Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலாவின் 'பரதேசி'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, 'பரதேசி' என பெயர் இடப்பட்டிருக்கும் புதிய படத்தை வித்தியாசமான கதை பின்னணியில் இயக்கியிருக்கிறார்.

1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.

படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் சுமார் 90 நாட்கள் நடைபெற்றது.

செப்டம்பர் 19 லண்டனில் இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

Vikatan Cinema

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்
பரதேசி - சிறப்பு விமர்சனம்
Posted by: Shankar Updated: Friday, March 15, 2013, 17:30 [iST]
 
நடிப்பு: அதர்வா முரளி, வேதிகா, தன்ஷிகா, ஜெர்ரி, ரித்விகா
ஒளிப்பதிவு: செழியன்
வசனம்: நாஞ்சில் நாடன்
இசை: ஜி வி பிரகாஷ்குமார்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா
 
தேயிலைத் தோட்டங்களில் அப்பாவி ஏழைத் தமிழர்கள் எப்படி உரமாக மாறினார்கள் என்ற கண்ணீர் கதையை, கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் மாதிரி விவரிக்கிறது பாலாவின் இந்த பரதேசி.
சாலூர் கிராமத்தில் வசிக்கும் அரைகிறுக்கன் ஒட்டுப் பொறுக்கி எனும் ராசாவுக்கு (அதர்வா) தாய் தந்தை இல்லை. பாட்டிதான் வளர்க்கிறாள். ஊரில் எது நடந்தாலும் தண்டோரா போட்டு, அதில் கிடைப்பதைக் கொண்டு வயிற்றைக் கழுவி வாழ்வதுதான் ராசாவின் தொழில். அதே ஊரில் உள்ள அங்கம்மாவும் (வேதிகா) ராசாவும் ஒருவரையொருவர் 'நினைத்துக் கொள்கிறார்கள்'. அந்த நினைப்பு ஊருக்குத் தெரியாமல் 'உறவா'கிவிடுகிறது.
15-paradesi21-600.jpg
இதற்கிடையே ஊரில் ஏகப்பட்ட பஞ்சம். வேலையில்லை. கஞ்சிக்கு வழியில்லை எனும் சூழலில், தேயிலைத் தோட்டத்துக்கு ஆள்பிடிக்க வரும் கங்காணியின் சர்க்கரை வார்த்தையில் சிக்குகிறார்கள்.

 

ஊரின் பெரும்பகுதி மக்கள் கிளம்புகிறார்கள் தேயிலைத் தோட்டத்துக்கு. கூடவே ராசாவும். அங்கம்மா கிராமத்திலேயே நின்றுவிடுகிறாள். பச்சைமலைக்குப் போனபிறகுதான் அது வேலை செய்யும் இடமல்ல... கடைசி வரை அங்கேயே வெந்து சாக வேண்டிய சுடுகாடு என்பது புரிகிறது. கொட்டும் பனி, அடை மழை, அட்டைக்கடி, அதைவிட மோசமான கங்காணியின் உறிஞ்சல், வெள்ளைக்காரனின் காமப் பசி, கொள்ளை நோய் என அத்தனையையும் சகித்துக் கொண்டு அல்லது பலியாகி மண்ணோடு மண்ணாகிறார்கள்... ஒரு கூட்டத்தில் பாதிக்கும்மேல் செத்துவிழ... அடுத்து புதிய கூட்டம் புறப்பட்டு வருகிறது... அதில் ராசாவின் அங்கம்மாளும்.. அவர்களின் உறவுக்கு சாட்சியாய் பிறந்த குழந்தையும்...

தேயிலை ருசியாகக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது, செத்து விழுந்த மக்களின் உடல் தந்த உரத்தில்!

இந்தப் படம் ரசித்துப் பார்க்கத்தக்க படமா என்றால்.. சத்தியமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பச்சைப் பசேல் என்ற தேயிலைத் தோட்டங்களின் பின்னால் குரூரமாய் சிந்த வைக்கப்பட்ட ரத்தத் துளிகளின் பதிவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், நிறைகளை விட, மனதை நெருடும் முட்களாய் பல காட்சிகள், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு அமைந்திருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

எதை வைத்து ஒளிப்பதிவின் தன்மையை தீர்மானிக்கிறார்கள் என்பது கடைசி வரை புரியவில்லை. கதை நிகழும் காலம் எதுவாக இருந்தாலும், இயற்கையின் நிறம் மாறப்போவதில்லை. நன்றாக நினைவிருக்கிறது.. எழுபதுகளின் இறுதியில் தமிழகத்தில் வறட்சி தலை விரித்தாடியது. கற்றாழைக் கிழங்கைப் பிடுங்கி அவித்துத் தின்ற கோர நாட்கள். ஆனால் அன்றும்கூட தமிழகத்தின் எந்த மாவட்ட காடும் நிலங்களும் பச்சைப் பசேல் என்றுதான் இருந்தன. சாம்பல் படிந்த நிறத்தில் எந்த ஊரையும் பார்த்த நினைவில்லை. சரி ஊர்களைத்தான் அப்படி பாதி கருப்பு வெள்ளையில் காட்டுகிறார்கள் என்றால்... தேயிலைத் தோட்டத்துக்குப் போன பிறகும் தேயிலைகள் சாம்பல் பூத்த மாதிரி காட்டியிருப்பது என்ன வகை உலகத் தரமோ.. செழியனும் பாலாவும்தான் விளக்க வேண்டும்.

இசை... பாவம் ஜிவி பிரகாஷ்குமார். அவரிடம் இல்லாத விஷயத்துக்காக திட்டி பிரயோசனமில்லை. அதர்வா தப்பித்து ஓடும் காட்சிக்கு வாசித்திருக்கிறார் பாருங்கள்... பக்கா டெம்ப்ளேட் இசை. அதேபோல தன்ஷிகாவின் மரணத்தை விட கொடூரமாகக் காதுகளைப் பதம் பார்க்கிறது ஜிவியின் பின்னணி. பாடல்களில் வைரமுத்துவை ரொம்ப கவனமாகத் தேடியும் கடைசிவரை கிடைக்கவே இல்லை.

ஆரம்பக் காட்சியில், ஒரு திருணமத்தின் போது பெரியப்பா விக்ரமாதித்யன் செத்துப் போகிறார். அந்த சாவை ஊரறிய சொல்லிவிட்டால் கிராமத்து மக்கள் நெல்லு சோறு சாப்பிடும் பாக்கியம் போய்விடுமே என்று மறைத்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்து, நாலைந்து பந்தி சோறும் சாப்பிட்டு கையைக் கழுவுகிறது. ஆனால் பெரியப்பன் பிணத்தை அப்படியே விட்டுவிடுகிறார்கள். பாலா படத்தில் இவ்வளவு வெளிப்படையான ஓட்டை இதுதான் முதல் முறை.

இந்தக் காட்சிகளின் போது அதர்வாவை டீஸ் செய்கிறேன் பேர்வழி என வேதிகா செய்யும் ஒவ்வொரு செயலும் மகா அருவருப்பு. 1939-ல் நடக்கும கதைக் களத்தில் பெண்கள் இப்படியெல்லாம் லூசுத்தனமாக நடந்து கொள்வார்களா...

15-paradesi31-600.jpg

அதர்வாவுக்குதான் நன்றாக காதலிக்கத் தெரிகிறது. நல்லது கெட்டது தெரிகிறது.. பெரியப்பா வராமல் தாலி கட்டக் கூடாது என்ற இங்கிதம் தெரிகிறது... கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வலி புரிந்து அவள் குழந்தையை நேசிக்கத் தெரிகிறது.. அப்புறம் ஏன் அவரை கேனயனாகக் காட்ட வேண்டும்?

சோகம் என்பது காட்சிகளில் மறைபொருளாக இருக்க வேண்டும். அதைப் பார்ப்பவர் உணர்ந்து கசிந்துருக வேண்டும். அதுதான் நல்ல காட்சி அமைப்பு. அதை இதற்கு முந்தைய பாலா படங்களில் அனுபவித்தவர்கள் நாம். ஆனால் இந்தப் படத்தில் தங்கள் சோகங்களைச் சொல்லிச் சொல்லி ஓங்கி கதறிக் கொண்டே இருக்கின்றன பெரும்பாலான பாத்திரங்கள். ஆனால் பார்ப்பவரை அந்த சோகம் தாக்கவே இல்லை. அதுதான் பரதேசியின் பிரதான குறைபாடு.

மற்றபடி அன்றைய சமூக நிலையை பாலா கச்சிதமாக சித்தரித்திருக்கிறார். வேலைகேட்டு வரும் ஒரு முன்பின் தெரியாதவனை மாட்டை அடிப்பது போல அடித்துவிட்டு, பின் ஒரு வண்டி விறகை பிளந்து கொடுக்கச் சொல்லி, கடைசியில் அதற்கும் கூட கூலி கொடுக்காமல் விரட்டியடித்தவன் வெள்ளைக்காரனில்லை.. நம்மிடையே வாழ்ந்த கொள்ளைக்காரன்கள்தான் என்பதை வலிக்கிற மாதிரி பதிவு செய்திருக்கிறார் பாலா.

குறிப்பிட்ட மதத்தின் பெயரைச் சொல்லி சமூக சேவை செய்ய வரும் மருத்துவர்கள்கூட, நோயை விரட்டுவதைவிட, தங்கள் மதப் பிரச்சாரத்தை முன்னெடுத்து மக்களை மாற்றுவதிலேயே குறியாக இருப்பதை இத்தனை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

படத்தின் இன்னொரு ப்ளஸ்.... நாஞ்சில் நாடனின் வசனங்கள். 'கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு பேள்றது கூட கஷ்டம்தான்..' போன்றவவை ஒப்பனைகளற்றவை. என்ன... சில பாத்திரங்கள் இந்த வசனங்களை உச்சரிக்கும் விதம் மகா செயற்கையாய் இருப்பது!

படத்தின் பிரதான பாத்திரம்... நம்மைப் பொறுத்தவரை.. வீரமும் தன்மானமும் மனிதாபிமானமும் மிக்க அந்தப் பாட்டி கச்சம்மாள். அவர் நடித்தார் என்று சொல்வது ரொம்ப தப்பு. அந்தப் பாட்டியை அவராகவே இருக்க விட்டிருக்கிறார் பாலா.

பாலாவின் இயல்பான படம்தான்.. ஆனால் சுவாரஸ்யம் இல்லாத ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை!

http://tamil.oneindia.in/movies/review/2013/03/paradesi-special-review-171610.html

  • கருத்துக்கள உறவுகள்

பரதேசி பார்த்தால் அதற்குப் பிறகு டீ குடிக்க கூட மனசு வராதாம் :(

படம் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நடிகர்களை லத்தியால் அடித்துக் கொடுமைப்படுத்தும் பாலா என்ற தலைப்பில் முகநூலில் இந்த வீடியோவை இணைத்திருந்தார்கள்.

 

 

 

பாலா இப்படியே கமலையும் ரஜனியையும் விஜயையும் தன் படத்தில் நடிக்க வைத்து நாலு சாத்து சாத்தினால் நல்லம் :icon_mrgreen:

பாலா இப்படியே கமலையும் ரஜனியையும் விஜயையும் தன் படத்தில் நடிக்க வைத்து நாலு சாத்து சாத்தினால் நல்லம் :icon_mrgreen:

இன்று விஜே டி வி நேர்காணலில் அது வெறும் நடிப்பு என்று சொல்லியிருந்தார் .

இன்று டொராண்டோவில்  திரையிடுகின்றார்கள் பெரும்பாலும் இன்றே பார்ப்பேன் என நினைக்கின்றேன் .அதற்காக விமர்சனம் எதையும் வாசிக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

பரதேசி – சினிமா விமர்சனம்

 

paradesi-219x300.jpgஇது மாதிரியொரு சினிமாவை இயக்கித் தர பாலாவால் மட்டுமே முடியும்..! மனித மனங்களின் ஆசை, விருப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை, குரோதம், காமம் என்று அனைத்தையும் கலந்து கட்டியடிப்பதில் பாலாவுக்கு நிகர் பாலாதான்..! அவருடைய ஏழாவது படைப்பான இதுவே, அவர் பெற்றெடுத்த பிள்ளைகளில் மிகச் சிறப்பானது என்பதில் ஐயமில்லை..!

1939-களில் நடந்த கதையை இத்தனையாண்டுகள் கழித்து செய்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்.. அதன் நேர்த்தியை, களத்தை, கதையை சிறிதும் கெடாமல், முடிந்தவரையிலும் ருசிக்க வைக்கும் பண்டத்தை போல சுவைபட கொடுப்பதும் ஒரு படைப்பாளியின் திறமை.. பாலா மட்டுமே தனிப்பட்ட குணத்தில் சினிமாவுலகத்தில் பெரும் சர்ச்சையான மனிதராக இருந்தாலும், பத்திரிகையாளர்களால்கூட பெரிதும் மதிக்கத்தக்க இயக்குநராகவே இருக்கிறார்.. இப்போது இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்..!

ஆங்கிலத்தில் ‘ரெட் டீ’ என்ற பெயரில் வெளிவந்து, தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற பெயரில் ஹெச்.சி. டேனியலால் மொழி பெயர்க்கப்பட்ட இக்கதை இத்தனை நேர்த்தியாக நெய்யப்பட்டு வெளிவரும் என்று நூலாசிரியர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.. இன்று காலையில் இருந்தே இந்த ‘எரியும் பனிக்காடு’ நூல் இணைய உலகில் அதிகம் பேசப்பட்டு வருகிறது..! அதன் ஆசிரியருக்கு வாழ்த்துகள்..!

 

1939-களில் தென்தமிழ்நாட்டில் நெல்லை சீமையோரமாக இருக்கும் சாலூர் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைக் கதை..! நிஜமாகவே ரத்தமும், சதையுமாகவே சொல்லப்பட்டிருக்கிறது..! முதல் பகுதியில் எத்தனை சந்தோஷமாக வாழ்ந்த அந்த மக்கள், இரண்டாம் பகுதியில் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் சிக்கி எப்படி தங்களது வாழ்க்கையை தொலைத்தார்கள் என்பதை உருக்கத்துடன் உருக்கியிருக்கிறார் பாலா..!

கிடைக்கின்ற கூலியையும், தானியங்களையும் வைத்து வாழ்ந்து வரும் மக்களிடையே அதிகப் பணம் என்ற ஆசை காட்டி இழுக்கிறார் கங்காணி.. தங்களது சொந்த மண்ணைவிட்டு போக வேண்டிய வருத்தம் இருந்தாலும், பஞ்சம் பொழைக்க போய்த்தானே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சொர்க்க பூமிக்கு பயணமாகிறார்கள் மக்கள்..!

48 நாட்கள் நடை பயணத்திற்குப் பின்பு கேரள எல்லையில் இருக்கும் அந்த எஸ்டேட்டுக்குள் போன பின்புதான் தெரிகிறது அது அவர்களுக்கு நரகம் என்று..! அடியாட்களின் மிரட்டல்கள், அடி, உதை.. எஸ்டேட் ஓனரின் பாலியல் வேட்கைக்கு பெண்கள் பலியாவது..! தப்பித்துப் போக பார்த்தால் கெண்டைக்கால் நரம்பை கட் செய்வது..! கூலிப் பணத்தில் காந்தி கணக்கு எழுதி பணத்தைக் குறைவாகக் கொடுப்பது.. நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் கடுமையான வேலை என்று தாங்கள் கொண்டு வந்த சந்தோஷத்தை அங்கே ஒரே நாளில் இழக்கிறார்கள் அந்த அப்பாவி மக்கள்..!

