Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரும் உலகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி..

நான் பிறந்த ஊரைப் பற்றி எழுதித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.. :blink: பல பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளே செய்திருக்கினம்.. :huh:

கிருபனும், பாதி நுணாவும் வடமராட்சி என்பதிலேயே தெரியுது.. அவை ஏன் smarty pants ஆ இருக்கினம் எண்டு.. :icon_idea::D

  • Replies 103
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரணவாயின் தென்பகுதியில் இருக்கும் உப்புக்கழி உருவானதற்கும் ஒரு கதை இருக்கின்றது. தற்போது வல்லைவெளியாக இருக்கும் பகுதியில் முன்னர் ஒரு நன்னீர் ஓடை இருந்ததாகவும் அதற்கு வல்லி நதி என்று பெயர் இருந்ததாகவும் கதைகள் உள்ளன. முன்னர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த தொண்டைமான் பொருட்களைப் படகு வழியாகக் கொண்டு செல்ல இந்த ஓடையை ஆழ அகலப்படுத்தினானாம். அதனால் கடல்நீர் இந்த ஓடையினூடாக உட்புகுந்தது. நல்ல வெயில் காலத்தில் உவர் நீர் உப்பாக மாறுவதை உப்பு விளைவது என்று சொல்வார்கள். உப்பு ஒரு காலத்தில் பெரும் செல்வத்தைக் கொடுத்ததால் உப்புமால்களில் அவை குவிக்கப்பட்டு பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விளைந்த உப்பை தொண்டமனாறு பகுதிக்கு எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட வீதி (தற்போதைய துன்னாலை-தொண்டமனாறு வீதி) உப்பு ரோட் என்றும் அழைக்கப்படுகின்றது.

உவர் நீர் உட்புகுந்து நிலத்துக்கடியில் உள்ள நன்னீரை மாசு செய்வதைத் தடுக்க பிற்காலத்தில் செல்வச்சந்நிதி கோயிலின் மேற்குப் புறத்தில் கடல் நீர் தடுப்பு அணை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அணையில் உள்ள கதவுகள் கோடையில் திறக்கப்பட்டால் உப்பங்கழியில் உப்பு விளையும். மாரி காலத்தில் மழை வெள்ளம் அதிகரித்தால் கதவுகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் கடலுக்கு செலுத்தப்படுவதும் உண்டு.

80 களின் நடுப்பகுதியில் இராணுவம் தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தில் வந்து முகாம் இடும்வரை ஒவ்வொரு கோடையிலும் உப்பு விளைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். நானும் சிறு பையனாக இருந்த காலத்தில் அப்பாவுடன் ஒருதடவை சென்று உப்பு அள்ளியிருக்கின்றேன். அன்று உப்பங்கழியில் பெரும் சனக்கூட்டம் திரண்டு நின்று உப்பை அள்ளி உரப்பைகளில் நிறைத்துச் சுமந்து சென்றார்கள். எங்கள் வீட்டிலும் இரண்டு உரப்பைகளில் உப்பு வந்து சேர்ந்தது. இது பல வருடங்களுக்கு உப்பு வாங்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்தது.

இராணுவம் கடல் நீர் தடுப்பு அணையின் கதவுகளை நிரந்தரமாக மூடியிருந்ததால் நான் வளரும் பருவத்தில் உப்பு ஒருபோதும் விளையவில்லை. எனினும் 90ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறி விடுதலைப் புலிகள் யாழ் திரும்பிய காலத்தில் கதவுகள் திறக்கப்பட்டு கடல் நீர் உள்ளே விடப்பட்டபோது உப்பு விளைந்தது. அப்போது பிரேமதாஸவுடனான பேச்சுக்கள் முறிந்து சண்டை ஆரம்பமான நாட்கள். உப்பு விளைந்திருந்தாலும் வானத்தில் குண்டுவீச்சு விமானங்கள் (சியாமாசெற்றியாக இருக்கவேண்டும்) அடிக்கடி பறந்து திரிந்து கொண்டிருந்ததால் ஊர்ச்சனம் உப்பு அள்ள தரவைப் பகுதிக்குச் செல்லவில்லை. எனது நண்பன் ஒருவன் (இப்போது கனடாவில் வசிக்கின்றான்) உப்பு அள்ளப் போவோமா என்று கேட்டான். வீட்டை விட்டு வெளியே போவதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் நிறைந்த அக்காலத்தில் காற்சட்டை, சேர்ட் போட்டு வெளிக்கிட்டால் எங்காவது தூர இடம் போகின்றேன் என்ற சந்தேகம் வந்து கேள்விகள் வரும். அதைத் தவிர்க்க செம்மண் தூசு படிந்த கலரில் இருந்த சாரம் ஒன்றையும் பழுப்பு சேர்ட் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நண்பனுடன் உப்பு அள்ளப் புறப்பட்டுவிட்டேன்.

உப்பங்கழியில் பாலைக் கொட்டி விட்டது போன்று உப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைய விளைந்திருந்தது. அதன் மேல் தெறிந்த சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசச் செய்தது. எங்கள் இரண்டு பேரைத் தவிர ஒரு சிலரே இடையிடையே அந்தப் பரந்தவெளியில் நின்றிருந்தோம். சரி வந்ததும் வந்தோம். உப்பை விரைவாக அள்ளிக்கொண்டு போகலாம் என்று இறங்கி உப்பைப் படைபடையாகப் பெயர்த்து எடுத்து உரப்பைகளில் நிறைத்துக்கொள்ள ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் மூன்று நான்கு குண்டுவீச்சு விமானங்கள் பலாலிப் பக்கம் இருந்து வந்து தாழ்வாகப் பறந்து வட்டமடித்து எங்களை நோட்டம் இட்டன. எங்களுக்குப் பயமாக இருந்தாலும் ஓடி ஒளிய ஒரு இடமுமில்லாத வெட்டைவெளி என்பதால் செய்வதறியாது நின்றோம். வட்டமடித்த விமானங்களும் நாங்கள் உப்பை அள்ள வந்தவர்கள்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டது போன்று நாவற்குழிப் பக்கமாகத் திரும்பின. கொண்டு வந்த உரப்பைகள் நிறைந்துவிட்டதாலும் பொம்பர்களைப் பார்த்த கிலியாலும் நாங்கள் தரவையை விட்டு வீதியை நோக்கி தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்து சேர்ந்தோம். அதன் பின்னர் உப்பு வெளியை இன்று வரை கண்ணால் காணவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தமாக எழுதிய கட்டுரைக்கு எந்த பின்னூட்டமும் இல்லையே ஏன்???

 

யாழ் வாசகர்கள் .........

 

 

கட்டுரை ;

தமிழரின் அறிவுச்சொத்து - ஆட்டைப் பெரிய திருவிழா

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133596

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனின் தலைப்புக்கு நன்றி. நேரடியாக முகம் காட்ட விருப்பம் இல்லாவிட்டாலும், நேரம் கிடைக்கும் போது... எனக்குத் தெரிந்த ஊர்களையும் பதிய முயற்சிக்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக எழுதிய கட்டுரைக்கு எந்த பின்னூட்டமும் இல்லையே ஏன்???

 

யாழ் வாசகர்கள் .........

 

 

கட்டுரை ;

தமிழரின் அறிவுச்சொத்து - ஆட்டைப் பெரிய திருவிழா

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133596

 

ஜே.டி.வி.,

உங்களது மனக் கவலை புரிகின்றது. உங்களது கருத்துக்களுக்கு... யாழ் வாசகர்கள் பின்னூட்டம் இடாததற்கு.. உங்களில் தான், பிழை என கருதுகின்றேன்.

 

காரணம்:

1) உங்களது பெயர், ஆங்கிலத்தில் வாயில்... நுழையாத பெயராக உள்ளது.

2) தலைப்பு எப்போதும்... மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் படியாக இருக்க வேண்டும்.

