Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவன் இயக்கத்திற்குப் போனான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்தில் காட்டுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதையில் முதலில் கிச்சின் பிறகு பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட்) காம்ப் என்று கடந்து தொங்கலில் மூன்று நான்கு, சீற்றுகளால் கூரைவேயப்பட்ட கூடாரங்கள் ஒன்றிலிருந்து இவன் யோசித்துக் கொண்டிருந்தான். “ச்சே.. மெடிக்ஸ்ஸில் நின்ற என்னைத் தூக்கி சிவராசண்ணை மெஸ்ஸில் போட்டுட்டாரே..” இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். நேற்றிரவு ஓடிப்போன இருவரைத் தவிர்த்து இன்றைய காலைக் கணக்குக்கு நூற்று நாற்பத்து இரண்டு பேர் முகாமில் இருந்தார்கள். தனிய இவன்தான் மெஸ்ஸில் நிற்கவேண்டியதாய்ப்போனது. சிவராசண்ணை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஆக்களுக்கும் சமமான அளவில சாப்பாடு போகோணும் சரியோ.. உன்ர சினேகிதர் என்றோ பிடிக்காத ஆக்கள் என்றோ பாக்கப்படாது. கேள்விப்பட்டனோ.. ” என்று அவர் முடித்திருந்தார். இவன் அதில் சரியாக இருந்தான். ஒரு மட்டுமட்டான கணக்குப்படி ஒராளுக்கு ஏழு சோயாமீற் துண்டுகள் என்று இவன் பிளான் செய்து கொண்டான்.

இவனுக்கு இது தேவையில்லாத வேலை. நேற்றுவரை இவனொரு டொக்டர். டொக்டர் என்றுதான் சின்னப் பெடியள் சொல்லுவாங்கள். சிவராசண்ணை இவனை மெடிக்ஸ்ஸில நிற்கச் சொன்னபோது தனக்கு ஸ்டெதஸ்கோப், ரெம்பரேச்சர் பாக்கிற மானி, பிரசர் பாக்கிற மெசின் எல்லாம் தருவினமோ என்று இவன் நினைத்தான். ஆனால் கொஞ்சக் குளோரோபோம் குளிசைகளும், சொறி சிரங்கு வட்டக்கடிக்குப் பூசுகிற களிம்பும், எச் ரூ ஓ ரு என்றொரு தண்ணிமருந்தும் கொஞ்சம் பன்டேஜ்களும் மட்டும்தான் கொடுத்தார்கள். எச் ரூ ஓ ரூவை காயத்தின்மேல் தடவினால் நுரைத்துக் கொண்டு வரும். “அழுக்கெல்லாம் கரையுது. இனி மாறும்” என்று சொல்ல இவன் பழகிக் கொண்டான். கொஞ்சம் சின்ன வயசுக்காரர் வந்தால் “ம்.. வாயைத்திறவும், ஆ காட்டும், மூச்சை இழுத்துவிடும்.. சரி.. இதை மூன்றுதரம் மறக்காமல் போடும் என்று பனடோல்களைக் கொடுப்பான். இவன் காட்டுகிற பில்டப்புகளால்த்தான் அவர்கள் இவனை ஒரு டொக்டர் என்றுகொண்டு திரிந்தார்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்திருக்கும் நேற்றிவன் தனக்கு அரசியல் துறையில் சேர ஆசையிருக்கிறது என்று சொல்லாமல் இருந்திருந்தால்,

