******************************************************************************************************************************************ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவளித்து, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கெதிராக வாக்களித்தமைக்காக சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கையின் புதிய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத்
********************************************************************************************************************
26, பபுரட்டாதி 2024
https://www.tamilguardian.com/content/new-sri-lankan-foreign-ministers-first-remarks-thank-saudi-arabia-combatting-un-resolutions
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவளித்து, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருகின்றமைக்காக சவுதி அரேபியாவிற்கு தனது அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவித்ததன் ஊடாக வெளிவிவகார அமைச்சராக தனது முதலாவது கடைமையினை ஆற்றியிருக்கிறார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மிக முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் விஜித்த ஹேரத், தான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சற்று நேரத்தின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற சவுதி அரேபியாவின் தேசிய நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த நன்றியைத் தெரிவித்திருந்தார்.
"ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சவுதி அரேபியாவிற்கு நன்றி கூற இத்தருணத்தை நான் பாவிக்க விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார்.
தற்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அங்கு இலங்கைக்கெதிரான புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவிருப்பதாக அறியவருகின்றது. இதுவரை இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட மனிதவுரிமைச் சபைத் தீர்மானங்களில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக்கொண்டு, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக போர்க்குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், கடந்தகால அரசாங்கங்கள் இவற்றில் எதுவித அக்கறையும் கொள்ளாது நிராகரித்தே வந்திருக்கின்றன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னள் இராணுவத் தளபதியும், இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தவரும், இதனாலேயே அமெரிக்காவிற்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவருமான சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா இவரது பயணத்தடை குறித்து அறிவிக்கும்போது, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலைகள் மற்றும் பாரிய மனிதவுரிமை மீறல்களில் கட்டளைத் தளபதி என்கிற ரீதியில் சவேந்திர சில்வா நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஊடாக உறுதிப்படுத்தியிருப்பதால் இவரை எமது நாட்டிற்குள் வர நாம் தடை விதிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது.
தமிழ் மக்கள் மீதான மிகக்கொடூரமான இலங்கை அரசாங்கத்தின் இறுதி யுத்தத்தின்போது படுகொலைகளுக்குப் பெயர்பெற்ற 58 ஆவது படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். 2009 ஆம் ஆண்டின் தமிழ் இனக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளில் இவரது படைப்பிரிவும் நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. இவரும் இவரைப்போன்ற ஏனைய சிங்கள இராணுவத் தளபதிகளும் வைத்தியசாலைகள் மீதான இலக்குவைத்த தாக்குதல்கள், பரந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள், சரணடைந்தவர்களை சகட்டுமேனிக்குச் சுட்டுப் படுகொலை செய்தல் போன்ற பாரிய மனிதவுரிமை மீறல்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு குறிப்பு :
நாட்காட்டி, திகதியின் பிரகாரம் பதிவிடப்படுகின்றபோதிலும் அவ்வப்போது தற்போது நடந்துவரும் விடயங்களை ஆங்காங்கே இணைப்பதனால் வாசகர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி!