இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை நெல்லியடியில், மகாவித்தியாலய வீதியில் அலுவலகம் அமைத்திருந்தார்கள். நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது. வன்னியிலோ நிலைமை வேறாக இருந்தது. இயக்க உயர் தளபதிகளின் குடும்பங்களுக்கு எப்போதுமே இருந்திராத சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. பலருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன, தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைத்தது. புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களால் பல பரிசுகளும் கிடைத்தது. மிக நீண்ட வருடங்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் கிடைத்தது. தலைவர் வைக்கும் கிழமை கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. தலைவருக்கும், வரும் புலம்பெயர் முக்கியஸ்தர்களுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் செலவிடவே நேரம் போதவில்லை. இந்த கால கட்டத்தில் தான் KP இடம் இருந்து வெளிநாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் ஒரு கிரேனைட் ஐக்கூட வன்னிக்குள் கொண்டு சென்று இறக்க முடியவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்தும் எல்லாமே மூழ்கடிக்கப்பட்டன. பலர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் வலையில் சிக்கினார்கள். வெளிநாடுகளை வெட்டி ஓடிக்கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு இது எப்படி போகப்போகிறது என தெரிந்திருந்தது. ஒரு கட்ட சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர் சமஸ்டிக்கு ஓம் என்று போட்டு வந்த பின்னரே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வனால் பாலசிங்கத்தார் போல செயற்பட முடியவில்லை. இதே காலத்தில் கருணாவின் பிரிவும் தொடங்கி இயக்கத்தை கூறு போட்டது. பல சண்டைகளில் துணிந்து முன்னேறி அடித்து நொறுக்கும் ஜெயந்தன் படையணி பல பாகங்களாக உடைந்தது. பால்றாஜ் அண்ணையையும் புற்றுநோய் கொண்டு போனது. யாழ்மாவட்டத்தில் இருந்த போராளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். கிளைமோர், கிரேனைட், பிஸ்டல் என பல விடயங்களை உயர்தர மாணவர்களை கொண்டே செய்வித்தார்கள். ஹாட்லி காம்ப் கூட இப்படியான விதத்திலே அடித்து உடைக்கப்பட்டது. தேவையே இல்லாத ஆணியான மாவிலாறை மூடி அவர்களுக்கு கொஞ்சமும் வசதியற்ற தொப்பிகல காட்டிலே சண்டையை ஆரம்பித்து ஆரம்பத்திலேயே பின்வாங்கத் தொடங்கினார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் முடியுமட்டும் இது நிக்கவில்லை. பல அரசியல் கொலைகள், தெற்குப் பகுதி தற்கொலைத் தாக்குதல்கள் குறிப்பாக 2006 இல் கதிர்காமரின் சினைப்பர் சூடு போன்றவை சர்வதேசத்திடம் இருந்து வந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. இயக்கமோ, சர்வதேசம் உதவும், ஏதாவது ஒரு நாடு தலையிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் உறுதியான சர்தேச உறவுகளை வளர்க்க தவறி விட்டார்கள். ஆயுத ரீதியில் தங்களை கட்டமைத்தது போல அரசியல் ரீதியில் வளர்க்கவே இல்லை. இருபது வயது இளைஜன் பத்து வயசு பிள்ளையின் உள வளர்ச்சியுடன் இருப்பது போன்ற நிலை. 9/11 பின்னர் மாறி விட்ட பூகோள அரசியல் ஆயுத நிலைமைகளை தலைவர் சரியாக எடை போட்டிருக்கவில்லை. தொழில் நுட்ப ரீதியில் அவர்களின் வளர்ச்சி இலங்கை அரசின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதிக் காலங்களில் கட்டாய ஆட் சேர்ப்பு, வரிகள் போன்ற காரணங்களால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனார்கள். மகிந்தவிடம் மிகப்பெரும் தொகை பணத்தை வாங்கி ரணிலை புறக்கணித்தார்கள். ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்.