இறை குறைபடுமோ ?
- சுப.சோமசுந்தரம்
இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை.
தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல்
" அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!"
(குறுந்தொகை 23)
என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல்.
"மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும்
ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே".
(குறுந்தொகை 111)
பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று.
"......................வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன
உருகெழு பேய்மகள்"
(புறநானூறு 371)
என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார்.
இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை.
இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம் பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன்.
நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் :
"வள்ளலாரும் மனையாரை
நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ளம் மகிழ அமுதுசெய
இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க்
கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால்
உறுப்பில் குறைபாடு இன்றித்தாய்
பிள்ளைபிடிக்க உவந்து பிதா
அரிந்து சமைக்கப்பெறின் என்றார்"
(சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54)
பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார்.
அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை :
"இனிய மழலைக் கிண்கிண்கால்
இரண்டும் மடியின் புடைஇடுக்கிக்
கனிவாய் மைந்தன் கையிரண்டும்
கையால் பிடிக்கக் காதலனும்
நனிநீடு உவகை உறுகின்றார்
என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனி மாமகனைத் தாதையார்
கருவி கொடுதலை அரிவார்"
(சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63)
பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார்.
அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று :
"அறுத்த தலையின் இறைச்சி திரு
அமுதுக்கு ஆகாது எனக்கழித்து
மன்றத்து நீக்கச் சந்தனத்தார்
கையில் கொடுத்து மற்றை உறுப்பு
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து
எலும்பு முளை திறத்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம்
அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்"
(சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65)
பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள்.
இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம்.
சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ?
மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே !
உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார்.
"முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது"
(இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5)
"என்று கூறிய இயற்பகையார் முன்
எய்தி நின்றஅக் கைதவ மறையோர்
கொன்றைவார் சடையர் அடியார்கள்
குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட
ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும்
உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி
இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு
இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்"
(இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6)
பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார்.
இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல்.
"என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார்
யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை
ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன
மன்னு காதல்உன் மனைவியை வேண்டி
வந்தது இங்குஎன அந்தணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து
தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்"
(இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7)
பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார்.
"இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி
எம்பிரான் செய்த பேறுஎனக்கு"
(இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு)
பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார்.
இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது.
"சென்று அவர் தடுத்தபோதில்
இயற்பகையார் முன் சீறி
வன்துணை வாளே ஆகச்
சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும்
தலைகளும் துணித்து வீழ்த்து
வென்றுஅடு புலிஏறு என்ன
அமர் விளையாட்டில் மிக்கார்"
(இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21)
பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார்.
இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது.
நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?