத் தேர்தலில் இவரது கட்சிக்கு தாமே முன்னின்று வாக்குச் சேகரிக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.
ஆனால், இவர்கள் எல்லோரும் எளிதாக மறந்துவிட்ட இன்னொரு பக்கம் ஒன்று இக்கட்சிக்கும் இன்றிருக்கும் அதன் தலைவருக்கும் இருக்கின்றதென்பதை இவ்விளைஞர்களுக்கு உணர்த்துவது காலத்தின் கட்டாயம். நன்கு கட்டமைக்கப்பட்ட சிங்கள இனவாதமும், தமிழரின் இருப்பிற்கெதிரான இக்கட்சியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், தமிழரின் சரித்திரத்தை மாற்றியமைப்பதில் இக்கட்சி செயற்பட்டு வரும் விதமும் இதுவரை இலங்கையை ஆண்ட ஏனைய பெளத்த சிங்களக் கட்சிகள் எவற்றிற்கும் இக்கட்சி சளைத்தது இல்லை என்பதையே காட்டுகிறது..
ஆகவே இக்கட்சி பாராளுமன்றத்திற்கு தனது ஆட்களை அனுப்பிய காலத்திலிருந்து அக்கட்சியினால் தமிழருக்கெதிராக செய்யப்பட்ட சில நடவடிக்கைகளை நான் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். தமிழ்நெட் இணையத்தளம் மற்றும் சங்கம் இணையத்தளம் ஆகியவற்றிலிருந்தே நான் இத்தகவல்களை பெற்றுக்கொண்டேன் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறேன்.
தமிழர்களுக்கு வழங்கப்போகும் தீர்விற்கெதிராக வடக்குக் கிழக்கில் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்யப்போகும் மக்கள் விடுதலை முன்னணி - 1997
சந்திரிக்காவின் மக்கள் கூட்டணியினால் தமிழர்களுக்கு வழங்கப்படவிருப்பதாக் கூறப்படும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை எதிர்த்து தமிழர்கள் வாழும் வடக்குக் கிழக்கின் முக்கிய நகரங்களில் பிரச்சாரம் செய்யப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கிறார்.
சிங்கள கிராமப் புறங்களில் தலைவிரித்தாடும் வறுமை மற்றும் போரில் ஏற்பட்டுவரும் பின்னடைவுகளால் அவர்கள் அடைந்துவரும் ஏமாற்றம் ஆகியவற்றை பிரச்சாரப் பொருளாக்கி இக்கட்சி அண்மைய தேர்தல்களில் குறிப்பிடத் தக்களவு வெற்றியினைப் பெற்று வருகிறது.
தமிழர்களுக்கு பிராந்திய சுயாட்சியை வழங்க சந்திரிக்கா தயாராகி வருவதாகக் கூறி சிங்கள மக்களிடையே இனவாதம் கக்கும் பிரச்சாரத்தை கடந்த வாரம் சிங்களவர்களின் மதக் கலாசார தலைநகர் என்று போற்றப்படும் அநுராதபுரத்தில் இருந்து இக்கட்சி ஆரம்பித்து வைத்தது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வினை எக்காரணம் கொண்டும் வழங்கிவிடக் கூடாது எனும் கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விதைத்து, தமிழருக்கெதிரான சிங்களவரின் இனவுணர்வைத் தூண்டிவரும் இக்கட்சி, சந்திரிக்காவின் அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக தமிழரின் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிப் பிராந்தியத்தின் பொலீஸ் மா அதிபராக பிரபாகரன் நியமிக்கப்படப்போகிறார் என்றும் கூறிவருகிறது.
தனது கட்சியில் இனவாதம் இல்லையென்று கூறிவரும் இக்கட்சி, தமிழர்களுக்கென்று தனியான இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென்றும் இருப்பது சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மட்டும்தான் என்றும் கூறிவருகிறது.
மேலும் தென்னாசியாவை துண்டாட அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ போட்ட திட்டம்தான் தமிழர்கள் கோரிவரும் ஈழம் எனும் தனிநாடு என்றும் அது கூறுகிறது. ஸ்டாலினினது மார்க்ஸியச் சிந்தனைகளைப் பின்பற்றும் இக்கட்சி, தமிழர்களிடையே காணப்படும் சாதிய வேற்றுமைகளே அவர்களுக்கான ஒரே பிரச்சினை என்றும், அவர்களுக்கென்று இனரீதியிலான பிரச்சினைகள் கிடையாது என்றும் கூறி வருகிறது.
"எமது நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஆசீருடனே ஜே வி பி போன்ற இனவாதிகள் எமது பிரதேசங்களுக்கு வந்து எமக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று வெளிப்படையாகக் கூறமுடிகிறது, புரட்சிகர மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று தம்மை அழைக்கும் இவர்கள் எல்லோரும் சந்தர்ப்பவாத சிங்கள இனவாதிகள் தான்" என்று திருகோணமலையில் வசிக்கும் இடதுசாரித் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.