3) முக்கியமானது... நீங்கள் உங்கள் தலைப்பில் மட்டும் அக்கறையாக இருந்து... கடனே என்று பதிவுகளை போட்டு விட்டுப் போகாமல், மற்றவர்களின் தலைப்புக்களிலும்... உங்களது கருத்துக்களை தெரிவிப்பீர்களாக இருந்தால், நிச்சயம் உங்களது பதிவையும் நிச்சயம் விரும்பி வாசித்து கருத்து எழுதுவார்கள் என நினைக்கின்றேன்.

 

இது, எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே... தவறென்றால், மன்னிக்கவும். :)

கோப்பாய் தரவையிலை சோழக காத்து வாற நேரம் நாங்கள் சின்னனாய் இருக்கேக்கை  பட்டம் விடுறது , மாட்டு வண்டில் சவாரி ,  நீர்வேலி கந்தசாமி கோவில் முருகன் , கோப்பாய் தரவையிலை இருக்கிற நாச்சிமார் கோயிலடி தாளம் பத்தையடியிலை வேட்டையாடிப் போட்டு எங்கடை பிள்ளையார் கோயிலடிக்கு வந்து இளைப்பாறி போட்டு போறது பம்பலான விசையங்கள் .

 

பட்டம் விடுற நேரம் நாங்கள் பெரியாக்களுக்கு எடுபிடியள் மட்டும் தான் . பட்டத்தை தொட்டு பாக்க மட்டும் தான் அனுமதி தருவங்கள் . அதேமாதிரி மாட்டு வண்டில் சவாரி , நீர்வேலி சம்பு புல்லு குளத்தடியிலை தொடக்கி எங்கடை நாச்சிமார் கோயிலடி வரைக்கும் நடக்கும் . நாங்கள் சம்புபுல்லு குளத்தடியிலை போய் பூவரச மரங்களிலை ஏறி இடம் பிடிச்சு இருப்பம்.  அப்ப ரெண்டு ரேஸ் நடக்கும் . ஒண்டு திருக்கை வண்டில் மற்றது ரெட்டை மாட்டு வண்டில் ஓட்டம். திருக்கை வண்டில் ஓட்டம் தான் வேகம் கூடவாய் இருக்கும் . நாங்கள் காய் கூய் எண்டு ஓட்டுறாக்களை உசுபேத்துவம் . சிலபேர் ரகசியமாய் மாட்டுக்கு சாராயம் பருக்கி மாடுகளை ஓட்டுவினம் .

 

வேட்டை திருவிழாவும் பம்பலான விசையம் தான் . முருகன் நீர்வேலி வில்லு மதகடியாலை இறங்கி வந்து நாச்சிமார் கோயிலடிக்கு வந்து வேட்டை ஆட்டம் நடக்கும் . தாளம் பத்தயை சுத்தி நாலைஞ்சு தரம் ஓடிறது தான் முருகன்றை வேலை . நாங்களும் சாமிக்குப் பின்னாலை காய் கூய் எண்டு கத்திக் கொண்டு ஓடுவம் . தாளம் பத்தையுக்கை
கூட முயலும் கீரியலும் தான் இருக்கும் . பேந்து வேட்டையாடி போட்டு பிள்ளையார் கோயிலடியிலை வந்து முருகன் இளைப்பாறுவர் . அப்ப ஒரு பிரச்னை ஒண்டு நடந்தது , சாமி வந்தால் ஆர் சாமிக்கு காளாஞ்சி குடுக்கறது எண்டு ரெண்டு கோயில் பக்கத்துக்கும் முறுகுப்பாடு . இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும் எங்கடை சீவியத்தை நினைச்சு  .
கந்தசாமி கோயில் ஐயர் சொல்லுறார் ,

 

" ஒருத்தர் வீடு தேடி வந்தால் வீடுக்கறார் தான் மரியாதை குடுத்து உபசரிக்க வேணும் " 

 

எண்டு . எங்கடை ஐயர் சொல்லுறார் ,

 

" இவ்வளவு நாளும் நீங்கள் தானே காளாஞ்சி எடுத்துக் கொண்டு போனியள் இப்ப என்ன புது பழக்கம் . நீங்கள்தான் வந்து காளாஞ்சி எடுக்க வேணும் "

 

எண்டு . முருகன் பேந்த பேந்த முழிச்சு கொண்டு 2 மணித்தியாலமாய் நிக்கிறார் . பேந்து ஒரு மாதிரி சமாதானத்துக்கு வந்து காளாஞ்சி முருகனுக்கு காட்டீசினம் . இந்த ரெண்டு ஐயர்மாரும் லேசுப்பட்ட அக்களில்லை . வேதத்தை கரைச்சு குடிச்ச பிரபல்யமான ஆக்கள் . எங்கடை ஐயர் நயினை நாகபூசணி அம்மன் கோயில் பிரதான குரு . நீர்வேலி கந்தசாமி கோயில் ஐயாவும் லேசுப்பட்ட ஆளில்லை . எதை ஏன் எழுதிறன் எண்டால் ரெண்டு பேரின்றை ஈகோ பிரச்சனையளாலை கந்தசாமியார் மணித்தியாலக் கணக்காய் கோயிலடியிலை நிண்டதுதான் மிச்சம் .

அந்த நேரம் கோப்பாயிலை என்னை ரெண்டு சம்பவம் பாதிச்சுது .   நான் எழாம் வகுப்பு படிக்கிற நேரம் எங்கடை அண்ணையின்ரை ரெண்டு நண்பர்களின்ரை இறப்பு . ஒண்டு கொலை மற்றது தற்கொலை . முதலாவது லெக்சன் நடக்கிறதுக்கு முதல் நாள் பரமேஸ்வரன் கூட்டணிக்கு   லெக்சன் வேலை முடிச்சுப் போட்டு வீட்டை வாற நேரம் பொலிசாலை கைது செயப்பட்டு நீர்வேலி வில்லு மதகடியிலை வைச்சு சுட்டுப் போட்டு போட்டங்கள் . கைது செய்து சுட்டது இன்ஸ்பெக்ட்டர்  பத்மநாதன் . அடுத்த நாள் காலமை  கோப்பாய் தரவையடி அல்லோலகல்லோலப்பட்டுது . நாங்கள் எல்லாம் ஓடிப் போய் பாத்தம் . அங்கை பரமேஸ்வரன் குப்பற சம்பு புல்லுக்கை கிடந்தார். அவரின்ரை கொலை தான் முதலாவது அரசியல் படுகொலை.

ரெண்டாவது அண்ணையின்ரை நண்பரது தற்கொலை . அவரின்ரை தேப்பன் ஒரு வாத்தியார் . பிள்ளையளை வளந்தால் பிறகும் அடிச்சுதான் வளர்த்தவர் . அடி எண்டால் இம்மை வறுமை இல்லாத அடி . ஒருநாள் இந்த நண்பர் தன்ரை சைக்கிளை துலைச்சு  போட்டார் . தேப்பன்ரை அடிக்குப் பயந்து எங்கடை கேணியடிக்கு பின்னாலை இருந்த அவையின்ரை தோட்டதுக்குள்ளை மலத்தியன் மருந்தை குடிச்சுப் போட்டு கிடந்தார் . நாங்கள் போய் பாத்த நேரம் வாயுக்குள்ளாலை நுரை தள்ள தள்ள சத்தி எடுதுகொண்டிருந்தார் . ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயும் ஆளை காப்பாத்தேலாமல்  போச்சுது. நான் ஓடிப் போய் இதை பாத்ததாலை இரவு எனக்கு பயத்தாலை  நித்திரை வரேலை. 3 நாள் அம்மாவுக்கு பாக்கத்தில படுத்திருந்தன் .அடுத்த முறை நான் புகுந்த ஊர் பருத்தித்துறையை பத்தி எழுதலாம் எண்டு ஒரு எண்ணம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் என்நூர் பற்றி எழுதுவேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி கிருபன், நானும் எனக்கு தெரிந்த ஊரை பற்றி எழுதுகின்றேன்.
கரணவாயில் cambridge என்ற கல்வி நிலையத்தில் கல்வி கற்றேன்.
புகையிலைக்கு பேர் போன இடம். பனங் கிழங்கும். சோழன்கனையில் திராட்சை தோட்டம் இருந்தது ஞாபகம்.
தலைவர் பல காலம் தங்கி இருந்த ஊரும் இதுவே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி கிருபன், நானும் எனக்கு தெரிந்த ஊரை பற்றி எழுதுகின்றேன்.

