பத்து அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி ஓட்டோவில் அனுப்பிவிட்டு நானும் வீட்டுக்குப் போகிறேன். கன்றுகளை இறக்கி வைத்தவர் நீங்களோ நடப்போகிறீர்கள்? என்கிறார். எனக்கு ஏலாது இவ்வளவும் நட. வீட்டில் ஒருத்தர் இருக்கிறார். அவரைக்கொண்டுதான் நடவேணும் என்கிறேன். உங்களுக்கு உப்பிடியான வேலைகளுக்கு ஆரும் தேவை என்றால் சொல்லுங்கோ. தெரிந்த பெடியன் இருக்கிறான். நான் அனுப்பிவைக்கிறன் என்கிறார். தேவையென்றால் உங்களுக்கு போன் செய்யிறன் என்றுவிட்டு காலை உணவை உண்டு முடிய பத்து மணிக்கு இரண்டு பெண்களும் வருகின்றனர். அவர்களோடு கதைத்துப் பயன் இல்லை என்று புரிய, அடுத்த பக்கத்துப் புற்களைப் பிடுங்கும்படி கூறிவிட்டு கதிரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் வருகிறார். “என்னக்கா நிறையப் பூக்கண்டுகள் வாங்கிவந்திருக்கிறியள்” “நல்ல வித்தியாசமான நிறங்கள். அதுதான் நடுவம் என்று வாங்கினனான்” “நேற்றே வாங்கியிருந்தால் வேலை செய்தவங்களைக் கொண்டே நட்டிருக்கலாம் அக்கா” “அதனால என்ன? நான் கொண்டுவந்து தாறன். நீங்கள் நடுங்கோ” “நான் உந்தச் சேத்துக்குள்ள இறங்கமாட்டன் அக்கா. எனக்குக் காலில புண். அது பெருத்திடும் அக்கா” “என்ன சின்னப் பிள்ளைக்குக் கதை சொல்லுற மாதிரிச் சொல்லுறீர்” “என்னால கிடங்கு வெட்ட ஏலாது அக்கா” “சரி நீர் போய் உம்மடை அலுவலைப் பாரும்” நான் வீட்டுக்குள் சென்று புத்துவெட்டியை எடுக்கும்போது பார்த்தால் இரண்டு மண்வெட்டியையும் காணவில்லை. “ரஜிதன், மண்வெட்டியளை எங்க வச்சனீங்கள்” “நான் எடுக்கேல்லை அக்கா. நேற்று வேலை செய்தவங்கள் கொண்டுபோட்டாங்களோ” “ அவர்கள் எனக்கு நல்ல நம்பிக்கையான வேலையாட்கள். அவை கொண்டுபோகாயினை” “எனக்குத் தெரியாது அக்கா. அவங்கள் உங்கை எங்காலும் மறைச்சு வச்சிட்டு எடுத்துக்கொண்டு போயிருப்பங்கள்” “வாயை மூடும். அவை கழுவித் தர நான் மூன்றையும் குசினி மூலையில வச்சிட்டுப் போனனான். அதுக்குப் பிறகு நீர் மட்டும்தான் உள்ளுக்குள்ள வந்தனீர்” “நான் என் மண்வெட்டியைத்தான் விடிய வேலைக்குப் போக்கேக்குள்ள கொண்டுபோனனான்” “உம்மைத் தவிர மண்வெட்டியை ஆரும் எடுத்திருக்க முடியாது. மரியாதையா என் மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வர, “அக்கா, ரதி அன்ரி உங்களில சரியான கோபத்தில இருக்கிறா” “என்ன கோபம் அவவுக்கு? “தான் தானாம் என்னைக் கூட்டிவந்தது. என்னை இருத்திறது பற்றி நீங்கள் அவவோடை ஒண்டுமே கதைக்கேல்லையாம்” “நான் ஒவ்வொருநாளும் அவவிட்டைக் கதைக்கிறன் தானே, என்னட்டையே சொல்லியிருக்கலாமே? எதுக்கு உம்மட்டைத் தூதுவிடுறா? நான் பிறகு