சும்மா நாலைந்து பேர் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சினிடையேதான் சொன்னான். “அரசியல் துறையில சேரத்தான் எனக்கு விருப்பம்” என்று. தனியே ஒருவனோடு பேச வேண்டியிருந்தாலும் துணைக்கு இன்னும் இரண்டு பேரைக் கூப்பிட்டுப் பக்கத்தில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. தனிய ரண்டு பேர் நிறைய நேரம் கதைக்கக் கூடாதென்று தென்னவன் சொல்லியிருக்கிறார். அப்பிடிக் கூடிக் கூடிக் கதைத்தவர்கள் அடுத்தடுத்த நாட்ளில் ஓடிப்போன சம்பவங்கள் இவனுக்கும் தெரியும். பெரும்பாலும் இவனை டொக்டர் என்று சொல்கின்ற சின்னப் பெடியங்களைத்தான் கூப்பிட்டுப் பக்கத்தில் வைத்திருக்கின்றவன் அன்று மாறிக் கூப்பிட்டுவிட்டான். காலமை துவக்குகளோடு (பொல்லுகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட்) பயிற்சியை முடித்துவிட்டு இவன்தான் பேப்பர் வாசித்தான். ஓயாத அலைகள் ஒன்றில் கைப்பற்றப்பட்ட ஆட்லறி எத்தனை மில்லிமீற்றரிலானது என்ற கேள்வியையும் இவனே கேட்டான். அது அங்கத்தைய வழக்கம். பெடியங்கள் செய்தியை உன்னிப்பாக கேட்கிறார்களா இல்லையா என்று அறிகிற சிவராசண்ணையின் ட்ரிக். மோட்டச் சைக்கிள் குரூப்போடு சேர்த்து ஏழு குரூப் அங்கு நின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு லைன். மோட்டச்சைக்கிள் குரூப்பில் ஒருவனை “நீ இண்டைக்குப் போகலாம்” என்று சிவராசண்ணை சொன்னார். அவனுக்கு வாயெல்லாம் பல்லாய்ப்போனது. மோட்டச் சைக்கிள் குரூப்பில் இன்னும் பதினேழோ பதினெட்டோ பேர்கள் இருந்தார்கள். கிழமையில் இரண்டு பேராவது மோட்டச்சைக்கிள் குரூப்பில் சேர்ந்து கொண்டேயிருந்தார்கள். இரவில் ஓட வெளிக்கிட்டு இசகுபிசகாகப் பிடிபட்டவர்களும் மோட்டச் சைக்கிள் குரூப்பிலேயே விடப்பட்டார்கள். அந்தக் குரூப்பிற்கு ஒரு லீடரும் இருந்தான்.

ஒவ்வொரு குரூப்புக்கும் சிவராசண்ணை வேலை கொடுத்தார். மற்றக் குரூப்புக்களை விட மோட்டச்சைக்கிள் குரூப்பிற்கு கொடுக்கிற வேலை கஸ்டமாயிருக்கும். ஒரு மீற்றிங்கில் சிவராசண்ணை அவர்களுக்கு இப்பிடிச் சொன்னார். “நீங்கள் வீட்டை போகப்போறம் எண்டு விரும்பினால் நாங்கள் உங்களைப் பிடிச்சு வைச்சிருக்கப் போறதில்லை. ஆனால் நீங்கள் வந்தநாளில இருந்து நாங்கள் உங்களுக்குச் செலவழிச்சிருக்கிறம். அதற்குரியதை உழைப்பாத் திருப்பித் தந்திட்டு நீங்கள் போங்கோ”. இவனது குரூப் இன்று காட்டுக்குள் மரந்தடிகளை வெட்டவேண்டியிருந்தது. இவனுக்கு அது கஸ்ரமாயிருந்தது. உங்களுக்கு சூரை முள்ளைத் தெரியுமா? அது இவனைக் கிழிகிழியென்று கிழித்தது. இவனிடம் மருந்து கட்ட வருபவர்களுக்கும் பெரும்பாலும் சூரைமுட்காயம்தான்.

காலைப் பயிற்சியும் மீற்றிங்கும் முடிந்து போகும்போது சிவராசண்ணை இவனையும் இன்னொருவனையும் கூட்டிக்கொண்டு போனார். இவனே சிவராசண்ணையைத் தாங்கிச் சென்றான். அவரால் இன்னொருவருடைய தயவில்லாமல் நடக்கமுடியாது. மட்டக்களப்பில் எங்கேயோ ஒரு சண்டையில் கால்களை அவர் இழந்திருந்தார். உடம்பில் வேறும் காயங்களை இவன் கண்டிருக்கிறான். இருபத்தாறோ இருபத்தேழோ வயசு அவருக்கு இருக்கலாம். குளித்து முடித்து நெற்றியில் அள்ளிப்பூசிய வீபூதியுடன் அவரை ஒரு இயக்கக்காரர் என மட்டுக்கட்டுவது சரியான கஸ்டம். “இல்லாத கடவுளின்ரை வீபூதியை என்னத்துக்கு பூசுறியள்” என்று தென்னவன் அவரோடு விவாதப்பட்டிருக்கின்றான். தென்னவன் முகாமில் இரண்டாவது பொறுப்பில் இருந்தான். சிவராசண்ணை பதிலுக்கு விவாதிப்பதில்லை. “இருக்கோ இல்லையோ, ஒரு நம்பிக்கை” என்பதோடு அவர் முடித்துக் கொள்வார்.