கரணவாயில் cambridge என்ற கல்வி நிலையத்தில் கல்வி கற்றேன்.

புகையிலைக்கு பேர் போன இடம். பனங் கிழங்கும். சோழன்கனையில் திராட்சை தோட்டம் இருந்தது ஞாபகம்.

தலைவர் பல காலம் தங்கி இருந்த ஊரும் இதுவே

எழுதுங்கள் அஹஸ்தியன். தெரியாத பல விடயங்களை அறிய உதவவேண்டும்.

கேம்பிரிட்ஜில்தான் நானும் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் :) போன கோடையில் ஊருக்குப் போனபோது கலாசாலையை எட்டிப் பார்த்தேன். மாணவர்கள் எல்லாம் ரியூசனுக்கு சீருடை அணிந்துபோகின்றார்கள்!

தைப்பொங்கலுக்கு பட்டம் ஏற்றுவது நம்முடைய ஊரில் ஒரு சடங்கு. நானும் முன்னர் என்னைவிட உயரமான படலம் கட்டி ஏற்றியிருந்தேன். ஆனால் இன்று வல்லையில் மிகவும் பெரிதாக ஒரு படலம் ஒன்றை ஏற்றியிருக்கின்றார்கள் போலுள்ளது. படலம் காற்றில் அசைந்தாடும் படத்தைக் காணக்கிடைக்கவில்லை!

1514978_10152142103151163_125655961_n.jp

கரவெட்டி க்குள் கரவணவாய் அடக்கம்  ....கரணவாய்க்கு ஒரு எல்லை கரவெட்டி என்று சொல்லுவது நல்ல கொமடி ...கரணவாய் விரும்பியோ விரும்பாமாலோ கரவெட்டி தபாற் கந்தோர் பிரிவுக்குள் .....ஆக்கள் சொல்லுற கரவெட்டிக்குள் கரவெட்டி இருக்கில் இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நானும் முன்பு படலம் விட்டிருக்கின்றேன். வெள்ளை படடதாளுக்கு சிவப்பு ஒட்டி கீலம் எனக்கு பிடித்தது. எனக்கு விண்ணார் வாட்ட தெரியாது, ஆனால் அண்ணமாரிடம் இருந்து சுடலாம். ராக் கொடியும் விட்டிருக்கின்றேன்.

அப்பா பள்ளி (நவிண்டில் சந்தி ) கூடத்திக்கு பக்கத்துக்கு வடக்கு தெரு பொலிகண்டிக்கும், கிழக்கு தெரு வதிரிக்கும், மேற்கு தெரு உடுப்பிடிக்கும போகும். பொலிகண்டி நோக்கி போகும் போது அரை மைல் தூரத்தில் நாச்சி மார் கோவிலடியில் இடது பக்கம் போகும் இலந்தை காட்டு வீதியில் நூறு யார் தூரம் போனால், எள்ளங்குளம் மா வீரர் துயிலும் இல்லம் இருக்கிறது. எள்ளங்குளம் என்ற பெயர் சோழர் காலத்தில் வந்ததாக ஒரு கதை உண்டு. சோழர்களின் வாடிகள் வடக்கு பக்கமாக இருந்ததாகவும், அங்குள்ள குதிரைகளுக்கு நீர் தேவைகளுக்காக கடப்பட்டதே இதில் இருந்த குளம் (இப்ப இல்லை )

கிருபன் இதில் நீங்கள் பெரிய படம் இணைத்து இருக்கின்றீர்கள், எனக்கு யாழில் படங்கள் வெட்டி ஓட்டுவது சரி வாறது இல்லை.

இன்னுமொரு சுவாரசியமான சம்பவம் 26 வருடங்களுக்கு முன்பு நவிண்டில் சந்தியில் தான் நடந்தது, பின்பு எழுதுகின்றேன்.

Edited by Ahasthiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரவெட்டி க்குள் கரவணவாய் அடக்கம்  ....கரணவாய்க்கு ஒரு எல்லை கரவெட்டி என்று சொல்லுவது நல்ல கொமடி ...கரணவாய் விரும்பியோ விரும்பாமாலோ கரவெட்டி தபாற் கந்தோர் பிரிவுக்குள் .....ஆக்கள் சொல்லுற கரவெட்டிக்குள் கரவெட்டி இருக்கில் இருக்கலாம்

வடமராட்சியில் உள்ள விலாசங்கள் எல்லாம் உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கரவெட்டி (வடமராட்சி கிழக்குப் பகுதியைப் பற்றித் தெரியாது) போன்ற இடங்களில் உள்ள தபால் பிரிக்கும் கந்தோர்களுக்கு வருவது உண்மைதான். தபால் பிரிக்கும் கந்தோர் கரவெட்டி என்பதால் கரவெட்டிக் கிராமத்திற்குள் கரணவாய் அடங்கும் என்று சொல்வதுதான் கொமடி மதராஸி. :D

 கரணவாயில் இருப்பவர்கள் கரவெட்டிக்கு போட்டு வருகின்றேன் என்று சொன்னால் அவர்கள் கரவெட்டி என்ற இடத்திற்குப் போகவேண்டும். கரணவாய் கரவெட்டிக்குள் இருந்தால் பிள்ளையார் அம்மையையும் அப்பனையும் சுத்திவிட்டு மாம்பழம் வாங்கிய மாதிரி நின்ற இடத்திலேயே ஒரு சுற்று சுற்றிவிட்டு கரவெட்டிக்குப் போயிட்டு வந்துவிட்டேன் என்று சொல்லலாம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நானும் முன்பு படலம் விட்டிருக்கின்றேன். வெள்ளை படடதாளுக்கு சிவப்பு ஒட்டி கீலம் எனக்கு பிடித்தது. எனக்கு விண்ணார் வாட்ட தெரியாது, ஆனால் அண்ணமாரிடம் இருந்து சுடலாம். ராக் கொடியும் விட்டிருக்கின்றேன்.

அப்பா பள்ளி (நவிண்டில் சந்தி ) கூடத்திக்கு பக்கத்துக்கு வடக்கு தெரு பொலிகண்டிக்கும், கிழக்கு தெரு வதிரிக்கும், மேற்கு தெரு உடுப்பிடிக்கும போகும். பொலிகண்டி நோக்கி போகும் போது அரை மைல் தூரத்தில் நாச்சி மார் கோவிலடியில் இடது பக்கம் போகும் இலந்தை காட்டு வீதியில் நூறு யார் தூரம் போனால், எள்ளங்குளம் மா வீரர் துயிலும் இல்லம் இருக்கிறது. எள்ளங்குளம் என்ற பெயர் சோழர் காலத்தில் வந்ததாக ஒரு கதை உண்டு. சோழர்களின் வாடிகள் வடக்கு பக்கமாக இருந்ததாகவும், அங்குள்ள குதிரைகளுக்கு நீர் தேவைகளுக்காக கடப்பட்டதே இதில் இருந்த குளம் (இப்ப இல்லை )

கிருபன் இதில் நீங்கள் பெரிய படம் இணைத்து இருக்கின்றீர்கள், எனக்கு யாழில் படங்கள் வெட்டி ஓட்டுவது சரி வாறது இல்லை.

இன்னுமொரு சுவாரசியமான சம்பவம் 26 வருடங்களுக்கு முன்பு நவிண்டில் சந்தியில் தான் நடந்தது, பின்பு எழுதுகின்றேன்.

எல்லாமே சிறுவயதில் திரிந்த இடங்களாக இருக்கின்றன! ஊரில் இருந்திருந்தால் (எதிர்காலத்தில் அங்குபோய் மண்டையைப் போட்டால்) எள்ளங்குளம் சுடலைதான் இறுதிப்பயணமாக இருந்திருக்கும்!

நானும் அப்பா பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். விடிய வேளைக்கே போய் மாமரக் கஞ்சல்கள் எல்லாம் பொறுக்கி கூட்டித் துப்பரவாக்கியது எல்லாம் இன்னமும் அப்படியே நினைவில் இருக்கின்றது.