அவவோடை கதைக்கிறன்” “அவ இனிமேல் உங்களோடை கதைக்கமாட்டாவாம். தன்னை மதிக்கேல்லையாம்” “கிரைண்டர் கப் தனக்குத் தரேல்லை எண்ட கோபமோ” “நீங்கள் வந்த நாள் தொடக்கம் நான் அவைக்குப் போய் உதவி ஒண்டும் செய்யேல்லை” “எனக்கு விளங்கேல்லை. என்ன உதவி செய்யிறனீர்? “அவையின்ர வாழைக் குலைகள் சந்தைக்குக் கொண்டுபோய் குடுப்பன், கறக்கிற பால் பண்ணைக்குக் கொண்டுபோறது, மில்லு க்குப் போறது எண்டு ஒவ்வொரு நாளும் ஏதாவது வேலை இருக்கும். நீங்கள் வந்தபிறகு நான் அங்க போறேல்லை. இண்டைக்கு நான் வாற நேரம் பாத்து றோட்டில வந்து மறிச்சு சப்பல் பேச்சுப் பேசிப்போட்டு இனி எனக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை எண்டு ஏசிப்போட்டுப் போட்டா” “நான் பிறகு போய் அவவோடை கதைக்கிறன். நீர் முதல்ல போய் என்ர மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” நான் வீட்டை போட்டு வாறன் என்றபடி அவர் ஸ்கூட்டியக் கிளப்ப நான் ஓட்டோக்காரருக்கு போன் செய்து கன்றுகள் நட அந்தப் பையனை அனுப்பும்படி கூறுகிறேன். பதினைதே நிமிடங்களில் அந்தப் பையன் கேற்றைத் திறந்துகொண்டு சயிக்கிளில் வருகிறார். பார்த்தால் சிறிய வயது. நல்ல மொடேணாக ஆடை உடுத்தி, தலைவாரி பார்த்தால் பள்ளியில் படிக்கும் மாணவன் போல் தெரிய, பள்ளிக்கூடம் போறேல்லையோ என்கிறேன். இல்லை நான் பத்தாம் வகுப்போடை விட்டிட்டன் என்கிறார். உங்கடை வயதுக்குப் படிச்சா நல்ல வேலை செய்யலாமே என்றவுடன், என்ன அன்ரி நடவேணும் என்கிறார். நான் புத்துவெட்டியைக் கொடுத்து நல்ல ஆழமாக் கிண்டுங்கோ. நான் கன்றுகளை வைக்கிற இடத்தில கிடங்கு எடுத்து வையுங்கோ என்றபடி இடங்களைப் பார்த்துப் பார்த்துக் கொண்டுபோய் வைத்துவிட்டு திரும்பி வர நான்கு கன்றுகளை நட்டுமுடித்திருக்க, எனக்கோ இத்தனை விரைவாக வேலை செய்கிறாரே என்று ஆச்சரியம். பொலித்தீனை எங்கே போட்டீர்கள்? என்றபடி தேடினால் ஒன்றையும் காணவில்லை. நான் பொலித்தீனைக் கழட்டேல்லை. அப்பிடியே நட்டிட்டன் என்றவுடன் வந்த கோபத்தை அடிக்கியபடி நீங்கள் ஒருநாளும் கன்றுகள் நடேல்லையா என்று கேட்க இல்லை என்கிறார். பொலித்தீனுடன் நட்டால் வேரோட ஏலாமல் கன்று பெரிதாய் வளராது. திரும்பக் கன்றுகளை வெளியே எடுங்கோ என்று கூற திரும்ப வெளியே எடுக்கிறார். அவருடன் கூடவே நின்று அனைத்துக் கன்றுகளையும் நட்டு முடிய அவருக்குப் பணத்தைக் குடுத்து அனுப்பிவிட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போனால் நின்று கதைத்துச் சிரிக்க, வேலையைப் பாருங்கோ என்று கூறிவிட்டு நகர, தேத்தண்ணி இன்னும் தரேல்லை என்று கூற, அட மறந்திட்டன் என்றபடி தேநீர் ஊற்றிக் கொடுத்து