Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் மகளும் - அ.முத்துலிங்கம் (இன்று வாசித்ததில் பிடித்தது -நிழலி)

Featured Replies

என் மகள் பிறந்து மூன்று மாதத்திலேயே அவளுக்கு என் முகம் பரிச்சயமாகிவிட்டது. என் முகத்தை தொட்டிலுக்கு மேலே கண்டதும் உடம்பை தூக்கி தூக்கி அடிப்பாள். தன்னைத் தூக்கவேண்டும் என்ற செய்தியை அப்படித்தான் முழு உடம்பாலும் சொல்வாள். வெகு சீக்கிரத்திலேயே நான் வீட்டை விட்டு வெளியே போகமுடியாமல் போனது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த திசையில் திரும்பி பார்த்து அழத் தொடங்குவாள். நான் வெளியே போகிறேன் என்பது அவளுக்கு எப்படியோ தெரிந்துவிடும். அதன் பின்னர் அவள் தூங்கும் சமயமாக நான் வெளியே புறப்படும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

 

மகளுக்கு இரண்டு வயது நடந்தபோது என்னை ஆச்சரியப்படுத்த ஆரம்பித்தாள். நான் எப்போவாவது பயணம் புறப்பட ஆரம்பித்தால் உடனேயே அழத் தொடங்கி திரும்பி வரும்வரை நிறுத்த மாட்டாள். இதனால் என் பயணங்கள் தடைபட்டன. அவளிடம் துணியினால் செய்த ஒரு குரங்குப் பொம்மை இருந்தது. நீண்ட கால்கள் நீண்ட கைகள் கொண்ட மிருதுவான கறுப்பு பொம்மை. பெயர் கூழாங்கல். அதைக் கட்டிப்பிடித்தபடிதான் தூங்குவாள். ஒருமுறை நான் பயணம் புறப்பட்டபோது என் பயணப் பெட்டியில் அந்தக் குரங்கு பொம்மையை எனக்குத் தெரியாமல் ஒளித்து வைத்துவிட்டாள். தனக்கு பதிலாக குரங்கு பொம்மை எனக்கு துணையாக இருக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம். ஆனால் என்னாலோ போன வேலையை திருப்தியாக பார்க்க முடியவில்லை. பாதியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டேன்.

 

மகளிடம் இன்னொரு திறமை இருந்தது. நான் பயணம் புறப்படப்போவது தெரிந்ததும் அவள் உடம்பு சுடத் தொடங்கும். அவளாகவே வந்து என்னிடம் நெற்றியை தொட்டுப் பார்க்கச் சொல்வாள். பின்பு சுருண்டு படுத்துக்கொள்வாள். நான் பயணத்தை நிறுத்தியதும் சொல்லிவைத்தாற்போல பழைய நிலைக்கு திரும்பி. தன்பாட்டுக்கு விளையாட ஆரம்பிப்பாள். எப்படி உடம்பு உஷ்ணத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறாள் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

 

ஒரு முறை எனக்கு கையிலே காயம் பட்டு மருத்துவர் கட்டுப் போட்டு விட்டார். அவளுக்கும் அப்படி போடவேண்டும் என அடம் பிடித்தாள். அவளுக்கும் கட்டு போடப்பட்டது. நான் கட்டை அவிழ்க்கும்வரை அவளும் கட்டுப்போட்ட கையுடன்தான் பெருமையாக உலாவினாள்.

 

விடுமுறை நாட்களில் என்னுடைய ஒரு சேர்ட்டை எடுத்து ’தோளா மாளா’ என மாட்டிக்கொள்வாள். அது அவளுடைய கணுக்காலையும் மறைத்து தரையைக் கூட்டும். அன்று முழுக்க அதை அணிந்தபடியே விளையாடுவாள். அதை போட்டுக்கொண்டே படுக்கைக்கும் போவாள். ஒரு முறை இஞ்சி பிஸ்கட் செய்தாள். அவளாகவே தலை செய்து அவளாகவே கால்களும் செய்து சூட்டடுப்பில் வேகவைத்தது. தலை ஒரு பக்கமாகவும் கைகால்கள் வேறு பக்கமாகவும் கோணல் மாணலாக வந்திருந்தது. ஆனால் அப்படி அவளிடம் சொல்லக்கூடாது. சொன்னால் அணை உடைத்ததுபோல கண்ணிலிருந்து வெள்ளம் பொங்கும். ‘ஆஹா, என்ன அழகு. என்ன அழகு’ என்று சொல்லவேண்டும். ஆசையாகத் தந்தாள் என்று வாய்வைத்து கடித்துவிட்டேன். பலத்த அழுகை தொடங்கியபோது நான் ஆச்சரிப்பட்டேன். அந்த பிஸ்கட் பார்ப்பதற்குத்தானாம். சாப்பிடுவதற்கு அல்லவாம்.

 

அவள் எழுதப் பழகியதும் தன் திறமையை புதிய வழிகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தாள். அப்பொழுதுதான் ஒவ்வொரு எழுத்தாக எழுத்துகூட்டி எழுதத் தொடங்கியிருந்தாள். பேப்பர் துண்டுகளில் குறிப்புகள் எழுதிவைத்து என்னை ஆச்சரியப் படுத்துவதற்குத்தான் முதலிடம். ஒரு வார்த்தை இரண்டு வார்த்தைகளில் நான் உங்களை நேசிக்கிறேன் என்றோ விரைவில் வாருங்கள் என்றோ நான் எடுத்துப் போகும் முக்கியமான அலுவலக பத்திரங்களில் எழுதிவிடுவாள். வசனங்கள் எழுதக் கற்றுக்கொண்டதும் புத்தகங்களிலும் குறிப்பேடுகளிலும் தான்தோன்றித்தனமாக எழுதிவைக்க ஆரம்பித்தாள். ஒரு முறை என் டயரியை திறந்து ஒரு தேதியை தேர்வு செய்து அந்தப் பக்கம் முழுவதும் பெரிய எழுத்தில் ‘இந்தப் பக்கத்தில் இன்று ஒன்றுமே எழுத வேண்டாம். என்னைப்பற்றி நினைத்தால் போதும்’ என்று எழுதிவைத்தாள். எந்த நேரம் என்ன செய்வாள் என்பதை ஊகிக்கவே முடியாது.

