Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஷ்கின் - படம் எடுத்தார் போஸ்டரும் ஒட்டினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிஷ்கின் - படம் எடுத்தார் போஸ்டரும் ஒட்டினார்

 

 

img1131004026_2_1.jpg

 

இன்றைய சூழலில் நல்ல படம் எடுத்தால் என்னவாகும் என்பதற்கு மிஷ்கின் நல்ல உதாரணம்.

சொந்த நிறுவனம் தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை எடுத்தார் மிஷ்கின். சொந்த தயா‌ரிப்பு என்பதால் படத்தின் விளம்பரத்துக்கு அதிகம் செலவளிக்க முடியவில்லை. ஹீரோ, ஹீரோயின், காமெடியன் வேல்யூக்களை மட்டும் வைத்து பெ‌ரிய படம், சின்ன படம் என்று தரம் பி‌ரிப்பவர்கள் ஓநாய்க்கு சின்னப் படம் என்ற அந்தஸ்தைக்கூட வழங்கவில்லை. ரசிகர்கள் அதைவிட மேல்.

img1131004026_1_1.jpg

 

தொடர்ந்து குப்பை படங்களாக தரும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முதல்நாள் முண்டியடிக்கும் சில்வண்டுகள் இணையத்தில், முகமூடி படத்துக்குப் பிறகு மிஷ்கின் படம்னாலே அலர்‌ஜியா இருக்கு என்று தங்களின் அதிமேதாவித்தனத்தை காட்டினார்கள். விளைவு... முதல் மூன்று தினங்களில் சென்னையில் ராஜா ராணி 2.2 கோடிகளை வசூலிக்க, ஓநாய்க்கு வெறும் இருபது லட்சங்கள் மட்டும்.

 

img1131004026_1_2.jpg

 

ச‌ரி, இதுதான் உலகம் போலிருக்கு என்று படத்தை புரமோட் செய்ய போஸ்டரும் பசை வாளியுமா கிளம்பினார் மிஷ்கின். முதலில் கோயம்புத்தூர். தனது படத்தின் போஸ்டரை தானே ஒட்டினார். அதற்கு நல்ல விளம்பரம் கிடைத்ததால் போஸ்டர் ஒட்டுகிற வேலையை தமிழகம் முழுக்க செய்யவிருக்கிறாராம்.

 

ஒரு நல்ல செய்தி. படத்துக்கு கிடைத்த பாஸிடிவ் விமர்சனம் காரணமாக திரையரங்குகள் இப்போது நிரம்பி வழிகின்றன.

 

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1310/04/1131004026_1.htm

 

டிஸ்கி:

 

ராஜா ராணி ரவுண்ட் அப் (ஸ்பெஷல்)
 

ராஜா ராணி பார்க்கலையா என்று நாலு பேர் கேட்ட பிறகுதான், தமிழகத்தின் ஒரு வரலாற்று சம்பவத்தில் நாம் பங்கு பெறாதது உறைத்தது.

 

img1131002013_1_1.jpg

 

எப்படியும் படத்தை பார்த்துவிடுவது என்று கிளம்பிய நமக்கு பூந்தமல்லி சுந்தரிலிருந்து இசிஆர் மாயாஜால்வரை பெருத்த ஏமாற்றம். எல்லா இடங்களிலும் திருவிழா கூட்டம். எங்கும் டிக்கெட் இல்லை. கடைசியில் ரஜினி படம் மாதிரி பிளாக்கில்தான் வாங்க வேண்டியிருந்தது.

முதல் காட்சியில் மணக்கோலத்தில் நயன்தாராவைப் பார்த்ததும் தோன்றியது, செத்தாண்டா தமிழன். நயன்தாரா அவ்ளோ அழகு. சரி, படத்தின் கதை என்ன? சிம்பிள். மௌனராகம் பார்த்திருக்கிறீர்களா? அதில் ரேவதிக்கு இருக்கிற மாதிரி மோகனுக்கும் ஒரு லவ் பிளாஷ்பேக் இருந்தால், அதுதான் ராஜா ராணி.

கதைக்குள் எல்லாம் நாம் போகப் போறதில்லை. கதை யாருக்கு வேண்டும். டைட்டில் கார்டில் நயன்தாரா, நஸ்ரியா பெயர்கள் வருகையில் அரங்கம் அதிர அதிர கைத்தட்டல். சந்தானத்துக்கும் அப்படியே. ஆனால் அதிகபட்ச கைத்தட்டல் வாங்கியது டாஸ்மாக் பார்தான். பொண்டாட்டி டார்ச்சரால் குடிக்க வந்தவங்க யார் என்று டாஸ்மாக் பாரில் கானா பாலா கேட்க, குடிகாரர்கள் அனைவரும் கைத்தூக்குகிறார்கள். தியேட்டரில் ஒரே விசிலும், கைத்தட்டலும்

 

மொத்தப் படத்திலும் அதிகம் ஸ்கோர் செய்தவர் நயன்தாரா. அவர் மட்டும் இல்லையென்றால்...? சரி, அது நமக்கெதுக்கு. அவருக்கு அடுத்தபடி ஜெய். மனுஷன் பின்னிட்டார்.

 

img1131002013_2_1.jpg

 

அசோகமித்திரன் தனது 18 வது அட்சக்கோடு நாவலில், ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லும் போது, அவ்ளோ பெரிய சந்தோஷத்தை அனுபவித்தவருக்கு, அதன் பிறகு வருவது எல்லாமே துக்கம்தானே என்பார். அதே மாதிரிதான் நஸ்ரியாவும். நயன்தாரா என்ற பேரழகை பார்த்த பிறகு நஸ்ரியா கொஞ்சம் சுமாராக தெரிந்ததில் ஆச்சர்யமில்லை. படிய தலைவாரினால் நஸ்ரியாவின் அழகு பாதியாக குறைந்துவிடுகிறது. பார்க்கிற நமக்கே இரண்டாவது ஷாட்டில் தெரிகிற சமாச்சாரம் ஹேர் ஸ்டைலிஸ்டுக்கும், கேமராமேனுக்கும் எப்படி தெரியாமல் போனது? (நேரம் படத்தில் பிரித்துவிட்ட சிகைதான் நஸ்ரியாவுக்கு).

 

img1131002013_3_1.jpg

 

நயன்தாரா காதல் கதையை ஜெய் நகர்த்தினால் ஆர்யா, நஸ்ரியா காதலில் சந்தானம். அவர் வாயைத் திறந்தாலே தியேட்டரில் சிரிப்புதான். ஒரு வசனத்துக்கு பகபகவென சிரித்த பக்கத்து சீட்காரர், சிரித்து முடித்த பிறகு அருகிலிருந்த தனது நண்பரிடம், சந்தானம் என்ன சொன்னாரு என்று அக்கறையாக கேட்டார். சந்தானம் இருமினாலும், ஏதோ காமெடின்னு சிரிப்பார் போலிருக்கிறது. அவர் என்றில்லை. மொத்த தியேட்டரே அந்த மனநிலையில்தான் இருந்தது.

 

ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து அழகான இரண்டு நடிகைகள், சந்தானம், டாஸ்மாக் என்று கலந்து கட்டியிருக்கிறார் இயக்குனர் அட்லி. நயன்தாரா, நஸ்ரியா, ஆர்யா, சந்தானம் என்ற ஸ்டார் காஸ்டை மட்டும் நீக்கி பிரபலமாகாதவர்களை போட்டிருந்தால்...?

 

img1131002013_4_1.jpg

 

ராஜா ராணிக்கு கூட்டம் அம்முகிற அதேநேரம் பக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியையும் சீந்த ஆளில்லை. மிஷ்கின் பெரிய ஜினியஸாம். நயன்தாரா மாதிரி நடிகைகளை பயன்படுத்த மாட்டாராம், லவ் சீன்ஸ் வைக்க மாட்டாராம், கலர் கலரா ட்ரெஸ் போட்டு டூயட் எடுக்க மாட்டாராம், சந்தானம், சூரியைக்கூட வச்சுக்க மாட்டாராம். அப்புறம் எப்பிடி தமிழன் தியேட்டருக்கு வருவான்? நாம என்ன, படம்ங்கிற பேர்ல பிலாஸபியா கேட்டோம்? வேலை வெட்டியில்லாத ஹீரோ அம்சமான ஒரு பெண்ணை லவ் பண்றான். அவனோட காமெடி ப்ரெண்ட்தான் லவ்வுக்கு சப்போர்ட். கொஞ்சம் ஈகோ மோதல், ஊடல் கூடல். நடுநடுவில் ஹீரோவும் காமெடி நண்பனும் டாஸ்மாக்கில் தண்ணியடிக்கிற சீன். போதுமே... குடும்பமா வந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி மாதிரி மிஷ்கின் படத்தையும் ஓட வச்சிருப்போமே. தமிழனுக்கு எப்படி படம் தர்றதுங்கிறதே தெரியாத மிஷ்கின் எல்லாம் என்ன டைரக்டர்?

