Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

Life of Pi - ஒரு IMAX அனுபவம்...

விற்பனையில் சக்கைபோடு போட்ட, “உலகின் தலை சிறந்த” என்ற அடைமொழியைக் கொண்ட பல நாவலகள், பல முறை திரைப்படங்களாக உருமாறி இருக்கின்றன. ஒரே கதை பல முறை பல்வேறு காலகட்டங்களில் திரைப்படங்களாகியிருக்கின்றன.அவற்றில் பல "மூலத்தை கொலை செய்வதற்காகவே எடுக்கப்பட்டவை" என்ற காட்டமான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், சில படங்கள் நாவலின் தரத்தைக் கெடுக்காமல் திரைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து, பாராட்டையும் வசூலையும் குவித்துள்ளன.Harry Potter, Twilight Series, Lord of the Rings போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

துடைப்பக்கட்டையில் பறக்கும் மந்திரவாதிச் சிறுவன் கதையையும், உருகி உருகி காதலிக்கும் வேம்ப்பயர் கதையையும், மனிதர்களுக்கும் தீய சக்திக்கும் நடக்கும் போர்க்கதையையும் படமாக்கிவிட்டு காலரைத் தூக்கித் திரிந்த ஹாலிவுட் காரர்களது கண்களை, “படமாக்கவே முடியாது” என்ற முத்திரையுடன் வெளிவந்த ஒரு நாவல் பல வருடங்களாக உருத்திக்கொண்டிருந்திருக்கிறது அந்த நாவல், 2001ஆம் ஆண்டு Yann Martel என்னும் கனடா நாட்டு எழுத்தாளர், இந்திய சிறுவனனைப் பற்றி எழுதிய'Life of Pi'. இந்த நாவலை படமாக்குவது உண்மையிலேயே அவ்வளவு சுலபமல்ல. காரணம் படத்தின் நாயகன் பாண்டிச்சேரி வாழ் இந்தியச் சிறுவன் என்பதால் அல்ல; அவனுடன் கதை முழுக்க பயணப்படும் மற்றுமொரு கதாபாத்திரம். அந்தக் கதாப்பாத்திரம், இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான, பெங்கால் புலி!

Life-Of-Pi-Poster.jpg

பிரதான கதாபாத்திரமான Pi யை, மற்றுமுள்ள ஒரே கதாப்பாத்திரமான புலியுடன் நடிக்க வைக்க வேண்டும்.தரையில் என்றால் பரவாயில்லை. பெரும்பாலான கதை நடக்கும் களம், கடல் / தண்ணீர் என்பதால் தான் பிரச்சனை. ஒரே போடாக எந்த நேரத்திலும் கதாநாயகனை புலி போட்டுத்தள்ளிவிடும்.Narnia வில் சிங்கத்தைச் செய்தது போல், இங்கும் கிராபிக்ஸில் ஒரு புலியை வடிவமைத்து விடலாம். ஆனால் படம் முழுவதும் வலம் வர வேண்டிய அந்தப் புலி, நிச்சயம் சில இடங்களிலாவது துருத்திக்கொண்டு "நான் கிராபிக்ஸ் புலி" என்று பள் இளிக்கும். படத்தின் உயிர்நாடி புலிக்கும் Pi க்கும் இடையே உள்ள உறவு. பொம்மைப் புலியைக் காட்டி அதைக் கெடுக்க முடியாது. படத்தின் மிகப்பெரிய சவால் ‘புலி’ தான். எனவே காத்திருந்தார்கள். Avatarருக்காக James Cameron காத்திருந்ததைப் போல.

2003ஆம் ஆண்டே FOX 2000 PICTURES, Life of Pi கதையை திரைப்படமாக்க அனுமதியைப் பெற்றிருந்தாலும்,யாரை இயக்குனராக்குவது என்பதில் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிலவியிருக்கிறது. முதலில் இந்தக் கதையை இயக்கக் கேட்டது Manoj K. Shyamalan இடம் தான். இவரும் கதையின் நாயகனானPi போல ஒரு பாண்டிச்சேரிக்காரர் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் விலகிக்கொண்டார்.பின்னர் Y tu mamá también, Children of Men, Harry Potter and the Prisoner of Azkaban படங்களை இயக்கிய Alfonso Cuarón ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரும் விலகிக்கொள்ளAmélie பட இயக்குனரான Jean-Pierre Jeunet வந்தார். அவரும் விலக, இறுதியாக 2010 ஆம் ஆண்டில் தான் Ang Lee இயக்குனராக உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.