இவனையும் மற்றவனையும் சிவராசண்ணை இருக்கச் சொன்னார். “என்னடா, தமிழ்செல்வன் அண்ணைக்கு பதிலா உன்னை அரசியல் துறைக்குப் போடோணும் எண்டனியாம், அவ்வளவு பெரிய ஆளோ நீ ” என்று இவனைப்பார்த்துக் கேட்டார். இவன் பதைபதைத்துப் போனான். “அம்மாணை நான் அப்பிடிச் சொல்லேல்லையண்ணை” என்று அழுமாப்போல பதில் சொன்னான். “நாங்களென்ன வேலைக்கே ஆட்களையெடுக்கிறம், இன்னஇன்ன பதவிகளுக்கு ஆள்த்தேவையென்று” இதைச் சொல்லும் போது அவருக்கும் சிரிப்படக்க முடியவில்லை. இவன் அமைதியாய் நின்றான். “இண்டையில இருந்து மெடிக்ஸ விட்டுட்டு சொல்லுறவரைக்கும் மெஸ்ஸில நில். அதுதான் பணிஸ்ட்மென்ட், போ..” இவன் சுரத்தில்லாமல் வெளியேறினான். மற்றவன் பாவம், அவன் தனக்குப் புலனாய்வுத் துறையில சேரவிருப்பம் என்றவன். “என்னடா, நீ அம்மானுக்குப் பதிலா உன்னை ஐ க்கு பொறுப்பா போடோணும் எண்டனியாம்” என்று அவனை சிவராசண்ணை விசாரித்துக் கொண்டிருந்தார். தகடு குடுத்த அந்தக் கறுப்பாடு யாராக இருக்கும் என்று இவன் யோசிக்கத் தொடங்கினான்.

இயக்கத்துக்குச் சேர்ந்த கொஞ்சநாளிலேயே நிகழ்ச்சியொன்றில் பேசுமாறு சிவராசண்ணை இவனை விட்டார். ஒவ்வொரு ஞாயிறும் அப்படியொரு நிகழ்ச்சி நடக்கும். வில்லுப்பாட்டுகள், கவிதைகள், பாடல்கள் என எல்லோரும் ஏதாவதொன்றில் இருக்கவேண்டுமென்று அவர் வற்புறுத்துவார். “நாங்கள் சண்டைபிடிக்கத்தான் வந்தனாங்கள். உதுகளுக்கில்லை” என்று சிலர் வாக்குவாதப்படுவார்கள். “சரி, ஏன் சண்டைபிடிக்க வேணும் எண்டதை ஏறிச்சொல்லு” என்று சிவராசண்ணை சொல்லுவார். இவனுக்கொருநாள் சமகால அரசியலைப் பற்றிப் பேசு என்று அவர் சொன்னபோதுதான் அரசியற் கனவு வந்திருக்க வேண்டும். மேடையில் மைக் எதுவும் இருக்காது. இவன் குரலைச் செருமிக் கொண்டு ஆரம்பித்தான். விசயத்தைச் சொல்லமுதலே “நீங்கள் இந்த விடயத்தைத் தெளிவாப் புரிஞ்சு கொள்ள வேணும், ” என்றான். எந்த விடயம் என்பதில் இவனுக்கே குழப்பமிருந்தது. “யாழ்ப்பாணத்தைப் புலிகள்… ” என்று ஆரம்பித்தவன் நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கினான். “யாழ்ப்பாணத்தை நாங்கள் விட்டுட்டு வந்ததை எல்லாரும் தோல்வியெண்டுகினம். ஓம். அது ஒரு ராணுவப்பின்னடைவுதான். ஆனால் உங்களுக்குத் தெரியும். யாழ்ப்பாண மக்கள் ஒட்டுமொத்தமா இடம்பெயர்ந்த உடனை ஐநா செயலாளர் பூத்ரஸ் பூத்ரஸ் காலி கவலை தெரிவிச்சிருக்கிறார். தனது கரிசனையைச் சொல்லியிருக்கிறார். இதொரு அரசியல் வெற்றி. எங்கடை மக்கள் தங்கடை பிரச்சனையை இன்று உலகப்பிரச்சனையாக்கியிருக்கினம். நீங்கள் இந்த விடயத்தை தெளிவாப் புரிஞ்சு கொள்ள வேணும்” என்று சொல்லி நிறுத்தினான். சிவராசண்ணை தொடர்ந்து பேசு என்பதுபோல சாடை காட்டினார். “எங்களுக்காக தமிழகத்திலே அன்பர் ஒருவர் தீக்குளித்து தன்னைக் கொடுத்துள்ளார். அவருக்கு எமது வீரவணக்கங்கள்” அது அப்துல் ரவூஃப் என்பது இவனுக்குத் தெரியும். சொல்லவா விடவா என்று கொஞ்சம் குழம்பி அன்பர் என்றே முடித்துக் கொண்டான். அன்றைக்குப் பிறகு இவன் தொடர்ச்சியாப் பேசினான். வகுப்பெடுக்க வருகிற பொறுப்பாளர்களிடம் கேள்விகள் கேட்டான். அப்படியொருநாள் “எங்களிடம் பிளேன் இருக்கா” என்று இவன் கேட்ட கேள்விக்கு “ஓம்.. பலாலியில நிற்பதெல்லாம் எங்கடைதான்” என்று பொறுப்பாளர் சொன்னார். “ரஜீவ் காந்தியை கொலைசெய்தது நாங்களோ” என்றொருநாள் கேட்டான். “நாங்கள் இல்லை. ஆனா அவர் கொல்லப்பட வேண்டிய ஆள் இல்லையென்று நினைக்கிறீரோ” என்று பதில் வந்தது. இப்பிடி மற்றப் பெடியங்களும் நிறையக் கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று சிவராசண்ணை சொன்னார். ஆனால் எப்ப ரெயினிங் அனுப்புவியள் என்ற கேள்விகளும் எப்ப சண்டைக்கு அனுப்புவியள் என்ற கேள்விகளும்தான் நிறைய வந்தன. ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாகவே ஆட்கள் ரெயினிங்குக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவன் அனுப்பப்படவே இல்லை.