 

மகளுக்கு ஐந்து வயதாகியபோது அவளுக்கிருந்த அபூர்வ ஞாபகசக்தியை தற்செயலாகக் கண்டுபிடித்தேன். ஞாபகத் திறனின் பிதா என அறியப்பட்டவர் கிரேக்க கவி சிமோனைட்ஸ் என்று சொல்வார்கள். 2500 வருடங்களுக்கு முன்னர் கிரேக்கத்தில் ஒரு விருந்து நடந்துகொண்டிருந்தது. ஒரு சேவகன் செய்தி ஒன்று கொண்டுவந்ததால் அவனைச் சந்திக்க கவி சிமோனைட்ஸ் மண்டபத்துக்கு வெளியே சென்றார். அந்தச் சமயம் விருந்து மண்டபம் இடிந்து விழுந்து விருந்திலே கலந்துகொண்ட அத்தனை பேரும் ஒரே சமயத்தில் இறந்துபோனார்கள். அப்போது சிமோனைட்ஸின் மனக்கண்ணில் விருந்தினர்கள் இருந்த வரிசையும் அவர்கள் முகங்களும் பெயர்களும் ஒழுங்காக ஞாபகத்தில் வந்தன. இறந்த அத்தனை பேரையும் வரிசைப்படி அவரால் ஒப்பிக்க முடிந்தது. அப்படி ஓர் ஆற்றல் இருப்பது அவருக்கு அன்றுதான் தெரிந்தது. யூதர்களுடைய மதநூல் தல்முத் 5422 பக்கங்கள் கொண்டது. மதகுருக்கள் அந்த நூலை மனனம் செய்யவேண்டும். எந்தளவு என்றால் ஓர் ஊசியை எடுத்து முதல் பக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையின் மேல் குத்தினால் அந்த ஊசி 5422 பக்கங்களையும் துளைத்துக்கொண்டு போகும். மதகுருமார் அந்த ஊசி எந்த எந்த வார்த்தையை துளைத்துக்கொண்டு போனது என்பதை சொல்லவேண்டும். ஞாபகத் திறனை வளர்க்க அப்படி கடுமையான பயிற்சி.

 

என்னுடைய மகள் அப்படி ஒரு பயிற்சியும் எடுக்கவில்லை. ஒருநாள் பாடப் புத்தகத்தை படித்துவிட்டு அதை முழுவதுமாக ஒப்பித்தாள். எந்தப் பக்கத்தில் ஒரு வார்த்தை முடிகிறது அடுத்த பக்கத்தில் என்ன வார்த்தை தொடங்கிறது என்பதுகூட அவளுக்கு தெரிந்தது. நான் மகிழ்ச்சிப்படவில்லை. நான் சொன்னேன். ’மனனம் செய்வது நல்லதல்ல. அது சிந்திக்கும் திறனை அழித்துவிடும்.’ அவள் அழத்தொடங்கினால் கண்ணீர் முடியுமட்டும் அழுவாள். அன்று முழுக்க அழுதுகொண்டேயிருந்தாள். அடுத்தநாள் காலை நான் கண்விழித்தபோது எனக்கு முன்னால் நின்றாள். எத்தனை மணிநேரம் அங்கே நின்றாள் என்பது தெரியாது. இரவு முழுக்க யோசித்து வைத்த ஒரு கேள்வியை கேட்டாள். ‘மூளையிலே பதிந்து கிடப்பதை அழிப்பதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’ நான் திடுக்கிட்டுப் போனேன். நியாயமான கேள்வி. நான் சொன்னேன் ’அது தானாக மூளையில் பதிந்தால் நல்லதுதான். நீ சிமோனைட்ஸ்போல அல்லது யூத மதகுருபோல வருவாய்’ என்றேன். அவளுக்கு அவர்கள் யார் என்று தெரியாது. ஆனால் நான் புகழ்வது புரிந்தது. நனைந்த கண்களினால் சிரித்தாள். சமாதானம் உண்டாயிற்று.

 

அவள் பாடப் புத்தகங்கள் படிப்பதும் வித்தியாசமானது. மற்றவர்கள்போல மேசையில் அமர்ந்து படிப்பது கிடையாது. அவள் படிப்பது மேசைக்கு கீழ்தான். அந்த பழக்கம் எப்படி ஏற்பட்டதோ தெரியாது. மேசைக்கு கீழே வயிற்றிலே படுத்தபடி படித்துக்கொண்டிருப்பாள்; அல்லது எழுதுவாள். அவளுடைய இரண்டு குட்டிக் கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அந்தக் கால்களைக் கடந்து நாங்கள் போவதும் வருவதுமாக இருப்போம். வீடு ஒரு பக்கம் தீப்பற்றி எரிந்தாலும் அவளுக்கு தெரியவராது. இடத்தைவிட்டு அசைய மாட்டாள். செய்யும் வேலையில் அத்தனை முனைப்பு. அது எங்களுக்கு பழகிவிட்டது. அந்தக் கால்களைக் காணாதபோதுதான் தேடத் தொடங்குவோம்.

 

அப்போது என் மகளுக்கு பத்து வயதிருக்கும். இரவு எட்டு மணியானதும் வழக்கம்போல வந்து குட்நைட் சொல்லிவிட்டு போய் தன் படுக்கையில் படுத்துவிட்டாள். இப்படி போய் படுப்பவள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் நாங்கள் காலையில் எழும்பும்போது எங்கள் படுக்கையில் படுத்திருப்பாள். எப்போது வந்து படுத்தாள் என்பது எங்களுக்கு தெரியாது. இத்தனை ஞாபக சக்தி உள்ள அவளுக்கு ஒன்றுமே ஞாபகம் இராது. ஒருநாள் அவள் வழக்கம்போல படுக்கப் போய்விட்டாள். நான் ஏதோ வேலையாக இருந்து படுக்கைக்கு இரவு ஒரு மணியளவில் போனேன். ஆனாலும் வழக்கத்தில் செய்வதுபோல குழந்தைகளைப் பார்த்துவிட்டு போக நினைத்தேன். மகளின் அறைக்கு சென்று கன்னத்தை தொட்டுப் பார்த்தேன். அதிலே கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்துக்கு முன்னர்தான் அவள் தூங்கியிருந்தாள் என்று நினைக்கிறேன். ஆனால் கண்ணீர் தூங்கவில்லை. அந்த வயதில் அவளுக்கு என்ன அத்தனை துயரம். வீட்டிலே யாராவது ஏதாவது சொன்னார்களா? அல்லது ஆசிரியர்கள் யாராவது திட்டினார்களா? சிநேகிதிகளுடன் பிரச்சினையா? அடுத்தநாள் காலை கேட்டபோது அப்படி ஒன்றும் இல்லை என்று சாதித்துவிட்டாள். ஆனால் ஏதோ ஓரு துயரம் அவளை வாட்டியது. பகிர்ந்து கொள்ள முடியாத துயரம். அதை நினைக்கும் போதெல்லாம் இன்றைக்கும் என் நெஞ்சு பிசையும்.

