Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்ந்த மனிதநேய சேவைகளான மருத்துவம், தாதி சேவைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், தாதியருக்கு சேவை மனப்பான்மை இல்லை என்றால்... இது எவருடைய தவறு?

Featured Replies

அனைவரிற்கும் அன்பு வணக்கம்,

 

கடந்தமாதம் எனது அப்பா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், பின்னர் அவரது மரணம் ஏற்பட்டபோதும், அவர் உடல்நலம் தேறி சுகமாக வீடு திரும்புவதற்கு பிரார்த்தனை செய்தும், பின்னர் அவர் இரண்டு கிழமைகளில் இறந்தபோது அனுதாபங்களையும், ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் உதவிபுரிந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

 

பிறப்பும், இறப்பும் நாம் மாற்றமுடியாத இயற்கையின் நியதி. அதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், வேறு வழியில்லை. ஆயினும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அசுரவேகத்தில் முன்னேறியுள்ள இந்தக்காலத்தில் ஒருவரின் வயதை காரணம் காட்டி அவரை சரியாக கவனிக்காமல் வைத்தியசாலையில் உதாசீனம் செய்வது என்பது (Age discrimination) ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய விடயம் இல்லை.

 

கடந்தவாரம் கனடா கீதவாணி, மற்றும் இளையபாரதியின் கனேடிய தமிழ் வானொலி ஆகியவை சேர்ந்து நடாத்திய ஓர் நிகழ்ச்சி தொடர்பான கலந்துரையாடலும், அங்கு கூறப்பட்ட கருத்து தொடர்ப்பாக எனது சகோதரி வினாவிய வினாக்களையும் சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்.

 

எனது உறவினர் ஒருவர் கனேடிய தமிழ் வானொலியில் ஓர் நேரடி நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், அங்கு வைத்தியசாலைகளில் செய்யப்படும் குளறுபடிகளை நாம் முறைப்பாடு செய்து எமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளமுடியும் என்றும் எனக்கு தொலைபேசியில் கூறினார். எனது அப்பா வைத்தியசாலையில் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டார் என்பதை குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து விபரிக்குமாறு என்னிடம் கேட்டார்.

 

ஸ்காபரோ வைத்தியசாலையில் சில பிரிவுகளை/சேவைகளை மூடுவதை ஆட்சேபணை செய்தும், வைத்தியசாலை நிர்வாகத்தின் பொதுமக்களுடனான கருத்தரங்கு ஒன்றில் நம்மவர்களை கலந்துகொள்ளச்செய்வதை ஊக்கப்படுத்தும்வகையிலுமே; பிரதானமாக இவ்விரு விடயங்களை மையப்படுத்தியே உண்மையில் குறித்த வானொலி நிகழ்ச்சி வைக்கப்பட்டது. எனினும், எனது உறவினர் முழுமையான விபரம் தெரியாமல் கூறியதைக்கேட்டு நானும் எனது கருத்தை வானொலியில் தெரிவிக்கலாம் என்று அவர்களின் தொலைபேசியை அழைத்தேன் (நிகழ்ச்சி பற்றி முழுமையாக அறியாமல் நிகழ்ச்சியில் அவசரப்பட்டு கலந்துகொண்டதால் என்னிலும் தவறு உள்ளது).

 

மிக நீண்டநேர காத்திருப்பின் பின்னர் நிகழ்ச்சியில் எனது கருத்தை கூறுவதற்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. நான் எனது அப்பாவின் மரணத்தின் மூலம் கற்றுக்கொண்ட விடயங்கள் சிலவற்றை; அவை மற்றவர்களுக்கும் தெரிந்தால் அவர்களிற்கு உதவியாக இருக்கும் என்பதால், சுருக்கமாக விபரிக்கத்தொடங்கினேன்.

 

நிகழ்ச்சியை நடாத்தியவர்கள் தவறு எம்முடையது எனவும், எமது வீட்டிற்கு அருகில் உள்ள வைத்தியசாலையை முன்னேற்றவேண்டியது எமது கடமை எனவும், இதற்காக பல்வேறு வழிவகைகளில் நாம் உதவவேண்டும் எனவும்... இவ்வாறான தொனியில் தமது கருத்தை கூறி எனது அழைப்பை துண்டித்துவிட்டார்கள்.

 

வானொலி நிகழ்ச்சியை நடாத்திய (இளையபாரதி + சிவமணி?) ஆகியோர் கீழ்வரும் விடயங்களை எனக்கு கூறினார்கள்:

 

1. நாம் வைத்தியசாலையை முன்னேற்றுவதற்கு தொண்டு செய்யவேண்டும்.
2. நாம் வைத்தியசாலையின் சேவைகளை முன்னேற்றுவதற்கு பல்வேறு அரசியல் மட்டத்தில் உள்ள உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.
3. நாம் வைத்தியசாலையை முன்னேற்றுவதற்கு நன்கொடை சேர்க்கவேண்டும்.

4. இன்னும் பல...

 

அன்று மாலை எனது சகோதரிக்கு இப்படி ஓர் சம்பவம் நடைபெற்றது எனவும், எனக்கு ஏன் அந்த வானொலிக்கு சென்று நிகழ்ச்சியில் உரையாடினேன் என்று நினைக்கும்போது விசராய் இருப்பதாகவும் கூறினேன். அவர் அதற்கு அவற்றை பற்றி ஒன்றும் யோசியாதே என்று கூறிவிட்டு, உனக்கு அறிவுரை பகர்ந்த வானொலி கலைஞர்களிடம் இவற்றையும் கேட்டிருக்கலாமே என்று கீழ்வரும் வினாக்களை தொடுத்தார்.