மாமரத்துக்குக் கீழே மணலைப் புருவம் மாதிரி கூட்டிவிட்டு பெஞ்சிலை ஒளித்துவிட்டு அதைக் கண்டுபிடிக்க புருவத்தை வெட்டி விளையாடியிருக்கின்றேன். ஒருமுறை நண்பனின் பென்சிலை ஒளித்துவிட்டுத் தேடினால் அது அகப்படவில்லை. நிறைய நேரம் மண்ணை அளைந்து தேடிய பின்னர் ஒருமாதிரிக் கண்டுபிடித்த பின்னர் நண்பன் சொன்ன "ஆத்துக்குள்ள வைத்துவிட்டு ஏன் *த்துக்குள்ள தேடினனீ" என்பது அதன் பின்னர் அடிக்கடி உபயோகக்பட்டிருக்கின்றது. :icon_mrgreen: 

 

யாழ் குடாநாட்டுக்கு வெளியிலை  யாரும் நீங்க எந்த இலங்கையில் எந்த இடம் என்று கேட்டால்  யாழ்ப்பாணம் என்று தான் சொல்லுவியள்  ...ஆனால் நீங்கள் இருக்கிற இடம் கரணவாய் இருக்கும்  ...யாழ்ப்பாணத்துக்குள்ளை இருக்கிற ஆட்கள் சொல்ற யாழ்ப்பாணம் யாப்னா டவுனை தான் .....நாம ..லண்டனில் இருக்கிறமில்லை.....நீங்க கரணவாயை கரவெட்டிக்குள் வரும் அல்லது நெல்லியடிக்குள் வரும் ..ஹொலன்டில் delft இடம் இருக்கு  இலங்கையில் நெடுந்தீவையும் delft என்று தான் சொல்லுவாங்கள் ...ஹொலண்டில் கடிதம் போட்ட நம்ம ஒரு ஆள் delft srilanka என்று போட்டதுக்காக....பிழையான விலாசம் என்று திரும்பி வந்த வரலாறு இருக்கு சார் ....தபால் கந்தோர் பிரிவு  ,postcode போன்றவை  இங்கை சரி அங்கை சரி வெறி வெறி முக்கியம் சார் ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டுக்கு வெளியிலை  யாரும் நீங்க எந்த இலங்கையில் எந்த இடம் என்று கேட்டால்  யாழ்ப்பாணம் என்று தான் சொல்லுவியள்  ...ஆனால் நீங்கள் இருக்கிற இடம் கரணவாய் இருக்கும்  ...யாழ்ப்பாணத்துக்குள்ளை இருக்கிற ஆட்கள் சொல்ற யாழ்ப்பாணம் யாப்னா டவுனை தான் .....நாம ..லண்டனில் இருக்கிறமில்லை.....நீங்க கரணவாயை கரவெட்டிக்குள் வரும் அல்லது நெல்லியடிக்குள் வரும் ..ஹொலன்டில் delft இடம் இருக்கு  இலங்கையில் நெடுந்தீவையும் delft என்று தான் சொல்லுவாங்கள் ...ஹொலண்டில் கடிதம் போட்ட நம்ம ஒரு ஆள் delft srilanka என்று போட்டதுக்காக....பிழையான விலாசம் என்று திரும்பி வந்த வரலாறு இருக்கு சார் ....தபால் கந்தோர் பிரிவு  ,postcode போன்றவை  இங்கை சரி அங்கை சரி வெறி வெறி முக்கியம் சார் ......

தபால் கந்தோர் பிரிவு கரவெட்டியாக இருப்பது சரி. ஆனால் கரணவாயும், கரவெட்டியும், துன்னாலையும் வேறு வேறு கிராமங்கள்.

எனக்குக் கரவெட்டிக் கிராமத்தைப் பற்றி அதிகம் தெரியாது. கோழிப்புக்கை என்ற சொல்லைக் கூட ஊரில் இருக்கும்போது கேள்விப்பட்டதில்லை! மதராஸி கரவெட்டியைப் பற்றி எழுதினால் தெரியாத விடயங்களை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

கிருபன் உங்கட காலத்திலை ...காலமை விடிய ஆள் அரவம் குவிய முந்தி  ..மண்டானுக்காலை ..சாவகச்சேரி சரசாலை இடையிலை ஒடுற ..யாழ்தேவி மெயில் றயின் ..குட்ஸ் ரயின்  சத்தங்கள் கேட்கிறதில்லையே ......ஏனென்றால் தூரத்தில் கேட்டும் கேட்காமால் கேட்கும் ரயில் சத்தத்தின் ரிதம் உன்னத சங்கீதம் மாதிரி இருக்கும் அது தான் கேட்கிறன் ...முன்னாள் பிரதமர் இந்திரா கந்திக்கு பிடித்த விசயங்கள பத்தில் ..தூரத்தில் கேட்கும் ரயில் சத்தமும் ...மழை தூறல் மண்ணில் விழுந்தாப்போல் ஏற்படும் வாசமுமாம்.....தவழ்ந்து வளந்த இடத்திலை ...மழை காலங்களில்  பருத்துத்துறை  கடல் அலை சத்தமும் கேட்கும் உந்த ரயில் சத்தமும் கேட்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கட காலத்திலை ...காலமை விடிய ஆள் அரவம் குவிய முந்தி  ..மண்டானுக்காலை ..சாவகச்சேரி சரசாலை இடையிலை ஒடுற ..யாழ்தேவி மெயில் றயின் ..குட்ஸ் ரயின்  சத்தங்கள் கேட்கிறதில்லையே ......ஏனென்றால் தூரத்தில் கேட்டும் கேட்காமால் கேட்கும் ரயில் சத்தத்தின் ரிதம் உன்னத சங்கீதம் மாதிரி இருக்கும் அது தான் கேட்கிறன் ...முன்னாள் பிரதமர் இந்திரா கந்திக்கு பிடித்த விசயங்கள பத்தில் ..தூரத்தில் கேட்கும் ரயில் சத்தமும் ...மழை தூறல் மண்ணில் விழுந்தாப்போல் ஏற்படும் வாசமுமாம்.....தவழ்ந்து வளந்த இடத்திலை ...மழை காலங்களில்  பருத்துத்துறை  கடல் அலை சத்தமும் கேட்கும் உந்த ரயில் சத்தமும் கேட்கும்

எனக்கு ரயில் சத்தம் கேட்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு ரயில் வருவது நின்றுவிட்டது. முதல் முதலாக ரயிலைப் பார்த்தது மதவாச்சியில். அதிலேயே ஏறி கொழும்பு வந்தபின்னர் இலங்கையில் ரயிலில் ஏறியதில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் விடுதல் - 1

முதன்முதலாக எப்போது பட்டம் விட்டதென்று இப்போது ஞாபகத்தில் துப்பரவாக இல்லை. நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே நான் பட்டம் ஏற்றியதுதான் இதற்கான காரணம்! அனேகமாக எல்லாக் குழந்தைகளும் முதலில் ஏற்றிய பட்டம் வாலாக்கொடியாகத்தான் இருக்கும். எங்கள் ஊரில் இதனை நாங்கள் வெளவால் என்று அழைப்போம். இது இடுகுறிப் பெயரா அல்லது காரணப்பெயரா என்று தெரியாது. அதன் தோற்றத்தில் இருந்தே வந்திருக்கலாம் என்று கருதுகின்றேன். ஆனால் வெளவால் பட்டம் என்றால் ஒரு சில மைல்களில் இருப்பவர்களுக்கு என்னவென்று தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
 
kites_corner.gif

எமது பட்டம் ஏற்றும் காலம் மாரியில்தான் ஆரம்பிக்கும். புரட்டாதி ஐப்பசியில் நல்ல மழையைத் தரும் வாடைக்காற்றுக் காலத்தில்தான் எங்கள் பட்டங்கள் பறந்தன. கார்த்திகை, மார்கழியைக் கடந்து தைப்பொங்கல் அன்று உச்சத்தை அடையும். தைப்பொங்கல் அன்று வானம் முழுவதும் பட்டங்களால் நிரப்பப்பட்டிருக்கும் காட்சி இப்போதும் கண்முன்னால் நிற்கின்றது. அதன் பின்னரும் சிலர் தைப்பூசம் வரையும் பட்டம் விடுவதைத் தொடர்வது உண்டு. தைப்பூசம் உத்தியோகப்பற்றற்ற "கொடியிறக்கல்" ஆக இருந்திருக்கலாம்.