நமது ஹீரோ ராசா என்னும் ஒட்டு பொறுக்கியாக கிண்டலுடன் அழைக்கப்படும் ரெண்டுங்கெட்டான் மனதுடன் இருக்கும் கேரக்டர் அதர்வா..! ஊரில் இருக்கும்போதே வேதிகா என்னும் அங்கம்மாவுடன் காதல்.. அது ஒரு எல்லை மீறியதாகவும் இருக்க… அதர்வா எஸ்டேட்டுக்கு கிளம்பி வந்தவுடன் அங்கே அங்கம்மாவின் வயிற்றில் பிள்ளை..! 4 ஆண்டுகள் கழித்தும் ஊருக்குச் செல்ல வழியில்லாமல் மீண்டும் அடிமைத்தனம்..! இன்னும் 2 ஆண்டுகள் கழித்தும் போக முடியாமல் தவிக்கும்போது அந்த கிளைமாக்ஸ்..! அடிவயிற்றில் ‘ஐயோ’ என்னும் ஒரு உணர்வை ஒரு நொடியில் கொண்டு வந்து காண்பித்துவிட்டார் பாலா..!

முதல் பாதியில் படம் ரன் வேகத்தில் பறக்கிறது..! இறந்து கொண்டிருப்பவரின் கை உயரத் தொடங்கியபோதுதான் ‘ஓ இடைவேளையா’ என்ற எண்ணமே வந்தது.. இத்தனையாண்டுகள் கழித்து இப்படியொரு சிச்சுவேஷன்.. இடைவேளைக்கு பின்பும் சற்றும் செல்பேசியைத் துழாவ விடாமல் வைத்த கண் பார்க்காமல் திரையை பார்க்க வைக்கிறார் இயக்குநர் பாலா..! வெறித்தனமான இயக்குநர் என்றே பெயரெடுத்திருக்கும் பாலா, இதில் தனது பெயரை இன்னமும் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.. டைட்டிலில் ஆரம்பிக்கும் அவரது தனித்துவம், இறுதிவரையிலும் தொடர்கிறது.. இந்தக் காட்சியை முன்னமேயே இந்தப் படத்தில் பார்த்தோமே என்கிற எண்ணம் ஒரு காட்சியில்கூட மனதில் தோன்றவில்லை..!

தனது வாழ்க்கை கேலிக்குரியதாக இருக்கிறது என்பதைக்கூட புரிந்து கொள்ளாத ஒரு கேரக்டர் அதர்வாவுக்கு.. இனிமேல் அவரிடம் இருக்கும் மிச்ச சொச்சத்தைத்தான் அடுத்தடுத்த படங்களில் அவர் காட்ட வேண்டும்..! ‘ஒட்டுப் பொறுக்கி’ என்றவுடன் வரும் கோபம்.. தனக்கு சோறு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் ‘ராசா கெளம்பிட்டாரு’ என்று ஆற்றாமையுடன் கிளம்புவது.. ‘எதுக்கு ராசா அடிக்குறீக?’ என்று அப்பாவியாய் கேட்டு உதை வாங்கத் துவங்கும் அதர்வாதான் பிற்பாதியில் படத்தினை தன் தோளில் சுமக்கிறார்..! இறுதியில் “நியாயமாரே..” என்ற உச்சியில் அமர்ந்து கூக்குரலிடும் காட்சியில் நமக்கே கண் கலங்குகிறது.. இங்கேதான் ஒரு இயக்குநரை நடிகன் ஜெயித்திருக்கிறான். நிச்சயம் அதர்வா மிகச் சிறந்த நடிகராக மேலும் வருவார்..!

வேதிகாவைவிடவும், தன்ஷிகா எனக்குப் பிடித்தமானவராக இருக்கிறார்..! அந்தச் சிடுசிடுப்பு.. கோபம்.. எரிச்சல்.. கருத்தக்கன்னி மீதான பரிவு.. ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னைத் தானே திட்டுக் கொள்வது.. அங்கம்மாளின் நிலைமைக்கு அதர்வாவை திட்டுவது..! தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை.. ‘இருடி வர்றேன்.. உன்னைத் தேடி வந்து வைச்சுக்குறேன்’ என்ற ஆத்திரம் தீர கிளம்பும் அந்த பெண்மையே ரொம்பவே ரசிக்க முடிகிறது..! அவருடைய முடிவு, படத்திலேயே மிகப் பெரிய இழப்பு..!

வேதிகா, கண்களை மட்டுமே நம்பி முற்பாதியில் நடித்திருக்கிறார். இறுதிக் காட்சியில்.. அதுதான் நடிப்பு..! அதர்வாவை அவர் கிண்டல் செய்கிறாரா.. அல்லது சீரியஸாக காதலிக்கிறாரா என்பதையே கொஞ்சம் நாமளே சிந்தித்துத் தெரிந்து கொள்ளட்டும் என்ற பாணியில் இருக்கும் திரைக்கதையால் அதர்வாவின் மேல் அச்சச்சோ உணர்வு பார்வையாளர்களுக்கு அதிகரிக்கத்தான் செய்கிறது..!

கொஞ்ச நேரமே வந்தாலும் ஐஸலக்கா பாடவும், ஆடவும் வைக்கிறார் கவிஞர் விக்கிரமாதித்யன்..! இவர்களையும் தாண்டி நடிப்பில் ஜெயித்திருப்பவர் அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மாள்.. மனுஷி பின்னி எடுத்திருக்கிறார்..! வெகு இயல்பான நடிப்பு.. இந்த வயதில்.. இவரிடம் போய் எப்படி கதையையையும், திரைக்கதையையும், வசனத்தையும் சொல்லி நடிக்க வைத்தார்கள் என்பதே புரியவில்லை.. கிழவியின் பெர்பார்மென்ஸை பார்த்தால் 100 படங்களில் நடித்தவர் போல இருக்கிறார்..!

அண்ணன் ராதாரவி அவசியம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.. தமிழ்த் திரைப்படங்களில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வரப் போவதாக ரொம்ப நாளாகவே சொல்லி வருகிறார்.. அது மாதிரியான ஒரு விதிமுறை சுத்த ஹம்பக் என்று இந்தப் படமே அடித்துச் சொல்கிறது.. இதில் நடித்தவர்களில் 10 பேரை தவிர மீதி அத்தனை பேருமே அந்தப் பகுதி மக்கள்தான்.. புதிய நடிகர், நடிகைகள்.. ஆனால் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.. நடித்திருக்கிறார்கள்.. அத்தனையும் தத்ரூபம்..! இது போன்ற விதிமுறையெல்லாம் இப்போதைய காலக்கட்டத்தில் வேலைக்கு உதவாது என்பதை நடிகர் சங்க நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்..!

எத்தனை கடின உழைப்பு உழைத்திருக்கிறார்கள் என்பதை படத்தைப் பார்த்தாலே புரிகிறது..! சாலூர் கிராமத்தை செட் போட்டு அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சமேனும் சூரிய ஒளி படும்படியும், அதிகப்படியாக காடுகள் சூழவே இருப்பது போலவும் அமைத்திருப்பது மிகப் பொருத்தம்.. கலை இயக்குநருக்குத்தான் இந்தப் படத்தில் அதிக வேலை..! அற்புதமாக செய்திருக்கிறார் புதுமுக கலை இயக்குநர் சி.எஸ்.பாலச்சந்தர்..!

எந்த இடத்திலும் கலைத்துறையில் தவறுகள் நடந்துவிடாமல் இருக்க மிகவும் கவனத்துடனேயே செய்திருக்கிறார்..! மஞ்சள் கலர் போஸ்ட் கார்டு மேட்டர் மட்டுமே தவறாக படுவதாக பரவலான குற்றச்சாட்டு.. சரி.. போகட்டும்.. விட்டுவிடுவோம்.. இது போன்ற பீரியட் பிலிம் என்றாலே அப்போதைய கலாச்சாரத்தையும் காண்பித்தாக வேண்டும்..! அதுவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.. இல்லாவிடில் அதுவே படத்தில் காமெடியாகிவிடும்..!

ஆண்டான்-அடிமை கலாச்சாரம் அப்போதே நமது சமூகத்தில் புரையோடியிருப்பதை இதிலும் தொட்டுக் காண்பித்திருக்கிறார் பாலா..! கங்காணி கூலியாட்களை மிரட்டுகிறான்.. கங்காணியை ஆங்கிலேயே துரை சவட்டி சவட்டி அடிக்கிறான்.. ஆங்கிலேயனின் அடிமைப்படும் தமிழனே இன்னொரு தமிழனை துன்புறுத்துகிறான்.. ஏன் கொலையே செய்கிறான்.. இங்கே உணர்வற்ற ஜனங்களையும், கல்வியறிவற்ற நிலையில் இருந்த மக்களையும்தான் குறிப்பிட்டிருக்கிறார்..!

தேயிலைத் தோட்டத்தில் மர்ம நோயால் கொத்து, கொத்தாக சாவுகள் நடக்கும்போது ஆங்கிலேய துரைமார்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பேச்சுக்களும், அதில் ஒருவரின் ஆங்கிலேய மனைவி, காந்தியை உயர்வாகப் பேசுவதும் அவர்களை நியாயவாதிகளாக காட்டுவதற்குப் பயன்பட்டாலும், அந்த ஆங்கிலேயே துரை செய்யும் செயல்களெல்லாம் மனிதத்தன்மையில்லாதது என்பதால் அதுவே அர்த்தமற்றதாகிவிட்டது..!

தேயிலைத் தோட்டத்தின் பிரமாண்டம்.. அட்டைகள் காலில் ஒட்டிக் கொண்டு உறிஞ்சியெடுக்கும் பயங்கரம்.. சின்னப் பிள்ளைகள்கூட இந்த அடிமைத்தனத்தில் மாட்டிக் கொண்டு சித்ரவதைப்படுவது என்று நம் மனதை ஆய்ந்து வைக்கும் காட்சிகள் நிறையவே இருக்கின்றன..

கங்காணியாக இயக்குநர் ஜெர்ரி நடித்திருக்கிறார்..! கொள்ளை நோய்க்கு மருத்துவம் செய்ய வரும் டாக்டர் பரிசுத்தமாக நடன இயக்குநர் சிவசங்கர்..! வெள்ளையாக இருந்தவரை கருப்பாக்கி நடிப்பை மட்டும் கச்சிதமாக வாங்கியிருக்கிறார் பாலா..! அத்தோடு அவர் ஆடும் அந்த நடனமும், பாடல் காட்சிகளும் அருமை..!

மதுரை வீரனையும், குல தெய்வத்தையும் வணங்கிக் கொண்டிருந்த தமிழர்களை எப்படி மதமாற்றம் செய்து கிறித்தவர்களாக ஆக்கினார்கள் என்பதை பாலா எடுத்துக் காட்டியிருக்கும் இந்த விஷயம் அடுத்து தமிழகத்தின் சர்ச்சையான விஷயமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..! சிவசங்கரும், அவருடைய மனைவியும் சேர்ந்து நோயாளிகளுக்கு முதலில் சிலுவை போட சொல்லிக் கொடுத்து பின்பே சிகிச்சையளிப்பது, மதம் எந்த அளவுக்கு அப்போதே நம்மிடம் திணிக்கப்பட்டது என்பதை இந்த ஒரு படத்தின் மூலம் மட்டுமே பதிவாகியுள்ளது..!

ஜி.வி.பிரகாஷ்குமார் என்னும் இசையமைப்பாளர் இந்த படத்தில்தான் அறிமுகமாகியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.. டைட்டில் காட்சிகளில் தொடங்கி படத்தின் இறுதிவரையிலும் தேவையான இடங்களில் ஆர்ப்பரித்தும், அடங்கியும், அட்டகாசம் செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார். உண்மையாகவே ரீரெக்கார்டிங்கில் பின்னியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

பாத யாத்திரையின்போது ஒலிக்கும் பாடல் உருக வைக்க.. சிவசங்கர் பாடும் பாடல் கொஞ்சம் காமெடியையும், சீரியஸையும் ஒன்றாகவே சேர்த்து தருகிறது..! கங்காணியை முதன்முதலாக அறிமுகம் செய்யும் காட்சியையும், தேயிலைத் தோட்டத்தின் பரப்பை ஏரியல் வியூவில் காட்டும் காட்சியிலும், அதர்வா தப்பிப் போகும் காட்சியிலும் ஜி.வி.பிரகாஷின் இசைதான் படபடக்க வைக்கிறது..! ஆனாலும் சிற்சில இடங்களில் பின்னணி இசையைக் குறைத்திருந்தால் சில நல்ல வசனங்கள் நன்றாகவே நமது காதுகளுக்குக் கேட்டிருக்கும்..!

மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டு காட்சிகளை போட்டுக் காண்பித்துவிட்டு அதன் பின்புதான் பாடல்களை எழுதி இசையமைத்தார்களாம்.. என்னவொரு மேஜிக்..? காட்சிகளுக்கேற்ற பாடல்களை உணர்ச்சிகரமான வார்த்தைகளுடன் வழங்கியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து..! அவருடைய ஒரு பாடலிலேயே அவர்களது வாழ்க்கைக் கதையைச் சொல்லிவிட்டார்..! அங்கம்மாள்-அதர்வா மாண்டேஜ் ஷாட்டுகளை வைத்தே காதல் பாடல் காட்சியை எழுதி வாங்கியிருக்கும் பாலா நிச்சயம் ஒரு டெர்ரரிஸ்ட்டுதான்..!

முதல்தரமான இலக்கியவாதிகளின் லிஸ்ட்டில் இருக்கும் நாஞ்சில் நாடனின் வசனம்..! நெல்லை சீமை வசனங்கள் அதிகம் புரியும்படியாகவே இருந்தது..! கங்காணியின் பேச்சை பார்த்து பெண்கள் அதிசயிப்பது..! காசு பணம் வந்தால் பெண்களைகூட சேர்த்துக்குங்க என்ற கங்காணியின் பேச்சு.. “நியாயமாரே..” என்ற அதர்வாவின் கெஞ்சல்..! கச்சம்மாள் பாட்டியின் அத்தனை பேச்சுக்களும் என்று.. அனைத்தும் ரசனையானது..!

செழியனின் ஒளிப்பதிவில் குறையில்லை.. சாலூர் கிராம கெட்டப்பும், தேயிலைத் தோட்ட கெட்டப்பும் ஆக இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுமளவுக்கு முதல் தர ஒளிப்பதிவை தந்திருக்கிறார் செழியன்..! மக்கள் பாத யாத்திரையாக தேயிலைத் தோட்டம் நோக்கி நடப்பதை அவர் எடுத்துக் காட்டியிருக்கும் விதமே பாவத்தை வரவழைக்கிறது..! கேமிராவும் ஒரு நடிகர் என்பதை இந்தப் படமும் உணர்த்தியிருக்கிறது..!