anglee.jpg

படத்தின் பட்ஜெட் என்று 70 மில்லியன் டாலர்களை Lee கேட்க, FOX 2000 PICTURES கொஞ்சம் தயங்கியிருக்கிறது (படத்தின் பட்ஜெட் 120 மில்லியன் டாலர்கள்.அதாவது இந்திய மதிப்புப்படி 6,66,36,00,000 ரூபாய் மட்டுமே). ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல்Lee தனது படத்தின் பிரதான டைட்டில் கேரக்டரான Piscine Molitor Patel என்கிற Pi யைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்படி 3,000 பேர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், Suraj Sharma, படத்தில் 17 வயதுPi ஆக புலியுடன் நடித்த இவருக்கு இப்பொழுது வயது 19. Pi யின் தந்தையாக நடித்திருப்பவரையும் நமக்குத் தெரியும். ஸ்ரீதேவியின் அலட்டல் பீட்டர் கணவனாக Engilish Vingilish ல் வந்தAdil Hussain. அம்மாவாக தபு. இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது நளினமான பரதத்தால் நம்மைக் கவர்ந்து விடும் தமிழ் பெண் ஆனந்தியாக, ஷ்ரவந்த்தி சாய்நாத். இவர் படத்திற்குள் வந்த கதையை இந்த இணைப்பில் படிக்கலாம். சுட்டி டிவியில் படத்தின் இயக்குனர் Ang Lee உடன் உட்கார்ந்து இவர் பேட்டி கொடுப்பது போன்ற விளம்பரம் கண்டேன்.விளம்பரத்தின் இறுதியில் Ang Lee, “I Love Chutti TV” என்று சொன்னது தான் செம காமெடி.இறுதியாக Irfan Khan. சமீபத்திய Spiderman ல் வந்தது போல மொக்கை ரோலில் வராமல் பிரதான கேரக்டரில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது கதைசொல்லல் வழியாகத்தான்,கதை நமக்குச் சொல்லப்படுகிறது.

“After hearing my story you will believe in God” – இது பிரதான கதாப்பாத்திரமான Pi, தன்னை பேட்டி எடுக்க வரும் எழுத்தாளரிடம் சொல்லும் வசனம். எழுத்தாளர் நம்புகிறாரோ இல்லையோ,படத்தை எடுத்து முடிந்தவுடன் இயக்குனர் நிச்சயம் கடவுள் இருக்கிறார் என்பதை நம்பியிருப்பார்.அப்படிப்பட்ட, சாத்தியமே இல்லாத ஒரு படத்தை வெற்றிகரமாக எடுத்திருக்கிறார் இந்த தைவானில் பிறந்து, ஹாலிவுட்டில் பிரபலமாகி, இந்தியாவிற்கு வந்து கனடா நாடுக்காரர் எழுதிய நாவலைப் படமாக்கிய Ang Lee. திரையில் நாம் காண்பது படமா அல்லது நிஜமா என்று தெரியாத வண்ணம் நாம் படத்தினுள் மூழ்கிப் போகிறோம். அகண்டவெளியில் நடப்பதாக நமக்குக் காட்டப்படும் பல காட்சிகள், உண்மையில் நான்கு சுவற்றுக்குள் எடுக்கப்பட்டு, பின் வேறொரு நான்கு சுவற்றுக்குள் வைத்து டெக்னாலஜி என்னும் பிரம்மாவால் உருவாக்கப்பட்டவை என்பதை உண்மையான பிரம்மனே இறங்கி வந்து சொன்னாலும் நாம் நம்ப மாட்டோம். அந்த அளவிற்கு நம்மை கட்டிப்போடுகிறது திரையில் நாம் காணும் இந்த மனிதன் உருவாக்கிய டிஜிட்டல் உலகம். புயலில் சிக்கித் தள்ளாடும் கப்பலைக் கண்டு உயிர்பயமும், அந்தக் காட்சி முடியும் இடத்தில் “உயிருடன் தான் இருக்கிறோம். நாம் காண்பது திரைப்படம் தான், உண்மையல்ல” என்கிற நிம்மதியும் எனக்கு வந்தது. 3Dயில் படம் பார்த்ததால் இத்தோடு நின்று விட்டது. 4D, 6D தியேட்டர்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து,அந்த குறிப்பிட்ட காட்சியில் கொஞ்சம் தண்ணீரை எங்கள் மீது பீச்சியடித்து, அப்படியே கொஞ்சம் காற்றையும் அதிகமாக வீசியிருந்தால், நிச்சயம் எனக்கெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பெரிய பஞ்சாயத்து ஆகியிருக்கும்.

படத்தில் நாம் பார்க்கும் புலி, கிராபிக்ஸ் புலியாம்! நிஜப் புலியையும், கிராபிக்ஸ் புலியையும் கலந்து கட்டி எடுத்திருக்கிறார்களாம்.ஹும்ம்ம்… இரண்டு முறை படத்தைப் பார்த்தும் என்னால் இதை நம்ப முடியவில்லை. உண்மைக்கும்,பொய்க்கும் இவ்வளவு ஒற்றுமை இருப்பது, நிச்சயம் சரியல்ல. இவ்வளவு தூரம் எந்தப் படமும் என்னை திரையினுள் இழுத்துக்கொள்ளவும் இல்லை, தனது நம்பகத்தன்மையால் இவ்வளவு ஏமாற்றியதுமில்லை. “சாத்தியமில்லை” – என்ற சொல்லயே இனி அகராதியில் இருந்து எடுத்துவிடலாம் போல. மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள் ஹாலிவுட்காரர்கள். Ang Lee – உலக சினிமாவின் தற்போதைய பிரம்மா இவர் தான் # SALUTE!

James Cameroon இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார், Peter Jackson வரிசையில் நின்று கொண்டிருக்கிறார். டிசம்பரில் ரிசல்ட் தெரிந்து விடும்.