நானும் எனது முதலாவது பட்டத்தை வெளவாலில்தான் தொடங்கியிருப்பேன் என்று நினைக்கின்றேன். இது மிகவும் சுலபமாகச் செய்யக்கூடியது. தேவையானவை 1/4 பட்டத்தாள் (ஒரு முழுப்பட்டத்தாளில் நாலு பட்டங்களும், கீலங்களும், கூஞ்சங்களும் செய்யலாம்!), இரண்டு தென்னோலை ஈர்க்குகள் (ஒன்று தடிப்பாகவும் ஒன்று இலகுவில் வளையக்கூடியதாகவும் இருக்கவேண்டும்), ஒட்டுவதற்குக் கூப்பன்மாவில் கிண்டிய பசை! சிலுவைக் குறி வடிவில் ஈர்க்குகளைக் கட்டி நெடுக்குப் பாட்டிலும் குறுக்குப் பாட்டிலும் கீலங்களை ஒட்டவேண்டும். குறுக்கு ஈர்க்கை முறிக்காமல் இருபக்கமும் சீராக வளைத்தால் பட்டம் சரிக்காது. அது ஒன்றுக்குத்தான் நிபுணத்துவம் தேவை. கூஞ்சங்களை இரண்டு பக்கமும் ஒட்டி பசையைக் காயவிட்டால் போதும். பின்னர் பழைய சீலையைக் கிழித்து வாலைக் கட்டி, தையல் நூலால் முச்சையைக் கட்டினால் பட்டம் தயார். தையல் நூல்தான் பட்டம் ஏற்றவும் பாவிப்போம். மெல்லிய காற்றிலும் வெளவாலை முற்றத்தில் கூட ஏற்றிவிடலாம்.

பெரியம்மா வீட்டோடு இருக்கும் ஒழுங்கையில்தான் பட்டம் ஏற்றிப் பழகிய ஞாபகம். ஒழுங்கையின் இடப்பக்கமாக வீடுகளும் வலப்பக்கமாக பெரிய தோட்டமும் இருந்தன. காற்று இடையிடையே பலமாக வீசும்போது பட்டம் ஏற்ற வசதியான இடம். ஆனால் இடப்பக்கம் தந்திக் கம்பிகளும் வலப்பக்கம் மின்சாரக் கம்பிகளும் போனதால் அவற்றுக்குள் பட்டத்தைச் சிக்குப்பட வைக்காமல் ஏற்றுவதில்தான் கெட்டித்தனம் தெரியும். மின்சாரக் கம்பிகளில் சிக்குப்பட்டு அதை மொக்குத்தனமாக எடுக்கவெளிக்கிட்டு முறித்த பட்டங்கள் அதிகம்!

சில நேரங்களில் ஒன்றுவிட்ட பெரியண்ணன் படலம் கொண்டுவருவான். அவனுக்கு பட்டம் பிடிக்கும் வேலையும் பார்க்கவேண்டும். பட்டம் பிடித்துவிடுவதும் இலகுவான வேலையாய் இருந்ததில்லை. நேராக செங்குத்தாகப் பிடிக்கவேண்டும். வாலில் புல்லுகள் சிக்குப்படாமல் நேராக விடவேண்டும். சாதுவாகக் கொஞ்சம் சரித்துப் பிடித்தாலும் பட்டம் ஒருபக்கம் சரித்துக் கொண்டுபோய் கம்பிகளுக்குள் செருகிவிடும் அல்லது வேலிகளில் இடித்துவிடும். பலமுறை ஏச்சுப் பேச்சு எல்லாம் பெரியண்ணனிடம் வாங்கி ஒருவாறு பட்டம் பிடித்துவிடுவதில் உள்ள நுணுக்கங்களை எல்லாம் எட்டு கற்றுத் தேர்ந்துவிட்டேன்.

இன்னொரு ஒன்றுவிட்ட அண்ணன் தாசனுக்கு ஒழுங்கையில் பட்டம் விடப்பிடிக்காது. அவனுக்குப் பெரிய வெட்டையான இடம் வேண்டும். அதோடு அவனுக்குப் படலம் மாதிரி எல்லோரும் ஏற்றும் பட்டங்களிலும் பார்க்க பெட்டிப்பட்டம், பிராந்து, கொக்கு மாதிரி வித்தியாசமான பட்டங்கள் ஏற்றுவதில்தான் விருப்பம். அவனுக்கு பெட்டிப்பட்டம் பிடித்துவிட வைரவர் வெட்டைக்குப் போவோம். தாசன் எப்பவும் பட்டத்தைக் கிழக்கால சரித்துப் பிடித்துவிடத்தான் சொல்லுவான். அது வெட்டைக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள வீட்டிற்கு இழுத்துக்கொண்டு போய்விழும். அந்த வீட்டினுள் பட்டத்தை விழுத்தவேண்டும் என்பதுதான் தாசனின் குறிக்கோள். அந்தச் சின்ன வயதில் அதன் காரணம் உடனடியாகப் புரியவில்லை. அந்த வீட்டில் உள்ள பெட்டையை தாசன் "பாத்து"க்கொண்டு திரிந்தது பிறகுதான் புரிந்தது.

என்னைவிட 3-4 வயது பெரியவன் செட்டி. அவன்தான் எனக்குத் தெரிந்து பட்டம் ஒட்டிவிற்கும் "தொழிலை" சின்னவயதிலேயே ஆரம்பித்தவன். பள்ளிகூடம், ரியூட்டரி என்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும் பட்டம் ஏற்றும் காலங்களில் இது வருமானம் தரும் ஒரு தொழில்! வெளவால் பட்டமும், தென்னீர்க்கில் கட்டிய ஒருமுழப் பிராந்துப் பட்டமும்தான் அவனுடைய உற்பத்தி. அதிலும் ஒருமுழப் பிராந்துப்பட்டம் விற்பதில்தான் அவன் பிரசித்தி பெற்றிருந்தான். தொழில் மிகவும் சுத்தம். எல்லாப் பிராந்துப் பட்டங்களையும் வீட்டுக்குப் பின்னால் உள்ள சிறுவெட்டையில் ஏற்றிக் காட்டித்தான் விற்பான். எல்லாமே முதல் தடவையில் ஒழுங்காக ஏறாது. சிலதுக்குத் தலைப்பாரம் குத்தத் தொடங்கும். அவைக்கு "பெல்லி" கட்டவேண்டும். அலம்பல் குச்சிகளை வைத்துக் கட்டி சமப்படுத்துவதுதான் இலகுவானது. சிலது இடது அல்லது வலப் பக்கமாகச் சரித்துக்கொண்டு போய்விழும். அவற்றின் மொச்சையைத் திருத்தவேண்டும். பட்டம் ஒழுங்காக ஏறிய பின்னர் அதை வாங்கிக்கொண்டு போனவர் எதுவும் பிழையென்று வந்தால் இலவசமாகவும் திருத்திக்கொடுப்பான். விடியக் காலமையில் அவன் வீட்டுக்குப் போய் இருந்து பட்டம் கட்டுவதையும், ஒட்டுவதையும் பார்ப்பதுதான் என்னுடைய வேலை.

