Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சடங்குகளிற்குச் சமாதி செய்வோம்.

Featured Replies

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் வணக்க நிகழ்வு ஆகிய மூன்றும் புலம் பெயர் தேசங்களில் இவ்வாண்டும் திட்டமிடப்படுகின்றன. எண்பத்து ஒன்பதாம் ஆண்டில் இருந்து எமது வளமையாகிய இம்மூன்று நிகழ்வுகழும் பற்றி இவ்வாண்டில் சற்றுப் புதிதாய்ப் பேசவேண்டி இருக்கின்றது.

மேற்படி நிகழ்வுகள் இவ்வாண்டு ஒழுங்கு செய்யப்படுவது பற்றி ஏதேனும் சொல்ல வேண்டும் என்று பலரிற்குத் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது. எனினும், நான் அவதானித்த வரை, ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றும் பலர் இறுதியில் என்னத்தைச் சொல்ல வந்தோம் என்பதில் கவனமிழந்து வெறும் தனிநபர் தாக்குதல்களை சந்தேகத்தின், வெப்பியாரத்தின், கோபத்தின், இயலாமையின் வெளிப்பாடாய் நிகழ்த்தி ஓய்வதையே காணமுடிகின்றது. கருத்துக் கூறத் தோன்றும் பலரிற்கு இறுதியில் தாம் கூறவருவதைக் கூறமுடியாது போவதற்கான காரணங்களாகத் துரோகிப்பட்டத்தின் மீதான பயம், கோர்வையாகக் கருத்துக்கூறத் தெரியாமை போன்ற பல்வேறு காரணிகளைக் கூறலாம். மேலும், தெய்வக்குற்றம் ஆகிவிடும் எனப் பயந்து கடவுள் பற்றிய கேள்விகளை அடிமனதில் அமுக்குவதைப் போல, பேசப்படக் கூடதனாவாகச் சில விடயங்கள் பலரது மனங்களில் ஆகிப்போயுள்ளதும் இதற்கான ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் நாம் பேசியே ஆகவேண்டிய கட்டத்தில் நிற்கின்றோம். எனவே சற்று இம்முனையில் பேசுவோம்.

முதற்கண், இவ்வாண்டும் மேற்படி மூன்று நிகழ்வுகழையும் நடாத்தியே தீர வேண்டும் என்ற எண்ணம் திட்டமிடுபவர்களிற்கு உருவானதற்கான காரணங்களாக இருக்கக் கூடியன எவை என்பது பற்றி நாம் சிந்திப்பது அவசியம். கொச்சைப் படுத்தக்கூடிய காரணங்களை அடுக்குவது இலகு என்பதனால் வெறும் தனிநபர் தாக்குதல் அடிப்படையில் மட்டும் நாம் சிந்தித்தால், இந்தச் சிந்தனையால் எமக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. மேலும், ஒட்டுண்ணித் தனம் போன்ற மனித குணங்கள்; என்பது போராட்ட முனையில் மட்டுமன்றி சமூகத்தின் அனைத்து முனைகளிலும் இருக்கவே செய்கின்றன என்பதனாலும், இவை மனிதரிற்கு மனிதர் தோற்றப்பாட்டிலும் வீச்சிலும் மாறுபடுகின்றன என்பதாலும் இப்பிரச்சினை சந்தர்ப்பங்களிற்கு ஏற்ப அணுகப்பட வேண்டியது. இதற்கு பொதுப்படுத்தப்பட்ட சிந்தனை பலனளிக்காது. அந்தவகையில், இந்தப்பதிவு, தனிநபர் தாக்குதல்களை விடுத்து, மேற்படி நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் இதயசுத்தியாகவே இத்திட்டமிடல்களை மேற்கொள்கின்றார்கள் என்ற அடிப்படையில் இவ்வேற்பாடுகள் பற்றிச் சில அவதானிப்புக்களைப் பகிர விழைகிறது.

எமக்காக மரணித்த மாவீரர்களை நாம் மறந்துவிடமுடியாது என்ற கடமை உணர்வும், எமது போராட்டம் அவசியப்பட்டதற்கான அடிப்படைக்காரணிகள் அப்டியே இருக்கையில் நாம் தோற்றுப் போனோம் என்று ஓய்ந்து விடமுடியாது என்ற சிந்தனையும், சிங்களத்தின் மீதான அவநம்பிக்கையும் அதன்காரணமான தமிழ் ஈழம் என்ற இலக்கு மீதான ஈர்ப்பும் என பல அடிப்படைக்காரணிகள் போராட்டம் இன்னமும் தொடர்கிறது என்று நிறுவுவதை மேற்படி ஏற்பாட்டாளர்களிற்கு அவசியமாக்குகின்றன. போராட்டம் தொடர்கிறது என்பதை விட, போராட்டம் நாம் அறிந்த அதே வடிவத்தில் தொடர்கிறது என்றே இவர்கள் நம்பவும் நம்பவைக்கவும் முனைவதும் வெளிப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தானதும் ஆரொக்கியமற்றதுமான ஒரு செயல்.

இல்லாத நத்தார் தாத்தாவை உள்ளார் என்று குழந்தைகளை நம்பவைக்கும் பெற்றோர், நத்தார் இரவில் நத்தார்த் தாத்தா புகைக்கூட்டிற்குள்ளால் வந்து கொடுத்தார் என்று கூறித் தாம் வாங்கிய பரிசுகளை நத்தார் தினத்தன்று குழந்தைகளிற்குக் கொடுக்கும் வரை, குழந்தையின் நத்தார் தாத்தா மீதான நம்பிக்கை பாதகமற்றது. ஆனால் ஈழத்தில் கடந்த மே மாதத்தில் நடந்தேறிய நிகழ்வுகளை உள்வாங்காது, அனைத்தும் நடந்தபடியே நடந்து கொண்டிருக்கின்றன என நம்புவதும் நம்பவைப்பதும் முட்டாள்த்தனமானது.

புலத்தில் இருக்கின்ற ஒரு தமிழன் இன்று தான் இலங்கை செல்வது ஆபத்தானது என்ற முடிவிற்கு வருவதற்குக் காட்டக் கூடிய அனைத்து ஆபத்துக்களும், இன்றைய இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு சராசரித் தமிழனிற்கும் இருக்கத்தான் செய்கின்றன. பம்பலப்பிட்டியில் காவல்துறையினரால் அடித்து அமுக்கி அழிக்கப்பட்ட புத்திசுவாதீனமற்ற தமிழன் புத்திசுவாதீனமற்றவன் என்பதனால் மட்டும் அவ்வாறு கொல்லப்படவில்லை, அவன் தமிழனாயும் இருந்தமையயால் தான் அவனின் நிலை அவனிற்கு ஏற்பட்டது. மூன்றாண்டுகளின் முன்னர் சிங்களச் சிப்பாய்களின் உயிரிழப்பு அதிகரித்த போது விளக்குமாறு கொணடு மகிந்தனைத் துரத்திய சிங்களப் பொதுசனம், புத்திசுவாதீனமற்ற தமிழன் நீருள் அமிழ்த்தப்பட்ட போது காணொளி எடுத்து வினியோகிக்கவும் சுற்றி நின்று பார்க்கவுமே முடிவு செய்தது. கிராமத்துச் சனத்திற்கும் நகரவாசிகளிற்கும் வித்தியாசம் உண்டு என்ற போதும், காணொளி எடுத்து விநியோகிப்பதில் உள்ள ஆபத்து என்பது அருகிருக்கும் காவல் துறைக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பேற்படுத்தி உடனே அவர்கள் இக்கொலையைத் தடுக்காது போனால் காணொளி வெளியே செல்லும் என்று பேரம் பேசுவதில் உள்ள ஆபத்திற்குக் குறைந்ததல்ல. எனினும் அவ்வாறு அக்கொலை தடுக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலால், விளக்குமாறால் மகிந்தனையே கலைக்குத் சுதந்திரம் உள்ள சிங்களவரோடு ஒப்பிடுகையி;ல், ஒரு தமிழனின் கொலை பற்றித் தமிழர்கள் தமது உள்ளக் குமுறல்களைப் பதிவு செய்யக் கூடிய உரிமை கூட இன்றும் அங்கு தமிழரிற்கு இல்லை.

ஒடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுப் பழகிப்போனதால், பல விடயங்களைச் சகித்துக் கொண்டு செல்வது எமது நிலையாகிப் போயுள்ளது. ஆனால், முள்ளுக்கம்பி வேலிக்குள் நடமாட்டம் மறுத்து அடைத்து வைத்துள்ள தமிழரில் ஆண், பெண், சிறுவர், சிறுமி என்ற பாகுபாடின்றித் தேவைப்படும் நேரத்தில் கூட்டிற்குள் நிற்கும் கோழியைப் பிடித்துச் சமைப்பதைப் போல சிங்கள இராணுவம் பிடித்துப் பாவிப்பது எமது உளவியலில் உறுத்துகிறது. தரத்திற்கான அமெரிக்க முத்திரை பெற்ற ஆனையிறவுப் படைத்தளத்தைத் துடைத்துக் கட்டிய எம்மினத்தால் மூன்று இலட்சம் பொதுசனத்தை முள்ளுக் கம்பி வேலிக்குள்ளிருந்து விடுவிக்க முடியவில்லை என்ற புரிதல் துருத்துகின்றது. ஐம்பதிற்கைம்பது தேய்ந்து பஞ்சாயத்து முறையிலமைந்த தீர்வுத்திட்டம் ஆன அனுபவம் நாம் மறவோம் என்று ஓராண்டின் முன்னர் கூட மாகாண சபை அடிப்படையிலான தீர்வை நிராகரித்த நாங்கள் இன்று மாவட்டம் ஆவது கிடைக்குமா என்று ஏங்குகின்றோம். அரசியல் வழிமுறைகளில் சிங்களம் அணுகப்படமுடியாதது என்பதை முன்னர் ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட இப்போது ஆராய்கிறார்கள்.

குறுந்தேசியவாதம் போன்ற பிம்பங்களை மறந்து மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்ற அறிவுரையும், பொதுமை என்ற பிதற்றலை விடுத்து அவரவர் தத்தமது ஆற்றல்களிற்கேற்ப மானுட போட்டியில் தனித்துவங்களாக வாழ்ந்து விட்டுப்போகட்டும் என்ற அறிவுரையும், இவ்விரு தீவிர நிலைகளிற்குமிடையேயான இன்னும் ஏதேதோ கருத்தியல்களும் முன்வைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பிரச்சினை என்னவெனில், தமிழன் தமிழ் அடையாளம் துறந்து மனிதனாய் வாழத் தலைப்பட்டாலும் அவனைச் சிங்களம் தமிழனாய் அடையாளம் கண்டு கொல்லவதில் கெட்டித்தனமாய் உள்ளது. இன விடயத்தில் பொதுமை வேண்டாம் தனித்துவமாய் அவரவர் வாழ்வோம் என்பவர்கள் பொருளாதாரக் காரண்ங்கள் என்று வந்ததும் பொதுமையினை நாசூக்காக முன்வைக்கின்றார்கள். மொத்தத்தில் தமிழனைக் கேணயனாக இருக்கச் சொல்கிறார்கள்.

கொடும்பசியில் இருக்கும் ஒருவனிடம் பல்வேறு பதார்த்தங்கள் நிரம்பிய தட்டை நீட்டின் அவன் காய்ந்த மாடு கம்பில் விழுவது போல் உண்ணத்தொடங்கு முன் எங்கு தொடங்குவது என்று ஒரு சொற்ப கணம் யோசிப்பதை அவதானிக்க முடியும். அதுபோல், இன்று பாதுகாப்பற்று ஏதிலியாய் முப்பது ஆண்டுகளின் பின் அம்மணமாய் நிற்கும் தமிழனை எவ்வாறு எல்லாம் உலைப்பது என்று சிங்கள இனவாதக் கொடும்பசி சொற்ப கணம் யோசித்துக் கொண்டு நிற்கின்றது. ஆனால் நிட்சயம் அது உண்ண ஆரம்பிக்கும் என்பதையே அதன் கடந்த ஆறுமாத நடவடிக்கைகள் காட்டி நிற்கின்றன. இந்நிலையில், தமிழன் போராடித் தான் ஆகவேண்டும்.

இது புற நிலை ஆபத்து எனின், உள்ளக ஆபத்துக்கள் பலவும் கூட உறங்கு நிலையில் இருந்து முழித்துக்கொண்டு நடமாடத் தொடங்கியுள்ளன. மொத்தத்தில் தமிழ் மக்கள் இலங்கையில் போராட்ட குணம் மறந்து வாழ்வதற்கான சமூகவியல் சமநிலை அங்கு மருந்திற்கும் இல்லை. கனடா போன்ற ஒரு சமூகவியல் சமநிலை இலங்கையில் தானாக உருவாகிவிடப் போவதில்லை. அது உருவாக்கப்படவேண்டியது.

எனினும் துரதிஸ்ரவசமாக, இலங்கையில் தேவைப்படுகின்ற சமூக மாற்றத்தினை அடைவதற்கான வழி என்ன என்பதை அறியாதவர்களாகவே நாங்கள் இன்றைக்கும் உள்ளோம். எங்களிடம் இருப்பது தோற்றுப்போன எமது முயற்சிகள் பற்றிய அனுபவங்கள் மட்டுமே. இன்று எம்முன் இருக்கும் சவால் தோற்றுப் போன எமது அனுபவங்களில் இருந்து வெற்றிக்கான சூட்சுமத்தை அடையாளங்காண்பது மற்றும் பிரயோகிப்பது என்பதுவே. தோற்றுப் போன ஒரு வழிமுறை என்பதால் அவ்வழிமுறையின் அனைத்துத் தார்ப்பரியங்களும் நிராகரிக்கப்படவேண்டியன என்று யாரும் கருதிவிடமுடியாது. உலகின் தோற்றுப் போன அனைத்து முயற்சிகளும் ஏதோ ஒரு சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியே சென்றிருக்கின்றன. ஆனால் சிங்களத்தைப் பொறுத்தவரை, அது தோற்றுப் போன எமது முயற்சிகளில் இருந்து எதையும் அறிந்து கொண்டதாய்த் தெரியவி;ல்லை. அடிப்படைகள் மாறக்கூடிய சாத்தியம் அங்கு தெரியவில்லை. எனவே தற்போது தமிழரின் முக்கிய தேவை, கடிவாளங்களை அவிழ்த்தெறிந்து விட்டுத் திறந்த பார்வையோடு வெற்றிக்கான சூட்சுமத்தைத் தேவேண்டியதே. ஆனால் நம் சமூகத்தில் நடந்து கொண்டிருப்பதோ நாடுகடந்த அரசு போன்ற முயறச்சிகளும், மாவீரர் நிகழ்வினை அதே கார்த்திகைப் பூ கொண்டு அதே பாணியில் நினைவு கூர வேண்டும் என்ற சிந்தனையும், இவை போன்ற இன்னும் பலவுமே.

போராட்டம் நடந்து கொண்டிருக்கையில். போராளிகள் தமது உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டிருக்கையில், புதிய போராளிகள் முடிவுசெய்யப்பட்ட முறையில் போராடத் தம்மை இணைத்துக் கொண்டிருக்கையில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வு முறைகளிற்கும் இன்றை நிலையில் தேவைப்படும் நடைமுறைகளிற்கும் இடையே நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

ஒரு போராட்ட முறைமை முடிவு செய்யப்பட்டு, மக்களால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னகர்த்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஒவ்வொருவர் ஒவ்வொரு திசையில் இழுக்காது அனைவரும் ஒத்து ஒரு திசையில் போராட்டத்தை நகர்த்த வேண்டிய தேவை இருந்தது. சண்டைக்களத்தில் எந்தச் சிப்பாயும் மேலிடத்துக் கட்டழைகள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்களில் புத்திசீவிததனமாய் ஈடுபடுவதில்லை. சண்டைக் களத்தில் ஒவ்வொரு சிப்பாயும் தனது உயிரின் தக்கவைப்பிற்குச் சக சிப்பாயிலும் தங்கியிருக்க வேண்டியது அவசியம். அனைவரும தத்தமது பணியினை கட்டழைக்கேற்பச் செய்வது தத்தமது உயிரைக் காத்துக் கொள்வதற்கான சாத்தியத்தைக் கூட்டுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்கும் அவசியம். தமிழர் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொண்ட எங்களிற்கும்--நாங்கள் எங்கு வாழ்ந்தாலும்--சண்டைக்களத்தின் சிப்பாய்களாக வாழவேண்டிய தேவை இவ்வாண்டின் மே மாதம் வரை இருந்தது. கார்த்திகைப் பூ போன்ற குறியீடுகள் எமது சிந்தனைக்குக் கடிவாளமி;ட்டு வரித்த இலக்கு நோக்கி நாம் ஏற்றுக் கொண்ட வழிமுறையில் செல்வதற்கு எமக்கு உதவின. ஆனால் இன்று நிலைமை வேறு. எம்மிடம் இன்று அடையாளங்காணப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையோ தலைமையோ இல்லை. இன்று எம்மிடம் இருப்பது இலங்கையில் தமிழனின் நிலை பற்றிய எமது புரிதலும் தமிழரின் சுதந்திரத்திற்கான அவசியம் பற்றிய தெளிவும் இவ்வவசியங்களை அடைவதற்கு புது வழிமுறை அல்லது வழிமுறைகள் அடையாளங்காணப்படவேண்டும் என்ற தேடலுமே.

