அண்ணை. உண்மையில் இந்த “அமல் படுத்துடா தீர்வை” கோரிக்கைக்கு நான் மேலே இரு தரம் பதில் எழுதிவிட்டேன். மூன்றாவது தடவையாக: பிக்குகளும், பாராளுமன்றமும், இந்தியாவின் குறை அதிகாரப்பகிர்வும், இந்திய மத்திய அரசின் எதிர்ப்பும் இருக்கும் வரை - இலங்கையில் சிங்களவர் எமக்கு நியாயமான தீர்வை தரமாட்டார்கள். இது கனம் கந்தையா அண்ணை மட்டும் கண்டு பிடித்த விடயம் அல்ல. 99% சதவீதமான இலங்கை தமிழர் ஏற்று கொள்ளும் கள யதார்த்தம். நானே அண்மையில் என் பி பி வெற்றியில் பல யாழ் உறவுகள் குதூகலித்த போதும், இதற்கு முன் பல தடவையும் இதை எழுதியுள்ளேன். ஆனால் இதுதான் யதார்த்தம் என்பதால் -வட்டுகோட்டை தீர்மானத்தை தலைக்கு வைத்து படுக்கவில்லை. திம்பு கோரிக்கையை போர்த்தி படுக்கவில்லை. 87 உடன்படிக்கையை ஏற்றுகொள்கிறோம் என அறிவிக்காமல் விடவில்லை. மங்கள முனசிங்க தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் அளிக்காமல் விடவில்லை: பிரேமதாச, சந்திரிக்கா, ரணில் உடன் தனியே யுத்த தவிர்ப்பு மட்டும் அல்ல, சமாதான பேச்சுவார்த்தையும் கூட பேசாமல் விடவில்லை. ஓஸ்லோ பிரகடனத்தை ஏற்று கொள்ளாமல் விடவில்லை. இலங்கையில் பிக்குகள் தீர்வை தரமாட்டார்கள் என்பதால் இவற்றை எதையும் முயலாமல் விடவில்லை. அதே போல் இன்னொரு முயற்சிதான் நீலன் பங்களித்த தீர்வு திட்டமும். புலிகளை தவிர ஏனைய அனைத்து ஈழத்தமிழர் அமைப்புகளும் தனி நாட்டு கோரிக்கையை கைவிட தயாராகவே இருந்தார்கள். அல்லது கைவிட்டார்கள். புலிகள் கூட 87 இலும், 2002-2007 வரையான காலத்திலும் கைவிட்டார்கள், அல்லது கைவிட்டதாக போக்கு காட்டினார்கள். பாலா அண்ணை இதை கைவிட வேண்டிய காலம் வந்து விட்டது என்பதை தலைவருக்கு சொன்னார் எனவும், அதனாலேயே அவர் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் படி பணிக்கப்பட்டார் என்றும் யாழில் சில கட்டுரைகளை வாசித்தும் உள்ளோம். ஆகவே நீலன் எழுத உதவிய தீர்வு திட்டம், ஒன்றும் தமிழர் தரப்பு இதுவரை ஏற்க மறுத்த விடயம் அல்ல. அப்படி ஒரு திட்டத்தை எழுத உதவியதால் தமிழர் போராட்டத்தின் கற்பு ஒன்றும் களங்கப்படவும் இல்லை. ஒரே விடயத்தை நீலன் முன்வைத்தால் அது விடுதலை போராட்டத்துக்கு செய்யும் துரோகம். அதையே புலிகள் ஒஸ்லோவில் உடன்பட்டால் அது யதார்த்தத்தை புரிந்துகொண்டு அரசியல் செய்தல் என நீங்கள் வியாக்கியானப்படுத்த விழைவது, தர்க்க கேடானது. பிகு கொஞ்சம் தலைப்பில் இருந்து விலகி. தமிழர் அரசியல் அபிலாசைகளை வட்டு கோட்டை பிரகடனத்தின் முன், வட்டு கோட்டை பிரகடனத்தின் பின் என பிரியுங்கள். வ.