மொத்தமாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அரைப்பங்கினர். மிகுதி அரைப்பங்கினர் சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் சிறிது குறைவு. இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சரியாக வரவில்லை என்று நினைக்கின்றேன். 'அகதி முகாம்' என்ற சொல்லைத் தவிர்த்து, அவற்றை அரசு வழங்கும் குடியிருப்புகள் என்று எழுதுகின்றேன். வெளியே வீடுகளில் வசிப்பவர்கள் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் புலம் பெயர்ந்து மேற்குப் பக்கமாகச் சென்ற அவர்களின் உறவுகளிடமிருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் சுயமாக தொழிலும் செய்கின்றனர். இவர்களில் பலர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் கல்வி, திருமணம், சில வேலை வாய்ப்புகள் என்று தமிழக மக்களுடன் சிறிது சிறிதாக கலந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள். அரச குடியிருப்புகளில் இருப்பவர்களில் பல மாவட்டக்காரர்கள் இருந்தாலும், மன்னார், முல்லைத்தீவு அடங்கலாக வன்னி மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். இவர்கள் தமிழ்நாட்டு அரசிலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றனர். பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, அதற்குள்ளேயே வளர்கின்றார்கள். மிகக்குறைவானவர்களே உயர்கல்விக்கு போகின்றார்கள். தமிழ்நாட்டில் அரச ஆதரவுடன் தங்கி இருப்பவர்களை புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இலங்கையில் மீளக் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரங்களையும் உருவாக்கலாம் என்ற யோசனை இடைக்கிடையே பல குழுமங்களிலும் பகிரப்படுவதுண்டு. ஆனால் ஏற்கனவே இலங்கையில் நாளாந்த வாழ்வே போராட்டமாக இருக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி இங்கு பொருத்தமானது என்று நினைக்கின்றேன். இந்த மக்களில் ஒரு பகுதியினர் போராளிகள். அவர்கள் தங்களை 'முன்னாள் போராளிகள்' என்று சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை என்றுமே போராளிகள் என்று சொல்வது மிகச்சரியே. இந்தப் போராளிகளின் வாழ்க்கைகளை புலம்பெயர் தமிழர்களால், இத்தனை வருடங்கள் ஆன பின்னும், பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. முக்கியமாக பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள போராளிகள். 'பெண் போராளிகளை நோக்கிய எங்கள் சமூகத்தின் உளச்சிக்கல்...............' என்பது போன்ற தலைப்பில் சிலர் எழுதியும் விட்டார்கள். இதே போன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்று ஒற்றைத் தலைமையில், பெரும்பாலும் பெண் தலைமையில், இருக்கும் குடும்பங்கள். பதினாறு வருடங்களில் எவ்வளவை எங்களால் மாற்ற முடிந்தது. இதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மக்களை இலங்கையில் மீளக் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக இருக்கின்றது. ஊர்ச் சங்கங்கள், நலன்புரிச் சங்கள், அமைப்புகள், அன்புநெறிகள், மனிதநேயங்கள், ஐஎம்எச்ஓ,......... என்று நூற்றுக் கணக்கானவை இருக்கின்றன. இந்த அமைப்புகள் உதவிகளும் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் கடலில் விழுந்த துளிகள் போலவே இவை போய்க் கொண்டிருக்கின்றன. கடல் அப்படியே கரித்துக் கொண்டே இருக்கின்றது. ஒரு அரசுக்கு நிகரான ஒரு அமைப்பு வேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தால் கூட, அந்த அமைப்பின் முதலாவது கடமையாக, செயற்பாடாக இலங்கையிலேயே இன்றும் இருக்கும் மக்களே அமைவார்கள். வேறு சில தகவல்கள்: தமிழ்நாட்டுக்கு 2009ம் ஆண்டின் பின் தான் எம் மக்கள் போனார்கள் என்றில்லை. பெரும்பாலான எம்மக்கள் 90ம் ஆண்டுகளிலேயேயும், அதற்கு முன்னரும் கூட அங்கே போய் விட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடுமையை, அழிப்பை இந்தியா தடுக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகமும், வலியும். ஆனால் ஈழத்தமிழ் மக்கள் அதற்கு பல வருடங்கள் முன்னரேயே தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள். இவை இரண்டும் இணைந்தவை அல்ல. தமிழ்நாட்டு அரச குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சொல்லும் நாங்கள் இன்றும் இலங்கையில் எம் மக்கள் பலர் இருக்கும் இடங்களை போய்ப் பார்க்கவேண்டும். ஒரே ஒரு குடிசையில் தான் ஒரு குடும்பம் இருந்தது. அருகே தோண்டிய பள்ளம் தான் கிணறு............... தமிழ்நாட்டுக்கும், அந்த சிறிய குடியிருப்புகளுக்கும், அவர்கள் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் இலவச அரிசிக்கும் என்றென்றும் நன்றி. இவற்றை இன்று அந்த மக்களுக்கு கொடுப்பதற்கு இந்த உலகில் வேறு எவருமே இல்லை.