இந்தியாவின் மதநம்பிக்கையையும் அதில் உள்ள குழப்பங்களையும் இவ்வளவு லாவகமாக யாரும் விமர்சித்தது இல்லை. 70களின் இந்தியாவையும் தத்ரூபமாகவே காட்டியிருந்தார்கள். பிரென்ச் நீச்சல் குளத்தின் நினைவாக பெயர் வைக்கப்பட்ட இந்தியச் சிறுவனான Pi, தனது குடும்பத்துடனும், தனது தந்தை நடத்தும் மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுடனும் கனடாவிற்கு போகும் ஒரு ஜப்பானிய சரக்குக் கப்பலில் பயணிக்கும் போது, கடும்புயலால கப்பல் மூழ்க, ஒரு உயிர்காப்புப் படகில் ஏறி உயிர் தப்புகிறான். உடன் வந்த அனைவரும் இறந்துவிட, பசிபிக் பெருங்கடலில், அந்த சிறிய படகில் இவனுடன் சில விலங்குகளும் சேர்ந்து கொள்கிறன அவை. ஒரு அடிபட்ட வரிக்குதிரை,ஒரு கழுதைப்புலி, ஒரு ஒராங்குட்டான் மற்றும் Richard Parker என்னும் புலி!

சுற்றிலும் நீர் இருக்க, உண்பதற்கு எதுவுமில்லாமல் முதலில் அடிபட்டு அசையமுடியாமல் படுத்திருக்கும் வரிக்குதிரையை வேட்டையாடுகிறது கழுதைப்புலி. பின் ஒராங்குட்டானும் அந்த வெறிபிடித்த மிருகத்திற்கு உணவாவதைக் கண்டு கோபமடையும் Pi, கழுதைப்புலியை தாக்கப் பாய்ந்து வர,நடுவே புகுந்து கழுதைத் புலியைக் கொல்கிறது புலி. Survival of the fittest. இப்பொழுது படகில் இருப்பது Pi யும் புலியும் மட்டும் தான். சில நாட்களுக்கு, இறந்த விலங்குகளை தின்று புலியும், படகில் இருக்கும் பிஸ்கட்டுகளைத் தின்று Pi யும் உயிர் வாழ்கிறார்கள்.எப்படியும் உணவு தீர்ந்தவுடன் புலி, தன்னைத் தாக்கிக் கொன்று விடும் என்கிற பயத்தால்,புலிக்காக மீன் பிடிக்கத் தொடங்குகிறான் Pi. புலி மேல் உள்ள உயிர் பயமே Pi யை உயிரோடு இருக்க வைக்கிறது. புலி, Richard Parker க்கும் Pi தேவை, இல்லையென்றால் உணவு (மீன்)எதுவும் கிடைக்காமல் செத்துவிடும் (ஒரு முறை தண்ணீருக்குள் மீன் பிடிக்கக் குதித்து தோற்றுப் போகும் Richard Parker புலி). Survival of the fittest என்பதையெல்லாம் கடந்து வெறும் Survival மட்டுமே சவாலாக இருக்க, 227 நாட்கள் ஒரு புலியுடன் இருந்து, உயிரோடு மெக்ஸிகன் கடற்கரையில் ஒதுங்கும் Pi யின் நம்பமுடியாத கதை தான், ‘Life of Pi’.

கதையின் இறுதியில் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. Pi சொல்லும் இந்தக் கதை உண்மையா அல்லது பொய்யா?உண்மையில் நடந்தது என்ன என்பதை நம்மை முடிவு செய்ய வைக்கும் ஒரு அட்டகாசமான திருப்பம் அது. படத்தைப் பற்றிப் பார்த்தவர்களிடம் பேசிப்பார்க்கும் போது தான், ஒவ்வொருவரும் இந்தப் படத்தை எப்படிப் பார்த்து புரிந்து கொண்டார்கள் என்பது எனக்குத் தெரிந்தது.ஆனால் இன்னமும் நான் தெளிவாகவில்லை. முடிந்தால் இதைப் பற்றி வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன்.

அவ்வளவு தான். படத்தைப் பற்றி வேறு எதையும் நான் சொல்லப் போவதில்லை. படத்தின் டிரைலரே கொஞ்சம் காட்சிகளை முன்னமே காட்டி நம்மை வஞ்சித்து விட்டதாக நான் கருதுகிறேன். அவையெல்லாம் தியேட்டரில் பார்க்க மட்டுமே தகுதி உள்ளவை. வீணாக அவற்றை டிரைலிரேயே காட்டி, திரையில் நாம் கண்டு வாயைப் பிளக்க வேண்டிய தருணங்களை (கொஞ்சமாக) பாழாக்கிவிட்டார்கள்.

முதல் முறை ரெகுலர் 3D தியேட்டரில் (Gopalan Cinemas, Bannerghatta Road) இந்தப் படத்தைப் பார்த்த போது, இவ்வளவு உணர்ச்சிகள் என்னுள் எழவில்லை. காரணம் நான் போனது இரவு 10 மணிக்காட்சி அதுவும் அலுவல் முடிந்த பிறகு. திரையரங்கில் படத்தின் திரையளவு, திரையில் fit ஆகாததால்,சற்று zoom செய்துவிட்டார்கள். அதனால் மேலே, கொஞ்சம் கீழே கொஞ்சம் படம் திரையை விட்டு வெளியே தெரிந்து கொண்டிருந்தது. பக்கவாட்டில் சுருங்கி கிட்டத்தட்ட சதுரமாக தெரிந்தது படம். ஆனாலும் படத்தை நான் பெரிதும் விரும்பியதால், மறுமுறை வேறு ஏதாவது திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதன்படி அடுத்து நான் போன திரையரங்கம்,PVR - IMAX!

