அவள் லண்டன் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். போர் முடிந்தும் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் வதனி வந்ததுக்கு இன்னும் இலங்கை போகவில்லை. ஆறு வயதிலும் நான்கு வயதிலும் கொண்டுவந்த பிள்ளைகள் இருவருமே படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அவள் இலங்கைக்குப் போகும் ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கணவன் நோயில் இறந்தபின் கணவனின்றி எங்குமே அவள் செல்வதை நிறுத்திவிட்டிருந்தாள். வாரம் ஒருதடவை மகனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தால் பிறகு அடுத்த வாரம்தான். பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்க்குப் புற்றுநோய் என்று தம்பியார் அறிவித்ததில் இருந்து அவள் மாதாமாதம் பணத்தை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறாள். “தெல்லிப்பளையில் மருத்துவம் எல்லாம் இலவசம் அக்கா. எதுக்கு அவைக்கு மாதாமாதம் காசு அனுப்புறியள்” என்று நண்பி மலர் கூறினாலும் “தம்பி பொய்யோ சொல்லப்போறான்” என்று இவள் மலரின் கதையை காதிலும் எடுக்கவில்லை. இவள் கணவன் செய்த ஸ்பொன்சரில் எப்பிடியோ லண்டனுக்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாளாயினும் வந்து சேர்ந்ததை நினைக்க இப்ப நினைத்தாலும் பெரும் மலைப்பாகவே இருக்கும். இவளுக்கு ஆங்கிலமும் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறி ஏதோ விளங்கிக் கொண்டாலும் கணவரும் இவளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததில் மொழி தெரியாததும் ஒரு பிரச்சனையாகப் படவில்லைத்தான். கணவன் இறந்தபின் இரு மாதங்கள் திண்டாடித்தான் போனாள். அந்தநேரம் கணவனின் அண்ணன் தான் கைகொடுத்தது. வேலைக்கு லீவு சொல்லிவிட்டு இவர்களுடன் வந்து ஒருமாதம் நின்று எல்லா உதவிகளும் செய்து இவர்களின் அலுவல்கள் எல்லாம் பார்த்தது. கணவன் ஆயுட்காப்புறுதி செய்து வைத்திருந்ததில் வீட்டுக்குக் கட்டவேண்டிய பணம் முழுதும் கட்டப்பட்டுவிட, மூத்த மகனுக்கும் உடனேயே வேலை கிடைத்ததில் இவள் நிம்மதியாய் தொடர்ந்தும் இருக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக மூத்தமகனின் சம்பளம் மொத்தமாக இவள் கைகளுக்கு வர, சீட்டுப் பிடிக்கிறேன் என்று பத்தாயிரத்தைத் தொலைத்தபின் மகனும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் இவளுக்குக் கொடுத்துவிட்டுத் தானே சேர்த்து வைக்க ஆரம்பிக்க, பிள்ளை தன் கைவிட்டுப் போய்விட்டாதே என்ற ஆதங்கம் எழுகிறது. “உன் அப்பா இருந்திருந்தால் என்னை இப்படி உங்களிட்டைக் கையேந்த வீட்டிருப்பாரே” என்று அழுது பார்த்தும் மகன் முழுச் சம்பளத்தையும் அதன்பின் கொடுக்கவே இல்லை. இப்ப இரண்டு வாரங்களாக தம்பியாரின் போன் “வந்து அம்மாவைப் பார் அக்கா. சரியான சீரியஸ் என்று சொல்லிப் போட்டினம்” என்று ஒரே தொல்லை. அம்மாவைப் போய்ப் பார்க்கவேணும் என்று இவளுக்கு அத்தனை பாசம் ஒன்றும் இல்லை. இவள் காதலித்து வண்ணனைக் கலியாணம் செய்யப் போகிறேன் என்றதும் தந்தையிலும் பார்க்க தாய்தான் குதியோ குதி என்று குதித்தது. இவள் வீட்டுக்குத் தெரியாமல் கலியாணம் கட்டிக்கொண்டு வந்தபிறகும் “நீ செத்திட்டாய் எண்டு நினைச்சுக்கொள்ளுறன். இனிமேல் இந்த வீட்டில உனக்கு இடமில்லை” என்று கதவை அடிச்சுச் சாத்தினபிறகு, பேரப் பிள்ளைகள் பிறந்தபிறகும் கூட தாய் வதனியையோ பேரப் பிள்ளைகளையோ பார்க்க வரவே இல்லை. வெளிநாடு