கோ.பி.மு நாம் கோரி நின்றது - எம்மை சம இலங்கையராக நடந்துங்கள், இன ஒதுக்கலை கைவிடுங்கள், இன வன்முறையை தவிருங்கள், மொழிக்கு சம அந்தஸ்து கொடுங்கள் - இவைதான். 50:50 காலம், பின் தனி சிங்கள காலம் அனைத்திலும் இவைதான் எமது கோரிக்க்கைகள். அப்போதைய எமது கோரிக்கைகள், இந்திய மாநிலங்களை ஒத்த அதிகாரபகிர்வு என்பது கூட இல்லை, இணைந்த வடகிழக்கு மாகாண சபை கூட இல்லை. பின்னாளில் ஜே ஆர் தர முனைந்த மாவட்ட சபைக்கு நிகரான. ஒற்றையாட்சி இலங்கைக்குள் சம பிரசைகளாக நடத்துங்கள், பிராந்திய சபைகளை தாருங்கள் என்பதே பண்டா-செல்வா ஒப்பந்த அடிப்படை. வ.கோ.பி.பி தான் தனிநாடு என்ற கோரிக்கை, சுயநிர்ணயம், பாரம்பரிய வாழிடம், காணி அதிகாரம், குடியேற்றத்தை தடுத்தல், பொலீஸ் அதிகாரம் என எமது அபிலாசைகள் அடுத்த கட்டதுக்கு போனது. அதன் வழி வந்ததுதான் திம்பு கோட்பாடுகள். ஏன் நாம் முதல் கட்ட அபிலாசைகளில் இருந்து இரெண்டாம் கட்ட அபிலாசைக்கு போனோம்? முதல் கட்ட அபிலாசைகளை கூட இலங்கை எமக்கு தராது என்பதால். ஆனால் நீலன் காலத்தில் அரச கருமமொழி பிரச்சனை ஒழிந்து விட்டது. சிறி இல்லை. எமது பழைய கோரிக்கைகளையும், திம்பு கோரிக்கையாக உருவெடுத்து நிற்கும் எமது புதிய அபிலாசைகளையும் பலன்ஸ் பண்ணி, மண்டேலாவை விட அதிக சதவீத வாக்கில் வென்ற சந்திரிக்காவுக்கு சிங்களவர் மத்தியில் இருந்த நன்மதிப்பையும் பயன்படுத்தி, சிங்கள மக்களும் ஏற்கும் ஒரு தீர்வை பெறலாம் என்று நீலன் முயன்றிருக்கலாம். நீலனின் இந்த முயற்சியை பிக்குகளும், புலிகளும் அனுசரித்து நடந்து - அதை அமல்படுத்த ஒரு வெளியை உருவாக்கி இருந்தால் - இன்று ஜேவிபி உருவாக்கி விட்டதாக சொல்லும் ஒப்பீட்டளவில் இன ஒதுக்கல் அற்ற இலங்கை அன்றே உருவாகி இருக்கவும் கூடும். 1995 க்கு பின் இழக்கப்பட்ட அத்தனையையும் இழக்காது தவிர்த்திருக்கலாம். இது இப்படித்தான் நடந்திருக்கும் என நான் சொல்லவில்லை. பொருளாதார சிதைவுக்கு பின் சிங்கள கூட்டு மனோநிலை மாறியது போல் 1995 இல் நிலமை இருக்கவில்லை. ஆனால் - மாறும், மாற்றலாம், வெளிநாட்டு அளுத்தத்தை தகுந்த முறையில் பயன்படுத்தலாம் என நினைத்து ஒரு மனிதன் ஒரு திட்டத்தை தயாரிக்க உதவுவது அப்படி ஒண்டும் பாரிய குற்றம் இல்லை.