 

  • ஒரு உயிரிற்கான இறுதி மரியாதையை எப்படி கொடுப்பது என்பதை வைத்தியசாலையில் வேலை செய்யும் வைத்தியர்கள், தாதிமாருக்கு நாம் கற்பிக்கமுடியுமா?
  • வைத்தியர்கள், தாதிமாருக்கு தேவையான மனப்பக்குவத்தை நாம் புகட்டமுடியுமா?
  • வைத்தியர்கள், தாதியருக்கு இருக்கவேண்டிய, மருத்துவசேவை செய்வதற்கு தேவையான அறிவுமுதிர்ச்சியை நாம் வழங்கமுடியுமா?
  • மருத்துவ, தாதி சேவைகள் வெறும் லைசென்ஸ் எடுத்து செய்யும் வேலைகள் இல்லை. அவை உணர்வுபூர்வமான உயர்ந்த சேவை என்பதை மருத்துவர்கள், தாதியருக்கு நாம் சொல்லிக்கொடுக்கமுடியுமா?
  • உயிர் பிரியும் நேரத்தில் இறுதி கவனிப்பை எப்படி செய்வது என்பதை வைத்தியர், தாதிமாருக்கு சொல்லிக்கொடுக்கமுடியுமா?
  • உடல் பாகங்களிற்கு இறுதிநேரம் செய்யும் சின்ன சின்ன சேவை, உணர்வுபூர்வமான புரிந்துணர்வு, குடும்ப உறுப்பினர்களோடு கதைக்கும் பாங்கு, உடலையும் மீறி ஒரு மனித உயிருக்கு செலுத்தும் இறுதி மரியாதை இவை பற்றி நாம் மருத்துவர்கள், தாதியருக்கு பாடம் வைக்கமுடியுமா?
  • வாழ்வின் இறுதி நேரத்தை காண இருக்கும் ஒருவனுக்கும், அவனது குடும்பத்துக்கும் கொடுக்கக்கூடிய ஒரு துளி ஆறுதல் வார்த்தையும், கவனிப்பும் எப்படி செய்வது என்பதை வைத்தியசாலையில் வேலை செய்யும் மருத்துவர்கள், தாதியருக்கு நாம் சொல்லிக்கொடுக்கமுடியுமா?

 

அதாவது...

 

எனது சகோதரி கூறியவிடயம் என்ன என்றால் எமது வீட்டிற்கு அருகில் உள்ள வைத்தியசாலை முன்னேறுவதற்கு நாம் பல வழிகளில் தொண்டாற்றமுடியும். ஆனால், மருத்துவசேவை, தாதிசேவை என்பவை... இவற்றை செய்யும் மருத்துவர்கள், தாதியர்... அவர்களது மனிதாபிமானம் அற்ற கேவலமான குறுகிய மனப்பான்மைகளை நாம் பொதுமக்கள் எவ்வாறு மாற்றமுடியும் என்பதே. மருத்துவர்கள், தாதியருக்கு பல வருடங்கள் கல்விநிறுவனங்களில் முறையாக கல்விபுகட்டப்பட்டு, தொழில் பயிற்சியின் பின்னர் சேவையில் அமர்த்தப்படுகின்றார்கள். வைத்தியசாலையில் செயற்படும் இவர்களது உளப்பாங்கினை நாம் எவ்வாறு மாற்றியமைக்கலாம்?

 

இங்கு, இக்கருத்தாடலின் நோக்கம், நான் வினவுகின்ற விடயமும் இதுதான்:

 

உயர்ந்த மனிதநேய சேவைகளான மருத்துவம், தாதி சேவைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், தாதியருக்கு சேவை மனப்பான்மை இல்லை என்றால்... இது எவருடைய தவறு?

 

நோயாளர்களின் தவறா?
பொதுமக்களின் தவறா?
சமூகத்தின் தவறா?
அரசாங்கத்தின் தவறா?

மருத்துவர்கள், தாதியரின் தவறா?

அல்லது

குறிப்பிட்ட மருத்துவர்கள், தாதியருக்கு கற்பித்த கல்வி நிறுவனங்களினதும், ஆசான்களினதும் தவறா?

 

உயர்ந்த மனிதநேய சேவைகளான மருத்துவம், தாதி சேவைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், தாதியருக்கு சேவை மனப்பான்மை இல்லை என்றால்... இது எவருடைய தவறு?

Edited by கரும்பு

உங்கள் மனவேதனையை உணர முடிகின்றது. நன்றி பகிர்வுக்கு.

 

நீங்கள் ஒன்றை உணர வேண்டும், வேலை செய்ய வரும்போது எல்லோரும் முதலில் அர்ப்பணிப்புடன்தான் வேலை செய்கின்றார்கள், காலம் செல்ல செல்ல அவர்களுக்கு அந்த வேலையில் பழக்கம் ஏற்ப்பட்டபின், ஏனோதனோ என்றுதான் சிலர் மாறிவிடுக்கின்றனர், இந்த சிலரால் அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர்களுக்கும் கெட்டபெயரே.

 

சிலர் வீட்டில் உள்ள பிரச்சனைகளையும் வேலைதளத்திற்கு காவி செல்வதால், அவர்களினால் ஒழுங்காக வேலை செய்ய முடிவதில்லை, வீட்டுப்பிரச்சனையை வேலைக்கு போகும்போது வாசலிலேயே மறந்துவிடனும், வேலையில் உள்ள பிரச்சனைகளை அங்கேயே விட்டுவிட்டு வரணும், இரண்டையும் ஒன்றாக போட்டு பலர் குழப்புகின்றார்கள்.

 

இந்த சில தாதிமார்களால் எல்லா நாட்டிலும் பிரச்சனைதான், முடிவு அவர்கள் கையில்.

 

எல்லோரும் பணத்துக்காகதான் வேலை செய்கின்றோம், கொடுக்கும் பணத்திற்கு ஒழுங்காக வேலை செய்தால் எந்த பிரச்சனையுமில்லை.

 

இதுவரை ஏந்த மனேஜரும் என்னிடம் கேள்வி கேட்டதில்லை ஏன் முடிக்கவில்லை என்று, யாழிற்கு வருவதும் வேலையில்லாத நேரங்களில் மட்டுமே. வேலையென்றால் வேலை, வீடு என்றால் வீடு, இதுதான் என் வாழ்க்கை.

 

மனைவி பிள்ளைகளுக்கு வேலையில் உள்ள பிரச்சனைகளை சொல்லி ஒருபோதும் குழப்புவதில்லை மகிழ்ச்சியான விடயங்களை தவிர ...சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு, வேலை மாற்றங்கள்.......

  • தொடங்கியவர்

வந்தியத்தேவன், நீங்கள் மருத்துவம், தாதிச்சேவை சம்மந்தப்பட்ட ஏதாவது துறையிலா பணியாற்றுகின்றீர்கள்?

