Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

 

தம்பி சுடுவதாக இருந்தால் நீயே சுட்டுவிடு. அது உனக்கும் பெருமை உனக்கு சுட பழக்கிய எனக்கும் பெருமை.”

 

மணலாறு கொண்டாடிய ஒரு முதுபெரும் தளபதியின் என்னுடனான இறுதி உரையாடலின் ஒரு பகுதியே மேற் கூறிய வசனம்.

 

 

 

போர் புதுகுடியிருப்பை தாண்டி, ஆனந்தபுரம் - தேவிபுரம் வரை வந்திருந்த காலம் அது.

 

போர்க்களத்தை விட்டு, குடும்ப மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தளபதிகளும், முதுபெரும் வீரர்களும் ஓடி ஒளிந்து கொண்டிருந்த வேளையில், மூன்று நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்து விட்டு கட்டாய ஆட்சேர்ப்பில் களமாடி கொண்டிருந்தார்கள் எம் விடுதலை வேங்கைகள்.

 

தலைமைக்கு கடுமையான முடிவெடுக்க வேண்டிய கட்டாய நிலைமை. தர்மத்தின் சமநிலையை சரிகாக்க வேண்டிய சூழலில் களத்தை விட்டு தப்பியோடிய வீரர்களுக்கு மீண்டும் களம் திரும்ப ஒரு பொது மன்னிப்பு காலம் வரையறுக்கபட்டது.

 

காலம் கடந்தும் மீள களம் திரும்பியோர், தப்பி ஓடியவர்களின் எண்ணிக்கையில் பத்து வீதம் கூட இல்லை. இறுக்கமான தலைமை, மன்னிப்பு காலம் முடிந்தும் திரும்பி வராத இருவருக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம் ஏனையவர்களை வரவைக்க முடியும் என்று உறுதியாக நம்பியது.

 

அத் தண்டனையை தப்பியோடிய முது பெரும் தளபதிகளுக்கு வழங்குவதன் மூலமே ஏனையவர்களுக்கு புரியவைக்க முடியும் என்பதே நீண்ட கலந்துரையாடலின் முடிவு. ஐவரை தெரிவு செய்து அதில் இருவரை இறுதி செய்யப்பட்டது. 

 

அதில் ஒருவரான மேற்சொன்ன தளபதியை அவரது குடும்பத்தின் தற்காலிய குடியில் இருந்து அழைத்து வரும் பொறுப்பு எனக்கு வழங்கபட்டிருந்தது. எனது மெய்பாதுகாவலனுடன் அவரது குடிலை அடைந்த போது, அவரது மனைவி மட்டுமே எங்களை வரவேற்றார். இரண்டு பிள்ளைகளும் போர் மேகத்தின் கீழே மணல் விளையாடி கொண்டிருந்தார்கள். ஏற்கனவே பழக்கமான என்னை அன்று கண்டதில் மகிழ்ச்சி அடைந்த அண்ணி (தளபதியின் மனைவி), பக்கத்து வீட்டில் கடன் வாங்கி இரண்டு பிளாஸ்டிக் குவளைகளில் தேநீரை தந்து விட்டு வந்த நோக்கம் தெரியாமல் உரையாடினார்.

 

அண்ணி.. அண்ணையை கூட்டிக்கொண்டு போகத்தான் வந்தனாங்கள்.”

 

இல்லை தம்பி, அவரை கண்டு கன நாட்கள். அவரது முகமே பொய் சொல்லியது.

 

மன்னிக்க வேண்டும் அண்ணி எங்கள் கடமையை செய்ய விடுங்கள். “சொல்லி முடிக்க முன்னரே எனது காவலனுக்கு கட்டளையிட்டேன். 

 

குடில் முழுக்க ஒரு இடம் விடாமல் தேடு. “

 

கட்டளை இட்ட நான் வெளியில் சென்று பிள்ளைகளிடம் அப்பா எங்கே என்று கேட்கவும், கள்ளமில்லா அந்த குழந்தைகள் தந்தையின் இருப்பிடத்தை காட்டி நின்றன.