கடிவாளம் கட்டிக்கொண்டு திறந்து சிந்திப்பது என்பது முரண்நகை. அதற்காக மாவீரர்கள் நினைவு கூரப்படக்கூடாது என்பதல்ல. நிட்சயம் அவர்கள் நினைவுகூரப்படவேண்டியவர்கள், ஆனால் அதற்காக அவர்களை நினைவு கூருவதை ஒரு வெறுஞ் சடங்காக, கடமை தீர்ப்பாக நாம் செய்து விடமுடியாது. ஒவ்வொரு மாவீரரும் இறக்கும் போது தமது இலக்கு தமது சகாக்களாலும் மக்களாலும் தொடரப்படும் என்ற நம்பிக்கையில் தான் இறந்தார்கள். அவர்களை உண்மையில் நினைவு கூருவது என்பது அவர்களின் வாழ்க்கையைப் படிப்பதிலும், அவர்களின் இலக்கை அடைவதற்கான வினயமான புது வழிகளை அடையாளங்காண்பதிலும் தான் அர்த்தம் பெறும். மாவீரர்கள் இலக்கில் தான் குறியாய் இருந்தார்களே அன்றி இலக்கிற்கான வழிமுறையில் அல்ல. அவர்கள் வீழ்ந்த காலகட்டத்தல் எந்த வழிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததோ அந்த வழிமுறையில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருந்தார்கள்.

களத்தில் சண்டை நடக்கையில் சிப்பாய் மனநிலையில் மக்களும் கேள்வி கேட்காது கட்டளைப் படி நகர்ந்தமை சரியானதே. புலம்பெயர் தேசங்களில் மண்டபங்கள் தரமாட்டார்கள் என்பதால் இறுதி நாள் வரை ரகசியமாய் ஒழுங்கு செய்து நள்ளிரவில் இடமறிவித்து மாவீரர் நாள் நாம் நடாத்தியமை சரியானதே. ஆனால் இன்று நாம் புது வழிமுறைகளை அடையாளங்காண வேண்டியவாகளாக, அப்புது வழிகள் நோக்கித் தேடவேண்டியவர்களாக, தவறுகளை ஆராய்ந்து திருத்த வேண்டியவர்களாக இருக்கின்ற நேரத்தில், கடந்த ஆண்டுவரை நடந்தது போல் சடங்குகளை நடாத்த விழைவது ஆரொக்கியமற்றது.

இவ்வாண்டின் மே மாதத்தின் பின்னரும் கூட உலகின் பார்வையில்;, எமது போராடத்தின் அடிப்படைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படாது பாதிக்கப்பட்ட மக்களான எங்களை ஏதோ நாங்கள்; தான் மற்றவர்களிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் போன்று பார்க்கும் ஒரு நிலமை நீடிக்கின்றது என்றால் எமது கண்மூடித்தனமான நடவடிக்ககைளும் அந்நிலைக்கு ஒரு காரணம்.

உதாரணத்திற்கு, ஒரு இறந்த மனிதனின் வாழ்வு பற்றிப் படிப்பது ஆராய்வது என்பது உலகின் அனைத்துச் சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. கமியூனிசத்தின் குறியீடுகளான லெனின், ஸ்ராலின், மாவோ, பிடல், சே முதலியவரின் வாழ்க்கை வரலாறு முதலாளித்துவ பூமிகளில் புத்ததகங்களாகக் கிடைக்கின்ற. இவை பற்றி ஆராய, விவாதிக்க இங்கு முடிகிறது. நாம் கூட எமது வீரர்களின் தியாகிகளின் வாழ்வுகளை உலகு ஏற்கின்ற விதத்தில் ஆராய்ந்து விவாதித்து உலகோடு சேர்ந்து இவ்வாண்டு முதல் கார்த்திகையை மாத்தியிருக்கலாம். ஒழித்து ஒழித்து மண்டபத்தை நள்ளிரவு வரை ரகசியமாய் வைத்து காhத்திகைப் பூக்கொட்டிச் சடங்கு நடத்துவதற்குப் பதிலாக, எமது வீரர்களின் வரலாறை ஆராய்ந்து, இலங்கையின் இன்றைய நிலையினை ஆவணப்படுத்தி, கருத்தரங்குகள் போன்று பல்வேறு தரப்பட்ட நிகழ்வுகளை நாம் ஒழுங்கு செய்யின் இந்நாடுகளின் அறிவு சீவிகள், காவல் துறை உளவுத் துறை என அனைவருமே எம்முடன் சேர்ந்து புது வழிமுறைகள் பற்றி ஆராய அது வழிவகுத்திருக்கும். எமது வீரர்களை ஒவ்வொரு கார்த்திகையும் தமிழரல்லாதோரும் எண்ணிப் பார்க்க அது வழி சமைத்திருக்கும். எமக்குத் தேவையானதும் இன்று அது தான். ஆனால் நாங்கள் இன்னமும் தமிழ்பட கதாநாயகன் பாணியில் காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் கண்ணில் மண்தூவி மண்டபம் எடுத்தோம் என்று மார் தட்டிச் சடங்கு நடாத்தத தான் துடிக்கிறோம்.

இலங்கையில் மாற்றம் பற்றிச் சிந்திக்கு முன் புலம்பெயர் தமிழர் எங்கள் நடைமுறைகள் பற்றி முதலில் நாங்கள் ஒரு முடிவிற்கு வருவோhம். தலைமைப் போட்டிகள், ஒட்டுண்ணித் தனங்கள் போன்ற இழிவுகளைக் கடந்து இதயசுத்தியோடு ஈழம் தொடர்பில் சிந்திக்க விழைவோhர் முதலில் ஒன்று படுவோம். சடங்குககள், கடிவாளங்களிற்குச் சமாதி அமைப்போம்!

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்துக்களை கோர்வையாகத் தந்திருக்கிறீர்கள். நன்றிகள். காந்தி பிறந்த இந்தியா அவரை ஜனன தினத்தில் மட்டுமே நினைவுகூரப் போய் இன்று தென்னாசிய அரக்கனாக நிற்குது. மாவோவின் உழைக்கும் வர்க்கத்தினர் மீதான பரிவு இன்று சீனாவிடம் இல்லை. இவையெல்லாம் இவர்களை சம்பிரதாயமாக அல்லது ஒரு "நாமிருக்க இவர்கள் இறந்தார்களே!" என்ற குற்றவுணர்வுடனும் நினைவு கூர்ந்ததால் விளைந்த தற்குறித்தனங்கள். ***

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் ,

பேசாப்பொருளைப் பேசத் துணிந்துள்ளீர்கள். முக்கியமாக கார்த்திகைப்பூவை இறக்குமதி செய்து நாங்களும் கொண்டாடினோம் என்று இறுமாப்புக்காட்ட (தமிழருக்கு)முனைவோர் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் கட்டுரைக்குள் இருக்கிறது.

மாவீரர்களை கெளரவிப்பதனை இதுவரை காலமும் ஒளிச்சு வைச்சுச் செய்தது போல இவ்வாண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் செய்து வெற்றி கொள்வதில் கவனமாகவுள்ள அனைவரும் இவ்விடயத்தில் இன்றைய தேவைகளைப் புரிந்து மாவீரர் நாளை அனுட்டிக்க வேண்டும்.

