Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
நான் அந்தக்  கட்டடத்தின் பெரிய அறை ஒன்றைத் திறந்து கொண்டு உள்நுழைகிறேன். "நான் ஆர்?  நான் ஆர்? நான் ஒருத்தனுக்குத்தான் மூண்டு பிள்ளையளையும் பெத்தனான். ஒருத்தன் என்னைப் பாத்து என் நடத்தையில பிழை எண்டு சொல்லட்டும். அவன்ர வாயைக் கிழிச்சு வச்சுத் தச்சுப்போடுவன். எளிய நாய் அவன். எளிய நாய். என்னோட படுத்து மூண்டு பிள்ளைப் பெத்த பிறகும் என்னைப்பற்றி கூடாமல் சொல்லிக்கொண்டு திரியிறான்" என்ற பெரிய  கூச்சலைக் கேட்டபடி தொடர்ந்து உள்ளே செல்வோமா அல்லது இப்பிடியே நிர்ப்போமா என்று மனதில் குழப்பத்துடன் நின்ற என்னைப் பார்த்து "வாங்கோ வந்து இருங்கோ" என்று விட்டு " அமைதியாய் இருங்கோ. ஆக்களுக்கு முன்னால உப்பிடிக் கத்தக் கூடாது என்று கத்திய பெண்ணை முதுகில் தடவி அமைதிப்படுத்தியபடி என்னைப் பார்க்கிறார் ரஞ்சி.
 
பெண்களுக்கான ஒன்றுகூடலில் என்னை விசேட விருந்தினராக அழைத்திருந்தனர். நான் வாய்காரி என்று ஒருபக்கம் பெயர் எடுத்திருப்பது அப்பப்ப எனக்குக் கவலை தருவதுதான் என்றாலும் மறுபக்கம் துணிவானவள் என்று மற்றவர் என்னைப் பற்றிக் கூறும் போது பெருமையாகவும் இருக்கும். உண்மையில் நான் துணிவானவள் தானோ என என் மனதை நானே எத்தனையோ தடவைகள் கேட்டாலும் பதில் இதுவரை கிடைக்கவே இல்லை என்பது வேறு.
 
பல பெண்கள் அங்கு வந்திருந்தார்கள். ஒவ்வொருவர் முகங்களிலும் ஏதோவொரு சோகம் இழையோடி இருந்ததை அவர்கள் முகங்கள் காட்டின. அறிமுக நிகழ்வு முடிந்த பின்னர் எப்பிடி நீங்கள் இத்தனை துணிவாக எழுதுகிறீர்கள், ஆண்களுடன் வேலை செய்கிறீர்கள் ... இப்படிப் பல கேள்விகள் என்முன்னால். உங்கள் கணவருக்கு நீங்கள் நன்றிதான் கூறவேண்டுமென்று ரஞ்சி கூறியவுடன் "எங்களுக்கு ஆர் உவங்கள் சுதந்திரம் தர. நாங்கள் தான் பாவம் பாத்து அவங்களுக்கு அடங்கி வீட்டுக்குள்ளயே தண்டனை அனுபவிக்கிறம். எல்லாரும் கள்ளங்கள்" என்று கேவி அழும் இன்னொரு பெண்ணை இரக்கத்துடன் பாத்தேன் நான். எல்லாரும் உங்கள் பிரச்சனைகளைச் சொல்லலாம். அதுக்கான நேரம் தருவன் என்று ரஞ்சி கூறியதும் எழுந்த சலசலப்பு சிறிது அடங்கியது. நான் எதிலிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்தவாறே மெதுவாக எழுந்து நின்றேன்.
 
*****************************************************
 
பாமாவின் நிறத்தைப் பார்த்தால் அத்தனை வெண்மை. நிட்சயமாக எதோ வெள்ளைக்காரர்களின் கலப்பு இருப்பதாகத்தான் ஊரில் கூடப் பேசிக்கொள்வார்கள். ஆனால் இரண்டு தலைமுறையில் அப்பிடி யாருமே அவள் குடும்பத்தில் இல்லை. சிலநேரம் ஆசுபத்திரியில் பிள்ளை மாறிப் போச்சோ என்று கூட ஆரம்பத்தில் அயலட்டையில் பேசாதவர்கள் இல்லை. ஆனாலும் மற்றைய பிள்ளைகளுடன் பாமா இயல்பாய் பேசிப் பழகியதில் எல்லோருக்கும் அவள் பற்றிய சந்தேகம் இல்லாமல்த்தான் போய்விட்டது. அவளின் நண்பி சரோவுக்கே சிலவேளை நானும் அவள் மாதிரிப் பிறந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். அத்தனை அழகு. அத்தனை அழகு இருந்தாலும் கெட்டித்தனம் என்னவோ குறைவு தான் தன்னிலும் பார்க்க என்று சிறிது மனதைத் தேத்திக் கொள்ளுவாள் சரோ.
 
தாய் சிரோன்மனிக்கு மகளைப் பார்க்கப்பார்க்க வயிற்றில் எதோ பிசையும். இந்தியன் ஆமி வந்தபோது அவளை பள்ளிக்கூடம் போகவிடாமல் வீட்டில் மறித்து, நெற்றியில் பெரிய குங்குமம் வைத்து நீண்ட தலைமுடியை அழகாகத் தொங்கவிடாமல் சுத்திக் கொண்டையும் போட்டு, ஏற்கனவே திருமணம் ஆனவள் போல் காட்டிக்கொண்டாலும், எங்கே கண்டுபிடித்து விடுவாங்களோ என்று மனப் பதைப்புடன் பாதுகாத்தது எப்பிடியும் வெளிநாட்டில் ஒரு கலியாணம் பேசி மகளை அனுப்பிவிட்டால் நின்மதி என்னும் நினைப்போடுதான்.
 
சிரோன்மணியின் தமையன் குடும்பமாக லண்டனில் வாழ்கிறார். அவரிடம் எத்தனையோ தடவை போன்செய்து சொல்லிவிட்டாள் தன் மகளுக்கு நல்ல மாப்பிளையாகப் பார்க்கும்படி. தமையன் பாக்கிறன் பாக்கிறன் எண்டு இரண்டு ஆண்டுகள் உருண்டோட, புரோக்கர் செல்லையா கொண்டுவந்த வெளிநாட்டுச் சம்மந்தம் எண்பது வீதப் பொருத்தம் என்று வர, தன் மகள் குடுத்துவச்சவள். இனி வெளிநாட்டில் நின்மதியாகவும் சந்தோசமாகவும் வாழப்போகிறாள் என்று நின்மதிப் பெருமூச்சு விட்டாள் சிரோன்மணி.
 