dscf1226.jpg

ஹைதிராபாத்திற்கு மட்மே சொந்தமாக இருந்த IMAX இப்பொழுது பெங்களூருக்கும் வந்திருக்கிறது. ஆனால் டிக்கெட் விலை தான் எப்பொழுதும் பெங்களூர் PVR ன் ஹைலைட். 550ரூ!வாரநாட்களில் காலைகாட்சி மட்டும் 300ரூ. அலுவலகம் கட்டடித்து, இன்று காலை காட்சி போய் தரிசித்து விட்டு வந்தேன். மேலே நான் சொன்ன “மூழ்கடித்த” உணர்வுகளுக்கெல்லாம் IMAXமட்டுமே காரணம்! அவர்களது Tegline, “GET LOST”. அது என் விஷயத்தில் நிச்சயம் உண்மையாகிப்போனது.உலகின் மிகப் பெரிய IMAX (Australia?) 7 மாடி உயரமாம். இந்த IMAX மினிமம் ஒரு மூன்று மாடியாவது இருக்கும். முதல் படமாக SKYFALL ஐ வெளியிட்டிருக்கிறார்கள். AVATAR, HUGO, TINTIN படங்கள் வெளியான போது IMAX இருந்திருக்கக்கூடாதா என்று இப்போது ஏங்குகிறேன். IMAX ல் எனது அடுத்த படம், HOBBIT: THE UNEXPECTED JOURNEY – டிசம்பர் 14 வெளியாகிறது.

LIFE OF PI நிச்சயம் ஒருமுறையேனும் அனைவரும் பார்க்க வேண்டிய படம். நல்ல, பெரிய திரையுள்ள தியேட்டரில், முடிந்தால் IMAXல் பாருங்கள். ஹதிராபாத், பெங்களூரு தவிர்த்து சென்னையில் இரண்டு IMAX ஸ்கிரீன்கள் (சத்யம்) வரப்போவதாக கேள்விப்பட்டேன்.

http://babyanandan.blogspot.in/2012/11/life-of-pi-imax.html

இன்றோ நாளையோ பார்க்க இருக்கின்றேன் .

நேற்று வேலை முடிய மனைவியை தியேட்டருக்கு வரசொல்லி போன் அடித்தேன் .குளிரை காரணம் காட்டி கட் பண்ணியாச்சு ,செவ்வாய் அரைவிலையில் பார்க்கவுள்ளேன் .

நன்றி விவசாயி லீக் .

Edited by arjun

நாவலில் எனக்குப் பிடித்த கோணங்கள் இருந்தன. ஆனால் அவை அதிகம் அணுகப்படவில்லை. பல பக்கங்கள் சலிப்புத் தட்டியதாய்ப் பட்டது.

நாவலில் சலிப்புத் தட்டிய பல விடயங்கள் படத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியவில்லை. ஆனால் பார்க்கலாம்.

http://www.youtube.com/watch?v=8vbxdqCi_AQ

ஆரம்ப பாட்டு தமிழில்

சனம் இருக்க மாட்டாது என கடைசி நேரத்தில் போய் டிக்கெட் வாங்க காட்டை மெசினுக்குள் விட்டால் SOLD OUT என்று வருகின்றது ,உடனே அடுத்த தியேட்டருக்கு ஓடி போனோம் ,பார்த்தோம் ,ரசித்தோம்.

அழகியலும் நகைச்சுவையும் கலந்த சந்தோசமான ஒரு படம் .இதை எடுத்த விதம் தான் அழகிலும் அழகு.

தமிழில் அழகான பாடலுடன் படம் தொடங்கும் போது ஆரம்பமே நிமிர்ந்து உட்கார வைக்கின்றது...அந்த பாடலின் போது வரும் அழகிய வனவிலங்குகள் 3D ல் பார்க்கும் போது பிரமிக்கவைக்கின்றது.

சில இடங்களில் தமிழில் கதைக்கும் போது ஆங்கிலத்தில் sub title ஐ பார்க்க தமிழராக தலை நிமிர வைக்கின்றது.

பல காட்ச்சிகள் அதுவும் அந்த புலியுடன் வரும் கப்பல் பயண காட்ச்சிகள் சொல்லி வேலையில்லை :)

எந்த வயதினரும் பார்க்ககூடியதாக இருக்கின்றது. தபு தாயாக தனது பாத்திரத்தை அழகாக நடித்திருக்கின்றார்.

இந்த படம் நிச்சயம் Oscar விருதிற்கு தெரிவாகும் என்பது எனது எண்ணம்.....அதிலும் Pi க்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முடிந்தவர்கள் நிச்சயமாக 3D ல் பாருங்கள்......உங்களுக்கும் பிடிக்கும் :)

தமிழினியின் கருத்தைவாசித்துவிட்டு இன்று திரையரங்கில் இந்தப்படத்தைப்பார்த்தேன். படத்தில் எதிர்பார்த்தளவு திருப்தி இல்லை. சுமார் 3.25/5.00 புள்ளிகள் மட்டும் போடலாம்.

 

முன்பு வெளிவந்த Cast Away படத்திற்கும், இதற்குமான பிரதான வேறுபாடாக இங்கு தனியாளுக்கு சோடியாய் ஓர் புலியும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றும்படி, Cast Away படத்தின் பிரதிபலிப்பும் தென்பட்டது.