போக முதல் ஒருக்காச் சொல்லிப்போட்டுப் போவம் என்று பிள்ளைகளுடன் போனவளை நிமிர்ந்துகூடத் தாய் பார்க்கவில்லை. அந்தத் தாயின் மகள்தானே இவளும். ஆனால் தம்பியில் உள்ள பாசம் இவளுக்குக் குறையவே இல்லை. தம்பியும் இவளின் கணவர் இருக்கும் வரை இவளோடு தொடர்பு கொள்ளவில்லைத்தான். கணவர் இறந்தபின் வாரம் ஒருதடவை போன் எடுத்துக் கதைப்பது வழமையாகியது. இவளுக்கும் வேறு என்ன வேலை. தம்பியின் பிள்ளைகளும் அத்தை அத்தை என்று ஒரே வாரப்பாடுதான். ஆனால் பெடியள் இருவரும் “உங்கடை சொந்தத்திலை நாங்கள் கலியாணம் செய்யவே மாட்டம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். அது இவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றாலும் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியாது என்பதால் இவளும் தான் ஆசையை அடக்கிக் கொண்டாள். நேற்றுப் போனில் கதைக்கும்போதும் “அக்கா ஒருக்கா வந்திட்டுப் போங்கோ, அம்மா இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறா” என்றதில் பிள்ளைகள் இருவரிடமும் கதைத்ததில் “நினைவே இல்லாமல் கிடக்கிறவவைப் போய் பார்த்து என்ன பிரயோசனம் அம்மா” என்கிறான் மூத்தவன். புதிதாக வேலைக்குச் சேர்ந்து இரண்டாம் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்ட துணிவில் இரண்டாவது மகன் “அண்ணா நான் அம்மாவுக்கு டிக்கற் போட்டு அனுப்புறன். செலவுக்கு மட்டும் நீங்கள் காசு குடுங்கோ என்றதில் சரி போனால் போகட்டும் என்று ஆயிரம் பவுண்டஸ் தாறன் என்று மூத்தவன் சொல்ல, இப்ப விடுமுறை காலமாதலால் இரு மடங்கு விலையில் டிக்கட் புக் செய்து தாயை நேரடியாகப் போகும் விமானத்தில் ஏற்றிவிடுகிறார்கள். கொழும்பு வந்து அக்காவைக் கூட்டிவர வானுக்கு 70,000 ரூபாய் என்கிறான் வதனியின் தம்பி குகன். மூத்தவன் விசாரித்ததில் கொழும்பிலிருந்து போக 35 ஆயிரம்தான். ஆனால் அம்மா தனியப் போறபடியால் மாமாவே கொழும்புக்கு வந்து கூப்பிடட்டும். காசு போனால் போகிறது என்கிறான் இளைய மகன். விமான நிலையத்துக்கு வதனியின் தம்பியார் மட்டுமன்றி மனைவி பிள்ளைகள் என்று அனைவரும் அக்காவை அழைத்துப்போக வந்திருக்க வதனிக்கும் மகிழ்வாகவே இருக்கிறது. இருபது ஆண்டுகளின் பின்னர் வருவதில் எல்லாமே புதிதாய் இருக்கிறது. ஏன் அக்கா பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே என்கிறான் தம்பி. அவங்களுக்கு வேலையில லீவு குடாங்கள் இந்த நேரம். ரிக்கற்றும் விலைதானே என்று சமாளிக்கிறாள் வதனி. காலையில் வந்தபடியால் இடையில் ஒரு உணவகத்தில் நிறுத்தி உண்டபின் பயணம் தொடர்கிறது. வீதி எங்கும் கடைகள் மாடிக் கட்டடங்கள் எனப் பார்க்க மலைப்பாக இருக்கிறது வதனிக்கு. ஆறு மணிநேரப் பயணத்தின் பின் அவள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வர அழுகை வருகிறது. தாயை நினைத்துத்தான் அவள் அழுவதாக எல்லோரும் நினைத்துக்கொள்கின்றனர். கணவர் பிள்ளைகளுடன் வர முடியவில்லையே என்பதில் வந்த அழுகையே அது. அக்கம் பக்கத்தவர்கள் சிலர் வந்து விசாரித்துவிட்டுப் போக நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டதில், தம்பி ஒழுங்கு செய்த காரில் தம்பி குடும்பமும் இவளும் போய்த் தாயைப் பார்க்கின்றனர். நினைவின்றிக் கிடக்கும் தாயைப் பார்க்க இவளை அறியாமலே கண்ணீர் வருகிறது. இரண்டு நாட்களின் பின் “எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். இங்கே வைத்திருந்து