 

ஆச்சரியப்படுத்துவதற்கு அவள் தேர்வு செய்வது பயணப்பெட்டிகள்தான். ஒருமுறை பயணப்பெட்டி உள்பையினுள் சிறு செய்தி எழுதி வைத்துவிட்டாள். அது வழக்கம்போல எனக்கு தெரியாது. நான் பயணத்தின்போது அதைப் பார்க்கவில்லை. அதற்குப் பின்னர் அந்தப் பெட்டியை காவியபடி போன அத்தனை பயணங்களிலும் அது கண்ணில் படவேயில்லை. பத்து வருடம் கழித்து மகள் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த சமயம் அதை நான் தற்செயலாகக் கண்டேன். அதில் இப்படி எழுதியிருந்தாள். இரண்டு நாள் பயணம் போனபோது எழுதியிருக்கவேண்டும். ’2880 நிமிடங்கள். நான் ஒவ்வொரு நிமிடமாகக் கழித்துக்கொண்டு வருகிறேன்.’ இதில் ஆச்சரியப்படுத்தும் விசயம் என்னவென்றால் அந்த துண்டை கண்டுபிடித்த வேளை அவள் வெளிநாட்டில் படித்ததால் நான்தான் ஒவ்வொரு நிமிடமாகக் கழித்துக்கொண்டிருந்தேன்.

 

ஒரு தகப்பனுக்கும் மகளுக்கும் இடையேயான உறவு மகளின் திருமணத்துக்கு பின்னர் தேய்ந்துவிடுவதில்லை. மாறாக புது வேகம் பிடித்து வளரும். ஆனால் இந்த உறவினைப்பற்றி பழைய இலக்கியங்கள் பேசியதில்லை. புலவர்கள் பாடியதில்லை. ஆனால் தாய்க்கும் மகளுக்குமான உறவு அல்லது மகளுக்கும் செவிலித்தாய்க்கும் இடையே உள்ள உறவு பற்றி நிறைய பாடல்களில் இருக்கின்றன. மனத்திலே ஆழ்ந்த வலியுண்டாக்கும் ஒளவையாருடைய பாடல் ஒன்று உண்டு. மகள் தன் காதலுனடன் ஓர் இரவு தாய்க்கு தெரியாமல் ஊரைவிட்டு ஓடிவிடுகிறாள். தாய் அவளைத் தேடிக்கொண்டு அலைந்தபோது ஒரு பாலைவனம் குறுக்கிட்டது. கொடிய மணல் காடு அது. மகளோ இளம் பெண். அவள் எப்படி இந்தப் பாலவனத்தை தாண்டிப் போயிருப்பாள் என்று நினைத்தபோது தாயின் மனம் வெம்புகிறது. மகள் பட்டிருக்கூடிய இடரை நினைத்து நினைத்து அரற்றுவாள். ‘அற்றாரைத் தாங்கும் ஐவேல் அசதி அருவரையில் முற்றா முகிழ்முலை எங்ஙனஞ் சென்றனள்.’ ஒரு தாயின் மனம் பட்டிருக்கக்கூடிய பதைபதைப்பை புலவர் இரண்டே வரியில் சொல்லிப் போய்விடுகிறார்.

 

தகப்பன் மகன் உறவு பழைய பாடல்களில் சொல்லப்படாவிட்டாலும் எங்கள் இதிகாசங்களில் அவை நிறையவே சொல்லப்பட்டிருக்கின்றன. ராமன் தன் தகப்பனுடைய வாக்கை காப்பாற்றுவதற்காக 14 வருடங்கள் வனவாசம் செல்கிறான். மகாபாரதத்தில் தேவவிரதன் தன் தகப்பன் சந்தனுவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இரண்டு சபதங்கள் செய்தான். ’எனக்கு உரித்தான ராஜ்யத்தை துறக்கிறேன். நான் மணமுடிக்கமாட்டேன்.’ தகப்பனுக்காக செய்த எத்தனை பெரிய தியாகம் அது. யயாதி என்ற மன்னன் தன் முதுமைக் காலத்தில் வாலிபத்தை மீண்டும் அனுபவிக்க விரும்பினான். அவனுடைய மகன் புரு தகப்பனின் விருப்பத்தை நிறைவேற்றினான். தகப்பனின் முதுமையை ஏற்றுக்கொண்டு தன் இளமையை கொடுத்தான்.

 

டாண்டே ஒரு சம்பவத்தை தன்னுடைய Divine Comedy ல் சொல்கிறார். அத்துடன் ஒப்பிடும்போது மேற்சொன்ன மகன்களின் தியாகம் ஒன்றுமே இல்லையென ஆகிவிடும். உகோலினோ ஒரு பிரபு. ஏதோ குற்றத்திற்காக அவனை சிறையிலடைத்து பட்டினி போட்டு விடுவார்கள். அப்பொழுது அவனுடைய மகன்கள் தகப்பன் படும் வேதனையை பார்க்க சகிக்கமுடியாமல் ‘அப்பா எங்களை சாப்பிடுங்கள். உங்கள் பசி ஆறட்டும்’ என்று சொல்வார்கள். அவர்கள் தகப்பனை எவ்வளவு நேசித்திருப்பார்கள்.
தந்தைக்கும் மகனுக்குமான உறவு நிறைய சொல்லப்பட்டிருந்தாலும் மகள் தந்தை உறவு பேசப்படவேயில்லை. அப்படி இருந்தாலும் அது அரிதுதான். தகப்பன் மகள் கவிதை ஒன்றை நான் முதலில் படித்தது அம்பையின் நூலில்தான். அந்தக் கவிதையை நான் ஒரு நூறு தடவை படித்திருப்பேன். அம்பையின் ‘வற்றும் ஏரியில் மீன்கள்’ என்ற நூலில் இந்த சந்தால் கவிதை தமிழ் மொழிபெயர்ப்பில் வருகிறது.

