குரந்தன் ஐய்யனார் ஆலயத்தை சிங்கள பெளத்த விகாரையாக்க ஒன்றுசேர்ந்த சிறில் மத்தியூ, முல்லைத்தீவு இராணுவம் மற்றும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை நிர்வாகம் - சட்டர்டே ரிவியூ கட்டுரை
சிங்கள பெளத்த இனவாதிகளின் திட்டத்தினை தமிழர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். சிங்கள அரசுகளால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த சிங்கள பெளத்த மயமாக்கலினை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இயலாமையும், ஆத்திரமும் அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. 1982 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிக்கையான சட்டர்டே ரிவியூ வில் வெளிவந்த கட்டுரை ஒன்றினை இங்கு பதிகிறேன். சைவத் தமிழர்களின் கவலைகள் இக்கட்டுரையில் பரவிக் கிடந்தது. பிரபாகரன் சிங்கள பெளத்த மயமாக்கலினை எதிர்க்கத் துணிந்தபோது தமிழர்கள் அவரின் பின்னால் நின்று ஆதரவளிக்கத் தொடங்கினர்.
"தமிழர்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குரந்தன் மலைப் பகுதி மிகவும் அமைதியான ஒரு பிரதேசம். இங்கே சைவ மற்றும் பெளத்த மதத்தின் புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன. ஆனால் வெகுவிரைவில் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சினால் இப்பகுதி தனியே சிங்கள பெளத்தர்களுக்கான ஏக வணக்கஸ்த்தலமாகவும், ஒரு சிங்களக் குடியேற்றமாகவும் மாற்றப்படப் போகின்றது".
"இவ்வமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் முன்னாள் பொதுக் கூட்டுத்தாபன நிர்வாக அதிகாரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் பலம்பொருந்திய தொழிற்சங்கத்தின் தலைவருமான முக்கியஸ்த்தர் ஒருவர், இச்சிங்கள மயமாக்கல்த் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறார். அவருக்குத் துணையாக பெருமளவு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு வருகின்றனர்".
"இப்பகுதியில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருக்கும் ஓட்டுத் தொழிற்சாலையில் பணிபுரியும் பல பணியாளர்கள் இப்புதிய விகாரை நிர்மானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வமைச்சின் கீழ் வழங்கப்படுள்ள பல வாகனங்களும், ஏனைய வளங்களும் விகாரை நிர்மாணத்திற்கு அமைச்சால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன".
"கடந்த கார்த்திகை மாதத்திலிருந்து இப்பகுதியில் காணப்பட்டு வந்த பல சைவ ஆலயங்களின் எச்சங்களை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றி தமது வாகனங்களில் ஏற்றிச் செல்வதை இப்பகுதி மக்கள் பார்த்திருக்கின்றனர். வன்னிப்பகுதித் தமிழர்களால் தமது குலதெய்வம் என்று வணங்கப்பட்டு வரும் குரந்தூர் ஐய்யனார் ஆலயம் அமைந்திருக்கும் குரந்தன் மலைப்பகுதி, நாகஞ்சோலை எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் விகாரைக் கட்டுமானப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அருகிலிருக்கும் ஓட்டுத்தொழிற்சாலையில் பணிபுரியும் பல ஊழியர்கள் இக்கட்டுமானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விகாரை அமைக்கும் பணிகளை மிகவும் இரகசியமாகப் பேணிவரும் அரசு, இதுகுறித்து தகவல்கள் வெளியே கசிவதையும் தடுத்து வருகிறது".
"இதனையடுத்து இப்பகுதியில் வாழும் தமிழர்கள் சிலர் விகாரை கட்டுமானம் நடக்கும் பகுதியில் சைவர்களின் சூலம் ஒன்றினை நாட்டி, அதனைச் சூழ குடில் ஒன்றினையும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றிக்கொண்டு, விகாரை கட்டுமானத்திலும் பங்கெடுக்கும் இராணுவத்தினர், அச்சூலத்தை பிடுங்கி எறிந்துள்ளதுடன், குடிலையும் அழித்திருக்கிறார்கள். மேலும் இப்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்களை இராணுவம் அடித்து விரட்டியுள்ளதுடன், பல தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்து இழுத்துச் சென்றிருக்கின்றது. அத்துடன், வனப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இவ்விகாரைக்கான கட்டுமானப் பொருட்களை இலகுவாக எடுத்துச் செல்லும் நோக்கில் ஒட்டுசுட்டானிலிருந்து விகாரை அமைக்கப்பட்டு வரும் நாகஞ்சோலை வனப்பகுதி வரைக்கும் புதிய தார் வீதியொன்றும் அரசால் இடப்பட்டு வருகிறது".
“தமிழரின் தாயகமான இப்பகுதியில் சிங்கள பெளத்தர்களுக்கென்று ஏகமாகக் கட்டப்பட்டு வரும் விகாரையின் மூலம் மூன்று முக்கிய விடயங்களை கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு செய்துவருகிறது.
1. இப்பகுதியில் காணப்பட்டு வந்த வரலாற்றுச் சான்றுகளை முழுமையாக அழித்தன் ஊடாக வரலாற்றினைக் கண்டறிய எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து முகாந்திரங்களையும் அடியோடு இல்லாதொழித்திருக்கிறது.
2. இப்பகுதியில் சரித்திர காலம் தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் புதிய சிங்களக் குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
3. இங்கு காணப்பட்ட சைவ ஆலயங்களின் எச்சங்கள் முற்றிலுமாக பிடுங்கி எடுக்கப்பட்டு, பத்திரமாக அகற்றப்பட்டு, இப்பகுதியில் சைவர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியங்கள் அடியோடு இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் இவை எல்லாவற்றினைக் காட்டிலும் மிகுந்த அச்சந்தரும் செயற்பாடொன்று நடப்பில் இருக்கும் அரசின் கீழ் மிக மூர்க்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதுதான் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழரின் இருப்பிற்கான தொடர்ச்சி பாரிய திட்டமொன்றின் ஊடாக சிதைக்கப்பட்டு வருகின்றமை".
"வவுனியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் பதவியா சிங்கள் குடியேற்றம் கிழக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு கொக்கிளாய்க் குளம் நோக்கி விரிவடைந்து வருகிறது. இப்பகுதியில் இருந்து வட கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு இராணுவ முகாம் மற்றும் வட மேற்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஒட்டுசுட்டான் தொழிற்சாலை ஆகிய இரு பிரதான அரச அமைப்புக்களின் அழுத்தங்களினால், அண்மைய காலங்களில் தமிழர் தாயகத்தின் ஏனைய இடங்களில் நடைபெற்றதைப் போன்று, பதவியாவில் பொங்கிவழியும் சிங்களவர்களின் எண்ணிக்கை இப்பகுதிவரை நீட்டிப் பரவப்படப்போகின்றது என்பது நிதர்சனமாகிறது".
"இது நடக்கும் பட்சத்தில் இம்மூன்று மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களுக்கிடையிலான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்படப் போகின்றது. இது தனியே தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டுவிடும் என்பதற்கு அப்பால், இப்பகுதிகளில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் திராணியும் இப்பகுதிவாழ் தமிழர்களிடத்தில் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது".
என்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.