Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசோகன் மாமா

Featured Replies

அசோகன் மாமாவை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்று நீண்ட நேரமாக கீ போர்ட்டுக்கு முன்னால் இருந்து சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்,இப்படி அறிமுகப்படுத்துவது தான் மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்,"ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பம் ஆதர்சனமாக , முன்னோடியாக , வழிகாட்டியாக இருக்கும் அப்படி எங்களின் குடும்பத்துக்கு இருந்தவர்கள் தான் "நடராஜா" மாமா குடும்பம்,மாமா என்றால் எனக்கு மாமா அல்ல,எனது அப்பாவிற்கு மாமா,சரியாகச் சொன்னால் எனது அப்பம்மாவின் கூடப் பிறந்த தம்பி தான் நடராஜா,எங்களுடைய குடும்பம் நடராஜா மாமா குடும்பத்தை முன்னோடியாக , ரோல் மாடல் ஆக எடுத்து முன்னேறியவர்கள் என்பதில் எந்த விதமான மிகைப் படுத்தல்களும் இல்லை,நடராஜா மாமாவின் மூத்த மகன் தான் இந்தக் கதையின் கதாநாயகன் அசோகன்,எனது அப்பாவிற்கு மச்சான் முறையான அவர் எனக்கு கூட்டிக் கழித்துப் பார்த்தல் மாமா முறை வருவார்.

எனது அப்பாவிற்கும் சரி அம்மாவிற்கும் சரி அசோகன் மாமா என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்,அதிலும் அப்பாவிற்கு அசோகன் மாமா மேல் பெரிய அன்பு பெரிய மரியாதையை,இத்தனைக்கும் அப்பாவிற்கு அசோகன் மாமாவை விட கிட்டத் தட்ட பதின் ஜந்து வயது அதிகம்.

"பிள்ளை பெத்தால் சீமான் நட்ராயயய..........ர் பெத்தது போல பெறணும்,ஒரு பிள்ளை ஆயுசுக்கும் போதும்",அசோகன் மாமா பற்றி அப்பா அடிக் கடி விடும் நிலை தகவல் இது,[நடராஜா என்பதை அப்பா சற்று நீட்டி முழக்கி சுருதியாக 'நட்ராயயய..........ர்' என்றுதான் சொல்லுவார்.].நான் பிறந்ததில் இருந்து அசோகன் மாமாவை பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறேன் ஆனால் அவரை நேரில் சந்திக்கும் சந்தர்பம் அண்மையில் தான் கிடைத்தது,நான் அசோகன் மாமாவைப் பற்றிக் கேள்விப் பட்டது எல்லாம் ரஜனி பட ஓப்னிங் ஸீன் கணக்கா செம 'பில் டப்' ஆக இருக்கும்

"இஞ்ச பாரு இனியன் ,யாழ்ப்பாணத்தின்ர ஒரு மூலேல பிறந்த ஒருத்தன் [அசோகன் மாமா] ,இண்டைக்கு நோக்கியான்ர சீப் சயன்டிஸ்ரா இருக்கிறான் எண்டா அதில இருந்து என்ன தெரியுது சொல்லு பாப்போம்...",அப்பா அடிக்கடி என்னப் பார்த்துக் கேட்பார்,

[ இதற்கு எனது வழமையான பதில் சிவ சத்தியமா தெரியாது என்பதாகத்தான் இருக்கும் ],

"நீயும் உன்ர கல்யாணக் குணங்களை விட்டுட்டு கொஞ்சம் எம்பிப் படிச்சால் நாளைக்கு இல்லாட்டியும் நாளையிண்டைக்காவது அசோகன் மாதிரி வரலாம்"

[இதற்கு என்னுடைய வழமையான பதில் "கிழிஞ்சது போ" என்பதாக இருக்கும்]

என்னுடைய அப்பா நான் எனது வாழ்வில் கண்ட மிகச் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவர்,ஒரு சிறிய சம்பவத்தை தலை , வால் , மூக்கு , பிட்டம் எல்லாம் வைத்து,எடிட்டிங் பண்ணி,பின்னணி இசை வேறு சேர்த்து சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான் ,"வாக்கு தவறாதவர்" என்று ஒரு அடை மொழியில் ஊருக்குள் இருக்கும் பெரிய மனிதர்களை விளிப்பார்கள்,அப்படி நான் எனது வாழ்வில் கண்ட ஒரு வாக்கு தவறாதவர் எனது தந்தை ,அதாவது ஒரு கதையை எந்த ஓடரில் எங்கெங்கே 'டிவிஸ்ட்' வைத்து சொல்கிறாரோ அதே ஓடரில் பத்து வருடங்கள் கழித்தும் அதே இடங்களில் 'டிவிஸ்ட்' வைத்து சொல்வார்.