 


பாபா,
உன் ஆடுகளை விற்றுத்தான் நீ
என்னைப் பார்க்க வரமுடியும் என்ற தொலை தூரத்தில்
என்னைக் கட்டி வைக்காதே.
மனிதர்கள் வாழாமல் கடவுளர்கள் மட்டும்
வாழும் இடத்தில்
மணம் ஏற்பாடு செய்யாதே.
காடுகள் ஆறுகள் மலைகள் இல்லா ஊரில்
செய்யாதே என் திருமணத்தை நிச்சயமாக.
எண்ணங்களைவிட வேகமாய்க் கார்கள்பறக்கும் இடத்தில்
உயர் கட்டிடங்களும் பெரியகடைகளும்
உள்ள இடத்தில் வேண்டாம்.
கோழி கூவி பொழுது புலராத
முற்றமில்லாத வீட்டில்
கொல்லைப்புறத்திலிருந்து சூரியன்
மலைகளில் அஸ்தமிப்பதைப்
பார்க்க முடியாத வீட்டில்
மாப்பிளை பார்க்காதே.

********
எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால்
நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில்
நடந்தே திரும்பக்கூடிய இடத்தில் செய்துவை.
இங்கே நான் ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில்பட்டு நீ வரவேண்டும்.

 

இந்த கவிதையை எழுதியவர் பெயர் நிர்மலா புதுல். ஒரு தகப்பனுக்கும் மகளுக்கும் இடையில் நிலவும் பாசத்தை இதனிலும் சிறப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. தமிழிலே இப்படியான பாடல்கள் உள்ளனவா என்று தேடியிருக்கிறேன். இருக்கலாம். என் கண்ணில்தான் படவில்லை.

 

2500 வருடங்களுக்கு முன்னர் படைக்கப்பட்ட சீன மொழிக்கவிதைகள் சிலவற்றை ஸ்ரீதரன் மதுசூதனன் மொழிபெயர்த்திருக்கிறார். அவை ’வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற தலைப்பில் சமீபத்தில் நூலாக வந்திருக்கிறது. அதிலே தகப்பன் மகள் உறவைச் சொல்லும் ஒரு பாடல் வருகிறது. மகள் இன்னொரு நாட்டு அரசனை முடித்து அந்த நாட்டுக்கு போய்விடுகிறாள். தந்தை நாட்டின்மீது எதிரி படையெடுத்து வருகிறான். மகள் கணவனிடம் எதிரியை போரில் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சியும் கணவன் கேட்கவில்லை. மகள் தனிமையில் குதிரை ஏறி எதிரி நாட்டு அரசுனுடன் போர்புரிய விரைகிறாள். ஆனால் கணவனின் அதிகாரிகள் அவளை துரத்திச் சென்று பிடித்துவிடுகிறார்கள். கணவனை சட்டைசெய்யாமல் தந்தை நாட்டுக்கு போர் புரிய விரைந்த அந்தப் பெண் எத்தனை தூரம் தன் தந்தையை நேசித்திருப்பாள்.

சில நாட்கள் முன்பு மகள் எங்களைப் பார்க்க திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் பின்கேட்டு வழியே அதிகாலை வந்தாள். பொஸ்டனில் இருந்து 800 கி.மீட்டர் தூரம் இரவிரவாக பயணம் செய்து வந்திருந்தாள். இன்னும் கொஞ்ச நாட்கள் விடுப்பை நீடிக்கலாம்தானே என்று நாங்கள் கேட்க முடியாது. அத்தனை வேலை தலைக்கும் மேல் இருக்கிறது என்று சொல்வாள். வீட்டுக்கு வந்ததும் பழைய படி குழந்தையாகி விடுவாள். எல்லா வேலையையும் நாங்கள்தான் செய்யவேண்டும். அவளுக்கு விருப்பமான உணவுதான் சமைக்கவேண்டும். அவள் பார்க்கும் தொலைக்காட்சி சானலைத்தான் எல்லோரும் பார்க்கவேண்டும். வேறு ஒருநாட்டில், 1990ல் நான் வைத்திருந்த புத்தக அலுமாரியில் புத்தகங்கள் என்ன ஒழுங்கில் அடுக்கப்படிருந்தன என்பதை இன்றைக்கும் முறையாகச் சொல்வாள். ’மூன்றாவது தட்டில் நாலாவது புத்தகம் Wildlife. இல்லையா? என்றாள். நான் அதை எப்பவோ மறந்துபோனேன். எங்கே அது நினைவில் இருக்கப்போகிறது? Wildlife எழுதிய ரிச்சார்ட் ஃபோர்ட் என்னும் ஆசிரியர் சமீபத்தில் எழுதிய வேறு புத்தகம் ஒன்றை பரிசாக தந்தாள். 420 பக்கப் புத்தகம். வந்தது போலவே மகள் ஒருநாள் திடீரென்று கிளம்பிவிட்டாள்.

அவள் தந்த பரிசுப் புத்தகத்தை நாளுக்கு சில பக்கங்களாக படித்தேன். 383ம் பக்கம் வந்தபோது 10 நாட்கள் கடந்துவிட்டன. அந்தப் பக்கத்தில் ஒட்டுப்பேப்பரில் ஏதோ எழுதி ஒட்டியிருந்தாள். படித்துப் பார்த்தேன். ‘அப்பாடா. இந்தப் பக்கத்துக்கு வர இத்தனை நாட்களா? இதை நீங்கள் படிக்கும்போது நான் உங்களை நினைத்துக் கொண்டிருப்பேன். அன்பு மகள்.’