பாகோடாவும் கொடுக்க அவர்கள் மாமர நிழலில் அமர்ந்துகொள்கின்றனர். தன் வீட்டுக்குப் போன ரஜிதன் ஒரு மண்வெட்டியுடன் வந்கிறங்குகிறார். எங்கே மற்ற மண்வெட்டி என்றதற்கு இது என் மண்வெட்டி அக்கா. நீங்கள் என்னில சந்தேகப்படுறியள் என்று வீட்டை போய் எடுத்து வாறன் என்கிறார். நான் மண்வெட்டியைப் பார்த்தால் அது எனது மண்வெட்டிதான். ஒரு மூலை கல்லில் பட்டுச் சிறிது நெளிந்திருந்தது. நான் அதைக் கூறி இது என்னுடையதுதான் என்றாலும் அவர் விடுவதாக இல்லை. இரண்டாவதும் உம்மட்டைத்தான் கிடக்கு. நாளை அதையும் கொண்டுவாரும் என்றுவிட்டு அதை உள்ளே எடுத்துக்கொண்டு சென்று வைத்துப் பூட்டுகிறேன். “அக்கா எனக்கு 10 வருசத்துக்கு அக்றிமென்ற் போட்டுத் தாங்கோவன். நான் உங்கடை வீட்டையும் வளவையும் வடிவாப் பார்க்கிறன்” “நாங்களே 10 வருஷம் உயிரோடை இங்க இருப்பமோ தெரியாது. அதுக்குள்ள உமக்குப் பத்து வருஷம் எழுதி பிறகு வீடு உமக்கே சொந்தமாகவோ? “நீங்கள் மாதம் 10 ஆயிரம் எனக்குத் தாறன் எண்டு ரதி அன்ரிக்குச் சொன்னனீங்களோ? “எனக்கு என்ன விசரா? “அவ உங்களோடு கதைத்ததாகச் சொன்னாவே அக்கா” “நான் அப்பிடி ஒண்டும் கதைக்கவில்லை. நான் போக்கேக்குள்ள அவவிட்டை என்ன சுத்துமாத்துக் கதை என்று கேட்கிறன், நீர் போய் இவைக்கும் உமக்கும் எனக்கும் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வாரும்” என்று பணத்தைக் கொடுக்கிறேன். உணவு வந்தவுடன் நான் உணவுகளைக் கொண்டுபோய் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு நீரும் சாப்பிடும் என்று கூற, தாங்கோ அக்கா நான் ஃபிரிஜ் இல் வைத்து இரவு சாப்பிடுகிறேன். இப்ப பசிக்கவில்லை என்கிறார். அவரின் பொதியைக் கொடுத்துவிட்டு உள்ளே இருந்த சிறிய மேசை ஒன்றில் என் உணவுப்பொதியை கொண்டுசென்று வைக்கும்போது எனது சாச் செய்யும் டோச் லைற் மேசையில் கிடக்கிறது. ஒருபக்கம் மகிழ்ச்சியும் மறுபுறம் வியப்புமாக அதை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன். அது என்னுடையதுதான். உடனே ரஜிதன், இது எனது லைற் எல்லோ. எங்க இருந்தது? என்கிறேன். இது நேற்று என்ர மாடு அறுத்துக்கொண்டு போட்டுது. இருட்டினதால அன்ரிதான் இதைத் தந்து தேடு எண்டவ என்கிறார். எதுக்கும் என்னட்டையே இருக்கட்டும். நான் அவவோடை கதைக்கிறேன் என்றவுடன் என் கையில் இருந்த டோச் லைற்றை லபக் என்று பறிக்கிறார். அன்ரி என்னட்டைத் தந்தவ. நான் அவவிட்டைக் குடுக்கிறன். நீங்கள் அவவிட்டை வாங்கிக்கொள்ளுங்கோ என்றபடி தன் ஸ்கூட்டியினுள் கொண்டுபோய் வைக்க, நான் அதிர்ந்துபோகிறேன். கோபத்தை வெளியே காட்டவில்லை. ரஜிதன் வேலைக்குப் போட்டு