ஒரு உதாரணத்துக்கு திருமுருக கிருபானந்த வாரியாரை குப்பிழானுக்கு [எனது ஊர்] அழைத்துப் பேச வைத்தவர் என்பதில் எனது தந்தைக்கு ஒரு 'குண்டியில் தட்டின புழுகம்' எப்போதும் உண்டு, திரு முருக கிருபானந்த வாரியாரை எப்படி அழைத்து வந்தேன் எனச் சொல்லும் போது எனது தந்தை,அவரை அழைக்க செல்லும் போது கல்லால் அடிபட்டு சைக்கிளால் முகம் குப்பிற விழுந்த கதையையும் சேர்த்துத்தான் சொல்வார்,ஏறத்தாள பத்து வருடங்களுக்கு பிறகு அதே கதையை அதே ஓடரில் நான் கடந்த முறை யாழ்ப்பாணம் சென்ற போதும் சொன்னார்

அப்படியே நான் ஷாக் ஆகிட்டேன்.

திரு முருக கிருபானந்த வாரியார் கதை போல அப்பா எங்களுக்கு அடிக்கடி சொல்லும் கதைகளில் ஒன்று அசோகன் மாமாவைப் பற்றியது,அந்தக் கதையை சுமார் ஆயிரம் தடவைகள் கேட்டோ என்னவோ,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் போல அதுவும் எனக்கு பாடமாகி விட்டது.அது பின் வருமாறு இருக்கும்

"ஒரு நாள் கண்டியோ ஒரு ஜஞ்ச முக்கால் இருக்கும் நான் அசோகன் வீட்டை போனனான்,அசோகன் அப்ப அம்மம்மா வீட்டை தங்கி ஜப்னா ஹிந்துவில படிச்சவன் ,என்னைக் கண்ட உடன அத்தான் எண்டு சொல்லி வலு அன்பாக் கதைச்சான் ,சரியா ஆறு மணி அடிக்க..........

அத்தான் மன்னிக்க வேணும்,குறை விளங்கக் கூடாது,ஆறு மணிக்கு நான் படிக்கப் போய்ப் பழக்கம்,நான் இப்ப நான் படிக் கோணும் எண்டு சொன்னான்,அப்ப அவன் எட்டாம் ஆண்டுதான் படிச்சுக் கொண்டு இருந்தவன்,எட்டாம் ஆண்டிலயே அவனுக்கு என்ன ஒரு பொறுப்புணர்ச்சி எண்டு பார்,இண்டைக்கு அவன் ஒரு சயன்டிஸ்ட் ஆக இருக்கிறான் எண்டா,அதுக்கு அவன் அண்டைக்கு போட்ட அடித்தளம் தான் காரணம்,சும்மாயோ சொல்லுறவை , முயல் பிடிக்கிற நாயை மூஞ்சேல பாக்க தெரியும் எண்டு..............."

இதே ஓர்டரில் அப்பா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து கிட்ட தட்ட சுமார் ஆயிரம் தடவை ஆவது சொல்லி இருப்பார்,அதுவும் அத்தான் மன்னிக்க வேணும் எண்டு அசோகன் மாமா சொன்னதாய் சொல்லும் போது அப்பா இருக்கையை விட்டு சிறிது எழும்பி தலையை சுமார் முப்பது பாகைக்கு வளைத்து அசோகன் மாமா போலவே செய்து காட்டுவர்.களவெடுக்க கூடாது பொய் சொல்லக் கூடாது என்பதற்கு "நீதிக் கதைகளை" உதாரணம் சொல்லும் அப்பா கவனமாகப் படிக்க வேண்டும் என்பதற்கு அசோகன் மாமாவின் மேற்கூறிய கதையைத்தான் திரும்ப திரும்ப கூறுவார்.

நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து கேட்டுப் பழகியோ என்னவோ எனக்கு அந்தக் கதை அடியில் இருந்து நுனி வரை பாடம்,நாங்கள் படிக்காமல் சும்மா இருந்தால் அப்பா வந்து "ஒருநாள் கண்டியோ ஒரு ஆறு மணி இருக்கும் ........................",என்று கதையை தொடக்கினால்,நானும் எனது தம்பியும் .........நான் அசோகன் வீட்டை போனனான்...",எண்டு கதையை தொடர்கிற அளவுக்கு கதை எங்களுக்கு வாய்பாடு போல பாடமாகி விட்டது.