முதல் பாதியின் அசுர வேகத்திற்கும், இரண்டாம் பாதியின் சோகத்திற்கும் கிஷோரின் எடிட்டிங் பணி மிக முக்கியமானது..! எந்த இடத்திலும் ஜெர்க் ஆகாமலும், திசை திரும்பாமலும் படத்தினை இறுதிவரையில் அதன் டெம்போ குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் கிஷோர்..! பாராட்டுக்கள்..!

ஊர்க் கல்யாணத்தை டமாரம் அடித்து தெரியப்படுத்தும்போது அதர்வாவையே கிண்டலடிக்கும் மக்கள்.. அரிசியை போட்டுவிட்டு அலுத்துக் கொள்ளும் பெண்கள்.. பெரியப்பா எங்கே என்று அதர்வா தேடித் தேடிக் களைத்துப் போவது.. பெரியப்பாவின் மனைவி கல்யாணம் நிக்கக் கூடாது என்பதற்காக புருஷன் செத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று தடுப்பது..! ஆனாலும் விஷயம் தெரிந்து பெரியவர்கள் அழுது கொண்டே வாழ்த்துவது.. தாலி கட்டிய கல்யாணம் முடிந்த உடனேயே குல தெய்வத்திடம் வழிபாடு நடத்துவது.. பந்திக்கு முந்தும் காட்சிகளில் கூட ஆண்களுக்கு பின்பே பெண்கள் சாப்பிட அமர்வது.. பெரியவர்களுக்கு ஆண்களும், மற்றவர்களுக்கு பெண்களும் பரிமாறுவது..! விறகை வெட்டச் சொல்லிவிட்டு பின்பு கூலி மறுக்கும் கடைக்காரன்.. தன்னை பெயர் சொல்லி அழைத்தான் என்பதற்காக அதர்வாவை போட்டு புரட்டி எடுப்பது.. “ஊர்ல பிச்சையெடுக்கிறவனுக்கு என் பொண்ணு கேக்குதா..?” என்று அப்போதே நம்மிடையே இருந்த பிரிவினையையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருந்த கவுரவத் தன்மையை குறை சொல்லாமல் சொல்லியிருப்பது.. என்று இயக்கத்திலும், திரைக்கதையிலும் அக்காலக் கட்ட வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா..!

“கூலி கொடுங்க ஐயா..” என்று அதர்வா கெஞ்சிக் கொண்டிருக்கும்போதுதான் கங்காணி அதர்வாவை முதன்முதலாக அடையாளம் காண்கிறார்..! தன் முன்னால் அடிமை போல் உட்கார்ந்திருப்பவனிடம் ஊர்ப் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கங்காணி சிரிக்கும் சிரிப்புதான் லேட்டஸ்ட் வீடியோவில் பாலா சிரித்த சிரிப்பு என்று நினைக்கிறேன்..! இதுதான் படத்தின் முக்கிய திருப்பமே..! இவன் ஒருவனே அந்த ஊரின் நிலைக்கு எடுத்துக்காட்டு என்று நினைத்துவிட்டார் என்பதை ஒரு நொடியில் காட்டிவிட்டார் இயக்குநர்..!

கங்காணி என்பவர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த மேனேஜர்கள்.. அவ்வப்போது பல்வேறு ஊர்களுக்கும் வந்து இந்த புள்ளை பிடிக்கும் வேலையைச் செய்கிறார்கள். இவர்களை மக்களுக்கு அப்போதே நன்கு அறிமுகமாகி தெரிந்துதான் இருக்கிறது என்பதை பல இடங்களில் வசனத்தின் மூலமாகக் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர்..! இல்லாவிடில் கடைக்காரர், “போ.. கங்காணி கூப்பிடுறார்..” என்று அறிமுகம் காட்டாமலேயே சொல்ல முடியுமா..?

சமீபத்தில் வெளியான வீடியோவை பார்த்துவிட்டு பாலாவை டெர்ரரிஸ்ட் என்றவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..! காட்சிகளை இயக்குநர் சொல்லித் தரும்போது இதைத்தான் செய்வார்கள்..! அது டம்மி குச்சி என்பது அனைவருக்குமே தெரியும்.. அனைத்து படங்களிலும், அனைத்து இயக்குநர்களும் செய்யும் செயல்தான் இது.. இதுவே இப்படியென்றால் பருத்தி வீரனில் பொன்வண்ணன், பிரியாமணி குடையால் சாத்துகின்ற காட்சியை என்னவென்று சொல்வீர்கள்.. அது 15 டேக்குகள் எடுக்கப்பட்டதாம்..! நம்ப முடிகிறதா..?

இப்போது இந்த டீஸரை வெளிடாமல் இருந்திருந்தால் வெறுமனே படத்தில் அந்தக் காட்சியை பார்த்துவிட்டு நாம் மெளனமாக போயிருப்போம்.. இயக்குநர் சொல்லிக் கொடுப்பதை பார்த்தவுடன்தான் அனைவருக்கும் இது கொடூரமாகத் தெரிகிறது..! சினிமாவாக வெண் திரையில் பார்த்தால்..? ரசிகர்கள்தான் யோசிக்க வேண்டும்..!

பாலா படம் என்றாலே சோகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்பது நாம் அறிந்ததே..! ஆனால் இதில் அவர் காட்டியிருக்கும் உச்சக்கட்ட சோகம் ஒவ்வொரு சினிமா ரசிகனையும் கண் கலங்க வைத்துவிட்டது.. ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ படங்களில் இருந்த அதே சோகத்துடன் கூடுதலாக ஏதோவொரு மன அழுத்தமும் இந்தப் படத்தின் மூலமாக கிடைக்கிறது. இதனாலேயே சொல்கிறேன் இதுவரை வந்த பாலாவின் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று..!!!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வரலாறு இத்தனை கொடூரமாக இருந்தது என்பதை தமிழ்ச் சமூகம் இந்தப் படத்தின் மூலமாகத்தான் அறியும் என்று நினைக்கிறேன். அந்த முன்னோர்களுக்கு எனது நன்றிகள்..! நான் அருந்தும் ஒவ்வொரு துளி தேநீரிலும் எனது முன்னோர்களின் ரத்தமும் கலந்திருக்கிறது என்பதை நான் இந்தப் படத்தின் மூலமாக அறிகிறேன்.. அறிய வைத்த பாலாவுக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!

நன்றி : உண்மைத் தமிழன்

Thanks Bala. superp acting Atharvaa.

மற்றவர்களும் பார்த்தபின் எனது விருப்பு வெறுப்பு .

உதிரம் குடிக்கும் தேயிலைத் தோட்டம் (பரதேசியை முன்வைத்து)http://www.madathuvaasal.com/2013/03/blog-post.html

பரதேசி படம் வந்த முதல் நாளிலிருந்தே படம் குறித்த சிலாகிப்புக்கள் அதிகமாக வரும் போதே ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக பாலா படங்கள் என்றாலே சம அளவில் எதிர்மறையான விமர்சனங்களும் நிறைக்கும். இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று தான் நிறைவேறியிருந்தது.

பி.எச்.டேனியேல் எழுதிய "எரியும் பனிக்காடு" என்ற நாவலை முன்வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் என்னளவில் "உதிரிப்பூக்கள்" படத்திற்குப் பின்னர் ஒரு நாவலைத் துணையாக வைத்து எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பு என்பேன். இயக்குனர் பாலாவின் நேர்த்தியான இயக்கம் படத்தின் ஆரம்பப் புள்ளி முதல் இறுதி வரை அழுத்தமாகப் பதிந்திருக்கின்றது. "அவன் இவன்" படம் கூட பரவலான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்திருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்த பாலாவுக்காக அந்தப் படத்தையும் நேசித்த எனக்கு, பரதேசி படம் எத்தனையோ மடங்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்து விட்டது. இளையராஜாக்களை விடுத்து வழக்கத்துக்கு மாற்றாக, ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் இந்தப் படைப்பைக் கெடுக்காமல் தன்னளவில் நியாயம் செய்து இசை கொடுத்திருக்கிறார். ஆனாலும் கங்கை அமரனைத் துயரத்தின் பாடலில் துணைக்கழைக்கும் போதுதான் அந்தக் குரல் (அல்லது சாயல்) இன் மகத்துவம் புரிகின்றது. செழியனின் ஒளிப்பதிவு கூட பாலாவின் தோள்பட்டையாக இயங்கியிருக்கிறது. நடிகர் முரளியே வாழும் காலத்தில் நினைத்துப் பார்த்திராத பாத்திரப்படைப்பை அதர்வா எடுத்துச் சுமந்து காட்டியிருக்கும் போது அடடா தந்தை இருந்தால் எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார் என்னுமளவுக்கு உச்சம். கூட நடித்த கவிஞர் விக்ரமாதித்தன், வேதிகா, தன்ஷிகா, அந்த கங்காணி என்று யாரை விலக்குவது எல்லோருமே படைப்புக்கு நியாயம் செய்து நடித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, நாஞ்சில் நாடனின் கையைப் பற்றிக் கண்ணில் ஒற்றுமளவுக்கு எவ்வளவு அற்புதமான வசனப்பங்களிப்பை வழங்கியிருக்கிறார் மனுஷர். காட்சிக்குக் காட்சி ஒவ்வொரு அசைவுக்கும் வசனம் அனாவசியமில்லாது புத்திசாலித்தனமான வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட வருஷங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரின் முத்திரை திரையில் தெரிகின்றது. இயக்குனர் பாலாவால் பெருமையடைகின்றது தமிழ் சினிமாவுலகம்.

பரதேசி படம் சூலூர் கிராமத்து மக்கள் தேயிலைத் தோட்டங்களில் பணியமைர்த்தி அடிமைத் தொழிலாளிகளாக வாழ்க்கைப்படுவதைக் காட்டும் படம். இந்தக் கதைக்கரு வெறுமனே இந்தியாவில் வாழ்ந்த ஒரு சமூகத்தை மட்டும் சொல்வதல்ல, இன்றும் இதே நிலையில் இலங்கையின் மலையகத்தில் இருக்கும் தமிழர்கள், இன்னும் தாண்டி மலேசியாவின் இறப்பர் தோட்டங்களில், தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற சமூகம் நூற்றாண்டு கடந்து இந்தப் படம் காட்டும் வாழ்வியலிலேயே இருந்து வருகின்றார்கள், இன்னும் பர்மா, பிஜித்தீவுகள், தென்னாபிரிக்கா என்று நீட்டலாம். 
மலேசியாவின் தோட்டப்புற மக்களின் பிரச்சனையை காட்டும் ஒரு பாடல்



என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் பிறந்தது முதல் என் பால்ய பாகத்தின் முதற்பாகம் இலங்கையின் மலையகம் என்று சொல்லக்கூடிய தேயிலைத்தோட்டங்கள் சூழ்ந்த பிரதேசத்திலேயே அமைந்திருந்தது. என் அப்பாவும் அம்மாவும் முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக ஹட்டன் என்ற மலையகப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டர்கள், கூடவே கைக்குழந்தையாக நானும். இன்றைக்கும் மங்கலாகத் தெரியும் அந்த வாழ்வில் வெள்ளாந்தி மனிதர்களாக, காலா காலமாக அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாகத் தான் அவர்களின் வாழ்வியல் இருக்கின்றது.
"மாஸ்டர் மாஸ்டர்" என்று பரிவோடு அழைத்துப் பேசி எங்கள் குடும்பத்துக்கு அரணாக இருந்தவர்கள் அவர்கள். காளியம்மா, ராசி, காளிமுத்து என்று நீண்ட சொந்தங்களாக எனது அப்பா அம்மாவின் ஆசிரியப் பணி அங்கே நிகழ்ந்த காலத்தைத் தாண்டித் தங்கள் உறவைத் தொடர்ந்திருந்தார்கள்.

தொண்ணூறுக்கு முந்திய ஓரளவு சகஜமான நிலையில், ஹற்றனில் இருந்து காளிமுத்து, ராசு எல்லாம் வருவார்கள், கூடவே வீரகேசரி பேப்பரால் சுற்றி நூலால் இறுக்கிக் கட்டிய தேயிலைத்தூள் பொட்டலம்.
காளிமுத்து, ராசு எல்லாருமே என் அப்பா அம்மாவிடம் படித்தவர்களாம். கைக்குழந்தையாக இருந்த என்னைப் பராக்கு காட்டுவதில் இருந்து, நித்திரையாக்குவது, சாப்பாடு கொடுக்கும் போது விளையாட்டுக் காட்டுவது எல்லாமே அவர்கள் என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்.
"அம்மா! பிரபுத்தம்பி எவ்வளவு பெரிசா வளந்துட்டார்ங்கம்மா" ஆசையோடு இராசு என் முகவாயைத் தடவுவார். விடைபெறும் போது அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டே
"போய்ட்டு வர்ரேன் சார்" என்று சொல்லும் காளிமுத்து ஒவ்வொரு பிரியாவிடையிலும் கண்ணீர் பெருக, புறங்கையால் விசுக்கென்று துடைக்க, அப்பா அவரின் முதுகைத் தடவி ஆறுதல் கொடுப்பதை விநோதமாகப் பார்த்திருக்கிறேன்.







எப்போதாவது ஏதோவொரு கனவிலே மலைமுகடுகளைக் குடைந்த சாலைகளில் அப்பா அம்மாவின் கைப்பிடித்து நடப்பது போலவெல்லாம் கண்டிருக்கிறேன். அது தானாக வந்த கனவா அல்லது அம்மா அந்தப் பழைய நினைவுகளை அடிக்கடி சொன்னதன் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.

இலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக அரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசம். பிரிட்டிஷ்காரன் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து தம் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் காடுகளிலும் வேலை வாங்கி இரத்தத்தை உறிஞ்சும் மலை அட்டைகளை விடத் தம் உடல் உழைப்பில் இரத்தம் சிந்தி வாழும் ஒரு சமுதாயம். கடந்த நூற்றாண்டில் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட இவர்களை மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கான வாழ்வுரிமை என்பது எழுத்தில் அரங்கேறினாலும் இன்றளவும் கைக்கெட்டாத பேதுறுதாலகால மலையின் உச்சியில் இருப்பது போல. கல்வி, பொருளாதாரத்தில் பின்மலையகப் பிரதேசங்களில் தான் தமது முதற்கட்ட ஆசிரியப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பது இலங்கையின் கல்வி அமைப்பின் ஒரு விதி. இதனால் இலங்கையின் ஏனைய பாகங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியப்பணிக்காக மலையகப் பிரதேசங்களுக்குப் போவார்கள். ஆனால் என் நினைவுக்கு எட்டிய காலங்களில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில் இருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியூஷன் கொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன். மலையகப் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியே ஏனோ தானோவென்ற நிலையில் தான் கொண்டு நடத்தப்பட்டிருக்கின்றது. இளைய சமுதாயமும் தேயிலைக் கொழுந்தைக் கையில் ஏந்த வேண்டிய நிலைக்குத் தானாகவே போகவேண்டிய அமைப்பில் தான் காலச்சக்கரம் இயங்கும் அமைப்பு. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லும் பூர்வீக பூமியான அயல் தேசமும், தமது உழைப்பையே நாட்டின் மூலதனமாகக் கொண்டியங்கும் அரசாங்கமும், முதலாளிமாருமே உதவ முன்வராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் எதுவும் செய்யாத முடியாத நிலையில் மலையகத் தமிழர்கள். ஆனால் தங்களால் கொடுக்கக் கூடியது அளவற்ற அன்பு என்பதன் வடிவங்களாக இராசுவும், காளிமுத்து, இவர்கள் போல இன்னும் பலர்.


