Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jeyam.jpg

 

போராளியின் இறுதி வெடி !
எல்லாம் முடிந்துவிட்டது.
முன்னால் கடல்
பின்னால் நிலம்.
இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம்.
 
நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள். எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள். சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம்.  எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது.
 
திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம்.  அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை.
 
‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’
 
கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும்.
 
நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள்.
 
பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள்.
 
அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ?
 
உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும்.
 
சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம்.
ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
 
ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கி விடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை.
எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில்.
 
அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம்.
 
ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும்.
இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது.
அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது?
 
காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேலை.
நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர் கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம்.
 
இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ? ஆண்டாண்டு காலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத் தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ?
எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது..
 
வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை.
 
ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம்
‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’
என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார்.
 
என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன்.
 
இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பள்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது.
இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன்.
 
எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன்.
 
இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ?
 
எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.
அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை.
 
எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது. எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள்.
உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம்.
 
உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும்.
 
மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும்.
 
எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும்.
 
விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள்.
 
இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும்.
எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன்.
 
‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’
 
வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.
 
மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?!
 
அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும்.
 
‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’
இருவரும் தயாரானார்கள்.
 
குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது.
 
வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார்.
 
பட்ட்டீர்ர்….பட்ட்டீடர்ர்.. !
 
‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘
 
என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையாக இருக்கிறது. 😞

  • கருத்துக்கள உறவுகள்+

கல் நெஞ்சு கூட கசிந்திடும் தியாகம். 

கண்ணிர் வர வழைக்கும் பதிவு...

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண ஒரு பொதுமகனாலேயே இந்த தோல்வியை இத்தனை வருடம் கடந்தும் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.

உயிரை வெறுத்து ஆயுதம் தூக்கியவர்கள் எப்படி தாங்குகிறார்களோ?

இது எப்போதும் எனக்குள் இருக்கும் கேள்வி.

இணைப்புக்கு நன்றி நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற நிகழ்வுகளைக் கூறுவதற்கு வார்த்தைகளும் வலுவிழந்து போய்விடுகின்றன......! 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2023 at 18:02, ஈழப்பிரியன் said:

உயிரை வெறுத்து ஆயுதம் தூக்கியவர்கள் .......

மண்ணிற்காக போராடிய எங்கள் மைந்தர்கள் தம் விலைமதிப்பற்ற  உயிரை நேசித்தே  களமாடியவர்கள். அவ்ர்கள் நேசித்த ஒன்றை எமக்கு கொடையாக தந்தார்கள்.
வெறுத்த உயிரைத்தான் அவர்கள் ஈகம் செய்தார்கள் என்பது மாவீரர்களின் தியாகங்களுக்கு  பெருமைசேர்க்காது..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா பதிவிற்கு. சிந்துசையின் அண்மைய காணொளி ஒன்று பார்த்தேன். பெற்றோருக்கு பெருமை சேர்த்த பிள்ளை.

ஒருகணம் ஜெயமண்ணையின் முகமும் அவரின் பொறுமையும் கண்முன்னே வந்து போகிறது.

புலனாய்வுப்பிரிவால் நகங்கள் புடுங்கப்பட்ட பின்னரும் நாட்டுக்காக எந்த தயக்கமும் இல்லாமல் போராடுவது மண்ணின் மீதான பற்றை எடுத்தியம்புகிறது.🥲

வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி ஜெயத்துக்கும், நளா அக்கா, கபிலனுக்கும் வீர வணக்கம்.

உலக அமைதிக்காய் சிலுவை சுமந்தவர் பிறந்த நாளில்…

எமது உரிமைக்காய் சிலுவை சுமந்தவகளை நினைவூட்டிய பகிர்வு.

அழவைத்தாலும்…பகிர்வுக்கு நன்றி @nunavilan

@முதல்வன் உங்கள் பதிவு பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவலை தருகிறது நன்றி🙏.

  • கருத்துக்கள உறவுகள்

மீதுயர் மீளக் களங்களில் நடந்த காவியத் தாயே, உயிர் நிகரேகி தமிழினம் மீளத் தடைகளை உடைத்துத் தளகர்த்தராகி பல சாதனைகளின் நாயகரானீர். விடியலின் சுவாசம் தேடிய கபிலன் வரலாறாய் வாழும் பிள்ளையாய் மூவருக்கும் வீரவணக்கம்! 

நெஞ்சைப்பிழியும் நெடுதுயர் நேரத்தை கண்முன்னே காட்டிவிடும் பதிவு. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.