மாப்பிளை கறுப்பு எண்டாலும் அழகாகத்தான் இருக்கிறார் என மனதுள் மகிழ்ந்து, கற்பனைகளில் திளைத்து ஒருவாறு லண்டன் போக இன்று விமானத்தில் ஏறியபின்பும் தாய் நாட்டையோ அன்றி பெற்றவர்களையோ விட்டுப் போவதற்காகத் தான் சிறிதும் கவலை கொள்ளவில்லை என்று எண்ணும்போது பாமாவுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கை இந்திய இராணுவம், போர் இடப்பெயர்வு எல்லாம் சேர்ந்து ஒவ்வொருவர் மனதிலும் எத்தனை துன்பநினைவையும் வெறுப்பையும் விதைத்திருக்கிறது. அதிலிருந்து தப்பிப் போவதனாலேயே எனக்கும் கவலை ஏற்படவில்லையோ என தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் அவள்.
 
தாய்நாட்டின் நிலை மாறுமா? தான் இனி எப்ப திரும்ப இங்கே வருவேன் என்ற எண்ணக்  கூட அவளுக்கு எழவில்லை. அந்த நேரத்தில் சுதாகரனைக் காணும் ஆவல் மட்டுமே அவள் மனதில் மேலோங்கியிருந்து மற்ற எல்லாவற்றின் நினைவையும் புறம்தள்ளி விட்டிருந்தது. சுதாகரனுக்கு பிரித்தானிய நிரந்தர வதிவிட உரிமை இருந்ததனால் மற்றவர்  பலர் படும் துன்பம் ஒன்றும் இல்லாது, எந்தவித பயமும் இன்றி லண்டன் வந்து இறங்குவதற்கான வசதிகள் ஏற்பட்டிருந்தன. முன்னரெல்லாம் பலர் வெளிநாடு போவதற்காக மாதக்கணக்கில் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட காத்திருந்த கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு மனதில் ஏற்பட்டிருந்த பயம் சுதாகரன் செய்த ஒழுங்கினாலும் தொலைபேசியில் கதைக்கும்போது நேரே நீர் இங்க வந்து இறங்கலாம். நான் எயாப்போட்டில நிப்பன் என்ற வார்த்தையாலும் இல்லாமல் போனது. நல்ல குரல் தான் அவருக்கு என்று தனக்குத்தானே சிரித்தபடி விமானம் மேலேற ஆயத்தமாக, வயிற்றில் ஏதோவொரு பிசைவும் தலை சுற்றலும் ஏற்பட எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி கண்களை இறுக மூடிக்கொண்டாள் பாமா.
 
வரும் இன்னும் .......
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமே இன்னும் வரும் இன்னும் வரும் என்று எதிர்பார்க்க வைப்பதிலேயே ஒரு சுகம் இருக்கிற மாதிரியே தெரியுது.

இந்தியன் ஆமி காலத்தில் குமரிகள் எல்லாம் கிழவிகளாக மாறியதை எண்ண சிரிப்பாகவும் இருக்கு கோபமாகவும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நன்று!

எனக்கென்னவோ..திருமணங்களின் அத்திவாரங்களே மாற்றி அமைக்கப்படவேண்டும் என்ற எண்ணம் தான் நாளுக்கு நாள் வலுப்படுகின்றது! மூன்று பிள்ளைகளைப் பெத்துப் போட்டால் போல...தான் செய்வதை எல்லாம் ஒரு மனிதன் பொறுத்துக் கொண்டு போக வேண்டுமென்பது மட்டும் என்ன நியாயம்? அவனும் கூட மூன்று பிள்ளைகளைப் பெத்துப் போட்டவன் தானே? அவனை ஏன் இந்தப் பெண் மன்னிக்கக் கூடாது?

ஒரு பக்கம் ஆணுக்குப் பெண் என்ற சம நிலைக்காகப் பெண்ணியம் போராடுகின்றது! மறு பக்கம்....ஒரு ஆண் ..தனது மன ஆதங்கத்தை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தினால்.... குய்யோ ...முறையோ...ஒரு பெண்ணென்றும் பார்க்காமல்...என்ன பேச்சுப் பேசுறார் பாருங்கோவன் எண்டு ஊரைக் கூட்டிறது...அல்லது போலீசைக் கூப்பிடுகிறது! 

எனக்கு இங்கு தான் பெரிய குழப்பம் ஏற்படுவதுண்டு?

சமையுங்கோ....நானும் வேலைக்குப் போறன் தானே...எண்டு சொல்லுறியள்...சரியெண்டு செய்யத் துவங்கினால்..உங்கட சமையலுக்கு ஒருத்தரும் கிட்ட வரேலாது எண்டு ஒரு தலைப்பாயைக் கட்டிப்போட்டு...நீங்கள் அந்தப் பக்கமே வர மாட்டியள்!

புல்லு வளர்ந்து போய்க் கிடக்குது...என்ன மாதிரி எண்டு பார்வையை வீசிக்கொண்டு திரிவீங்களாம்! நாங்கள் உடன அதை வெட்ட வேண்டுமாம்! நீங்கள் ஏன் வெட்டக்கூடாது என்று கேட்டால்...இப்படிக் கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை, அது ஆம்பிளை வேலை எண்டு சொல்லுறீங்கள்! அப்படியென்றால்  சமைக்கிறதும், பாத்திரம் கழுவிறதும்...ஆம்பிளை வேலையா?

பிரஞ்சு மொழி மாதிரி....வீட்டு வேலைகளிலேயே...ஆண் பால்...பெண் பால்..?

எனக்கு பிரஞ்சும் புரியவில்லை....உங்கட சமவுரிமைப் போராட்டமும் விளங்கவில்லை..!

ஆளை விடுங்க ...சாமியோவ்!

ஆளை விடுங்க எண்டு சொன்னதுக்காக....இடையில கதையை நிப்பாட்டிப் போட்டு ஓடுறது எண்டு அர்த்தமில்லை!

அது தன்ர பாட்டில தொடரட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே இன்னும் வரும் இன்னும் வரும் என்று எதிர்பார்க்க வைப்பதிலேயே ஒரு சுகம் இருக்கிற மாதிரியே தெரியுது.

இந்தியன் ஆமி காலத்தில் குமரிகள் எல்லாம் கிழவிகளாக மாறியதை எண்ண சிரிப்பாகவும் இருக்கு கோபமாகவும் இருக்கு.

எனக்கு இந்திய இராணுவத்துடனான அனுபவம் இல்லை. ஆனாலும் மற்றவர் சொல்வதைக் கேட்டால் கோபம் வருவதுதான்.

13 hours ago, புங்கையூரன் said:

கதை நன்று!