 

எனக்கு மற்றையமதங்களுடன் ஒப்பீடுசெய்து தனிப்பட எந்தமதத்திற்கும் அதிக ஆதரவு இல்லையானாலும், படத்தில் இந்துமதம்பற்றிய பார்வை தவறானாதாகவும், சற்று அவமதிப்பதுபோலும் தென்பட்டது. இந்துமதத்தைவிட கிறிஸ்தவம் சற்று பரவாயில்லை எனும்வகையிலான தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டதுபோல் உணர்கின்றேன். இவை எனக்குவிளங்கியவகை மட்டுமே.

 

இந்தியாவை (அதன் கலாச்சாரத்தை) மேற்கத்தையவர்களுக்கு பிரச்சாரம் செய்யும்பாணியும் தெரிகின்றது. (அதாவது சற்று அளவுக்கதிகமான தோற்றம்).

 

வியாபாரநோக்கில் தவறில்லை, எல்லாம் வியாபாரமயமே. படத்திலும் பெருன்பான்மை மக்களை கவரவைக்கும்பாங்கு காணப்படுகின்றது.

 

படம் முடிவுக்கட்டத்தை நெருங்கியபோது, முடிந்தபோது ஓர்  மரத்த உணர்ச்சி மட்டுமே எனக்குள் தோன்றியது (கொட்டாவி விட்டதாய் எடுத்துக்கொள்ளலாம்). இங்குள்ள கருத்துக்களைப்ப்பார்த்து, படத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச்சென்று விபரங்களையறிந்து movie trailerஐயும் பார்த்துவிட்டு, அதிக எதிர்ப்பார்ப்புடன் படத்தை பார்க்கச்சென்றதால் இப்படியான அனுபவம் எனக்குள் ஏற்பட்டதோ தெரியாது.

 

இன்னுமொருவன் ஆஹா, ஓஹோ என்று சொல்வதற்கில்லை என்று எழுதியதை வாசித்தபோது ஏன் அப்படி எழுதினார் என்று யோசித்தேன். கொஞ்சம் ரசனை குறைவானவரோ என்றும் எண்ணதோன்றியது. ஆனால், இப்போது அவரைவிட நான் இன்னும் ரசனைகுறைவானவனோ, மட்டமான ரகமோ என்று நீங்கள் எவராவது இப்போது யோசிக்கலாம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் புத்தகம் படித்திருந்தேன். பிடித்திருந்தது. இங்கு டிச.20 இல் திரைக்கு வருகின்றது. கண்டிப்பாகப் பார்ப்பேன்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று குடும்பத்தோடு போய் பார்த்தேன் வழைமை போல ஓசி றிக்கற்றில்தான் . கடற் காட்சிகள்  தொழில் நுட்பத்தால் அசத்தியிருக்கிறார்கள். மற்றும்படி  கலைஞனின் கருத்தே என்னுடையதும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை பற்றிய படம்

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

 

ஆங்கிலப் படம். பலரும் அருமை என்று கூறக் கேட்ட என் கணவர், எங்களையும் அதைப் பார்க்கச் செய்ய வேண்டும் என்று துடித்தார். ஞாயிறன்று மாலைக் காட்சி பார்க்க வேண்டும் என்று தயாரான போதும், மதியத் தூக்கத்தின் காரணமாகப் போக முடியாததால், நல்ல இனிய காற்றினை சுவாசிக்க நடைபயிலச் சென்ற போது, திடீரென முடிவு செய்து இரவு 10 மணி ஆட்டத்திற்குச் சென்றோம். மிகச் சிலரே அரங்கில் இருந்தோம்.

 

படம் ஆரம்பிக்கும் முன்பே சென்று விட்டதால், குழந்தைகள் சற்றே பொறுமையற்று இருந்தனர். படம் போட்டதும், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம். பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இனிய தமிழ்ப் பாடல். ஒரு மரத்தடிப் பிள்ளையார் என்று படம் ஆரம்பம் ஆனது. 1970களின் பாண்டிச்சேரியும், கதையின் நாயகனின் பள்ளி வாழ்க்கையும், உலகம் முழுதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் படத்தில் வருவது, சற்றே பெருமிதம் கொள்ள வைத்தது.

 

லைஃப் ஆப் பை, பையின் வாழ்க்கை என்ற படம், கதை நாயகனான பை மூலமாக கடலில் கவிழ்ந்த கப்பல் விபத்திலிருந்து தப்பித்ததைக் கதையாகச் சொல்லப்படும் படம். ஆசியாவின் ஒரே ஆஸ்கர் இயக்குநரான அங் லீ, தைவானில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்து, பல அருமையான படங்களை செய்த பின், யான் மார்டல் 2001ல் எழுதிய இந்தக் கதையை படமாக்க எண்ணி, வேலையைத் தொடங்கியது ஜனவரி 2011. இந்தியாவில் விண்ணப்பித்திருந்த 3000 பேர்களில், முத்தான கதாநாயகனாக சூரஜ் சர்மாவைத் தேர்ந்தெடுத்தார். பல்வேறு பருவத்திற்கு பல்வேறு ஆட்களைக் காட்டுவதால் பையாக மட்டுமே நால்வர்.