அவள் மாறவே இல்லை. மகள்கள் மாறுவது கிடையாது. அவள் வந்து நின்றது மூன்றே மூன்று நாட்கள்தான். நான் அதையே நினைத்துக்கொண்டு வாழ்வேன். அடுத்த வருடம் திடீரென மகள் என்னை நினைத்து வரும்வரை.

சனிக்கிரகத்தில் 10759 நாட்கள்
ஒரு வருடம்.
வியாழனில் 4331 நாட்கள்
ஒரு வருடம்.
செவ்வாயில் 687 நாட்கள்
ஒரு வருடம்.
பூமியில் 365 நாட்கள்
ஒரு வருடம்.
வெள்ளியில் 227 நாட்கள்
ஒரு வருடம்
புதனில் 88 நாட்கள்
ஒரு வருடம்.
ஓ, என் அருமை மகளே
நீ விடுப்பில் வருவது
மூன்றே மூன்று நாட்கள்.
அதுதான் எனக்கு
ஒரு வருடம்.

 

http://andhimazhai.com/news/view/seo-title-15377.html

  • கருத்துக்கள உறவுகள்

தங்கமீன்கள் என்ற படம் பற்றி எனக்கு நினைவுக்கு வருகிறது இதை வாசித்த பொழுது... மகள்களைப்பெற்ற அப்பாக்களுக்குதான் இதைப்பற்றி அதிகம் தெரியும்... அப்பாவாகாத நாங்கள் எல்லாம் இதைப்பற்றி அதிகம் பேசக்குடாது... :D நன்றி நிழலி அண்ணா பகிர்விற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அன்பை அப்படியே நெகிழ்ச்சியுடன் தூவி இருக்கின்றீர்கள் , சில பல விடயங்கள் எனக்கும் என் மகளுக்கும் உள்ள உறவு போலவே இருக்கின்றது . அவளைத் தூர இடங்களில் இருந்தெல்லாம் பெண் கேட்டு வந்தும் நான் அருகிலேயே திருமணம் செய்து வைத்தேன் .நான் கூப்பிடு தூரத்திலேயே  (500 மீ )அவள் இருக்கின்றாள். என்னைத் தாத்தா வாக்கி விட்டாள். இதை எழுதும் போதும் கையில் பேரன் குழப்படி செய்து கொண்டு இருக்கிறான் . எதோ இறைவனின் ஆசீர்வாதம் !

 

உங்களுக்கும்  மகளுக்கும் வாழ்த்துகள் !! :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அன்பை அப்படியே நெகிழ்ச்சியுடன் தூவி இருக்கின்றீர்கள் , சில பல விடயங்கள் எனக்கும் என் மகளுக்கும் உள்ள உறவு போலவே இருக்கின்றது . அவளைத் தூர இடங்களில் இருந்தெல்லாம் பெண் கேட்டு வந்தும் நான் அருகிலேயே திருமணம் செய்து வைத்தேன் .நான் கூப்பிடு தூரத்திலேயே  (500 மீ )அவள் இருக்கின்றாள். என்னைத் தாத்தா வாக்கி விட்டாள். இதை எழுதும் போதும் கையில் பேரன் குழப்படி செய்து கொண்டு இருக்கிறான் . எதோ இறைவனின் ஆசீர்வாதம் !

 

உங்களுக்கும்  மகளுக்கும் வாழ்த்துகள் !! :D

 

அருமை அண்ணா... எப்பவும் இந்த ஆசிர்வாதமும் அன்பும் என் அண்ணாவுக்கு நிலைப்பதாக..கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது.. என் வீட்டில் நிகழ்ந்ததாக உணர்கிறேன்.. நெகிழ்சியாக இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

தங்கமீன்கள் என்ற படம் பற்றி எனக்கு நினைவுக்கு வருகிறது இதை வாசித்த பொழுது... மகள்களைப்பெற்ற அப்பாக்களுக்குதான் இதைப்பற்றி அதிகம் தெரியும்... அப்பாவாகாத நாங்கள் எல்லாம் இதைப்பற்றி அதிகம் பேசக்குடாது... :D நன்றி நிழலி அண்ணா பகிர்விற்கு..

இதமாதிரியான உணர்வுகளுக்கு பிள்ளையை பெற்றுத்தான் வரவேண்டும் என்று இல்லை நல்ல  உணர்வு இருந்தாலே போதும் அது உங்களிடம் அதிகம் உண்டு சுபேஸ்   :)

உங்கள் அன்பை அப்படியே நெகிழ்ச்சியுடன் தூவி இருக்கின்றீர்கள் , சில பல விடயங்கள் எனக்கும் என் மகளுக்கும் உள்ள உறவு போலவே இருக்கின்றது . அவளைத் தூர இடங்களில் இருந்தெல்லாம் பெண் கேட்டு வந்தும் நான் அருகிலேயே திருமணம் செய்து வைத்தேன் .நான் கூப்பிடு தூரத்திலேயே  (500 மீ )அவள் இருக்கின்றாள். என்னைத் தாத்தா வாக்கி விட்டாள். இதை எழுதும் போதும் கையில் பேரன் குழப்படி செய்து கொண்டு இருக்கிறான் . எதோ இறைவனின் ஆசீர்வாதம் !

 

உங்களுக்கும்  மகளுக்கும் வாழ்த்துகள் !! :D

சுவி, நீங்கள் வாழ்க்கையில் பல நிலைகளை கடந்து முக்கியமான இடத்தை பிடித்து உள்ளீர்கள் எல்லா செல்வங்களும் கிடைக்க வாழ்த்துகின்றேன்  

பகிர்விற்கு நன்றி நிழலி  :)

 

நன்றி ;நிழலி....

உங்களுக்காக இன்னுமொன்று....

எனக்குத் தங்க மீன்கள் நினைவூக்கு வந்தன.....

 

தேவதைகளின் பாதணிகள்
 
20130815_143036-001.jpg
மனது சரியில்லாததால் இன்றைய நாள் மெதுவாக பல நினைவுகளுடன் கடந்துகொண்டிருந்தது. வாழ்க்கை ஏன் இப்படியானதாய் இருக்கிறது என்று சிந்திக்கவைத்தது மனது. இதே கேள்வி முன்பும் பலதடவைகள் மனதில் தோன்றியிருந்தாலும் இன்று வரை பதில் கிடைத்ததில்லை. இன்றும் அப்படியேதான்.

