கட்டுரை தகவல் எழுதியவர், மேகா மோகன் பதவி, பிபிசி உலக செய்திகள் 2 ஏப்ரல் 2025, 01:20 GMT கடந்த 2019ஆம் ஆண்டில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக திருமணமான முதல் திருநங்கை என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றார். தற்போது, அம்மாவின் பெருமை எனப் பொருள்படும் 'அம்மாஸ் பிரைட்' (Amma's pride) என்ற புதிய ஆவணப்படம், ஸ்ரீஜாவின் திருமணத்திற்கு அரசு அங்கீகராம் கிடைக்க வேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தையும், அதில் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது அம்மா வள்ளியின் முக்கியப் பங்கையும் விவரிக்கிறது. தனது மகளைக் கட்டி அணைத்துக்கொண்டே,"ஸ்ரீஜா, எனக்குக் கிடைத்த வரம்," என்று 45 வயதான வள்ளி பிபிசியிடம் கூறினார். தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரீஜா, "என்னிடம் இருப்பது எல்லா திருநர் சமூகத்தைச் சேர்ந்த அனைவரிடமும் இல்லை என்பது எனக்குத் தெரியும்," என்கிறார். "எனது கல்வி, வேலை, திருமணம் என அனைத்தும் என் அம்மா எனக்கு அளித்த ஆதரவால்தான் சாத்தியமானது." தமிழ்நாட்டில், சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்ட முதல் திருநங்கை என்ற ஸ்ரீஜாவின் தனித்துவமான அனுபவத்தை எடுத்துக்காட்டும் வகையில் 'அம்மாஸ் பிரைட்' என்னும் ஆவணப்படம் வெளியாகவுள்ளது. இதில் ஸ்ரீஜா மற்றும் அவரது அம்மா முதன்முறையாக தங்களது கதையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?31 மார்ச் 2025 வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?31 மார்ச் 2025 'என் மகளுக்கு என்றும் துணையாக நிற்பேன்' பட மூலாதாரம்,CHITHRA JEYARAM/ BBC படக்குறிப்பு,ஸ்ரீஜா, அவரது கணவர் அருண் மற்றும் அம்மா வள்ளி (இடமிருந்து வலம்) ஸ்ரீஜா, தனது கணவர் அருணை 2017ஆம் ஆண்டில் ஒரு கோவிலில் சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் வட்டாரம் இருந்ததை அறிந்த பிறகு, அவர்கள் தொடார்ச்சியாகப் பேசிக்கொள்ளத் தொடங்கினர். அதற்கு முன்னதாகவே, ஸ்ரீஜா தனது பாலின மாற்றத்தை உணரத் தொடங்கி, திருநங்கையாக வெளிப்படையாக வாழ்ந்து வந்தார். "நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டோம். ஒரு திருநங்கையாகத் தனது அனுபவங்கள் குறித்து ஸ்ரீஜா என்னிடம் மனம் திறந்து பகிர்ந்தார்," என்று 29 வயதான அருண் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார். அதன் பின்னர் சில மாதங்களுக்குள், காதலிக்கத் தொடங்கி, வாழ்க்கை முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்தனர். இருப்பினும், 2018ஆம் ஆண்டில், அவர்களது திருமணத்தைப் பதிவு செய்யும் அவர்களது முயற்சி நிராகரிக்கப்பட்டது. கடந்த 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி, திருமணம் என்பது "மணமகன்" மற்றும் "மணமகள்" ஆகிய இருவருக்கும் இடையிலான பந்தம் என்று மட்டுமே வரையறுக்கிறது என பதிவாளர் வாதிட்டார். அதாவது அந்தச் சட்டத்தின் மூலம், திருநங்கைகள் திருமணத்துக்கான சட்ட வரம்புக்கு உட்படவில்லை. ஆனால் பால்புதுமை ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்ற இந்தத் தம்பதியினர், தங்கள் உறவை பொதுவெளியில் அறிவித்து சட்டபூர்வ அங்கீகாரம் பெறப் போராடினர். இந்த முறை அவர்களது முயற்சி வெற்றி பெற்றது. பட மூலாதாரம்,ARUN KUMAR / BBC படக்குறிப்பு,ஸ்ரீஜா மற்றும் வள்ளி கடந்த 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டமானது, திருநர்களை "மணமகள்" அல்லது "மணமகன்" ஆக சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என அறிவித்து, 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் திருமண உரிமையை உறுதி செய்தது. இதன் மூலம், அவர்கள் உலகளாவிய கவனத்தைப் பெற்றனர். இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் திருநர்களின் சமூக அங்கீகாரத்திற்கு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று