எனக்கென்னவோ..திருமணங்களின் அத்திவாரங்களே மாற்றி அமைக்கப்படவேண்டும் என்ற எண்ணம் தான் நாளுக்கு நாள் வலுப்படுகின்றது! மூன்று பிள்ளைகளைப் பெத்துப் போட்டால் போல...தான் செய்வதை எல்லாம் ஒரு மனிதன் பொறுத்துக் கொண்டு போக வேண்டுமென்பது மட்டும் என்ன நியாயம்? அவனும் கூட மூன்று பிள்ளைகளைப் பெத்துப் போட்டவன் தானே? அவனை ஏன் இந்தப் பெண் மன்னிக்கக் கூடாது?

ஒரு பக்கம் ஆணுக்குப் பெண் என்ற சம நிலைக்காகப் பெண்ணியம் போராடுகின்றது! மறு பக்கம்....ஒரு ஆண் ..தனது மன ஆதங்கத்தை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தினால்.... குய்யோ ...முறையோ...ஒரு பெண்ணென்றும் பார்க்காமல்...என்ன பேச்சுப் பேசுறார் பாருங்கோவன் எண்டு ஊரைக் கூட்டிறது...அல்லது போலீசைக் கூப்பிடுகிறது! 

எனக்கு இங்கு தான் பெரிய குழப்பம் ஏற்படுவதுண்டு?

சமையுங்கோ....நானும் வேலைக்குப் போறன் தானே...எண்டு சொல்லுறியள்...சரியெண்டு செய்யத் துவங்கினால்..உங்கட சமையலுக்கு ஒருத்தரும் கிட்ட வரேலாது எண்டு ஒரு தலைப்பாயைக் கட்டிப்போட்டு...நீங்கள் அந்தப் பக்கமே வர மாட்டியள்!

புல்லு வளர்ந்து போய்க் கிடக்குது...என்ன மாதிரி எண்டு பார்வையை வீசிக்கொண்டு திரிவீங்களாம்! நாங்கள் உடன அதை வெட்ட வேண்டுமாம்! நீங்கள் ஏன் வெட்டக்கூடாது என்று கேட்டால்...இப்படிக் கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை, அது ஆம்பிளை வேலை எண்டு சொல்லுறீங்கள்! அப்படியென்றால்  சமைக்கிறதும், பாத்திரம் கழுவிறதும்...ஆம்பிளை வேலையா?

பிரஞ்சு மொழி மாதிரி....வீட்டு வேலைகளிலேயே...ஆண் பால்...பெண் பால்..?

எனக்கு பிரஞ்சும் புரியவில்லை....உங்கட சமவுரிமைப் போராட்டமும் விளங்கவில்லை..!

ஆளை விடுங்க ...சாமியோவ்!

ஆளை விடுங்க எண்டு சொன்னதுக்காக....இடையில கதையை நிப்பாட்டிப் போட்டு ஓடுறது எண்டு அர்த்தமில்லை!

அது தன்ர பாட்டில தொடரட்டும்!

கதையே நான் இன்னும் எழுதிமுடிக்கேல்லை. அதுக்குள்ளை நீங்களா ஏதேதோ கதை விடுறியள்.

என் வீட்டில் நான் தான் புல்லு வெட்டுவது. அதைக்கூடச் செய்யவிடாமல் கணவன்மார் மனைவியைத் தாங்கிப் பிடிச்சால் நான் ஒன்றும் சொல்ல முடியாது.

இதில உரிமையைப் பற்றி ஆர் கதைச்சது. ??????/

பச்சைகளை வழங்கிய நிலாமதி அக்கா, ஈழப்பிரியன், ஆதவன், கண்மணி அக்கா, புங்கை ஆகிய உறவுகளே நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு விவாதப் பொருளுடன் கதையை சொல்ல ஆரம்பித்து இருக்கின்றிர்கள் சகோதரி .... தொடருங்கள் வாசிப்போம்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் இருக்கிறதா அக்கா  கெதியா சொல்லுங்க  அதென்னவோ வெள்ளை பொண்ணுகளை வெளிநாட்டுப்பார்சலாவே பார்க்கிரது வழமையாப்போச்சு இன்னும் இருக்கிறதா அக்கா  கெதியா சொல்லுங்க  அதென்னவோ வெள்ளை பொண்ணுகளை வெளிநாட்டுப்பார்சலாவே பார்க்கிரது வழமையாப்போச்சு :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

நல்லதொரு விவாதப் பொருளுடன் கதையை சொல்ல ஆரம்பித்து இருக்கின்றிர்கள் சகோதரி .... தொடருங்கள் வாசிப்போம்.....!  tw_blush:

நன்றி அண்ணா

2 hours ago, முனிவர் ஜீ said:

இன்னும் இருக்கிறதா அக்கா  கெதியா சொல்லுங்க  அதென்னவோ வெள்ளை பொண்ணுகளை வெளிநாட்டுப்பார்சலாவே பார்க்கிரது வழமையாப்போச்சு இன்னும் இருக்கிறதா அக்கா  கெதியா சொல்லுங்க  அதென்னவோ வெள்ளை பொண்ணுகளை வெளிநாட்டுப்பார்சலாவே பார்க்கிரது வழமையாப்போச்சு :unsure::unsure:

யோவ் என்ன அவசரம்? எழுதினால் நானே போட மாட்டேனா ?????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண் சம்பாதிப்பது அவன் தாயிடம் அல்லது தாரத்திடம் இருக்கும். பெண் சம்பாதிப்பது பெண்ணிடம்தான் இருக்கும். இதனைப் பல தமிழ் குடும்பங்களில் இன்றும் காண முடியும். ஆனாலும் ஆண் பெண்ணை நம்புவதுபோல் பெண் ஆணை நம்புவதில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Paanch said:

ஆண் சம்பாதிப்பது அவன் தாயிடம் அல்லது தாரத்திடம் இருக்கும். பெண் சம்பாதிப்பது பெண்ணிடம்தான் இருக்கும். இதனைப் பல தமிழ் குடும்பங்களில் இன்றும் காண முடியும். ஆனாலும் ஆண் பெண்ணை நம்புவதுபோல் பெண் ஆணை நம்புவதில்லை. :(

நீங்கள் கூறுவது இந்தியக் குடும்பங்களிலும் முந்தைய ஈழத்தமிழர்களிடமும் இருந்த பழக்கமாக இருக்கலாம். புலம்பெயர் நாடுகளில் அதை எதிர்பாக்க முடியாதுதானே பாஞ்ச. ஆனாலும் நீங்கள் கூறியது போல் பெண்கள்   சம்பாதித்தால் அவளிடமே இருக்கும் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. அப்பாடி அவள் வைத்தீருப்பாலானால் ஆண் குடிகாரனோ அல்லது சூதாடியாகவோ இருப்பானன்றி சாதாரண குடும்பங்களில் தனிஹ்த்தனிக் கணக்கு இருந்தாலும் செலவு குடும்பம் என்றதை மையமாகவே வைத்து நடைபெறும்.

பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் சிறிய தொகையைச் சேர்த்து  வைப்பது கணவனின் கஞ்சத்தனத்தினாலேயே அன்றி வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்கவும்...சுமே!

நான் ஒரு அவசரக் குடுக்கை..!

நான் நினைச்சன்....நீங்கள் பின் பக்கமாய் வந்து...பிடரியில தட்டப் போறீங்களாக்கும் என்று..!

ஒரு தற்காப்பு நடவடிக்கை தான்..!

ஹி... ஹி ....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத் தெரிந்ததையும் அனுபவத்தையும் ஆதாரமாகக் கொண்டு என் கருத்தைப் பகிர்ந்தேன். இதனை விவாதப் பொருளாக்கினாலும் தீர்வுகாண முடியாதென்பது எனது அபிப்பிராயம். இல்லை...! என்று முயற்சி செய்தாலும் அது கவுண்டமணி செந்திலின் வாழைப்பழக் கதைபோல் முடிவின்றித் தொடரும் என்பதும் எனது பட்டறிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

..பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் சிறிய தொகையைச் சேர்த்து  வைப்பது கணவனின் கஞ்சத்தனத்தினாலேயே அன்றி வேறொன்றுமில்லை.

அப்படி மட்டுமே அல்ல! பெண் எப்பொழுது தனக்கும் தன் குடும்ப பொருளாதார நிலைக்கும்,  கணவனை நம்பி இனி பயனில்லை என்ற சூழல்(insecure) ஏற்படும்பொழுதே பணத்தை சேமிக்க ஆரம்பித்துவிடுகிறாள்..

இதற்கு கணவனின் கஞ்சத்தனம், ஊதாரித்தனம், மொள்ளமாறித்தனம்,பிற பெண்கள் சகவாசம், குடிப்பழக்கம் என அனைத்தும் அடங்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமோ /  ரசா வன்னியன்

எதை கஞ்சத்தனம் என்று சொல்கின்றீர்கள் ?

மாதம் முழுக்க அரபி ஊத்தைகளுடன் வேலை செய்து,  எல்லாவித தன்மானத்தையும் இழந்து, பொறுமைக்கு மேல் பொறுமை காத்து, பல்வேறு அவமானங்களியும் தாங்கி, வாழ்வில் பல்வேறு நல்ல நாட்கள் / பெரு நாட்களை எல்லாம் தியாகம் செய்து / குளிரில் உறைந்தும் / கடும் வெப்பத்தில் காய்ந்து கருவாடாகியும் /பல்வேறு நோய்களை தாங்கிக் கொண்டும் மாதம் முடிந்து சம்பளம் எடுக்கின்றோம்.  இதில் பெரும் பகுதியை வீட்டிற்கு அனுப்புகின்றோம். கணவனாகிய எனக்கு எல்லா என்னா செலவு செய்தாய்? இதை இப்போ செய்யாதே . இதை இப்போது வாங்கித்தர முடியாது, இதை தள்ளிப்போடுவேம் என சொல்லும் உரிமை கூட இல்லையா? இப்படி கேட்பதனால் நான் கஞ்சனா? 

நல்ல கதை ஐயா / அம்மா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, புங்கையூரன் said:

மன்னிக்கவும்...சுமே!

நான் ஒரு அவசரக் குடுக்கை..!

நான் நினைச்சன்....நீங்கள் பின் பக்கமாய் வந்து...பிடரியில தட்டப் போறீங்களாக்கும் என்று..!

ஒரு தற்காப்பு நடவடிக்கை தான்..!

ஹி... ஹி ....!

விளங்கினால் சரி கண்டியளோ

9 hours ago, Paanch said:

எனக்குத் தெரிந்ததையும் அனுபவத்தையும் ஆதாரமாகக் கொண்டு என் கருத்தைப் பகிர்ந்தேன். இதனை விவாதப் பொருளாக்கினாலும் தீர்வுகாண முடியாதென்பது எனது அபிப்பிராயம். இல்லை...! என்று முயற்சி செய்தாலும் அது கவுண்டமணி செந்திலின் வாழைப்பழக் கதைபோல் முடிவின்றித் தொடரும் என்பதும் எனது பட்டறிவு.

அது உண்மைதான் பாஞ்ச்

9 hours ago, ராசவன்னியன் said:

அப்படி மட்டுமே அல்ல! பெண் எப்பொழுது தனக்கும் தன் குடும்ப பொருளாதார நிலைக்கும்,  கணவனை நம்பி இனி பயனில்லை என்ற சூழல்(insecure) ஏற்படும்பொழுதே பணத்தை சேமிக்க ஆரம்பித்துவிடுகிறாள்..

இதற்கு கணவனின் கஞ்சத்தனம், ஊதாரித்தனம், மொள்ளமாறித்தனம்,பிற பெண்கள் சகவாசம், குடிப்பழக்கம் என அனைத்தும் அடங்கும்..!

அதுமட்டும் இல்லை அண்ணா. சில ஆண்கள் தம் உறவுகளுக்குக் கொடுக்கும்போது வாயே திறக்க மாட்டினம். மனைவிமாரைக் கொடுக்க விடவேமாட்டினம். அதுக்கும் தான் சேர்க்கிறது.

8 hours ago, colomban said:

சுமோ /  ரசா வன்னியன்

எதை கஞ்சத்தனம் என்று சொல்கின்றீர்கள் ?

மாதம் முழுக்க அரபி ஊத்தைகளுடன் வேலை செய்து,  எல்லாவித தன்மானத்தையும் இழந்து, பொறுமைக்கு மேல் பொறுமை காத்து, பல்வேறு அவமானங்களியும் தாங்கி, வாழ்வில் பல்வேறு நல்ல நாட்கள் / பெரு நாட்களை எல்லாம் தியாகம் செய்து / குளிரில் உறைந்தும் / கடும் வெப்பத்தில் காய்ந்து கருவாடாகியும் /பல்வேறு நோய்களை தாங்கிக் கொண்டும் மாதம் முடிந்து சம்பளம் எடுக்கின்றோம்.  இதில் பெரும் பகுதியை வீட்டிற்கு அனுப்புகின்றோம். கணவனாகிய எனக்கு எல்லா என்னா செலவு செய்தாய்? இதை இப்போ செய்யாதே . இதை இப்போது வாங்கித்தர முடியாது, இதை தள்ளிப்போடுவேம் என சொல்லும் உரிமை கூட இல்லையா? இப்படி கேட்பதனால் நான் கஞ்சனா? 

