Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமுதுப்புலவருக்கு எமது அஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமுதுப்புலவருக்கு எமது அஞ்சலி

செவாலியர் இளவாலை அமுதுப் புலவர்

அமுதுப்புலவர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அமுதசாகரன் அடைக்கலமுத்து அவர்கள் இன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் ஈழம் நெடுந்தீவில் 15.09.1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளவாலையை வாழ்விடமாகக் கொண்டவர்.

வித்துவானாக, ஆசிரியராக, அதிபராகத் தனது பணியினைத் தொடர்ந்தவர் எழுத்துத் துறையில் ஓர் ஆதவனாகப் பிரகாசித்தார். பல நூற்றாண்டு மலர்களின் ஆசிரியராகவும், வீரகேசரி, காவலன், தினகரன், ஈழநாடு போன்ற தினசரிப் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதிக் குவித்தார். இவரது படைப்புக்கள் பல இலங்கை அரசினால் தமிழ்ப் பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தன.

இலண்டனில் வாழ்ந்து வந்தபோதிலும் அடிக்கடி ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் அழைக்கும் இடமெல்லாம் சென்று வருந்தவர். அவரின் தமிழ் அறிவும், நகைச்சுவை கலந்த பேச்சும் அவருக்கே சொந்தம். அவருடைய பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் எப்போதும் இனிக்கும். கவிதை, கட்டுரை, நாவல், வரலாற்று நூல்கள் என எழுதிய நூல்கள் பலவாகும்.

மாதா அஞ்சலி (கவிதை), நெஞ்சே நினை, இவ்வழிச்சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள் (வைத்தியநூல்), அமுதுவின் கவிதைகள் 1991, அன்பின் கங்கை அன்னை திரேசா (மூன்று பதிப்புக்கள்), மடுமாதா காவியம், இளவாலை அன்னம்மாள் வரலாறு, அமுதுவின் கவிதைகள் (திருத்திய பதிப்பு), இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், பூந்தமிழில் பொன்னாடைகள் என பலவாகும்.

கிடைத்த பட்டங்கள்: சொல்லின் செல்வர், புலவர் மணி, செந்தமிழ்த் தென்றல், முப்பணி வேந்தர், கவியரசர், தமிழ்க்கங்கை, பாவேந்தர், மதுரகவி, மகாகவி, கலாபூசணம், கௌரவ கலாநிதி, முத்தமிழ் அறிஞர் என்பவற்றோடு வத்திக்கான் பாப்பரசரிடமிருந்து கிடைக்கப்பெற்ற “செவாலியர்” பட்டம் மிகவும் உயர்வானது. இப்பட்டம் தமிழுலகில் உலகிலே ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கின்றது.

ஈழமண் மேலும், அன்னை தமிழின் மேலும் தாளாத பற்றுடையவர் புலவர்மணி. ஈழத்தமிழ் மக்கள் பல ஆண்டுகளாகப் படும் இன்னல்களைத் தனது நூல்களிலே கவிதைகளாக வடித்துள்ளார். எப்போதும் சிரித்த முகமும், நிமிர்ந்த நடையும், தமிழ் இலக்கணத்தை அப்போது வாழ்ந்த தமிழ் அறிஞர்களான பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புலவர்மணி இளமுருகனார், போன்றோரிடம் ஐயந்திரிபுறக் கற்ற பழுத்த அறிவு அவரின் பேச்சிலும், எழுத்திலும் தெள்ளமாகத் தெரியும்.

இவர் தமிழ் அன்னைக்குத் தனது மரபுக்கவிதைகளால் பல ஆண்டுகளாக அர்ச்சனை செய்வதால் தமிழ் உலகில் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறார். தான் வாழும் காலத்தில் தனக்கு உதவுபவர்களையும் ஒருநாளும் மறவாத நன்றியுணர்வு மிக்க ஒரு நல்ல மனிதராகவும், தெய்வ பக்தி மிக்க ஒருவராகவும் எம்மிடையே இலண்டனில் வாழ்ந்த அவர் இன்று அமரர் ஆகிவிட்டார்.

Edited by Selvamuthu

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வளர்த்த பெரு மகனுக்கு இதய அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்காய் தொண்டாற்றியவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்...இவரது படத்தை இணைக்க முடியுமா...

amuthu.jpg

தமிழுக்கு அமுதென்று பெயர்...

தமிழுக்காய் சேவை செய்த அடைக்கலாமுத்து ஐயாவை பெரும்பான்மையான தமிழர் அன்பாக அமுது என்று அழைப்பார்கள்.

ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் இணைத்ததிற்கு நன்றி குட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கனடாவில் உள்ள வண. சந்திர காந்தன் அடிகளாருடைய தந்தையார் என நண்பி சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நானும் ஒரு கட்டுரையில் படித்த ஞாபகம்..அமுது புலவர் அவர்கள் கனடாவில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் சந்திர காந்தன் அடிகளாரின் தந்தை என்று.அமுது அய்யாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.!

அஞ்சலிகள். தகவலுக்கு நன்றி ஆசிரியர்.

கண்ணீர் அஞ்சலிகள்,

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்காய் தொண்டாற்றியவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் இளவாலை அமுது அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கங்கள். புலவர் அவர்களை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்கூறும் நல்லுலகிற்கும் எனது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக்கொள்கிறேன். :D

தமிழன்னை தனது இன்னொரு தவப் புதல்வனை இழந்துவிட்டிருக்கிறாள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமுதுப் புலவருக்கு எனது அஞ்சலிகளும், அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் நானும் ஒரு கட்டுரையில் படித்த ஞாபகம்..அமுது புலவர் அவர்கள் கனடாவில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் சந்திர காந்தன் அடிகளாரின் தந்தை என்று.அமுது அய்யாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.!

நீங்கள் கூறுவது சரி. சந்திரகாந்தன் அவருடைய இரண்டாவது மகன்.

தந்தைக்கு பிள்ளைகள்தான் வாழ்த்துப்பா பாடுவார்கள். ஆனால் எமது அமுதுப்புலவரோ தான் பெற்ற மகனுக்கே வாழ்த்துப்பா பாடுகிறார். மகனுக்காக அவர் எழுதிய சில பாடல்களை மட்டும் இங்கே இணைத்துள்ளேன் படித்துப் பாருங்கள்.

பேராசிரியர், தவத்திரு சந்திரகாந்தன் அடிகளாருக்கு

சந்தணத்தில் தொட்டுச்

செந்தமிழில் பொட்டு

வெண்பா

புன்னகையும் தண்ணளியும் பொன்னுரையும் கண்ணியமும்

அன்னையெனும் நாட்டினிலே அன்புறவும் – தன்னகத்தே

கொண்டசந்திர காந்தக் குருமணியின் வெள்ளிவிழாக்

கண்டிடுவோம் வாரீர் களித்து.

பிறப்பும் சிறப்பும்

அறுசீர் விருத்தம்

முக்கனி சிறந்த நாடு

முத்தமிழ் முழங்கும் நாடு

திக்குகள் போற்றும் நாடு

திருத்தலம் கொண்ட நாடு

மக்களின் பக்தி அன்பால்

மழைபெய்யும் புனித நாடு

கொக்குகள் நீந்தும் நன்னீர்க்

குளங்களைக் கொண்ட நாடே.

படிப்பும் பணியும்

தந்தையாய் அன்புத் தாயாய்

தம்பியாய் அண்ணன் போலும்

சொந்தமாய்க் குருவாய் எங்கள்

தோழனாய் அடியா னாகிச்

சிந்தையில் பிறர்க்குச் சேவை

செய்வதால் சிறப்புப் பெற்றீர்

இந்தமா நிலத்தில் ஓடும்

இன்னொரு நதியென் பாரே!

மங்கல வாழ்த்து

அலைகடல் கைகள் நீட்டி

ஆனந்தப் பன்னீர் ஊற்றும்

மலைகளே முகட்டில் மேக

மல்லிகைப் பந்தல் போடும்

கலைநிறை மதியே விண்மீன்

கலங்களே! வானே காற்றே

இலைமலர் கனிகாள்! வாரும்

இறைவனின் குருவை வாழ்த்தும்.

வானமும் தவறிப் போகும்

மழையின்றி வரண்டால்; பெண்கள்

மானமும் தவறும் வாழ்வில்

வடுக்களைச் சுமந்தால்; வள்ளல்

தானமும் தவறும் கையில்

தரும்பொருள் தட்டுப் பட்டால்

ஞானமும் தவறிப் போமோ?

நடுநிலை தவறா வேந்தே!

பேச்சும் எழுத்தும்

மெல்லிய தென்றல் போலும்

வெண்ணிலா ஒளியைப் போலும்

நல்லரும் மலர்கள் செண்டில்

நறுமணம் பரம்பல் போலும்

கல்லினில் அரைத்த கட்டைச்

சந்தன மணத்தைப் போலும்

சொல்லொடு பொருளைக் கேட்டோர்

சுட்டிப்பா ராட்டு வாரே.