 

இன்று எனது அக்காவுடன் கதைத்தபோது இவ்வாறு யாழில் நான் எழுதியுள்ளதை கூறினேன். அவர் மீண்டும் கூறியவிடயம் மருத்துவர்கள், தாதியர் ஆகியோரின் நடத்தையை நாம் எவ்வாறு மாற்றமுடியும் என்பதே. நன்கொடை சேர்க்கலாம், தொண்டு செய்யலாம், ஆனால், வைத்தியசாலையில் பிரதான பாத்திரங்களாக விளங்கும் மருத்துவர்கள், தாதியர் ஆகியோரிற்கு உண்மையான சேவை மனப்பான்மை இல்லை என்றால், மனப்பக்குவம், மனிதநேயம் இவர்களிடம் இல்லை என்றால்... நோயாளிகளை இவர்களை நம்பி எப்படி நாம் வைத்தியசாலையில் ஒப்படைக்கமுடியும் என்பது பெரியதொரு கேள்விக்குறி.

 

[ பொதுவாக, மற்றும் எமது தந்தை அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையில் Visiting Hours காலை 11.00 தொடக்கம் இரவு 8.30 வரையாகும் என அறிவித்தல் உள்ளது. அதாவது இரவு 8.30 தொடக்கம் காலை 11.00 மணிவரை உறவினர்கள் உடன் இல்லாத சந்தர்ப்பங்களில் நோயாளிகளை இவர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை.

 

நாம் ஒரு வைத்தியசாலையில் நோயாளியை ஒப்படைக்கும்போது முழு நம்பிக்கையுடன் அங்குள்ள மருத்துவர்கள், தாதியர், ஏனைய பணியாளர்களை நம்பி ஒப்படைக்கின்றோம். ஆனால், அந்த நம்பிக்கை வீணானது என்று எமக்கு முன்பே தெரியுமாக இருந்தால் நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கலாம்.

 

எனது தந்தையின் மரணம் சம்மந்தப்பட்ட விடயங்களை நான் விரிவாக வெளியில் பகிர விரும்பவில்லை. இனி என்ன தலைகீழாக நின்றாலும் அவர் திரும்பி வரப்போவது இல்லை. ஆனால், நான் எடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இப்படியான உதாசீனங்கள் குறிப்பிட்ட வைத்தியசாலையில் இடம்பெறாமல் இருப்பதற்கு நான் செய்யக்கூடிய, என்னால் முடியுமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளாகவே அமையும். ]

 

ஒருவனுக்கு மனிதநேயம், மனப்பக்குவம், சேவை மனப்பான்மை அவன் உள்ளிருந்து வரவேண்டும். அவ்வாறு அல்லாமல், ஏதோ வகையில் குறிப்பிட்ட அம்சங்கள் இல்லாத ஒருவன் மருத்துவனாக, தாதியாக வந்துவிட்டால் அதனால் அவதிப்படுவது ஒட்டுமொத்த சமூகமுமே.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்
நான் நண்பர்கள் , உறவினர்களிடம் இருந்து கேள்விப்பட்டவைகளை சொல்கிறேன்.
 
இப்படியான முறைப்பாடுகளை இளையபாரதியிடம் முறையிட்டு எந்த வித பிரயோசனமும் இல்லை.மாறாக வைத்தியசாலை நிர்வாகத்துக்கு நேரில் சென்றோ அல்லது கடிதம் மூலமோ மின்னஞ்சல் மூலமோ உங்களின் முறைப்பாட்டை கொடுத்திருக்கலாம். மேலும் பலரின் முறைபாடுகள் இப்படி கிடைக்கும் போது வைத்தியசாலை நிர்வாகம்  ஏதாவது நிச்சயம் செய்வார்கள்.
 
யாரில் பிழை என்று சுட்டு விரலை காட்டுவது கடினம்.
 
உ+கள் ! சிறுமி ஒருவருக்கு உடலெங்கும் சுடுநீர் ஊற்றப்பட்டு விட்டது.அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காக்க்க வைக்கப்படுகிறார். எரி காயங்களுக்கு எந்த வித மருந்தும் போடப்படாமல் குழந்தை விடப்படுகிறது.குழந்தை வேதனையில் அழுது களைத்து தூங்கி விட்டது. 12 மணித்தியாலங்களின் பின்னர் வைத்தியர் வந்து பார்த்து விட்டு பிரத்தியேக துணி போன்ற ஒன்றை (பெயர் ஞாபகத்துக்கு வ்ரவில்லை) பெற்றுக்கொள்ள 4 மணித்தியாலங்கள் எடுக்கப்பட்டு மொத்தம் 16 மணித்தியாலங்கள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது.
 
உ+ம்2: ஒருவரின் தந்தை (85 வயது) சுவாசிப்பதில் பிரச்சனை உள்ளது என கூறி அனுமதிக்கப்பட்டு (இன்னும் பல உபாதைகளும்  அவருக்கு உண்டு) இருந்தார். உறவினர்கள் அனுமதிக்கும் நேரம் முற்றாக யாரோ ஒருவர் முறை எடுத்து அவருடன் நின்று தேவையான உதவிகளை பெர்றுக்கொடுத்ததோடு பேச்சுத்துணையாகவும் இருந்தார்கள். ஒரு நாள் இரவு மூக்கில் செருகப்பட்ட குளாயினூடாக சுவாசப்பையில் நீர் புகுந்து விட்டது. இது தாதியின் கவனக்குறைவால் வந்தது.விடிய வரும் உறவினர் கவனிக்கும் வரை (ஏதோ நடந்து விட்டதாக டாக்டருக்கு அறிவித்து டாக்டர் தான் கண்டு பிடித்தது) தாதிக்கு எதுவும் தெரியவில்லை அல்லது தனக்கு தெரியாதது போல மறைத்து விட்டார்.
 
உ=ம் 3: ஒரு பெண்ணுக்கு பிள்ளைகள் குறை மாதத்தில் பலத்தை சிக்கல்கள் மத்தியில் தான் பிறக்கும். 4 ஆவது பிள்ளையும் அப்படித்தான் பிறந்தது.எல்லோரும் நித்திரையில் இருக்கும் போது குழந்தையை பார்வையிடும் குழந்தை ஒரு அசைவும் இல்லாததை அவதானித்து டாக்டரை உடனடியாக அழைத்தார்.குழந்தையின் உடல் நிலை மிக மோசமாக இருந்தது. வைத்தியர்கள் தங்களால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாது என கூறி ஹெலிகொப்டர் மூலம் கிங்ஸ்டனின் உள்ள வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு  செல்லப்பட்டு அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.அக்குழந்தை இப்போ பாடசாலை செல்ல தொடங்கியுள்ளது.தாயார் இப்படி கூறுகிறார் "கனடா தான் எனது பிள்ளைகளுக்கு உயிர் தந்தவர்கள்".
 