மெஸ் நினைத்தது போல கஸ்ரமாக இருக்கவில்லை. ஒருநாளைக்கு மூன்றுதரம் கிச்சினுக்குப் போய் சாப்பாடு எடுத்து வரவேண்டும். அதற்கு கூட இருவர் வருவார்கள். நடந்துபோய் மாட்டுவண்டிலில் எடுத்துவந்த பிறகு திரும்பவும் வண்டிலைக் கொண்டுபோய் விடவேண்டும். கிச்சினில் மோட்டச்சைக்கிள் குரூப்பிலிருந்தவர்களே வேலை செய்தார்கள். “தங்களை எப்ப விடுறதென்று சிவராசண்ணை உன்னட்டை ஏதாவது சொன்னவரா” என்று இவனிடம் கேட்டார்கள். அவர்களில் ஒருவன் எப்ப பார்த்தாலும் மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை. நாங்க மட்டும் உலகத்தில் வீடு திரும்ப முடியல்லை” என்று பாடிக் கொண்டிருப்பான்.

கிச்சினுக்குப் போகும் வழியில் பிள்ளைகளின் முகாம் வாசலில் இருவர் அல்லது மூவர் சென்ரிக்கு இருப்பார்கள். உள்ளே காய் கூய் என்று சத்தமும் கேட்கும். இதனாலேயே இவனோடு கிச்சினுக்கு வரப் பிரியப்படுகிறவர்களும் உண்டு. போன கிறிஸ்மஸ்க்கு பிள்ளைகள் இவனது முகாமுக்கு வந்திருந்தார்கள். அன்று பெரிய பெரிய பெட்டிகளில் கேக், மைலோ மில்க், கன்டோஸ் எல்லாம் வந்தன. இவன் கிறிஸ்மஸ் தாத்தா வேசம் போட்டிருந்தான். அவளும் வந்திருக்கலாம் என்று இவனுக்கு டக் என்று தோன்றியது. தான் சேர்ந்த படியால அவளும் சேருவாள் என்றே இவன் நம்பினான், கிட்டத்தட்ட புருசன் செத்தால் தீக்குளிக்கிற பெஞ்சாதி மாதிரி. கிறிஸ்மஸ் தாத்தாவின் முகமூடி வசதியாகிப் போனது. ஆனால் அவள் இல்லை. இயக்கத்தில் சேரும்போதே அவளைப்பற்றிக் கேட்டார்கள். றோணியோவில் அச்சிட்ட தாளில் கடைசிக் கேள்வியாக அது இருந்தது. காதல் உண்டா ஆம் எனில் விபரம் – ஓம் என்று குடுக்கலாமோ என்று யோசித்தவன் பிறகு நிறுத்திக் கொண்டான். அந்தக் காதலை நிறுத்திக் கொள்வதா தொடர்வதா என்பதில் இவன் குழப்பமாயிருந்தான். இயக்கத்துக்கு சேர்ந்த முதல்நாட்களில் இரவுகளில் சட்டென்று விழிப்பு வரும். கூடவே தான் வீட்டில் இல்லையென்ற நினைப்பும் அவளது நினைவும் ஏமாற்றத்தைக் கூட்டிவரும். அவளுக்குச் சொல்லாமல் ஏன் நான் இயக்கத்துக்கு வந்தேன் என்று இரண்டொரு தடவைகள் எழும்பிய கேள்விகள் பிறகொரு நாள் ஏன் இயக்கத்திற்கு வந்தேன் என்பதில் வந்து நின்றது. நல்லவேளையாக அந்தக் கேள்வி போர்மில் இல்லை.