எனக்கு வாழ்கையின் மிக மிகப் பிடித்த விடயங்களில் ஒன்று தூங்குவது,தூங்கும் போது எல்லாம் எல்லாவற்றையும் மறந்து அப்படியே இறைவனுடன் சங்கமிப்பது போல இருக்கும்.இறைவனை காண்பதற்கு என்ன இழவுக்கு தவம் எல்லாம் இருக்க வேணும் சும்மா தூங்கினால் போதுமானது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று,"மனசே சரியில்லை மச்சான் தூங்கீட்டு வாரன் எண்டு எனது நண்பர்களுக்கு சொல்லி அவர்கள் என்னை வேற்றுக் கிரக வாசியைப் பார்த்தது போல பார்த்தது எல்லாம் எனது வரலாறில் உண்டு,சுருங்கச் சொன்னால் அந்த ஆண்டவன் வந்தாலும் இந்த அருளினியனை தூ க்கத்தில் இருந்து எழுப்ப முடியாது. தூங்கும் போது மெய் மறந்து தூங்குவதால் சில பல இடைஞ்சல்களை நானும் பெற்று மற்றவர்களுக்கும் கொடுத்தது உண்டு,

இப்போதும் எனக்கு பசுமையாக நினைவு இருக்கிறது,நான் எட்டாம் ஆண்டு படிச்சுக் கொண்டிருந்த போது எனது சமய பாட ஆசிரியை தூக்கத்தால் எழுந்தவுடன் உடனடியாக இறைவனைப் பூசித்து,,"ஓம் பூர் புவஸ்ஸக.." மந்திரம் சொல்ல வேண்டும் எனப் போதித்தார்,அதற்கு முன்னோடியாக எங்கள் ஒவ்வொருவரையும் எழுப்பி துங்கி எழுந்தவுடன் முதல் முதலில் செய்யும் வேலை என்ன என வினவினார்,பெரும் பாலானவர்கள் இறைவனை நினைத்து தியானிப்போம் என்றனர், சிலர் பெற்றோரை வணங்குவோம் என்று பில்டப் விட்டனர்,மேலும் சிலர் டீச்சரிடம் வெரி குட் வாங்குவதற்காக சமய பாடம் படிப்போம் என்றனர்,எனது முறை வந்த போது நான் நேர்மையாக கீழ்க் கண்டவாறு கூறினேன்.

"துங்கி எழுந்தவுடன் டீச்சர் ,முதல் வேலையா கட்டியிருந்த சாரத்தை மீண்டும் தேடியெடுத்துக் கட்டுவேன்..."

இப்படி நான் சொல்ல,டீச்சர் கடுப்பாகி காவாலி,களிசறை,பிஞ்சில பழுத்தது எண்டு திட்டினவா,ஆன அவா ஒன்றை மறந்திட்டா அவதான் முதல் நாள் வகுப்பில அரிச்சந்திரன் கதையை சொல்லி யாருமே பொய் சொல்லக் கூடாதெண்டும் சொன்னவா . மேலும் நான் துங்கும் போது ஒரு இடத்தில் தூங்குவது இல்லை என்பது இன்று வரை எனக்கு மேல் வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு,நான் ஹோலின் ஒரு முலையில் படுத்து தூக்கத்தில் உருண்டு பக்கத்து அறையில் உள்ள கட்டிலுக்கு கீழே சென்று விட்டு,திடீர் என கண் விழித்து, 'அய்யகோ கயவர்கள் என்னை இருட்டு சிறைக்குள் அடைத்து விட்டனர் என்றெல்லாம் கதறியதும் உண்டு,அதுவும் நான் ஹோலின் ஒரு மூலையில் படுத்தால் அப்பா ஹோலின் அடுத்த முலையில் படுக்கக் கூடப் பஞ்சிப்படுவார், இத்தனைக்கும் எங்கள் இருவருக்கும் இடையில் சுமார் முப்பது அடி தொலைவு ஆவது இருக்கும்,

"கோதாரில போறவன் ,மேலால வந்து உருளுவான்" என்பது அப்பா பொதுவாக சொல்லும் காரணம்

இப்படியாக நான் தூங்குவதை ஒரு கலையாக நினைத்து இரசித்து ,ருசித்து செய்யும் வேளையில் எனது காலை தூக்கத்துக்கு பெரும் தடையாக இருந்தது தான் அசோகன் மாமா பற்றிய இன்னொரு கதை,அதற்கு முதல் மனிதனாகப் பிறந்தவன் காலை நான்கு மணிக்கு பின் தூங்க மாட்டான் என்பது எனது அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை,

"காலமை நாளில் இருந்து ஆறு வரை கண்டியோ பிரம்ம முகூர்த்தம்,சரஸ்வதி உலாவிற நேரம் ,அந்த நேரம் தூங்கினா மூதேசி தான் பிடிக்கும் ,வீடும் வளவும் மூதேசி வலாயமாய் தான் இருக்கும்"-இது அப்பா அடிக்கடி எங்களுக்கு சொல்லும் குற்றச் சாட்டு,