நல்ல கதை ஐயா / அம்மா?

என்கதை கஞ்சத்தனம் பற்றியது இல்லை அப்பனே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
செல்வி காரைப் பாக் செய்துவிட்டு அந்த வைத்தியசாலையில் நுழைகிறாள். வாரத்தில் ஐந்து நாட்களும் வேலை செய்வதில் வேலைப் பளுதான் எனினும் நண்பியைப் பார்க்க வருவதை நிறுத்துவதில்லை. பாவம் பாமா இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எத்தனை துன்பத்தை அனுபவித்துவிட்டாள். அவளைப் போல் பல பெண்களுக்குக் கொடுமைகள் நடந்தபடிதான் இருக்கின்றன இந்த நாட்டில். ஆனால் பலரும் வாயைத் திறப்பதில்லை. உண்மையில் பெண்களாய்ப் பிறப்பது கொடுமையிலும் கொடுமைதான். நல்ல காலம் என் கணவர் எத்தனை நல்லவர்.  எத்தனை புரிந்துணர்வு ஒத்தாசை. அதுக்கும் முற்பிறப்பில புண்ணியம் செய்திருக்கவேணும் என்று எண்ணியவளாய் பாமா இருக்கும் அறையைத் திறந்துகொண்டு உள்ளே செல்கிறாள். இவளைக் கண்டதும் வா செல்வி. உனக்காவது என் நினைப்பு வந்துதே என கேவி அழுகின்றவளின் கைகளைப் பிடித்து ஆறுதலாகத் தடவிக் குடுத்தபடி அழாதையும். உமக்கு எல்லாம் சுகம் வந்திடும். இன்னும் கொஞ்ச நாளில வீட்டை போவிடலாம் என்கிறாள்.
 
என்ர பிள்ளைகளைப் பார்த்தனீரே? சுகமாய் இருக்கினமே. நான் பாத்து எத்தினை நாள் ஆச்சு. டொக்டரிட்டைக் கேட்டால் பாக்கலாம் எண்டுறார். ஆனால் கூட்டிக்கொண்டு வருகினம் இல்லை. மூத்தவன் மட்டும் முந்தநாள் வந்தவனாம். நான் நித்திரைக் குளிசை தந்ததில நித்திரையாக் கிடந்தனான். கண்முளிச்சுப் பாத்தால் அம்மா நான் வந்தனான். நீங்கள் நித்திரை. வாறகிழமை வாறன் எண்டு ஒரு துண்டு இருந்துது.  பிள்ளை வந்தும் பாக்க ஏலாமல் போட்டுதே செல்வி. எனக்குப் பிள்ளையளைப் பாக்கவேணும். ஒருக்கா நீராவது கூட்டிக்கொண்டு வாருமன் பிளீஸ் என்று கெஞ்சுபவளை எப்படி ஆறுதல்ப்படுத்துவது  என்று தெரியாமல் நீர் இப்ப எழும்பி நடக்கிறீரே பாமா என்று கேட்டு கதையைத் திசை திருப்பினாள்.

ஓம் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் நேர்ஸ் வந்து என்னை நடக்கக் கூட்டிக் கொண்டு போறவள். சிலவேளைதான் மனம் சோர்ந்து நடக்கவே ஏலாமல் வந்திடுது செல்வி. எனக்குத் தெரியும் செல்வி வருத்தம் மாறி ஒழுங்கா நடந்து வீட்டைபோனால் தான் என்ர பிள்ளையளைப் பார்க்கமுடியும். ஆனாப் பாருமன் பிள்ளையள் கூட என்னைப் பார்க்க வரேல்லைத்தானே. நான் பாவம் செய்துபோட்டன் என்று தலையில் அடித்து அழுபவளின் கைகளைப் பிடித்தபடி நீர் உண்மையில பிள்ளைகளோட இருக்கவேணும் எண்டு ஆசைப்பட்டால் முதல்ல சுகமாகி வெளியில வரப் பாரும்.  பிள்ளையள் இரண்டும் தங்கடை எண்ணத்துக்குத் தனிய வர ஏலாதுதானே பாமா.  இடைக்கிடை சின்னவனைப் பள்ளிக்குக் கொண்டுபோய் விடேக்கை இரண்டுபேரையும் காணிறனான். உம்மட மகள் நல்ல வளர்த்தி. பார்க்க அச்சு அசல் உம்மைப் போலவே  இருக்கிறாள். நீர் ஒண்டுக்கும் கவலைப்படாதையும். இந்தாரும் உமக்குக் கொஞ்ச இடியப்பம் கொண்டு வந்தனான். உறைப்பும் கறிக்கு நிறையப் போடேல்ல என்றவளை இடைநிறுத்தி நான் அம்மாவோட கதைச்சு கனநாள் ஆச்சு. ஊரில ஆரிட்டையன்  கேட்டு அம்மாவின்ர நம்பர் எடுத்துத் தாறீரே. அவ என்னை நினைச்சுக் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பா. மூத்தவனிட்டைச் சொல்லிப் பார்த்தன். என்ர டைரியையும் வீட்டில காணேல்லையாம். அதில்தான் எல்லாற்றை நம்பரும் எழுதி வச்சனான் என்று கேட்பவளைப் பார்க்க செல்விக்கே பரிதாபமாக இருந்தது.

நான் அடுத்தகிழமை வரேக்குள்ளை அம்மாவின்ர இலக்கத்தோட வாறன். உமக்கு லைக்காக் காட் போட்டு என்ர பழைய போனும் கொண்டு வாறன். இடையில எனக்கு வரேலாதப்பா.  நீர் பழிய பாமாவா வெளியில வரவேணும். அது ஒண்டுதான் உம்மட மனதில இப்ப இருக்கவேணும். சரி நான் கிளம்புறன் மறக்காமல் பசிக்கேக்குள்ள எடுத்துச் சாப்பிடும் என்று அவள் தலையைத் தடவிவிட்டு வெளியே  வந்தாள் செல்வி. 

வரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, colomban said:

சுமோ /  ரசா வன்னியன்

எதை கஞ்சத்தனம் என்று சொல்கின்றீர்கள் ?

