பொடியன்களை விட்டு நாம் வெளியேறப்போவதில்லை - யாழ் மக்கள்
இராணுவமும் பொலீஸாரும் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். அவர்களை ஊக்குவிக்கும் முகமாக "இராணுவத்தினருக்கு உதவுவோம்" எனும் பெயரில் நிதிச் சேகரிப்பு நிகழ்வினையும் தேசியப் பாதுகாப்பு நிதியத்தையும் ஆரம்பித்துவைத்தார் லலித்.பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க நாட்டு மக்கள் அனைவரும் முப்படைகளுக்கு தாராள மனது கொண்டு உதவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பணத்திற்கு மேலதிகமாக மழைக்காலத்தில் பாவிக்கும் ரெயின்கோட்கள், தண்ணீர்ப் போத்தல்கள், கட்டில்கள், நீர்க் கொல்கலன்கள், அலவாங்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், அலுமீனியத்தால் உருவாக்கப்பட்ட ஏணிகள், மின் சுவிட்சுக்கள், கைப்பந்து மற்றும் ஏனைய விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றையும் பொதுமக்கள் இராணுவத்தினருக்குக் கொடுத்து உதவிட முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
லலித் அதுலத் முதலியின் தேசியப் பாதுகாப்பு நிதிக்கு நிகரான ஒரு நிதியத்தை பிரபாகரனும் ஆரம்பித்தார். அதற்கு தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதியம் என்று அவர் பெயரிட்டார். தமிழ் மக்களுக்கென்று தனியான வேண்டுகோள் ஒன்றினையும் பிரபாகரன் வெளியிட்டார்,
தலைவர் - 1980 களில்
"தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் நிற்கிறோம்.
ஒடுக்குமுறைகொண்ட இராணுவ ஆட்சி தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் அழித்துவிட அரசாங்கம் முயல்கிறது.
ஆனால், அடக்குமுறைகள் வெற்றிபெற்றதாக வரலாறுகள் உலகில் எப்பக்கத்திலும் இருந்ததில்லை. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களின் எழுச்சியை அடக்குமுறை மேலும் மேலும் உரமாக்கிவிடவே உதவும். சுதந்திரத்திற்கான மக்களின் அவாவையும் அடக்குமுறை ஊக்குவிக்கும். சுதந்திர எழுச்சிக்கான மக்களின் மனவுணர்வையும் அடக்குமுறை புத்துயிர் பெறச் செய்யும்.
எமது ஆயுத ரீதியிலான போர் முன்னெடுப்புக்களை அரசாங்கம் முகம்கொடுக்க முடியாது திணறுவது தெரிகிறது. ஆகவேதான் தனது கோபத்தை அப்பாவித் தமிழ் மக்கள் மீது அது காட்டுகிறது.
தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அட்டூழியங்கள் ஊடாக தமிழ் மக்கள், போராளிகளை வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிடலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது.அரசாங்கத்தின் இச்சூழ்ச்சிகளை நாம் அறியாதவர்கள் அல்ல. இராணுவம் மக்களைத் தாக்குகிறது என்பதற்காக எமது விடுதலைப் போராட்டத்தை பிற்போடுவது விவேகமானதாக இருக்காது.
தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் தமிழ் மக்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசாங்கம் நினைப்பதைத் தவறு என்று நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களின் இராணுவத்தை நாம் தொடர்ச்சியான போர் ஒன்றிற்குள் வைத்திருக்க வேண்டும். இராணுவத்தை அவர்களின் முகாம்களுக்குள்ளேயே நாம் முடக்கி வைத்திருக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் நாம் தனியாக நிற்கவில்லை. தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் எமக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய மக்களின் அனுதாபமும் எம்பக்கம் இருக்கிறது. ஆனால், எம்மீது போடப்பட்டிருக்கும் அடக்குமுறை விலங்கினை நாமே உடைத்தெறிய வேண்டும், அதற்காக நாம் தொடர்ந்தும் போராட வேண்டும்.