ஆகவே நல்லவை கெட்டவைகள் நடந்த வண்ணம் உள்ளன. உரியவர்களிடம் முறைப்பாடு செய்வது தான் உங்கள் கடமை.
  • கருத்துக்கள உறவுகள்

நான் அவதானித்த வரை மருத்துவம் கற்ற எல்லோரும் மருத்துவர்களும் அல்ல.. தாதிக் கல்வி கற்ற எல்லோரும் தாதிகளும் அல்ல. பெறப்படும் கல்விக்கு அப்பால்.. அவ்வவ்துறையில் செயலாற்றும் அர்ப்பணிப்பு உள்ளவர்கள் மட்டுமே.. மனிதாபிமானத்தையும் முன்னிறுத்தி சேவை வழங்க முடியும்..!

 

இன்று பலர் சம்பளத்துக்கு சேவை என்று.. பணியாற்றுகின்றனர். முன்னர் பலர் சேவைக்குப் பின் தான் சம்பளம் என்றிருந்தனர்..! இன்று இதனை உலகில் எல்லா இடமும் அவதானிக்க முடிகிறது. அர்ப்பணிப்போடு செயலாற்றுபவர்கள் குறைவு என்றாலும் இருக்கத்தான் செய்கின்றனர்..!

 

தவறு.. மனிதர்களை சுத்தச் சுயலவாதியாக்கும் சமூகக் கட்டமைப்பில் தங்கியுள்ளது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இல்லை கரும்பு,  நான் வேறு துறை. என் ஒன்றுவிட்ட சகோதரங்கள் & நண்பர்கள் பலர் மருத்துவ துறையில் கடமையாற்றுகின்றனர்.

  • தொடங்கியவர்

தகவலிற்கு நன்றி வந்தியத்தேவன், உங்கள் கருத்தை வாசித்தபோது நீங்களும் குறிப்பிட்டதுறையில் பணியாற்றுகின்றீர்களோ எனநான் நினைத்தேன்.

 

நுணாவிலான், நான் இளையபாரதியின் வானொலியில் பேசியது எனது அப்பாவின் மரணம் மூலம் கற்றுக்கொண்ட சில விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால் அவர்களிற்கு அது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும் என்பதற்காகவேயொழிய முறைப்பாடு செய்வதற்காக அல்ல. மெல்லிதாக ஓர் முறைப்பாட்டை வைத்தியசாலை வட்டாரத்திடம் வைத்துள்ளேன். வைத்தியசாலையில் பல்வேறு மட்டங்களில் முறைப்பாடுகளை செய்வதற்கு ஆகவேண்டியதை செய்துகொண்டிருக்கின்றேன். இங்கு எனது முறைப்பாட்டின் நோக்கம் எதிர்காலத்தில் வயதை காரணம் காட்டி நோயாளிகளை உதாசீனம் செய்வதை தடுப்பதும், இதற்கு என்னால் முடியுமான முயற்சியும் ஆகும்.

 

நெடுக்காலபோவான், ஒட்டுமொத்த சமூகம் இதில் சம்மந்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும், தனித்தனி மருத்துவர்கள், தனித்தனி தாதிகள் என்று பார்க்கும்போது நிச்சயம் அவர்களிற்கு Accountability உள்ளது. அவர்கள் ஏதோ இலவசமாக இங்கு பணியாற்றவில்லை, அத்துடன் தமது பொக்கற்றுக்கூடாக பணத்தை எடுத்து நோயாளிகளிற்கு செலவளிக்கவும் இல்லை. கனடா ஒன்றாரியோவில் மருத்துவதுறை, தாதி சேவை மிகுந்த போட்டியானது. வேலை எடுப்பது, உள்ளக பயிற்சிக்கு அனுமதி கிடைப்பது மிகவும் மிகவும் கடினமானது. எத்தனையோ ஆயிரம், ஆயிரம்பேர் தமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்நிலையில் வாங்கும் சம்பளத்திற்காயினும் ஒழுங்காக, நேர்மையாக, மனிதநேயத்துடன் வேலை செய்யத்தெரியாது என்றால் இவர்களை என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
எல்லோரும் வேலை எடுக்கும் மட்டும் அல்லது வேலையில் சேர்ந்து கொஞ்ச நாள் வரைக்கும் மிகவும் அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் செயற்படுகிறார்கள்...வேலை தொடங்கி கொஞ்ச நாள் போக பலர் மற்றவர்களை பார்த்து ஏனோ,தானோ என்று நடக்கத் தொடங்கிறார்கள்... ஒரே நோயாளிகளை தொட‌ர்ந்து பார்த்துக் கொண்டு இருப்பதால் அவர்களுக்கு விர‌த்தி ஏற்பட‌லாம்...வயோதிபர்கள் நோயால் கிட‌ந்து உத்தரிப்பதை விட‌ இறந்தால் நிம்மதியாக இருப்பார்கள் என நினைப்பார்களோ என்னவோ :unsure: ...எது எப்படி இருந்தாலும்  தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர்கள் ஒரு சிலரே
  • தொடங்கியவர்

ரதி, எனது தந்தை நான் அறிந்தவரை இதுவரை அண்மையில் வைத்தியசாலையில் பதின்நான்கு நாட்கள் அனுமதிக்கப்பட்டது தவிர முன்பு ஒரு தடவையும் வைத்தியசாலையில் ஒரு இரவாயினும் கழித்து தங்கியது கிடையாது.

 

நாம் உடற்பயிற்சி செய்கின்றோம், கடுமையான கட்டுப்பாடான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கின்றோம். மதுபானம், புகைத்தல் பழக்கங்களிலிருந்து விலகி நிற்கின்றோம். எதற்காக? பல்வேறு வகைகளில் முயற்சி செய்து நீண்டகாலம் சுகதேகியாக வாழ்வதற்கு விரும்புகின்றோம். இப்படியான நிலையில் நீ இத்தனை வயதுவரை வாழ்ந்தால் போதும் என்று கணக்கு சொல்வதற்கு எந்த மருத்துவருக்கோ அல்லது தாதியிற்கோ உரிமை உள்ளதா? ஒருவர் தொன்னூறு வயதுவரை வாழ்ந்தால் போதும் அல்லது நூறு வயது வரை வாழ்ந்தால் போதும் என்று எதாவது சட்டவிதிமுறைகள் உள்ளனவா?

 

பல்வேறு வகையிலான நோயாளிகள், இரத்தம், காயங்கள்.. இவற்றுடன் நாளாந்தம் வாழ்வதற்கே மருத்துவர்கள், தாதியருக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படுகின்றது, சிறந்த கொடுப்பனவு, வசதிகளும் கொடுக்கப்படுகின்றது. அப்படியான நிலையில் இவர்கள் தமது சொகுசை பார்த்து தமது கடமையிலிருந்து தவறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?