 

எதிரியிடம் சரணடைந்த போர் வீரனைப்போல அவர் குறுகி நின்றதைப் பார்க்க மனதில் எங்கேயோ பிசந்தது.

 

அண்ணை உங்களை கூட்டி கொண்டு போகத்தான் வந்தனாங்கள். என்ன இருந்தாலும் நீங்கள் அங்கே வந்து கதையுங்கள் அது தான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.”

 

மறு பேச்சில்லாமல் ஒரு அரைக்கை மேலங்கியை மாட்டி கொண்டு சரத்துடன் கிளம்பிவிட்டார். 

 

புறப்படும்போது எனது கால்களை பிடித்தன அந்த குழந்தைகள். 

 

மாமா அப்பாவை ஒன்றும் செய்யாதீர்கள்.”

 

எங்கேயோ ஒரு இடி இடித்தது. 

 

ஒன்றுக்கும் யோசிக்காதீங்கள். ஒரு சின்ன விசாரணை முடிந்ததும் நானே கொண்டுவந்து விடுகிறேன் அண்ணி, குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.”

 

பிள்ளைகளுக்கு இறுதி முத்தத்தை வழங்கிய அண்ணை வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்தபடியே வானத்தை வெறித்த படி இருந்தார்.

 

குடிலுக்குள் நுழைந்த அண்ணிக்கு நாங்கள் குடிக்காத தேநீரை இலையான்கள் மொய்த்த போது தான் நிலமை விளங்கி இருக்கும் போல,  குளறிக் கொண்டே வாசலுக்கு வரும் போது வாகனம் பார்வை எல்லையை தாண்டி இருந்தது.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் சொல்லாமல் இருப்பது சிலருக்கு ஆறுதலாகவும் சஞ்சலங்களை ஏற்படுத்தாமல் இருப்பாதவும்  இருக்கும் சிலருக்கு சொல்வதால் ஆறுதலாக இருக்கும் 

பகலவன்,
 நீங்கள் தத்ரூபமாக வெளிப்படுத்திய சுமை புரிகிறது. கதை அற்புதமாக இருக்கிறது என்று கூறி நகர்வதற்கு இது கதை அல்ல என்பது அனைவரும் அறிந்தது. நாங்கள் இக்கட்டான விடயங்களைப் பேசாப்பொருளாக்கிப் பழகிப்போனவர்கள் என்பதால் பல விடயங்கள் பேசப்படாமல் இருக்கின்றன. 

உங்களிற்கோ, அல்லது இந்த அனுபவத்தை உங்களிற்குக் கூறிய நீங்கள் அறிந்தவரிற்கோ, இந்தச்சுமை எத்துணை வலிமிக்கதாய் இருக்கும் என்பதை கற்பனை பண்ண மட்டுமே எங்களால் முடிகிறது. இது துரோணரைக் கொன்றவரிற்கு மட்டும் ஏற்படும் வலியல்ல. மாறாக, சீலனின் கட்டளைப் பிரகாரம் சீலனைக் கொன்று விட்டு ஓடிய போராளி தொட்டு, எதிரிகளைப் போர்க்களத்தில் கொன்றது தொட்டு, துரோகிகள் வழியாக அனைத்துக் கொலைகளின் சுமைகளும் இன்று கொலையாளிகளால் தன்னந்தனியே தான் சுமக்கப்படுகின்றன. 

ஒரு கன்னையாகக் கால்ப்பந்து ஆடி, கன்னையின் வெற்றிக்காக goal போட்டபோது ஆரவரித்து மாலை சூடி அந்தக் goalளை அடிப்பதில் இருந்த வீரம், தியாகம், கட்டுப்பாடு, மனக்குவியம் என அனைத்தையும் கொண்டாடி மகிழ்ந்திருந்த இந்தச் சமூகம், திடீரென ஒரு பொழுதில், கால்பந்து கொடுங்குற்றம், அதிலும் goalளடித்தவர் அரக்கன் என்று தீர்ப்பை மாற்றிக் கூறிவிட்டு நாட்டாமைகள் போன்று நடக்கையில், கோள் அடித்தவன் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று எங்களால் கற்பனை மட்டும் பண்ண முடிகிறது.