அதிகாலையிலிருந்து தலைக்கு மேல் கிபிர்கள் பறக்கத் தொடங்கியிருந்தன. சில்வர் சாப்பாட்டுப் பிளேட்டுகள் எதுவும் வெளியில் இருக்கக்கூடாதென்று தென்னவன் சொன்னான். இவன் கால்களுக்கடியில் அகப்பட்ட ஒன்றிரண்டு கன்டோஸ் ஈயப் பேப்பர்களையும் அப்புறப்படுத்தினான். கிளிநொச்சிப் பக்கமாகத்தான் சண்டை நடந்ததாகச் சொன்னார்கள். கிளிநொச்சிக்கு ஆமி வந்து ஆறேழு மாதம்தான் ஆகிறது. ஆனையிறவிலும் பெடியள் இறங்கிநிற்பதாக புலிகளின் குரல் சொன்னது. இந்தச் சண்டைக்கு நாங்கள் ஆகாய கடல் வெளிச்சமர் இரண்டு அல்லது ஓயாத அலைகள் இரண்டு என்று பெயர் வைக்கலாம் என்று யாருக்காவது சொல்லலாமா என இவன் யோசித்துவிட்டு பிறகு அடக்கிக் கொண்டான். எதுக்குச் சோலி.. “சப்ளைக்குப் போக வேண்டிவரலாம். றெடியா இருங்கோ” என்றார் சிவராசண்ணை. சொல்லி முடிக்க முதலே “ஏ… ” என்ற உற்சாகக் கூச்சல்கள் கிளம்பின. இவனுக்குத்தான் நெஞ்சிடியாயப் போனது. செல்லும் துவக்குச் சன்னங்களும் பறக்கிற ஒரு இடத்திற்கு கிட்டவாய் நிற்பதை யோசித்தாலே வயிற்றைக் கலக்கியது. கிபிர் வேறை.. சத்ஜெய என்று சமருக்குப் பெயரிட்டு உத்வேகம் கொண்டு வந்தாயா? புலிகள் நித்திரையா கொள்வார்..? என்று யோசித்துக் கொண்டிருந்த கவிதை வரிகளும் மறந்து போயின. கிளிநொச்சி பரந்தனை உடைத்துக்கொண்டு போக முடியவில்லையென்றும் ஆனையிறவில் இறங்கியவர்கள் ஆட்லறிகளை அழித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திவந்தபோதுதான் இவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. முகாமில் பெடியள் உற்சாகமிழந்து திரிந்தார்கள். இவனை விட இரண்டு மூன்று வயது சின்னப் பெடியனொருவன் “அடுத்த அடி ஆனையிறவுக்கு விழேக்கை அங்கை நான் நிப்பன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான்.

இரண்டொரு நாளுக்குப் பிறகான ஒருநாட்காலை மோட்டச்சைக்கிள் குரூப்பிலிருந்து ஏழுபேரை சிவராசண்ணை வீட்டை போகச் சொன்னார். “முடிவா உறுதியா முடிவடுத்துட்டு வரவேணும். இல்லாட்டித் தேவையில்லை. மற்றாட்களுக்கும் சொல்லுறன். ரெயினிங் போனபிறகு நீங்க விரும்பினாலும் வேறை காரணங்களால விடமுடியாது. எங்கெங்கை நாங்கள் ரெயினிங் எடுக்கிறம் என்ற விசயம் புலிகள் இல்லாத ஆட்களுக்குத் தெரியத்தேவையில்லை.” என்றும் சொன்னார். அன்றைக்கு இரவே இவன் தானும் மோட்டச் சைக்கிள் குரூப்பில் சேரலாம் என திடீரென்று யோசித்தான். கிட்டத்தட்ட நாலு அல்லது ஐந்து மாதமாவது மோட்டச்சைக்கிள் குரூப்பில் இருக்கவேண்டியிருக்கும் என்ற நினைப்பும் விசராக்கியது. ஓடிப்போனால் என்ன..?