வாறன் என்று கிளம்ப பெண்களின் வேலைமுடியும் வரை பொறுமையாக இருந்துவிட்டு கதவு கேற் எல்லாம் பூட்டிவிட்டுக் கிளம்புகிறேன். ரதி அக்காவின் வீட்டுக்குச் சென்று அக்கா என்று கூப்பிட, கதிரையில் இருந்த அக்கா விசுக்கென எழுந்து உள்ளே போகிறார். எனக்கு முதலில் விளங்கவில்லை. ஏதோ எடுக்கப் போகிறார் என நினைத்து ஒரு இரண்டு நிமிடம் நிற்கிறேன். அவர் வரவேயில்லை. நான் என் ஸ்கூட்டியைத் திருப்பிக்கொண்டு இணுவிலுக்குச் சென்று கணவர், மச்சாள், அன்ரி எல்லோரிடமும் நடந்தவற்றைக் கூற உவை இருவரும் சேர்ந்துதான் பொருட்களை எடுத்திருக்கினம். அவ முதல் சில பொருட்களை எடுக்க பெடிப்பிள்ளை மிச்சத்தை எடுத்திருக்கிறார் என்கின்றனர். அடுத்தநாள் என் இரு அன்ரிமாரையும் ஓட்டோவில் வரும்படி கூறிவிட்டு நான் முன்னே செல்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் சிரித்தபடி வருகிறார். ஆரிவை என்றதும் நான் என் சித்திமார். நாங்கள் இன்று இங்குதான் தங்கப்போறம். அதுதான் இவையும் வந்தவை என்கிறேன். நான் மனிசனோடை நேற்று உங்களை இருத்துவது பற்றிக் கதைச்சனான். அவர் தனிய ஒருவர் வேண்டாம். ஒரு குடும்பம் என்றால் இருத்திவிட்டு வா எண்டவர்” என்று கூற அவரின் முகம் இருண்டுபோகிறது. “என்னக்கா உப்பிடிச் சொல்லுறியள். நான் எல்லாச் சாமான்களையும் உங்களை நம்பிக் கொண்டுவந்திட்டன்” “நானும் உங்களை நம்பித்தானே மண்வெட்டிகளை வைத்துவிட்டுப் போனனான். முதல்நாள் வைச்சிட்டுப் போனதையே இல்லை எண்டு சொல்லுற உங்களை நம்பி எப்பிடி நான் வீட்டில வச்சிருக்கிறது? “அப்ப எத்தினை நாளில கிளம்பவேணும்” “இப்பவே கிளம்புங்கோ “ “இப்பவேவா? உவ்வளவு பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போக வேணும். ஒரு மூண்டு நாள் எண்டாலும் வேணும்” “நீங்கள் ஒரு லாண்ட்மாஸ்டர் பிடிச்சு ஒரேயடியா எல்லாத்தையும் ஏற்றுங்கோ” “அதுக்கு 1500 ரூபா வேணும். என்னட்டை அது இல்லை” “அந்தக் காசை நான் தாறன்” “இரண்டு பேரும் சேர்ந்து என்னை நடுத்தெருவில விட்டிட்டியள்” “நீர் நடுத்தெருவில நிக்கிறதுக்குக் காரணம் நீர் தான். நான் நம்பி உம்மை வீட்டுக்குள்ள விட, என்ர வீட்டிலேயே களவெடுத்திட்டு என்னையே ஏமாத்தின உம்மடை எளிய புத்திதான் நீர் வெளிய போகக் காரணம்” முதல்ல போலீசுக்குப் போகத்தான் நினைச்சனான். பிறகும் அங்க இங்க எண்டு இழுபடப் பிடிக்காமல் தான் சும்மா விடுறன். அதன் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. லாண்ட்மாஸ்டர் வந்தவுடன் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு செல்ல என் மனம் நீண்ட பெருமூச்சுடன் நிம்மதி அடைகிறது. முடிந்தது