 

கனடா நாட்டில் வாழ்ந்து வரும் பை ஒரு கதாசிரியருக்குத் தன் கதையைச் சொல்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கடவுள் மேல் நம்பிக்கை கொள்ள அவனது கதை உதவும் என்று பையின் மாமா கூறியதால் கதாசிரியர் பையைக் காண வருகிறார். உணவை பரிமாறி, உண்டு கொண்டே கதை சொல்லப்படுகிறது.

 

பாண்டிச்சேரியில் வாழும் மிருகக்காட்சி சாலை வைத்திருப்பவரின் மகனாக வாழும் பை, தான் கடவுளைப் பற்றி எப்படி தெரிந்து கொண்டான் என்பதை விளக்குவது அருமை. முதலில் இந்துக் கடவுளான கிருஷ்ணர், பிறகு ஏசு, பின் அல்லாவை அவன் எப்படி அறிந்து கொண்டான் என்பதை விளக்குகிறான். குழந்தையாக அனைத்து மதத்தையும் விரும்பும் அவனுக்கு, அவன் தந்தை எடுத்துக் கூறும் விளக்கம், புலியை அருகில் காண விரும்பிய மகன் செய்த தீரமான செயலை, தவறென உணர்த்த கற்பிக்கும் பாடம், அனைத்தும் மகனுக்கு தந்தை எப்படி அறிவுரையால் புரிய வைக்க முடியும் என்று விளக்குகிறது.

 

கப்பல் மூழ்கிய பின் தப்பிக்கும் பை தன்னுடன் இருக்கும் வரிக்குதிரை, மனிதக்குரங்கு, கழுதைப் புலி, வங்காளப் புலி ஆகியவற்றுடன் செய்யும் சாகசங்கள் தான் கதையின் முக்கியம்சம். முப்பரிமாணத்தில் படத்தைக் காணும் போது, நாமே கடலில் சிக்கி, சாகசங்கள் செய்வது போன்ற உணர்வு. சில விஷயங்கள் சற்றே மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், வரைகலை அருமையிலும் அருமை.

 

இந்தப் படம் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கத் தக்க வகையில் உள்ளது. குழந்தைகளுக்கு விலங்குகளுடன் பையின் அனுபவங்கள் பிடிக்கும். பெரியவர்கள் கடவுள் நம்பிக்கைப் பற்றிக் கூறும் செய்திகள் அசை போட வைக்கும்.

சிறுவன் பை, நீச்சலை விரும்பும் மாமாவிற்குப் பிடித்த பிரான்சில் இருக்கும் நீச்சல் குளத்தின் பெயரான பிசின் மாலிடர் படேல் என்று பெயர் பெறுகிறான். புpசின் என்று சொல்லை சிறுநீர் கழிப்பதுடன் ஒப்பிட்டு, மற்ற மாணவர்கள் கேலி செய்வதைத் தவிர்க்க, சிறுவன் கணிதத்தில் வரும் பை என்ற எழுத்துதான் தன் பெயர் என்று பள்ளியில் தன் பெயருக்கு அர்த்தம் காட்டுகிறான். மிருகக்காட்சி சாலை வைத்திருக்கும் தந்தை, மகன், தனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துக் கடவுளையும் விரும்பி, கடவுள் நம்பிக்கை கொண்டு செயல்படுவதைக் கண்டு அறிவுரை கூறுகிறார். பூங்காவில் இருக்கும் புலியைப் பக்கத்தில் காண விரும்பும் சிறுவன் பை, அதற்கு மாமிசத்தை தன் கைகளால் தர முயல்கிறான். கடைசி நேரத்தில் அதைத் தடுத்து, புலியின் குணத்தை விளக்க, ஒரு ஆட்டை கதவருகே கட்டி, அதை புலி எப்படி அடித்துத் தின்கிறது என்று காட்டுகிறார்.

 

பாண்டிச்சேரியில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதும், மிருகக்காட்சி சாலையை மேலும் நடத்த முடியாது என்பதை உணர்ந்து, அதிலிருக்கும் விலங்குகளை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்க கப்பலில் புறப்படுகின்றார்கள். அப்போது, கடலில் வரும் புயல் காரணமாக, கப்பல் கவிழ நேர்கிறது. புயல் சத்தத்தைக் கேட்டு, வெளியில் அதைக் காண, எதேட்சையாக வெளியே வரும் பை, ஆச்சரியகரமாக அந்த விபத்திலிருந்து தப்பிக்கிறான். படகில் ஏறிய போது, வரிக்குதிரை அதில் விழுகிறது. கழுதைபுலியும் புலியும் படகில் இருக்கின்றன. சற்றே புயல் தணியும் போது, மனிதக்குரங்கு வாழைப்பழத் தார் மூட்டையின் உதவியுடன் தப்பித்து படகருகே வருகிறது. பை அதைக் காப்பாற்றுகிறான்.

 

விலங்குகளின் குணங்களை அறிந்து பை, படகின் ஒரு நுனியில் தொங்கிக் கொண்டே தன் உயிரை காப்பாற்றிக் கொள்கிறான். கழுதைப்புலி பசி வந்ததும், வரிக்குதிரையை அடிக்கிறது. பிறகு மனிதக்குரங்கையும் கொல்கிறது. கோபம் கொண்ட பை, கழுதைப்புலியைக் கொல்கிறான். இறுதியில் புலியும் அவனும் படகில். புலியிடமிருந்து தப்பிக்கும் அதே தருணத்தில், அதையும் கவனித்தும் கொள்கிறான். படகின் நுனியில் கயிற்றைக் கொண்டு, சிறு தோனியைச் செய்து கொண்டு மிதக்கிறான். மழை நீரைக் குடித்தும், சைவமாக இருக்கும் அவன், மீன்களை உண்டு பழகுகிறான். புலிக்கும் மீன்களை உணவாகக் கொடுத்து அதன் உயிரைக் காக்கிறான். தன் அனுபவங்களை எழுதிக் கொண்டே நாட்களைக் கழிக்கிறான். கடந்த நாட்களை கோடு போட்டு எண்ணிக் கொண்டே கழிக்கிறான்.