மாதம் முழுக்க அரபி ஊத்தைகளுடன் வேலை செய்து,  எல்லாவித தன்மானத்தையும் இழந்து, பொறுமைக்கு மேல் பொறுமை காத்து, பல்வேறு அவமானங்களியும் தாங்கி, வாழ்வில் பல்வேறு நல்ல நாட்கள் / பெரு நாட்களை எல்லாம் தியாகம் செய்து / குளிரில் உறைந்தும் / கடும் வெப்பத்தில் காய்ந்து கருவாடாகியும் /பல்வேறு நோய்களை தாங்கிக் கொண்டும் மாதம் முடிந்து சம்பளம் எடுக்கின்றோம்.  இதில் பெரும் பகுதியை வீட்டிற்கு அனுப்புகின்றோம். கணவனாகிய எனக்கு எல்லா என்னா செலவு செய்தாய்? இதை இப்போ செய்யாதே . இதை இப்போது வாங்கித்தர முடியாது, இதை தள்ளிப்போடுவேம் என சொல்லும் உரிமை கூட இல்லையா? இப்படி கேட்பதனால் நான் கஞ்சனா? 

நல்ல கதை ஐயா / அம்மா?

கஞ்சம் என்பதன் அளவுகோல் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..

நான் சொல்ல வந்த விடயம், பெண்கள் எப்பொழுது பாதுகாப்பற்ற சூழலை குடும்பத்தில் உணர்கிறார்களோ, அப்பொழுதே தொடங்கிவிடுகிறது அவர்களின் மறைவான சேமிக்கும் பழக்கம்.. அதற்கு இடங்கொடாதவாறு நம்பிக்கை ஏற்படுத்துவது யார் கையில் உள்ளது என்பதை புரிந்துகொண்டால் எல்லாம் சுபமே..!

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

..சில ஆண்கள் தம் உறவுகளுக்குக் கொடுக்கும்போது வாயே திறக்க மாட்டினம். மனைவிமாரைக் கொடுக்க விடவேமாட்டினம். அதுக்கும் தான் சேர்க்கிறது.

குடும்பத்தில் ஆண் மட்டுமே சம்பாதிப்பவராக இருந்தால் இம்மாதிரி சூழல் ஏற்படும்.. smilie_frech_031.gif

பெண்ணும் சம்பாதிக்க தொடங்கிவிட்டால், "என் சம்பாத்தியத்தில் எனது உறவினர்களுக்கு கொடுக்கிறேன், நீயும் உனது சம்பாத்தியத்தில் உனது உறவினர்களுக்கு செய்துகொள்" என்றே கணவனின் மனபாவம் இருக்கும்..ஒரு ஜென்டில்மென் அகிரிமென்டிற்கு இருவரும் வந்துவிடுவர்..give_a_rose.gifgive_a_rose_girl.giflove_girls.gif.. வாழ்க்கை ஓடம் சுமூகமாக செல்லும்.

இதையும் மீறி சில கணவர்கள் மனைவி சம்பாதித்தாலும், குடும்பத்தின் அனைத்து வருமானத்தையும் தானே நிர்வாகிக்க/செலவழிக்க முடிவெடுக்க வேண்டுமென ஆதிக்கவாதிகளாக இருப்பவர்களும்உண்டு, அம்மாதிரி கணவர்களை பெற்ற மனைவிகள், 'தன் வாழ்வில் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!' என மிச்சமிருக்கும் நாளை விதியேயென ஓட்டவேண்டியதுதான்..! weeping_smiley.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் முழுமையாக வாசித்துவிட்டு பதிவிடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் சகோதரி....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ராசவன்னியன் said:

சில கணவர்களல்ல எனக்குத் தெரியப் பல கணவர்களின் மனநிலை தானே நிர்வாகி என்னும் நிலைதான். பலரும் விதியே என்றுதான் கணவனுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

2 hours ago, வல்வை சகாறா said:

தொடருங்கள் முழுமையாக வாசித்துவிட்டு பதிவிடுகிறேன்

அதுக்கென்ன ஆறுதலாக வாசித்து முடிய உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

1 hour ago, suvy said:

தொடருங்கள் சகோதரி....!

வருகைக்கு நன்றி சுவி அண்ணா

பச்சை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமே...கண்ணூறு படக்கூடாது!

நீங்கள் இப்ப யாழில போட்டிருக்கிற படம்....முந்தினதை விடவும்...நல்லாருக்கு!

ம்ம்...சிலருக்கு மட்டும்...வயசு ரிவேர்சில போகுது  !:mellow:

சரி ...சரி...நான் வந்த விஷயம் வேற.!

சனி....ஞாயிறு, திங்கள்...செவ்வாய்...புதன்...வியாழன் ( அவுசில)...எண்டு நாள் போய்க்கொண்டிருக்குது...!

இன்னும் கதை வரும் எண்டு சொன்ன மாதிரிகிடந்துது...அது தான் விசாரிக்கலாமெண்டு...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/03/2017 at 7:02 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில கணவர்களல்ல எனக்குத் தெரியப் பல கணவர்களின் மனநிலை தானே நிர்வாகி என்னும் நிலைதான். பலரும் விதியே என்றுதான் கணவனுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த மண்ணிலும்?கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று இனி பாடப்போயினம்

Posted

தொடருங்கள் சகோதரி, நீங்கள் இப்ப யாழில போட்டிருக்கிற படம்....முந்தினதை விடவும்...நல்லாருக்கு...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, putthan said:

புலம்பெயர்ந்த மண்ணிலும்?கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று இனி பாடப்போயினம்

உண்மையைச் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டியள்

17 hours ago, புங்கையூரன் said:

சுமே...கண்ணூறு படக்கூடாது!

நீங்கள் இப்ப யாழில போட்டிருக்கிற படம்....முந்தினதை விடவும்...நல்லாருக்கு!

ம்ம்...சிலருக்கு மட்டும்...வயசு ரிவேர்சில போகுது  !:mellow:

சரி ...சரி...நான் வந்த விஷயம் வேற.!

சனி....ஞாயிறு, திங்கள்...செவ்வாய்...புதன்...வியாழன் ( அவுசில)...எண்டு நாள் போய்க்கொண்டிருக்குது...!

இன்னும் கதை வரும் எண்டு சொன்ன மாதிரிகிடந்துது...அது தான் விசாரிக்கலாமெண்டு...!

வரும் வரும் வராமல் எங்க ஓடப்போகுது.எழுதும் உங்களுக்குத் தெரியாதா சும்மாஎல்லாம் எழுத முடியாது என்று.

எதுக்கும் இரவைக்கு மிளகாய் சுத்திப்போடுறன்.

6 hours ago, வந்தியத்தேவன் said:

தொடருங்கள் சகோதரி, நீங்கள் இப்ப யாழில போட்டிருக்கிற படம்....முந்தினதை விடவும்...நல்லாருக்கு...........