பெரும் பாலும் எனது காலை தூக்கத்துக்கான முதல் ஆப்பு காலை நான்கு இருவது போலவே விழுந்து விடும்,அப்பா தீவிர இறை நம்பிக்கை கொண்டவர் காலை எழுந்து குளித்து தோய்ந்து விட்டு இறைவனுக்கு பூசை செய்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்,பூசையைக் கூட சுமார் ஒரு மணித்தியாலம் எடுத்து தீவிரமாக மனம் உருகி வழிபடுவார்,அப்பா பூசை அறையில் எப்போதும் ஒரு செம்பு நிறைய சுத்தமான நீரை அதற்குள் சில பூக்கள் மற்றும் வாசனை திரவியங்களைப் போட்டு வைத்திருப்பார் ஏன் என ஒருமுறை நான் இருக்கேலாமல் டவுட் கேட்டதுக்கு இதிகாசம் புராணம் உபநிடதத்தில் இருந்து எல்லாம் எடுத்து விட்டு விளக்கம் சொன்னார்,அதப் புரிந்து கொளும் அளவிற்கு எம்பெருமான் சமயம் சார்ந்த புரிந்துணர்வை எனக்கு அருளாததால் எனக்கு ஒரு இழவும் புரியவில்லை.அப்பா சுமார் நாலு மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து குளித்து,சந்தியா வந்தனம் செய்து விட்டு சுமார் நான்கு இருவது போல சுவாமி அறையை நோக்கி செல்வார்,பெரும்பாலும் சுவாமி அறைக்கு முன்னால் தான் நான் படுத்திருப்பேன் [உருண்டு வந்து ],என்னைத் தாண்டிச் செல்லும் போது,

'க் க் கும்..........' என ஒரு சிறிய இருமலுடன் அல்லது கனைப்புடன்,

"நேரம் நாலு இருவது,துரைக்கு இன்னும் நித்திரை கேட்குதோ ....",

என்று சொல்லி விட்டு செல்வார்,அந்த சிக்னல் அப்பாவின் அகிம்சை ஆயுதம் ,எனக்கு மேல் இடி விழுந்தால் கூடக் கேட்காது என இம்மை மறுமை இல்லாமல் தூங்கிக் கொண்டு இருக்கும் எனக்கு அப்பாவின் செருமல் சிக்னல் கேட்கும் என அவர் நினைத்தது,தலைமுறை இடை வெளிக் கிடையே உள்ள புரிந்துணர்வு இன்மையையே காட்டுகிறது,அந்த செருமல் சிக்னலுக்கு நான் எழும்பாவிட்டால் அப்பா அடுத்தபடியாக வன்முறையைக் கையில் எடுப்பார்,அதாவது என்னைத் தாண்டி நடந்து செல்லும் போது எனது பின் புறத்தில் தனது பலத்தை எல்லாம் சேர்த்து 'படீர்' என விளாசி விட்டு செல்வார்,அப்பா தனது பலம் எல்லாம் ஒன்று திரட்டி அடித்த அடி கூட நித்திரைப் புரியத்தில் எனக்கு நுளம்பு கடித்தது போலவே இருக்கும்.

சிக்னலுக்கும் எழும்பாமல்,அடிக்கும் எழும்பாமல் விட்டால் அப்பா அடுத்த கட்டமாகப் பயன்படுத்துவது தான் உச்சக் கட்ட வன்முறையாக இருக்கும்,அதாவது ஒரு செம்பு நிறைய தண்ணீரை சுவாமிப் படம் முன்பு வைத்திருப்பார் எனக் கூறினேனே அந்த செம்பு தண்ணியை முழுவதுமாக எடுத்து சரியாக எனது தலையில் ஊற்றும் வேளையில் நானும் சரியாக ஒரு கனவு கண்டு கொண்டு இருப்பேன்.

என்னைப் போலவே எனது கனவுகளும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும்,எப்போதும் எனது காலை நேரக் கனவுகள் புல் ரொமான்டிக் ஆகத்தான் இருக்கும்,ரொமான்டிக் ஆக இருந்தால் பரவாயில்லை பயங்கர ரொமான்டிக் ஆக இருக்கும்.கூடவே சற்று விசித்திரமாகவும் இருக்கும்,எனது காலை நேரக் கனவுகளில் அன்றில் இருந்து இன்று வரை பெரும்பாலும் வருபவர் உலக அழகி ஜஸ்வர்யா,சும்மா கெஸ்ட் அப்பியரன்ஸ் எல்லாம் இல்லாமல் கனவின் முழு நீளத்துக்கும் வந்து போவார்,எனக்கு அடிக்கடி அந்தக் காலம் தொட்டு இன்று வரை காலை நேரத்தில் வரும் கனவு பின் வருமாறு இருக்கும்.