"இலங்கையில் தமிழர்" என்ற கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் ஆய்வு நூலில் இருந்து சில பகுதிகளை முன் வைக்கின்றேன்.


சோல்பரி ஆணைக்குழுவினரின் சிபாரிசுக்கு இணங்க, டி.எஸ்.சேனநாயக்கா, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி, 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி "இந்தியர் பிரசாவுரிமை மசோதா"வை பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் முன்வைத்தார்.(Ceylon Parliamentary debates, 4 August 1948) இதைத் தொடர்ந்து மிகவும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் டிசெம்பர் 1948 வரையில் இடம்பெற்றன.

முஸ்லீம் பிரதிநிதிகளும், குறிப்பாக ரி.பி.ஜாயா, எம்.எஸ்.இஸ்மாயில், ஏ.சின்னலெப்பை போன்றவர்களும் அரசுக்கு இவ்விடயத்தில் தமது ஆதரவை அளித்தனர். இவர்களை விட இலங்கைத் தமிழ் பிரதிநிதிகளும், ஒரு சில இந்தியத்த் தமிழ்ப் பிரதிநிதிகளும் குறிப்பாக , ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், கே.கனகரட்ணம், வி.நல்லையா, எஸ்.யூ.எதிர்மன்னசிங்கம், ரி.ராமலிங்கம், ஏ.எல்.தம்பிஐயா போன்றவர்கள் கூட இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கினர்.

தமிழ்ப்பிரதிநிதிகளில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பி.குமாரசிறி, கே.ராஜலிங்கம், டி.ராமானுஜம், எஸ்.சிவபாலன், எம்.சுப்பையா, எம்.தொண்டமான் சி.வன்னியசிங்கம், வி.வேலுப்பிள்ளை போன்றவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். (பக்கம் 590 - 591 )

இந்தியத் தமிழர் பிரசாவுரிமை மசோதா விவாதத்தில் பாராளுமன்றத்தில் அதை எதிர்த்துக் குரலெழுப்பிய இரண்டு முக்கியமான தலைவர்களில் ஒருவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் மற்றையவர் சி. தொண்டமான் அவர்கள். இந்தியத் தமிழர் பிரசாவுரிமை, சட்டம் முலம் பறிக்கப்படுவதால் ஏற்படப்போகும் நிரந்தரமான பாதிப்புக்களை நன்கு உணர்ந்திருந்த இரு தலைவர்களும், மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாராளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டத்தில், மணித்தியாலக்கணக்கில் தமது வாதப் பிரதிவாதங்களை ஏற்கனவே தமிழ்ப்பிரதிநிதிகளின் உதவியுடன் உரிய முறையில் முன்வைத்த போதிலும் இறுதியில் அம் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு , இந்தியத் தமிழரின் பிரசாவுரிமை 1948 டிசெம்பர் 10 பறிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியத் தமிழரின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதன் எதிர் விளைவாக செல்வநாயகம் அவர்களும், திருவாளர்கள் வன்னியசிங்கம், நாகநாதன் போன்ற அரசியற் தலைவர்களும் தமிழர் காங்கிரசில் இருந்து விலகி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி (Tamil Federal Party) என்ற அரசியல் கட்சியை டிசெம்பர் 1949 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்கள். (பக்கம் 595, இலங்கையில் தமிழர், கலாநிதி முருகர் குணசிங்கம்)

மேற் சொன்ன விஷயங்கள் மலையகத்தில் வாழ்ந்த இந்தியத் தமிழர் பால், தலைவர்களுக்கு இருந்த கரிசனையும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் வரலாற்றுத் திருப்பத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பின்னாளில் சி.சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணி போன்றவை தனியே மலையகம் வாழ் இந்தியத் தமிழர் நலனை நோக்கிய தம் செயற்பாடுகளை அவ்வப்போது அமையும் இலங்கையின் அரசாங்கத்த்தில் சேர்வதன் மூலம் செய்யலாம் என்ற நோக்கில் செயற்பட்டார்கள். ஆனால் மலையகத் தமிழரின் வாழ்வியல் என்பது இப்படியான அரசில் அங்கம் வகிக்கும் பிரதிநிதித்துவங்கள் போல இது நாள் வரை பெருத்த மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. போராளிக்குழுக்கள் பல உருவெடுத்த போது ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைந்த தமிழீழ எல்லையாக வகுத்தது ஒரு வரலாறு.

முதலில் இந்தியத் தமிழரில் பதம் பார்த்த சிங்களப் பேரினவாதம் அடுத்துக் கைவைத்தது ஈழத்தின் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்த ஈழத்தமிழரை.

முப்பது வருஷங்களுக்கு முன்னர் நான் ஓடியாடித் திரிந்த அந்த மலைப் பிரதேசத்துப் புழுதி அளைய ஆசை இந்த ஆண்டில் கைகூடவேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக என்னோடு பயணிக்கும் நிலையில் அம்மாவோ, அப்பவோ இல்லை. தனியாக கடந்த 2011 ஆம் ஆண்டு பயணிக்கிறேன். மலையகத்தின் நுவரெலியா பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் அங்கு தங்கலாம் என்று திட்டமிட்ட பயணத்தில், ஹோட்டல் நிர்வாகத்திடம் எனக்காக ஒரு ஆட்டோவை, தமிழ் தெரிந்த ஒருவரோடு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர்களும் ஏற்பாடு செய்து கொடுத்த அந்த ஆட்டோ அடுத்த நாள் வந்தது.

ஜஸ்டின் என்ற ஆட்டோ ஓட்டுனர் நுவரெலியாவிலேயே பிறந்து வளர்ந்த அடுத்த சந்ததி. தேயிலைத் தோட்டங்களில் தன்னைக் காவு கொடுக்காமல் தன் உழைப்புக்கேற்ற நேர்மையான ஊதியம் வேண்டி ஆட்டோ ஓட்டுகிறார்.

"எங்கே சார் போகணும்" என்று என்னைக் கேட்கிறார்.
"தேயிலைத் தோட்டங்கள் பக்கமா சுற்றிவிட்டு வருவோமா" என்று நான் கேட்க, தலையாட்டியவாறே ஆட்டோவை முடுக்குகிறார். என் அந்தப் பயணத்தின் நோக்கம் தேயிலைத் தோட்டத்து வாழ் மக்களின் இன்றைய நிலையை அவர்களின் வழியாகக் கேட்டுவிடவேண்டும் என்பதே. அதை நினைவில் வைத்துப் பேச்சுக் கொடுக்கின்றேன். 
"இப்போ எல்லாம் எப்பிடிங்க போகுது தேயிலைத்தோட்டங்கள்ல பொழைப்பு நடத்துறவங்க வாழ்க்கை" என்று நான் கேட்க.
"அதையேன் கேட்கிறீங்க, காலாகாலமா ஒவ்வொருத்தனும் வந்து ஆசை காட்டி ஓட்டைப் புடுங்கிட்டுப் போறான், நம்ம ஜனங்க வாழ்க்கை அப்படியேதான் இருக்கு. தொடர்ச்சியா இருபத்தஞ்சு நாள் வேலைக்குப் போயாகணும், நாட்கூலி முன்னூத்திப் பதினைஞ்சு, இடையில ஏதாச்சும் லீவு எடுத்தா சம்பளத்துல கட் பண்ணிடுவாங்க" என்று மெல்ல மெல்ல அங்குள்ள மக்களின் அவல வாழ்வியலைச் சொல்லிக் கொண்டே போனார். முன்னர் அப்பா, அம்மா சொல்லச் சொல்லக் கதையாய் கேட்ட அதே கஷ்டங்கள் தான், ஆண்டுகள் தான் மாறியிருந்ததை உணர்ந்தேன் அப்போது. ஒரு அறை கொண்ட குச்சுவீடுகள் அடுக்கடுக்காக லயன்கள் என்று அதே ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடக்கலையோடு.

கிட்டத்தட்ட இரண்டுமணி நேர உலாத்தலில் மலையகத் தமிழரின் இன்றைய நிலை குறித்து அறிந்து கொள்ள ஜஸ்டின் உதவினார். அந்தப் பேச்சுக்களினூடு முள்ளிவாய்க்கால் காலமெல்லாம் சேதி கேட்டு மலையக மக்கள் கொண்ட ஆற்றொணாத்துயரையும் காட்டிக் கொண்டார்.

பிரிட்டிஷாரைக் கடந்து இன்று தனியார் மயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத்து வாழ்வியலும் ஒரே மாதிரித்தான். மலையகத்தமிழரைப் பொறுத்தவரை அவர்களுக்கான உறுதியான தலைமைத்துவம் இல்லாமை, சோரம் போகும் பிரதிநிதித்துவம் இவற்றால் ஆண்டாண்டுகாலமாக அவர்களின் நியாயமான வாழ்வுரிமையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். இன்றைக்குக்கு ஈழத்தின் மற்றைய பாகங்களில் இருக்கும் தமிழனும் இதே நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று நானும் இந்தப் படம் பார்த்தேன். விமர்சனங்களைப் பார்த்து விட்டுப் படம் பார்த்ததால் அவ்வளவு சுவாரசியம் இருக்கவில்லை. படமாக்கிய விதமும்,நடிப்பும் அருமை.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய பிம்பக் கோர்வை பாலாவின் ‘பரதேசி’

 

எம்.டி. முத்துக்குமாரசாமி
 



 
886447_321151111320678_1328997585_o.jpg

கல்லூரி காலத்திலிருந்தே நண்பனாக இருக்கும் ஜெர்ரி பாலாவின் பரதேசி படத்தில் கங்காணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் முதல் நாளே படத்தைப் பார்க்கப் போனேன்.  பரதேசி படமாகிக்கொண்டிருந்த மாதங்களில் ஜெர்ரியை சந்திக்கும்போதெல்லாம் காதில் கடுக்கன்களுடன், வழுக்கைத் தலையுடன், பாதி நரைத்த நீண்ட தாடியுடன் இருந்தார். படம் வெளிவந்தவுடன் பார்த்து ‘ஜெர்ரி இந்தக் காட்சியில் மேற்சொன்ன ஜோடனையில் சோபித்தார்’ என்று ஒரு வரியாவது எழுதிவிடவேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முக்கியமான பிம்பக்கோர்வையாய் இருந்தபடியால் படம் பார்க்கச் சென்றது நல்ல முடிவாகவே அமைந்தது.

அடிமைத்தனத்தின் உள்கட்டுமானங்களான உழைப்பு சுரண்டல், அதிகார படியமைப்பு, மருத்துவம், மாந்தரீகம், மதம், ஆண்மனம், பணத்தாசை ஆகியவற்றின் உறவுகளை காட்சிப்படிமங்களாக்குவதிலும் கதைக்காகக் கோர்வைப்படுத்துவதிலும் பாலாவின் பரதேசி பெரும் வெற்றியடைந்திருக்கிறது. இது குறைத்து மதிப்பிடக்கூடிய சாதனை அல்ல; இந்தப் படம் வணிகரீதியாக வெற்றியை சந்திக்குமானால்  தமிழ் சினிமாவினையே புரட்டிப் போட்டுவிடக்கூடிய வல்லமை கொண்டதாகவும் மாறிவிடும். நான் இப்படி எழுதுவதினால் இந்தப் படம் குறைகளற்ற படம் என்று அர்த்தமில்லை. உண்மையில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான குறைகள் இந்தப் படத்தில் உள்ளன. குறைகளை முதலில் தொகுத்துவிடுவது நான் சொல்ல வருவதை சரியான கோணத்தில் பார்ப்பதற்கு உதவும்.

பரதேசி படத்திற்கு மூலக் கதை பி.ஹெச்.டேனியல் எழுதிய ‘ ரெட் டீ’ என்ற ஆங்கில நாவல் இது தமிழில் இரா.முருகவேளினால் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுல்ளது. 1969இல் வெளிவந்த பி.ஹெச் டேனியலின் நாவல் முல்க் ராஜ் ஆனந்தின் “Two Leaves and a bud” என்ற அசாம் தேயிலைத் தோட்ட கொத்தடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையினை விவரிக்கும் நாவலுக்கு இணையானதாக கருதப்படுகிறது.  டேனியலின் நாவல் அதிகம் விவாதிக்கப்படவில்லையென்றாலும் முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் உருவாக்கிய விவாதங்களையொட்டி டேனியலின் நாவலும் ஓரளவுக்கு கவனம் பெற்றது. முல்க்ராஜ் ஆனந்தின் நாவல் முதலாளித்துவ பொருளாதாரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவற்றினால் விளையும் கொடுமைகளை சாடுகின்ற அதே வேளையில் இந்திய சாதி அமைப்பினையும் அது தருகின்ற உலகப்பார்வையினையும் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனந்தின் கதாநாயகத்தனமையற்ற கதாநாயகனான கங்கு இறந்தவளை அடக்கம் செய்யக்கூட பணம் புரட்ட முடியாமல் கூலித்தொழிலாளி பிடிப்பவனிடம் அடைக்கலமாக நேரும்போது அது அவனுடைய முன் ஜென்ம வினைப்பயன் என்று சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்வதிலுள்ள உலகப்பார்வையினையும் ஆனந்தின் நாவல் விமர்சிக்கிறது. டேனியலின் நாவலிலும் கயத்தாறில் காணப்படும் இரட்டைக் குவளைகள், சாதிய அடக்குமுறையினால் கூலி கொடுக்கப்படாமை ஆகியன விவரிக்கப்படுகின்றன. டேனியல் நாவலின் கதாநாயகர்களான கருப்பனும் வள்ளியும் தலித்துகள். ஏன் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி சிறுகதையிலும் இலங்கைக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளிகளாக செல்கிற மருதியும் அவள் தாயாரும் தலித்துகள்தானே? புதுமைப்பித்தன் கதையில் அவர்களால் பண்ணையாரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலுவதில்லை; சாலைகளுக்கு கப்பி போடும் வேலையும் முடிந்து விடுகிறது. அவர்கள் அவ்வாறு வேறு வழியேயில்லாமல் சலித்து சோர்ந்திருப்பதை விவரிக்கையில் புதுமைப்பித்தன்  எழுதுகிறார் “தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜெண்டு ஒருவன் வந்தான். பறைசேரியில், தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது. திரைகடல் ஓடியாவது திரவியம் தேட வேண்டுமாமே! “  முல்க் ராஜ் ஆனந்த், டேனியல், புதுமைப்பித்தன் என தேயிலைத் தோட்டக் கூலிகளாக உள்நாட்டிலோ வெளி நாட்டிற்கோ புலம் பெயர்த்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தலித்துகள் என்பதினை வெளிப்படையாகச் சொல்லும்போது பாலாவின் படம் பரதேசி ஏன் இந்த உண்மையினை பூடகமாகவேனும் சுட்டுவதில்லை? மனிதாபிமானமற்ற வன்கொடுமைகள் காலனீயத்தினால் மட்டும் நடக்கவில்லை அவை நம் நாட்டின் உள்ளார்ந்த வன்முறையான சாதி அமைப்பினாலும் நடந்தேறின. 

முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் வெளிவந்தபோது 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ‘ஸ்பக்டேட்டர்’ இதழில்  ஆனந்தின் நாவல் சித்தரிக்கின்றபடிக்கு ஒன்றும் அசாம் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை இல்லை என்று கோல்ட்வின் என்ற தேயிலைத் தோட்ட முதலாளி எழுதினார். அவருக்கு செப்டம்பர் 3, 1937 இதழில் பதிலெழுதிய ஆனந்த் தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் வைட்லி ராயல் கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அரசு அறிக்கையே ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை பாலியல், பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்துவதாகக் குறிப்பிடுவதை எடுத்துக்கூறினார். தானே நேரில் சென்று இலங்கை, அசாம் தேயிலைத் தோட்ட நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததாகவும் பதிலளித்தார். ஒரு நாவல் ஏற்படுத்திய தாக்கம் என்பது இங்கிலாந்தில் அப்படிப்பட்டதாக இருந்தது. மேலும் ஐரோப்பிய அளவிலும் நாவல்களைத் தொடர்ந்து சட்ட மாற்றங்களைக் கொண்டு வருவது, குடிமை சமூகத்தினை வலுப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது என்பது மரபுகளாகவே உருவாகியிருக்கின்றன. சுரங்கத் தொழிலாளிகளைப் பற்றிய எமிலி ஜோலாவின் நாவல் சுரங்கத் தொழில் குறித்த சட்டங்கள் சீரமைக்கப்படுவதற்கு வழிகாட்டியது, சார்ல்ஸ் டிக்கன்சின் நாவல்கள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய சட்டங்கள் இயற்றப்படக் காரணங்களாக அமைந்தன.

டேனியலின் நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் நரக வாழ்க்கையினை நேர்மையாகப் பதிவு செய்திருப்பது டிக்கன்சுக்கோ, ஜோலாவுக்கோ, ஆனந்துக்கோ எந்த விதத்திலும் குறைவுபட்டதல்ல; ஆனால் அது 1969 இல் சுதந்திர இந்தியாவில் வெளிவந்தபோது நம் குடிமை சமூகத்தில் எந்த விவாதத்தையும்  உருவாக்கவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை மையமாக வைத்து நாவல் எழுத வேண்டிய அளவுக்கு டேனியலுக்கு ஏற்பட்ட அக்கறை அவர் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டராகவும் கிறித்தவராகவும் இருப்பதானால் ஏற்பட்டது. டேனியலின் நாவலினால் ‘இன்ஸ்பையர்’ ஆகி எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசியிலோ விஷக்காய்ச்சலினால் கொத்து கொத்தாக மக்கள்  மடியும்போது பார்வையிட வருகின்ற டாக்டரோ கொள்ளை நோயினை தொழிலாளிகளை கிறித்துவத்திற்கு மதமாற்ற சந்தர்ப்பமாக பார்ப்பதாகக் காட்டப்படுகிறார். அவரும் அவருடைய வெள்ளைக்கார மனைவியும் ஜீஸஸ் குத்துப்பாட்டு ஆடி ரொட்டிகளை வீசியெறிய தொழிலாளிகள் அவற்றைப் பொறுக்கி எடுத்துக்கொள்கிறார்கள். மூலக்கதையை நாவலாக எழுதிய கிறித்தவ டாக்டரான டேனியலோ மருத்துவப்பணி செய்தது மட்டுமல்லாமல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உருவாகி அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார். டேனியலின் நாவலால் உந்தப்பட்டு எடுக்கப்பட்டதாகக் கூறும் படம் இப்படியொரு துரோகத்தினை அந்த நாவலாசிரியருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இழைத்திருக்க வேண்டாம். 

பரதேசி படக் கதையில் இன்னொரு பெரிய ஓட்டை 48 நாட்களுக்கும் மேலாக கூலித்தொழிலாளிகளாக கங்காணியால் பிடிக்கப்பட்டவர்கள் தேயிலைத் தோட்டத்திற்கு நடந்து செல்வதாக காண்பிப்பது. தென் தமிழகத்திலிருக்கும் சாலூரிலிருந்து  நடந்து தமிழகத்திற்குள்ளாக இருக்கிற எந்த மலையகத் தேயிலைத் தோட்டத்திற்கும் நடந்து செல்ல 48 நாட்களுக்கு மேலா பிடிக்கும்? என்ன கதை இது? 1939 என்பது என்ன கற்காலமா என்ன? வழியில் கோவில் குளங்கள். கிராமங்கள் எதுவுமே இல்லையா என்ன? இந்தியா முழுவதும் நடைபயணமாய் தீர்த்த யாத்திரை காலங்காலமாய் யாருமே சென்றதில்லையா? பரதேசி படத்தின் நம்பகத்தன்மையினை வெகுவாக பாதிப்பது இது. போதாக்குறைக்கு 48 நாட்களுக்கு மேலாக நடந்து சோர்ந்து தாடியெல்லாம் அடர்ந்துவிடுகிறவர்களுக்கு அதற்கேற்றாற் போல அப்ளாக்கட்டை கிராப்பில் தலையில் முடி வளர்வதில்லை. என்ன மாயமோ?

கொடி அடுப்பொன்றில் ஒட்டில் புட்டு அவித்தாற்போல நாஞ்சில் நாடனின் சிறுகதை ‘இடலாக்குடி ராசாவை’ படத்தின் முதல் பாதியில் செருகியிருக்கிறார்கள். அதனால்தான் கதை  பாலாவுடையது ஆகிவிட்டது போலும். முதல் பாதியில் வேதிகாவின் படு செயற்கையான நடிப்பும் Tomboyish கதாபாத்திர சித்தரிப்பும் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துகின்றன. வேதிகாவுக்கும் தன்ஷிகாவுக்கும் கருப்பு மையைத்தான் பூசிவிட்டார்களே கூடவே தலையில் அரைப்படி வேப்பெண்ணெயையும் தலையில் தேய்த்திருக்கவேண்டுமே என்று யாரும் சொல்லவில்லை போலும். ஷாம்பூவின் பளபளப்பில் தலை முடி வேதிகாவுக்கும் தன்ஷிகாவுக்கும் மட்டும் மின்னுகிறது. 

இசைக்கருவிகளும் இசைகளும் நிலப்பகுதிகளை ஆழ்  அகத்தில் உணர்வலை அடையாளங்களாய் எழுப்பும் தன்மைகள் உடையன என்பதினைப் பற்றி பரதேசி படத்தின் இசையமைப்பாளர் பிராகாஷுக்கு கிஞ்சித்தும் தெரிந்திருக்கவில்லை. எல்லா நாடகீயமான காட்சிகளுக்கும் சஜாங் சாஜாங் என்று மேற்கத்திய சிம்ஃபொனி போலவோ இசை நாடகம் போலவோ மேலெழும்பும் வயலின் இசை காட்சிகளை நராசப்படுத்துகிறது; அந்நியப்படுத்துகிறது. தேவரீர் காட்சிகளுக்கு ஏற்ற இயற்கையான சப்தங்களையே விட்டுவைத்திருக்கலாமே என்று கெஞ்சத் தோன்றுகிறது. பாடல்கள் எந்த பாதிப்பையும் நம்மிடம் ஏற்படுத்துவதில்லை. கேட்டால் கேளுங்கள் மறந்தால் மறந்துவிடுங்கள் ரகம்.

மேற்சொன்ன அத்தனை குறைகளையும் தாண்டி நடிப்பினால், காட்சிப்படிமங்களால், கதைகோர்வைப்படுத்துதால், வசனத்தால் பாலாவின் பரதேசி அபூர்வமான படமாகியிருக்கிறது.

நடிப்பில் அதர்வா கதாபாத்திரத்தின் பாட்டியாக நடித்திருக்கும் மூதாட்டி என் மனதினைக் கவர்ந்தார். வேதிகா (அங்கம்மா) அம்மாவிடம் ஊர்ப்பஞ்சாயத்தில் கைச்சண்டையில் இறங்குவதிலிருந்து, சத்தியம் பண்ணச்சொன்ன எரியும் சூடத்தை அலட்சியமாக அணைத்துவிட்டு போவதாகட்டும் படத்தின் பிற்பகுதியில் அங்கம்மா கர்ப்பமாக இருக்கிறாள் என்பது அறிந்து அவள் அம்மா அவளை தலை முழுகி திட்டும்போது அங்கம்மாவை கையைப்பிடித்து தன் குடிசைக்கு அழைத்து வருவதாகட்டும் மூதாட்டி அசத்துகிறார். முழுப்படத்திலேயுமே வலுவான பார்வையும் தீர்மானமான செயல் ஊக்கமும் கொண்ட கதாபாத்திரமாக அந்த மூதாட்டியே இருக்கிறாள். அவளுக்கு தன் பேரன் இப்படி பொறுப்பில்லாமல் ஒட்டுப்பொறுக்கி என்று பெயரெடுத்து அப்பிராணியாக திரிகிறானே என்ற கவலையும் நியாயமாகவே இருக்கிறது. அங்கம்மாவுக்கு பிள்ளைப்பேறு பார்த்து திருமணத்திற்கு முன்பே பிறந்த அந்த சிசுவை தொப்புள்கொடி ரத்தத்தோடு கையில் ஏந்தி பெரிய சாதனை போல கொண்டாடும் அந்த மூதாட்டி நம் மரபின் வளமான மதிப்பீடுகளின் குறியீடு.

பேரன் ஓட்டுப்பொறுக்கி  பலவீனங்களின் மொத்த உருவம். முட்டாளல்ல ஆனால் அப்பாவி யாசிப்பதற்கும் உரிமையோடு கேட்டு வாங்கி சாப்பிடுவதற்கும் வித்தியாசம் தெரியாதவனாய் இருக்கிறான். தன் இலைக்கு பந்தியில் யாரும் கவனிக்காமல் போகிறார்கள் என்றாலும் அழுகிறான் அடிபடும்போதும் அழுகிறான். தன்ஷிகா கதாபாத்திரத்தின் குழந்தையோடு விளையாடி விளையாடி உறவினை வளர்த்துக்கொள்ளும்போதும் தன் நண்பனின் மனைவி வெள்ளைக்காரனின் பாலியல் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி வருகையில் அவளை மௌனமாக ஒதுக்கி உதாசீனப்படுத்துவதிலும் அதர்வா பலவீனமான ஆணொருவனின் நல்ல கெட்ட பக்கங்களை நன்றாக வெளிப்படுத்துகிறார். அவர் பாட்டிக்கு இருக்கக்கூடிய செயலூக்கம் இவருக்கு இல்லாமல் இருப்பதே அவருடைய அடிமைத்தனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது பல சமயங்களில் சித்திரமாகிறது. 

கங்காணி கதாபாத்திரத்திற்கு வேண்டிய குரூரம் ஜெர்ரியிடம் இல்லை என்று கங்காணி அதர்வாவை அடிக்கும் காட்சியை வைத்து  நான் நினைத்தேன்; ஏனெனில் அந்தக் காட்சியில் அடி வாங்குபவனை விட அடிப்பவனின் வேதனை அதிகமாக இருப்பது போல ஜெர்ரியின் முகபாவம் இருக்கிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்தின் குரூரம்  கங்காணி வெளிப்படுத்தும் அலட்சியத்திலும் அக்கறையின்மையிலும் மனிதாபிமானமற்ற சுயநலத்திலும் இருக்கிறது அடிப்பது அடி வாங்குவதில் இல்லை என்பது பின்னர் தெளிவாகியது. கால் நடைப் பயணத்தின் போது குற்றுயிரும் குலையுருமாய் விழுந்துவிட்டவனை சுமை கூலி முக்கா பணமா என்று அலட்சியமாக உதறிவிட்டு வருமாறு உத்தரவிடும்போது, தப்பி ஓட முயன்ற அதர்வாவைப் பிடித்து இழுத்து வந்து கங்காணி வீட்டின் முன் நிறுத்தும்போது ஏன்டா என்னைத் தொந்திரவு செய்கிறீர்கள் என்பது போல நிற்கும்போது என்று ஜெர்ரி அலட்சியத்தின் மொத்த உருவமாக இருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து inheritance ஆக நம் அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் நாம் பெற்றது இந்த அலட்சியத்தோடு கூடிய சுய நலத்தையே. 

தன்ஷிகாவின் நடிப்பும் அபாரம். வேதிகாவைப் போல மிகை நடிப்பில் ஈடுபடவேண்டிய கட்டாயமில்லையாதலால் நுட்பமான பாவனைகள் கைகூடி வருகின்றன. அதர்வா தன் குழந்தையுடன் விளையாடுவது, கால் கழுவி விடுவது என்பதயெல்லாம் பார்க்கும்போது தன்ஷிகாவின் முகத்தில் தெரியும் அபாரமான மலர்ச்சிகள் மின்னல்கள் போல திரையின் சட்டகத்தையே பிரகாசமாக்குகின்றன. அதர்வாவுக்கும் அங்கம்மாவுக்கும் திருமணமாகாமலே குழந்தை பிறந்திருப்பதை அறியவரும்போது அதர்வா அதை அங்கம்மாதான் என்று நியாயப்படுத்த முயல பெண்ணைக் குற்றம் சொல்லாதே என தன்ஷிகா சீறுவதும் கச்சிதமாக இருக்கிறது. 

சிறு பாத்திரங்களில் நடித்திருக்கும் விக்கிரமாதித்யன் நம்பி முதல் கூட்டங்களில் வரும் குழந்தைகள் வரை பிசிறில்லாமல் நடித்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் வசனம் பிரமாதமாக இருக்கிறது. இயல்பான பேச்சு மொழி இவ்வளவு வலுவாக வேறெந்த தமிழ் படத்திலும் வெளிப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.

செழியனின் கேமரா வழியாக பிடிக்கப்பட்டுள்ள பதினைந்து காட்சிப் படிமங்களையேனும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். இந்தப் படிமங்களின் நகர்வில்தான் பாலாவின் பரதேசி திரைப்படம் நம் ஆழ்மனத்தோடு அந்தரங்கமாகப் பேசும் படமாக மாறிவிடுகிறது.