தொடர்ந்து பார்த்துப் பார்த்து பழகியதாலும் சில தொட்டாட்டு வேலைகளையும் செய்ததாலும் எனக்கும் பிராந்து கட்டவும், செட்டை, குண்டி வளைக்கவும், ஒட்டவும் பழகிவிட்டது. என்னைப் போலவே எனது நெருங்கிய நண்பன் நொக்கியும் பழகிவிட்டான்.அப்போது நொக்கியும் நானும் பாலர் பாடசாலையில் இருந்தாலும் பட்டம் கட்டி விற்றுக் காசு உழைக்கலாம் என்று முடிவு செய்தோம். செட்டியின் தொழில்தர்மங்களை எமது வியாபார மொடலாகவும், ஆனால் அவனுக்குப் போட்டியாக இல்லாமல் கொஞ்சம் மாறுதலாகவும் செய்யலாம் என்று தொடங்கினோம். ஒன்றரை முழப் பிராந்தை மூங்கிலில்தான் கட்டவேண்டும்; ஈர்க்கில் கட்டினால் சவண்டு வளைந்துவிடும். எனவே பிராந்தை இரட்டைப்பட்டு ஈர்க்குகள் கொண்டு ஒன்றேகால் முழமாகக் கட்டுவது என்றும் , ஊருக்கு வடக்குப் பக்கமாக இருக்கும் பொடியள் பட்டங் கட்டுவதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்ததால் அங்கு கொண்டுபோய் சந்தைப்படுத்துவது என்றும் தீர்மானித்தோம். என்னிடம் பணம் புழங்குவது குறைவு என்பதால் பட்டத்தாளை நொக்கியே வாங்குவான். மற்றைய மூலப்பொருட்களான ஈர்க்கு, பசை, தையல் நூல் எல்லாம் வீட்டிலேயே எடுக்கலாம். வண்டடித்த கூப்பன் மாவை இலவசமாகக் கடைகளில் இருந்தே பெற்றுக்கொண்டோம். பட்டத்தாள் நொக்கி வாங்குவதால் செலவு போக வரும் இலாபத்தில் பெரும்பகுதி (60% என்று நினைக்கின்றேன்) அவனுக்குப் போகும். வடக்குப் பக்கமாக வசித்த நண்பர்களுக்கு பிராந்துப் பட்டத்தையும், விடுப்புப் பார்க்கவரும் குழந்தைகளுக்கு வெளவால் பட்டத்தையும் விற்பதுதான் எமது நோக்கமாக இருந்தது. இதில் வெற்றியும் பெற்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் வாசனை நன்றாக உள்ளது தொடருங்கள் கிருபன்.
நாங்களும் வௌவால் என்றே அழைப்பம். பிராந்துக்கு குண்டி வளைப்பு பிழைத்தால் அது நகரையாக மாற்றலாம் என்று நினைகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பட்டம் கட்டுவது, விண் சீவிக் கட்டுவது ( குதிக் காலில் விண்ணை வைத்து  போத்தில் ஓடால் அமர்த்திப் பிடித்து மெல்லிசாய் சீவவேண்டும்) எல்லாம் விருப்பம். பின்நாளில் சையிக்கிள் டியூப்பை நேராய் வெட்டிக் கட்டியும் பட்டம் விட்டிருக்கிறம். ஆனால் பிரம்பு போல் வராது. :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் விடுதல் - 2

 

ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது விண்கட்டிப் படலம் ஏற்றுவதில் விருப்பம் வந்தது. படலம் செவ்வகமாக இருந்ததால் அதைக் கட்டுவது இலகுவாக இருந்தது. ஆனாலும் மூலை ஓடாமல் பார்க்கவேண்டும். ஒரு தச்சனுக்கு உரிய கவனத்துடன் ஒவ்வொரு தென்னந்தடியையும் சீராக்கி இணக்கினேன். இந்தத் தென்னந்தடிகளை கிடுகுவேலித் தென்னம் மட்டைகளில் இருந்து வெட்டித்தான் எடுப்பது வழக்கம். தடிகளைச் சீராக்கி சுண்டுவிரலில் வைத்துப் "பலன்ஸ்" பார்த்துக் கட்டுவதுதான் மிகவும் விருப்பமானது. வெள்ளைத்தாளை முதலில் ஒட்டி அதன் மேல் நீலமும் சிவப்புமாக செங்கோண முக்கோணங்களை பல வகையிலும் ஒட்டுவதுதான் சிறப்பு. இதற்காகவே கொப்பிகளில் பட்டங்களின் ஒட்டுக்களை வரைந்து பார்த்து புதுப்புது வடிவங்களைத் தயார் செய்தேன். எதிலும் புதுமை வேண்டும் என்பதுதான் எப்போதுமே எனது கொள்கையாக இருந்துவந்தது!

விண் பூட்டுவதற்கு முதலில் சரியான விசையைத் தயார் செய்யவேண்டும். கமுகம் சிலாகைதான் மிகவும் சிறந்தது. கமுகம் சிலாகையை நன்றாக அழுத்தமாகச் சீவி, சரியாகக் பலன்ஸ் பார்த்து ஓரளவு வளைத்தால் விசை தயார். நடுச்சென்ரரை அடையாளப்படுத்த கத்தியைக் கொஞ்சம் ஆழமாக்கிக் குறிவைத்தால் விசை வளைக்கும்போது முறிந்துவிடும். பல விசைகளை முறித்தே இந்தப்பட்டறிவையும் பெற்றேன். கூவை செய்ய நாங்கள் பெரும்பாலும் பாவிப்பது முள்முருக்கம் தடிதான். நடுவில் கோறையாக இருப்பதால் இலகுவாகக் கூவை செய்யலாம். ஆனாலும் வெடிக்காமல் நல்ல பலமான கூவை வேண்டுமென்றால் கிளுவம்தடிதான் பாவிக்கவேண்டும். சத்தகத்தால் கிளுவம்கூவை செய்வதற்கு நிறையப் பொறுமை வேண்டும். அடுத்தது நார். உரப்பை நார்தான் நன்றாகக் கூவும். அதிலும் யூரியாப் பைதான் எனது தேர்வு. அமோனியாப்பை நார் வித்தியாசமான ஒலியைத் தரும். ஆனால் விரைவில் வெடித்து, விண் அளறத் தொடங்கிவிடும் என்பதால் பெரிதாகப் பாவிப்பதில்லை. பார்சல் ரேப்பையும் நாராகப் பாவிக்கலாம். ஆனால் அது கிடைப்பதரிது. இளம் வடலி மட்டையில் இருந்தும் பனம்நார் பிசுங்கானால் வாட்டலாம். அதிகம் முயன்றும் அதில் தேர்ச்சிபெற முடியவில்லை.

இழைக்கயிறுதான் வால் (வாலா என்று சொல்லுவோம்!). இரட்டைப்பட்டு அல்லது மூன்று பட்டு பாவிப்போம். வாலின் கனத்தைப் பொறுத்துத்தான் பட்டத்தின் செயற்பாடு இருக்கும். வால் நீளமாக இருந்தால் பட்டம் சாதுவான மாணவன் போல அமைதியாக இருக்கும். குறைந்தால் குத்தத் தொடங்கி அறுத்துக்கொண்டு ஓடியும் விடும். ஆகவே அதிகம் கூடாமலும் குறையாமலும் வாலாவை படுபட்டாகச் சரிக்கட்டிவிடுவதில்தான் எங்களின் நிபுணத்துவம் உள்ளது. அத்தோடு மொச்சையை ஆட்டத்தில் விட்டால் பட்டல் ஜாடிக்கொண்டு நிற்கும். விண்ணும் அதற்கு ஏற்றாற்போல் சுருதி கூடிக் குறைந்து கேட்கும். எங்கள் ஊரில் விண் கூவுவதை வைத்தே யாருடைய பட்டம் ஏற்றப்பட்டுள்ளது என்று அறிய முடிந்திருந்தது.

மொச்சை கட்டுவதும் ஒரு கலைதான். எனக்குத் தெரிந்து மூன்றுவகை மொச்சை உள்ளது. இறுக்கமாகக் கட்டினால், அதாவது மேல் இரண்டு மூலைகளில் இருந்து வரும் நூல்கள் நடுப்பகுதிக்குப் மேல் இணைந்தால், பட்டம் அரக்கிக் கொண்டு நிற்கும். கீழ்க்காற்றில் நின்று கெதியாக விழுந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆக இளக்கிக் கட்டினால், இரண்டு மூலைகளில் இருந்து வரும் நூல்கள் நடுப்பகுதிக்கு அதிகம் கீழே சென்று இணைந்தால், பட்டம் அம்மத் தொடங்கிவிடும். அதாவது ஏற்றக்கோணம் 70 பாகைக்கு மேலே வந்து நூல் வண்டி வைத்து தொய்ந்து பட்டம் பொத்தென்று தலைகீழாக விழுந்துவிடும். ஆட்டத்தில் விட்டால்தான் பட்டம் மேல்க்காற்றில் நின்று ஜாடி ஆடும். ஆட்டம் கூடக் கூட நூலில் இழுவைகூடும். பட்டம் கீழ்க்காத்துக்கு வந்துவிடும். கீழ்க்காத்து குறைவாக இருப்பதால் நல்லபிள்ளை மாதிரி மீண்டும் மேலே நிதானமாகப் போகும். போன பின்பு தனது ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும்.