நான் ஒரு பூங்காவில் அமர்ந்து இருப்பேன்,ஜஸ்வர்யா ராய் வெள்ளை சாரி அணிந்து [அது ஏன் என்று இன்று வரை எனக்கு தெரியல],என்னை நோக்கி மெதுவாக நடந்து வருவார்,அவரது நீல நிறக் கண்கள் சற்று பளபளப்பாகி மினுங்கி இருக்கும் என்னைப் பார்க்க வரும் முன்பு அழுதிருப்பார் என நினைக்கிறேன்,என்னை நோக்கி மெதுவாக வருபவர் என்னை அண்மித்ததும் கண்களில் காதல் மடை திறந்த வெள்ளம் போல பாய்ந்தோட என்னைப் பார்த்து ஒரு லுக் விட்டபடி எனதருகே வந்து எனது கைகளை பற்றப் பிடித்த படி பின்வருமாறு சொல்வார்

அருள் ,அருள்............உங்களை எவ்வளவு தூரம் லவ் பண்ணுறேன் எண்டு தெரியுமா...?,ஏன் இந்த அபலையைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்......?,நான் என்ன தவறு செய்தேன்,நான் என்ன அழகில்லாமலா இருக்கிறேன்,உலக அழகிப்பட்டம் வேறு வாங்கி இருக்கிறேன்,என்னை மனதார ஏற்றுக் கொண்டு,எனை உங்கள் காதலியாக ஏற்றுக் கொள்ளுங்கள் நான் எனது வாழ்வில் கண்ட அழகான ஆண் மகன் நீங்கள் தான் [அடியடா படலேல எண்டானாம் ],நீங்கள் இல்லாமல் ஒரு வாழ்க்கை என் னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது அருள்,நினைத்துக் கூடப் பார்க்க முடியாது அருள்.............

இதைக் கேட்டு ரென்சன் ஆன நான் ,குண்டியில் குளவி கொத்தியவன் போல படார் என இருக்கையை விட்டு எழுந்து

ஏண்டி என்னை தொந்தரவு செய்கிறாய்?,நான் அவளை தான் லவ் பண்ணுறேன் என்று தெரிந்தும் ஏன் என் பின்னால் வாராய்,நான் வாழ்வதோ இல்லை சாவதோ அது அவளுடன் தான்,நீ உலகத்துக்கு வேண்டுமானால் அழகியாக இருக்கலாம் ஆனால் எனக்கு அவள் தான் அழகி

[கதை நடந்து கொண்டிருந்த காலம் நான் ஒரு பெண்ணை ,விழுந்து,எழும்பிக் குத்தி முறிஞ்சு லவ் பண்ணிக் கொண்டு இருந்தேன்,அவளும் தான்,நீதானே எனது பொன் வசந்தம்,நீ இருப்பதால் தான் எனது வாழ்வில் வசந்தம் வீசுகிறது என்று எல்லாம் டயலாக் பேசிக் கொண்டிருந்த அவள்,திடீரென ஒருநாள் என்னிடம் வந்து,எனக்கு அண்ணா இல்லாத குறையை நீக் கத்தான் கடவுள் உன்னை அனுப்பி இருக்கிறார் என சொல்லி காதலும் மசிரும் என போய் விட்டாள்,

அண்ணாவோடு ஏன் ராஜா தியட்டருக்கு படம் பார்க்க வந்தனீங்கள் என்று நானும் கேக்கல அவளும் சொல்லல.

பிற்க் குறிப்பு;எங்கிருந்தாலும் வாழ்க .................]

எனக்கு இன்னொரு காதல் இருக்கு என்று கேள்விப் பட்ட நொடியிலயே,உலகமே இருண்டு போனா ஜஸ்வர்யா ராய் ,கண்ணைக் கசக்கியவாறு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட ஒரு பெண் அழுவதை பார்த்து தாங்க மாட்டாத நான் ,அழேதப்பா என்று சொல்லி அவள் கண்களை துடைத்து விட,அவளது கண்களால் பெருக்கெடுத்து ஓடிய நீர் எனது கைகளை நனைத்தால் பரவாயில்லை,திடீர் என எனது தலை,மூக்கு,வாய்,காது என எல்லாம் நீர்மயம்..................

சில கணங்கள் ஒன்றுமே புரியாமல் இருக்க ,எங்கோ பாதாளத்தில் இருந்து இருந்து கேட்பது போல அப்பாவின் குரல் கேட்கும்

"துரைக்கு நாலு முப்பது ஆகியும் நித்திரை கேட்குதோ.............?"

துடித்துப் பதித்து எழும்பி,தலையால் வழிந்தோடும் நீரை துடைத்தபடி,ஐயோ ஜஸ்வர்யா ராய் அழாதே அழாதே என்னால் தாங்க முடியாது என நான் பிதற்ற

அப்பா அம்மாவைப் பார்த்து சொல்வார்,"பிள்ளை வளக்கிறீரோ பிள்ளை,துரை படிக்கிற வள்ளீசில துரைக்கு பத்தாம் வகுப்பிலே யே பெண் கேட்குதாம்,ஒழுங்காப் பிடிச்சு பெய்ய தெரியாது மூஞ்சூறுக்கு விளக்குமாத்துக் கட்டை கேட்குதாம்.....

நடந்தது எல்லாம் கனவு என்று புரிந்து கொண்டு நான் 'திரு திரு' என்று முழிக்க அப்பா சிறிது தூரம் நடந்து சென்று விட்டு திரும்பிப் பார்த்து சொல்லுவார்.....