ஆற்றுப்படுத்த இன்றைக்கு எவரிற்கும் அவகாசமில்லை. இனிமேல் அது வரும் என்றும் தோன்றவில்லை. தலைமைத்துவம் மிக்க மனிதராய், சமூகத்தின் நேற்றைய கதாநாயகர்களாக, வலி சுமப்பவர்கள் இன்றைக்குச் செய்யவேண்டியது மறுபரிசீலனை அல்ல. மறுபரிசீலனை மூலம் இச்சுமை இறக்கப்படமுடியாதது. மாறாக, இந்தக் கணத்தில் உங்கள் வாழ்வு மீது முற்றுமுழுதான விழிப்புணர்வோடு இருப்பது மட்டும் போதுமானது. இறந்தகாலத்தை இறக்கவிடுவது தவிர்க்கமுடியாதது. இறந்த காலத்தின் விலங்கோடு வாழத் தலைப்படுவதால் எந்தப் பிராயச்சித்தத்தையும் எட்டமுடியாது. இறந்த காலத்தை முற்றாகப் புறக்கணித்து, பிராயச்சித்தம் என்று சிந்திப்பதற்குப் பதில் குற்றத்தைப் புறக்கணித்து, பழையன அனைத்தும் புரியாமைகள் என்று புதைத்துவிட்டு, முற்று முழுதான சுதந்திரத்தோடு இந்தக் கணத்தில் வாழத் தொடங்குங்கள் என்பதை மட்டுமே கூறத்தோன்றுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

வலிமையான போராட்டம் நிறைய வலியோடு முடிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அர்சசுனனுக்கு துரோணர் குரு. ஆனால் போராடும் போது இருவருமே வெவ்வேறு அணிகளில் இருந்தார்கள்

இங்கே துரோணர் எந்த அணியிலும் இல்லை.

போராடப் போகும் இளைஞனுக்கு என்று ஒரு விதி இருந்தது. அவனது முடிவு மாவீரனாகிறது அல்லது துரோகியாகிறது

மகாபாரதத்தில் அர்ச்சுனன் தனது குரு துரோணரைக் கொன்றாலும் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் இங்கே....

நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஐவரை தெரிவு செய்தார்கள்

அந்தக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டவர்கள் பின்னாளில் என்னவானார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கால கட்டத்தில் இயக்க இரகசியங்களைக் காப்பாற்ற கூடப் பிறந்த சகோதரனையே சுடச்சொல்லி ஆணை கொடுத்ததாகவும் அறிந்திருக்கின்றேன். ஆனால் எல்லாம் முடியப்போகின்றது என்று தெரிந்த பின்னரும் விசுவாசம் மிக்கவர்கள் ஆணைகளை செயற்படுத்தி அடைந்த திருப்தி என்ன? தலைமையின் கட்டளைகளை மீறவில்லை என்ற கடைமையுணர்வைத் தவிர வேறு ஒன்றுமில்லையே.

இன்னுமொருவன் குறிப்பிட்டதுபோல இறந்த காலத்தை முற்றாகப் புறக்கணித்து வாழ்வது துரோணர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அருச்சுனர்களுக்கு முடியாது என்றுதான் நினைக்கின்றேன். நினைவு இருக்கும் கணம் வரை சுமையைக் காவிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து கொண்டு போகும் போது....இடையில் நிறுத்தலாமா என்று நினைக்குமளவுக்கு.....உங்கள் எழுத்து...வலிமை மிக்கதாக இருந்தது!

எனினும்....இன்னுமொருவன் மேலே கூறியது போல.....இறந்த காலத்தைப் புறந்தள்ளிவிட்டு...வருங்காலத்தை எதிர் கொள்ள முடியாது என்பதால்...தொடர்ந்தும் வாசித்தேன்!

உண்மையில் துரோணர்....அவரது மகன் அசுவத்தமா இறந்து விட்டான் என்று வீமன்...அசுவத்தாமா என்ற யானையைக் கொன்று விட்டுப் பொய்யுரைக்க...அதைத் தருமரும்..உறுதிப் படுத்த....துரோணர் தனது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டுத்....தேரின் தட்டில் அமர்ந்து விடுகிறார்!

