'இரான் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்': டிரம்ப் - புதின் பேசியது என்ன?
பட மூலாதாரம்,NATALIA KOLESNIKOVA,NICHOLAS KAMM/AFP via Getty Images
படக்குறிப்பு,சில ஊடக அறிக்கைகளின்படி, இரான் போர் காரணமாக உலகம் முழுவதும் உயர்ந்து வரும் எண்ணெய் விலையைக் கண்டு அமெரிக்கா கவலை அடைந்துள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரானுக்கு எதிரான போர் 'விரைவில் முடிவுக்கு வரக்கூடும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு (இந்திய நேரப்படி) தெரிவித்தார்.
அவரது கூற்றைத் தொடர்ந்து, உலகளாவிய பங்குச் சந்தைகளில் உடனடி நேர்மறையான தாக்கம் ஏற்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "இந்தப் போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" எனக் கூறினார்.
இந்த போருக்கான அமெரிக்காவின் திட்டம் 'கால அட்டவணையை விட முன்னதாக' செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இரானின் ராணுவ பலம் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது நடுநிலையாக்கப்பட்டுவிட்டது என்றும் டிரம்ப் கூறினார்.
"அவர்களிடம் இப்போது கடற்படை இல்லை, தகவல் தொடர்பு இல்லை, விமானப் படையும் இல்லை. அவர்களின் ஏவுகணைகள் சிதறிக் கிடக்கின்றன. அவர்களின் டிரோன்கள் மற்றும் அவற்றின் தொழிற்சாலைகள் என அனைத்தும் எல்லா இடங்களிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் சுற்றிப் பார்த்தால், ராணுவ ரீதியாக அவர்களிடம் எதுவும் இல்லை" என்று டிரம்ப் கூறினார்.
போர் 'விரைவில் முடிவுக்கு வர முடியுமா' என்ற கேள்விக்கு, 'எனக்கும் அதே எண்ணம் தான் உள்ளது' என்று அவர் பதிலளித்தார்.
இருப்பினும், பின்னர் புளோரிடாவில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "எங்களது இரான் நடவடிக்கை விரைவில் முடியும், ஆனால் இந்த வாரம் அல்ல" என்று தெரிவித்தார்.
"இரானிடம் இருந்த அனைத்தும் போய்விட்டன. அதன் தலைமை உட்பட" என்று அவர் கூறினார்.
மேலும், "நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனக்குத் தெரியவில்லை. அது சூழ்நிலையைப் பொறுத்தது. இதன் முடிவு எனது மனதில் இருக்கிறது, வேறு யாருடைய மனதிலும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடும் என்று சில நாட்களுக்கு முன்புதான் வெள்ளை மாளிகை மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தை மற்றும் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரான் போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.
டிரம்பின் இந்த கூற்றுகள் பங்குச் சந்தைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. திங்கட்கிழமை அன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
இரான் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற டிரம்பின் கருத்து சந்தைக்கு நிம்மதி அளித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், டபிள்யூ.டி.ஐ மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் திங்கள்கிழமை காலையில் ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. ஆனால் பகல் நேரத்தில் பேரலுக்கு சுமார் 90 டாலராகக் குறைந்தது.
உலக அளவில் எண்ணெய் விலையைத் தீர்மானிப்பதில் டபிள்யூ.டி.ஐ மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆகியவை மிகப்பெரிய அளவுகோல்களாக உள்ளன.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டும் திங்கள்கிழமை சுமார் 1.75 சதவீத இழப்புடன் முடிவடைந்தன. இந்திய பங்குச் சந்தைகள் மூடப்பட்ட பிறகே டிரம்பின் கருத்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
'புதினுடன் பேசினேன்'
பட மூலாதாரம்,Roberto Schmidt/Getty Images
படக்குறிப்பு,புளோரிடாவில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், "இரானின் தலைமையை நாம் அழித்துவிட்டோம்" என்றார்.
இதற்கிடையில், திங்கள்கிழமை டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த ஆண்டில் இருவருக்கும் இடையே நடந்த முதல் உரையாடல் இதுவாகும்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் புதினுடன் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டேன். அவர் எங்களுக்கு உதவ விரும்புகிறார். யுக்ரேனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு இன்னும் அதிகமாக உதவ முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் எங்களிடையே நல்ல உரையாடல் நடந்தது. அவர் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க விரும்புகிறார்" என்றார்.