இளவேனிற்கால விடுமுறை கழிந்து பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளின் ஒலிகள் ஜன்னலினூடாக கேட்டுக்கொண்டிருந்தன. ஆண் பெண் குழந்தைகளின் சிரிப்பலைகள், உரையாடல்கள் என அந்த ஒலிகள் என்னை பல ஆண்டுகளுக்கு முன்னான நாட்களுக்குள் அழைத்துப்போயின.

ஏற்கனவே இருந்த மனச்சோர்வுடன், பழைய நினைவுகளும், தனிமையும் சேர்ந்துகொண்டபோது, இனியும் வீட்டுக்குள் இருப்பது நன்றன்று என்பதால்  வெளியில் புறப்பட்டேன்.

எங்கேபோவது என்பதையறியாமல் அரைமணிநேரம் அலைந்து தி‌ரிந்தேன். பின்பு ஒரு பெரிய பல்பொருள் அங்காடித்தொகுதியினுள் வாகனத்தை நிறுத்தியபின் அங்கிருந்து கடைகளினுள் புகுந்துகொண்டேன்.

புத்தகக்கடை, கணிணிக்கடை, இலத்திரனியற்பொருட்களை விற்கும்கடை என்று நேரம் கடந்துகொண்டிருந்தது. மனம் எதிலும் லயிக்கும் நிலையில் இருக்கவில்லை. தனிமையுணர்வினை  மிக நெருக்கத்தில் உணர்ந்துகொண்டிருந்தேன். ஈரமான உடையுடன் நடப்பதுபோன்றதான உணர்வில் இருந்தது மனது. எதையெதையோ நினைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

எதிரே ஒரு பாதணிக்கடையொன்றில் 50 வீதக்கழிவில் விற்பனை என்றிருந்து. கால்கள் அக்கடையினுள் புகுந்துகொண்டன. ஆண்களின் பாதணிகள், பெண்களின் பாதணிகள்என்பவற்றைக் கடந்தபின் குழந்தைகளின் பாதணிகள் இருக்கும் பகுதியில் பெண்குழந்தைகளின் பகுதி இருந்தது

பாடசாலை ஆரம்பிக்கும் நாட்கள் என்பதால் குழந்தைகளுக்கு பல புதிய புதியவகையான பாதணிகள் விற்பனைக்கு வந்திருந்தன.

சில பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இரண்டு தேவதைகளுடன் பாதணிகடைகளில் பல மணிநேரங்களை கழித்திருக்கிறேன். பாடசாலைக்கான பாதணி, வெளியே விளையாடுவதற்கான பாதணி, உள்ளே விளையாடுவதற்கான பாதணி, மழைக்காலத்திற்கான பாதணி, பனிக்காலத்திற்கான பாதணி, விழாக்களுக்கான பாதணி, இளவேனிற்காலத்திற்கான பாதணி இப்படி பல பல சந்தர்ப்பங்களுக்கான பாதணிகள் தேவைப்பட்ட காலமது. இரண்டு இளவரசிகளுடன் பேரசனாய் வாழ்ந்திருந்த நாட்களவை.

ஆண் குழந்தைகளுக்கான பாதணிகளின் உலகம் மிக மிகச் சிறியது. பெண்குழந்தைகளின் பாதணிகளின் உலகம் மிகவும் பெரியது, வித்தியாசமானது, அழகானது. ரோசா, ஊதாப்பூ நிறங்கள் முக்கியமானவை. ஆரம்பத்தில் ரோசா நிறமாயும் காலப்போக்கில் ஊதாப்பூவின் நிறத்திலும் என்னவள்களின் பாதணித்தேர்வுகள் இருந்தன.

மழைக்காலத்துப் பாதணி என்றால் அது எவ்வளவு உயரமாய் இருக்கவேண்டும் என்பதில் இருந்து, நிறம், என்னவிதமான படங்கள் அதில் பதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது வரையில் அவர்களே தீர்மனிப்பார்கள். கடை கடையாக ஏறி இறங்கி ஏதும் வாங்காது வீடு திரும்பிய நாட்களில் அவர்களின் சோகம் என்னையும் பற்றியிருக்கும்.

குழந்தைகளுக்கான பாதணிகள் இருந்த பகுதியில் இருந்த ஒரு பாதணியின் மேற்பகுதியில் பல ஓட்டைகள் இருந்தன. அந்த ஓட்டைகளை பூக்கள், மிருகங்கள், பறவைகள் போன்ற சிறு சிறு உருவங்களால் மறைக்கலாம். அவ் உருவங்கள் தனியே விற்பனைசெய்யப்படும். அந்த பாதணியைக்கண்டதும் என் இளையமகள் அப் பாதணிகளுடன் செய்த அழகான அழிச்சாட்டியங்கள் நினைவுக்கு வந்தது.

என் இளையமகளுக்கு அந்தப் பாதணியில் பெருத்த காதலிருந்தது. ரோசா நிறத்தில் அப்படியான பாதணி ஒன்றினை வாங்கிக் கொண்டாள். அதற்கு பல நிறங்களில் பூனை உருவங்கள், குதிரை உருவங்கள் என்று வாங்கிக் கொண்டாள். வீட்டுக்குள்ளும் அதே பாதணிகளுடனேயே திரிந்தாள். யாராவது வீட்டுக்கு வந்தாலும் அதை காட்டுவதற்காவே அப் பாதணிகளை பாவித்தாள். மற்றவர்கள் அவளின் பாதணிகளை ஆச்சர்யமாகப் பார்த்தால் பூரித்துப்போவாள்.