 

வாழ்க்கை அனைவருக்குமே ஓர் போராட்டம், ஒவ்வொருவரும் மிகுந்த பிரயத்தனம் செய்தே தமது வாழ்நாளை கொண்டு செல்கின்றார்கள். எனது அப்பாவிற்கு செய்தமாதிரியே இவர்கள் தமது பெற்றோருக்கும் (அவர்களில் உண்மையான அன்பு, அக்கறை இருந்தால்) மோசமான கவனிப்பை செய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலத்திலயாவது தமிழ் மக்கள் இவ்வாறன இடங்களுக்கு போவதை தவிர்த்துக்கொண்டால் நன்று....ஒரு சேவையை பெற்றுக்கொள்ளவேணும் என்றால் பணத்தை அள்ளி கொடுத்து தான் பெற்றுக்கொள்ள வேணும் என்ற அவசியம் இல்லை..நம்மவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தங்களால் முடிந்தளவு பணத்தை திரட்டிக்கொடுக்கிறார்கள்..நெடுக உதவிக்கொண்டு இருக்கவேணும் என்று இல்லை....உண்மையாக சேவை மனப்பாண்மை என்பது ஒளிந்து கொண்டு போகிறது..இருந்தால் என்ன இறந்தால் என்ன என்ற போக்கைத் தான் கடைப்பிடிக்கிறார்கள்.....

 

கடந்த மாதம் எனது தாயாருக்கு சாப்பிட்டுகொண்டு இருக்கும் போது அவாவின்ட தற்காலிகமாக பொருத்தபட்டு இருக்கும் பல் களன்று விட்டதினால், அதில் பொருத்தபட்டுள்ள கம்பி உள் நாசி மற்றும் வாய்ப் பகுதியை குத்தி கிளித்து இரத்தம் கொன்றோல் இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது...கொஸ்பிற்றலுக்கு கூட்டிப் போங்கள் என்று அம்மாவே கேட்டதனால் இந்த வைத்தியசாலைக்கு கூட்டிச்சென்றேன்..

 

நான்கு மணித்தியால காத்திருப்பின் பின் ஒரு வைத்தியர் வந்து பார்த்துட்டு உம்மை யாரு இதுக்கு எல்லாம் இங்கை கூட்டி வர சொன்னது .....அஸ்பிறின் குளிசையைக் கொடுத்து நித்திரைக்கு விடும் என்று விட்டு தன்ட பாட்டுக்கு போய்ட்டார்...இப்படி எத்தனையோ விடையங்களை எழுதிக்கொண்டு போகலாம்...

 

நேற்றுக் கூட எனது தந்தையாரிடம் படித்த பிள்ளையின் தந்தை இந்த மருத்துமனையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு இறந்துட்டார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் சொல்லப்படும் எல்லா விடயங்களும் சரி பிழை எப்பதர்ற்கு மேல்- நானும் இந்த துறையில் இருப்பதால- எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.


 

வைத்திய சாலையில் அல்லது வைத்தியரிடம்/தாதியிடம் எதை எதிர்பார்கிறீர்கள் என்று ஒரு தெளிவு இருந்தால் சில விடயங்கள் தவறு எனபடலாம்.


 

முதலில் இந்த விடயத்தை சொல்லும்போது, எனக்கு தெரிந்த கருத்துக்களை வைப்பது. அவரது(karumpinathu) இழப்பையோ அல்லது மற்றைய உறவுகளுக்கு ஏற்பட்ட இழப்புகளையோ குறைத்து மதிப்பிடும் நோக்கமோ அல்லது சாதாரணமானது என்று சொல்லுவதற்கான ஒரு முயற்சி என்று கருத வேண்டாம்.


 

முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்; எனக்கு தெரிந்த மட்டில், அமெரிக்காவில், பெரும்பாலான அல்லது கணிசமான மருத்துவ தீர்மானங்கள் "வைத்தியர்/ தாதி" என்கிற வட்டத்திர்ற்கு அப்பாற்பட்டது. நேரே சொல்லுவது என்றால் நீங்கள் வைத்திருக்கும் இன்சூரன்ஸ் இல் தங்கி உள்ளது. இங்கே ஒரு வைத்திய சாலையில் எழுதி இருக்கிறது, "உங்களுக்குரிய ஆரம்ப சிகிச்சையும், நோயை இஸ்திரப்படுத்துவதும், இன்னொமொரு வைத்தியசாலைக்கு அனுப்புவதும்  உங்கள் இன்சூரன்சில் தன்கியதல்ல". அதன் சொல்லாத கருத்து, அதற்க்கு பிந்தை நிகழ்வுகள் இன்சூரன்சில் தங்கி இருக்கும். இது என்ன கொடுமை என்று யாரும் நினைக்கலாம்; மருத்துவம் 10 வருடத்திர்ற்கு முந்தியது போல் இல்லை இன்று, அது 100 வருடதிற்ற்கு முந்தை பல தனித்துவங்களை இழந்து விட்டது.


 

இங்கே ஒரு ஒரு கள்ளனை பிடிக்க 100 போலிஸ் அனுப்புவார்கள், ஆனால் வீட்டில் ஊதாரி செலவு செய்யும் பெண்ணையோ ஆணையோ கவனத்தில் கொள்ளுவதில்லை. உதாரனதிர்ற்கு, நெஞ்சில்/நுரையீரல்இல் இரத்த கட்டி வரும், "புல்மொனரி எம்போளிசத்தை" கண்டு பிடிப்பதற்காய் வருடம் வருடம் எந்தனையோ CT ஸ்கேன் செய்வார்கள், ஆனால் மருந்து வாங்க வசதியில்லாம்வரும் சில வருத்தகாரரை இன்னும் இரண்டு நாள் வைத்திருந்து மருத்து - ஆஸ்பத்திரியில் கொடுக்க மாட்டார்கள்.


 

இப்படியான பெரிய பெரிய "போலீசி" தயாரிப்பவர்கள் வைத்தியர்கள் அல்லர். அவர்களுக்கு அந்தளவு பவர் இல்லை. அதை தயாரிபவர்கள் பெரிய பெரிய வியாபார புள்ளிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள்


 

மிகுதி பிறகு எழுதுகிறேன்..