 

புதுப்பசங்க பொன்ராம், அட்லிக்கெல்லாம் தமிழனின் பல்ஸ் தெரியற போது சீனியர் உங்களுக்கு தெரியாம போச்சே மிஷ்கின். கடைசியா நாங்க ஓடவச்ச படங்களைப் பார்த்தும் நீங்க திருந்தலைன்னா எப்படி? கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்போ ராஜா ராணி. நீங்க முக்கி முக்கி எடுக்கிற படங்களை லவ், காமெடி, டாஸ்மாக்குங்கிற முக்கலவை ஈஸியா ஜெயிச்சிடும். இந்த முக்கலவை வந்த பிறகுதான்,

தமிழ் சினிமாவே ஒளிர்கிறது. புரிஞ்சுக்குங்க பாஸ்.

 

 

http://tamil.webdunia.com/entertainment/film/article/1310/02/1131002013_1.htm

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தம்பி  புரட்சி  இணைப்புக்கும்  வருகைக்கும்...

(கனகாலம்  ஆளைக்கண்டு பேசி...)

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சப்புகழ்ச்சி அணி.. :D

புலம் பெயர் ரமில்ஸ் இருக்கின்ற நாடுகளில் மட்டும் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் ஓடுதாக்கும்..!  நான் நேற்று பின்னேரம் 7 மணி காட்சி பார்ப்பதற்காக தியேட்டருக்கு போனால் படத்தினை எவருமே பார்க்கவில்லையாம் என்று 2 நாட்கள் மட்டும் ஓட்டி விட்டு நீக்கிவிட்டார்களாம். ராஜா ராணி மண்டபம் நிறைந்த காட்சிகளாக் ஓடுது இங்கு.

 

அண்மையில் விமர்சனங்கள் நல்லவிதமாகச் சொன்ன ஆறு (மெழுகுவர்த்திகள்), மூடர் கூடம் போன்ற திரைப்படங்களை திரையிடக் கூட இல்லை இங்கு. எம் ரசனை தமிழக ரசிகர்களின் ரசனையை விட மோசமானது.

 

நிற்க,

 

இன்று அநேகமாக நயனை பார்க்க போவேன்.

இப்படம் பற்றி வந்த ஒரு நல்ல விமர்சனம் அல்லது மிஷ்கின் பற்றிய குறிப்பு:

 

 

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஒரே குளத்தில் நீரருந்தும்
 
 
_MG_8401.JPG
 
‘முகமூடி’யின் தோல்விக்குப்பின் சற்று மௌனத்திலிருந்த மிஷ்கின், உடன் அதிலிருந்து மீண்டு என்னுடனான தொடர் உரையாடலில் இரண்டு மூன்று கதைகருக்களையும், தலைப்புகளையும் விவாதித்தோம்.
 இருவருக்குமே மிகப்பிடித்தமான தலைப்பாக ‘‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’’ அமைந்தது.
தன் அலுவலகத்திலேயே நடந்த அப்படத்தின் துவக்க விழாவிற்கு பிரபஞ்சன், ட்ராஸ்கி மருது, எஸ்.கே.பி. கருணா, என் நண்பர் ஜே.பி. இவர்களோடு நான் என நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தோம். கமீலா நாசர், இயக்குனர் சேரனின் மனைவி ஆகியோரும் எங்களுடனிருந்து குத்து விளக்கேற்றினார்கள். அப்படத் துவக்க விழாவில் என் நண்பனும் போதகருமான ஜே.பி.தான், திருவிவிலியத்திலிருந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே குட்டையில் நீரருந்தும்’ என்ற இவ்வாக்கியத்தைப் பகிர்ந்தான்.
அதன்பிறகான தொடர் படப்பிடிப்பும், Post Production-ம் நடந்த இந்த நான்கு மாதங்களின் ஒவ்வொரு நாளும் எனக்குத் தெரியும். இடையில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டங்களை தன் ஷீக்கால்களுக்குக் கீழே போட்டு நசுக்கிவிட்டு எழுந்து நின்றான் இக்கலைஞன். புறச்சூழல்கள் எதுவும் தன் படைப்பு மனநிலையை சிதைக்க அவன் அனுமதித்ததேயில்லை. தாள முடியாத துயரத்தை இசை கேட்டும், வாசித்தும், தனித்திருந்தும் படப்பிடிப்பின் ஒவ்வொரு நிகழ்த்துதலையும் ஒரு படைப்பாகவே கருதினான். இப்படத்தின் வணிக வெற்றி, அதன் மூலமான பணவருகை எதுவும் மிஷ்கினின் நினைவுகளில் நிழலாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கு மிஷ்கினிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  ‘பவா இன்னும் இன்றைய படப்பிடிப்பு முடிவடையவில்லை. இரவு பத்து மணிக்கு எனக்கு ஸ்ரீ ஆப்ரேஷன் செய்யும் அந்த காட்சியைப் படமாக்கினோம். அத்தனை விளக்கொளியில், இருபதுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் முன் ஐந்து மணிநேரம் நிர்வாணமாகக் கிடந்தேன். ஒரு மாதிரியான Madness, எந்த Concious-ம் எனக்கு இல்லை என்பதுமட்டுமல்ல. என் சக கலைஞருக்கும் இல்லை’  களைப்பை மீறி குரலில் உற்சாகம் மேலேறியிருந்தது.
எனக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்துள்ளது என்பதை அறிந்த அடுத்த ஐந்தாவது மணி நேரத்தில் என்னுடன் எங்கள் நிலத்தின் வரப்பில் சுற்றிக் கொண்டிருந்தபோது திரும்பி, என்னிடம் பேசினார்.
இப்படத்தில் பத்து பேரையாவது நான் கொன்றிருப்பேன். ஆனால் ஒரு கையில் துப்பாக்கியும், தோளில் தங்கையையும் அம்மாவையும் சுமந்து கொண்டு படத்தின் கிளைமாக்ஸில் ஒரு பெரும் கார் பார்க்கிங்கிற்குள் நுழையும் காட்சியில்  எதிர்பாராமல் ஒரு வாட்ச்மேன் என்னெதிரே நிற்பான். அவன் கண்களில் தோன்றும் சந்தேகம் என்னில் ஊடுருவும். நான் அவ்வயதான அப்பனை ஏறெடுப்பேன். அவர் தன் கண்களாலேயே,
‘‘என்னடா எங்க போற’’ என விசாரிப்பார். பத்துபேரை சுட்டுத்தள்ளிய நான் அவர் முன் தலைக் கவிழ்த்து நிற்பேன். எங்கள் இருவருக்குமான மௌனம் கேட்டைத் திறந்து என்னை உள்ளே அமைதிக்கும். இருவருக்குமிடையே இரு வசனங்களை வைத்துவிட்டு பிறகு நீக்கினேன். இளையராஜாவிடம், ‘‘இந்த வசனங்களை எடுத்தர்றேம்பா, இசையால் நீ அதை நிரப்பு’’ என்றேன்.
‘‘டேய் கொன்னுடுவேன் படத்திலேயே மொத்தம் ரெண்டு பக்கம் வசனம்கூட இல்லை. அதையும் எடுத்துட்டா மியூசிக் போட சொல்ற?’’ என செல்லமாக முதுகில் தட்டினார். மகத்தான கலைஞர்களின் கோபமும், செல்லமும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்யம். நேரில் பார்ப்பவர்களும், கேட்வர்களும் கூட பாக்யவான்கள். நான் கேட்டேன். தன்னை எதுவுமற்றவனாக்கி ராஜா என்ற இசைமேதையின் கையில் ஒப்படைத்து அவர் பின்னால் ஒரு பார்வையற்ற மனிதனாய் படம் முழுக்க நடந்து போகிறார் மிஷ்கின்.
இத்தனை அனுபவங்களோடும், பட ரிலீஸ் அன்று ஏற்பட்ட பல்வேறு மன, பண நெருக்கடிகளிலும் நசுங்கி அன்று மாலை திருவண்ணாமலையின் ஒரு மோசமான தியேட்டரில் படம் பார்க்கப் போனேன். போனேனில்லை. போனோம். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள். படம் துவங்கிய பத்து நிமிடங்களிலேயே, நாங்கள் வேறொரு படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். உடலில் படிந்திருந்த சராசரி தமிழ் சினிமா சனியன்களை ஒரு கலைஞன் தன் முத்தங்களால் துடைத்தெறிந்து இன்னொரு அனுபவத்திற்கு எங்களை அழைத்துப் போகிறான் என அறியமுடிந்தது.
_MG_8484.JPG
 