அவர் மனதளவில் இறந்த பின்னரே...சிகண்டி...என்னும் அலி...ஒருவன்/ ஒருத்தி....அவரது தலையைத் துண்டிக்கிறான்/ கிறாள் !

இதில் தண்டனை பெறும் தளபதியும்...மரணமும்...அவ்வாறே நிகழ்ந்ததாக இருக்கட்டும்!

11 hours ago, பகலவன் said:

பிள்ளைகளுக்கு இறுதி முத்தத்தை வழங்கிய அண்ணை வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்தபடியே வானத்தை வெறித்த படி இருந்தார்

மேல் வரும் வரிகள்....அதைத் தெளிவாகச் சொல்லுகின்றன!

  • தொடங்கியவர்

உணர்வுகளையும் பின்னூட்டங்களையும் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.

இன்னுமொருவன்,

நீங்கள் பதிவை நன்றாக புரிந்துகொண்டு பதில் இட்டிருக்கிறீர்கள். உண்மையில் அது ஒரு பெரிய சுமைதான் அல்லது இன்னும் நாங்கள் சுமக்கும் சுமையின் ஒரு பகுதி என்றும் கூறலாம். அதை இங்கே இறக்கிவைக்க வேண்டும் என்ற நோக்கில் நான் பதிவிடவில்லை. 

உண்மையில் என் கடைசி பதிவான "விசாரணை" எழுதி முடித்த சில நாட்களில் இந்த பதிவை எழுதிவிட்டேன். இருந்தாலும் பதிவிடும் அளவுக்கு மனபக்குவம் அடையவில்லை. 

குற்ற உணர்ச்சி என்பது செய்த குற்றம் என்று நாங்கள் கருதும் ஒன்றிற்கு தண்டனை அல்லது மன்னிப்பு கிடைக்காத பட்சத்தில் எமக்குள்ளே ஏற்படுவது. அது கடைசிவரை அழியாது.

வலியில் இருந்து விடுபடவேண்டும் என்றோ, இறக்கி வைத்துவிடவேண்டுமென்றோ நான் விரும்பவில்லை. இது தான் காலத்தின் தண்டனை என்று மனப்பூர்வமாக ஏற்று வாழ்வதால் மட்டுமே தொலைந்துவிட்டதாக நான் கருதும் மனிதத்தை குறைந்தது தேடவாவது முடியும்.

பெரும்பாலும் தர்மமும் மனிதமும் எப்பவும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. தர்மம் வென்ற பல தருணங்களில் மனிதம் தோற்றுத்தான் போயிருக்கிறது. மனிதம் வென்ற தருணங்களில் தர்மம் தோற்றுப்போயிருக்கிறது. இப்போது நான் என்னை மனிதானாக்க முயலுகிறேன். அதில் வெல்வேனா தோற்பேனா தெரியாது. வென்றுவிட வேண்டும் என்று மட்டுமே மனம் சொல்கிறது. அதன் ஒரு படி தான் இந்த பதிவு. "மனிதனிசஸம்" நோக்கிய பயணத்தில் முதல் தடம்.

நன்றி இன்னுமொருவன் உங்களின் நேரத்துக்கு.

கிருபன், 

உண்மைதான் கிருபன் ஆணையை செயற்படுத்தியவர்கள் அடைந்தது என்ன.? 

வலிகளை மட்டும் காலம் முழுவதும் சுமந்தவர்களாக வாழ்வதை தவிர. 

துரோணர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அருச்சுனர்களின் மன வலியைப் போக்க கிருஷ்ணர்கள் இல்லாத காலகட்டத்தில் அருச்சுனர்களாக பிறந்துவிட்டோம். காலம் முழுக்க அனுபவிக்க வேண்டிய வலி.

இது ஏகலைவன் இனி வாழ்நாளில்  அம்பு விட முடியாமல் அனுபவித்த வலியை விட, கர்ணன் தன் பிறப்பை சொல்ல முடியாமல் அனுபவித்த வலியை விட, குந்திதேவி தன் மகனை கொல்லும் என்று தெரிந்தும் கர்ணனிடம் வரம் வாங்கிய போது அனுபவித்த வலியை விட கொடியது.