"அசோகன் நாலு மணிக்கு எழும்பி படிச்சவன்,அதால இண்டைக்கு சயன்டிஸ்டா இருக்கிறான்,நீயும் இருக்கிறாய்...?"

எனக்கு அப்பா மீது வெறி வரும் ,கூடவே முகம் தெரியாத அசோகன் மாமா மீது கொலை வெறியே வரும்,.....

"கோதாரில விழுந்த மனிசன் படிச்சதுதான் படிச்சது ஒரு ஆறு மணிக்கு எழும்பி படிச்சிருக்கலாம் தானே,என்ன செத்த வீட்டுக்கு நாலு மணிக்கு எழும்பி படிச்சவர்,அவர் படிக்கலை எண்டு ஆரும் அழுதவையே.... " இந்த ரேஞ்சில இருக்கும்.

அன்று முதல் இன்று வரை எனக்கு இருக்கும் மிகப் பெரிய டவுட் தான் உலகத்தில் எத்தனையோ விசயங்கள் உருப்படியாக செய்ய இருக்கேக்க ஏன் எல்லோரும் படிக்கச் சொல்லுறாங்கள் அதுவும் 'பயோ' படிக்கச் சொல்லுறாங்கள்...?

இப்படியாக அசோகன் மாமாவைப் பற்றி நான் கேள்விப் பட்டது எல்லாமே செம பயங்கரமாய் இருக்கும் அவரை வாழ்வில் ஒரு தடவை கூடப் பார்க்காமலேயே அசோகன் மாமா என்றால் இப்படிதான் இருப்பார் என எனது மனதுக்குள்ளே ஒரு படம் வரைந்து வைத்திருந்தேன்,எனது மூன்றாவது அண்ணா பொறியியல் துறையை தேர்ந்தெடுத்த போது அப்பா அவரது கையைப் பிடித்து அசோகன் போல வர வேண்டும் என வாழ்த்தி இருந்தது இப்போதும் எனக்கு கண்ணுக்குள் நிற்கிறது,எனது அப்பாவைப் பொறுத்த வரை அசோகன் என்பவர் ஒரு அன் லிமிடெட் பவர் உள்ள ஒரு ஆத்மா.

அப்பா எங்களுக்கு அசோகன் மாமாவைப் பற்றி சொன்ன கதைகள் சம்பவங்களால் எங்களுக்கும் அசோகன் மாமா மீது மிகப் பெரிய மரியாதையை எங்களை அறியாமலே வந்து விட்டது,தயங்காமல் எனது வாழ்வின் ரோல் மாடல்களில் அவரும் ஒருவர் எனக் கூறுவேன்,அவரை சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் தான் எனக்கு கிடைத்தது.

கடந்த டிசம்பர் மாதம்,எனக்கு படிப்பு தலைக்கு மேலே ஏறியதால் அணை கட்டுவதற்காக இன்டெர் நெட் பக்கமே நான் தலை வைக்காமல் சித்தம் போக்கு சிவன் போக்கு என இருந்து விட்டேன்,பேஸ் புக்கை வேறு டி அக்டிவேட் பண்ணி விட்டு சும்மா இருப்பதே சுகம் என இருந்து விட்டேன் ,எதேட்சையாக ஒரு நாள் மெயில் செக் பண்ணிய போது அசோகன் மாமாவிடம் இருந்து எனக்கு வாழ்கையில் முதல் தடவையாக ஒரு மெயில் வந்து இருந்தது,தான் இந்தியா வருவதாகவும் என்னை சந்திக்க விரும்புவதாகவும் கூறி இருந்தார்,அவர் எனக்கு அனுப்பியிருந்த இரண்டாவது மெயில் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்து இருந்தது,சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே தான் இந்த நாளில் இந்த நேரம் வருவேன் என்றும் என்னை இப்போது மீட் பண்ணக் கூடியதாக இருக்கும் என்றும் [உ+ம் :செவ்வாய் இரண்டு முப்பதுக்கு ]வந்த மெயில் எனக்கு நான் முன்பே கூறியதைப் போல பெரிய ஆச்சரியமாக இருந்தது.

ஏன் என்றால் வெளி நாடுகளில் இருந்து வருபவர்களை நான் இதற்கு முன்பும் விமான நிலையம் சென்று அழைத்து வந்துள் ளேன் ,ஆனால் அவர்களிடம் எந்த திட்டமிடலும் இருக்காது,