மருந்துவக் கல்லூரியின் பேராசிரியருக்கு தொலைபேசி அழைப்புவரும்போது அவர் அப்பாவின் பிணத்துடன் ஒரு பின்னிரவில் விழித்திருக்கும் காட்சி செய்நேர்த்தியின் உச்சம். அவர் மறுப்பது, அவனை எச்சரிப்பது பின் தன் அப்பாவின் உயிரற்ற முகத்தைப்பார்ப்பது, மீண்டும் தன் மாணவனை அழைப்பது. யாராலும் கணிக்க முடியாத மனித மனதின் அல்லாடல்கள் அவை. லேசில் யாராலும் தொட்டுவிடக் கூடியதல்ல இதன் உயரம்.
என் சில நண்பர்கள் படத்தில் நிறைய Logic மீறல்கள் உள்ளன என்றார்கள்.
மருத்துவ கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் ஒரு மாணவன் எப்படி இத்தனை பெரிய அறுவை சிகிச்சை செய்ய முடியும்? Wolf எப்படி அது முடிந்த ஏழெட்டு மணி நேரத்தில் தப்பிக்க முடியும்? அதன் பிறகு இத்தனை கொலைகளை திட்டமிட்டு செய்ய முடியும்?
என் நண்பன் கற்றது தமிழ் ராம்தான் இக்கேள்விகளுக்கான விடைகளை தொலைபேசியிலும் நேரிலும் பகிர்ந்தான்.
அண்ணா உங்க ‘‘ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’’ கதையில் எப்படி ஒரு பச்சை மல்லாட்டையிலிருந்து ஒரு இளவரசி வருகிறாள்?
என்னிடம் பதிலில்லை.
இம்முழுப்படமுமே எதார்த்த மீறல்தான். மட்டுமல்ல, மிஷ்கினின் கதைமாந்தர்கள் எல்லோருமே உதிரி மனிதர்கள்.  ‘அஞ்சாதே’ வில் குருவி, நொண்டி,  ‘நந்தலாலா’ வில் வரும் ஒவ்வொரு பாத்திரமுமே உதிரிகள். சராசரி சமூகம் கவனிக்க தவறியதை ஒரு கலைஞன் கவனிக்கிறான். தன் படைப்பில் அவர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தருகிறான்.
ஸ்ரீ, மிஷ்கினை சுமந்துத் திரியும் காட்சிகளில் யாருமே அவனுக்கு உதவ முன் வராதபோது ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் மட்டும்தான் அவனைத் தாங்கிப் பிடிக்கிறான். அவனுக்கு ஸ்ரீ தன் பர்சில் இருந்து ஒரு நூறுரூபாயை எடுத்துத் தருவான். பெரும் சிரிப்பினூடே அதை தூக்கி தன் பின்பக்கமாக எறிவான். இது எப்பேர்பட்ட காட்சி சித்தரிப்பு. என் நண்பர் எஸ்.கே.பி.கருணா ஒரு கோவில் திருவிழாவில் தன் தங்கையின் ஒரே மகனை தவறவிட்டுவிடுகிறார். ஒரு மணிநேர அலைக்கழிப்புகளுப்புக்குப் பின் ஒரு கழைக் கூத்தாடியின் அரவணைப்பில் குழந்தையைக் கண்டடைகிறார்.
குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து, கண்களில் நீர் கட்டி தன் பர்சை எடுத்து சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் முன்னால் நீட்டுகிறார். அவன் அதை தன் பீச்சாங்கையால் தள்ளி விடுகிறான். மிஷ்கினை தாங்கி நிற்பது ஒரு உதிரிமனிதனின் உரமேறிய கைகளில்லை. அது இச்சமூகத்தை தாங்கி நிற்கும் கரங்கள், அதை எப்போதுமே கவனிக்கத் தவறிய நம்மைப்பார்த்துதான் அவர்கள் குரூரமாக சிரிப்பதும். நாம் கொடுக்கும் பணத்தை பீச்சாங்கையால் நிராகரிப்பதும்.
இப்படியான உதிரிகள் இப்படம் முழுக்க நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பார்வையற்றவர்கள், திருநங்கை, ஏன் மருத்துவக் கல்லூரி மாணவனான ஸ்ரீயே தன் கழிப்பறையில் மறைந்து வைத்து போதை ஊசி போட்டுக் கொள்ளும் ஒரு உதிரி மாணவன்தான். மிஷ்கின் கூலிக்கு கொலைசெய்யும், சமூகத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு பெரும் உதிரிதான். இப்படிபட்ட மனிதர்களின் நேயம் நம்மை சில்லிட வைக்கிறது. சிலரை முகம் சுளிக்க வைக்கிறது.
 ‘மூன்று உயிரைக் காப்பாற்ற பத்து உயிரை பலிகொடுக்க வேண்டுமா?’
நிதானமாக யோசித்தால் நாம், அல்லது நம் குடும்பம் வாழ நாம் தினம் தினம் எத்தைன மனிதர்களை, சமூக விழுமியங்களை, நம் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கிறோம். துரோகங்கள், மறைந்து வைக்கப்பட்ட குரோதங்கள், பத்திரப்படுத்தப்பட்ட அநீதிகள் இவைகளை மறைந்துக் கொண்டுதான் ஜீன்ஸ் பேண்டும் வெள்ளைச் சட்டையுமாய் உலாவுகிறோம்.
ஒரு தேசத்தின் தலைநகரில் முன்னிரவில் ஒரு ஓடும் பேருந்தில் எல்லோரையும் இறக்கிவிட்டு, ஆறு பேர், ஒரு மருத்துவகல்லூரி மாணவியை சுற்றி சுற்றி பாலியல் வல்லூறு செய்ததும், அவளை மிகக் குரூரமாக சிதைத்து போட்டதும் வன்முறை இல்லையெனில், இப்படத்தில் நிகழும் கொலைகள் வன்முறையற்றதுதான்.
கூலிக்குக் கொலைசெய்யும் ஒரு தவறுதல்தானே படம். மிஷ்கின் படம் நெடுகிலும் ஒரு கொலையைக் கூட அநாவசியமாக செய்யமாட்டார். ஒரு இன்ஸ்பெக்டரை தன்னருகே வரவழைத்து முட்டியில் சுடுவார். எல்லா வாய்ப்புகளிருந்தும் ஒரு செக்யூரிட்டியை பார்வையால் கெஞ்சிக் கடந்துபோவார். அவர் கொல்லவதெல்லாம் கூலிப்படையின் சகாக்களைத்தான். அவர்கள் வாழத் தகுதியானவர்கள்தான் என நாம் தீர்ப்புரைப்போமேயானால், நாம் மனதளவில் அவர்களாக இருக்கிறோம் என அர்த்தம்.
DSC_4456+copy.jpg
 
இப்படத்தில் நடக்கும் மற்ற கொலைகள் கூலிப்படைத் தலைவனால் அவன் ஆட்களை வைத்து நிறைவேற்றப்படுவது. விசாரணைகளற்ற, கருணையற்ற அவர்கள் உலகில் மனித உயிர்கள் வெறும் அற்பம். கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த கூலிப்படைக் கொலைகளின் எண்ணிக்கையை நாம் இக்கலைப்படைப்போடு கவனப்படுத்த வேண்டியுள்ளது.
அக்கல்லறையில் முட்டிப்போட்டு மிஷ்கின் கண்ணிமைக்காமல் கதை சொல்லும் காட்சி படைப்பின் உச்சம். உடல் மொழியில் பாதியும், கண்களில் மீதியையும் ஒளித்துவைத்து வார்த்தைகளை மிச்சப்படுத்துகிறார். இதன் வசன ஒளிப்பதிவின் போது பலமுறை மிஷ்கினால் பேசமுடியாமல் திணறி வெறியேறியதை நண்பர்கள் சொன்னார்கள்.
இப்படத்தில் என் நண்பர்கள் ஷாஜி, ஷௌகத், என் நண்பரின் மகள் சைதன்யா (ஏழு வயது மொழிபெயர்ப்பாளர்) எல்லோரும் ஆத்மார்த்தமாய் கலந்திருக்கிறார்கள். நண்பன் புவனேஷ் மிஷ்கினைப் பின்னாலிருந்து தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருப்பது திரையை மீறி யூகிக்க முடிகிறது.
படம் பார்த்து முடித்து மூன்று நாட்கள் நான் மிஷ்கினோடு எதுவும் பேசவில்லை. பேசமுடியவில்லை. அவ்வனுபவத்தை முற்றிலும் என்னுள் அடைகாத்தேன். முட்டைகளின் கதகதப்புக்கு வேண்டி தாய் கோழி கூடையை விட்டகலாது. சந்திக்கும் தருணம்  வெகு அருகிலிருந்தும் தவிர்த்தேன். எனக்காக இரவு பதினோரு மணி வரை சாப்பிடாமல் மிஷ்கின் காத்திருந்தும் அவர் அலுவலகத்தைத் திரும்பிப் பார்க்காமல் கடந்தேன். பொறுத்து பொறுத்து பார்த்து தாங்கமுடியாததொரு தவிப்பில் மிஷ்கின் என்னை தொலைபேசியில் அழைத்து,
‘‘பவா என்ன கோபமுன்னாலும், என்ன தண்டனை வேணுன்னாலும் கொடு, தாங்கிக்கிறேன் பேசாம மட்டும் இருந்திராத எனக்கு கேன்சர் அட்டாக் ஆனதுமாதிரி உடம்பெல்லாம் வலிக்குது’’  என்றார்.