பால்புதுமையின ஆர்வலர்கள் கருதினர். மேலும், கலாசார மரபுகளின் சவால்களை எதிர்கொண்டதற்காக ஸ்ரீஜா, அருண் ஆகிய இருவரும் சமூகத்தில் கவனம் பெற்றனர். ஆனால், இத்துடன் அவர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார்கள். "செய்திகளில் எங்கள் கதை வெளியான மறுநாளே, நான் வேலையில் இருந்து நீக்கப்பட்டேன்," என்று கூறுகிறார் போக்குவரத்துத் துறையில் தொழிலாளராகப் பணியாற்றிய அருண். இது திருநர் சமூகத்தின் மீதிருந்த வெறுப்பின் காரணமாகவே ஏற்பட்டதாக அவர் நம்புகிறார். அதன் பிறகு ஆன்லைன் மூலமாகவும் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. "திருநங்கையைத் திருமணம் செய்ததற்காக மக்கள் என்னைக் கடுமையாக விமர்சித்து, அவதூறான கருத்துகளை அனுப்பினர்," என்று அவர் கூறுகிறார். இந்த அழுத்தமான சூழ்நிலையால், தம்பதியினர் ஒரு குறுகிய காலத்திற்குப் பிரிந்து வாழ நேரிட்டது. இருப்பினும், ஸ்ரீஜா தனது கல்வியில் சிறந்து விளங்கி, உயர்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்தார். பின்னர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஸ்ரீஜா, அவரது குடும்பத்தில் உயர்கல்வி பெற்ற மிகச் சிலருள் ஒருவரானார். 14 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய வள்ளிக்கு, இது மிகவும் பெருமையான தருணமாக இருந்தது. Play video, "ஸ்ரீஜா", கால அளவு 1,22 01:22 காணொளிக் குறிப்பு, தனது திருமணத்திற்கான அரசின் அங்கீகாரத்திற்காகப் போராடுவதற்கு முன்பே, ஸ்ரீஜாவும் அவரது குடும்பத்தினரும் சமூக விரோதத்தையும் அவமானங்களையும் எதிர்கொண்டனர். தனது 17 வயதில் ஸ்ரீஜா ஒரு திருநங்கையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவரும் அவரது தாயும் இளைய சகோதரரும், அவர்களது வீட்டு உரிமையாளரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். குடும்ப உறுப்பினர்கள் பலர் அவர்களுடன் பேசுவதை நிறுத்தினர். ஆனால், ஸ்ரீஜாவின் அம்மாவும் சகோதரரும் உறுதியாக இருந்து, ஸ்ரீஜாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்தனர். "என் மகளுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன்" என்கிறார் வள்ளி. "அனைத்து திருநங்கைகளும் அவர்களது குடும்பத்தினரால் ஆதரிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீஜாவுக்கு ஆறு வயதாக இருக்கும்போது அவரது அப்பா இறந்ததால் தனி ஆளாக அவரது அம்மா வள்ளி அவரை வளர்த்து வந்தார். வள்ளி ஒரு பள்ளியின் உணவுக்கூடத்தில் வேலை செய்கிறார். குடும்ப வருமானம் குறைவாக இருந்தபோதிலும், மகளின் பாலின மாற்று சிகிச்சைக்குத் தேவையான செலவுகளைச் சமாளிக்க வள்ளி உதவினார். இதன் காரணமாகத் தனது தங்க நகைகள் சிலவற்றை வள்ளி விற்றார். "என் அம்மா என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்" என்கிறார் ஸ்ரீஜா. குழந்தை கையில் செல்போனை கொடுத்ததால் பிகார் நபரிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - எப்படி தெரியுமா?31 மார்ச் 2025 சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'ஜிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?31 மார்ச் 2025 'இந்த மனநிலை மாறும் என்று நம்புகிறேன்' பட மூலாதாரம்,ARUN KUMAR / BBC படக்குறிப்பு,தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக திருமணமான முதல் திருநங்கை என்ற பெருமையை ஸ்ரீஜா பெற்றுள்ளார். உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், திருநர்களின் எண்ணிக்கை சுமார் இருபது லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். திருநர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பது மற்றும் "மூன்றாம் பாலினம்" என்ற சட்டபூர்வ அங்கீகாரமும் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும் சமூகத் தடைகளையும், பாகுபாட்டையும் திருநங்கைகள் இன்றும் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் திருநங்கைகள் அதிகளவில் வன்முறைக்கும், மனநலப் பிரச்னைகளுக்கும் ஆளாகி, கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சுகாதார