Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம் news
இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக் கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர்.
 
இவர்களில் பெயிண்டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன் இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும் அதே முகாமைச் சேர்ந்த அல்லிமலருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி உட்பட 2 மகள்களும் மகனும் உள்ளனர்.
 
அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த நந்தினி இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
 
தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந்தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில் மருத்துவ கலந்தாய்வுக்காக விண்ணப்பித்தார்.
 
அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அவருக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை.
 
197.50 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று சனிக்கிழமை மருத்துவக் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில் அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.
 
இது குறித்து நந்தினி கூறியதாவது:
 
மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப எண் (245143) ஏ.ஆர்.எண் (1529) ரேண்டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும் எனக்கு கிடைத்தன. ஆனால் எனது கட் ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதமும் வரவில்லை.
 
கலந்தாய்வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய்வில் அனுமதிக்கவில்லையெனில் முதல்வரை சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.
 
அதிகாரி விளக்கம்
 
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்க அதிகாரிகள் (டி.எம்..) கூறுகையில் பொதுவாக விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர் மட்டும் புரவிஷனல் பட்டியலில் வெளியிடுவோம்.
 
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
 
இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்றனர்.
 
21 ஜுன் 2014, சனி 11:10 பி.ப
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிள்ளை மேற்கு நாடு ஏதாவது ஒன்றில் மருத்துவம் கற்க எம்மவர்கள் உதவி செய்யலாமே..! இந்தியா போன்ற அடிப்படை.. மனிதாபிமானம் அற்ற... பிச்சைக்கார நாடுகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்காமல்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எனது டாக்டர் கனவை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் உரிமை மறுக்கப்பட்ட ஈழ அகதி நந்தினி கண்ணீர் கோரிக்கை 

 

NANTHINI1141.jpg

எனது டாக்டர் கனவை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதும் எனது கனவு நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறேன். அதற்காகப் போராடுவதை தவிர வேறு என்ன செய்வது? - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கையில் இருந்து அகதியாகச் சென்று தமிழகம் ஈரோடு மாவட்டம் அரிச்சலூரின் அகதிமுகாமில் தங்கியுள்ள ராஜா நந்தினி. மருத்தவக்கற்கைக்காக விண்ணப்பித்துள்ள குறித்த மாணவிக்கு நேர்முகப்பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்படவில்லை.அதையும் தாண்டி குறித்த மாணவி நேர்முகத்தேர்வுக்குச் சென்றபோது, அதிகாரிகள் திருப்பியனுப்பிவிட்டனர். இதற்கான காரணம், இந்தியாவில் பிறந்தவர்களுக்கே மருத்துவக்கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும். இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. அதன் காரணமாகவே அழைப்புகடிதம் அனுப்பபடவில்லை என்று மருத்துவக் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் நந்தினி தனக்கு நேர்ந்த கதியை விளக்குகிறார். எனக்கு சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது கனவு. இதற்கு கடுமையாக உழைத்தேன். +1 வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்தேன். பின்னர் +2 வில் 1170 மதிப்பெண் பெற்றேன். இதையடுத்து மருத்துவ படிப்புக்கான வெட்டுப் புள்ளியை பெற்றேன். உரிய காலத்தில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் எனக்கு அழைப்பு கடிதம் அனுப்பததால் அதிர்ச்சிக்குள்ளானேன். பின்னர் கற்கை விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு கலந்தாய்வில் பங்கேற்றேன். ஆனால் திடீரென இலங்கை அகதி என்பதால் மருத்துவ படிப்புக்கு அனுமதி இல்லை என்று எனக்கு நேற்று அனுமதி மறுத்துவிட்டனர். இதுதொடர்பில் இலங்கை மறு வாழ்வுத்துறை ஆணையரைச் சந்திக்க சென்றேன். அவரும் விடுமுறையில் போய்விட்டார். ஆனால் நான் ஏற்கனவே மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கிற்கு செல்வது தொடர்பாக ஆணையாளருக்கு மனு கொடுத்துள்ளேன். என் ஆசையே மருத்துவ படிப்புதான். அதற்காகத்தான் இத்தனை கஷ்டப்பட்டு படித்தேன். 1990ஆம் ஆண்டு எங்கள் குடும்பம் இலங்கையிலிருந்து இங்கு அகதிகளாக வந்தோம். என் தாய் தந்தையர் கூலி வேலைகளுக்கு சென்று என்னை படிக்க வைத்தனர். என் டாக்டர் கனவை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது டாக்டர் கனவு நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன். போராடுவதை தவிர வேறு என்ன செய்வது? - என்று நந்தினி கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

 

http://malarum.com/article/tam/2014/06/22/3077/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html

  • கருத்துக்கள உறவுகள்

தகுதியிருந்தும் அகதி என்பதால் மருத்துவம்படிக்க அனுமதி மறுப்பு:’ஈழத்தாய்’ கொடுத்த வரம்

nandhini.jpg

இலங்கை அகதிகள் முகாமில் தங்கி தமிழகத்தில் கல்வி பயின்றவர்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லை என்பதால், தகுதி அடிப்படையில் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. உலகின் மனித உரிமைச் விழுமியங்களை அவமதிக்கும் வகையில் தமிழ் நாட்டில் ‘ஈழத் தாய்’ ஆட்சியில் மூன்று தசாப்தங்களாக நடைபெறும் அவமனம் இது.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜா என்பவரது மகள் நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்றுள்ளார். மருத்துவம் படிக்கும் தகுதிக்கும் அதிகமாகவே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தார்.

அவர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என்பதால், இந்திய குடியுரிமை அவருக்கு இல்லை என்ற காரணத்தால் அவருக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப் படவில்லை என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கிருந்த அதிகாரிகள், “இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால், உங்களுக்கு இந்திய குடியுரிமை இல்லை. அதனால், விதிமுறைகளின்படி, நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருவரும் ஈரோடு திரும்பினர்.

அகதிகள் சாமானிய மனிதர்களாகக்கூட மதிக்கப்படுவதில்லை என்பதற்கு இது சிறந்த உதாரணம். அதுவும் ஈழம் பிடித்துத்தருகிறோம் என்று வாக்குப்பொறுக்கும் தமிழ்நாட்டில் இது நடைபெறுகின்றது. தமிழ் நாட்டில் மூன்று தசாப்தங்களாகச் சிறைவைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்காகன் தொடர்ச்சியான போராட்டங்கள் இன்று அவசியமானவை. உலகில் அகதிகள் அழிக்கப்படும் பொதுவான போக்கு உருவாகியுள்ள சூழலில் இப்போராட்டஙகள் புதிய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்.

தமிழ் நாடு அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் தனிப்பட்ட திறமைகளால் இவர்களின் தேர்ச்சி அளவு வசதிபடைத்த மாணவர்களுக்கு இணையானதாக உள்ளது. ஆயினும் இறுதியில் விரும்பிய உயர்கல்வியைத் தொடர்வதற்கு அகதிகள் என்பதால் தடைகள் விதிக்கப்படுகின்றன.

குறித்த இட ஒதிகீடு அடிப்படையிலேயே மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். கடந்த 84ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு மருத்துவத்தில் 20, பொறியியலில் 25, வேளாண்மை 10,பாலிடெக்னிக் 40, சட்டக் கல்லூரியில் 5 இடங்கள் என மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு ஒதிக்கீடு செய்ய உத்தரவிட்டது. இந்த அரசு ஆணையின் படி ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை நடைமுறையில் உள்ளது.

http://inioru.com/?p=40985

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குடியுரிமை பெற்றிருக்கவில்லை. ஆனால் அங்கே சட்டரீதியாக மேற்படிப்பு படிக்க முடிந்தது.

வெளிநாட்டவர்களுக்கான ஒதுக்கீட்டின்வழி விண்ணப்பித்தால் இடம் கிடைக்க வழியுண்டு. இதற்கெல்லாம் போய் "ஈழத்தாயை" திட்டுவது ஓவர். :D

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்."

 

 

 

லஞ்சம் கொடுத்தால்  குடியுரிமை தேவையில்லையா??
அநியாயம் இந்தப் பிள்ளை மருத்துவம் படிக்க தமிழக முதலமைச்சர் ஆவனம் செய்யும் வகையில் அவருடைய கவனத்திற்கு இந்தச் செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தகுதி இருந்தும்.... அந்த மாணவிக்கு, மருத்துவ பீட பல்கலைக் கழகத்தில்... இடம் மறுக்கப் படுவது வேதனையானது.