மிஷ்கின், என் இனிய நண்பனே, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை படைப்பின் உச்சத்தைத் தொட்ட ஒரு கலைஞனைப் பார்க்க திராணியற்ற ஒரு எளிய மனிதனின் ஓடி ஒளிந்து கொள்ளும் தற்காலிக விலகல் அது. 

 

http://bavachelladurai.blogspot.in/2013/10/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி புரட்சி &நிழலி! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓசியிலை படம் பாக்கிற எங்களுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன........ :D

இந்தப் படம் பார்த்துவிட்டு அதிலிருந்து மீள இரண்டுநாட்கள் ஆனது.

 

இந்தப் படத்தை எங்கே பாக்கலாம்?

சில படங்கள் இப்படித்தான் அதற்கு நல்ல விளம்பரம் கிடைக்காமல் வந்த வடு தெரியாமலே போய் விடும். இதற்கு மிகநல்ல உதாரணம் ஆரண்ய காண்டம் , மிக நல்ல படம், யாராவது பார்த்தீர்களா?

 

http://www.youtube.com/watch?v=pIRXF_8zzrg

 

http://tamilkey.org/watch-aaranya-kaandam-movie-online-2011-dvd.html

இந்தப் படம் பார்த்துவிட்டு அதிலிருந்து மீள இரண்டுநாட்கள் ஆனது.

 

உங்களுக்கு வாய்த்த அதிஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. வியாழக்கிழமை நேரம் கிடைத்து பார்க்க போகும் போது படத்தினை தூக்கி விட்டார்கள்.

சில நேரங்களில் அதிக எதிர்பார்ப்பு பிரச்சினையாகிப்போய்விடுகிறது. இக்களத்தில் முன்னர் பலதடவை எழுதியதைப் போல, மிஷ;க்கினின் ரசிகர்களில் நானுமொருவன். நந்தலாலாவில் ஒரே ஒரு சீனைத் தவிர மற்றைய அனைத்திலும் படத்திற்கு மேற்பட்ட பலகவிதைகளை சீன் கொண்டிருந்தது. ஆனால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எனக்கு ஏமாற்றம்.

 
நிழலி இணைத்த விமர்சனத்தில் உள்ளது ஒரு வேளை அவர் நினைத்ததாக இருக்கலாம். ஆனால் உண்மையில் திரைக்கதையினை சொதப்பி விட்டார் என்றே நினைக்கிறேன். ஒரு வேளை பட்ஜட் பிரச்சினை காரணமாக ஒளிப்பதிவு நேர்த்தியாகாது போயிருக்கலாம். ஒரு கதையினை நாங்கள் வாசிக்கும் போது எங்கள் கற்பனை புரிதல்கள் அதை எங்கு வேணுமானாலும் கொண்டு போகலாம். ஆனால், திரைப்படம் என்பது எமது கற்பனையினை றோட்டுப்போட்டு ஓட்டிச்செல்லவேண்டியது. திரைப்படத்தைப் பார்த்துவிட்டும், பார்த்தவன் உட்கார்ந்திருந்து, எனக்கு எந்த கிளர்ச்சியும் வரவில்லை ஆனால் டைறக்ரர் அப்படிப் படம் எடுக்கமாட்டார், எனவே ஒரு கதையினை நான் கண்டுபிடிக்கவேண்டும் என்று ஒரு பக்குவப்பட்ட பார்வையாளனால் ஒரு திரைக்கதையினை உருவாக்கமுயும், பொழிப்புரை வழங்க முடியும். ஆனால் அந்த கிறடிட்டிற்கு டைறக்ரர் உரித்தானவர் அல்ல. இப்ப நந்தலாலா அல்லது இன்செப்ஷன் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட புரிதல்களைப் பார்வையாளர்கள் உருவாக்கிக்கொள்வது வேறு. ஏனெனில் அங்கு பார்வையாளன் கிடைத்த கிளாச்சியின் உந்துதலில் மேலும் போதைக்காக அவற்றை உருவாக்குகிறான். அந்தவகையில் படைப்பாளிகள் பூரண கிறடிட் பெறக்கூடியவர்கள். ஆனால், ஒநாய் வேற விதம்.
 
உதாரணத்திற்கு, அந்த வாட்ச்மான் அப்பன் பற்றி மிஷ;க்கின் நினைச்சதை, மிஷ;க்கின் சொன்னாத் தான் தெரியவரும். அப்படி இல்லை எல்லோருக்கும் என்னத்தை அவர் நினைக்கிறார் என்றளவிற்கு ஒரு மண்ணும் திரைக்கதையில் வெளிப்படவில்லை. இப்ப உதாரணத்திற்கு ஒரு சீனில, ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாய்போய்விடணும் என்று எல்லோரும் நினைப்பர். ஆனால் மோட்டார் சைக்கிள் ஸ்ராட் பண்ணாது பிரச்சினை கொடுக்கும், ஒட்டுனன் பலதடவை உதைச்சு, எதையோ எல்லாம் சரிசெய்து எடுத்துப் போவாhன். கிட்டத்தட்ட சீனின் நீட்சி றியல்ரைமோடு கிட்டவரும். அது மிஷ;க்கின் ரச். அந்தக்காட்சி இலகுவான காட்சி என்றபடியால் சரியாக வந்திருக்கிறது. ஆனால், வாட்மேன் அப்பன் காட்சி மிஷ;க்கின் நினைத்த விளைவினை ஏற்படுத்தவேணும் என்றால் திரைக்கதையில் அவர் இன்னமும் மினக்கெட்டிருக்கவேண்டும்.
 
படம் பார்க்காதவர்கள் கீளே வாசிக்காதீர்கள். ஸ்ப்பாயிலர் அலேட்...
 
படம் ஒரு கொஞ்ச நேரம் ஓடியதும் ஒன்று புரிந்துவிடுகிறது. அதாவது, இந்த பில்டப்புக்கு ஏற்ற பிளாஷ;பாக்கினை இவரால் காட்ட முடியாது என்பது. என்னைப் பொறுத்தவரை இந்தத் திரைக்கதையின் தோல்வி அங்கு தான் ஆரம்பிக்கிறது. விளிம்புநிலை மக்களையும் உதிரிகளையும் காட்டப்போகிறேன் என்பது வரவேற்கத்தக்கது, ஆனால், அப்படிக்காட்டுகிறேன் என்பதற்காக எப்பிடியும் காட்டிவிடமுடியாது.
 
ஓநாய் சீரியல் கணக்கில தேய்ச்சுக் கடைசியில தன்ர கதையினைச் சொல்லும்போது, ஓநாயில் இரக்கம் பிறக்கவில்லை. ஒரே ஷhட்டில படம் பண்ணுறீங்களோ நூற்றெட்டு ஷhட் எடுக்கிறீங்கள் என்பதோ பார்வையாளனிற்குப் பிரச்சினை இல்லை. உங்களால உள்ளுக்க வரமுடியுதா இல்லையா என்றதுதான் பிரச்சினை.
 
உதிரிகளை விளிம்புநிலை மக்களபை; படம் எடுக்கிறன் என்று வெளிக்கிடுபவனின் இலக்குப் பார்வையாளர்கள் பெருநீரோட்டத்து மக்கள் (அது அறிவாயினும், பணமாயினும், உணர்வாகினும் எதுவிலாகவும் இருக்கட்டும் விளிம்பிற்கு எதிர்ச்சொல்லு) மக்கள். ஏனெனி;ல் விளிம்புநிலை மக்களிற்குத் தங்கள் கதை தெரியும். அவர்கள் கதையினை பொழுதுபோக்குக்காக அவர்களிற்குக் காட்டுகிறேன் என்றால் உங்கள் பார்வையாளர்கள் அவர்களாக மட்டும் தான் இருக்கமுடியும். அதில்லை இதை ஒரு ற்றான்சென்டிங் இமோசனாக, மற்றைய மக்களுக்கும் காட்டப்போகிறேன் என்று நினைத்தால், கதை கதைத் தளத்தில் வேர்பதித்து, உள்ளிற்கு வேர் எவ்வளவு ஆழமாய்ப்போய்க் கதையினைக் கவ்வுகிறதோ அவ்வளவிற்கு கிளைகள் விருட்சமாகி அதைப் பிரதிபலிக்கணும். பொதுவா மிஷ;க்கின் படங்கள் அதைச் செய்யும், ஆனால் ஓநாய் செய்யல என்பதே எனது அபிப்பிராயம். அதை விட்டு வேரை மட்டும் காட்டினால் கதைத்தளத்தில் மட்டும் தான் படம் அதிர்வினை ஏற்படுத்தும். 
 