சில ஊடக அறிக்கைகளின்படி, இரான் போர் காரணமாக உலகம் முழுவதும் உயர்ந்து வரும் எண்ணெய் விலையைக் கண்டு அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. எனவே ரஷ்யா மீதான எண்ணெய் தொடர்பான தடைகளைத் தளர்த்துவது குறித்து அது பரிசீலித்து வருகிறது.
கடந்த வாரம் தான், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா '30 நாள் விலக்கு' அளித்தது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தைப் பராமரிக்க, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அமெரிக்க கருவூலத் துறை 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அதன் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திங்கள்கிழமை புதினுடனான டிரம்பின் உரையாடலின் போது, இரானின் உச்ச தலைவராக மொஜ்தபா காமனெயி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புதின் வாழ்த்து தெரிவித்ததாகவும், இரானுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது.
இருப்பினும், மொஜ்தபா உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதில் தனக்கு 'மகிழ்ச்சியில்லை' என்று டிரம்ப் கூறியிருந்தார்.
சமீபத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் மகன் தான் மொஜ்தபா.
இரானுக்கு எச்சரிக்கை
பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
படக்குறிப்பு,டெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் வயலில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு புகை எழுகிறது. (படம் மார்ச் 9, 2026 அன்று எடுக்கப்பட்டது)
இரானிய ஏவுகணைகள் குறித்து டிரம்ப் கூறுகையில், "அவர்கள் ஏவ வேண்டிய அனைத்தையும் ஏவிவிட்டார்கள். இனி அவர்கள் புதிய உத்திகள் எதையும் முயற்சி செய்யக்கூடாது, இல்லையெனில் அந்த நாடு அழிந்துவிடும்" என்றார்.
"அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், இரான் முற்றிலுமாக அழிக்கப்படும், அதன் பெயர் மீண்டும் ஒருபோதும் கேட்காது" என்று அவர் மிரட்டல் விடுத்தார்.
ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய டிரம்ப் , அமெரிக்கா "அதன் கட்டுப்பாட்டை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது" என்றும் "அமெரிக்காவால் நிறைய செய்ய முடியும்" என்றும் கூறினார்.
உலகளாவிய கடல்வழி எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. இந்தப் போர், கடல்வழி போக்குவரத்துப் பாதையைத் தடுத்துள்ளதால், சமீபத்திய நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
போர் தொடங்கியபோது, இரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், அதன் வழியாகச் செல்லும் எந்தக் கப்பலையும் தகர்த்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தது.
இருப்பினும், பின்னர் இரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்சாதே தாங்கள் ஹோர்முஸ் நீரிணையை மூடவில்லை என்று தெரிவித்தார்.
இரானின் புதிய தலைவரைப் பற்றி டிரம்ப் என்ன சொன்னார்?
பட மூலாதாரம்,Arezoo / Middle East Images / AFP via Getty Images
படக்குறிப்பு,மார்ச் 9 அன்று இரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா காமனெயிக்கு ஆதரவாக மக்கள் ஒரு பேரணியில் கலந்து கொள்கிறார்கள். மொஜ்தபா முன்னாள் உச்ச தலைவர் அலி காமனெயி மகன் ஆவார்.
இரானுக்காக ஏதேனும் புதிய தலைவரை மனதில் வைத்திருக்கிறீர்களா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, "அது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, ஆனால் ஆம், என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது" என்று அவர் கூறினார்.
பேட்டிக்குப் பிறகு, புளோரிடாவில் குடியரசுக் கட்சியினரிடயே உரையாற்றிய டிரம்ப், இரான் மோதல் குறித்துக் கூறுகையில், "பல வழிகளில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம், ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை. இறுதி வெற்றியை அடையவும், இந்த நீடித்த அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்கவும் முன்னெப்போதையும் விட அதிக உறுதியுடன் நாம் முன்னேறி வருகிறோம்" என்றார்.
நீண்ட கால அடிப்படையில் அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் எந்தவொரு கூட்டாளியையும் தாக்குவதற்கான ஆயுதங்களை இரான் உருவாக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.
பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஜூர்ச்சரின் கூற்றுப்படி, இந்த இலக்கை அடைய இரானில் ஆட்சி மாற்றம் தேவைப்படும், அதை டிரம்பால் இதுவரை சாதிக்க முடியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cwy8e27kzn1o
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.