நெடுக்கு சொன்னமாதிரி இவரிற்கு மேற்கு நாடுகளில் அனுமதி பெற முடியாதா? கனடாவில் படிக்கக் கூடிய ஒருவருக்கு பல்கலைக்கழக அனுமதியை  பெறுவது இலகு - ஆனால் காசு காட்ட வேண்டும்.  பலர் ஒன்றிணைந்து காட்ட முடியும் என்றால் என்னையும் அதில் இணைக்க சம்மதம்.

 

 

 

தகுதி இருந்தும்.... அந்த மாணவிக்கு, மருத்துவ பீட பல்கலைக் கழகத்தில்... இடம் மறுக்கப் படுவது வேதனையானது.

 

இங்கே தான் புலம்பெயர் தமிழர் இத்வி செய்ய வேணும், 10,000,000 பேர் இருக்கிறோம் புலம் பெயர் நாட்டில், ஆளுக்கு ஒரு நாளைக்கு $ 1 சேர்த்தால் கூட $ 365 மில்லியன் சேருமே அதை எமது மக்க்ளுக்காக பாவிக்க்லாமே. உதாரணமாக தமிழ் நாட்டில் இயங்கும் முஸ்லீம் அமைப்புக்கள் பார்த்தால் உடனே போய் நீங்கள் எல்லம் குடும்பத்துடன் மதம் மாறுங்கள் நாம் வெளினாட்டில் படிக்க உதவி செய்கிறோம் என்று கூறி மதம் மாற்றி விடுவார்கள், இங்கே தான் எமது தோல்வி உள்ளது எம்மிடம் பலம் இருந்து அதை உபயோகிக்காமல் இருக்கிறோம்.

நெடுக்கு சொன்னமாதிரி இவரிற்கு மேற்கு நாடுகளில் அனுமதி பெற முடியாதா? கனடாவில் படிக்கக் கூடிய ஒருவருக்கு பல்கலைக்கழக அனுமதியை  பெறுவது இலகு - ஆனால் காசு காட்ட வேண்டும்.  பலர் ஒன்றிணைந்து காட்ட முடியும் என்றால் என்னையும் அதில் இணைக்க சம்மதம்.

 

நிழலி நாம் ஒன்றை நினைவு வைக்க வேண்டும் கிட்டத்தட்ட 10,000,000 பேர் இருக்கிறோம் ஒரு நாளைக்கு $1 வீதம் சேர்த்தால் கூட எமது மக்களுக்கு உதவ வருடம் $ 365,000,000 சேர்க்கலாம், ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது தான் கேள்வி??

குறித்த இட ஒதிகீடு அடிப்படையிலேயே மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். கடந்த 84ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு மருத்துவத்தில் 20, பொறியியலில் 25, வேளாண்மை 10,பாலிடெக்னிக் 40, சட்டக் கல்லூரியில் 5 இடங்கள் என மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு ஒதிக்கீடு செய்ய உத்தரவிட்டது. இந்த அரசு ஆணையின் படி ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை நடைமுறையில் உள்ளது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொழுது முதல் முறையாக இந்திய மருத்துவ கவுன்சில் ,இந்திய பொறியியல் கவுன்சில்களிடமிருந்து அனுமதி பெறபட்டது .அப்பொழுது கூடிய எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர் .என்னுடைய நண்பர் இந்த மாணவர்களின்(மருத்துவம் 36,பொறியியல் 75) விபரங்களுடன் எம்.ஜி.ஆர் ஐ சந்தித்தபொழுது இதற்கு பொறுப்பான அதிகாரியை அழைத்து அத்தனை பேருக்கும் அனுமதி வழங்க உத்தரவு போட்டதுடன் ,மத்திய அரசுக்கு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாக கடிதம் எழுதவும் சொன்னார் ,

என்னுடைய நண்பர் தற்பொழுது கனடாவில் தான் வசிக்கின்றார் .நாங்கள் இணைந்து அரசியல் ,சமுதாயப்பணிகளில் ஈடுபடுகின்றோம் .

ஜெயலலிதா ஈழத்தமிழர்களில் கரிசனை கொண்டவராக இருந்தால் தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழரின் நலன்களை முதலில் கவனிக்கட்டும் அதற்கு அப்புறம் தமிழீழம் எடுக்கிறதைப்பற்றி சிந்திக்கட்டும் .