பிரயோசனமில்லை. நீங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்” என வைத்தியர் கூற அடுத்த நாள் தாயை வீட்டுக்குக் கூட்டிவருவதாக ஏற்பாடு. தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்யலாம் என்றால் ஒரு நாளைக்கு மூவாயிரம் என்கின்றனர். ஆனாலும் அக்கா இருக்கும் துணிவில் சரி என்கின்றனர். உயர்த்திப் பதிக்கும் பிரத்தியேக கட்டில் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள். எந்த நேரமும் சாகத் தயாராக இருக்கும் அம்மாவுக்கு இத்தனை செலவில் கட்டில் வாங்கத்தான் வேணுமா என்று யோசித்தவளின் கௌரவம் வெற்றிபெற, வாங்கு தம்பி என்று பணத்தைப் பவுண்ஸ்சாகவே தம்பியிடம் கொடுக்கிறாள். தாயை வீட்டுக்குக் கொண்டு வந்தபின் அயலட்டைச் சனம் தொடங்கி சொந்தக்காரர் எல்லாம் தாயாரின் சாட்டில் வதனியையும் பார்த்துப் புதினங்கள் கேட்டுவிட்டுப் போகின்றனர். வீடு எந்தநேரமும் கலகலப்பாக இருக்கிறது. ஆட்கள் அடிக்கடி வந்து போவதனால் அப்பப்ப கடையில் இருந்தும் உணவு எடுக்கின்றனர். வடை, முறுக்கு, ரோள்ஸ் என்று வதனியையும் தாயையும் பார்க்க வருபவர்களுக்கு உபசரிப்பும் நடக்கிறது. தாயில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. மின் விசிறி இல்லாமல் முதல் நாள் இரவு வியர்வையில் குளித்ததில் காலை எழுதவுடனேயே “தம்பி பான் இல்லாமல் படுக்கேலாதடா என்றது மட்டுமன்றி உங்களுக்கும் சேர்த்துப் பான் வாங்குங்கோ என்றதில் எல்லாமாக நான்கு பான்கள் வந்திறங்க, வதனிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. அம்மா படுத்திருக்கும் வராந்தாவுக்கு ஒன்று. உங்கள் அறைக்கு ஒன்று. பிள்ளைகள் படுக்கும் அறைக்கும் எங்கடை அறைக்குமாக நான்கு வாங்கினது. சரிதானே அக்கா என்று தம்பி கேட்க ஓம் என்று தலையாட்டுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் வதனியால். இவள் வந்து இருவாரங்களில் தாயில் எந்த வித மாற்றமும் இல்லாவிட்டாலும் ஆட்கள் வந்துபோவது குறைகிறது. நல்லூர் திருவிழாவும் ஆரம்பித்துவிட்டதில் “அம்மாவைப் பார்த்துக்கொள்ள ஆள் இருக்குத் தானே அக்கா, நல்லூருக்குப் போட்டு வருவம் என்று தொடங்கி ரிச்சா பாம் வரை ஒவ்வொருநாளும் ஒரு இடமாக தம்பி குடும்பம் வதனியை ஊர் சுற்றிக் காட்டியதில் வதனி பிள்ளைகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்துக் கொண்டுவந்த பணமும் மொத்தமாகக் கரைந்து போக, மூன்று வாரங்களில் இத்தனை செலவா என மலைத்துப்போகிறாள் வதனி. கிடந்த மிச்சப் பயணத்தில் லண்டன் நண்பிகள் சொல்லிவிட்ட பற்றிக் நைட்டி முதற்கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு உடைகள், கோப்பித்தூள், அரிசிமா, மிளகாய்த்தூள் என வாங்கி முடிய இவளுக்குத் தாயைப் பார்க்கத்தான் தான் வந்தது என்பதே மறந்து போகிறது. இவள் வெளிக்கிடும் நாள் நெருங்க தம்பி குடும்பமே அதிகம் கவலை கொள்கிறது. மீண்டும் எழுபதாயிரம் ரூபாய்களுக்கு வான் ஒழுங்கு செய்து அக்கம்பக்கம் சொல்லிக்கொண்டு தம்பி குடும்பத்துடன் விமானநிலையம் வந்து சேர ஒருவித நிம்மதி பிறக்கிறது வதனிக்கு. தம்பி குடும்பம் கொழும்பிலிருந்து கிளம்பி நான்கு மணி நேரம் ஆகியிருக்கும். தாய் இறந்துவிட்டதாக தாயைப் பார்ப்பவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புச் சொல்ல, “ஐயோ அக்கா உனக்கு விதியில்லாமல் போச்சே” என அழும் தம்பியைப் பார்க்க முடியாத தூரத்தில் பறந்துகொண்டிருக்கிறது வதனியின் விமானம்.