"தம்பி வாற மாதம் இரண்டாம் கிழமை மட்டில ஒருக்கா இந்தியா வாற பிளான் இருக்கு,sure இல்லை சில வேளை மலேசியா போனாலும் போடுவேன்,எதுக்கும் முதல் கிழமை மட்டில அடிச்சு சொல்லுறேன்,சரியே அப்பு"-இந்த ரேஞ்சில தான் இருக்கும்,ஒரு முறை ஒருவர் குறிப்பிட்ட நாள் இந்தியாவிற்கு வருவதாகவும் ,விமான நிலையம் வருமாறும் சொல்ல நானும் விசரன் பேயன் மாதிரி [மாதிரி என்று சொன்னால் நண்பர்கள் கோவிப்பார்கள்] போய் சுமார் மூன்று மணித்தியாலன்களுக்கு மேல் அங்கே தேவிடு காத்து விட்டு தீவிரவாதம் தலைக்கேறி வீட்ட வந்து ஸ்கைப்பில் கால் பண்ணினா அவர் சிம்பிளா சொன் னார் "தம்பி நான் றிப்பை கான்சல் பண்ணீட்டேன் பிஸில சொல்ல மறந்திட்டேன் நீங்கள் குறை விளங்கக் கூடாது என்ன "

எனக்கு சும்மா அடி நுனி தலைப்பு எல்லாம் பத்தி எரிஞ்சது

எனது அப்பாவிற்கு அசோகன் மாமாவிடம் பிடிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கலாம் ஆனால் எனக்கு அவரிடம் பிடித்த இரண்டு விடயங்கள்

1]அவருடைய நேரம் தவறாமை

2]அவருடைய புலமை

பெங்களூரில் உள்ள ஒரு புத்தக கடைக்கு சரியாக 3.15 க்கு வருவேன் எனக் கூறி விட்டு சரியாக மூன்று பதின் ஜந்துக்கு எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டு அவர் கால் பண்ணியதை எனது வாழ்கையில் கிடைத்த மிகப் பெரிய பாடமாகப் பார்க்கிறேன்,மணித்தியாலங்களில் திட்டம் இடுவதை விடுத்தது நிமிடங்களில்,நொடிகளில் அவர் திட்டம் இடுவதை நேரில் பார்த்த போது எனக்கு வாழ்வில் சில விடயங்கள் வெளித்தது

அவருடைய நேரம் தவறாமைக்கு அடுத்த படியாக என்னை மிகவும் கவர்ந்தது அவரின் புலமை,தகவல் தொழில் நுட்பத்துறையில் சயன்டிஸ்டா இருக்கும் ஒருவர் ,தமிழர் வரலாறில் இருந்து,மொழி வரலாறு,அமெரிக்க வரலாறு,ஈழதமிழ ர்களுக்கும் மலையாளிகளுக்கும் இடையான தொடர்பு என அவர் பேசப் பேச நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்,நான் எழுதிக் கொண்டு இருக்கும் "யூதர்களின் வரலாறு" புத்தகத்துக்கு அவரிடம் இருந்து நிறைய டிப்ஸையும் தகவல்களையும் பெற்றுக் கொண்டேன்,அவருடைய புலமை சத்தியமாக என்னை ஆச்சரியப்படுத்தியது ,ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டேன் ,சுய நம்பிக்கையும்,தெளிவான திட்டமிடலும் உடைய ஒருவரால் வாழ்வின் உச்சங்களை மிக இலகுவாக அடைய முடியும் அதற்கு எந்தக் காரணிகளும் தடையாக இருக்க முடியாது.

அசோகன் மாமாவை சந்தித்தையும்,அவரிடம் நான் பெற்றுக் கொண்ட விடயங்களையும் அம்மாவிடம் போனில் கதைக்கும் போது சொன்னேன்,அம்மாவிற்கு பெரிய சந்தோசம் அம்மாவிற்கு பொதுவாக அசோகன் மாமாவையும் அவரின் சகோதரிகளையும் மிகவும் பிடிக்கும்,நான் அசோகன் மாமாவை சந்தித்ததை கேள்விப்பட்ட அம்மா

"எண்ட குஞ்சு இல்லோ நீ,நீயும் அசோகன் மாதிரி வரவேணும்,நீ ஆரடா சிம்ம ராசிக்காரன்,நீ பிறக்கேக்க சாத்திரம் பார்த்தவர் நீதான் குடும்பதிலேயே டாப்பா வருவாய் எண்டு சொன்னவர் [அம்மா இதை ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித் தனியாக சொல் லுவா ] நீயும் இந்தியாவிலதான் படிக்கிறாய்,அசோகனும் இந்தியாவில படிச்சு தான் இண்டைக்கு பெரியாளா இருக்கிறான்,நீ அசோகன் மாதிரிப் பெரியாளா வாறதப் பார்த்துட்டு தான் நான் சாவேன்"

அம்மாக்கு இந்தப் பிறவில மரணம் இல்லை என்று நினைக்க எனக்கு பெரிய சந்தோசம் :lol:

,ஊருக்க ஒரு பழ மொழி சொல்லுவினம் கட்டெறும்பு ஒன்று கயிலாயம் பார்க்க கிளம்பினதாம்

ஆனால் ஒன்று எனக்கு திருமணம் நடந்து ,குழந்தை பிறக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவரையாவது அசோகன் மாமா போல ஆக்குவது என இருக்கிறேன்

வேறு என்னத்த சொல்ல................

http://aruliniyan.blogspot.com/

நான் ரசித்து படிச்சு சிரித்தது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விட்டு ரசிச்சுப் படித்தேன்..நீங்களும் முழுவதுமாகப் படியுங்கள் நிச்சயம் உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கும்...கன நாளாய் கதை எழுதுவதையே மறந்து போய் இருந்த எனக்கு அடுத்த கதையை எழுத வைத்துவிட்டது இந்தக்கதை...நன்றி அபராஜிதன் பகிர்விற்கு....

