Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்ணதாசனின் செப்பு மொழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனின் செப்பு மொழிகள்

1. வசந்த காலத்தில் உன்னைச் சிறையில் வைப்பான். கோடைக் காலத்தில் பாலைவனத்தில் கொண்டு போய் விடுவான். அவனை நீ கோபித்துப் பயனில்லை. கூடவே வைத்துக்கொள். நீ படும் துயரத்தை அவனும் படட்டும்.

2. கொய்யாப் பழத்தைஅறுக்கும் முன்பே, அதற்குள் விதை இருப்பது உனக்கு தெரிய வேண்டும். ஒருவனோடு நன்கு பழகுவதற்கு முன்பே, அவனைப் பற்றி நீ புரிந்து கொண்டு விட வேண்டும்.

3. சிங்கத்தின் நகத்தையும் பல்லையும் பிடுங்கி விட்டுப் பெதடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன்மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்.

4. ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவுதான் .

5. தம்புரா மீட்டுகிறவனுக்கும், ஜால்ரா போடுகிறவனுக்கும் ஸ்வர ஞானம் எதற்கு? எதையும் ஆமோதிப்பவனுக்கோ, எதையும் எதிர்ப்பவனுக்கோ அறிவு எதற்கு?

6. காலை நேரம் எப்படி தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது. விடியும் பொழுதுக்கும், முடியும் பொழுதுக்கும் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்து விடு. எந்த கட்டத்திலும் நீ அழ வேண்டிய அவசியம் இருக்காது.

7. நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்கள் ஆவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித் தருவதில்லை.

8. வாசனைத் திரவியங்களை எவன் அதிகம் பூசிக் கொள்கிறானோ அவன் உடம்பு இயற்கையிலேயே நாற்றமடிக்கிறது என்று பொருள். எவன் அளவுக்கு மீறிச் சுய விளம்பரம் செய்துக் கொள்கிறானோ, அவன் இயற்கையிலேயே தகுதியற்றவன் என்று பொருள்.

9. வேண்டும் வரை தருமம் செய்து, முடிந்த வரை உதவி செய்து, பொறுமை இழக்காது வாழ்ந்தால், நீ சொர்கத்துக்கு போகலாம். ஆனால் சொர்க்கத்தின் வாசலிலும் சைத்தானே நின்று, உன்னை சோதனை இடுவான். அப்போது நீ பொறுமை இழந்தாலும், சொர்க்கம் உனக்குக் கிட்டாமற் போய்விடும்.

10. ஒரு தரம் பெய்த மழையே ஒரு தலைமுறைக்குப் போதுமானதாக இருந்து விடுமானால் ஆண்டவனின் இயக்கதிற்க்கே அர்த்தமில்லாமல் போய் விடும். நீ ஒரு நாள் செய்த நன்மையே வாழ்நாள் முழுவதும் போதுமானதாகி விடுமானால், உன் ஒவ்வொரு நாளுமே வீணான நாளாகி விடும்.

கவிசக்ரவர்த்தி கண்ணதாசன்

செப்பு மொழிகள் 250 என்ற நூலில் இருந்து........

மிகவும் அருமையான பயனுள்ள இணைப்பு மிக்க நன்றிகள் நுணாவிலான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கு.மா அண்ணா, கோமகன்.

1 வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால், அவன் குடும்பம் கூடச்சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் வீழ்ந்து விட்டால், நாய்கள் கூட மிதிக்கிறது. இருக்குமிடமும், இருக்கும் நிலையும் குறைந்த அளவே உள்ளவரை, யானை சவாரிதான் கிடைக்காதே தவிரக் கழுதை சவாரி செய்ய வேண்டிய கட்டாயம் வராது.

2 வீழ்த்தியவன் ஜாக்கிரதையாக இல்லை என்றால், வீழ்ந்தவனுக்குதான் வெற்றி.

3 பலவகை மலர்களை மாலையாகக் கட்டினாலும், சில வண்ண மலர்கள் மட்டுமே எடுப்பாக தெரிகின்றன. இந்திய தேசிய இனங்களில் தமிழர், வங்காளியர், மராட்டியர் ஆகியோர் அவ்வகையினர்.

4 காதல் உன்னதமானதென்று சொன்னவனே முதன் முதலில் அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்.

5 'காமம் விசாரமானது' என்று நீங்கள் வாதடுகிறீர்களா? உங்கள் தாய் அப்படி நினைத்திருந்தால், அந்த வாதமே பிறந்திருக்காதே.

6 சீட்டாட்டத்தில் ராஜாவும், ராணியும் சேர்ந்தால் மட்டும் அது சேர்ந்ததாக கருதப்பட மாட்டாது. கூட ஜாக்கியும் சேர வேண்டும். அதன் பொருளென்ன? ராஜாவும் ராணியும் சேர்வதற்கே ஒரு தரகன் வேண்டி இருக்கிறது என்று பொருள்.

7 கடிகாரம் எப்போது மெதுவாகப் போகிறது? காதலிக்காகக் காத்திருக்கும் போது!

8 தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள்; பரிசு வரப் போகிறது. பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்; தண்டனை வரப் போகிறது. எது வந்தாலும் அமைதியாக இருங்கள்; எதுவுமே வராது.

9 நீங்கள் சொன்ன விஷயம் பொய்யாகி விட்டால், அதற்காக வருந்தாதீர்கள். ஏனென்றால் அதன் மூலம் ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள்.

10 சுவையான சொற்பொழிவு எது? பேசி முடிக்கும் வரை இது பொய்யென்று தெரியாமலிருப்பது!

கவியரசு கண்ணதாசன்

செப்பு மொழிகள் 250 என்ற நூலில் இருந்து ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குதிரை கிடைத்தால் லாகனை மறந்து விடாதீர்கள்

அதிர்ஷ்டம் என்பது என்ன?

இறைவன் உருவாக்கி கொடுக்கும் சந்தர்ப்பம்; அவ்வளவுதான்.

கிடைக்கிற சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்பவனையே அதிர்ஷ்டசாலி என்கிறோம்.

சந்தர்ப்பங்களை தேடி அலைகிறவர்கள் பலர்; அது கிடைக்கவில்லை என்று அவர்கள் வாடுவார்கள். அவர்கள் எல்லாம் மதுரைக்கு போவதாக எண்ணிக் கொண்டு சேலம் ரயிலில் ஏறி உட்கார்ந்தவர்கள்!

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள் பலர். அவர்களெல்லாம் ரயிலை தவற விட்ட பிரயாணிகள்!

சரியான ரயிலுக்கு சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்தவனே, தான் விரும்பிய ஊருக்குப் போய் சேருகிறான்.

சரியான சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவனே, தெய்வத்தின் உதவியோடு முன்னேறுகிறான்.

'எந்த நேரத்தில் எதை செய்தால் சரியாயிருக்கும்' என்ற தெளிந்த அறிவு எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை.

உண்மைதான்.

ஆனால் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் எந்தவிதத் தெளிவும் இல்லாதவர்கள்.

வாய்ப்பு கிடைத்ததாலே, முட்டாள் பணக்காரன் ஆனதுண்டு; வாய்ப்பு கிடைக்காததாலே திறமைசாலி தெருவில் அலைந்ததுண்டு.

'இந்த வாய்ப்பு' என்பது இறைவன் காட்டும் பச்சை விளக்கு.

கொத்தவால் சாவடியில் காய்கறி வாங்கி ஜாம் பஜாரில் கொண்டு போய் விற்றால், ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கும் என்று உனக்கு தெளிவாக தோன்றினால், அதை உடனடியாக செய்து விட வேண்டும்.

அந்த முதல் லாபத்திலேயே உனக்கு இரண்டாவது யோசனை உதயமாகும்.

வியாபாரத்தில் லாபம் வந்தால் அந்த வியாபாரத்தை தொடர்ந்து செய்யலாம்.

ஆனால் சூதாட்டத்தில் லாபம் வந்தால் தொடர்ந்து சூதாட கூடாது.

ஒருவனிடம் கத்தியைக் காட்டி நீ ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டால், அந்த தைரியம் போலீஸ்காரரிடமும் கத்தியைக் காட்டச் சொல்லிப் பிடித்துக்கொடுக்கும்.

சிலர் வியாபாரத்தை சூதாட்டம் போலவும், கொள்ளையடிப்பது போலவும் நடத்துவர். இதை தவிர்க்காவிடில் சர்வ நாசம்தான்.

தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் புத்திசாலி தனமும் வேண்டும்.

சொத்தின் மதிப்பு குறையும் போது அதை வாங்க வேண்டும்.இன்னும் குறையும் என்று எண்ணினால் அது ஏறிவிடவும் கூடும்.

மதிப்பு ஏறினால் அதை விற்று விட வேண்டும்; இன்னும் ஏறும் என்று கருதினால், அது இறங்கி விடவும் கூடும்.

பர்மாவிலும், சைகோனிலும், இலங்கையிலும் எங்கள் நகரத்தார்கள் சொத்துக்களை விற்காமல் கெட்டார்கள். மலேசியாவிலே விற்று கெட்டார்கள்.

கத்தரி செடி காயைத்தான் தரும்; அதிலே குழம்பு வராது.

கைகாட்டி வழியைத்தான் காட்டும். அதுவும் கூட வராது.

தெய்வம் பாதி; திறமை பாதி.

தெய்வம் வாய்ப்பை காட்டுகிறது. திறமை அதை லாபகரமாக்குகிறது.

உன்னிடம் விதை இருக்கலாம்; உரம் இருக்கலாம். வெள்ளம் போல் தண்ணீர் தரும் கிணறும் இருக்கலாம். நிலத்தில் வளம் இல்லை என்றால் அனைத்தும் வீண்.

ஆனால் வளமான நிலம் உன்னிடம் இருந்து விட்டால் மற்ற அனைத்தையும் நீ உருவாக்கி விட முடியும்.

அந்த வளமான நிலமே வாய்ப்பு என்பது.

பாம்பு நஞ்சு நிறைந்தது; வேங்கை பயங்கரமானது; யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்?

ஆனால், அவற்றை ஆட்டி வைக்க கூடிய திறமை சில மனிதர்களிடம் இருக்கிறது.

உங்களாலும், என்னாலும் முடியுமா? அந்த வாய்ப்பும் சிலருக்கே அமைகிறது.

அதனால்தான், வாய்ப்பு என்பது இறைவன் அளிப்பது என்றேன். அதை முறையாக பிடித்துக்கொண்டு முன்னேறுவதை அதிருஷ்டம் என்கிறேன்.

எழுதுவதற்கு பத்திரிக்கைகளோ படங்களோ இல்லை என்றால் நான் யார்?

நான் ஓர் அதிர்ஷ்டக்காரன்.

காரணம் இறைவன் எனக்கு அளித்த வாய்ப்பை மனித யத்தனதால் எவ்வளவு காப்பாற்றிக் கொள்ள முடியுமோ, அவ்வளவு காப்பாற்றிக் கொள்கிறேன்.

ஹிட்லருக்கு கிடைத்த வாய்ப்பு, ஆணவத்தால் அழிந்தது.

சோவியத் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு, திறமையினால் வளர்ந்தது.

வாய்ப்பை தவற விடுபவனே துருதிஷ்டசாலி.

அந்த வாய்ப்பு எல்லோர்க்கும் எப்போது வரும்?

அது முன் கூட்டியே தெரிந்து விட்டால் இறைவனை ஏன் நினைக்கப் போகிறீர்கள்?

கவியரசு கண்ணதாசன்

கடைசிப் பக்கம் என்ற நூலில் இருந்து!

Edited by nunavilan

ஆனால் வளமான நிலம் உன்னிடம் இருந்து விட்டால் மற்ற அனைத்தையும் நீ உருவாக்கி விட முடியும். அந்த வளமான நிலமே வாய்ப்பு என்பது. பாம்பு நஞ்சு நிறைந்தது; வேங்கை பயங்கரமானது; யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்? ஆனால், அவற்றை ஆட்டி வைக்க கூடிய திறமை சில மனிதர்களிடம் இருக்கிறது. உங்களாலும், என்னாலும் முடியுமா? அந்த வாய்ப்பும் சிலருக்கே அமைகிறது. அதனால்தான், வாய்ப்பு என்பது இறைவன் அளிப்பது என்றேன். அதை முறையாக பிடித்துக்கொண்டு முன்னேறுவதை அதிருஷ்டம் என்கிறேன்.

மிக்க நன்றிகள் நுணா .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அருமை ஆனால் இதை சொன்னனால் பழிக்கிறார்கள் :(

கண்ணதாசனின் வரிகள் தத்துவ முத்துக்கள். வாழ்க்கையை அனுபவத்தை வரிகளால் சொன்னவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்

அவர் போதையில் எழுதினாலும்

சரியான பாதையில் தான் எழுதியிருக்கின்றார்

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்

அவர் போதையில் எழுதினாலும்

சரியான பாதையில் தான் எழுதியிருக்கின்றார்

உண்மை வாத்தியார்.

அவர் போதையில் எழுதினாலும் மற்றவர்களைச் சரியான பாதையில் போக எழுதியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு நுணாவிலான், நன்றி பகிர்வுக்கு, தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பையிலே ஏன் குடியிருப்பு!

ஒரு கோலமயில் ஏன் துணையிருப்பு!

வீடுவரை உறவு, வீதிவரை மனைவி!

காடுவரை பிள்ளை! கடைசிவரை யாரோ?

அர்த்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது?

அவரவர் கடமைகளை வகுத்துத் தந்தது!

ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது???

எனக்குப் பிடித்த வரிகள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kan.jpg

kan2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

எனக்கு மிகவும் பிடித்தது

வெட்ட வெட்ட தழைப்பது இந்துமதம் ஒன்று தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரின் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்.

பகுத்தறிவு

இன்று 'பகுத்தறிவு பகுத்தறிவு' என்று பிரமாதமாகப் பேசப் படுகிறது

அது ஏதோ பிறருக்கு இல்லை போலவும், ஒரு சிலருக்கே சொந்தம் போலவும் முழங்கப்படுகிறது.

'நாங்கள் பகுத்தறிவு தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்ட மண்ணாங்கட்டிகள்' என்று சிலர் பேச நான் கேட்டிருக்கிறேன்.

அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

மனிதனை மிருகங்களில் இருந்து ' பிரித்துக் காட்டுகிற ஆறாவது அறிவுக்கு பெயர்' தான் பகுத்தறிவு.

இவள் தாய், இவள் தங்கை, இவள் தாரம் என்று கண்ணுக்கும் மனதுக்கும் சொல்வதே பகுத்தறிவுதான்.

ஆனால் துரதிஸ்டவசமாக இந்தப் பேதங்கள் தெரியாதவனே தன்னைப் ' பகுத்தறிவுவாதி' என்று அழைத்துக் கொள்கிறான்.

ஒரு மனிதன் என்னதான் குடித்து இருந்தாலும் கூட, தன் தாயின் அருகில் போய் படுப்பதில்லை.

அதுதான், மயங்கவைக்கும் போதையிலும் கூட மிதமிஞ்சி நிற்கும் பகுத்தறிவு

ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்டுவதற்குப் பெயர் பகுத்தறிவு. அவ்வளவுதான் .

இதற்கென்ன தனி பட்டயம், தனிப்படை?

உலகத்திலுள்ள கோடானுகோடி மனிதர்களுமே பகுத்தறிவாளர்கள் தான்.

கோவிலுக்கு போகிறவர்களும் , சாமி கும்பிடுபவர்களும் பகுத்தறிவாளர்கள் இல்லை என்றால், தலைவனுக்கு மாலை போட்டுக் காணிக்கை கொடுக்கிறவனும் அதே ஜாதியே!

இதிலே என்ன வித்தியாசம்?

முன்னது 'கல்' என்றால், பின்னது 'சடலம்'.

கல் பேசாது என்றால், சடலம் வழித் துணைக்கு வராது.

பகுத்தறிவில் சில ஏற்ற தாழ்வுகளை வேண்டுமானால் கற்பிக்கலாம்.

மற்ற மனிதர்களின் பகுத்தறிவை விட, விஞ்ஞானிகளின் பகுத்தறிவு ஆழமானது.

கண்டுக் கொண்ட தண்ணீரை வடிக்கட்டி குடிப்பது மனிதனின் பகுத்தறிவு.

காணாத தண்ணீரை கண்டு பிடிப்பது விஞ்ஞானியின் பகுத்தறிவு.

நம் ஊர் பகுத்தறிவாளர்கள், எதையாவது கண்டு பிடித்தார்களா?

பிரியாணியை கண்டுப்பிடித்தார்கள், அதற்கு வெங்காயம் சுவையானது என்பதை கண்டுப்பிடித்தார்கள்.

உலகத்திற்கு அவர்கள் புதிதாக சொன்னது என்ன?

கேட்க்கின்ற மனிதன் உடனே திருந்தி, ஆனந்தமாக வாழ்வதற்கு அற்புத திட்டங்கள் எவற்றையாவது அவர்கள் உருவாக்கினார்களா?

காலாகாலங்களுக்கும் நிலைத்து நிற்க கூடிய களஞ்சியங்களையாவது எழுதிக் குவித்தார்களா?

ஏதும் இல்லை.

கள்ளத்தராசுடன் வந்த திருட்டு வியாபாரிகளைப்போல், முதலீடு இல்லாமல் லாபம் தேடியவர்கள் தங்களுக்கு தானே சூடிக் கொண்ட பெயரே பகுத்தறிவாளர்கள் என்பது.

பலாப்பழத்தை பகுத்தால் நார் வருகிறது. அந்த நாரைப் பகுத்தால் சுளை வருகிறது. சுளையை பகுத்தால் கொட்டை வருகிறது.

வெங்காயத்தை பகுத்துக் கொண்டே போனால், என்ன தெரியும்?

மனிதனின் ஆறாவது அறிவு சாதரணமாகவே தினசரி இயங்கி கொண்டிருக்கிறது. அதன் சராசரி இயக்கத்திலேயே அது கண்டு பிடித்த விஷயம் தான், தெய்வம் உண்டு என்பது.

கண்ணெதிரே காணுகின்ற காட்சிகளும், சம்பவங்களும் மனித சக்திக்கு அப்பார்ப்பட்டவையாக தோன்றியதால், இது ஏதோ ஒரு பெரிய சக்தியின் இயக்கம் என்று மனித மனது பேசிற்று. ஆறாவது அறிவு அதை ஒப்புக் கொண்டது.

பகுத்தறிவுக்கு தெரியாமலா பாண்டிய மன்னர்கள் கோயில் கட்டினார்கள்? கோயில்களில் பூஜைகள் நடத்த நிவந்தங்கள் விட்டார்களே மன்னர்கள், அவர்களுக்கு அறிவு இல்லையா?

ஐக்கிய அமெரிக்காவில் 'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பக்தர்களுமே பகுத்தறிவு இல்லாதவர்களா?

கருப்பூரிலும் , திருப்பூரிலும் மேடைப் போட்டு பேசி விட்டு, வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு, இனம் தெரியாமல் நடந்து கொள்வதுதான் பகுத்தறிவா ?

விபூதி பூசாமல் இருப்பதும், குங்குமம் வைக்காமல் இருப்பதும், கல்யாணத்துக்கு ஐயரை அழைக்காமல் இருப்பதும்தான் பகுத்தறிவில் முளைத்தெழுந்த சுடரொளிகளா?

வெறும் பிரமை, மயக்கம்.

இன்றைக்கு பகுத்தறிவாளன் என்று சொல்லிக் கொள்கிற எவனையும் விட நான் பல விசயங்களை தெரிந்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் படிக்காத புத்தகங்களையெல்லாம் நான் படித்திருக்கிறேன். அவர்கள் எழுதாத விஷயங்களையெல்லாம் நான் எழுதிருக்கிறேன்.

எந்த ஆராய்ச்சியில் இறங்கினாலும் என்னுடைய ஆறாவது அறிவு, அதிலே தெய்வத்தைத்தான் கண்டுப்பிடிக்கிறது.

அறம், பொருள் , இன்பம் என்பது வள்ளுவன் பகுப்பு. அதோடு வீடு என்ற ஒன்றையும் சேர்த்து நான்காக்கிற்று மதம்.

அந்த வீடு என்பதை வடமொழியில் 'மோஷம்' என்பார்கள்.

இம்மையில் முதல் மூன்றும் மறுமையில் நான்காவதும் மனிதனுக்கு அமைய வேண்டும்.

ஆனால், அறம், பொருள் , இன்பம் ஆகியவற்றை ஒப்புக் கொள்ளும் சிலரது பகுத்தறிவு, நான்காவதான மோசத்தை ஒப்புக்கொள்வதில்லை.

'சொர்கமாவது ,நரகமாவது', மரணத்திற்கு பின் ஒன்றும் இல்லை என்பது அவர்களது வாதம்.

ஆனால் மத நம்பிக்கை உள்ள சராசரி மக்கள் மோஷ - நரகத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.

அப்படி ஒப்புக்கொண்ட காரணத்தால்தான், அவர்கள் பாவம் செய்ய பயப்படுகிறார்கள்.

சொர்க்கம், நரகமே இல்லை என்று நம்பும் பகுத்தறிவாளன், எந்த தவறுக்கும் துணிந்து விடுகிறான்.

ஆக ஒன்று புரிகிறது. பகுத்தறிவு இரண்டு வகைகள்.

ஒன்று நம்பிக்கையோடு ஆராய்வது; இன்னொன்று அவ நம்பிக்கையை வளர்ப்பது.

இப்படி அவநம்பிக்கையை வளர்த்து விட்டால் சராசரி வாழ்க்கையாவது சந்தோசமாக இருக்குமா?

இல்லை !

நம்பிக்கை உள்ளவனுக்கு எந்த துன்பத்திலும் ஒரு நிம்மதி இருக்கும்.

அதாவது, எல்லாம் ஆண்டவனுடைய இயக்கம், நடப்பது நடக்கட்டும் என்று துன்பத்தை பொறுத்துக் கொள்ளும் சக்தி அவனுக்கு வந்து விடும்.

பிராமண வீடுகளில், ஒருவர் இறந்து போனால் உடனே அந்த சடலத்தை திண்ணையிலோ அல்லது வெளி வராந்தாவிலோ தூக்கி கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.

நான் அறிந்த வரையில், மரணத்திற்காக அவர்கள் அதிகம் ஓலமிடுவதில்லை; கதறி அழுவதில்லை. காரணம் அவர்களுடைய பகுத்தறிவு தெளிவாக சொல்லி விட்டது. மரணம் தவிர்க்க முடியாதது என்று!

அந்த சமூகத்தில் தான் அறிவாளிகள் அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

வைதிக மத நம்பிக்கையும் அந்த சமூகத்தில் தான் அதிகம்.

அவர்கள் இன்ப துன்பங்களை சமமாக கருதுவதை பார்க்கும் போது மதநம்பிக்கை உள்ள பகுத்தறிவு, வாழ்க்கையை எவ்வளவு நிம்மதியாக ஓட்டி செல்கிறது என்பது புரிகிறது.

ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் மத நம்பிக்கை வேண்டும்.

மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும்.

மனிதர்கள் மிருகமாக மாறாமல் இருக்க மத நம்பிக்கை வேண்டும்.

