1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.
தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார்.
2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன?
சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும்.
தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன?
4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா?
இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச் சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி.
5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது.
அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா?
இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்?
6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ" என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.