கொலைசெய்து பழக்கப்பட்ட்வனிற்கு ஒரு குழந்தையினைக் கொல்கையில் நடக்கும் அதிர்வினை, ஓரெ ஷhட்டில மிஷ;கினின் மூஞ்சையைக் காட்டி குழந்தைக்குக் கதைசொல்வது போல சொல்லவதைக் காட்டிலும் ஏதேனும் காட்சி மூலம் செய்திருக்கலாம். குறியீடாக் கூடக்காட்டியிருக்கலாம். தான் சொல்லவாற பிரச்சினை பார்வையாளரிற்கு விளங்காத பிரச்சினை, ஆனபடியால் குழந்தைப் பிள்ளைக்குக் கதைசொல்வது போல சொல்கிறேன் என்ற குசும்புக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால், கதைசொல்லி சோபிக்கவில்லை. 
 
யதார்த்தப்படம் பண்ணுவாராம், கறாச்சுக்க குரங்கு வால்கட்டிக் குழந்தையைத் தொங்கப்பண்ணிட்டு ஜக்கட்டை வைத்து பொம்மலாட்டம் போடுவாராம், கூத்தில பவூண் கணக்கில வெளிக்கிட்டு வாளோட வந்த ரெண்டும் மிஷ;க்கின் லைற் அக்சன் கமரா சொல்லும் வரை ஸ்ரான்ட்பையில நிக்குமாம். இதைக்கூட இது ஒரு பான்ரசி எலிமன்ற், அல்லது சற்றயர், அல்லத விசனம் , அல்லது குறியீடு என்று என்னவகையிலும் நியாயப்படுத்தலாம். ஆனால் எதுக்காகச் செய்தாலும் காட்சி சகிக்கல.
 
வேறயாரும் இப்படிச் சொதப்பியிருந்தால் இதுக்கெல்லாம் யாரும் பதிவு போடப்போறதில்லை. ஆனால் மிஷ;க்கின் சொதப்பினது கடுப்பேத்துது. என்னைப் பொறுத்தவரை, உணர்ச்சிகளைப் பிரசவித்ததா என்ற கேள்விக்கு இந்தப்படம் மலடு என்று மட்டுமே சொல்லமுடிகிறது. இது ஒரு தீவிர மிஷ;;க்கின் ரசிகனின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.
 

Edited by Innumoruvan

பசைவாளி தூக்கும் படைப்பாளி!

 
Onayum-Aatukuttiyum.jpg
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வெளியான அன்று சாந்தி தியேட்டரில் மாலைக்காட்சியை நண்பர்களோடு பார்த்தோம். திருப்தி தருமளவுக்கு ஓரளவு சுமாரான கூட்டம்தான். படம் முடிந்ததும் டைட்டில் ஓட தொடங்குகிறது. அரங்கில் அப்படியொரு நிசப்தம். அவசரமாக 23-சி பஸ்ஸை பிடிக்க வேண்டியவர்கள் எல்லாம் மவுனமாக அதே நேரம் நிதானமாக கிளம்புகிறார்கள். ஆனால் ஒரு ஐம்பது பேர் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டு சிலையாக நிற்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மெதுவாக ஓடுகிறது. இரண்டரை மூன்று நிமிடம் கழித்து ‘இணை இயக்கம் : புவனேஷ்’, ‘எழுத்து இயக்கம் : மிஷ்கின்’ என்று திரையில் ஒளிர்ந்ததும் ஐம்பது பேரும் கைத்தட்டி, ஆரவாரம் செய்கிறார்கள். படம் முடிந்ததுமே அடித்துப் பிடித்து ஓடும் தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்தினை கைவிட்டு, ஓர் இயக்குனரின் பெயரை பார்ப்பதற்காக கூட்டம் அப்படியே மூன்று நிமிடங்களுக்கு நின்றுகொண்டிருக்கும் காட்சியை என் வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன்.

பொதுவாக கமல்ஹாசன் ஒரு கறாரான விமர்சகர். அவ்வளவு சுலபமாக ஒரு இயக்குனரையோ, படத்தையோ பாராட்டிவிட மாட்டார். அப்படிப்பட்டவரே மனந்திறந்து ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ படத்தை பாராட்டியதோடு, மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதாக சொல்கிறார். மகத்தான நடிகனான கமலை இயக்க முடியுமாவென்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அந்த நடிகரே ஓர் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறப்பான விஷயம்?

ஹீரோக்களின் ஓன் பிட்ச்சான தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்கள் இயக்கத்துக்கான மரியாதையை ஏற்படுத்தினார்கள். நம் காலத்தில் மிஷ்கின் அந்தப் பணியை தொடர்கிறார்.

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி எனக்கு பிடிக்கவில்லை. அஞ்சாதே அவ்வளவாக அசத்தவில்லை. ஏனெனில் அவரது திரைமொழி தமிழுக்கு புதிது. அந்த மொழியை புரிந்துக்கொள்ள இரண்டு படங்கள் தேவைப்பட்டது. ‘யுத்தம் செய்’ வந்தபோது அசந்துப் போனேன். ‘நந்தலாலா’ பிரமிப்பில் ஆழ்த்தியது. ‘முகமூடி’ அவ்வளவு மோசமான படமில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சூப்பர் ஹீரோவை தமிழுக்கு உருவாக்கும் கனவு இன்னமும் முழுமை பெறவில்லை (யதேச்சையாக துரைசிங்கம் அமைந்திருக்கிறார்). முகமூடி மூலமாக அந்த டிரெண்டை முயற்சித்தார் மிஷ்கின்.

மிஷ்கினுக்கு காமிக்ஸ் வாசிப்பு உண்டு. அதன் தாக்கம்தான் அவர் வைக்கும் ஃப்ரேம்கள். கொரிய/ஜப்பானிய படங்களில் சாயல் மிஷ்கினின் படங்களில் இருக்கிறது என்பது தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனமாகவே வைக்கப்படுகிறது. கொரிய/ஜப்பானிய இயக்குனர்கள் முழுக்கவே காமிக்ஸ் தாக்கம் கொண்டவர்கள். தமிழில் அரிதாக மிஸ்கின், சிம்புதேவன், பிரதாப் போத்தன், கமல்ஹாசன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களுக்கே காமிக்ஸ் அறிமுகம் இருப்பதால், இவர்களது படங்களின் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய வழக்கத்தை மீறியதாக இருக்கிறது. மிஷ்கினுக்கு காமிக்ஸின் பாதிப்பு மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம்.

மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கும். தெருவை ஒரு லாங்ஷாட் காட்டுவார்கள். வீட்டை ஒரு குளோசப் அடிப்பார்கள். வரவேற்பரையில் கணவனும், மனைவி அமர்ந்திருப்பதை மிட்ஷாட்டில் காட்டி குளோசப்புக்கு போவார்கள். மிஷ்கினின் படத்தில் நேரடியாகவே வரவேற்பறைதான். பொது இடங்களில் சர்வைலென்ஸ் கேமிராக்கள் நம்மை எந்த ஆங்கிளில் பார்க்கிறதோ, அதே ஆங்கிளைதான் மிஷ்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் காணமுடிகிறது. இது காமிக்ஸ் வாசிப்பு தரக்கூடிய தாக்கம். ஏ/4 அளவுள்ள தாளில், ஒரு பக்கத்துக்கு ஆறு அல்லது எட்டு கட்டங்களில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமிக்ஸ் ஓவியர்கள், இப்படித்தான் ஆங்கிள் வைப்பார்கள்.

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இணைய விமர்சனங்களிலும் (99% பாஸிட்டிவ் ரிவ்யூ என்பதே சாதனைதான்), ஊடகங்களின் விமர்சனங்களிலும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு இண்டெலெக்ச்சுவல் இயக்குனருக்கு எப்போதுமே தன்னுடைய ரசிகன் மீது நம்பிக்கை இருக்காது. ‘அவனுக்கு புரியுமோ, புரியாதோ தெரியலை’ என்று நினைத்துக்கொண்டு அபாரமான காட்சிகளை எல்லாம் மீண்டும் வசனத்தில் டிரான்ஸ்லேட் செய்து, ஸ்ஃபூன் ஃபீடிங் செய்வார்கள். குறிப்பாக கமலஹாசன் இதில் கில்லாடி. முப்பது வருடங்களாக எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவருக்கு ரசிகர்களின் ரசனைத்தரத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை.