 

ஒன்று மட்டும் நினையுங்கள்; வைத்தியரும், தாதியும் உங்கள் வீட்டிலும் இருக்கிறார்கள் என்று..

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான் பார்த்தேன்  கரும்பு

 

எல்லாமே வியாபாரமாகி

சில நேர வேலை பல ஆயிரம் சம்பள  எதிர்பார்ப்பு  அல்லது

சும்மா இருந்து காசு பார்க்க நினைக்கும் கூட்டம் அதிகரித்திருக்கும் இவ்வேளையில்

 

அன்பையும் சேவையையும் தேடுவது அல்லது பெறுவது எப்படி??? :(

பொதுவாக இப்படியான வேலை செய்பவர்களுக்கு சேவை மனப்பாங்கு பற்றி தாராளமாக பயிற்சி கொடுக்கப்படும் என்று நினைக்கின்றேன் .டாக்டர் ,நேர்ஸ் ,ஆசிரியர்கள் ,பொலிஸ் போன்றவர்கள் பெரும்பாலும் நல்லவராக எனக்கு படுகின்றார்கள் விதிவிலக்குகளும் உண்டு .

எனது அம்மாவை வைத்தியசாலையில் வைத்திருந்த போது அவதானித்தேன் இனிமேல் இருந்து நல்லவர்களில் இருந்து மிக கறாரான தாதிகள் வரை வந்து போனார்கள்.

நோயாளிகளை பொருத்தவரை வயோதிபர்களுக்கு அவர்கள் கொடுக்கும் முன்னுரிமை கொஞ்சம் குறைவுதான் .எங்களுக்குத்தான் அவர் அம்மா அவர்களுக்கு அவர் ஒரு நோயாளி .இது தவிர்க்க முடியாத உண்மை .எனது அம்மாவை போல ஆயிரம் நோயாளிகளை அவர்கள் தினமும் சந்திக்கின்றார்கள் எனவே தமது கடமையை செய்தால் காணும் என்று பலர் போய்விடுவார்கள் .

இளையபாரதியின் வானொலியில் அந்த அன்று நடந்த உரையாடல் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன் உங்களது உரையாடலை தவறவிட்டுவிட்டேன் போலுள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதியவர் அல்லது நாட்பட்ட (chronic diseases ) வருத்தங்கள் என்று கருதினால்; அதிக மருத்துவ சாலைகள், தங்களது சொலவீனங்கள் என்கிற பகுதியில் கண்ணுக்கு தெரியாத பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள்.


 

முக்கிய பிரச்சனை எங்கே வருவது என்றால்; பல நோயாளிகள், உரித்துடையவர்கள் கருதுவது, நவீன மருத்துவம் என்பது ஆணை பெண்ணாக்கும் பெண்ணை ஆணாக்கும் சத்தி படைத்தது என்றாகும்.


 

அதிகளவிலான TV shows, காட்டும் மருத்துவ வசதிகள், 100 இல் 90 பேருக்கு கிடைப்பதில்லை. எங்களுக்குரிய புதுமுக/அறிமுக வகுப்பில் சொன்னார்கள் உண்மை மருத்துவமும் ER உம் / Grace anatomy யும் நினைக்கவே முடியாது தூரத்தில் உள்ள இரண்டு துருவங்கள் என்று.


 

அமெரிக்க உலகில் இரண்டாதாக சுகாரததிர்ற்கு அதிகளவு செலவு செய்கிற நாடு. இங்கேயும் இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று சொல்லுபவர்கள் உள்ளார்கள், ஆனால் அப்படி செய்தால் மற்ற மற்ற துறைகளுக்கு ஒன்றுமே வர மாட்டாது.


 

 


 

மனிதன் பிறந்து  வாழும்போது வியாதிகளுடேனே வாழுகிறான், பின்னர் அந்த வியாதிகளில் தாக்கத்தில் மரிக்கிறான். வைத்தியம் சில  சந்தர்பங்களில் அந்த வியாதிளை மாற்றுகிறது , பல சந்தர்பங்களில் அந்த வியாதிகளுடன் வாழ செய்கிறது, இன்னும் கணிசமான நேரங்களில் கையை விரிக்கிறது.


 

 


 

இங்கே ஒன்று உண்டு DNR /DNI. அதை code status என்பார்கள். கடந்த 20 வருடங்களாக ACLS எனப்படுகிற "இதய சுவாச"  மீள் செய்கையின் போது உயிர் தப்புபவர்களின் எண்ணிக்கை மாறவில்லை. ஆனால் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்த்தில் நல்ல நல்ல முறைகள் வரலாம். ஆனால் இப்ப மட்டும் ஒருவருடை மொத்த வாழ் நாள் மருத்துவ செலவில் கிட்டத்தட்ட 25-40 % , கடைசி 30 நாளில் போதே சிலவளிகிறது.


 

இப்ப இருக்கிற முறைகளை விட இன்னும் இன்னும் கூடுதாலாக செய்தால், இன்னும் இன்னும் சமூகதிர்ற்கு பாரமான சமூகம் உருவாகும். அதை பராமரிப்பதர்ற்கு தனியாக, ஒரு நாடாக வசதிகள் உண்டா  என்று கேட்டால் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.


 

 

 

  • தொடங்கியவர்

யாயினி, உங்களிற்கும் Scarborough Generalவைத்தியசாலையா அருகில் உள்ளது? நான் கனடாவில் பல சத்திரசிகிச்சைகளிற்கு உள்ளாகினேன். கதைப்பகுதியில் எனதுஅனுபவங்களையும் முன்பு எழுதிப்போட்டுள்ளேன். 

 

ஏனைய வைத்தியசாலைகளுடன் ஒப்பீட்டு அளவில் பார்க்கும்போது Scarborough Generalஇன் தரம் மோசமானதாகவே தெரிகிறது. இங்கு பிரச்சனை என்ன என்றால் காலங்காலமாகவே இவர்கள் அசமந்தப்போக்கில் உள்ளார்கள் போல் தெரிகின்றது. அதிகளவானோர் முறைப்பாடு செய்து அழுத்தம் கொடுக்காதபடியால் தமது தரங்குன்றிய சேவையை வழங்குகின்றார்களோ தெரியாது. வயது போனவர்கள் எவரையாவது அவசரகால சிகிச்சை அளிப்பதற்கு இங்கு அழைத்து செல்லும் முன் ஒன்றுக்கு பல தடவைகள் யோசிக்கவேண்டும்.