உறவினர்களின் பிள்ளைகள் காலை கட்டியணைத்து "மாமா" என்று கூப்பிடும்போது வரும் வலி, ஆயிரம் அம்புகளை ஒன்று ஒன்றாக இதயத்தில் பாய்ச்சுவதை விட கொடியது.

என்ன.. வீரத்துக்கு பயிற்சி தந்து அருச்சுனனாக்கியவர்கள் வலிகளை பயில ஏகலைவனாக்கிவிட்டார்கள். 

நன்றி கிருபன்.

புங்கை அண்ணா,

சரியாக அனுமானித்து மகாபாரதத்துடன் ஒப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள். 

பயிர்கள் போன்ற அருச்சுனர்களை மட்டுமே வெளியிலே தெரிந்து அதை புகழ்ந்தும் பழகிவிட்டோம். ஆனால் அதற்காக உரமாகிய துரோணர்கள் மண்ணுக்குள்ளேயே மறைந்து இன்னும் தெரியாமல் காலா காலத்துக்கும் பயிர்களை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். 

நன்றி புங்கையண்ணா.

எமது விடுதலைப் போராட்டத்தில் வலிகளை சுமந்து வாழும் அருச்சுனர்களுக்கும், உரமாகிய வெளித்தெரியா துரோணர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

 

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டா இதனை வாசித்தேன் என்று இருக்கிறது.  

  • தொடங்கியவர்

கவி அருணாசலம்,

அந்த கலந்துரையாடலில் முடிவெடுத்தவர்கள் எவருமே இப்போது உயிருடன் இல்லை.

ஆனால் சுவாரிசயம் என்னவென்றால் அந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர் இப்போ புலம்பெயர் நாடு ஒன்றில் விரைவில் நாடு பிடிப்போம் என்று ஒரு அமைப்பின் செயற்பாட்டாளராக மக்களை .......... ஏற்றிகொண்டிருக்கிறார். அதுதான் அவரின்/மக்களின் விதி.

இன்று மட்டும் அவருக்கு கூட தெரியாது, அவர் அந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார் என்று.

இதை வாசித்து ஊகிப்பாராக இருந்தால் யாவருக்கும் நல்லது.

நன்றி உங்கள் வினாவுக்கும் காத்திருப்புக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

ஏற்றிகொண்டிருக்கிறார். அதுதான் அவரின்/மக்களின் விதி.

ஒரு கூட்டம் ஏற்றச்  சொல்லி இருக்கும். அவரும் ஏற்றியிருப்பார். ஏற்றச் சொன்னவர்கள் ஒன்றும் சாதாரணமானவர்கள் கிடையாது. அதை அறியாதது அவரின் மதி

  • கருத்துக்கள உறவுகள்

2009க்குப் பிறகு அகதியாக வந்த ஒருவர் சொன்ன கதை - ஒரு முக்கிய இலக்கினைத் தாக்குவதற்கு  கரும்புலி ஒருவர் தெரிவுசெய்யபட்டார். அவரும் அத்தாக்குதலுக்கு மகிழ்ச்சியுடன் தாக்குதல் நாளை எதிர்ப்பார்த்தார்.  தாக்குதல் நாளுக்கு சில தினங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினைப் பார்க்கச் சென்றார்.   தாக்குதல் நாளில் இலக்கிற்கு கிட்ட சென்ற பின், இலக்கினை அழிக்காமல் பெற்றோர், உறவுகளின் எண்ணம் வர திரும்பி வந்தார்.   அ வர் இதனால் இயக்கத்தினால் சுடப்படுகிறார்.  அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் சென்றிருந்தால் அந்த இலக்கினை அழித்திருப்பார். அந்த இலக்கினை அழிக்காததினால் இழப்புகள் அதிகம்.   