மிஷ்கின் ரசிகர்களின் தலையில் மொத்த பாரத்தையும் போட்டு விடுகிறார். படம் எடுக்கற நமக்கே புரியுது, ரசிகனுக்கு புரியாதா என்று சுலபமாக இப்பிரச்சினையை கடந்து செல்கிறார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் கதை சொல்லும் மரபை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அட்டகாசமாக அடித்து உடைத்திருக்கிறது.

கொசுவர்த்தி சுருளை சுற்றி ஃப்ளாஷ்பேக் சொன்னது ஒரு காலம். பின்னர் டைட்டிலுக்கு முன்பாக மாண்டேஜ் காட்சிகளாக ஹீரோவின் சின்ன வயசு கதையை சொல்வார்கள், சைக்கிள் வீல் சுற்றிக் கொண்டிருக்கும்போதே ஹீரோ பெரியவனாகி விடுவார். ஏதோ ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், இன்னொரு பாத்திரத்தின் கதையை ஃப்ளாஷ்பேக்காக பக்கத்தில் நின்று பார்த்தது மாதிரி சொல்லும். கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ சிங்குலர் நரேஷனில் ஃப்ளாஷ்பேக் சொன்னது. ஓநாய் சொல்லும் ஃப்ளாஷ்பேக் ரொம்பப் புதுசு. ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை காட்டாமல், அதே நேரம் கதை கேட்கும் குழந்தைக்கும் புரியும் வண்ணம் (படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாதா?) மூன்று, மூன்றரை நிமிடத்தில் கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய காட்சிகளை சொல்கிறார்.

myskin.jpg
மாற்றுப்படமென்றெல்லாம் பம்மாத்து காட்டாமல் க்ளீன் த்ரில்லர் எண்டெர்டெயினராகதான் மகத்தான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் மிஷ்கின். பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினாலும், போதுமான திரையரங்குகளில் வெளியாகவில்லை.. வெளியான திரையரங்கங்களிலும் அரங்கு நிறைந்து ஓடவில்லையென்று நிலைமை. பிட்டு படமெடுத்தவனெல்லாம் கூட படைப்பாளி என்று மார்தட்டிக் கொள்கிற சூழலில், நிஜமாகவே நல்ல படைப்பைக் கொடுத்த படைப்பாளியான மிஷ்கின், தன் படைப்புக்காக ஊர் ஊராகப் போய் பசைவாளி ஏந்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். போஸ்டர் ஒட்டுவதால் மிஷ்கின் கேவலமாகி விடவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பாளியை போஸ்டர் ஒட்டவைத்த நம் சமூகம்தான் கேவலப்பட்டு நிற்கிறது. மிஷ்கின் போஸ்டர் ஒட்டுவது ஸ்டண்ட் என்றெல்லாம் கூட விமர்சிக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? அதுவும் ஓர் கவன ஈர்ப்புதான். பிளாட்ஃபாரக் கடையில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரியின் நிலைமைக்கு ஒரு கிரியேட்டரை தள்ளிவிட்ட நாம்தான் வேதனைப்பட வேண்டும்.

பாவத்துக்கு பிராயச்சித்தமாக சினிமா ரசிகர்கள் சிலர் இணைந்து, சென்னையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிஷ்கினுக்கு பாராட்டு விழாவோ அல்லது படத்துக்கு வெற்றிவிழா(!)வோ அல்ல. பேசப்பட வேண்டிய ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கான ஏற்பாடு.

onai.jpg
படம் பார்த்திருக்க வேண்டுமென்று கூட அவசியமில்லை. நிகழ்வில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டுக் கூட படத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வரலாம்.

எழுதியவர் யுவகிருஷ்ணா at Saturday, October 05, 2013

உங்களுக்கு வாய்த்த அதிஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. வியாழக்கிழமை நேரம் கிடைத்து பார்க்க போகும் போது படத்தினை தூக்கி விட்டார்கள்.

 

நான் இணையத்தில் தான் பார்த்தேன். திரைஅரங்கில் பார்க்கும் வசதி எனக்க இல்லை. ஆனால் திரை அரங்கில் பார்த்தால் நல்லது.

 

கில்லி சுள்ளான் பில்லா மங்காத்தா பார்த்த தமிழ்ரசிகர்களுக்கு இந்தப்படம் சுவார்சியமற்றது அதனால் தூக்குவார்கள் இருந்தாலும் மீள திரையிட வாய்ப்பிருக்கின்றது.

இந்தப் படம் பார்த்துவிட்டு அதிலிருந்து மீள இரண்டுநாட்கள் ஆனது.

 

சுகன்,
இந்தப்படத்தின் உங்களது பார்வையினை நேரங்கிடைக்கும்போது பகிரவேண்டும். இரண்டு நாட்கள் உங்களை உலுப்பும் அளவிற்கு உங்களைப் பாதித்த கோணங்களைப் பகிhந்துகொள்வீர்களாயின் பயனுள்ளதாய் இருக்கும். நன்றி.

 

சுகன்,
இந்தப்படத்தின் உங்களது பார்வையினை நேரங்கிடைக்கும்போது பகிரவேண்டும். இரண்டு நாட்கள் உங்களை உலுப்பும் அளவிற்கு உங்களைப் பாதித்த கோணங்களைப் பகிhந்துகொள்வீர்களாயின் பயனுள்ளதாய் இருக்கும். நன்றி.

 

 

இந்தப்படம் பார்த்துக்கொண்டிருக்கையில் இதைப்பற்றி எழுதவேணும் என்றிருந்தது ஆனால் முடிவில் அந்த எண்ணம் மாறிவிட்டது.

 

தமிழகம் குறித்து ஒரு பார்வை இருக்கின்றது. இது தமிழ்நாட்டில் வாழ்ந்த அனுபவத்தினூடாக வருகின்றது. என்னுமொன்று தமிழ் சினிமா குறித்து ஒரு பார்வை இருக்கின்றது அதுவும் தமிழ்சினிமாக்கள் பார்த்த அனுபவத்தின் ஊடாக வருகின்றது. இந்த பார்வை. இப்படம் எதார்த்த மீறல்களுக்கு அப்பால் அந்தப் பார்வையை கீறீப்பார்க்கின்றது.

 

ஒரு முறை சென்றல் ரயில் நிலயத்தில் லோக்கல் ரயில் வந்து நின்கின்றது. நெருகடியாக சனங்கள் ரயிலை விட்டு இறங்குகின்றார்கள் ஏப்போது இறங்குவார்கள் என ஏற முற்பட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தில் நானும் நிற்றிருந்தேன். ரயில் பெட்டியில் இருந்து இறங்கும் படி வாசலில் ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் கால் துண்டாடப்பட்ட நிலையில் படுக்கப்போட்டிருந்தார்கள். துண்டாடப் பட்ட சிதைந்த காலும் பக்கத்தில் இருந்தது. கடலை விற்கும் பையனாக இருக்கவேண்டும் என்று கடந்து செல்பவர்கள் பேசிக்கொண்டார்கள். ஏதோ ஒரு இரயில் நிலயத்தில் அடிபட்ட பையனை அதே ரெயிலில் தூக்கிப்போட்டிருக்கின்றார்கள். சனங்கள் அவனைக் கடந்து ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகே இரண்டுபேர் தள்ளு வண்டிலை கொண்டுவந்த அவனை தூக்கிப்போட்டுக்கொண்டுபோனார்கள். இந்தக் காட்சி என்னை மிகவும் பாதித்தது. ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கையில் எந்தச் சலனமும் இல்லாத ஒரு வாழ்வே இயல்பாகிவிட்டது என்பது சகிக்கக்முடியாததாக இருந்தது. இப்படியான சம்பவங்கள் நாளொன்றுக்குப் பலவாக நிறைந்து கிடக்கின்றது.

 

இந்த இயல்பை ஒருவன் மீறவேண்டுமானால் சமூகத்தில் நல்லது கெட்டது என்ற கேட்பாட்டிற்கு இடையில் நிற்பவனாக இருக்கவேண்டுமா என்ற கேள்வியே படத்தின் ஆரம்பமாக இருந்தது. உயிர் ஊசலாடும் ஒருவனை சட்டங்களை காரணமாக்கி அலட்சியம் செய்யும் சமூக இயல்பை மீறி காப்பாற்ற வேண்டுமானால் அவனுக்கு சற்று போதைப்பழக்கமும் இருக்கவேணடுமா? அவன் ஒரு மருத்தவக் கல்லூரி மாணவன் - (டாக்டர் எஞ்சீனீயர் லோயர் போன்றன சமூகத்தின் மேல்நிலை அடயாளம் அவன் சற்று போதை மருந்து பாவிப்பவன் (இது சமூகத்தால் மிகக் கீழாகப் பார்க்கப்படும் ஒரு நிலை) இந்தக் கேள்வி படம் நெடுகிலும் வெவ்வேறுவிதமாக நகர்த்தப்படுகின்றது.