ஒரு முறை லண்டனுக்குச் சென்றிருந்தோம். அந்நாட்களில் அங்கு பாதணியின் கீழ் ஒரு சிறிய சில்லு பூட்டிய பாதணிகள் பெரும் பிரபல்யமாய் இருந்தன. அப்படியான பாதணிகளின் உதவியுடன் வழுக்கி வழுக்கி நடக்கும் குழந்தைகளை பார்த்தபடியே நின்றிருப்பாள் எனது மூத்த மகள்.  தனக்கும் அது வேண்டும் என்றாள். அவளின் விருப்பத்தை தட்டமுடியுமா? வாங்கிக்கொடுத்தேன். அதன் பின்பு என் கையைப் பிடித்தபடியே வழுக்கி வழுக்கி ஓடப்பழகிக்கொண்டாள். அக்காள் வழுக்கி வழுக்கி ஓடுவதைப்பார்த்த தங்கையும் அடம்பிடித்து அவளுக்கும் அதே மாதிரியான பாதணிகளை வாங்கிக்கொண்டாள். சில நோரங்களில் இருவரும் எனது இருகைகளையும் பிடித்துபடி வழுக்கிக்கொண்டார்கள். அவர்களின் மகிழ்ச்சியில் வழுக்கிக்கொண்டிருந்தேன், நான். நோர்வே வந்தபின் அவர்களின் பாதணிக்கு பலத்த மவுசு இருந்தது. காலப்போக்கில் அப்படியான பாதணிகள் நோர்வேக்கு வந்த போது எனது குழந்தைகளுக்கு அந்தச் சப்பாத்தின் மீதான காதல் தொலைந்திருந்தது.

ஒரு முறை பனிக்காலத்தில் உறைபனியில் சறுக்கும் பாதணி வாங்கித்தா என்றாள் மூத்தவள். வாங்கிய பின் ”வா,‌ எங்கள் வீட்டருகில் இருக்கும் குளம் உறைந்துபோயிருக்கிறது. அங்கு போய் சறுக்கிவிளையாடலாம் என்றாள். சரி போகலாம் என்றேன். சற்று நேரம் அவளைக்கு உதவியிருப்பேன். அதன் பின்பு நீரில் நீந்தும் மின்குஞ்சு போலாகிவிட்டாள். அந்தப் பாதணிகளைப் போடவும், அவற்றை கழட்டவுமே அவளுக்கு உதவி தேவைப்பட்டது. அடுத்தடுத்த வருடங்களில் அவள் உறைபனியில் எப்படி சறுக்குவது என்று தங்கைக்கும் கற்பித்தாள். நான் குளத்தின் கரையில் நின்றபடியே அவர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு முறை நத்தார் நாட்களின் போது  கடைக்குச் சென்றிருந்தோம். நடக்கும் போது நிறம் நிறமான வெளிச்சமும் கீச் கீச் என்று சத்தமும் வரும் பாதணி ஒன்றினை அணிந்தபடியே ஒரு குழந்தை நடந்துபோனாள். அப்படியான பாதணி வேண்டும் என்று கேட்டு, அழுது வாங்கிக்கொண்டாள் இளையவள். அன்று வீட்டுக்குள்ளும் அதனுடனேயே நடந்து திரிந்தாள். நித்திரையானதும் மெதுவாய் பாதணிகளை கழற்றி வைத்தேன். காலை எழும்பியதும் மீண்டும் அதனைப் போட்டுக்கொண்டாள்.

இளையவளின் முதலாவது பிறந்தநாள் லண்டனில் நடைபெற்றது. அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கியாகிவிட்டது. ஆனால் விரும்பிய பாதணிகள் மட்டும் கிடைக்கவேயில்லை. மாலை ஆறு மணிக்கு விழா ஆரம்பிக்கவிருந்தது. மதியம் 12 மணிக்கும் பாதணிகள் கிடைக்கவில்லை. இறுதியில் பல மணிநேர காரோட்டத்தின் பின் ”பலே” நடன உடுப்புகள் விற்பனைசெய்யும் ஒரு கடையில் மாலை 4 மணிபோல் பாதணிகளை வாங்கிக்கொண்டேன்.

ஒரு முறை விடுமுறையின் போது கட்டார் நாட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு பல பல அழகிய பாதணிகள் இருந்தன. வீடுமுறை முடிந்து திரும்பியபோது ஒரு பெட்டி நிறைய பாதணிகள் நோர்வேக்குள் கடத்தப்பட்டன.

பாடசாலைக்குச் செல்ல முன்பு ” அப்பா சப்பாத்து ஊத்தையாக இருக்கிறது துடைத்துத் தாருங்கள்” என்று கட்டளையிடுவார்கள். சுத்தமான பாதணியைப் பார்த்ததும் அவர்களின் கண்களில் தெரியும் அழகுக்காகவே எத்தனை பாதணியையும் கழுவலாம்.

எனது பாதணிகள் அசுத்தமானவை, அழகில்லாதவை, பழயவை என்றெல்லாம் ஆயிரம் விமர்சனங்கள் வரும். சில வேளைகளில் புதிய பாதணிக‌ளைப் பரிசளித்துமிருக்கிறார்கள். இனி பாதணிகள் வாங்கும் போது என்னை அழைத்துப் போ. உனக்கு அழகியல் பற்றி ஒன்றும் தெரியாது என்று அவர்கள் பாராட்டிய நாட்களும் உண்டு.

இன்று அந்த பாதணிக் கடைக்குள் ஒரு பெண்குழந்தை ஒரு சோடி ரோசா நிறமான பாதணிகளை தனது காலுக்கு பொருத்தமானவையா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் பெருங்கனவு தெரிந்தது, எனக்கு.

என்னிடம் எனது இரு குழந்தைகளும் 3 - 4 வயதில் பாவித்த ஒரு சோடிப் பாதணிகள் இருக்கின்றன. அவை எனது பொக்கிஷங்கள். சில நேரங்களில் அவற்றை எடுத்து நுகர்ந்து பார்ப்பேன். அப்போது, தேவதைகளின் பாதணிகளுடன் நான் காற்றில் நடந்‌துகொண்டிருப்பேன்.

 

[img = /ima1146290_504918206251068_1972862967_o.jpgges/logo.gif]

 

 

 

நன்றி பகிர்விற்கு நிழலி .உண்மையில் பெண்பிள்ளையினால் ஒரு தந்தைக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை கூற வார்த்தைகளே இல்லை 

 
.இது என் உயிர் .............. :)

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்விற்கு நன்றி நிழலி,அ.முத்துலிங்கத்தின் அற்புதமான  எழுத்து.