மங்கிடா ஊற்றாய்க் கீரி

மலையினில் அருவி பாய்ந்து

பொங்கிடும் ஆங்கி லத்தில்

புத்தகம் இயற்றி வைத்தீர்

திங்களும் தென்றல் காற்றும்

திரிந்திடும் எழுத்தைக் கண்டோம்

சங்கினில் முத்துப் போலச்

சான்றோரில் சிறந்து வாழ்வீர்.

எண்சீர் விருத்தம்

என்னருமைக் குருமகனே எங்கள் வீடும்

ஈழமென்ற தாய்நாடும் களிக்கு மாறு

பொன்னான பணிகளினால் விழுது விட்டீர்

போனதிசை எல்லாமே போற்றக் கண்டோம்

அன்னையெனும் தெய்வமிங்கே இல்லை ஐயா

அமலனடி யிருந்துமலர் சொரியக் கண்டீர்

மன்னனெனும் மாசற்றோன் காலில் தொட்டு

வாழ்த்துகிறேன் வெள்ளிவிழா மகனே வாழி!

- அமுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழுக்காய் தொண்டாற்றியவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனது குடும்பத்தின் சார்பில் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கங்கை அடைக்கலமுத்து ஆசிரியரை நான் வாழும் நாட்டில் வரவேற்று உபசரிக்க 1990ல் கிடைத்த சந்தர்ப்பத்தை நினைவிற் கொள்கிறேன். அன்று அவரின் அன்பின் கங்கை அன்னை திரேசா எனும் நூல் வெளியீட்டு விழாவின்பின் அவர் கைப்பட எழுதித்தந்த நூல் இன்றும்என்னோடு உள்ளது. அன்னாரின் தமிழ் அறிவிற்கும் அவர்தம் எளிமையான வாழ்விற்கும் தலை வணங்குவோம்.அவரது ஆன்மா சாந்தி பெறவும், அவர் பிரிவால் துயருறும் உறவினர் ஆறுதல் பெறவும் இறைவனை இறைஞ்சுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்துச் சுவைத்த நூல்களில் அமரர் அமுது எழுதிய அன்பின் கங்கை அன்னை திரேசா என்னை வெகுவாகக் கவர்ந்த நூல்.இவரது இழப்பு தமிழுக்கு பேரிழப்பு.இவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவியமுதே! மரபுக்கவியமுதே! தமிழமுதே!!

நெடுந்தீவின் மண்பிறந்து

இளவாலை மனைபுகுந்து -தமிழ்அறிவு

தொடும் பணிகள் பலபுரிந்து

மண்ணின்படும் துயரால்...

நெடும்பயணம்தொடர்ந்து வந்து

லண்டன்குடிபுகுந்த நாற்றாகி -தமிழின்

ஊற்றாகிநின்று நல்லபணிசெய்த

நாட்கள் போதுமென்றா இன்று

நெடும்பயணம் தொடந்தீர்கள் கவியமுதே!

இனிவிடுமுறையோ? உயிர்விடும் முறையோ?

இறைவனடி தொடும் முறையோ?

இவ்வுலக வாழ்வின் முடிவுரையோ?

தமிழின் அமுதந்தனைக் குழைத்த கவியாய்

அமுதுவின்கவிதை என அள்ளித்தந்த

கவியமுதே! அமுதுப்புலவே!!

முதுமை வந்தணைத்து- எம்

முத்தமிழை அழைத்துப்போயிடினும்

அமிழ்தாய் அவர்தந்தகவி குவியல்கள்

அவர்வாழ்ந்த வாழ்வுக்குச்சாட்சியாமே!

தமிழ்வாழ வாழ்ந்த அவர்வாழ்வு என்றும்

தமிழோடு வாழும் வாழும்

அமுதுவின் கவிதைகள் அன்னம்மாள் ஆலயவரலாறு

மடுமாதா காவியம் அன்பின்கங்கை அன்னை திரேசா

நெஞ்சேநினை இவ்வழிச்சென்ற இனியமனிதன் எனும்

பஞ்சமிலா மரபுக்கவிபுனைந்த கருத்துக்கவிவிருட்சமே!

காக்கும் கரங்களென உயிர் காக்கும் நூலொன்றுமாய்

ஆக்கிய அமுதுக்கவியே! இன்று உயிர்அடங்கியதேன்?

அகிலத்தில் தமிழ்வாழ வாழும் தமிழமுதே! -நிஜமாக

ஆண்டவன் காலடியில் அடைக்கலம் காண்பீர்;கள்.