 

பார்வையற்றோர்களால் பாதுகாத்துவரப்படும் ஒருவர். திருநங்கைகளால் பாதுகாத்துவரப்படும் ஒரு சிறுமி. குற்றம் புரிந்து திருந்தியவனால் பாதுகாக்க முற்படும் ஒரு குடும்பம்.

 

கல்லறைக்குச் சென்று பின்னார் அங்கிருந்து தப்பி ஓடும் ஒரு முயற்சி

 

சமூகத்தில் மேற்கூறப்பட்ட இயல்புக்குள் வாழும் ஒரு தரப்புக்கும் அதிலிருந்து தப்பித் தடுமாறிநிற்கும் ஒரு தரப்புக்கும் இடையில் நடக்கும் ஒரு வாழ்வியல் போராட்டம்.

 

இறுதி முடிவிலும் P2 என்ற குறியீடுகள் நிரம்பிய கட்டடத்தில் நடக்கும் போராட்டத்தில் அச் சிறுமி மேற்கூறப்பட்ட ஒரு இயல்புநிலைக்குள் உள்ளவர்களின் பாதுகாப்பு வட்டத்திற்குள் சென்றடையவில்லை.  மாறாக சற்றுப் போதைப்பழக்கமுள்ள மருத்துவ மாணவனிடமே சென்றடைகின்றாள்.

 

இந்தச் சமூகம் தன்னைச் சுற்றி கட்டமைத்துள்ள இயல்புகள் விம்பங்கள் போதையை விட மோசமான ஒரு மாயை நிலையா என்ற கேள்வி எழுகின்றது.

 

தமிழ்சினிமா - பெரும்பாலும் கதாநாயகன் அதி நல்லவன் தியாகி குடும்ப பாரம் சுமப்பவன் பலசாலி அநாதை என்று கதாநாயகன் மீது கவனத்தை நகர்த்தப்பழக்கப்பட்டது. கதைகள் குறியீடுகள் மீது கவனத்தை போட்டு எமக்கு பழக்கமில்லை. சமூக அலட்சியத்தை சுரண்டிப்பார்க்கும் ஒரு கதாநாயகனும் அவனது இயல்பும் சமூகத்தின் இயல்போடு எப்படி முரண்படுகின்றது என்பதை கவனிப்பது புதியவிசயமாகவே பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.

 

தமிழகத்தை சற்று கூர்ந்து கவனித்தால் இப்போது உள்ள மக்களும் அவர்களது வாழ்வும் வேறானதாக தோன்றும். சிற்றரசுகள் பேரரசுகள் சமயங்கள் பெருங் கோயில்கள் கோட்டைகள் என்ற வரலாறும் அந்த வரலாற்றுக்காலத்தில் இவற்றைச் சுற்றி ஆழுமை கொண்ட நடமுறைகள் பழக்கவழக்கங்கள் உழைப்பு பண்பாடுகள் எப்படி இருந்திருக்கும் என்றொரு கேள்வி எழும்போது இப்போது உள்ள மக்கள் வேறு இடத்தில் இருந்து வந்து குடியேறியவர்களா? தற்போதைய இயல்பு இவ்வாறான கேள்விகளை எழுப்பும். காலங்களுக்கிடையில் தொடர்புகள் எப்படி அறுந்தது என்ற கேள்விகள் எழும். இக்கேள்விகள் எல்லாம் இப்போதுள்ள மக்களின் இயல்பை முற்பட்ட வரலாற்றுடன் ஒப்பிடுகையில் எழும்.

 

இவ் இயல்பு ஒரு மறைமுக மாயையா இல்லை போதைநிலையா அப்போதை சுயநலத்தை பெருக்கும் ஊக்கியா மனிதாபிமானத்தை மறக்கடிக்கும் ஒரு ஊக்கியா?

 

சட்டம் காரணம் காரியங்களை கடந்து சில கேள்விகளை இப்படம் விட்டுச்செல்கின்றது.

 

இக் காட்டில் ஓநாயாக இவர் கரடியாக இவர் நடித்துள்ளார் என்று முடிகின்றது கதாபாத்திரங்கள்.

 

சிங்கம் புலிகள் யானைகள் பாம்புகள் என இக்காட்டில் நான் யார் என்றுதான் தேடமுடிகின்றது தவிர இக்காட்டில் ஒரு பண்பட்ட மானுடனாக நான் இல்லையா என்ற கேள்வி எழுகின்றது.

 

(ஒரு படம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான எண்ணத்தை கிளறிவிடுகின்றது. அவரவர் தன்மையை பொறுத்தது. அந்தவகையில் எனக்குள் இப்படித் தொடர்கின்றது.... எல்லோருக்கும் பொதுவான ஒரு எண்ணத்தை கிளறிவிட்டால் அதில் விமர்சனங்கள் எழுதலாம் ஆனால் இதை அப்படி நான் உணராததால் அல்லது உணரும் தன்மை குறைவுள்ளதால் வேறு எதையும் எழுதவில்லை. சிலவேளை அதை நான் விரும்பாமல் கூட இப்படத்தை அனுபவிக்க முற்படுவதாகக் கூடு இருக்கலாம்.  உங்கள் கருத்துக்களில் இருந்தும் சிலதை பெற்றுக்கொண்டேன் - நன்றி)

 

http://www.youtube.com/watch?v=cdjo5uNJ2rs

 

Edited by சண்டமாருதன்

சுகன்,
உண்மையாக மிகவும் ஆழமாக எழுதியுள்ளீர்கள. எனக்குப் படம் பிடித்ததோ இல்லையோ உங்கள் பார்வை முற்றாகப் பிடித்திருக்கிறது. உங்கள் பார்வையினைப் படிக்கும் போது தான் மிஷ;கின் படம் பார்த்த திருப்த்தி கிடைக்கிறது.
 
நான் நினைக்கிறேன் நீங்கள் எனது பிரச்சினையினை நச்சென்று சுத்தியலால் அடித்ததுபோன்று தெளிவு படுத்தியுள்ளீர்கள். அதாவது ஏகப்பட்ட காரணகாரிய முரண்கள் படமெங்கும் நிறைந்து கிடந்ததால் என்னால் படத்தின் உள் தட்டுக்குச் செல்லமுடியவில்லை. மாறாக ஒரே இரைச்சலாகவும் வெறுப்பாகவும் இருந்தது.  ஏனெனில் ஒன்றல்ல இரண்டல்ல எங்கும் காரணகாரிய முரண் இப்படமெங்கும் குவிந்து கிடக்கிறது. மேலும், படம் விசயங்களை நீட்டியதாகப் பட்டுப் பொறுமை இழக்கச் செய்யதது. அத்தோடு தமிழ வாழ்வு எனக்குப் பரிட்சயமற்றது. அந்தவகையில் இரைச்சலைத் தாண்டிப் போராடிக் கருத்தை அறியும் உந்துதல் எனக்குள் எழவில்லை. முற்றுமுழுதா காரணகாரியத்தில் மட்டும் மனம் குவிந்து, கொடி பறக்குது றஜனிகாந்தை மிஷ;க்கின் படத்தில் பாத்த கடுப்பில் (உதாரணம்: வேக றெயிலில் இருந்து பாயும் காட்சி) முயற்சியினைக் கைவிட்டுவிட்டேன்.
 
ஆனால் இந்தக் காரணகாரிய முரணை, நீங்கள் போதை நிலையோடும் மாயையோடும் கோடுபோட்டுப் பார்த்தது நான் பார்க்காத பார்வை. அருமையாக இருக்கிறது. காரணகாரியம் என்பதே ஏதோ ஒரு தளத்தை ஏற்றுக்கொண்டு அந்த ஆரம்பப் புள்ளியில் இருந்து கட்டியெழுப்புவது தானே. அந்த ஆரம்பப் புள்ளியை அனேகமாக அதிக கேள்விகள் தர்க்கங்கள் இன்றி ஏற்கவேண்டும் என்பதற்காகவே ஏற்றபடி தான் வாழ்வு நகர்கிறது. ஏனெனில் பிடித்து நிற்பதற்கு ஏதாவது தேவைப்படத்தானே செய்கிறது. ஆனால், போதை நிலையக்காட்டுகையில் பார்வையாளரிற்கு அனைத்துப் புள்ளிகள் சார்ந்தும் மாயை ஓயாது ஞாபகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருப்பதனால் காரணகாரியம் பொருட்டற்றுப்போய்விடும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.
 