  1. கச்சம்மாள் தன் பேரன் அதர்வா வாய் பிளந்து தூங்குவதை உயரத்தில் உட்கார்ந்து பார்த்திருப்பது

  2. அதர்வா கிராமக் கோவிலில் தலையை ஒரு புறமாய் சாய்த்து கைகளை இல்லையே என்பது போல வைத்துக்கொண்டு கண் மூடி நின்று பிரார்த்திக்கும் காட்சி

  3. கயிற்றுக்கட்டிலில் சம்மணம் போட்டு உட்கார்ந்து சம்மணக்காலோடு பின் சரிந்து கையில் கள் கலயத்தோடு விக்கிரமாதித்யன் உனக்கு எத்தனை பெரியம்மா தெரியுமா என்று சிரிப்பது

  4. சாரி சாரியாக இடம் பெயரும் கூட்டம். வானம் முக்கால்வாசி திரையை ஆக்கிரமிரத்திருக்க ஒற்றை மாட்டு வண்டி முன் செல்ல மூட்டை முடிச்சுகளுடன் அத்தனை பேரும் வரிசையாகப் பின் செல்லும் காட்சி

  5. நீர் நிலையொன்றில் இடம் பெயரும் கூலித் தொழிலாளிகள் அனைவரும் நடைபயணத்தின் போது மிருகங்களைப் போல தண்ணீரில் வாய் வைத்து நீர் அருந்தும் காட்சி

  6. குற்றுயிரும் குலையுயிருமாய் கைவிடப்பட்டவன் தரையில் கிடக்க அவன் கை மட்டும் தூக்கி நிற்க அவன் மனைவி கூட்டத்தினரால் இழுத்துச் செல்லப்படும் காட்சி 

  7. பணப்பெட்டியை திறந்து வைத்து கங்காணி, மருத்துவர், பூசாரி உட்கார்ந்திருக்க அவர்கள் முன்னே தேயிலைத் தொழிலாளிகள் அனைவரும் குத்த வைத்து உட்கார்ந்திருப்பது

  8. தப்பி ஓடிய அதர்வாவை சிறைபிடித்து கைகால் கட்டி ஆஸ்பத்திரியில் குப்புறப்போட்டு கணுக்கால் நரம்பினை வெட்டுவது

  9. நாக்கை வெளியே நீட்டி வெள்ளைக்காரி சிலுவை போடுவதற்காக காத்திருக்கும் குள்ள உருவம் கொண்ட தொழிலாளி

  10. தேயிலைத் தோட்ட ஆங்கிலேய முதலாளி வீட்டின் முன்னால் மண்டி போட்டு கதறும் கங்காணி

  11. ஜீசஸ் குத்துப்பாட்டின் போது தொழிலாளிகளின் உணர்ச்சி மிகுந்த வெளிப்பாடுகளைப் பார்த்து கண்களை உருட்டி உருட்டி ஆனந்திக்கும் வெள்ளைக்காரி

  12. சிறு குன்றின் மேல் குழந்தையோடு உட்கார்ந்து வானம் நோக்கி கதறும் அதர்வா

  13. தினசரி அதி காலையில் கொம்பூத குடிசைகளிலிருந்து வேலைக்குக் கிளம்பும் கொத்தடிமைகள்

  14. பாறையின் மேல் தனித்து உட்கார்ந்து அழும் பெண் குழந்தை

  15. அதர்வா, வேதிகா, குழந்தை ஆகியோர் தரையில் கிடக்கும் கடைசிக் காட்சி

மேற்கண்ட காட்சிப்படிமங்களும் நான் இங்கே சொல்லாமல் விட்ட பலவும் இணைந்து, தொடர்புறுத்துதல்கள் பெற்று, நகர்ந்து நம் அகத்தில் இயங்குகின்ற காலத்தினை உருவாக்குகின்றன. அவ்வாறாக நகர்கிற திரை பிம்பக் கோர்வையில் பாலாவின் பரதேசி எங்கேயெல்லாம் மனிதர்கள் மனிதர்களை அடிமைப்படுத்துகிறார்களோ அவர்களை எல்லாம் பற்றி பேசுகிற கதையாக உலகப்பொதுமை பெறுகிறது. பாலாவின் பரதேசி தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் மகத்தான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தான்  தரவிறக்கி பார்த்தேன் தரமான பிரதி. குத்துப்பட்டு  கவர்ச்சி நடனம் என்று இருக்கிற தமிழ் திரை உலகில் அபூர்வமாய்  நந்தலாலா படத்திற்கு பிறகு  நான்  படத்தில் கவனம் செலுத்தி பார்த்த படம்.  படம் பார்த்து முடிந்த பின்னரும் முகம் இறுகிப் போன்றதொரு உணர்வு.  ஒவ்வொரு  காட்சியையும் நகர்த்திய விதம். அழகு. அதை விட இடைவேளை  உயிர்போகும் ஒருவனின்  கை விரல் அசைவோடு  வித்தியாசமான் சிந்தனை. ஆனால். தேயிலை தோட்டங்களின் இயற்கை  காடுகள் இப்படி ஒளிப்பதிவு   சொதப்பியுள்ளது அதே நேரம் கதைக்கு வேண்டிய   பின்னணி இசை  சில இடங்களில் ஒத்து வரவிலலையோ  என தோன்றுகிறது.  ஆனாலும் பாலாவின் வழைமையான இந்து சாமியார்களின்  மீதான நக்கல்  இந்த படத்தில் கிறீஸ்தவ மததத்தையும்  இழுத்திருப்பது  இரசிக்க வைக்கிறது  உண்மையும் அதுதான்.மனிதனின் வாழ்வாதார போராட்டத்திலும் தங்கள் சுய நலத்திற்காக   மதங்களின்  இருப்பை  நிறுவ  முயலும்  மதவாதிகள் ..சலுகைக்களிற்காக  தனது  இனத்தையே  விற்று சுக போகத்தில் திளைத்து   தனது வயிற்றை கழுவ நினைக்கும்  கங்காணி என பல பாத்திர்த்தில்    தன்னால் முடியும் என நிருபித்திருக்கிறார் பாலா..

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

பரதேசி - வாழ்வியலின் மறுபக்கம்

சந்திர.பிரவீண்குமார்
 

 

தமிழில் பொதுவாக நல்ல படங்கள் வருவதில்லை. அப்படி வந்தாலும் அவற்றில் வாழ்வின் யதார்த்தம் சொல்லப்படுவதில்லை என்ற குறைபாடு பொதுவாக நிலவுவதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட திரைப்படங்கள் ஆண்டுக்கு நான்காவது வரவே செய்கின்றன. இத்தகைய படங்கள் சில, பெரிய இயக்குநர்களோ, பிரபலமான நடிகர்களோ இல்லாத காரணத்தால் வெளிச்சத்துக்கு வராமல்போகின்றன,

 


பெரிய இயக்குநர்கள் பட்டியலில் இருக்கும் பாலா, பொதுவாகவே மாற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் தருபவர். யதார்த்தமும், புதுமையும் நிறைந்த கதைகளைத் துணிந்து எடுப்பவர். வணிகரீதியான அணுகுமுறையில் அக்கறை செலுத்தாமல் நமது வாழ்வில் கவனத்தை ஈர்க்க மறந்த மற்றொரு பக்கங்களைப் படமாக எடுப்பவர்.

 

சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான 'பரதேசி'யும் அதற்கு விதிவிலக்கல்ல. தேநீர் என்ற பானத்தை விரும்பிக் குடிக்கும் பலருக்கு அதைத் தயாரிப்பதற்கு எத்தனை உயிர்கள் இன்னல்களைச் சந்திக்கின்றன என்பதில் அக்கறை இருப்பதில்லை. இந்த படத்தின் மூலம் தேநீரை ரசித்துக் குடிக்கும் நம் மனதை ஒரு நிமிடமாவது உலுக்கி எடுத்திருக்கிறார்.

 

படத்தின் கதை 1939இல் தொடங்குவதாகக் காட்டப்படுகிறது. சாலூர் என்ற குக்கிராமத்தில் வசிக்கும் ஒட்டுப்பொறுக்கி என்ற ராசா (அதர்வா) உதிரி வேலைகளைச் செய்து பிழைக்கிறான். அவனை ஏளனமாகப் பார்த்து வாழும் மக்களின் ஒருத்தியான அங்கம்மாவுக்கு (வேதிகா) அவனைப் பிடிக்கிறது. கிராம மக்கள் ஏமாற்றுவதால் மனம் புழுங்கும் ராசாவை ஒரு கங்காணி பார்க்கிறான். ராசாவின் மூலம் ஊருக்குள் வரும் அவன் தன்னோடு வந்தால் வேலையும் பணமும் உத்தரவாதம் என்று ஆசை காட்டுகிறான். அவன் ஆசை வார்த்தைகளில் மயங்கி ராசாவும் சாலூர் மக்கள் பலரும் பச்சைமலை டீ எஸ்டேட்டுக்குப் பயணமாகிறார்கள். 48 நாட்கள் மக்கள் பயணப்படும் நேரத்திலேயே ஒருவன் இறந்து விழுகிறான். ஈவிரக்கமில்லாமல் மற்றவர்களை (இறந்தவனின் மனைவி உட்பட) உடனடியாக கிளப்புகிறான் கங்காணி. அதைப் பார்க்கும்போது மனம் அதிர்கிறது.

 

 

 

டீ எஸ்டேட்டில் வேலை என்பது உயிரைப் பிழிந்தெடுக்கும் சித்திரவதை என்பதைத் தவிர வேறில்லை. ராசாவைப் பொறுத்தவரை சாதிக் கொடுமையிலிருந்து வர்க்கக் கொடுமைக்குள் விழுகிறான் என்பதைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லை. உழைப்புச் சுரண்டல், உடல் நலக் கேடு, பாலியல் சுரண்டல் என எல்லாக் கொடுமைகளுக்கும் இலக்காகும் சாலூர் மக்கள் மனம் வெதும்புகிறார்கள். ஆனால் யாரும் அங்கிருந்து வெளியே செல்ல முடியாதபடி ஒப்பந்த கங்காணியின் வலை அவர்கள் மீது இறுகியிருக்கிறது.

 

ஊரில் ராசாவோடு நெருக்கமாக இருந்ததன் விளைவாக அங்கம்மா கர்ப்பமாகிறாள். அந்தச் செய்தி டீ எஸ்டேட்டுக்குக் கடிதம் மூலம் வருகிறது. ஆனால் அவளைப் பார்க்கச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. ராசா தப்பிக்க முயலும்போது பிடிப்பட்டு கணுக்கால் எலும்பு அறுக்கப்படுகிறான். அந்த நேரத்தில் வரும் கொள்ளை நோய்க்குப் பலர் பலியாகிறார்கள். அதற்காகச் சிகிச்சையளிக்க ஆங்கிலேய அரசால் அனுப்பப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவ டாக்டரும் நிலைமை பற்றிக் கவலைப்படாமல் மதமாற்றம் செய்ய நினைக்கிறார்.

 

அடுத்தடுத்த ஆண்டுகளிலும் சாலூர் மக்கள் வெளியேறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எஸ்டேட்டில் வேலை பார்க்கும் சக ஊழியரின் குழந்தையுடன் நின்று ராசா கதறி அழுகிறான். அப்போது, காதலி தன் மகனுடன் அங்கு வந்து சேர்கிறாள். யாரைப் பார்க்க வேண்டுமென்று இத்தனை நாள் ஏங்கிக்கொண்டிருந்தானோ அவளைப் பார்த்ததும் சந்தோஷம் வரவில்லை. 'நீயும் ஏன் இங்கே வந்த?' என்று அவன் அலறுகிறான். சுற்றியுள்ள தொழிலாளர்களும் திரையரங்கில் பார்வையாளர்களும் உறைந்து நிற்க, படம் நிறைவுறுகிறது.

 

காலனி ஆதிக்கக் காலத்தில் இந்திய மக்களின் உழைப்பும் இந்தியாவின் வளங்களும் எப்படிச் சுரண்டப்பட்டன என்பதைப் பற்றித் தமிழில் படம் வந்ததாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு கருவையும் களத்தையும் எடுத்துக்கொண்டு படம் உருவாக்கியதற்காகப் பாலா பாராட்டுக்குரியவர். வெள்ளையர்களும் அவர்களை அண்டிப் பிழைத்த உள்ளூர்க் கொள்ளையர்களும் சேர்ந்து சாதாரண மக்களைச் சுரண்டிய கதை என்று பரதேசியைச் சொல்லலாம். இந்தக் கதையை மிக வலுவான காட்சிகளுடன் சித்தரித்திருக்கிறார் பாலா. நாஞ்சில்நாடனின் யதார்த்தமான வசனங்கள், செழியனின் அற்புதமான ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு ஆகியவற்றுடன் அழுத்தமான காட்சி அனுபவமாக இப்படத்தை பாலா உருவாக்கியிருக்கிறார்.
 
அவரது படங்களில் வழக்கமாகக் காணப்படும் மிகை நாயக பிம்பம் இதில் இல்லை. முதத்தில் அறையும் யதார்த்தம் கனவின் மயக்கம் எதுவும் இன்றிச் சித்தரிக்கப்படுகிறது. நகைச்சுவை என்ற பெயரில் கதைப் போக்கிலிருந்து பெரிய விலகல் எதுவும் இல்லை. சோகமான முடிவு என்பது 'நல்ல' படங்களின் அடையாளமாகவே கடைபிடிக்கப்பட்டுச் சலிப்பேற்படுத்துகிறது. ஆனால் பாலாவின் படத்தில் அது பொருத்தமாக அமைந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
படத்தின் பயணம் தன்னுடைய களத்தை வந்தடையும் பயணம், சாலூர் மக்கள் மேற்கொள்ளும் பயணத்தைப் போலவே நீள்கிறது. இரண்டாம் பாதியில் ஒரே மாதிரியான காட்சிகள் வருகின்றன. டாக்டராக வரும் கிறிஸ்தவரின் பாத்திரம் படத்தின் மதிப்பைக் குறைக்கிறது. இந்த உறுத்தல்கள் இல்லாமல் இருந்திருந்தால் மிகச் சிறப்பான அனுபவமாக இப்படம் உருப்பெற்றிருக்கும்.
 
ஒரு நடிகரின் மகனாக மட்டுமே இதுவரை அறியப்பட்ட அதர்வாவுக்கு இதில் வலுவான பாத்திரம். வீரமோ போர்க்குணமோ அற்ற ராசா என்ற மனிதனை நம் கண் முன் நிறுத்துகிறார். தோல்வியின் அவலத்தைக் கச்சிதமாகச் சித்தரிக்கிறார். வேதிகா, கிராமத்தில் உற்சாகமாக காதல் புரியும்போதும், வெளியூர் சென்றுள்ள காதலனை நினைத்து உருகும்போதும் நெகிழ வைக்கிறார். தன்ஷிகாவுக்கு இதில் நாயகி வேடமில்லை என்றாலும் அழுத்தமான பாத்திரம். ராசாவின் கவலைகளுக்குத் தோள் கொடுக்கும் மனுஷியாக வாழ்ந்திருக்கிறார். மற்ற நடிகர்களும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
 
படத்தின் கதை பாலா என்று காட்டப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பெயர்கள் காட்டப்படும்போது, 'தி ரெட் டீ' (எரியும் பனிக்காடு - தமிழில்) என்ற ஆங்கில நாவலைத் தழுவி உருவான படம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் படத்தின் வசனகர்த்தாவான நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா' என்ற சிறுகதையும் திரைக்கதையில் சேர்ந்திருக்கிறது. ஏற்கனவே ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' என்ற நாவலுடன் வேறு சில அம்சங்களையும் சேர்த்து 'நான் கடவுள்' என்ற படத்தை எடுத்திருக்கிறார் பாலா. இது அவரது பாணி போலும். நாடனின் கதையையும் பெயர்ப்பட்டியலில் சொல்லியிருந்தால் கதையைப் பற்றிய சர்ச்சை குறைந்திருக்கலாம்.
 
இயல்பான கதையும் யதார்த்தமான சித்தரிப்பும் படத்தின் பலம். சாதிக் கொடுமையையும், வர்க்கக் கொடுமையையும் வெளிச்சம் போட்டிருக்கிறார் பாலா. இதுபோன்ற மாறுப்பட்ட கோணத்தில் வரும் கதையை எடுக்க ஒரு துணிவு வேண்டும். அது பாலாவுக்கு இருக்கிறது. காந்தியடிகளைப் பற்றி வெள்ளைக்கார பெண்மணி பெருமையாகக் கூறும்போது திரையரங்கில் கைத்தட்டல் பிறக்கிறது. வேலைக்கு வரும் பெண்களை வெள்ளை அதிகாரி பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்துவது கண்ணில் நீரை வரவழைக்கிறது.
 