இழப்புக்கள் இல்லாது எம்மால் எமக்கான விடுதலையினைப் பெற்றெடுக்க முடியாது. தியாகங்கள் இன்றி விடுதலை கிடைக்கப்பெற்றதாகச் சரித்திரங்கள் இல்லை. சுதந்திரம் கொண்ட , பாதுகாப்பான வாழ்வினை நாம் வாழவேண்டுமானால் நாம் தியாகங்களைப் புரிவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்".
பிரபாகரனின் இந்தக் கோரிக்கை உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் மனங்களை வென்றது. அது அவர் எதிர்பார்த்த நிதியினையும் அவருக்கு வழங்கியது.
யாழ்ப்பாணத்தின் இன்னும் வசித்துவரும் எனது நெருங்கிய உறவுகளை கொழும்பிற்கு வந்துவிடுமாறு அழைக்க நானும் மனைவியும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றோம். நாவற்குழி இராணுவ முகாமிலிருந்து ஏவப்படும் எறிகணைகள் எமது வீட்டுப் பகுதிக்குள்ளும் வந்து விழலாம் என்கிற சாத்தியம் இருந்ததனால் நாம் அஞ்சினோம். முதலில் இதுகுறித்து எனது தந்தையுடனும் மாமியாரோடும் பேசலாம் என்று நினைத்தோம். நாம் இதுகுறித்து தந்தையிடம் கேட்டபோது, "பொடியளை விட்டு விட்டு எங்களை ஓடச் சொல்கிறாயா? நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நாம் அனைவரும் இதுகுறித்துப் பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம். நாம் அவர்களுடன் தான் இருக்கப்போகிறோம்" என்று அவர் கூறினார். எனது மாமியாருடன் பேசும்போதும், "பொடியன்கள் எங்களுக்காகச் சண்டை பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களுடனேயே இருக்கப்போகிறோம்" என்று அவரும் கூறிவிட்டார். அவர்கள் இருவரும் அப்போதுதான் எழுபது வயதைக் கடந்திருந்தார்கள்.
எனது தங்கையும், மனைவியின் தங்கையும் அதே முடிவில் உறுதியாக இருந்தார்கள். பிள்ளைகளும் தான். எவருக்குமே யாழ்ப்பாணத்தையும், பொடியன்களையும் விட்டு விட்டுத் தப்பியோட விருப்பம் இருக்கவில்லை.
நாவற்குழி முகாமையும் எமது கிராமத்தையும் பிரிக்கும் வயல்வெளிக்குச் சென்றேன். தூரத்தில் வரிசையாக அமைக்கப்பட்ட காப்பரண்களை என்னால் காண முடிந்தது. முகாமைச் சுற்றிப் போராளிகள் இந்தக் காப்பரண்களை அமைத்து வைத்திருந்ததுடன், முகாமை எப்போதும் தமது கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். ஒரு போராளி என்னுடன் பேசுகையில், "நாங்கள் முகாமைச் சுற்றி வளைத்திருக்கிறோம். அதனைச் சுற்றிக் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறோம். இராணுவத்தினர் வெளியே வரமுடியாது" என்று கூறினார்.
நான் அவர்களுடன் அப்பகுதியில் நெடுநேரம் நின்றிருந்தேன். உலங்கு வானூர்திகள் மூலம் உள்ளே அடைபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு பொருட்கள் இறக்கப்படுவது தெரிந்தது. அப்போராளி என்னுடன் தொடர்ந்தும் பேசுகையில், "யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தை முடக்கும் நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம்" என்றும் கூறினார்.
போராளிகளின் மனோதிடத்தையும், எனது உறவினர்களின் உறுதியையும் கண்ட நாங்கள் நம்பிக்கையுடன் மீளவும் கொழும்பு திரும்பினோம்.
மக்கள் போராளிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது தெரிந்தது, குறிப்பாக புலிகளுடன் அவர்கள் மிகவும் நெருக்கமாகக் காணப்பட்டார்கள். போராளிகளும் சிறிது சிறிதாக பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்திருந்தார்கள்.
மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலேயே நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டவற்றை எனது சிங்கள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். லேக் ஹவுஸ் ஸ்த்தாபனத்தின் மூத்த ஆசிரியரான மேர்வின் சில்வாவும் அவர்களுள் ஒருவர். அவர் என்னுடன் பேசும்போது, "சபா, இதுகுறித்து இங்கு எவருடனும் பேசாதீர்கள். இதைக் கேட்கும் மனோநிலையில் எவரும் இங்கு இல்லை. இராணுவ ரீதியில் தாம் வென்று வருவதாகவே இங்கு அனைவரும் நினைக்கிறார்கள். எங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் பயிற்சியையும் வெளிநாடுகள் வழங்குகின்றன, ஆகவே நாம் வெல்வது உறுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். அவர் மட்டுமல்ல, இங்கே பொதுவாக அனைத்துச் சிங்களவர்களும் அதையே நம்பினார்கள்.
இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர், அனுபவம் அற்றை ரஜீவ் காந்தி அரியணை ஏறியிருக்கும் நிலையில், அரசியலில் சாணக்கியமும், சூட்சுமமும் நிறைந்த ஜெயவர்த்தனவும் அவரது வலதுகரமாகச் செயற்பட்ட லலித் அதுலத் முதலியும் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து எப்படியாவது இராணுவ ரீதியில் தமிழ்மக்களின் கோரிக்கைகளையும் அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டனர்.
மார்கழி 26 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டினை முற்றாக நிறுத்திவிடுவது என்று பாராளுமன்றம் முடிவெடுத்தது. பாராளுமன்றத்தின் இம்முடிவினை லலித் அதுலத் முதலி அறிவித்த செய்தியாளர் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இதுகுறித்து நான் வெளியிட்ட செய்தியின் முதலாவது வசனம் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அச்செய்தி வெளியாகியிருந்தது,
அரசியல் தீர்வொன்றைக் காணவே அரசு விரும்புகிறது. ஆனால் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிடுவதென்பது அதனைக் காட்டிலும் மிக முக்கியமானது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மனமுடைந்து போயினர். இது குறித்து அமிர்தலிங்கத்தின் கருத்தினையறிய நான் சென்றவேளை அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அரசியல் அரங்கிலிருந்து மிதவாதிகள் முற்றாக அகற்றப்பட்டுவிட்டார்கள் என்பதை அவர் நன்கு அறிந்துகொண்டார். மிதவாதிகளை சிங்கள அரசியல்வாதிகள் கைவிட்டு விட்டார்கள் என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் முன்னால் தம்மால் போகமுடியாது ஆகிவிட்டது என்று அவர் என்னிடம் கூறினார்.
அன்டன் பாலசிங்கம்
பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டே அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசமுடியும் என்று லலித் அறிவித்ததையடுத்து புலிகளும் தமது பதிலினை சென்னையில் அறிவித்தனர். அவர்களின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு தெரிவித்தார்,
"தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இராணுவ வழியில் வழங்கவே அரசாங்கம் உறுதிபூண்டிருப்பது தெரிகிறது. இதுதான் அவர்களுக்குத் தேவையென்றால், நாமும் அதற்கான பதிலை இராணுவ வழியிலேயே வழங்க ஆவலாக இருக்கிறோம். எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை எமது நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்துவோம்".
1984 இல் பலமான இராணுவக் கட்டமைப்பொன்றினை உருவாக்குவதன் மூலம் தமிழருக்கான தனிநாட்டினை உருவாக்கிவிட பிரபாகரன் உறுதிபூண்டபோது அவருடன் கூடவிருந்தவர் என்கிற வகையில் இராணுவ ரீதியில் இராணுவத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை பாலசிங்கம் முழுவதுமாக நம்பினார். இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏறத்தாள 75 வீதமான நிலப்பரப்பினைத் தமது கட்டுப்பாட்டில் புலிகளால் வைத்திருக்க முடிகிறதென்றால் அவர்கள் 1984 இல் இட்ட உறுதியான அடித்தளத்தினாலேயே இது சாத்தியமானது என்றால் அது மிகையில்லை (2005 இன் படி).