இன்னும் கரும்புலிவீரரின் படத்தை காவல்துறை வந்தால் பூக்களால் ஒழித்துவிட்டு விழாக்கள் நடந்தது போல நடந்தால் மாவீரர் வரலாறுகள் மட்டுமல்ல அவர்களது தியாகங்களும் கனவுகளும் காலாவதியாகிவிடும்.

ஆளாளுக்கு கொள்கைப் பிரகடனங்கள் விடுவதும் தமிழர்களுக்கு மட்டுமே தமிழீழத் தேவைபற்றிய விளக்கம் அளித்ததையும் இத்தோடு நிறுத்திக்கொண்டு அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அவசியத்தையும் அவசரத்தையும் அனைவரும் புரிந்து கொண்டு செயற்படுங்கள்.

***

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் நம் சமூகத்தில் நடந்து கொண்டிருப்பதோ நாடுகடந்த அரசு போன்ற பித்தலாட்டங்களும்
இது எப்படி என்று எனக்கு தெரியவில்லை.
மாவீரர் நிகழ்வினை அதே கார்த்திகைப் பூ கொண்டு அதே பாணியில் நினைவு கூர வேண்டும் என்ற சிந்தனையும்இ இவை போன்ற இன்னும் பலவுமே

இது எம்தலைவர் மற்றும் வீரர்களாய் இருந்து மாவீரர்களான எம் வீரர்கள் உருவாக்கிய தினம்.இந்த நாளை நாம் மாற்றும் தகுதி அற்றவர்கள்.கார்த்திகை பூ வைத்து தாயக கனவோடு இறந்த அந்த இளம் உறவுகளுக்காக நாம் அவர்களை நினைவு கூர வேண்டும்.சிலர் இதை இன்று வேறாக பாவித்தாலும் மாவீரர் நனைவு நாள் என்று அந்த கூட்டத்தில் நிக்கின்ற இளம் சமுதாயம் இவற்றை பின் பற்றும். பழைமைகளை மாற்றுவதை விடுத்து புதியவைகளை இணைத்துக் கொள்ளலாம் அல்லது 365 நாட்களில் இந்த இரண்டு நாட்கள் தவிர்ந்த வேறு நாட்களிலும் கூட நல்லது செய்யலாம்.

இந்த கட்டுரையை நான் குறை கூறவில்லை.

Edited by jhansirany

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் நினைவுச் சின்னம்

கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர்.

இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள்இ மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர்.

எமது மாவீரரின் நினைவுகளைஇ மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம்.

இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக விற்பனை நிலையங்களிலும்இ பொது இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''

நன்றி பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் இந்தக் கட்டுரை சரியான கேள்விகளை முன்வைத்தாலும், தமிழ்த் தேசியப் போராட்டத்தை அதே பாணியில் முன்னெடுக்க முனைபவர்களால் கண்டுகொள்ளப்பட மாட்டாது.

போராளிகளின் கனவுகளை, கனவுகளாகவே விட்டுவைக்கத்தான் புலம்பெயர் தமிழரின் கைகளில் போரட்டம் வந்துள்ளது. எனவே ஆண்டுக்கொருமுறை நினைத்துவிட்டுப் போவதுதான் இனி நடக்கும்.

நல்ல சிந்தனை நன்றி

Edited by இளைஞன்
தலைப்புக்கு பொருத்தமில்லாத தொடுப்பு நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டைக்காரன் /உன்னைப்போல் ஒருவன்

http://www.youtube.com/watch?v=qvNfPLdjRnA&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுரை கூறுவதில் பழக்கப்பட்டுப்போன அனைவருக்கும் வணக்கம்,

கடந்த மே 17 கடந்து நாளையோடு 6 மாதம் ஆகி விட்டது. இது வரை காலமும் முன்னேடுத்த, முன்னெடுக்கின்ற செயற்திட்டம் என்ன? பங்களிப்புக்கள் என்ன? எது கேட்டாலும் முன்பு தலைவர் பார்த்துக் கொள்வார் என்றார்கள். இப்போது புலம் பெயர் அமைப்புக்கள் பார்த்துக் கொள்ார்கள் என்கின்றார்கள்! இதைத் தவிர ஏதாவது சேர்ந்து இயங்கி பங்களிப்பு வழங்குவோம் என்று யாரும் நினைத்தில்லை. இன்றைக்கு ஒரு தீர்வுமே இல்லாத, எந்த வித எதிர்காலம் பற்றிய சிந்தனையுமில்லததால் தான் "நாடு கடந்த அரசு" தொடர்பான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் இதை விட்டால் வேறு எந்த முன்னேற்றகரமான செயற்திட்டங்களும் எம்மிடம் இல்லை. அதைப் பித்தலாட்டம் என்பவர்கள், சிறந்த எதிர்காலம் பற்றிய ஆலோசனைகளை வழங்கலாமே. அதைச் செய்யமாட்டார்கள். ஆனால் நீங்கள் சிந்தித்து ஏதாவது செய்யுங்கள் என்று பொறுப்பை மற்றவர்களின் தலையில் செருகி தப்பி விடுவார்கள்.

இன்றைய சூழ்நிலையில் புலம்பெயர் அமைப்புக்களில் ஆட்கள் போதுமானதாக இல்லை. ஏதாவது செய்யலாம் என்றால் மக்கள் பின்னடைவுகளால் துவண்டு போயோ, அல்லது தங்களால் தான் தோற்றுப்போனோமோ என்ற மனநிலையிலும் தான் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையில் இருந்து மக்களை விடுதலையாக்கி மீள எழுச்சி கொள்ள வைக்க ஏதாவது நிகழ்வுகள் அவசியப்படுகின்றன.

கடந்த 6 மாதங்களில் எந்த மாற்றத்தையும், ஏற்படுத்தாத இந்த அமைதி தொடந்து தொடர வேண்டுமா? அல்லது மாற்றங்கள் தேவையா என்பதை இந்தப் புத்திசீவிகள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கடந்த 6 மாத காலடங்களில் எந்தவித சூட்சமங்களையோ, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய செயற்திட்டங்களையோ வைக்க இவர்கள் தயாரில்லாதபடியால் தான், முட்டாள்கள் தொடர்ச்சியான தங்களின் பாணியில் மாவீரர் தினத்தை நினைவுகூறத் தலைப்பட்டுள்ளார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைக்கும் தொடர்ச்சியாக அமெரிக்க தூதரகம் முன்பு கொஞ்சப் பேர் நின்று தமிழ்மக்களுக்குத் தீர்வு தரச் சொல்லி கத்திக் கொண்டு தான் நிற்கின்றார்கள். மறுபக்கம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், ஏதாவது தூதரகம் முன்னால் நின்று 50 பேர் கத்திப் போட்டு வருகின்றார்கள். சொல்லப் போனால் எதர்காலம் பற்றிச் சிந்திப்போம், சிந்திப்போம் என்று அறிவுரை கூறிக் கூறியே அலுத்துப் போன எங்களிடம் எந்தவித எதிர்காலச் சிந்தனையும் துளியளவும் இல்லை.

ஒரே நாளில் 30 ஆயிரம் பேரை எதிரி கொன்றொழித்ததை விட எனி என்ன அழிவை எமக்குத் தரப் போகின்றான்?? புலம்பெயர் அமைப்புக்களில் எதிரி ஏதாவது செய்வான் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்க வேண்டுமே தவிர, பயந்து பயந்து முடங்கி வாழ்வதா??

மாவீர்ர தினம் வேண்டாம் என்றால் என்ன செய்யலாம், என்ன செய்யப் போகின்றோம் என்பது தொடர்பான ஆலோசனைகளை வைக்கலாமே..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் இப்படி எழுதியிருக்கிறார்.

