முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.
இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன்.
மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன.
சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன்.
ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள்.
நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது.
இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே.
தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு. அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே.
பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன்.
சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன்.