மனிதனையும், மிருகத்தையும் பற்றி இதோ காஞ்சி பெரியவர்கள் பேசுகிறார்கள்;

மிருகங்கள் குறுக்கு வாட்டில் வளர்கின்றன. இதனாலேயே அவற்றிற்கு 'திர்யக்' என்று பெயர்.இதற்கு மாறாக உயர்ந்து மேல் நோக்கி வளருகின்ற மனிதன் மற்ற பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தை பெற வேண்டும். இப்படி செய்தால் இவன் தான் சகல ஜீவ இனங்களையும் விட அதிகமான சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால், நடைமுறையிலோ அவற்றை விட அதிகமான துன்பத்தை தான் நாம் அனுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மை போல் இத்தனை காமம், இத்தனை கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாபங்களை செய்து, துக்கங்களை நாம் தான் அனுபவிக்கிறோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்கு கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதம் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்கு கொம்பு கொடுத்திருக்கிறார்; அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்கு கொம்பு இல்லை; நகம் இல்லை; குளிரிலிருந்து காப்பாற்றி கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டிருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை; ஓடலாம் என்றால் வேகமாக ஓட முடியாது. குதிரைக்கு கொம்பு இல்லாவிட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார்; அதுவும் நமக்கில்லை. இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.

குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் மற்ற பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டு விடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலேயே குதிரையைக் கட்டி அதன் வேகத்தை உபயோகப்படுத்திக் கொள்கிற சக்தியை அவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலே தற்காப்பு எல்லா விட்டாலும் வெளியே இருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாகப் புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரபஞ்சத்தில் தான் இருக்கும். குளிர் பிரதேசத்து கரடி நாம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். ஆங்காங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தி தனக்கு சாதகமாக சூழ்நிலையை செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான். பிறந்து விட்டதாலே இவ்வளவு கஷ்டம். இனிப் பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்கு காரணம் என்ன?

நாம் ஏதோ தப்பு பண்ணி இருக்கிறோம். அதற்கு தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய் விட்டால் இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினாலே, பாவத்தை செய்வதினாலே ஜனனம் வருகிறது. காரியம் ஏதும் பண்ணாமல் இருந்து விட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலே பல பாவங்களை செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாவம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்கு காரணம் என்ன?

நம்மை தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால், அதனிடம் ஆசை வருகிறது.

உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.

ஒரு மாடு கண்ணாடியில் தன்னை பார்த்து விட்டு இன்னொரு மாடு இருப்பதாக நினைத்துக் அதை முட்டப் போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தை பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டவது என்று எண்ணினால் தான் ஆசை வரும். ஆசை வருவதால் கோபம் வருகிறது. கோபம் வருவதால் பாவங்களை செய்கிறோம். அதனால் ஜென்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் வந்து விட்டால், வேறு பொருள் இல்லாத காரணத்தாலேயே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாவம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை இப்படி பெறுவது? நம்மை பெற்ற அம்மா உடம்புக்கு பால் கொடுப்பவள். அறிவிற்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான சொரூபமே அவள்தான். அவளுடைய சரனாவிந்தத்தை கெட்டியாகப் பற்றிக் கொண்டு அவளுடைய சொரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்த குறிகோளுடன் தான் சகல மதங்களும் உண்டாகி இருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கின்ற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதிகளுடன் இருக்க விடக் கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில் தான் பேசுகின்றன.

கவியரசு கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்து மதம் (பத்தாம் பாகத்திலிருந்து)

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் சூப்பர்...இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்...கண்ணதாசன் கண்ணதாசன் தான்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணெதிரே காணுகின்ற காட்சிகளும், சம்பவங்களும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாக தோன்றியதால், இது ஏதோ ஒரு பெரிய சக்தியின் இயக்கம் என்று மனித மனது பேசிற்று. ஆறாவது அறிவு அதை ஒப்புக் கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் நுணா.. நான் படித்த புத்தகங்கள் மிகச் சில.. அதில் இந்த அர்த்தமுள்ள இந்துமதத்தின் சில பாகங்களும் அடங்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.