உதாரணத்திற்கு, ஒரு இறந்த மனிதனின் வாழ்வு பற்றிப் படிப்பது ஆராய்வது என்பது உலகின் அனைத்துச் சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. கமியூனிசத்தின் குறியீடுகளான லெனின், ஸ்ராலின், மாவோ, பிடல், சே முதலியவரின் வாழ்க்கை வரலாறு முதலாளித்துவ பூமிகளில் புத்ததகங்களாகக் கிடைக்கின்ற. இவை பற்றி ஆராய, விவாதிக்க இங்கு முடிகிறது. நாம் கூட எமது வீரர்களின் தியாகிகளின் வாழ்வுகளை உலகு ஏற்கின்ற விதத்தில் ஆராய்ந்து விவாதித்து உலகோடு சேர்ந்து இவ்வாண்டு முதல் கார்த்திகையை மாத்தியிருக்கலாம். ஒழித்து ஒழித்து மண்டபத்தை நள்ளிரவு வரை ரகசியமாய் வைத்து காhத்திகைப் பூக்கொட்டிச் சடங்கு நடத்துவதற்குப் பதிலாக, எமது வீரர்களின் வரலாறை ஆராய்ந்து, இலங்கையின் இன்றைய நிலையினை ஆவணப்படுத்தி, கருத்தரங்குகள் போன்று பல்வேறு தரப்பட்ட நிகழ்வுகளை நாம் ஒழுங்கு செய்யின் இந்நாடுகளின் அறிவு சீவிகள், காவல் துறை உளவுத் துறை என அனைவருமே எம்முடன் சேர்ந்து புது வழிமுறைகள் பற்றி ஆராய அது வழிவகுத்திருக்கும். எமது வீரர்களை ஒவ்வொரு கார்த்திகையும் தமிழரல்லாதோரும் எண்ணிப் பார்க்க அது வழி சமைத்திருக்கும். எமக்குத் தேவையானதும் இன்று அது தான்.
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபன், செய்திருக்கலாம், செய்திருக்கலாம் என்று சொல்வதை விட செய்யுங்களேன்.... இப்போது என்ன யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதா பிரச்சனை?? இந்த ஏவல் செய்து தாங்கள் சம்பந்தப்படாத வழுவல்போக்கைத் தான் மேலேயும் சொல்லியிருந்தேன்...

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் போட்ட உயிர் பிச்சையில வாழ்ந்து கொண்டு மாவீரர் தியாகத்தையே வீண் எண்டு பேசும் பேர்வழிகள் யாழில உண்டு. அவர்களின் கருத்துகளில் பொறுப்பாளர் இளைஞனின் சிவப்பு மையும் வெட்டும் என்றும் விழுந்ததில்லை.அவர்களை சாதுவாகச் சுட்டிக் காட்டினால் உடனே விழுகிறது வெட்டு. ஒன்று செய்யுங்கள் இளைஞன், நீங்கள் "பொறுப்பாளர்" கள் எல்லாரும் சேர்ந்து உங்களுக்குள்ளேயே ஆகா ஒகோ எண்டு ஒருவரையொருவர் வாழ்த்தி எழுதிக் கொள்ளுங்கோ..நான் வாறன்.வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் செயலுக்கு உரியவர்கள் பல விடயங்களை செய்தவண்ணமே இருக்கிறார்கள். தங்கள் சக்திக்கு அப்பால் நின்று எவ்வளவோ வேலைகளை தங்கள் முதுகில் சுமக்கின்றவர்களைப்பற்றி இந்தக் கருத்துக்களங்களில் நக்கலும் நளினமும் கதைப்பவர்களுக்குத் தெரியாது. அண்மைக்காலமாக யாழ் இணையத்தளத்தில் அவதானித்த விடயங்களில் இதுவும் ஒன்று. தாயகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வீழ்ச்சியில் அங்குள்ளவர்கள் தடம் புரண்டு போனதாக நான் அறிவது குறைவாக இருக்கிறது. அங்குள்ள மக்களின் எண்ணங்கள் சிதைவுற்றுப் போகாமல் இன்னும் நம்பிக்கை சுமந்தே இருக்கின்றன. ஆனால் புலம் பெயர்ந்த தேசத்தில் எந்த வலிகளுக்கும் முகங் கொடுக்காமல் நீலிக்கண்ணீர் வடிக்கும் நிலைதடுமாறிய சிலர் ஏகமாக தாங்களே அங்குள்ள போராளிகள் போன்று எண்ணங்களைப் பகிர்வதாக தத்தம் எழுதுகோல்களைத் தட்டி விட்டு குழப்பங்களை உருவாக்குவதில் பேரெடுக்க போடாத வேடங்களெல்லாம் போடுகிறார்கள். பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள வராதவர்கள் இணைய வெளிகளில் இருந்து வியாக்கினம் கதைப்பார்கள். விட்டுவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபன், செய்திருக்கலாம், செய்திருக்கலாம் என்று சொல்வதை விட செய்யுங்களேன்.... இப்போது என்ன யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதா பிரச்சனை?? இந்த ஏவல் செய்து தாங்கள் சம்பந்தப்படாத வழுவல்போக்கைத் தான் மேலேயும் சொல்லியிருந்தேன்...

போரின் இறுதி மாதங்களில் / நாட்களில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எதுவுமே வெளிப்படையாகக் கதைக்காமல் தற்போதும் குசுகுசுத்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுகளில் நேரிடையாக எத்தகைய செயற்பாடுகளையும் செய்யமுடியாத நிலை உள்ளது. எவரெவர் யாருடைய தூண்டுதலில் வேலை செய்கின்றார்கள் என்பதும் தெரியாது. எனவே அரசியல் விடயங்களில் மூக்கை நுழைத்து வீண் வம்பை விலைக்கு வாங்குவதை விட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில சில்லறையான உதவிகளைச் செய்வது பரவாயில்லை என்ற நிலமைதான் உள்ளது.

கலங்கின நீர் தெளிய காலம் தேவை!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருப்பொருளை மையப்படுத்தி பின்னப்பட்ட கட்டுரையை தந்த இன்னுமொருவனுக்கு முதலில் நன்றிகள்.

மாவீரர்கள் ஊர் மாவட்டம் மாகாணம் சாதி மதம் இவற்றை எல்லாம் தாண்டி ஒரு உயரிய கொள்கைக்காக வித்தானவர்கள்.

அவர்களுக்கு என்று அவர்களால் வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னமாக கார்த்திகைப் பூ இருக்கிறது. அது தமிழர்களின் வரலாற்றில் ஒரு கொள்கைக்கான உருவமைப்பு. புனிதப் பொருள்.

மாவீரர்கள் தியாகத்தின் உருக்கள். அவர்கள் பேதங்களுக்கு அப்பால் இலட்சியத்திற்காக ஒன்றிணைந்த எளிமையான மனிதர்கள். அதற்காக என்றாலும் அவர்கள் நினைவு கூறப்படுவதோடு சந்ததிகளும் அறியச் செய்யப்பட வேண்டியவர்கள். எனவே மாவீரர் நாளும் நிகழ்வுகளும் ஒரு தவறான வரலாற்றிற்கான ஆரம்பமாகக் கொள்ளப்படுவது முற்று முழுதாகத் தவறாகும்.

அதுமட்டுமன்றி மாவீரர்களை நினைவு கூறும் வேளைகளில் ஆடம்பரமான ஆடைகள் அணிதல்.. சிற்றுண்டி உண்டு மகிழ்தல்.. ஏதோ தீபாவளி பொங்கல் போல் புத்தாடை உடுத்து வருதல் இவை அனைத்தும் முற்றாகக் களையப்பட வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்களுக்குப் போவோரும் மாவீரர் நினைவிடங்களுக்குப் போவோரும் ஒரு பொதுமைப்பாடான உடை அணிந்து செல்ல வேண்டும்.

மாவீரர்களின் இலட்சியங்களைச் சொல்லும் கல்வெட்டுக்களில் அவர்கள் மலர் சாத்தி விளக்கேற்றி வணங்குவதோடு மாவீரர்களின் வரலாற்றுக் குறிப்புகளை அறிந்து கொள்ளக் கூடிய பிரசுரங்களை வாங்கிப் படிக்கச் செய்ய வேண்டும். இவை அனைத்து மொழிகளிலும் அமைய வேண்டும்.

மாவீரர்களின் அடையாளச் சின்னங்கள் சர்வதேச சட்ட வரையறைகளை மீறா வண்ணம் வடிமைக்கப்படுவது எமது மாவீரர்கள் உலகின் பிற மாவீரர்கள் போன்று நாடு இனம் கடந்து ஒரு காலத்தில் நினைவு கூறப்பட வாய்ப்பை உருவாக்கும்.

மாவீரர்களால் தெரிவு செய்யப்பட்ட கார்த்திகைப் பூ அதற்கான நல்ல சான்று.