 

விசுகு, என்னிடம் வலுவான பல ஆதாரங்கள் உள்ளன. பல்வேறு காரணங்களினை  முன்னிட்டு அவை பற்றி இங்கு எழுதமுடியவில்லை.

 

அர்ஜுன், பயிற்சி கொடுப்பதன் மூலம் ஒருவ ன/ள து உள்ளத்தில் மாற்றம், மனிதநேயம் வரும் என்று நினைக்கின்றீர்களா? பணம், கெளரவம்/மதிப்பு, வசதிகள், வாய்ப்புக்கள் இவை இல்லையென்றால் எத்தனைபேர் மருத்துவர்களாக, தாதியராக சேவை செய்வார்கள் என்று நினைக்கின்றீர்கள்? ஆனால், அப்படியான ஒரு நிலை ஏற்படுமானால் மனிதநேயத்தை அவ்வாறான மருத்துவர்கள், தாதியருக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய தேவை ஏற்படாது அல்லவா?

 

வொல்கானோ, எனக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஏராளம்பேர் மருத்துவர்களாக உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ளார்கள். மருத்துவர்கள், தாதியர் எமது வீட்டிலும் இருக்கலாம் என்று நீங்கள் கூறவரும்விடயம் விளங்குகின்றது. மனிதநேயம் இல்லாத ஒரு மருத்துவனோ தாதியோ எனது வீட்டில் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதையே நான் நிச்சயம் விரும்புவேன்.

 

எனது தந்தை எவ்வாறு உதாசீனம் செய்யப்பட்டார், மருத்துவர்கள், தாதியரின் unprofessional, unethical behaviors பற்றி, மற்றும் விரிவான விபரங்களை பல்வேறு காரணங்களை முன்னிட்டு பொதுதளத்தில் பகிரமுடியவில்லை. ஆனால், அனைத்திற்கும் என்னிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன.

 

தனிநபர்களான மருத்துவர்கள், தாதிக்களின் அசமந்தப்போக்கு, சோம்பேறித்தனம், சொகுசு, மனப்பக்குவம்இன்மை இவ்வாறான விடயங்களை நியாயப்படுத்துவதற்கு நீங்கள் ஒட்டுமொத்த Health Care System மீது பழியைப்போடுவது பொருத்தமாக இல்லை.

 

Health Care Systemஇல் தவறுகள் இருக்கலாம், ஆனால் அதைக் காட்டி தனிநபர்களின் மோசமான தவறுகளை நியாயப்படுத்தமுடியாது. 

 

மேலும், முதியவர் என்றால் நோய்வாய்ப்பட்டவர் என்று அர்த்தம் இல்லையே? உங்கள் stereotype பார்வைக்கு என்னிடம் பதில் இல்லை.

 

உயர்ந்த மனிதநேய சேவைகளான மருத்துவம், தாதி சேவைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், தாதியருக்கு சேவை மனப்பான்மை இல்லை என்றால்... இது எவருடைய தவறு? என்றுதான் நான் கேட்டுள்ளேன். இங்கு நான் எல்லா ஒட்டுமொத்த மருத்துவர்கள், தாதியரையும் சாடவில்லை.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தனிப்பட்டவர்களை சொல்லவில்லை என்று சொன்னாலும் உங்கள் தந்தையார் உடன் தொடர்புபட்ட நிகழ்வுகளையே சொல்ல வருகிறீர்கள்.


 

மற்றது இது எனது கடைசி பதிவாக இருக்கும் இதுவும் உங்களுக்கு பிரயோசனபடாவிடில்.


 

சேவை மனப்பான்மை என்று எதை கருதுகிறீர்கள் என்று தெரியவில்லை., ஒருவருக்கு சேவை என்பது இன்னுமொருவருக்கு சட்டத்தினால் தடுக்கப்பட்டிருக்கலாம். நான் இருதடவைகள் கனடிய வைத்தியசாலைகளுக்கு போயிருக்கிறேன். இலங்கையில் ஒரு நோயாளி, அவரோடு வருபவர் என்ன என்ன உதவிகள்/வசதிகள் பெற முடியுமோ அதைவிட அதிகம் பெற்றேன்.


 

அதேநேரத்தில் இன்னுமொரு சந்தர்பத்தில் எமது உறவினர் ஒருவர், கான்சர் நோயால் பாதிக்கபட்ட போது, குடுப்ப வைத்தியர் ஆரம்ப இரத்த மாற்றங்களை கவனிக்க தவறியதாலும் பின் அவரை  கவனித்த   கிரெடிட்வெலி கான்சர் வைத்தியர் லீவில் இருந்தாலும்- bonemarrow biopsy- செய்த பிறகு; 2-3 கிழமையில் அந்த உறவினர் இறந்து விட்டார். அந்த இடத்தில்- மரண வீட்டில், கான்சர் வைத்தியர் டெலிபோன் எடுத்தார். இப்படி உங்களுக்கு கான்சர் வந்திருக்கு , அடுத்த கிழமை ஆபீசில் சந்திக்க சொல்லி. இதில் பல மருத்துவ தகுதியற்ற நிலைமை இருக்கிறது. ஆனால் இவற்றை தடுக்க வழி  உண்டா?


 

ஒன்றை மட்டும் சொல்லாம், ஆக்கக் குறைந்த்தது இப்படியான பிழைகள் நாங்கள் அறிய முடிகிறது. அதை விட இப்போ இருக்கிற அமைப்பை குறைசொல்லுவதால், அல்லது குறையை மாத்திரம் சொல்லுவதால் ஏதும் நடக்குமோ என்று.theriyavillai?
 

நான் இப்போது வேலை செய்கிறது, அமெரிக்காவில் உள்ள முதல் நல்ல 100 வைத்தியசாலைகளில் ஒன்று, வருடம் வருடம் , இங்கே நடந்த பிழைகளை பட்டியல் போடுவார்கள். நான் நினைக்கிறன், கடந்த 5 வருடத்தில் ஒரு காலை மாறி சத்திர சிகிச்சை செய்திருக்க வேண்டும் என்று. இதை எனது இலங்கையில் உள்ள நண்பனுக்கு சொன்ன போது இலங்கையில் அப்படி நடக்க ஒருவித சந்தற்பமும் இல்லை என்றார். ஆனால் அண்மையில் யாழ்பாணத்தில் மாறி செய்தார்கள்.


 

பிரசாந்த்/இஸ்வர்யா ராய் நடித்த ஜீன்ஸ் படமும் ஒரு உண்மை சம்பவமே. அப்படி முளை மாறி ஆபரேஷன் செய்யப்பட்டது ஸ்ரீதேவின் தாய்க்கு..


 

தவறு இல்லாத மருத்து சிகிச்சை வந்த பிறகுதான் ஆஸ்பத்திருக்கு போவேம் என்றால், வீதி விபத்து இல்லா வீதிகள், வாகங்கள், சாரதிகள் வந்தாப்பிறகு வீதியில் கார் ஓடுவோம் என்பதர்ற்கு சமனானதாகும்.


 

இன்னுமொன்று, எனக்கு தெரிந்தவர் கம்ப்யூட்டர் துறையில் இருக்கிறார், அவர் சொன்னார் தாங்கள் இப்போது பாவிக்கிற routers (?)6 பில்லியன் சந்தர்பங்களில் ஒரு தடவை பிழை விடுமாம். அதற்கும் ஒரு backup இருக்கிறதாம். அப்படியான உயர் தொழில் நுட்பம் இருந்தும், ஒரு 3-4 வருடத்துக்குள், ஆஸ்திரேலியாவின் ஒரு மாகாணத்தின் முழு தொலைத்தொடர்பு சேவையுமே தடைப்பட்டது. அந்த  மாகாண முதல்வர் அவர்களுடைய கனடாவில் உள்ள கொம்பனியை கால் பண்ணி, பெரிய அலுப்பு கொடுத்தவர்..அவர்களது முழு சேவைகளுமே தடைப்பட்டது. இவர்களும் எமேர்கேன்சி என்று சனி ஞாயிறு வேலை செய்தது அதை சரி கட்டியவர்கள்.


 

மருத்துவம் அந்தளவிற்கு வளரவில்லை- எனக்கு தெரிந்த மட்டில்.


 

மற்றது முதியவர்கள் மாற்றிய எனது கருத்து பிழை என்றால் மீளப்பெருகிறேன். ஏனெனில் அதை விளங்கப்படுத்த என்னால் 4 பந்தி எழுத முடியாது.


 

நீங்கள் எதை எதை சேவை என்று கருகிரீகள் என்று சொன்னால் ஏதும் தெரிந்தால் சொல்ல முடியும் .


 

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு,

https://www.cpso.on.ca/policies/complaints/default.aspx?id=2092

மருத்துவர்கள் பிழை விட்டிருந்தால் மேலே கொடுக்கப்பட்ட இணையச்சுட்டியில் சென்று முறைப்பாடு செய்யலாம்.. தாதியருக்கும் இவ்வாறான கூட்டமைப்பு ஒன்று நிச்சயம் இருக்கும்.. தேடிப்பாருங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட தாதி(கள்) மேல் புகார் செய்வதற்கு கீழ்க்கண்ட அமைப்பு உள்ளது..

 

http://www.cno.org/protect-public/making-a-complaint-public/

 

முறைப்பாடு செய்வதென்று தீர்மானித்துவிட்டால் உங்கள் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதுகுறித்த தகவல்களை அவ்வப்போது அனுப்பி வைத்தல் நல்லது என நினைக்கிறேன்..!

என்னுடைய அப்பா ஒரு தனியார் வைத்திய சாலையில் ஒரு கிழமை சத்திர சிகிச்சைக்காக தங்கினார். சிகிச்சை முடிந்தும் ஆளுக்கு அங்கிருந்து வர விருப்பமில்லை.
 
இதேமாதிரி ஒரு அரச வைத்திய சாலை என்றால் இரண்டு நாளில் அவர்களே துரத்தியிருப்பார்கள்.  :D
 
ஆகவே இந்த சேவைமனப்பான்மையின் அடிப்படை என்ன ?
 
 
australian-100-dollar-notes.jpg
 
 
 
 
 
என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நாள் இரத்தப்பெருக்கு ஏற்பட்டது. காலமை 7 மணிபோல் அரச வைத்தியசாலை Emergency க்கு போன நாங்கள். அவர்கள் மனைவியைப் பரிசோதிக்கும் போது பின்னேரம் 2 மணி. 5 நிமிடம் தான் சோதித்தார்கள். Standing BP எடுத்தார்கள். 
 
அரச வைத்திய சாலைக்குப் போவதென்றாலே உயிரப் பணயம் வைக்கிற மாதிரி. என்ன செய்ய.. தனியாரிடம் இல்லாத சில உபக‌ரண வசதிகள் அரச வைத்திய சாலைகளில் இருக்கின்றன.  
  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்களிற்கும், இணைப்புகளிற்கும் நன்றி வொல்கானோ, சுபேஸ், இசைக்கலைஞன், ஈசன்.

 

நான் ஏற்கனவே கூறியுள்ளேன், எனது முறைப்பாடுகளின் நோக்கம் தற்போது காணப்படக்கூடிய குறைகள் நீக்கப்படுவதற்கும், எனது தந்தைக்கு நிகழ்த்தப்பட்டது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது இருப்பதற்கு என்னால் முடியுமான முயற்சிகளை செய்வதொழிய, தனிப்பட அப்பா விடயத்தில் சம்மந்தப்பட்ட மருத்துவர்களையோ, தாதியரையோ அவர்கள் செய்த தவறுகளிற்காக சட்டரீதியாக பழிவாங்கும் நோக்கம் இல்லை (வலுவான ஆதாரங்கள் காணப்பட்டாலும்).

 

நேற்று எனது அப்பாவின் அந்தியேட்டி கிரியைகள் நல்லபடியாக நிறைவுற்றது. வைத்தியசாலை சம்மந்தப்பட்ட விடயத்தில் ஏற்கனவே சிறியளவில் முயற்சிகளை தொடங்கிவிட்டேன். விரைவில் அடுத்தகட்ட செயற்பாடுகளில் இறங்கவுள்ளேன். அப்பா தனது இறுதிக்காலத்தை, கடைசி பதின்னான்கு நாட்களை கழித்த வைத்தியசாலை எனக்கு கோயில் போன்றது. அதன் புனிதம் காக்கப்படுவதற்கு எனது ஆயுட்கால பங்களிப்பு அங்கு நிச்சயம் காணப்படும்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நேரம் இருந்தால் இதையும் ஒருக்கா பாருங்கள் அண்ணா. :)

  • தொடங்கியவர்

சிறிது நேரம் பார்த்தேன் ஜீவா. இந்திய நாட்டில் மருத்துவம் தொடர்பான விவாதம் போல் தெரிகின்றது. முழுமையாக பின்னர் பாத்துவிட்டு எனது பின்னோட்டத்தை கூறுகின்றேன். நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.