80 களில் களவெடுப்பவர்கள் சிலரை மின் கம்பத்தில் சுடப்பட்டு கட்டியிருப்பார்கள்.     தகப்பன் செய்த பிளையினால், சுடப்பட்டவனின் குடும்பத்தின் பிள்ளைகள்  பெற்ற வேதனைகள்?.  சுட்ட இயக்கத்துக்கு ஆதரவான பிள்ளைகள் அவ்வியக்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தார்கள்.  அப்படித்தண்டனை வழங்கியதினால் நீண்டகாலத்துக்கு களவுகள் குறைந்தன.  ஆனால்  வறுமையினால் களவெடுத்தவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

80களில் பல்வேறு இயக்கங்கள். பல்வேறு இயக்கங்கள் இருப்பதினால் இலக்கினை அடைவது தடங்கலாகும் என்பதினால் சில இயக்கங்களை  விடுதலைப்புலிகள் தடைசெய்தது. அதனால் ஏற்பட்ட மோதலினால் மற்றைய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். இதில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது பற்றுக் கொண்டு,  அவ்வமைப்பில் சேர்வதற்கு தவறுதலாக வேறு படகில் தமிழகம் சென்று மற்றைய இயக்கங்களில்  சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டார்கள். அப்படிக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் பிற்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரானநிலைப்பாட்டினை எடுத்தன.  அதேநேரத்தில் விடுதலைப்புலிகள் பல இராணுவநிலைகளை அழித்து பலம் பெற்றுவந்தார்கள்.

சிங்கள இராணுவம், கிழக்கினைப் பிடித்து , வன்னியை பிடிக்க முன்னேறிக் கொண்டிருக்கிறது.  சிங்களம் வன்னியை முழுவதுமாகப்  பிடித்தால் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்கள்.  தமிழர்களின் போராட்டம் முற்றுமுழுதுமாகத் தோற்கப்படும். வெற்றிபெறும் சிங்களம்,  இளைஞர்களையும், பெண்களையும் சித்திரவாதை செய்து அழிப்பார்கள்.  இறந்த பெண் போராளிகளின் உடலையே விட்டு வைக்காத சிங்களத்தினால்,  பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகப்படுவார்கள். இதனால் சிங்களம் தோற்கடிக்கப்படவேண்டும்.  மேலதிகமான போராளிகள் தேவை. இயக்கத்தில் விட்டு தப்பியோடியவர்களையும் மீண்டும் இயக்கத்துக்கு  திருப்பிக் கொண்டுவர தலைமை இறுக்கமான முடிவை எடுத்தது . 70,80களில் மற்றைய இயக்கங்கள் போல் அல்லாமல் எல்லோரையும் சேர்க்காத விடுதலைப்புலிகள் ,  2007,08,09களில் பலரை கட்டாய ஆட்சேர்ப்புகளில் சேர்த்தார்கள் .  இதனால் பல குடும்பங்கள் தங்களது நிலமைகளை எண்ணிவேதனைப்பட்டார்கள். கட்டாய ஆட்சேர்ப்பில் விடுதலைப்புலிகளுக்கும் எதிரான கொள்கையுடையவர்களும் ,  விடுதலைப்புலிகளை அழிக்க விடுதலைப்புலிகளில் இணைந்தார்கள்.  புலிகள் அப்பொழுது வெற்றிபெற்றிருந்தால் இப்பொழுது வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கும்.

என்னுடைய குடும்பத்துக்கு ஒன்றும் நடக்காமல், வெளினாட்டில் இருந்துகொண்டு நான் என்னவும் எழுதலாம்.  நடந்திருந்தால் சிலவேளை  வேறு விதமாக எழுதியிருப்பேன்.     

 

On 3/14/2018 at 4:40 AM, பகலவன் said:

போர் புதுகுடியிருப்பை தாண்டி, ஆனந்தபுரம் - தேவிபுரம் வரை வந்திருந்த காலம் அது.

 

போர்க்களத்தை விட்டு, குடும்ப மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தளபதிகளும், முதுபெரும் வீரர்களும் ஓடி ஒளிந்து கொண்டிருந்த வேளையில், மூன்று நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்து விட்டு கட்டாய ஆட்சேர்ப்பில் களமாடி கொண்டிருந்தார்கள் எம் விடுதலை வேங்கைகள்.