அண்மையில் ஒரு மேலை நாட்டில் எமது போராளிகளின் உடையமைப்பை ஒத்த உடைகளை அணிந்து வேற்று இனத்தவர்கள் சென்றதைக் கண்டு வியப்புற்றேன். இன்று நாம் சேகுவராவின் லெனின் முகங்களைக் காவித்திருவது போல எமது மாவீரர்களும் ஒரு பொது இலட்சனையின் கீழ் மதிக்கப்படின் நிச்சயம் அவர்களின் தியாகத்திற்காக இந்த உலகம் அவர்களை கெளரவிக்கும் நாள் வெகு தொலைவில் அமையாது.

மாவீரர் நாள் எம்மைப் பொறுத்தவரை இலட்சிய உறுதியை மனதில் வளர்த்துக் கொள்வதற்கான நாள் மட்டுமன்றி மாவீரர்கள் போன்று இலட்சிய உறுதி மிக்க ஒழுக்கம் நிறைந்த பேதமைகள் கடந்த ஒற்றுமையுள்ள எளிமையான மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்பதை நினைவுறுத்திச் செல்ல வேண்டும்.

அதற்கேற்ப நிகழ்வுகளும் விதிகளும் ஒழுக்க முறைகளும் தீர்மானிக்கப்பட வேண்டும்.

காஞ்சிபுரமும்.. பட்டு வேட்டியும்.. கழுத்து நிறைய நகையும்.. குழந்தைகளுக்கு பட்டாடையும் உடுத்தி.. கொத்துரொட்டி சாப்பிடும் நாள் அல்ல மாவீரர் நாள் எனபதை புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களுக்கு தெளிவாக சொல்லி வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் மாவீரர் தின நிகழ்வுகளின் போது அதை ஒரு கேளிக்கை நிகழ்வு போல மக்களில் பலர் கொண்டாடிக் கொண்டதை கண்டு ஏக்கமே மிகுந்தது.

தமது வாழ்க்கையை அர்ப்பணித்து இலட்சியத்தைக் காத்த உன்னத மனிதர்கள் மாவீரர்கள். ஒருவேளை உணவுக்கு குடிநீருக்கு மாற்றாடைக்கு வழி இன்றி போர்களத்தில் போராடி வீழ்ந்தவர்கள் அவர்கள். ஆனால் அவர்களை நினைவு கூறுபவர்களோ... ஏதோ புரியாணிக்கு கொத்துரொட்டிக்கும் கொண்டாடப்படும் நிகழ்வாக இதை கருதிச் செயற்படுவதை எனியும் அனுமதிக்கக் கூடாது. !!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக் கூறிய அனைவரிற்கும் நன்றி.

எனக்குத் தோன்றிய ஒரு கருத்தினை இப்பதிவில் பதிவு செய்துள்ளேன். நான் சொல்வதால் இதற்கு அடுத்த கருத்து இருக்க முடியாது என்றோ அல்லது எனது கருத்தோடு அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்றோ நினைக்கவில்லை. அதனால் தான் கருத்துக் களத்தில் பதிந்துள்ளேன். எனினும், இக்கட்டுரையில் நான் பாவித்த ஒரு வார்த்தைப் பிரயோகம்--அதாவது “நாடுகடந்த அரசு என்ற பித்தலாட்டம்” என்பது--போதிய ஆதாரம் இன்றி மொட்டையாக வைக்கப்பட்டிருப்பதனை இப்போது உணருகின்றேன். இது எனது கருத்தாய் இருப்பினும் பதிவில் இக்கருத்தை ஏன் நான் கொண்டிருக்கின்றேன் என்ற காரணங்களைக் கூறாது, மொட்டையாகப் “பித்தலாட்டம்” என்று கூறியமை தவறானது. இத்தவறிற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதோடு “பித்தலாட்டம்” என்ற சொல்லையும் நீக்கியுள்ளேன்.

ஏறத்தாள இந்தக் தலைப்புத் தொடர்பில் கூறவேண்டும் என எனக்குப் பட்ட அனைவற்றையும் பதிவிலேயே கூறிவிட்டதாலும், ஏற்கனவே கூறப்பட்டவை எல்லாம் அனைவராலும் கிரகிக்கப்பட்டுள்ளதா (வெகு சிலரைத் தவிர) அல்லது தெளிவாக நான் கூறியுள்ளேனா என்பதில் எனக்குச் சந்தேகம் இருப்பதனாலும் மேலதிக கருத்துக்கள் ஏதும் இத்தலைப்புத் தொடர்பில் வைப்பதற்கில்லை. ஆனால் நம்மவர்களால், பொதுவாகப் பல விவாதங்களில் முன்வைக்கப்படும், இத்திரியிலும் முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு கருத்துப் பற்றிக் கருத்துக் கூறியே ஆக வேண்டும்.

அதாவது “கதைக்கிறதெல்லாம் கிடக்கட்டும், நீர் என்னத்தைச் செய்து கிளிச்சனீர் அல்லது புடுங்கினனீர்” என்பதே நான் கருத்துக் கூற விரும்புகின்ற வாதத்தின் சாரம்.

மேற்படி வாதம் பற்றிக் கதைக்க விரும்புவதற்கான காரணம், அடிப்படையில் இவ்வாதம் கருத்தாடலிற்குப் புறம்பான மன நிலையினைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. எப்படி ஆயின், கூறப்படுகின்ற கருத்தை கருத்துக்களால் எதிர்கொள்வதை விடுத்து, கூறுபவரை நோக்கி கோபாவேசம் காட்டுவது. ஒரு கருத்தோடு உடன் பாடு இல்லாத பட்சத்தில், எதற்காக உடன்படவில்லை என்பதைப் காரணங்களைக் கூறி பதிவது வாதம்.

சரி, இனி மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, எமது போராட்டம் தொடர்பில் எந்தவித பங்களிப்பும் எப்போதும் செய்யாது வெறுமனே கதைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபராக என்னை வைத்துக் கொள்வோம். இந்த அடிப்படையில், எந்தப் பங்களிப்பும் போராட்டத்திற்குச் செய்யாத நான் கருத்துக் கூறுவது சரியா என்ற அடிப்படையில் இதை நோக்கின்:

இந்தக் தலைப்பு வெளிப்படையாகக் கனடா போன்ற ஒரு சமூகச் சமநிலை இலங்கையிலும் வரவேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய ஒரு சமூகத்தில், கருத்துடையவர்கள் அனைவரும் தமது கருத்தை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, சுகாதராத்துறை தொடர்பில் கருத்து உடைய ஒருவர், வைத்தியராயோ அல்லது தாதியாயோ பட்டம் பெற்று வந்து சுகாதாரத்துறையைப் பிரிச்சு மேய்ந்து மாற்றிக் காட்டியதன் பின்னர் தான் குளோபன்ட்மெயிலில் சுகாதாரத்துறை தொடர்வில் தனது கருத்தைக் கூறவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அது போல், பிரதமரையோ அரசையோ அல்லது அவற்றின் செயற்பாடு பற்றியோ கருத்துக் கூறு முன், ஒருநாள் முதல்வராய் இருந்துவிட்டுத் தான் கூற வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு சமூகத்தில் அனைவரும் அனைத்துமாய் எப்போதும் இருந்துவிட முடியாது. ஆனால், ஒரு சமூகத்தின் அங்கத்துவராக அச்சமூகம் மீதான அக்கறைக்கும் கருத்துநிலைக்கும் ஒருவர் உரித்துடையவர் ஆகிறார். குறித்த துறைக்கு எந்தப் பங்களிப்பும் செய்யாத ஒருவர் கூட தனக்கு அத்துறை பற்றிய கருத்து இருக்கும் பட்சத்தில் அதைப் பகிரும் நிலையினைச் சமூகம் வரவேற்கின்றது. கருத்துக்கள் ஏற்புடையவையாய் இருக்கும் பட்சத்தில், குறித்த நேரத்தில் குறித்த பாத்திரத்தைச் சமூகத்தில் வகிப்பவர்கள் கூறப்படும் கருத்தை உள்வாங்குவதால் எதுவும் குறைந்து விடாது. ஒரு ஆரொக்கியமான சமூகத்திற்கு இத்தகைய குணாம்சம் அவசியமானது.