  • கருத்துக்கள உறவுகள்

 

[img = /ima1146290_504918206251068_1972862967_o.jpgges/logo.gif]

 

 

 

நன்றி பகிர்விற்கு நிழலி .உண்மையில் பெண்பிள்ளையினால் ஒரு தந்தைக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை கூற வார்த்தைகளே இல்லை 

 
.இது என் உயிர் .............. :)

 

தமிழ்சூரியன் உங்களின் குழந்தை நல்ல அழகாக இருக்கின்றார் சுத்தி போடுங்கோ கண் பட்டிடும் :)  

  • கருத்துக்கள உறவுகள்

....என்னைத் தாத்தாவாக்கி விட்டாள். இதை எழுதும் போதும் கையில் பேரன் குழப்படி செய்து கொண்டு இருக்கிறான் . எதோ இறைவனின் ஆசீர்வாதம்... !

 

We are in same boat.  :rolleyes:

 

God bless you Suvy.

என் மகனுக்கு 4 வயது. இதை வாசித்ததும் மகள் ஒன்றும் இல்லை என்று ஒரு கவலை வருகிறது

 

 

 

[img = /ima1146290_504918206251068_1972862967_o.jpgges/logo.gif]

 

 

 

நன்றி பகிர்விற்கு நிழலி .உண்மையில் பெண்பிள்ளையினால் ஒரு தந்தைக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை கூற வார்த்தைகளே இல்லை 

 
.இது என் உயிர் .............. :)

 

 

நல்ல cute நண்பா . எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வாழ்த்துகிறேன்.

 
 

தங்கமீன்கள் என்ற படம் பற்றி எனக்கு நினைவுக்கு வருகிறது இதை வாசித்த பொழுது... மகள்களைப்பெற்ற அப்பாக்களுக்குதான் இதைப்பற்றி அதிகம் தெரியும்... அப்பாவாகாத நாங்கள் எல்லாம் இதைப்பற்றி அதிகம் பேசக்குடாது... :D நன்றி நிழலி அண்ணா பகிர்விற்கு..

திருமண பந்தத்தில் இணைந்து மகள்களை பெற வாழ்த்துககள்  தம்பி :D 

  • கருத்துக்கள உறவுகள்

மனதில், நினைவுகளை மீட்டிய அழகிய கதை!

 

அர்ஜுனும், நிழலியும் முத்துலிங்கம் அவர்களைப் பற்றி, எனது ஆக்கங்களுக்குக் கருத்தெழுதும் போது, குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது! நேரில் அனுபவிப்பது போன்ற எழுத்து நடை இவருடையது!

 

எனது மகளும், உற்ற தோழியாக, சில விடயங்களில் ஆலோசனை வழங்குபவளாக, வளர்ந்திருப்பதை, இன்று நினைத்துப் பார்க்கிறேன்! அவள் குழந்தையாகக் கையில் இருந்தது நேற்றுப்போல நினைவிருக்கின்றது!அவளோடு செலவழிந்த நேரங்களும், பெற்ற அனுபவங்களும் விலை மதிக்க முடியாதவை!

 

இணைப்புக்கு நன்றிகள், நிழலி!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முத்துலிங்கம் அவர்களின் முத்துக்களில் ஒன்று! வாழ்க்கையில் நேரில் சந்தித்து படைப்புகளுக்காக நன்றி சொல்ல வேண்டும் என்று நான் நினைத்திருக்கும் ஒரே ஒரு எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள் தான்! இந்த முறை கனடா வந்த போது தயக்கத்தினால் தொடர்பு கொள்ளவில்லை, அடுத்த முறை கட்டாயம் போய் வீட்டுக் கதவைத் தட்டுவம் எண்டிருக்கிறன்! 

  • கருத்துக்கள உறவுகள்

மனதைத் தொட்ட நல்ல கதை இணைப்பிற்கு நன்றி நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் நிழலி..... எனக்கும் இரண்டும் பெண் பிள்ளைகள் 10ஆம் வகுப்பும் 9ஆம் வகுப்பும் படிக்கின்றார்கள்.... என் ஆசைப்படி இருவரும் உயர்தர பரீட்சையில் தமிழ் எடுக்கின்றார்கள் ..அவர்களும் தமிழை விரும்பி படிக்கின்றார்கள் ,சில சமயங்களில் எனக்கு தமிழை படிப்பிக்கின்றார்கள் :D ............

ஆனால் இந்த உறவினைப்பற்றி பழைய இலக்கியங்கள் பேசியதில்லை. புலவர்கள் பாடியதில்லை. ஆனால் தாய்க்கும் மகளுக்குமான உறவு அல்லது மகளுக்கும் செவிலித்தாய்க்கும் இடையே உள்ள உறவு பற்றி நிறைய பாடல்களில் இருக்கின்றன. மனத்திலே ஆழ்ந்த வலியுண்டாக்கும் ஒளவையாருடைய பாடல் ஒன்று உண்டு
புலம் பெயர்ந்த பின்புதான் இந்த தந்தை மகள் உறவுகள் கூடுதலாக நெருக்கம் உண்டாகிறது என்பது என் கருத்து...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

திருமண பந்தத்தில் இணைந்து மகள்களை பெற வாழ்த்துககள்  தம்பி :D 

ஜயா மகள்களா...? வேணாம் ஜயா.. இங்கிருக்கும் தோழிகளைப்பார்த்தேன்.. எப்படி மகள்களை வளர்ப்பது என்று பயமாக இருக்கிறது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா மகள்களா...? வேணாம் ஜயா.. இங்கிருக்கும் தோழிகளைப்பார்த்தேன்.. எப்படி மகள்களை வளர்ப்பது என்று பயமாக இருக்கிறது.. :D

 

 

தம்பியாக காலத்தே  பயிர்  செய்யணும் என்பதே விருப்பம் ராசா

 

மற்றும்படி  உங்களது கருத்தக்கு

அநேகமான புரட்சிகள் 

மாற்றங்கள் போர்கள் முடிவடைந்த காலப்பகுதியை  ஒட்டியே  நடந்திருக்கின்றன.

பிரான்சை  எடுத்துக்கொண்டால்  

இரண்டாம்  உலகப்போருக்கு பின்பே பெரும் மாற்றங்களை  அது சந்தித்துள்ளது

 

எனவே

அதற்குள் புகுந்து

கொக்குபோல்  

நமது ஓட்டம் இருக்கணும் ராசா

வாழ்க  வளமுடன்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்...

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.