நன்றி வந்தியத்தேவன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
விமானம் தரை இறங்கப் போகிறது. எல்லோரும் உங்கள் பாதுகாப்புப் பட்டியை அணிந்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு வந்ததும் பிரயாணிகள் தமது பட்டிகளை அணிந்துகொள்ள, பாமாவுக்கு அறிவிப்பு விளங்காமல் மலங்க மலங்க விழித்தபடி இருக்க, விமானப் பணிப்பெண் வந்து கட்டிவிட சிறிது நேரத்தில் விமானம் லண்டன் விமான நிலையம் ஒன்றில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இறுக்க மூடிய கண்ணை விமானம் தரை தொட்டதன் பின் திறந்த பாமா காலுக்குக் கீழே வைத்திருந்த கைப்பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள்.
 
மற்றவர்களைப் பார்த்து ஒருவாறு தனது பொருட்கள் அடங்கிய பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து மற்றவர்களுக்குப் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் சென்றால் ஒரு கட்டத்தில் அவளுக்கு முன் சென்றவர்களைக் காணவில்லை. ஒரு கணம் ஏற்பட்ட திகைப்பிலிருந்து அவள் மீள்வதற்கு முன்னரே பின்னால் வந்த பயணிகள் இவளை விலத்திக்கொண்டு போக, இவளும் அவர்களை பின்பற்றியபடியே செல்கிறாள். என்ன இது எவ்வளவு தூரம் இன்னும் போறதோ தெரியேல்லை. இவரையும் காணேல்லை என்று பதட்டமும் சேர்ந்துகொள்ள வேறு வழியின்றி பயணிகளுடன் வந்து பாஸ்போர்டை குடிவரவுத் திணைக்களத்திடம் காட்டி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாது விளித்து, பின் அவர்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரை கொண்டுவந்து அவளை வெளியில் விட அவரின் உதவியுடனே பயணப்பொதியையும்  எடுத்துக்கொண்டு வெளியில் வர, பயணிகள் வெளிவரும் வாசலின் முன்னால் சுதாகரன் சிரிப்போடு நின்றிருந்தான்.
 
என்ன இவ்வளவு நேரமாப்போச்சு என்றவனிடம் எனக்கு எங்கை போறது வாறது எண்டு ஒண்டும் விளங்கவே இல்லை. ஒருமாதிரி வந்திட்டன் என்றவளின் பயணப்பொதிகளை வாங்கியபடி நடந்தவனின் அண்மையில் அங்கும் இங்கும் பராக்குப் பார்த்தபடி மகிழ்வுடன் நடந்தாள் பாமா. வெளியில் வரும்போதே அவன் தொலைபேசியில் யாரையோ அழைத்து வாசலுக்கு வந்திட்டம் என்று சொல்ல சிறிது நேரத்தில் ஒரு கார் இவர்களுக்கு முன்னால் வந்து நிக்க, அவளை ஏறச் சொல்லிவிட்டு அவனும் முன்னால் ஏறிக்கொள்ள நண்பனின் காரில் வீடுவந்து சேர்ந்தனர். தான் லண்டன் வந்திட்டன் என்னும் பிரமிப்பு பாமாவுக்கு இன்னும் அடங்கவில்லை.
 
வீட்டுக்குள் வந்ததும் அந்த பிரமிப்பு சிறிது அடங்கித்தான் போனது. வெளிப் பிரமாண்டத்துக்கு சிறிதும் பொருந்தாத சிறிய வீடு. இவர்களது அறை என்று சுதாகரன் கூற அங்கு ஒரு பெரிய கட்டிலும் ஒரு உடுப்பு வைக்கும் அலுமாரியும் அறையை நிறைத்தபடி இருந்தது. இது எங்கண்டை அறை. மற்ற அறையில இன்னும் மூண்டுபேர் இருக்கினம். அவை இப்ப வேலைக்குப் போட்டினம். பின்னேரம் வந்திடுவினம் என்று அவன் கூறுவதைக் கேட்டுக்கொண்டு தன் பயணப் பொதியை ஒரு மூலையில் கொண்டுபோய் வைத்தாள். நீர் குளிக்கிறதெண்டாக் குளியும்.  நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று போனவன் இவளுக்கு தேநீருடன் ரோல்சும் வடையும் கொண்டு வந்து கொடுத்து சாப்பிடச் சொன்னதும், நீங்கள் செய்தனிங்களோ என்று என்று இவள் கேட்க இது கடையில வாங்கினது. இனிமேல் நீர் தான் எனக்குச் செய்து தரவேணும் என்று சொல்லியபடி இவளுக்கு அருகே அமர்ந்தான். விமானத்தில் வடிவாக உண்ணாதது உணவைக் கண்டதும் பசியை ஏற்படுத்த, அவன் அருகாமையும் உணவும் மகிழ்வைத் தர நின்மதி உணர்வுடன் உணவை உண்டு முடித்தாள்.

மிக எளிமையாகக் கோவிலில் திருமணம் , பதிவுத்திருமணம் எல்லாம் முடிந்து ஒரு மூன்று மாதங்கள் திருமண வாழ்வு மிக மகிழ்வாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கு  விதவிதமாக சமையல் செய்து அசத்தியவளுக்கு அவனுடன் சேர்ந்து எல்லாப் பொழுதுகளையும் மகிழ்வான தருணங்களாக்க முடியாதபடி அவனின் மூன்று நண்பர்களும் இடைஞ்சலாக இருந்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்கும் சேர்த்து சமைப்பது, உணவு பரிமாறுவது என்று மகிழ்வாகத்தான் இருந்தது. காலையில் தத்தமது பாட்டுக்கு அவர்கள் வேலைக்குச் சென்றாலும் மாலையில் ஒன்றாக இருந்து தண்ணியடிக்க ஆரம்பித்ததும் , அவர்களுக்கு கொறிப்பதற்கும் கடிப்பதற்கும் இவள் எதாவது செய்வதுமாக  இவளுக்கு வெறுப்பாக இருந்தது.

ஏனப்பா சும்மா உதைக் குடிக்கிறியள். உந்த மணத்துக்கு எனக்குச் சத்திதான் வருது என்று பாமா எத்தனையோ தடவைகள் சொல்லிப்பார்த்தும் எந்தப் பயனும் இல்லை. உனக்காக அவங்கள் எத்தினை நாளைக்கு வெளியில போய் தண்ணியடிக்கிறது. நான் கேக்கிறதைச் செய்து தந்திட்டு நீ அறையுக்குள்ள போய் இரு என்று அவன் உறுக்குவது போல் சொன்னதன் பின்னர், எப்படி அவனுக்கு விளங்கப்படுத்துவது என்ற மலைப்பு ஏற்பட வேறு வழியின்றி நத்தை கூட்டுக்குள் சுருங்குவது போல் அறையுள் முடங்குவதைத் தவிர அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. நிறை தண்ணியில் வந்து படுப்பவனிடம் என்ன நியாயம் பேசிவிட முடியும்.