படத்தில் வரும் டாக்டர் தனது வேலையைச் செய்யாமல் மதமாற்றம் செய்வதாக காண்பிக்கப்படுகிறது. பாதிரியார்களில் தொண்டுள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். மதமாற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டையும் கலப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் அப்போதைய காலகட்டத்தில் கிறிஸ்துவத்துக்கு மதமாற்றம் செய்து ஆங்கிலேயர்களுக்கு 'சேவை' செய்தவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே. பல படங்களில் பாதிரியார்களை நல்லவர்களாக காட்டியுள்ள நிலையில், அவர்களின் மறுபக்கத்தைக் காண்பிக்க பாலாவுக்கு படைப்புரிமை இருக்கிறது. ஆனால் அதற்காகப் பாதிரியார் தன் டாக்டர் வேலையை மறந்து தன் வெள்ளைக்கார மனைவியுடன் குத்தாட்டம் போடுவதாகவும், அவர்கள் இருவரும் வெள்ளை அதிகாரி வீட்டில் பணியாளர்களாக வாழ்பவர்களாகவும் காட்டும் அளவுக்கு பாலாவுக்குப் பாதிரியார்கள் மீது என்ன கோபம்?
 
அதே சமயத்தில் மதம் மாறி டாக்டராக வரும் கறுப்பு இந்திய டாக்டரை வெள்ளை அதிகாரி அருவெறுப்புடன் பார்ப்பதாக வரும் காட்சி ஆங்கிலேயர்களிடம் இருந்த இனவெறியை அம்பலப்படுத்துகிறது.
 
படத்தின் கதை 1925இல் ஆரம்பிப்பதாக நாவலில் சொல்லப்படுகிறது. இதை 1939ஆகக் காண்பிக்கிறது படம். அதையாவது மன்னிக்கலாம். அந்தக் காலத்தில் நடந்ததுதான் என்றாலும் 48 நாட்கள் ஒரு பெரிய கும்பல் மக்கள் புழங்கும் கிராமங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றின் பக்கம்கூடப் போகாமல் வெறும் காட்டுப் பகுதியில் பயணிப்பது படத்தின் நம்பகத்தன்மையைக் குலைக்கிறது. மேலும் படத்தில் வரும் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டம் உச்ச நிலையில் இருந்தது. அதுபோலவே தொழிற்சங்கங்கள் 1920களிலேயே தமிழகத்துக்கு வந்துவிட்டன. அவற்றைப் பற்றிய சிறு குறிப்புக்கூடப் படத்தில் வரவில்லை.
 
செழியனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைக் கூட்டுகிறது. ஜி.வி. பிரகாஷின் இசையில் 'அவுத்த பையா' மட்டுமே நன்றாக உள்ளது. மற்றவையெல்லாம் பழைய பாடல்களின் அப்பட்டமான நகல்கள். படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெறும் பாடல் அந்தக் காட்சியின் வீரியத்தைக் குறைக்கிறது.
 
இந்தப் படத்திற்கு சிறந்த மொழிப் படம், உடையலங்காரம் ஆகியவற்றுக்கான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
 
பரதேசியைப் பார்த்தவர்களுக்கு அடுத்த சில மணிநேரத்துக்காவது அதிகமான சர்க்கரை கலந்தாலும் தேநீர் கசக்கும். அந்த உணர்வை எழுப்புவதுதான் பாலாவின் கலையின் வெற்றி. படத்தின் குறைகளை மறக்கச் செய்வதும் இந்த உணர்வுதான்.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=887ed6c5-dc6b-4727-bb35-8ffcf57e08ef

 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கன நாளைக்குப்பின்  ஒரு நிமிடம் கூட ஓடவிடாது பார்த்தபடம்

நான் நினைக்கின்றேன் இந்த படத்துக்கு மொழி  தேவையற்றது என்று.

(எல்லோரும் காட்சிகளுனூடாக கதையை புரிந்து கொள்ளமுடியும்.)

இயக்குனரின் சாதனை என்பது இது போன்ற கதைகளைப்பார்க்கும்போது வரும் ஒரு அயர்வை முழுவதுமாக இல்லாதாக்கியது தான்.

கதையும் இசையும் காட்சிகளும் திரைக்கதையும் ஒன்றாக கை பிடித்து இடைவெளியின்றி  நகர்கின்றன.

இது தான் இந்த படத்தின் வெற்றியின் இரகசியம்.

 

எமக்கு மலையகத்தை எம்முன்னால் நிறுத்தவதாக அமைந்துள்ளதால் மேலும் ஒன்றிப்போக முடிகிறது.

இன்றைய மாணவர் போராட்டத்துக்கும் இது ஒரு உந்துதலைத்தரலாம்.

 

பார்க்கவேண்டிய படம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து+ஜீ.வீ =பரதேசி பாடல்கள்

 

tamil-cinema-paradesi-audio-launch-invit
தமிழ் திரையுலகே மிக ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருக்கிறது பாலாவின் புதிய படைப்பான பரதேசிதிரைப்படத்தை.இதுவரை பாலாவின் படங்களுக்கு இசைஞானியும்(சேது,பிதாமகன்,நான்கடவுள்)யுவனுமே(நந்தா,அவன் இவன்) இசையமைத்து வந்தனர்.இத்திரைப்படத்துக்கு அண்மைக்காலமாககலக்கிவரும் ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பின் ஜீ.விஇசையமைக்கும் ஒரு மிகபெரிய படம் என்று இதை சொல்லலாம்.இதுவரை பாலா,இளையராஜா கூட்டணிமிக அருமையான பாடல்களை கொடுத்து இருந்தது.இறுதியாக நான் கடவுள் திரைப்படத்துக்குஇசைஞானியின் அபாரமான இசை வெகுவாக பேசப்பட்டது.
ஆனால்  இத்திரைப்படத்துக்கு ஒரு மாற்றத்துக்காக ஜீ.வீ ஐ தெரிவுசெய்துள்ளார். வசந்தபாலன் மூலம்வெயில் படத்தில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் 25 படங்களுக்கு இசையமைத்திருந்த ஜீ.வீ இன்26வது படம் இது பாடல்கள் அனைத்தையும் பாலாவுக்கு முதல் முறையாக வைரமுத்து எழுதியுள்ளார்.
பரதேசி பாடல்கள் என் பார்வையில் எப்படி வந்துள்ளன என்பதை எனக்கு பிடித்தபாடல் வரிசையில்தருகிறேன்.

1.”ஓர் மிருகம்”

 

பாடிவர்கள்-பிரசன்னா&பிரகதி

 

இப்பாடலே இந்த ஆல்பத்திலே எனக்கு மிகவும் பிடித்தது. சோகம் இழையோடும்  அழகான பாடல்.சூப்பர்சிங்கர் பிரகதிக்கு ஒரு அட்டகாசமான  அறிமுகப்பாடல் இது.ஆரம்ப ஆலாபனையாக இருக்கட்டும் “யாத்தேகாலக்கூத்தே” என்று பாட ஆரம்பிக்கும் போது சரி  .”எங்கோ தவிக்கும் என் பிள்ளையே” என்ற வரிகளைபாடும் போது சரி பிரகதி ஒரு முதிர்ச்சி அடைந்த பாடகி போல தெரிகிறார்.நான் அதிகம் ரசிக்கும்பாடகர்களில் ஒருவர் பிரசன்னா.ஆனால் அதிக பாடல்கள் பாடுவதில்லை.இருப்பினும் இப்பாடலில்பிரசன்னா பாடும் இடங்கள் சொல்லவார்த்தை இல்லை.ஒரு வலியை பாடல்மூலம் உணர்வாககொடுக்கிறார்.
பாடலுக்கு இடையில் வரும் இரண்டு  INTERLUDE’S அற்புதம்.இப்பாடலை கேட்கும் போது படத்தின் காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்ககூடியதாக உள்ளது.ஒரு பாலா படத்துக்கான பாடல் எப்படிஇருக்கவேண்டுமோ அதிலிருந்து சற்றும் பிசகாமல் வந்திருக்கிறது இப்பாடல். இப்பாடலை  ஜீ.வீ இன்இசையை விட வைரமுத்துவின் வரிகள் தான் உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன”ஓர் மிருகம் ஓர் மிருகம்தன்னை தன் அடிமை செய்வதுமில்லை.ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும்வேலை”“வழி சொல்லவே இல்லையே வாய் மொழி கண்ணீரு தான் ஏழையின் தாய் மொழி” போன்ற வரிகள்அற்புதம்.ஆனால் இந்தப்பாடலின் மெலோடியை தூக்கிவிட்டு “பெம்மானே” பாடலின் மெலோடியைபிரதியிட்டு பாருங்கள்.பின்னணி இசைக்கு அப்படியே பொருந்தும்.
 
2.”தன்னைத்தானே”

 

பாடியவர்-கானா பாலா

 

”நடுக்கடலில கப்பல எறங்கி தள்ளமுடியுமா” என்ற ஒரு அருமையான தத்துவபாடலை பாடிஇளைஞர்களின் பெரும் ஆதரவைபெற்ற கானா பாலா இப்பாடலை பாடியுள்ளார்.இவர் இப்பாடல் ஒருகிறீஸ்தவ கானா பாடல் வகையில் அமைந்துள்ளது.கானா பாலா திரை இசைக்கு வருவதற்கு முன்னர்கிறீஸ்தவ பாடல்கள் பல பாடிவெளியிட்டது குறிப்பிடவேண்டியது.

http://www.youtube.com/watch?v=IqBDnSckBnY......

நல்ல ஒரு பாடகர் தெரிவு.நிச்சயமாக அனைவரையும் ஆடவைக்கும் இப்பாடல்.”ஆலேலூயா ஆலேலூயா’என்ற கோரஸில் கானா பாலாவின் குரலின் நெகிழ்வு அருமை.மிக அனுபவித்து பாடியுள்ளார்.நீர் பறவைபாடல்களுக்கு பின்  வைரமுத்து எழுதிய கிறீஸ்தவ சமயத்துடன் சார்ந்த இன்னொரு பாடல்.

Paradesi_Movie_Audio_Launch_Invitation_S

 

3.“அவத்த பையா”

 

பாடியவர்கள்-வந்தனா சிறீனிவாசன்,யாஷின்

 

இந்த ஆல்பத்ல இருக்கிற ஒரேயொரு காதல் பாடல். ஜீ.வீ இன் இசையில் வந்தனா பாடும் இரண்டாவதுபாடல் இது.இவர் ஏற்கனவே “ஒரு பாதி கதவு “ என்ற அழகான மெலோடி பாடலை பாடியிருந்தார்.கிராமியமணம் சொட்டும் ஒரு அழகான மெலோடி. புல்லாங்குழல்,வீணை போன்ற இசைகருவிகளின் சேர்க்கைஅருமை.ஆண் குரல் யாசின் என்ற பாடகர் பாடியுள்ளார்.இருப்பினும் அவரது குரலில் ஜீ.வீ இன் பாதிப்புதெரிகிறது.  இப்பாடலிலும் வைரமுத்து தனது காதல் மொழியை எழுதியுள்ளார்.பாடல் வரிகளில் கிராமத்துவார்த்தைகள் அழகாக கையாண்டுள்ளார்.சர சர சாரக்காத்து பாடலுக்கு பின்னர் வைரமுத்துவின்இன்னொரு கிராமத்து காதல் பாடல் எனலாம்.

                                 

 
4.”ஓ செங்காடே’

 

பாடியவர்கள்-மதுபாலகிருஷ்ணன்,பிரகதி

 

“ஓ செங்காடே சிறு கரடே போய்வரவா” என்று தனது காந்தகுரலால் மதுபாலகிருஷ்ணன் பாடும் போதேபாடலின் போக்கு புரிந்துவிடும்.பாடல் வரிகளில் அத்துணை வலிகளும் உணர்வுகளும்கோர்க்கப்பட்டுள்ளது. இப்பாடலிலும் வைரமுத்துவே தெரிகிறார்.வழமையாக பாலா படங்களில் வரும்இருட்டு வாழ்க்கை வாழும் மக்களின் நிலையை எடுத்தியம்பும் ஒரு பாடல். “கங்காணி பேச்சை நம்பி சனம்போகுதே நண்டுகள் கூட்டிகொண்டு நரி போகுதே’ போன்ற வரிகள் இப்பாடலின் இன்னொருபரிமாணம்.இந்த ஆல்பத்திலே மிக அற்புதமான வரிகள் அமைந்த பாடல் இது.

 

5.“செந்நீர் தானா”

 

பாடியவர்-’கங்கை அமரன்”,ப்ரியா ஹிமேஷ்

 

பாலா படத்தில் வரும் அந்த இளையராஜா எஃபக்ட் இப்பாடல். ”பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலின்அகத்தூண்டுதல் எனவும் சொல்லலாம்.இசைஞானி இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில்கங்கை அமரனை வைத்து இப்பாடலை பாடவைத்துள்ளனர்.ஒவ்வொரு வரிகளும் முதலாளித்துவவர்க்கத்தால் வெயில்மழை என்று பாராது உழைக்கும் ஏழைகள் படும் துன்பத்தை பாடலாக்கியுள்ளார்வைரமுத்து. 

 
tamil-movies-paradesi-audio-launch-still
 
 

மொத்தத்தில் ஜீ.வீ பிரகாஷின் திரை இசை வரலாற்றிலே மதராசபட்டணம் பாடல்களுக்கு அடுத்ததாக நான்அதிகம் ரசித்தது பரதேசி பாடல்களையே ஆகும்.மேலும் இதுவரை ஜீ.வீ இசையில் வந்த பாடல்களில்அதிகம் உணர்வுகளை கோர்த்த பாடல்கள் இவை.இவற்றை விட வைரமுத்துவின் அனுபவ வரிகள்பாடல்களை எங்கோ கொண்டு போய் சேர்க்கிறது.பாடல் வரிகள் படத்தோடு மிக ஒன்றியவையாகஇருக்கின்றன.பாலா இதுவரைகாலமும் இசைஞானி கூட்டணியில் இயங்கியமையால் வைரமுத்துவுடன்கைகோர்க்க முடியவில்லை. இப்படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.

பாடல்களை கேட்கும் போது வைரமுத்துவிற்காகவே ஜீ.வி.பிரகாஷ் இப்படத்துக்குதெரிவுசெய்யப்பட்டு இருக்கலாம்.வழக்கமாக பால படங்களின் ஓடியொவில் 5,6 பாடல்கள்வரும் ஆனால் படத்தில் ஒரு சில பாடல்களே தேவைக்கேற்ப பயன்படுத்தபடும். ஆனால் இத்திரைப்படத்தில் காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னரே பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஜீ.வீ. இது பாலா போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு ஆரோக்கியமான ஒரு நடவடிக்கை ஆகும்.படத்தோடு பார்க்கும் போது பாடல்கள் இன்னும் உயிருள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதுவரை பாலாபடங்களில் பணியாற்றிய நடிகர்களிலிருந்து தொழிநுட்பக்கலைஞர்கள் வரை தேசியவிருதுகளை வாங்கிகுவித்திருக்கின்றனர்.ஆனால் பாலாவின் படங்களுக்கு  இசையமைப்புக்கோ பாடல் வரிகளுக்கோதேசியவிருது கிடைக்கவில்லை.இப்பாடல்கள் மூலம் அது நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!!!