சேவைகளைக் குறைந்த அளவிலேயே பெறுகிறார்கள் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பலர் யாசகம் பெற்றோ, பாலியல் தொழிலில் ஈடுபடவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். உலகளவில், கணிசமான திருநங்கைகள் தங்கள் குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. "இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் பெரும்பாலான திருநங்கைகள் குடும்பத்தின் ஆதரவின்றி வாழ்கிறார்கள்," என்று 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத்தின் இயக்குநர் சிவ கிரிஷ் கூறுகிறார். ஆனால், ஸ்ரீஜா மற்றும் வள்ளியின் கதை தனித்தன்மை வாய்ந்தது. திருநங்கைகளைச் சுற்றியுள்ள ஒரே மாதிரியான பார்வையையும், ஊடகங்களில் அவர்களைப் பற்றி அடிக்கடி வெளியாகும் ஒரே போன்ற கதைகளையும், குறிப்பாக, அதிர்ச்சிகரமான மற்றும் வன்கொடுமையை மையமாகக் கொண்ட கதைகளையும் சவாலுக்கு உட்படுத்த இந்தப் படம் உதவும் என்று ஸ்ரீஜா நம்புகிறார். "நாம் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. நான் ஒரு மேலாளர், மற்றும் தொழிலில் ஒர் ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்" என்கிறார் ஸ்ரீஜா. "திருநர்களைப் பற்றிப் புதிய கோணங்களில் சொல்லப்படும் கதைகளை மக்கள் பார்க்கும்போது, அவர்கள் மனநிலையும் மாற்றம் அடையும் என்று நான் நம்புகிறேன்." விண்வெளியில் ஒரு குழந்தை பிறந்தால் அதன் உடல் அமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர் பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 'நான் விரைவில் பாட்டி ஆக விரும்புகிறேன்' படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டில், தங்களது திருமணத்தைப் பதிவு செய்யும் ஸ்ரீஜா, அருண் தம்பதியின் முயற்சி நிராகரிக்கப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்ட பிறகு, 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படம் தற்போது இந்திய பார்வையாளர்களைச் சென்றடைய உள்ளது. மார்ச் 31, திங்கட்கிழமை நடைபெறும் சர்வதேச திருநர் தினத்துக்கு முன்னதாக, சென்னையில் பால்புதுமையின சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான சிறப்புத் திரையிடலுடன் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. சென்னையில் இந்தத் திரையிடலைத் தொடர்ந்து, ஒரு பயிற்சி பட்டறை நடைபெறும். இதில் குடும்பத்தினர் திருநங்கைகளை ஏற்றுக் கொள்வதன் அவசியத்தையும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக ஆதரவின் முக்கியத்துவத்தையும், சிறு குழுக்களாகப் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் விவாதிக்கவுள்ளனர். "எங்கள் திரையிடல் நிகழ்வுகள் திருநங்கைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை வளர்க்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சித்ரா ஜெயராம் கூறுகிறார். சமூக பழமைவாதத்துக்கு எதிரான குடும்ப ஆதரவை முக்கிய கருப்பொருளாகக் கொண்டுள்ளதால், 'அம்மாஸ் பிரைட்' ஆவணப்படத் திரையிடல் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிராமப்புற பார்வையாளர்களுக்கும், இந்தியாவின் பிற நகரங்களுக்கும், நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று தயாரிப்புக் குழு நம்புகிறது. ஸ்ரீஜாவும் அருணும் தற்போது தனியார் நிறுவனங்களில் மேலாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். விரைவில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கனவாக உள்ளது. "நாங்கள் ஒரு சாதாரண, சராசரியான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம்," என்கிறார் ஸ்ரீஜா. "நான் விரைவில் பாட்டி ஆக விரும்புகிறேன்," என்று கூறிச் சிரிக்கிறார் வள்ளி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd02zkpv44jo