மேலும், சில சமயங்களில் தவறான செயற்பாடுகளிற் பங்கெடுப்பததைக் காட்டிலும், செயற்படாதிருப்பது வினைத்திறன் மிக்கதாய் இருக்கும்.

எனவே ஒரு கருத்தோடு உடன்பட வேண்டிய கட்டாயம் யாரிற்கும் இல்லை. வீட்டிலே நிற்காது, தொழிலிற்குப் போகாது, எவ்வித பொழுதுபோக்கும் இன்றிக் கடந்த ஆறுமாதமும் தமிழர் போராட்டத்தின் புது வடிவ நகர்ச்சிகள் பற்றிச் சிந்தித்துக் கொண்டும் செயற்பட்டுக் கொண்டும், அதற்கும் மேலால் வருகின்ற மாவீரர் நாள் ஏற்பாடுகளில் மும்முரமாக இயங்கியும் கொண்டிருக்கும் ஒருவர், இத்திரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்தில் எதனோடும் உடன் படும் பட்சத்தில் அவற்றைத் தமது மாவீரர் நாள் செயற்திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம். உடன் படா விடயங்களை உதாசீனம் செய்து ஒதுக்கி விடலாம். எது எப்படியோ, அனைத்துச் செயற்திட்டங்களோடும் ஒன்றித்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் சில கருத்துக்களை உள்வாங்கி அமுல் படுத்தல் என்பது ஏதுமே செய்யாது புறத்தே நின்று கருத்துக் கூறும் நபரைக் காட்டிலும் இலகுவானது. அதாவது கருத்துக்கள் உள்ள அனைவரிற்கும் தனக்குள்ள கருத்துக்களை அமுல்படுத்தக்கூடிய அதிகார மையத்தோடு தொடர்பு இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அதிகார மையத்தோடு இயங்கிக் கொண்டிருப்பவர்களிற்கு அத்தகைய தொடர்புகள் இலகுவில் கிடைக்கும். எனவே என்னைப் போன்ற ஒரு சாதாரண நபர் கருத்துக்களைப் பொது ஊடகத்தில், அதுவும் அதிகார மைத்திpன் தொடர்பு உடையவர்களும் வாசிக்கும் ஊடகத்தில் பதிகையில், ஒருவேளை அந்தக் கருத்து சட்டைசெய்யப்படலாம் என்ற நப்பாசை தோன்றுவது இயல்பு. நப்பாசை கொடுக்கும் நம்பிக்கையால், ஒருவேளை தனது கருத்தும் கூடத் தனது சமூகத்திற்கான பங்களிப்பாகலாம் என்ற எதிர்பார்ப்பும் தோன்றலாம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயங்களில் தவறான செயற்பாடுகளிற் பங்கெடுப்பததைக் காட்டிலும், செயற்படாதிருப்பது வினைத்திறன் மிக்கதாய் இருக்கும்

உண்மைதான்.

தவறான செயற்பாட்டில ஈடுபடுறதிலும் பார்க்க ஈடுபடாமல் இருக்கிறது நல்லதுதான். ஆனால்.. எது தவறான செயற்பாடு எண்டுறதே பலருக்கு குழப்பமாய் இருக்கேக்க.. வினைத்திறன் பற்றியெல்லாம் எப்பிடி யோசிக்கிறது

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்கள் ஊர் மாவட்டம் மாகாணம் சாதி மதம் இவற்றை எல்லாம் தாண்டி ஒரு உயரிய கொள்கைக்காக வித்தானவர்கள்.

அவர்களுக்கு என்று அவர்களால் வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னமாக கார்த்திகைப் பூ இருக்கிறது. அது தமிழர்களின் வரலாற்றில் ஒரு கொள்கைக்கான உருவமைப்பு. புனிதப் பொருள்.மாவீரர்கள் தியாகத்தின் உருக்கள். அவர்கள் பேதங்களுக்கு அப்பால் இலட்சியத்திற்காக ஒன்றிணைந்த எளிமையான மனிதர்கள். அதற்காக என்றாலும் அவர்கள் நினைவு கூறப்படுவதோடு சந்ததிகளும் அறியச் செய்யப்பட வேண்டியவர்கள். எனவே மாவீரர் நாளும் நிகழ்வுகளும் ஒரு தவறான வரலாற்றிற்கான ஆரம்பமாகக் கொள்ளப்படுவது முற்று முழுதாகத் தவறாகும்.

அதுமட்டுமன்றி மாவீரர்களை நினைவு கூறும் வேளைகளில் ஆடம்பரமான ஆடைகள் அணிதல்.. சிற்றுண்டி உண்டு மகிழ்தல்.. ஏதோ தீபாவளி பொங்கல் போல் புத்தாடை உடுத்து வருதல் இவை அனைத்தும் முற்றாகக் களையப்பட வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்களுக்குப் போவோரும் மாவீரர் நினைவிடங்களுக்குப் போவோரும் ஒரு பொதுமைப்பாடான உடை அணிந்து செல்ல வேண்டும்.

மாவீரர்களின் இலட்சியங்களைச் சொல்லும் கல்வெட்டுக்களில் அவர்கள் மலர் சாத்தி விளக்கேற்றி வணங்குவதோடு மாவீரர்களின் வரலாற்றுக் குறிப்புகளை அறிந்து கொள்ளக் கூடிய பிரசுரங்களை வாங்கிப் படிக்கச் செய்ய வேண்டும். இவை அனைத்து மொழிகளும் அமைய வேண்டும்.

மாவீரர்களின் அடையாளச் சின்னங்கள் சர்வதேச சட்ட வரையறைகளை மீறா வண்ணம் வடிமைக்கப்படுவது எமது மாவீரர்கள் உலகின் பிற மாவீரர்கள் போன்று நாடு இனம் கடந்து ஒரு காலத்தில் நினைவு கூறப்பட வாய்ப்பை உருவாக்கும்.

மாவீரர்களால் தெரிவு செய்யப்பட்ட கார்த்திகைப் பூ அதற்கான நல்ல சான்று.

அண்மையில் ஒரு மேலை நாட்டில் எமது போராளிகளின் உடையமைப்பை ஒத்த உடைகளை அணிந்து வேற்று இனத்தவர்கள் சென்றதைக் கண்டு வியப்புற்றேன். இன்று நாம் சேகுவராவின் லெனின் முகங்களைக் காவித்திருவது போல எமது மாவீரர்களும் ஒரு பொது இலட்சனையின் கீழ் மதிக்கப்படின் நிச்சயம் அவர்களின் தியாகத்திற்காக இந்த உலகம் அவர்களை கெளரவிக்கும் நாள் வெகு தொலைவில் அமையாது.

மாவீரர் நாள் எம்மைப் பொறுத்தவரை இலட்சிய உறுதியை மனதில் வளர்த்துக் கொள்வதற்கான நாள் மட்டுமன்றி மாவீரர்கள் போன்று இலட்சிய உறுதி மிக்க ஒழுக்கம் நிறைந்த பேதமைகள் கடந்த ஒற்றுமையுள்ள எளிமையான மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்பதை நினைவுறுத்திச் செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"இன்னுமொருவன்" எனும் பெயரிலும் "ஆல்டநேற்ரீவ்" எனும் பெயரிலும் யாழ் களத்தில் பதிவிடுபவரும் ஒரே ஆளா? இக்கேள்வியில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

மறறும் படி, தவறுகளைச் சுடடிக்காட்டுவது தவறில்லை. ஆனால் எடுத்தாம்போக்கக்கு மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என எழுதுவதே தவறு. நாடுகடந்த தமிழீழ அரசிற்கான செயற்திட்டங்களின் ஆரம்பத்திலேயே அதன் ஆயத்தவேலைகளை மேற்கொண்டிருந்தவர்கள் அனைவரதும் ஆலோசனைகளையும் பங்களிப்பினையும் கோரியிருந்தனர். இக்கருத்தினை எழுதிய இன்னுமொருவன் அவர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு தனது பெறுமதிமிக்க கருத்துக்களைக் கூறியிருந்தாரா? அக்கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டதா?