 

மறுபடியும் புயல் வர, முயன்று தப்பிக்கிறான். கடைசியில் ஒரு தீவிற்கு வந்து சேர்கிறான். காலையில் அருமையாக இருக்கும் தீவு, இரவில் இரசாயன மாற்றத்தால் உயிர்கள் கொல்லப்படுவதை அறிந்ததும், அந்த இடத்தை விட்டு அகல்கிறான். அந்தத் தீவை வெகு தொலைவிலிருந்து பார்க்கும் போது பார்க்கடலில் படுத்திருக்கும் விஷ்ணுவைக் போன்று ஒரு நொடி காட்டி, கடவுள் அவனைக் காப்பாற்றுகிறார் என்று காட்டுகிறார் இயக்குநர். ஒரு கப்பல் தூரமாகத் தெரிந்ததும், தான் இருப்பதை உணர்த்த பல உத்திகளை செய்து பார்க்கிறான். பயன் அளிக்காது, சோர்வுறுகிறான். இறுதியில் 227 நாட்கள் கடல் வாழ்க்கைக்குப் பிறகு, மெக்சிகோ கரையோரம் ஒதுங்குகிறான்.

 

உயிர் பிழைத்த புலி காட்டைப் பார்த்ததும் சென்று மறைகிறது. அதன் பிரிவைத் தாங்காமல் அழுகிறான். பை தப்பிதத்தைக் கேள்விப்பட்டு, கப்பல் எப்படி கவிழ்ந்தது, பை எப்படி தப்பினான் என்று கேட்க நேரில் வந்து சந்திக்கின்றனர் ஜப்பானியக் கப்பல் நிர்வாகத்தார். இந்தக் கதையை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் பை, விலங்குகளை, வரிக்குதிரையை சைவ உணவை உண்ணும் புத்த மத நண்பனாகவும், கழுதைப்புலியை சமையல்காரனாகவும், மனிதக்குரங்கை தாயாகவும், புலியைத் தானாகவும் உருவகப்படுத்திக் கதை சொல்கிறான். அதையும் அவர்கள் முழுமையாக நம்பவில்லை என்பதையும் கூறுகிறான்.

 

கதையைக் கேட்கும் கதாசிரியர், பையின் குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு அதைக் கதையாக எழுதச் செல்கிறார் என்று கதை முடிகிறது.

 

பன்னிரண்டு மணியான போதும் ஒருவர் முகத்திலும் தூக்கக் கலக்கம் இல்லாதது பட இயக்கத்தின் தன்மையை விளக்கும்.

 

முழுமையான முப்பரிமாணத்தில் இந்தப் படத்தைப் பார்த்த பின் கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி ஆள் மனத்தில் நிச்சயம் ஒரு கேள்வியை எழுப்பும்.

 

http://puthu.thinnai.com/?p=17105

 

  • கருத்துக்கள உறவுகள்

படம்  ஆரம்பமாகும் போதே "கண்ணே கண்மணியே" என தமிழ்ப் பாடலுடன் தொடுங்குவதே மனதுக்கு ஒரு பரவசத்தை ஏற்ப்படுத்தியது.
கடலின் காட்சிகள் அற்புதம். மீன்களும் நட்சத்திரங்களும் என்னைப் பிரமிக்க வைத்தது உண்மை. முடிவில் இரண்டாவது கதையைச் சொல்லி படத்தின் தன்மையை மாற்றியதுபோல் உணர்வு. அவதாரில் கிடைத்த நிறைவு இதில் இல்லை. கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிறைய மிகைகள் இருந்தாலும்.. பொழுதுபோக்கிற்கு நல்ல படம். மனிதர்களை விட புலியின் நடிப்பு நல்லா இருக்குது. அது அநேக நேரம் அனிமேசன் புலியா வருகுதா உண்மைப் புலியா வருகுதா..???! கண்டுபிடிக்க கஸ்டமா இருந்திச்சுது.

 

இறுதியில்.. ஒரு விடயம் எனக்குப் பிடிக்கல்ல. அந்தப் புலி அந்த மனிதனோடு கடைசி வரை வந்து கரை சேர்ந்த பின்.. காட்டுக்குள் தானே போகுது. இருந்தும்.. அதனை கடைசியில்.. குறைபிடிக்கிறார்.. கதையின் நாயகன். கரையில்.. அவரைக் காக்க ஆக்கள் இருக்கினம்.. ஆனால் அதேவேளை.. அந்தப் புலியைக் காக்க புலி தானே தான் முயற்சி செய்ய வேண்டி இருக்கு என்பதை ஏன் உணரவில்லை..???! நன்றி கெட்டது மனிதனா.. புலியா..???! :D:icon_idea:



தமிழ் மொழி விளங்கா விட்டாலும் ரைரில் பாட்டிற்கு வெள்ளைகள் கூடி இருந்த அரங்கே.. அமைதியாக இருந்து அதற்கு மதிப்பளிப்பது பெருமை. மொழியால் அன்றி இசையால் பேசும் பொருள் அந்தப் பாடலுக்கு அதிகம் இருக்கு என்று நினைக்கிறேன். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுதான் பிள்ளைகளுடன் போய் பார்த்தனான், நல்ல படம், மனைவிக்கும் மூத்தவனுக்கும் பிடித்திருந்திச்சு, மகளுக்கும் கடைசி மகனுக்கும் பிடிக்கவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

காட்சிகள் பிரமிக்க வைத்தாலும் புத்தகத்தில் கிடைத்த அனுபவம் திரையில் கிடைக்கவில்லை. எனினும் அதிகம் தொய்வின்றிப் போனதால் சலிப்பு வரவில்லை.

 

முதல் காட்சியில் தமிழில் பாடல் ஒலித்தபோது ஒரு பெருமித உணர்வு வந்தது. அந்த உணர்வைத் தரும் ஒரு தேசியகீதம் தமிழர்களுக்கு என் வாழ்நாளில் கிடைக்குமா என்ற ஏக்கமும் வந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

Life of Pi திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகள் கிடைப்பதற்கு தெரிவாகியுள்ளது. நிச்சயம் பல விருதுகள் கிடைக்கும். இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள்....! :)

Edited by தமிழினி

இந்த படத்திற்கு பதினோரு நியமனங்கள் .

இந்த படத்தை பற்றி குறை சொன்னவர்களுக்கு முன்னர் மறுப்பு கருத்து எழுதவிரும்பவில்லை  காரணம் ஆங்கில படத்தில் பலவகை உண்டு .(இந்திய படங்கள் மாதிரி ஒரே படத்தில் அனைத்து அம்சங்களும் இருக்க மாட்டாது )

ஒரு அழகிய திரைப்படமாக  திரைப்படமாக இதை பார்த்தேன் .அதைதான் அவர்களும் பார்த்திருக்கின்றார்கள் .

விருதுகள் வெல்லுதோ இல்லையோ நியமனத்திற்கு வாழ்த்துக்கள் .

Golden Globe விருதை வென்றது Life of Pi
[ Monday, 14 January 2013, 01:12.59 PM GMT +05:30 ]
ஓஸ்கார் விருதுக்கான பரிந்துரையில் இருக்கும் Life of Pi திரைப்படம் இவ்வருடத்திற்கான சிறந்த Original Score இசைக்கான Golden Globe விருதை வென்றுள்ளது.

திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி சினிமாத்துறையில் சிறந்த கலைஞர்களுக்காக இவ்விருதுகள் வருடா வருடம் வழங்கப்படுகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, கலிபோர்னியாவின் பெவெர்லி ஹில்ஸில் 20வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விருதுக்காக போட்டியிட்ட Alexandre Desplat ("Argo"), Dario Marianelli ("Anna Karenina"), Tom Tykwer, Johnny Klimek, Reinhold Heil ("Cloud Atlas") மற்றும் John Williams ("Lincoln") ஆகிய திரைப்பட இசைகளை Danna Beat இன் Life of Pi திரைப்பட பின்னணி இசை வென்றுள்ளது.

இந்தியா சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரு கோல்டன் குளோப் விருதுகளை தனது ஸ்லம் டோக் மில்லியர் இசைக்காக பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் Life of Pi திரைப்படத்திற்காக கனேடிய இசையமைப்பாளர் Mychael Danna இசையமைப்பில் பாம்பே ஜெயசிறீ பாடிய இப்பாடல் இம்முறை சிறந்த ஒரிஜினல் பாடலுக்கு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முன்னதாக இத்திரைப்படத்தின் பின்னணி இசை இம்முறை கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

Pi's Lullaby பாடலை பாம்பே ஜெயசிறீ, இந்தியாவிலிருந்து பாடலை பாட, கனடாவிலிருந்து இருந்து கொண்டே இப்பாடலுக்கு இசையமைத்திருந்தார் கனேடிய இசையமைப்பாளர் Danna.

எனினும் சில உலக கவனம் பெற்ற இந்திய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இசையமைத்திருந்தார்.

ஐரோப்பிய நாடுகளில் Life of Pi திரைப்படம் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்டும் போது, இப்பாடல் எவ்வித மாற்றமுமின்றி தமிழில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

சிலநேரங்களில் சப்டைட்டில் இல்லாததால், இப்பாடலில் சொல்லவரும் வரிகள் ஐரோப்பியர்களுக்கு புரிவதில்லை.

எனினும் அந்த இசை அவர்களுக்கு புதுவித அனுபவத்தை தருவதாகவும் நிஜமாகவே தம்மை கட்டிப்போட வைப்பதாகவும் ஒத்துக்கொள்கிறார்கள்.

போட்டியிட்ட மற்றைய திரைப்படங்களின் பின்னணி இசையை கேட்பதன் மூலம் அவற்றை விட Life of Pi யின் இந்திய இசை வாத்தியங்கள் கலந்த பின்னணி இசை மற்றும் இப்பாடலின் முக்கியத்துவம், சிறப்பம்சம் என்பவற்றை ஒப்பீட்டு ரீதியில் புரிந்துகொள்ளலாம்.

 

www.cineulagam.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.