சொல்லின் செல்வன் புலவர்மாமணி

முப்பணிவேந்தன் பாவேந்தன் தமிழ்க்கங்கை

செந்தமிழ்த்தென்றல் கவியரசர் மதுரகவியென

பட்டங்கள் பலபெற்ற தமிழ் அமுதுப்பாவலனே!

எப்பவுமே என்றுமே உங்கள்முகம் பார்த்திடாது

உங்களிடம் தமிழ்கற்ற ஏகலைவன் இறைஞ்சுகிறேன்

இறைவனிடம் இளைப்பாற்றுக்காக உங்கள்

ஆத்மாவின் ஆத்மசாந்திக்காக சாந்தி சாந்தி.

கவிவன்

http://www.lankasripoems.com/index.php?subaction=showfull&id=1267811327&archive=&start_from=&ucat=3&

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா புலவர் அமுதுக்கெம் அஞ்சலிகள்

யுகசாரதி

(வேலன் இலக்கிய வட்டம், லண்டன்)

காலக் கலைஞனவன் காட்சி வரைகின்றான்

கோலங்கள் ஒன்றொன்றாய்க் கூடும், அதனிடையே

வந்தோரும் போனோரும் வகைபிரிந்து நிற்பார்கள்

வாழ்ந்த சுவடும் வழித்தடமும் இல்லாது

மாய்ந்து மடிந்தோரும் மாய்ந்தாலும் தம் சுவட்டை

ஆழ்ந்து பதித்தோரும் அழகை நிறைத்தோரும்

என்று பலவாய் இருக்கும் அக்காட்சிகளில்

ஒன்றாகித் தன்னை உயர்ந்தவராய் வைத்திருக்கும்

ஐயா புலவர் அமுதுக்கென் அஞ்சலிகள்

கல்லிற் பதிந்திட்ட காற்தடமாய் ஐயாதன்

சொல்லில் பதித்த சுவை அவரின் பின்னாலே

பார்த்து வழிநடக்கும் பாவலரை மேலுயர்த்தும்.

உச்சத்துக்கேறி உயர்ந்து செவாலியராய்

மெச்சப்படத் தான் விளைவித்த முத்துகளை

ஒன்றாக்கித் தன்வாழ்வின் ஒன்பதாம் தசாப்தத்தில்

குன்றாது இளமை குறையாதளித்தவரை

ஏனோ தெரியாது எடுத்துவிட்டான் காலனவன்

பூவுதிரக் காயுதிரப் பொறுத்திருந்தோம் ஆனாலும்

பழுத்த பழமுதிரப் பார்த்திருக்கக் கூடுதில்லை.

காய்த்த மரம்சாயக் காணப்பொறுக்குதில்லை

குன்றின் விளக்கணையக் கூடிநின்று நோக்குகிறோம்

ஒன்றும் புரியாது உயர்ந்த மலையொன்று

சாய்ந்ததுவோவென்று தடுமாறி நிற்கின்றோம்

காலன் கொடிய தறுகண்ணாளன் எம் புலவர்

ஐயாவை தன்னோடழைத்து விட்டான் ஆனாலும்

பொய்யாமுடல் விடுத்துப் புகழுடலைத் தாங்கிவிட்ட

அன்னாரின் பேரிழப்பை ஆற்றுப்படுத்துதற்காய்

ஆற்றப் பல பணிகள் அவரிட்டுச் சென்றுள்ளார்.

நல்ல இலக்கியங்கள் நாமாக்கி அன்னாரின்

வெல்லச் சுவைத்தமிழை மேலும் மெருகூட்டும்

சொல்லழகை இட்ட சுவட்டைத் தொடாந்தென்றும்

மெல்ல வழிநடப்போம் வேறென்ன செய்திடலாம்;

மாறும் யுகத்தின் வரலாறு அப்போது

வாழும் தமிழ் என்றும் வாராது பொய்க்கோலம்

ஐயா அமுதசா கரனாரின் ஆன்மா தன்

மெய்யான சாந்திவழி மேவும் எனக்கூறி

இளவாலை தந்திட்ட ஏந்தல் அமுதையாவின்

மீளாப் பிரிவதனால் வேதனையிலே ஆழ்ந்து

தாளாத் துயரதனைத் தாங்கித் தவித்திருக்கும்

அன்னார் குடும்பத்தார் அனைவருக்கும் லண்டனுறு

வேலன் இலக்கிய வட்டத்தினர் நாங்கள்

ஆழ்ந்த அனுதாபம் கூறி அமைகின்றோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.