இவன் ஓடிப்போவது பிள்ளைகளின் முகாமில் சென்ரிக்கிருப்பவர்களின் கையில் இருக்கிறது. அவர்கள் கண்ணயரும் நேரம் எதுவெனத் தெரியவில்லை. எல்லாத்திற்கும் முதல் ஏன் விலத்தி வந்தேன் என்பதற்கு எதையாவது ஊரில் சொல்லவேண்டும். ரெயினிங் கஸ்ரமென்று சொல்லலாம். ஆனால் சூரை முட்காயங்களைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்புத் தன்னும் இல்லை. ஆகக்குறைந்தது அடிப்படை ரெயினிங் முடித்தவர்களுக்காவது முழங்கைகள் கண்டிப்போய் இருக்கும். இவனுக்கு அதுவும் இல்லை. அடுத்தநாள் பகல் முழுக்க இவன் விலகுவதற்கு என்ன காரணம் இருக்கமுடியும் என்று மண்டையைப் போட்டுக் குழப்பினான். அன்றைக்கு நடுச்சாமம், நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒற்றையடிப்பாதைக்கு இறங்கி அசுமாத்தமின்றிக்கிடந்த பிள்ளைகளின் முகாமைக் கடந்து கிச்சினைத் தாண்டி வீதியில் ஏறி மாங்குளத்தை நோக்கி நடக்கத்தொடங்கிய போது இவனது மண்டைக்குள் “அந்தமாதிரியான” ஒரு காரணம் இருந்தது.

“கட்டாயப்படுத்திக் கூட்டிக்கொண்டு போட்டார்கள்”

0 0 0

இந்தக்கதை பதினைந்தோ பதினாறோ வருடத்தை லீனியராகக் கடந்து வந்துவிடுகிறது. ஐரோப்பாவோ கனடாவோ ஆசிரியனால் மட்டுக்கட்ட முடியாத ஏதோ ஒரு இடத்தில் புறநகரில், வீட்டில் தொலைபேசி மணியடித்தது. நேரத்தைப் பார்த்தான். இந்தியாவிலிருந்து பேட்டி கேட்டிருந்தார்கள். அவர்கள்தான். “வணக்கம்” என்றான். முதலே சொல்லியிருந்த கேள்விகள். முதலே பிளான் பண்ணியிருந்த பதில்கள் – ஒரேயொரு கேள்விமட்டும் புதுசாயிருந்தது. “நீங்கள் முன்னாள் விடுதலைப் போராளியல்லவா”

“ஆம், ”

“அந்த அமைப்பிலிருந்து என்ன காரணங்களுக்காக விலகினீர்கள் என்று சொல்லமுடியுமா”

“ஆம், ” இனி இவன் சொன்ன காரணங்கள் வருமாறு..

1. முதலில அந்த அமைப்பில ஜனநாயகத் தன்மை இல்லை.

2. ஏக பிரதிநிதித்துவம் என்பது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

3. மாற்றுக் கருத்துக்களுக்கு அவர்கள் மதிப்பு அளிக்கவில்லை.

4. வலது சாரி அரசியலை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

5. மக்களை மையப்படுத்திய சரியான அரசியல் செல்நெறி அங்கு இருக்கவேயில்லை.

6…

7…

8…

9…

10. இந்தக்காரணங்கள் ஒன்று சேர்ந்து இந்த இயக்கத்தைத் தோற்கடிக்கும் என்பதை நான் அப்போதே உணர்ந்து கொண்டிருந்தேன்

பதினைந்து வருசத்தில் இயக்கத்தை விட்டு விலகியதற்கான பத்துக்காரணங்களைக் கண்டு பிடிக்க முடிந்த இவனுக்கு தான் ஏன் இயக்கத்துக்குப் போனேன் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சிம்பிளி சூப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

மனம் திறந்த பதிவு..........நன்றாக் இருக்கிறது. ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை சொல்ல, ஊரில உப்பிடி எத்தின பேர் மோட்டச்சயிக்கிள் குரூப்பில இருந்து வந்தவங்கள்.

சயந்தன்,

அற்புதமான வசன நடை. உண்மயில கதைக்கு தலையங்கம் “மோட்டச்சயிக்கிள் குரூப்” என்று வைத்திருந்தால் இன்னும் பொருத்தாமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

Edited by samiyar

:unsure:கட்டாயப்படுத்திக் கூட்டிக்கொண்டு போட்டார்கள் :lol:








இந்தக்கதை பதினைந்தோ பதினாறோ வருடத்தை லீனியராகக் கடந்து வந்துவிடுகிறது. ஐரோப்பாவோ 

கனடாவோ ஆசிரியனால் மட்டுக்கட்ட முடியாத ஏதோ ஒரு இடத்தில் புறநகரில்இ வீட்டில் தொலைபேசி மணியடித்தது. நேரத்தைப் பார்த்தான். இந்தியாவிலிருந்து பேட்டி கேட்டிருந்தார்கள். அவர்கள்தான். “வணக்கம்” என்றான். முதலே சொல்லியிருந்த கேள்விகள். முதலே பிளான் பண்ணியிருந்த பதில்கள் – ஒரேயொரு கேள்விமட்டும் புதுசாயிருந்தது. “நீங்கள் முன்னாள் விடுதலைப் போராளியல்லவா”

“ஆம்இ ”

“அந்த அமைப்பிலிருந்து என்ன காரணங்களுக்காக விலகினீர்கள் என்று சொல்லமுடியுமா”

“ஆம்இ ” இனி இவன் சொன்ன காரணங்கள் வருமாறு..

1. முதலில அந்த அமைப்பில ஜனநாயகத் தன்மை இல்லை.

2. ஏக பிரதிநிதித்துவம் என்பது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

3. மாற்றுக் கருத்துக்களுக்கு அவர்கள் மதிப்பு அளிக்கவில்லை.

4. வலது சாரி அரசியலை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

5. மக்களை மையப்படுத்திய சரியான அரசியல் செல்நெறி அங்கு இருக்கவேயில்லை.

6…

7…

8…

9…

10. இந்தக்காரணங்கள் ஒன்று சேர்ந்து இந்த இயக்கத்தைத் தோற்கடிக்கும் என்பதை நான் அப்போதே உணர்ந்து கொண்டிருந்தேன்


பதினைந்து வருசத்தில் இயக்கத்தை விட்டு விலகியதற்கான பத்துக்காரணங்களைக் கண்டு பிடிக்க முடிந்த இவனுக்கு தான் ஏன் இயக்கத்துக்குப் போனேன் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. 

பல பேரோட உண்மை முகத்தை வெளிகிடதீங்கப்பா

சிரிக்கமுடியல

Edited by ramathevan

  • கருத்துக்கள உறவுகள்

முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது............

“கட்டாயப்படுத்திக் கூட்டிக்கொண்டு போட்டார்கள்”

பதினைந்து வருசத்தில் இயக்கத்தை விட்டு விலகியதற்கான பத்துக்காரணங்களைக் கண்டு பிடிக்க முடிந்த இவனுக்கு தான் ஏன் இயக்கத்துக்குப் போனேன் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சயந்தனுக்குப் பாராட்டுகள்!

தொடர்ந்து இதுபோன்ற ஆக்கங்கள் வரவேண்டும்.

பலருடைய திடமற்ற செயல்களுக்கான பதிலாகவும் அமைகிறதல்லவா?

சயந்தனுக்குப் பாராட்டுகள்!

தொடர்ந்து இதுபோன்ற ஆக்கங்கள் வரவேண்டும்.

பலருடைய திடமற்ற செயல்களுக்கான பதிலாகவும் அமைகிறதல்லவா?

சயந்தண்ட கதைகளை வாசித்து 'நல்லா இருக்கு' என்று சொல்லிச் சலிச்சுப் போயிட்டுது... சயந்தா, ஒரு கதையையாவது மோசமாக எழுதனப்பா... உந்தக் கதைக்கும் நல்லா இருக்கு என்டல்லோ சொல்லவேண்டி இருக்கு (சொந்தக் கதை இல்லைதானே? :unsure: )

இயக்கத்தில சேர்ந்தமைக்கான பத்து காரணங்களாக சொல்லக்கூடியவை:

1. வறுமை

2. போர் காரணமாய் குடும்பத்தில உயிர், உடமை இழப்புக்கள், அகதியாதல்

3. உண்மையான தமிழ் உணர்வு

4. நண்பர், உறவினர், இயக்கத்தில இருந்தபடியால அல்லது சேர்ந்தபடியால + [காதலி அல்லது காதலன் இயக்கத்துக்கு போனதால]

5. இயக்கம் மீது ஏற்படுகிற கவர்ச்சி

6. யாராச்சும் உசுப்பேத்தி விடுகிறதால

7. யாரையாச்சும் பழிவாங்குறதுக்கு

8. படிப்பில தோல்வி

9. காதலில தோல்வி

10. வயசுக்கோளாறு, படம் காட்டுறதுக்கு

இதில கீழ வாற காரணங்களில சேர்ந்து இருக்கக்கூடிய ஆக்கள் விலகுறதுக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாய் இருந்து இருக்கலாம். வீட்டில இராணுவம் மூலம் இழப்புக்கள், கொலைகள் விழுந்து இருந்தால் அப்படியான காரணத்துக்காக சேர்ந்த ஆக்கள் மற்றவர்களைவிட நீண்டு நிலைச்சு இருந்து இருக்கலாம்.