நான் ஒரு ஒன்றேகால் முழப்பட்டத்தை கனகாலமாக வைத்திருந்தேன். ரமேசன் அதன் விண்ணில் ஆசைப்பட்டு பட்டத்தை விலைக்குத் தருமாறு கேட்டான். நானும் பட்டத்தையும் விண்ணோடு சேர்த்து விலைபேசி முடித்து அடுத்தநாள் தருவதாக ஒப்புக்கொண்டேன். விற்பதற்கு முதல் இராக்கொடிக்கு விடவேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் என்னிடம் கால் இறாத்தல் பன்னிரண்டு இழை நூல்தான் இருந்தது, அது இராக்கொடிக்குக் காணாது. இன்னும் ஒரு காறாத்தால் நூல் இருந்தால் பட்டம் பனிக்குக் கீழே விழாமல் இருக்கும் என்று எண்ணி, நண்பன் சண்ணிடம் அவனுடைய காறாத்தல் நூலைத் தருமாறு கேட்க அவனும் ஒப்புக்கொண்டான். இரவு ஏழு மணியளவில் நல்ல அமாவாசை இருட்டில் அவனும் நானும் நூல் இளக்கப் போனோம். அவன் பட்டத்தைப் பிடித்து வைத்திருக்க நான் அடிக்கட்டையை அவிட்டு அடுத்த நூற்கட்டையை இணைப்பதுதான் வேலை. 12 இழை நைலோன் நூல் என்பதால் பிரி கழண்டுவிடாமல் இருக்க நுனியில் ஒரு முடிச்சுப் போடவேண்டும். நான் நுனியில் முடிச்சைப் போட்டேன். அப்போது சண் நூலை முடிந்துவிட்டாயா என்று கேட்டான். நானும் அவன் நுனியில் முடிச்சுப் போட்டதைத்தான் கேட்கின்றான் என்று நினைத்து ஓம் என்றேன். அவன் எல்லாம் சரியென்று நினைத்து நூலைப் பட்டென்று கைவிட்டுவிட்டான். நான் நூல் தலைப்பை மட்டும் பிடித்துக்கொண்டு நின்றதால் இறுக்கிக் பிடிக்கமுடியவில்லை. நூல் கைநழுவிப் போக பட்டத்தை நல்ல இருட்டுக்குள் கைவிட்டுவிட்டோம்.

என்ன நடந்தது என்பதை உணர இரண்டு நிமிடங்கள் பிடித்தது. கதைப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. எனக்கு அழுகையும் கோபவும் முட்டியது. ஆனாலும் ஆண்பிள்ளையாச்சே அழமுடியுமா!. நன்றாக இருட்டிவிட்டதால் பட்டம் எங்கே விழுந்திருக்கும் என்றும் தெரியாது. இருட்டில் தோட்டங்களுக்குள் உழக்கவும் முடியாது. எனவே இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் திட்டியபடி பட்டத்தைத் தேடிப் போனோம். வழுக்கல், தேனித் தோட்டங்களைத் தாண்டி பிள்ளையார் கோயிலையும் தாண்டியபோது பட்டத்தின் விண் கூவும் சத்தம் கேட்டது. பட்டம் இன்னும் விழுந்துவிடவில்லை. மேலேதான் நிற்கின்றது என்று புரிந்தது. காறாத்தல் நூலோடு பட்டம் போனதால் நூல் எங்கேயோ பனையில் சிக்கி இருக்கவேண்டும். வழுக்கல் தோட்டத் தலைப்பிலுள்ள பனங்கூடலுக்குள்தான் நூல் சிக்கியிருக்கவேண்டும் என்று யூகித்தோம். என்றாலும் பட்டத்தை எடுக்க விடியக்காலமைதான் வரவேண்டும் என்பதால் இருவரும் அடுத்த நாள் வரலாம் என்று முடிவு செய்துவிட்டு வீடுபோய்ச் சேர்ந்தோம்.

இரவிரவாக நித்திரை வரவில்லை. எப்படியோ உறங்கிப்போனேன். பட்டம் ஜாடிக்கொண்டு நிலாவெளிச்சத்தில் நிற்பதுமாதிரிக் கனவெல்லாம் வந்தது. கண்விழித்து எழுந்தபோது பலாரென்று விடிந்துவிட்டிருந்தது. அவசர அவசரமாக தோட்டங்களுக்குக் குறுக்கால் ஓடியும் நடந்தும் பிள்ளையார் கோயில் பக்கம்போனபோது பட்டத்தைக் காணவில்லை. பட்டம் இரவுப் பனிக்குள் கீழே விழுந்திருக்கவேண்டும். ஒரு கிழவன் பொயிலைத் தோட்டத்திற்குள் நின்று நூல் இழுப்பது தெரிந்தது. நம்பிக்கையோடு போய் விசாரித்தபோது பட்டம் இல்லை என்று சொன்னார். கொஞ்ச நூல்தான் கிடைத்தது. யாரோ அறுவார் விடியமுன்னரே வந்து பட்டத்தை எடுத்து ஒளித்துவிட்டார்கள் என்று தெரிந்தது. பிரியப்பட்ட படலத்தை இழந்துவிட்டது மிகவும் துக்கத்தைக் கொடுத்தது. விலை பேசிய காசும் கிடைக்கவில்லை. அருமந்த விண்ணும் பட்டமும் இல்லையென்று ஆகிவிட்டது.

என்றாலும் மனம் தளரவில்லை.பலகாலமாக கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்த ஒன்றரை முழ விண்பிராந்தைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டேன். நல்ல நீளமான பூவரசம் தடியை முள்ளத்தண்டாகவும், மூங்கில்தடிகளை செட்டைக்கும், குண்டிக்கும் இணக்கி, கமுகம் சிலாகையில் விசையும் பூட்டி பிராந்துத் பட்டத்தைத் தயார் செய்து பகலில் ஜாடி ஆடவும், முச்சையைக் கொஞ்சம் இளக்கி இரவில் இராக்கொடியும் விட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊர் வாசனை நன்றாக உள்ளது தொடருங்கள் கிருபன்.

நாங்களும் வௌவால் என்றே அழைப்பம். பிராந்துக்கு குண்டி வளைப்பு பிழைத்தால் அது நகரையாக மாற்றலாம் என்று நினைகின்றேன்.

நகரை என்ற பெயரை நினைவுபடுத்தியதற்கு நன்றி அகஸ்தியன். எங்கோ பக்கத்தில்தான் இருந்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது!! 