 

 

சில சம்பவங்களின் பதிவுகள் வரலாறோடு இணைந்துவிடும் அல்லது இணைக்கப்பட்டுவிடும். இவை உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நிகழும். ஆதலால் இந்தச் சம்பவத்துக்கான காரணங்கள் பின்புலங்கள் நியாயங்கள் விரிவாக எழுதுவது அவசியமாகின்றது. செத்தவரும் சுட்டவரும் அந்த நியாயங்களில் தோழமையுடன் நிற்பதுதான் குற்ற உணர்வைவிட பிரதானமானது. உணர்ச்சிகளால் மட்டும் அதை செய்ய முடியாது. வெறும் கண்ணீரை வைத்து எதையும் சாதிக்க முடியாது ஏனெனில் அது வடிகால் உணர்வோடு தொடர்புபட்டது. கண்ணீருக்கான காரணங்கள் தான் செயலாற்றல் உடையது. அறிவோடு தொடர்புடையது. மூத்தவர்கள் பின்வாங்கிய காரணங்கள், புதியவர்கள் களத்தில் பட்ட அவலங்கள்,  இந்த நிலையால் ஏற்பட்டுக்கொண்டிருந்த -ஏற்படப்போகும் விழைவுகள் என இக் கதையில் முக்கியமாக எழுதவேண்டியவைகள் தவறவிடப்பட்டுள்ளது. அவை எமக்கு புரியலாம் என நினைப்பதோ எல்லாருக்கும் தெரிந்தது என நினைப்பதோ தற்காலத்துக்கு உரியது. ஆனால் இக்கதை வேதனையின் வடிகால் அல்ல மாறாக எதிர்காலத்துக்குரியது. உங்கள் எழுத்துக்களை வரவேற்கும் அதே நேரம்  இவ்வாறான பதிவுகள் கத்திமேல் நடப்பதுக்கு ஒப்பானதாகும். ஆதலால் அதிக கவனம் தேவை. குற்றவாளிக் கூண்டில் நிற்பவரிடம் வக்கீலுக்கு பெயர் தெரிந்தாலும் உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் அவர் திரும்ப சொல்வதுபோல் இதிலும் சம்பத்துக்குரிய நியாயங்கள் தெளிவான அறிக்கைக்கு ஒப்பாக முன்வைப்பது முக்கியமானது. உதாணத்துக்கு இவ்வாறான ஒரு கதையை நான் எழுத நேர்ந்தால் மேலே மேற்கோள் காட்டிய பத்தியை எழுத குறைந்தது நான்கு பக்கங்கள் தேவைப்படும். 

இது எனது தனிப்பட்ட கருத்து.. சில வேளை இதில் பிரயோசனம் இருக்கலாம் என்ற நோக்கில் பதிந்துள்ளேன் தவிர வேறொன்றும் இல்லை.

உங்கள் எழுத்து நடை அருமை. 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2018 at 9:37 AM, பகலவன் said:

தர்மம் வென்ற பல தருணங்களில் மனிதம் தோற்றுத்தான் போயிருக்கிறது. மனிதம் வென்ற தருணங்களில் தர்மம் தோற்றுப்போயிருக்கிறது. இப்போது நான் என்னை மனிதானாக்க முயலுகிறேன். அதில் வெல்வேனா தோற்பேனா தெரியாது. வென்றுவிட வேண்டும் என்று மட்டுமே மனம் சொல்கிறது. அதன் ஒரு படி தான் இந்த பதிவு.

இதை வெற்றிகரமாக கடந்து செல்ல மனத்தைரியம் மிகவும் அவசியம்...அது உங்களுக்கு கிடைக்கட்டும்

  • தொடங்கியவர்

சுகன்,

உங்கள் கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். இந்த சூழலுக்கான அடிப்படை   நியாயம் எழுத பக்கங்கள் போதாது. அதை வாசகர்களிம் விடுவதும் தவறு என்றும் உணர்கிறேன்.

இன்னொரு சந்த்தப்பத்தில் அதை பகுதியாகவேனும் எழுதுகிறேன். 

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

 

முடிவை எடுத்தவர்கள் இறுதிவரை சரணடையாது நின்று களமாடி மடிந்தார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.