மேலும் எனது கவனம் அதிகம் ஓநாயில் இருந்தது. உங்கள் கவனம் அதிகம் ஆட்டில் இருந்திருக்கிறது.  ஓநாய் சார்ந்து தான் பில்டப்பும் பிளாஸ்பாக்கும் அதிகம் என்பதால் அதுவும் என்னைவெறுப்பேற்றிய ஒரு விடயமாக இருந்தது. ஆனால் நீங்கள் ஓநாயினை சந்துருவிலும் சிறிய உதிரியாகப் பார்த்திருக்கிறீர்கள். அது நிச்சயமாக எங்கள் இருவரது பார்வையிலும் ஒரு பெரிய வேறுபாட்டிற்குக் காரணமாகும் தான்.
 
ஆனால் இந்தத் தெளிவினைத் திரைக்கதை ஏற்படுத்தத் தவறிவிட்டதாகவே உணருகிறேன். அவருடை ஓடியன்ஸ் யாரென்பதில் அவரிற்கிருக்கும் பதில் தான் திரைக்கதை சரியா இல்லையா என்பதை அடித்துக்கூறமுடியும். முதலாவது பின்னூட்டத்தில் சொன்னதைப் போல, அந்தத் தளத்து மக்களிற்காக மட்டும் இந்தப்படம் எடுக்கப்பட்டதாயின் அவர்களிற்கு அது புரிந்துவிடும். பரந்து வெளிக்கிடின் என்போன்ற பலரிற்கு கொன்ரெக்ஸ்ற் மிஸ் பண்ணுவதாகவே படம் வெளிவருகிறது. ஆதை உங்கள் போன்ற பார்வையாளர்கள் இட்டு நிரப்புகிறார்கள்.
 
நன்றி உங்கள் பகிர்விற்கு.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்
நான் நேற்றும்,இன்றும் இணையத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.இன்னுமொருவனின் கருத்துத் தான் என்னதும்.வர,வர மிஸ்கினது படங்களினதும் தரம் கீழ் இறங்கிப் போகிறது
 
சுவாரசியமான திரிலிங் கதை என்டால் எனக்கு மிகவும் பிடிக்கும்.படத்தின் ஆரம்பத்தைப் பார்த்து ஏதோ சுவாரசியமான கதையினை கருவாக கொண்டு படம் எடுத்திருப்பார் என்று பார்த்தால் கதைக் கருவே ஒரு டப்பா.இதை விட நல்ல கதை உள்ள படங்கள் எவ்வளவோ வந்திருக்கு[நான் மசாலாப் படங்களை சொல்லவில்லை.]
 
நடிக,நடிகர்கள் தேர்வு சுத்தமாக பொருத்தமில்லை.மிஸ்கின் பிளாஸ்பேக் சொல்லும் போது டிராமா பார்த்த மாதிரி இருந்தது.பின்னனி இசை பரவாயில்லை.கதையைக் கொண்டு செல்லும் போது எதற்காக இப்படி எல்லாம் நடக்குது என்டால் அதற்கு வலுவான கார‌ணி இல்லை.
 
இந்தப் படத்தைப் பார்த்த நேரத்திற்கு சியாமின் 6 பார்த்திருக்கலாம்

October 10 வியாளன் 4.30 p.m woodside cinema scarborough வில் ஒரு காட்சி "ஓநாயும் ஆட்டுக்குட்டியும் " காண்பிக்கபடவுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒநாயும் ஆட்டுக் குட்டியும் பற்றிய விவாதங்களை இரண்டு நாள் கூட முகநூலில் ஓட்ட முடியவில்லை. அதற்குள் ஒரு தொப்புள் மேட்டர் வந்து எல்லாவற்றையும் காலி செய்துவிட்டது. மிஷ்கின் நம்மால இத கவுண்டர் பண்ண முடியும்னு தோணலை...

Manushya Puthiran

:D :d

நாளைக்கு பார்க்க இருக்கின்றேன்

நாளை காட்டப்படும் விசேட காட்சிக்கும் என்னால் செல்ல முடியாது. வேலைக்கு போகும் எத்தனை பேரால் மாலை 4:30 மணிக்கு  போய்ப் பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. வேலை முடியவே 05:30 ஆகி விடும் என்பதாலும் புது வேலை என்பதாலும் இடையில் விட்டு விட்டு வர விரும்பவில்லை.

 

இந்த விசேட காட்சிக்காக முயற்சிகளை எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

இன்று தியேட்டரில் மொத்தம் ஆறு பேர்கள் இருந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்தோம் .மிஸ்கின் என்ற செம்மறிக்கு ஏன் இந்த வேலை .

வேலையால் பறந்து அடித்து சாப்பிடாமல் ஓடி வந்த கோவம் அந்த சொல்லை பாவிக்க வைத்துவிட்டது .எனது நேரம் பணம் எல்லாம் விரயம் .ஒரு டொலருக்கு பார்க்க வேண்டிய படம் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்க பல பேர் படங்களில லாஜிக்கை தேட வெளிக்கிடுறதால வாற பிரச்சனை தான் இது. லாஜிக் இருந்தா தான் படம் பாப்பன் என்று ஆடம்பிடிச்சா தியேட்டர் பக்கம் போகாமல் விடுறதது நல்லது. 

 

நேற்று "Gravity" என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். அது இப்ப இங்க தியேட்டரில ஓடுது. மொத்தம் 2 நடிகர்கள் தான் (இடையில சில விநாடிகள் ஒரு இறந்த உடல் வரும் அதையும் சேர்த்த ழூன்று நடிகர்கள்). ஒரே இருட்டு (விண்வெளி கதை). இவ்வளவு தான் இந்தப்படம். பார்த்து முடிச்சிட்டு யோசித்த முதல் விசயம் இதுக்கு எவ்வளவு செலவு செய்திருப்பாங்கள் என்று. 

 

இப்ப வாற எந்த படமாக இருந்தாலும் அதில லாஜிக் தேடுறதும் கடலில ஆணிய தேடுறதும் ஒன்று தான். பார்த்தமா வந்தமா என்று இருந்தால் மன அழுத்தம் குறையும்.

 

Marc Forster என்ற இயக்குனரின் பேட்டி பார்த்தேன். அவர் World War Z மற்றும் James Bond படங்களின் இயக்குனர். அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். இறுதியாக வந்த உங்களுடைய படம் பலரிற்கு பிடிக்கவில்லையே என்று. அதற்கு அவர் சொன்ன பதில் எனது முதல் படம் பிடித்தவர்களிற்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம். இந்த படம் பிடித்தவர்களிற்கு எனது வெறொரு படம் பிடிக்காமல் இருக்கலாம். அனைவரையும் திருப்திபடுத்துவது முடியாது என்றார். 

 

நண்பனின் காதலியை கரக்ட் பண்ணுவது, ரீச்சருடன் தகாத உறவு, ஏற்கனவே வந்த படங்களின் கதையை சுடுவது, இப்படியான வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த திரைப்படங்களை பார்த்து பெருமித்த எமது தமிழ் இனத்திற்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு ஏமாற்றம் தான். 

 

சில படங்கள் கதைக்காக பார்க்கலாம். சில படங்கள் காட்சிக்காக பார்க்கலாம். இதில் ஓ.ஆ. இரண்டாவது ரகம். கதை என்பது இதில் பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் படம் முடியும் வரை எழும்ப விடாமல் வைத்திருப்தே வெற்றி. 

 

நான் இப்படி தான். விரும்பினா பாருங்க இல்லாட்டி போங்க என்ற மிஸ்கினின் திமிருக்காகவே படத்தை பார்க்கலாம். 

 

Edited by செங்கொடி

உங்கள் கருத்துடன் முழுக்க உடன்பட்டாலும் ஓ ஆ அந்த ரகம் கூட இல்லை .

tarantino இன்  kill bill ,ஸ்பீல்பேர்க் இன் jaws,Jurassicpark   எல்லாம் லாஜிக் பார்த்தா ரசித்தோம் .வருத்த படாத வாலிபர் சங்கத்தை கூட நான் ரசித்து பார்த்தேன் .சினிமா என்றால் ஒவ்வொரு நிமிடமும்  நாம் பார்க்கும் காட்சியில் ஒரு  ரசனை  இருக்க வேண்டும் .பல இடங்களில் அப்படியில்லாத படங்கள் தான் தோல்விப்படங்கள் ஆகின்றன .

கையை கட்டுவதும் போலிசை கொல்வதும் என்று மாறி மாறி எம்மை கொன்றுவிட்டார் மிஸ்கின் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.