 

எனக்கும் பட்டம் கட்டுவது, விண் சீவிக் கட்டுவது ( குதிக் காலில் விண்ணை வைத்து  போத்தில் ஓடால் அமர்த்திப் பிடித்து மெல்லிசாய் சீவவேண்டும்) எல்லாம் விருப்பம். பின்நாளில் சையிக்கிள் டியூப்பை நேராய் வெட்டிக் கட்டியும் பட்டம் விட்டிருக்கிறம். ஆனால் பிரம்பு போல் வராது. :rolleyes::D

சைக்கிள் ரியூப்பும், பிரம்பும் நாங்கள் பாவித்ததில்லை. புது மாதிரியாகச் செய்திருக்கின்றீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

படலம் விடுவதுதான் எனக்குப் பிடித்தது. எங்கள் ஊரில் சில ஆஸ்தான வித்துவான்கள் இருந்தார்கள். அவர்களிடம் கட்டித்தரும்படி கொடுத்துவிடுவேன். கலர் பேப்பர் ஒட்டும் வடிவங்களுக்கும் ஏதேதோ பெயர்கள் இருந்த ஞாபகம். மறந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரசித்து வாசித்தேன் கிருபன் அண்ணா. கரணவாய் நெல்லியடி பகுதி பெடியள் தான் வாலாக்கொடியை வெளவால் கொடி என்று கூப்பிடுவார்கள். மற்றயது உங்களது மொச்சை எங்களது முச்சை. நாங்கள் அதிகம் பாவித்த மூலப்பொருள் மூங்கில் தான். அதிலும் கடலில் மிதந்து வரும் கம்போடியா, தாய்லாந்து மூங்கில்கள் திறமானவை. விசைக்கு மட்டும்தான் கமுகம் சிலாகை. பனம் மட்டையும் அரிதாகப் பாவிப்பதுண்டு. விண்ணிட்கு பிரபலமானது, இலகுவானது பேப்பர் ரிபன் ஆனால் வெடிக்காமல் மெல்லிசா கிழிப்பது கடினம், அப்பிடிக் கிழிச்சாலும் விசையின் விசை கூடினால் பாதியாக அறுந்துவிடும். கூவையை  நாங்கள் கூவக்கட்டை என்று தான் கூப்பிடுவோம். பிராந்து கட்டும் பூவரசம் தடியை சுடுவதில்லயா? நாங்கள் பிலாந்து கட்டுவது என்றால் பலமாதங்களாக, பட்ட சீசன் துடங்க முதலே பூவரசம் தடியைப் பார்த்துவச்சு வெட்டி அதைப் பச்சையாக குப்பையில்எரிஞ்சு முடிஞ்ச சூட்டில் போட்டு வாட்டுவதுண்டு இது அந்தப் பூவரசம் தடியை இன்னும் உறுதியாகவும் பாரம் குறைந்ததாகவும் ஆக்கும் (கிட்டத்தட்ட நவீன விமானங்களின் செட்டைகளை அவனிலே பேக் செய்து உறுதியாக்குவது போல).  பிராந்தின் நடுத் தடியை ஐந்தாக பிரிக்கும் முறை சுவாரசியமானது. தடியின் அளவுக்கு நூலை எடுத்து அதை ஐந்தாக மடித்து அதன் மூலம் தான் சத்தகத்தால் நடுத்தடியில் அளவு குறிப்போம். ஒருநாளும் பிழைத்தது இல்லை. பிலாந்து குண்டி வளைப்பதற்கு தோல் மூங்கில் தான் சிறந்தது. குதிக்காலில் வைத்து கத்தியால் வாட்ட வேண்டும். பிராந்து ஒருபோதும் இராக்கொடி விட்டதில்லை. பிராந்து, கொக்கு லக்ஸ்சறியான பட்டங்கள் என்ற எண்ணத்தால் இராக்கொடி விட்டு அவற்றை இழக்க விரும்பவில்லை. பிலாந்தின் செட்டைக்கு  வாணிஸ் ஒட்டுவதுதான் வழமை. தலைக்கு கம்பியை வளைத்து கூராக்கி வெள்ளை டிசுவை கீலங்களாக வெட்டி கோர்த்து சொண்டுக்கு முள்முருக்கம் செத்தலை/ பூவரசம் தடியை கூம்பு போல சீவி, மதிலிலெ  தேச்சு சிவத்த டிசு ஒட்டி கம்பியின் முன் கூரிலெ பொருத்தி விடுவோம். பிலாந்து/கொக்கு/பெட்டிக்கொடி ஊரினுல்லெ நேரடியாக இழுத்து ஏற்றுவதில்லை முதலே எத்தின படலம்/வட்டாக்கொடியின் நூலிலே காப்பு/குண்டு கட்டி அந்தக் குண்டை மேல்க் காத்துக்கு இழக்கி பிலாந்திலே காத்துப்பிடிக்க வச்சு, பின்னர் வலிச்சு முச்சைகலை சரிப்படுத்தி கட்டம் கட்டமாகத்தான் ஏற்ற வேண்டும். பிலாந்துக்கு எல்லோராலும் முச்சை கட்ட முடியாது. அத்துடன் முச்சை கட்டிய பின்னர் நிலத்துக்கு சமாந்தரமாகப் பிடிக்கும் போது பிலாந்து நிலத்துக்கு சமாந்தரமாக இருந்து பின்னர் தலை கொஞ்சம் மேலே எழ வேண்டும். பிலாந்தை எப்போதும் தலையிலே - கொண்டையின் கம்பி இறுக்கி இருக்கும் நடுத்தடியின் நுனி பிடித்து தான் தூக்க வேண்டும். காலுக்குள், சைக்கிள் சில்லுக்குள் நூல், வால் மாட்டுப்படாமல் பட்டங்களை கொண்டு போவதும் கடினமான விடயம். வீட்டினுள் இருக்கும்போது விண் கூவினால் "டேய் யாரோ பட்டம் கொண்டு போறாங்களடா....." என்று சொல்லி வீதிக்கு ஒடிவருவதுண்டு.    

வழமையாக இராக்கொடி விடும்போது மேலே இரண்டு வட்டாக்கொடிகளை தொடுத்து விடுவோம், காரணம் வட்டாக்கொடி 8 மூங்கில் படலத்துடன் ஒப்பிடும்போது 4 மூங்கில் என்பதால் பாரம் குறைவு, எனவே சாமக்காத்து விழுந்தாலோ, விடியக் காத்தாலை பனி பெய்தாலோ "கொடி படுக்காது".  அத்துடன் இயலுமானவரை தங்கூசி இழையை நூலாகப் பாவிப்போம் காரணம் நூலில பனிப்பிடிச்சு நூல்ப்பாரம் கூடாது. அதோட படுக்க முதல் ஒருக்காலும், சாமம் ஒண்டுக்கு இருக்க எழும்பும்போது ஒருக்காலும் "இழுவன்" பார்த்து விண் கூவுறதையும் கேட்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. விடிய வெள்ளன தலையில தண்ணி வாளியால அள்ளி ஊத்தினாலும் எழும்பாத நான் அப்பா அல்லது அம்மா "தம்பி கொடியைக் காணேல்ல, படுத்திட்டுது போல..." எண்டு மெல்லிசா சொன்னாலே துள்ளி எழும்பி இழுவன் பார்க்க ஓடுவதுண்டு.

அதோட கொடி அறுத்தாலோ, படுத்தாலோ நூலின் அறுந்த முடிவு, காத்தின் திசையை வைத்து கொடியின் இறுதிக் கணங்களில் என்ன நடந்திருக்கும் என்பதையும் ஓரளவு சரியாக ஊகித்து கொடியின் லொக்கேசனயும் அச்சொட்டாக கூறும் கலையைப் பெற்றிருந்தோம். பின் நாட்களில் பட்டத்துக்கு டிசு ஓட்டுவதை விட பொலித்தீன் அடிச்சு பெயிண்ட் அடிப்பதே பிரபலமானது. ரிசு ஓட்டும் காலங்களில் டிசுவை இறுக்க கொஞ்சம் தண்ணியை விரலால் தெளிச்சு விடுவோம். தண்ணி காய டிசு அந்தமாதிரி இறுகிவரும்.

கண்ணோட்டு, டயமன், காத்தாடி, சூரிய ஒட்டு, செஸ் (Chess) போட் ஒட்டு பிரபலமானவை. அதிலும் நீளமும் சிவப்பு டயமன், சிவத்த காத்தாடி ஒட்டு பிரபலமானவை. முதலிலே நூலோடி அதை வைத்துதான் ஒட்டை தீர்மானித்து அளவு எடுப்போம். பட்ட அளவுகள் கூட எண்ட இடுப்பளவு, எட்டித் தொடுற அளவு என்ற வகையில போகும்.

இந்தமுறை போன போது மினகெட்ட பட்டம்.

 

CYMERA_20131210_182833.jpg
 

புளியங்காய் ஒட்டு பட்டம்...பார்த்து 28+ வருடங்கள்....

 

பிரம்பு, வடலி விண் எல்லாம் கிளாசிக் சமாசாரம்..

 

நான் உரப்பை விண் தான் உபயோகபடுதியது...

 

மார்கழி விடுமுறையே எப்படி போகிறது என்று தெரியாது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.