மேலும் தேசியக்கொடி மற்றும் கார்த்திகை மலர் என்பன மக்களது எழுர்சி சம்பந்தமான விடையம். மாற்றங்கள் ஒரே இரவினில் வந்துவிடுவதில்லை. புதிதாக வீடுகட்டுகிறோம் என்பதற்காக ஏற்கனவே நாம் இருக்கும் வீட்டினை புதுமனை புகுதல் முன்பே இடித்துடைப்பது போன்ற செயலாகும் மாற்றங்களை திடீரென அறிமுகப்படுத்துவது. காலப்போக்கில் அவை நிகழும் அவற்றில் நீங்கள் விரும்பும் விடையமும் காலத்துடன ஒத்துப்போவதானதாகவிருந்தால் நிச்சயம் நிகழ்தே தீரும்.

எமது கடமை தற்போதைய ஓட்டத்துடன் ஒன்றுபடுவதே. மாறாக தனித்தே நிற்போமாகவிருந்தால். மரநிழலில் தங்கியிருந்து பயணப் செய்வோரை விமர்சித்து இறுதியில் சேருமிடம் சேராத மாறுபட்ட பயணியின் நிலையே எமக்குவரும் பயணிகள் தாங்களாகவே மாற்றங்களை ஏற்படுத்தி தங்கள் பயண இலக்கினை அடைந்துவிடுவர், நாம் எந்தவிதத்திலும் முன்னேறாது ஆபத்தை எதிர்கொள்வோராகவே தங்கிவிடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்குஇ ஒரு இறந்த மனிதனின் வாழ்வு பற்றிப் படிப்பது ஆராய்வது என்பது உலகின் அனைத்துச் சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. கமியூனிசத்தின் குறியீடுகளான லெனின்இ ஸ்ராலின்இ மாவோஇ பிடல்இ சே முதலியவரின் வாழ்க்கை வரலாறு முதலாளித்துவ பூமிகளில் புத்ததகங்களாகக் கிடைக்கின்ற. இவை பற்றி ஆராயஇ விவாதிக்க இங்கு முடிகிறது. நாம் கூட எமது வீரர்களின் தியாகிகளின் வாழ்வுகளை உலகு ஏற்கின்ற விதத்தில் ஆராய்ந்து விவாதித்து உலகோடு சேர்ந்து இவ்வாண்டு முதல் கார்த்திகையை மாத்தியிருக்கலாம். ஒழித்து ஒழித்து மண்டபத்தை நள்ளிரவு வரை ரகசியமாய் வைத்து காhத்திகைப் பூக்கொட்டிச் சடங்கு நடத்துவதற்குப் பதிலாகஇ எமது வீரர்களின் வரலாறை ஆராய்ந்துஇ இலங்கையின் இன்றைய நிலையினை ஆவணப்படுத்திஇ கருத்தரங்குகள் போன்று பல்வேறு தரப்பட்ட நிகழ்வுகளை நாம் ஒழுங்கு செய்யின் இந்நாடுகளின் அறிவு சீவிகள்இ காவல் துறை உளவுத் துறை என அனைவருமே எம்முடன் சேர்ந்து புது வழிமுறைகள் பற்றி ஆராய அது வழிவகுத்திருக்கும். எமது வீரர்களை ஒவ்வொரு கார்த்திகையும் தமிழரல்லாதோரும் எண்ணிப் பார்க்க அது வழி சமைத்திருக்கும். எமக்குத் தேவையானதும் இன்று அது தான். ஆனால் நாங்கள் இன்னமும் தமிழ்பட கதாநாயகன் பாணியில் காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் கண்ணில் மண்தூவி மண்டபம் எடுத்தோம் என்று மார் தட்டிச் சடங்கு நடாத்தத தா

நீங்கள் சொல்லும் கருத்து நியாயமானதும் மாற்றங்கள் அவசியமானதும் ஆனால் இவற்றை புரிந்து கொள்ளும் மனநிலையில் கூட நாம் இல்லை என்பது தூரதிஸ்டமானது. தாயகத்தில் போர் உக்கிரமான சூழலில் அதே வேகத்துடன் துயிலுமில்லங்களையும் இடித்து துடைத்தெறிந்து விட்டது சிங்கள அரசு. எதிர்காலம் குறித்து சிங்கள அரசு தெளிவுடன் இருக்கின்றது. இங்கு எமது செயற்பாடுகள் எமக்குள்ளாகவே முடங்குகின்றது. எமது நியயங்களை நிலை நிறுத்த முடியாத கோணத்திலே வழிநடத்தப்படுகின்றோம். இவ்வாறான செயற்படுகள் மிகக் குறுகிய காலத்தில் இலங்கை அரசின் தூண்டுதலுடன் தடைசெய்யப்படும் என்பதை எம்மவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எமக்காக மடிந்த மக்களையும் வீரர்களையும் நினைவுகூருவது எமது உரிமை என்பதை பகிரங்கமாக அறிவித்து நிலைநிறுத்துவதற்கான உழைப்பு குறித்த அவசியம் எம்மால் புரிந்து கொள்ளப்படவில்லை. இவற்றை நினைவுகூருவதற்கான ஒரு பொது மண்டபத்தை கட்டுவதற்கான முயற்ச்சி எம்மிடம் இல்லை. மாறாக தியாகங்களையும் நினைவு தினங்களையும் குறுகிய நோக்கில் அடயாளத்தேடலுக்காக பயன்படுத்தும் வழிகாட்டுனர்களின் பின்னாலே உணர்வுள்ள மக்கள் பயணிக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். உதாரணத்திற்கு தியாகி திலீபன் பெயரில் ஒரு நினைவுமட்டபத்தை உருவாக்கி அதில் எமது நினைவுதினங்களில் வணக்கம் செலுத்துவோமாக இருந்தால் எமது நியாயங்கள் நிலைத்துநிற்கும். எங்கோ கோயில்களிலும் வேறு தேவைக்கு என்றபெயரில் மண்டபத்துக்கு அனுமதிபெற்று இரகசியமாக நினைவுதினங்களை கொண்டாடுவது தூரநோக்கற்றது. இவற்றைப் பற்றி கதைக்க முற்பட்டாலே மாவீரர் தினத்துக்கு எதிராக கதைப்பதாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. எமது செயற்பாடுகளே எமது உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதமாக பறைசாற்ற முற்படுகின்றது என்பதை முதலில் நாம் புரிந்துகொண்டு அதில் மாற்றத்தை கெண்டுவரவேண்டும். மிக வெளிப்படையாக உரிமையுடன் நினைவுதினங்களை கடைப்பிடிப்பதற்கன உரிமையை எம்மால் பெற முடியாவிடில் எமது நியாயங்களும் செத்துப்போகும் எம்மால் தாயகம் குறித்து சிறிதளவேனும் முன்னேற முடியாது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

இவற்றை நினைவுகூருவதற்கான ஒரு பொது மண்டபத்தை கட்டுவதற்கான முயற்ச்சி எம்மிடம் இல்லை. மாறாக தியாகங்களையும் நினைவு தினங்களையும் குறுகிய நோக்கில் அடயாளத்தேடலுக்காக பயன்படுத்தும் வழிகாட்டுனர்களின் பின்னாலே உணர்வுள்ள மக்கள் பயணிக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

சுகன் இது வரவேற்க தக்கது

எமக்கு என்று ஒன்று இருந்து விட்டால் ஏன் ஒழித்து செய்ய வேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருடனும் இணைந்து வருடாந்தம் தவறாது மாவீரர்களை வணங்குவதற்கு நானும் தவறியதில்லை. அங்கு வரும் எம் மக்களில் பலரும் தமிழ் உணவுப் பொருட்களை இதுவரை காணதவர்கள் போன்று, விழுந்தெழும்பி காய் கறி அரிசி இப்படி அனைத்து மளிகைப் பொருட்களையும் வாங்கி தமது வாகனங்களை நிரப்புவதையும்இன்னொருசாரார் மாதம் முழுவதும் பட்டினி கிடந்தவர்களைப் போன்று உணவு விற்கும் இடத்தில் தாம் விரும்பிய பொட்டலங்களை வாங்கித் திணிப்பதோடு, மண்டபத்தில் நிகழ்ச்சி பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் தமது குடும்பத்தாருக்கும் விநியோகம் செய்வதையும் கண்டு பலமுறை கண்ணீர் சொரிந்திருக்கின்றேன். மாவீர்களை வணங்கும் புனிதமான இடத்தில் இவையெல்லாம் தேவைதானா? இதை விற்பவர்களும்வாங்குபவர்களும் இனியாவது சிந்திப்பார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.