நான்காவது மாதம் அவள் கருத்தரித்தபோது அவன் இத்தனை மகிழ்வாக இருபான் என்று பாமா எண்ணவேயில்லை. அதன் பின்னர் அவர்கள் கூடிக் குடிப்பது குறைந்துபோக இவளுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. கணவனுக்குத் தன்மேல் அன்புதான். அவன் நண்பர்கள் தான் கெடுக்கிறார்கள் என்று மனதுக்குள் அவர்களைத் திட்டி மகிழ்ந்தாள். நாங்கள் தனிய போய் இருக்கேலாதோ என்று ஒரு நாள் சுதாகரனைக் கேட்க அவர்கள் இருக்கிறதுதான் நல்லது. வீடுக்காசை நான் தனிய வேலை செய்து கட்ட ஏலாது. அதோடை நாங்கள் எத்தனை வருடமா சேர்ந்து இருக்கிறம். நீ வந்த உடன அவங்களைக் கலைக்கச் சொல்லிறியோ என்றதன் பின் பாமா எதுவும் பேசவில்லை.
 
அவனின் நண்பர்களும் அவனும் அவளுக்காக பழங்கள் பலகாரங்கள் என்று வாய்க்கு உருசியாக வாங்கி வந்து கொடுத்தார்கள். இவளுக்கு ஏலாமல் இருக்கும்போது அவர்கள் சமைத்தார்கள் அல்லது கடையில் வாங்கிவந்து கொடுத்தார்கள். இருந்தாலும் அம்மா பக்கத்தில இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவள் எண்ணத் தவறவும் இல்லை.
 
ஆண் குழந்தை பிறந்ததன் பின்னர் இரண்டு மாதங்கள் வரை சாதாரணமாக இருந்தவர்கள் மீண்டும் தண்ணி அடிக்க ஆரம்பிக்க பாமாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வெளியிலும் யாருடனும் தொடர்பும் இல்லை. அம்மாவுக்குச் சொன்னாலும் அம்மா கவலைப்படுவா என எண்ணிக்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருக்கவே முடிந்தது. சரி எனக்கு இதுதான் தலை எழுத்து. வேலைக்குப் போய் என்னையும் பிள்ளையையும் பாக்கிறார் தானே என எண்ணிக்கொண்டே பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தவள்  குழந்தை பிறந்து நான்காம் மாதம் மீண்டும் கர்ப்பம் தரிக்க, பெண் வைத்தியர் கொஞ்சநாள் கவனமாக இருந்திருக்கலாமே என இவள் தான் தவறு செய்தவள் போல் கூற, இவளுக்கு அழுகை மட்டும் தான் வந்தது. உங்கடை நன்மைக்குத்தான் சொல்லுறன். உங்கடை உடம்புக்குத்தானே கூடாது என்று இவளை ஆறுதல் படுத்தி அனுப்ப, சூடு சுரனை கொஞ்சமும் இல்லாத ஆளாய் இருக்கிறாரே. எத்தனை தரம் நான் சொல்லியும் கேட்காமல் என அவள் தனக்குள் தானே ஏசிக்கொண்டாளேயன்றி வேறென்ன தான் செய்ய முடிந்திருக்கும். நினைத்த நேரத்தில் எல்லாம் இவளைக் கட்டிலுக்கு அழைப்பதும், வெளியே நண்பர்கள் இருந்தாலும் கூச்சம் எதுவுமின்றி இவளுடன் கூடுவதும் பாமாவைக் கூனிக் குறுக வைத்ததுதான் எனினும் என்ன சொல்லியும் விளங்காதவனாய் நடிப்பவனிடம் எதைத்தான் எதிர்பார்க்கமுடியும். அதன் பின் இவள் அவனின் நண்பர்களை தலை நிமிர்ந்து பார்க்காமல் நாலாம் நபர்களின் வீட்டில் இருப்பவள் போல் இருக்க, அதுகூடத் தன்னை அவமதிப்பதாய் உணர்ந்து அவளை அடிக்கவும் தொடங்கினான் சுதாகரன்.
 
இம்முறை கணவனின் நண்பனுக்கு இரவு வேலை வர, அவன் பகல் முழுதும் வீட்டில் இருக்க பாமாவால் சுதந்திரமாக வீட்டில் இருக்க முடியவில்லை. இத்தனை நாள் பூனை போல் இருந்தவன் இப்போதெல்லாம் பாமாவைப் பார்த்து பள்ளிளிப்பதும், குசினியில் சமைத்துக்கொண்டிருந்தால் நான் ஏதும் வெட்டித் தரட்டோ என்று வந்து நிற்பதும், பிள்ளையை வாங்கும் சாட்டில் இவள் கைகளைத் தடவுவதுமாக பகல்பொழுது நரகமாக கணவனிடம் இதைச் சொல்லலாமா?? அவன் இதை நம்புவானா என்று பெரிய சந்தேகம் தோன்ற,பொறுக்க முடியாது என்று எண்ணியபின் ஒரு நாள் கணவனிடம் சொல்ல, அவன் அப்பிடிப்பட்ட ஆளில்லை. உனக்கு என்ர பிரென்ட்சை வீட்டை விட்டுக் கலைக்கவேணும். அதுமட்டும் நடவாது என்று கூறிவிட்டுப் போகும் கணவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.
 
அதன்பின் பகலில் பெரும்பாலான நேரங்களில் தன் அறையினுள்ளேயே அடைந்து கிடப்பதும், கதவு சுரண்டப்படுவதும் தொடர, ரமணன் இனியும் நான் பொறுக்க மாட்டன். இவரிட்டைச் சொல்லவேண்டி வரும் என்றதன் பின்னர் அவளுக்குத் தொந்தரவு குறைந்துபோனது.  ரமணன் திருந்திவிட்டான் என்று இவள் எண்ணிக்கொண்டிருக்க, தொட்டதுக்கும் எதுக்கு ரமணனைக் கூப்பிடுறாய். அவன் என்னக்காகத்தான் இந்த வீட்டில இருக்கிறான். நீ வடிவு எண்டதால எல்லா ஆம்பிளையளும் உனக்குப் பின்னால வருவினம் எண்டு நினைச்சியோ. அவன் என்ர நண்பன்.  என்று சுதாகரன் கத்தியத்தில் இவளுக்கு கண்கள் இருண்டுகொன்டு வர கால்கள் வலுவிழக்க அப்படியே நிலத்தில் இருந்து அழத்தான் முடிந்தது.
 
இன்னும் வரும்
 
Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.