இவன் இரோஷன்.

 

http://idiotirosh.blogspot.ca/2012/12/blog-post.html

 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனக்கு பரதேசி படம் பிடிக்கவில்லை ?

- ஞாநி

Parathesi-1.jpgஎந்தப் படத்தையும் முழுமையாக ஏற்கவும் முடியாது. நிராகரிக்கவும் முடியாது என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. இது ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மை போல தோன்றும். ஆனால் இதே வாதம் படு மோசமான மசாலா படங்களுக்கும் பொருந்தும். அவற்றில் கூட ஓரிரு ஏற்கத்தக்க அம்சங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு படம் வெகுஜன பார்வையாளர்கள் முன்பு வைக்கப்படும்போது அவர்கள் அந்தப் படத்தை எப்படி புரிந்துகொள்ளும் வாய்ப்பை அந்தப் படம் தருகிறது என்பதே எனக்குப் பிரதானமானது. வெகுஜனங்களுக்கான படத்தில், சிறப்பான அம்சங்கள் அறிவுஜீவி ஆய்வாளர்களுக்கும் திரைவிமர்சன மேதைகளுக்கும் மட்டுமே புரிகிற மாதிரியும், சாதாரணப் பார்வையாளருக்கு அவை எட்டாத விதத்திலும் இருந்தால் எனக்கு அது உடன்பாடில்லை. ஒரு படத்தின் இறுதியில் ஒற்றை செய்தியாக ஒரு சிறந்த கருத்து சாதாரணப் பார்வையாளர்களுக்குப் போய் சேர்ந்துவிடுகிறது என்பதற்காக அந்தப் படத்தில் மறைக்கப்படும், மழுப்பப்படும் திரிக்கப்படும் திணிக்கப்படும், கருத்துகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்கமுடியாது. பார்வையாளர்கள் அந்தக் கருத்துகளையும் படச் செய்தியுடன் சேர்ந்தே ஏற்றுக் கொள்ளச் செய்யப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குறைகள் சிறியனவாக உள்ளனவா, அதிகமாக் உள்ளனவா என்பதை கவனித்தே ஆகவேண்டியிருக்கிறது. இதன் காஸ்ட் பெனஃபிட் ரேஷியோ முக்கியமானது.

பரதேசி படத்தைப் பற்றி விரிவாக எழுத எனக்கு விருப்பமில்லை. என் சக்தியையும் நேரத்தையும் அதில் வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. எனவே என் கருத்துகளை சுருக்கமாக மட்டுமே சொல்லப் போகிறேன். இந்த ஒவ்வொரு கருத்தையும் விரிவுபடுத்திப் பேச என்னிடம் விஷயம் உண்டென்றபோதும்.

எரியும் பனிக்காடு என்ற டாக்டர் டேனியலின் டாக்கு-நாவலையும் நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசா என்ற சிறுகதையையும் பாலா இணைத்து தன் திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.இரண்டு கதைகளும் கருப்பொருளில் தொடர்புடையவையே அல்ல. எனில், இதற்கான அவசியம் என்ன ? எரியும் பனிக்காடு அதனளவில் முழுமையாகப் படமாக்கப்பட்டாலே மூன்று மணி நேரப் படமாக எடுக்கும் சாத்தியங்களும் பாத்திரங்களும் உள்ள நாவல். ஆனால் அதில் பாலா தன் படங்களில் வழக்கமாக வைத்திருக்ககூடிய பார்முலாவுக்கான பாத்திரம் எதுவுமில்லை. சேது, பிதாமகன் விக்ரம் பாத்திரங்கள் போலவோ அகோரி போலவோ ஒரு பாத்திரத்தை கதாநாயகனாக வைக்கும் பார்முலா பாலாவுடையது. இடலாக்குடி ராசா அதற்கு தோதான பாத்திரம். இதே போல பரதேசி படத்தில் வரும் பிரதான பெண் பாத்திரங்கள் எல்லாம் பாலாவின் முந்தைய படங்களில் லைலா, சங்கீதா போன்றோர் செய்த பாத்திரங்களின் மறுவார்ப்புதான். இவர்களின் உடல்மொழி எல்லாம் தொடர்ந்து பாலாவின் முந்தைய படங்களில் இருக்கும் அதே செயற்கையான உடல்மொழிதான். இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாத ஒரு படைப்பு எரியும் பனிக்காடு. அதில் தன் சைக்கிக் பர்வர்ட்டட் பார்முலாவை பாலா புகுத்திச் சிதைத்திருப்பதுதான் என்னைப் போன்றோரைக் கண்டிக்க வைக்கிறது. லைஃப் ஆஃப் பை நாவலை பாலாவிடம் படமாக்கக் கொடுத்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்தால் இந்த சிக்கல் புரியும்.

எரியும் பனிக்காடு நாவலை எழுதிய டாக்டர் டேனியல் ஒரு விஷயத்தை தெளிவாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை 1900களில் தேயிலைத்தோட்டங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அப்போது அங்கே வேலை பார்த்தவர்களிடம் அவர் கேட்டு பதிவு செய்ததன் அடிப்படையில் எழுதுவதாக் சொல்கிறார். தன் கதையின் ஆரம்பத்திலேயே கதை நடக்கும் வருடம் 1925 என்று சொல்கிறார். அந்தக் கிராமம் அரிஜனங்கள் வாழும் கிராமம் என்று எழுதுகிறார்.

பாலாவோ தன் படத்தில் கதை நடப்பது 1939ல் என்கிறார். அதுParathesi-2_1.jpgதலித்துகளின் (அரிஜனங்களின்) கிராமம் என்பதற்கான குறிப்பு எதுவும் என்னைப் போன்ற பாமர பார்வையாளனுக்குப் புரியும் விதத்தில் படத்தின் முதல்பகுதியில் கிடையாது. அந்த கிராமம் பொய்யானது. அதில் இருக்கும் மனிதர்கள் தட்டையாக எல்லாரும் பாலாவின் சைக்கிக் பொம்மலாட்ட பொம்மைகளாக இருக்கிறார்கள். கிராமத்தில் வர்க்க அடுக்கோ சாதி அடுக்கோ தெரியவருவதில்லை. சோழர் காலத்திலிருந்து வரிவசூல் முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்ட தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அதற்கான அரசுப் பிரதிநிதி உண்டு. ஆட்சி சோழர் முதல் இங்கிலீஷ்காரர்கள் வரை மாறினாலும் இந்தப் பிரதிநிதியும், ரெவின்யூ அமைப்புகளும் தொடர்ந்து வருகின்றன. பாலாவின் கிராமத்தில் எதுவும் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கிராமம் 1939ன் தமிழ் கிராமம் என்பது பெரும்பொய். ஏனென்றால் 1939 என்பது இன்னும் எட்டே வருடங்கள்தான் சுதந்திரத்துக்கு அப்பால் இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் உச்சமே கடந்துவிட்ட காலம் அது கடைசி போராட்டமே 1942தான். பெரியார் 1917லிருந்து 1924 வரை காங்கிரசில் இருந்துவிட்டு பின் சுயமரியாதை இயக்கம் நடத்திவிட்டு அடுத்து நீதிக்கட்சியிலும் இணைந்துவிட்டார். 1920 முதல் 1937க்குள் நீதிக்கட்சி 13 வருடம் ஆட்சி நடத்தியிருக்கிறது. 1939ல் பெரியார்தான் அதன் தலைவர். தனி திராவிட நாடு கோரி பெரியார் மாநில மாநாடு நடத்தியது 1939ல்தான். முதல் பாதி முழுக்க பாலா காட்டும் கிராமத்தில் இதற்கான எந்த அடையாளமும் கிடையாது. படத்தின் கடைசி பகுதியில் மட்டும் திடீரென இரண்டொரு வசனங்களில் காந்தியும் காங்கிரசும் தலை நீட்டுகிறார்கள்.

பாலா காட்டும் தேயிலை எஸ்டேட்டும் 1939ன் எஸ்டேட் அல்ல. ஏனென்றால் 1936 லேயே தேயிலைத் தோட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. அதற்கான விழிப்புணர்ச்சி அங்கே தொடங்கிவிட்டது. பாலாவின் எஸ்டேட்டில் அதற்கான அறிகுறியே இல்லை. காரணம் நாவல் 1925ல் நடப்பதாக டேனியல் சொன்னதை பாலா 1939 என்று மாற்றிய தவறுதான். ஏன் 1939 என்று மாற்றினார் ?

எழுத்தாளர் டாக்டர் டேனியல் 1940 எஸ்டேட்டுக்குள் வந்தார். பாலாவின் படத்தில் வரும் கிறித்துவ டாகடர் பரிசுத்தமும் அப்போதுதான் வரவேண்டும் என்பதற்காக கதையை பாலா 1939ஆக மாற்றியிருக்கிறார். அதாவது டேனியல் பாத்திரத்தைத்தான் பரிசுத்தமாக பாலா இழிவுபடுத்த் திட்டமிட்டிருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.பாலாவின் இந்துத்துவ அரசியல் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் ஆய்வு செய்யப்படவும் வேண்டியதாகும். டேனியலின் நாவலில் அவர் தன்னையே ஆபிரகாம் என்ற டாக்டர் பாத்திரமாக்கி தான் எஸ்டேட்டுக்கு வந்ததையும் தன் அனுபவங்களையும் சொல்கிறார். தொழிலாளர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை விவரிக்கிறார். அந்த கிறிஸ்துமஸ் அனுபவங்களை பாலா எடுக்கவில்லை. நேர்மாறாக டேனியலைக் கேவலப்படுத்தி குத்தாட்டம் போட்டு மதமாற்றம் செய்யும் கோமாளியாகக் காட்டியிருக்கிறார். கதை உரிமையை படமாக்க பாலாவுக்குக் கொடுத்த டேனியலின் வாரிசுகள் இதற்காக பாலா மீது அவதூறு நஷ்ட ஈடு வழக்கு போட போதுமான முகாந்தரம் இருக்கிறது. மத போதகர்களை கிண்டலடிப்பதையும், படத்தின் முதல்பாதியில் நாஞ்சில் நாடனின் சரமாரியான தென் தமிழக பாலியல் கெட்ட வார்த்தை வசவுகளையும் யூ படத்தில் அனுமதித்திருக்கும் சென்சார் போர்ட், இனி பாலாவின் ஆன்மீக வழிகாட்டி ஜக்கி, ஜயேந்திரர், பிஜே போன்றோரை கிண்டல் செய்தும், சென்னை தமிழ் வசவுகளை சரமாரியாக அனுமதிக்கவும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.

டேனியலின் நாவலில் கங்காணிகளும் அதே சாதியினர்தான். அதுதான்Parathesi-2.jpgமுதலாளிகளின் தந்திரம். பாலா படம் அந்த தந்திரம் பற்றிப் பேசுவதில்லை.டேனியல் நாவலில் முழு கிராமமும் நடை பய்ணமாக புறப்பட்டு செல்வதில்லை. ஒரு ஜோடி ஊரை விட்டு பழனிக்குப் போய் ரயிலில் கங்காணியால் அழைத்து செல்லப்பட்டு போகிறது. பாலா படத்தில் எல்லாரும் போகிறார்கள். ஏன் எல்லாரும் போகிறார்கள்? கடும் பஞ்சமா? ஊரில் வேலை இல்லையா? அதெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை. ஊரை பஞ்சக் கொடுமையில் சிக்கி தவிக்கும் ஊராகவே பாலா காட்டவில்லை. குதூகலமாக கல்யாணம் நடக்க விருந்து சாப்பிடும் சூழல்தான் காட்டப்படுகிறது. அதையடுத்து பெரும் பஞ்சம் என்ற ஒரு குறிப்பு கூட கிடையாது. ரயிலில் செல்லாமல், நடந்து எஸ்டேட்டுக்கு செல்பவர்கள் 48 நாள் நடக்கிறார்களாம். அப்படி நடந்தால் உத்தரப் பிரதேசத்துக்கே போய்விடலாம். தென் தமிழ்நாட்டிலிருந்து மேற்கு வால்பாறைக்கு செல்ல பத்து நாள் நடந்தாலே போதும். பாலாவின் ஜனங்கள் நடந்து போகிற வழியில் 48 நாட்களிலும் வழியில் ஒரு ஊர் கூட கிடையாது. வழி நெடுக பொட்டல் காடுதான். இப்படி எல்லாமே பொய். எஸ்டேட்டில் ஆங்கிலேய முதலாளி பாத்திரம் மசாலா சினிமாவின் காமெடி வில்லன் மாதிரி இருக்கிறது. குமரிமுத்து மாதிரி அவர் தோட்டப்பெண் தொழிலாளிகளிடம் விஷமம் செய்கிறார். டேனியலின் நாவல் எஸ்டேட் அதிபர்கள் எப்படி பாலியல் குற்றங்கள் செய்வார்கள் என்பதை துல்லியமாக சொல்லியிருக்கிறது, ஆசைப்படும் பெண்ணை பங்களாவுக்கு அனுப்பச் சொல்வார்களே ஒழிய, திறந்த வெளியில் களத்தில் வம்பு செய்யமாட்டார்கள். அப்படி செய்யக்கூடியவர்கள் மேஸ்திரிகள், கங்காணிகள் போன்றோர்தான். இந்த நுட்பங்களெதிலும் பாலாவுக்கு அக்கறையில்லை. இவரைத்தான் மகா இயக்குநர் என்று ஜால்ரா அடிக்கிறது ஒரு கூட்டம்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லப் போவதில்லை. இப்படியாக பாலாவின் சைக்கிக் பார்முலாவில் மொண்னையாக எடுக்கப்பட்ட ஒரு படம்தான் பரதேசி. ஒவ்வொரு முறை டீ குடிக்கும்போதும் தோட்டத் தொழிலாளிகளின் ரத்தமும் வியர்வையும் நினைவுக்கு வருவதை சாதித்த ஒரே படம் சில வருடங்கள் முன்பு ம.க.இ.க எடுத்த ஆவணப்படம்தான். தொழிலாளர்களின் அடிமை நிலையைப்பற்றிய சோகத்தையும் அதையொட்டிய நம் கோபத்தையும் கமர்ஷியல் பார்முலாவுக்குள்ளேயே நின்று எடுத்த வசந்தபாலனின் அங்காடித்தெரு ஏற்படுத்தியதில் கால்வாசியைக் கூட பரதேசி எனக்கு ஏற்படுத்தவில்லை. கலைப்படம் போல பொய்த் தோற்றம் காட்டும் ஒளிப்பதிவும், இசையும், படக்குழுவினரின் கடும் உழைப்பும் ஒரு படம் சரியானதாக இருப்பதற்குப் போதாது. படத்தில் ஒரே நிஜமான பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை அளித்திருப்பது அதர்வாவின் பாட்டியாக நடித்திருக்கும் கச்சம்மாள் மட்டும்தான். அவரை நடிக்கவைத்ததற்காக பாலாவைப் பாராட்டுவதைத் தவிர வேறு எதற்காகவும் என்னால் பாலாவைப் பாராட்ட முடியாது.

 

முகநூலில் இருந்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.