  • கருத்துக்கள உறவுகள்

அசோகன் மாமாவிடமும், வெள்ளைக் காரனிடமும் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்களில் ஒன்று, நேரம் தவறாமை!

எனக்கு இந்த விடயத்தில் முன்னுதாரணம், நல்லூர் முருகன் தான்!

நல்ல கதையொன்றை இணைத்தமைக்கு, நன்றிகள் அபராஜிதன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபரிதமான எழுத்து நடை

மிகவும் இரசித்துவாசித்தேன்

தொடருங்கள்

நன்றியுடன்

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு நோக்கியான்ர சீப் சயன்டிஸ்ரா இருக்கிறான் எண்டா அதில இருந்து என்ன தெரியுது சொல்லு பாப்போம்..

இனியனின் அசோகன் மாமா இவரா? :unsure:

http://asokan.org/asokan/

Asokan.jpg

நகைச்சுவையாக உண்மைகளை தொட்டிருந்தார் .அருளினியன் முகப்புத்தகத்திலும் அடிக்கடி மிக நகைச்சுவையாக பதிவுகள் இடுவார் .அதிலொன்று தான் தோடு குத்திய பின் தாயுடன் ஸ்கைப் இல் கதைக்க தாயார் கேட்டாவாம் "ஏன் ராசா,என்ன நிறைவேறவேண்டும் என்று நேர்த்தி வைத்து தோட்டை குத்தினி ,இப்படியெல்லாம் நேர்த்தி வைத்து படிக்கின்றாயோ ராசா " என்றாராம் .தான் அன்றே தோட்டை கழட்டிவிட்டதாக எழுதியிருந்தார் .

இணைப்பிற்கு நன்றிகள் அபராஜிதன் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்திற்கு எழும்பி குறித்த நேரத்திற்கு ஒவ்வொரு நாளும் படுத்து இது என்ன வாழ்க்கை :D அட்டவணை போட்டு வாழும் வாழ்க்கை :rolleyes: ...வாழப் போறது கொஞ்ச நாள் அந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்திற்கு எழும்பி குறித்த நேரத்திற்கு ஒவ்வொரு நாளும் படுத்து இது என்ன வாழ்க்கை :D அட்டவணை போட்டு வாழும் வாழ்க்கை :rolleyes: ... :lol:

அது "சயன்டிஸ்ட்" வாழ்க்கை....இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபராஜிதன் பகிர்விற்கு....

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்

ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்திற்கு எழும்பி குறித்த நேரத்திற்கு ஒவ்வொரு நாளும் படுத்து இது என்ன வாழ்க்கை :D அட்டவணை போட்டு வாழும் வாழ்க்கை :rolleyes: ...வாழப் போறது கொஞ்ச நாள் அந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் :lol:

அதானே... !!

  • கருத்துக்கள உறவுகள்

அசோகன் எனும் பெயரில் பின்லாந்து நாட்டின் தலைந்கர் ஹெல்சிங்கியின் புறநகர்ப்பகுதியில் வாழ்கின்றார். நொகியா தொலைத்தொடர்புகள் சம்பந்தமாக விடையத்தில் பாதுகாப்புப்பிரிவில் (காவலாளியல்ல system security) வேலைசெய்கிறார். மேலதிக விபரங்கள் இணைக்க விரும்பவில்லை. அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

நான் கூறுவது தப்பாக தோன்றலாம். இவரின் கதையின் மையக்கருத்து

1 . அதிகம் மினக்கெடாமல் புத்திசாலி ஆகிவிட்டேன்.

2 . நான் இவரின் உறவினர்-அசோகன் மன்னிக்கவும்....மலையாளி தொடர்பு- மோசேஸ் போல

3 . புலம் பெயர்ந்தவர் மூடிக்கொண்டிருக்கவேண்டும். எல்லாம் முடிந்தது.கல்வி ஈழம் தரும்.

4 . அப்துல் கலாம் அரசியல் செய்யவில்லை, எம்மை உயர்விக்கவந்த உத்தமர்.

  • தொடங்கியவர்

இனியனின் அசோகன் மாமா இவரா? :unsure:

http://asokan.org/asokan/

Asokan.jpg

எனக்கு சரியாக தெரியாது கிருபண்ணா

கருத்துகள் இட்ட அனைவருக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.