ஆனால்.. நானறிய சும்மா முசுப்பாத்தியாய் இயக்கத்தில சேர்ந்து பிறகு மிகத்தீவிரமான - தாயகத்தில, போராட்டத்தில மிகவும் பற்று, உறிதிகொண்ட போராளிகளாய் வாழ்ந்து மடிந்தவர்களும் இருக்கிறீனம்.

இதுபோலவே, வறுமை காரணமாக சேர்ந்து பிறகு இயக்கம் படிப்பிச்சுவிட்டு அறிவு வளர்ந்தாப்பிறகு தாங்களும் மற்ற ஆக்கள் மாதிரி சந்தோசமாய் வாழவேணும் எண்டுறதுக்காய் விலகிய ஆக்களும் இருக்கிறீனம்.

குருடனின் வாழ்வை அவனைத் தவிர வேறொருவர் கண்களை கட்டி வாழ்ந்து அனுபவித்து உணரமுடியாது. மரணத்தின் அனுபவத்துடனும் எவரும் இவ்வுலகில் இல்லை. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் புதைகுழிகளுக்கான அடயாளங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மண்ணோடு கலந்துள்ள உணர்வுகள் எனதும் உனதும் வார்த்தைகளுக்குள்ளும் காரணங்களுக்குள்ளும் எழுதுகோலுக்குள்ளும் அகப்படாது. இந்த இனத்தின் பொருட்டு அவ்வாறான ஒரு அவசியமும் இல்லை.

சுகன், தாயக மக்கள் என்ன பால்வெளியில வாழ்ந்த வேற்று கிரக வாசிகளா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நாம் தான் அப்பாவிகள்

நான் ஊரிலிருந்து வரும் எவரிடமும் ஏன் வந்தாய் என்றோ

இயக்கத்திலிருந்து வந்தவராயின் ஏன் விட்டுவிட்டு வந்தாய் என்றோ

நான் கேட்பதில்லை

உண்மையான பதில் வராது

என்னைப்பொறுத்தவரை...

இதே கேள்வியை முதலில் எம்மை நாமே கேட்கவேண்டும்

இவன் இயக்கத்திற்குப் போனான் கதாசிரியர் சயந்தனை மேடைக்கு அழைக்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன் இயக்கத்திற்குப் போனான் கதாசிரியர் சயந்தனை மேடைக்கு அழைக்கின்றோம்.

அவர் மேடைக்கு கீழே பார்வையாளர்களோடு சப்பாணி கட்டி அமர்ந்திருக்கிறார். அதுவே அவருக்குமான இடமாகும்

  • கருத்துக்கள உறவுகள்

இவன் இயக்கத்திற்குப் போனான் கதாசிரியர் சயந்தனை மேடைக்கு அழைக்கின்றோம்.

கல்லெறியோ காதாவடியைப்பொத்தி அடிக்கவோ சயந்தனைக் கூப்பிடுறீங்கள் ? :(

அவர் மேடைக்கு கீழே பார்வையாளர்களோடு சப்பாணி கட்டி அமர்ந்திருக்கிறார். அதுவே அவருக்குமான இடமாகும்

சயந்தா, சரணடைஞ்சிடாதையுங்கோ.மேடையும் பார்வையும் பிறகு அப்படிப்போடு ஸ்ரைலில :lol:

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோலவே, வறுமை காரணமாக சேர்ந்து பிறகு இயக்கம் படிப்பிச்சுவிட்டு அறிவு வளர்ந்தாப்பிறகு தாங்களும் மற்ற ஆக்கள் மாதிரி சந்தோசமாய் வாழவேணும் எண்டுறதுக்காய் விலகிய ஆக்களும் இருக்கிறீனம்.

அறிவு வளர்து புலத்துக்கு வந்தவர்கள் முற்போக்கு வாதிகள் ,எழுத்தாளர்கள் ,புரட்சிவாதிகள் ,மார்க்ஸிவாதிகள் என்று ,பிரகாசிக்கினம்

அறிவு வளராதவர்கள் நாட்டில இருந்து ஒட்டுக்குழுவாக பிரகாசிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஏன் இயக்கத்துக்குப் போனேன் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

உண்மையிலேயே தெரிந்திருக்காது.

நானும் எனது நெடுநாளைய நண்பர்களை இதுவரை கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.