 

நெடுக்கு சொன்னமாதிரி இவரிற்கு மேற்கு நாடுகளில் அனுமதி பெற முடியாதா? கனடாவில் படிக்கக் கூடிய ஒருவருக்கு பல்கலைக்கழக அனுமதியை  பெறுவது இலகு - ஆனால் காசு காட்ட வேண்டும்.  பலர் ஒன்றிணைந்து காட்ட முடியும் என்றால் என்னையும் அதில் இணைக்க சம்மதம்.

 

கனடாவில் MCAT தேர்வு எழுதி..பின் face to face interview எல்லாம் நடத்தி தான் மருத்துவ கல்லூரிக்கு எடுப்பார்கள் என்று நினைக்கிறன்...

இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கலாம்...சிலவேளை அவர்கள் யாராவது இவருக்கு scholarship கொடுக்கலாம்..பாவம் தகுதியிருந்தும் வாய்ப்பு இல்லை.... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதை யாழ் கள  உறவுகள் செய்யக்கூடாது.............?

 

பணம் தரக்கூடியவர்கள் பணத்தை ஏற்பாடு செய்ய...

படிப்பு  மற்றும் நிர்வாகவேலைகளை  அதில் சார்ந்தோர் செய்தால்  என்ன?

Edited by விசுகு

இந்தியாவை பொறுத்தளவில் எப்போதும் தமிழர்களை உயரவிடமாட்டார்கள் அவர்களின் கொள்கை வைக்கல் பட்டடை நாயைப்போன்றது 

வேண்டுமானால் அவர்களின் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார்கள் தற்கால அரசியல்வாதிகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தயவு செய்து இந்த திரியை யாழின் முகப்பில் நிரந்தரமாக நிறுவி விடுங்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் அல்லது விடயம் தெரிந்தவர்கள் தொடர்புகளை ஏற்படுத்துங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் மருத்துவபீடம், பொறியியல் துறைக்கு ஈழ அகதிகளை சில கோட்டா அடிப்படையில் தெரிவு செய்கிறார்கள். முன்பு முதல் 40 இடங்களைப் பெற்ற ஈழ அகதிகள் பொறியியல் துறையிலும், 20 இடங்களைப் பெற்ற ஈழ அகதிகள் மருத்துவபிரிவிலும் இலவசமாகப் படிக்கலாம். இப்பொழுதும் அந்த வசதி இருக்கும் என நினைக்கிறேன். இந்த ஈழ சகோதரி முதல் 20 இடங்களைப் பிடிக்கவில்லை என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஈழ மாணவி நந்தினியின் மருத்துவ கனவை நனவாக்குங்கள்: - இயக்குநர் கவுதமன் வேண்டுகோள் 
[Wednesday, 2014-06-25 20:48:55]
 
அல்லிமலர் ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர். தனது பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெற்றுள்ளார். அரசு பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண்ணும், மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் 197.33 பெற்றுள்ளார். மருத்துவம்தான் தனது கனவு என்று கூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள் மருத்துவப் படிப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
  
தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும், வாழும் ஈழ மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரைந்து தீர்வு காணவேண்டும் என்றும் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழ மாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய குடியுரிமை இல்லாததால் கலந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அதன் அடிப்படையில்தான் 1996ஆம் ஆண்டு ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் மகள், ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது. இதனால் நந்தினி போன்ற பல மாணவ-மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபெத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும்போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
 
தமிழ் மண்ணில் பிறந்து இன்றுவரையிலும் அகதியாக வளரும், வாழும் மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்கு முதல்வர் விரைந்து தீர்வு காணவேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில்வாடும் தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும், கல்வியும் கிடைக்க வேண்டும். இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும். எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும்.
 
இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேற்றுமை கலைந்து ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நந்தினியின் கல்விக்கும், தனி மனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு, முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=112003&category=TamilNews&language=tamil
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஈழ சகோதரி நந்தினியின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்குங்கள்: பாரிவேந்தருகு இயக்குநர் கெளதமன் கடிதம் 
[saturday 2014-07-05 10:00]
 
மதிப்பிற்குரிய கல்விப் பெருந்தகையீர் அய்யா பாரி வேந்தர் அவர்களுக்கு வணக்கம்!
 
அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், ஈழத்தமிழ் மாணவி என்ற ஒரே காரணத்திற்காக மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை நம் ஈழ சகோதரி நந்தினி.
 
இலங்கையில் இருந்து அகதிகளாய் தமிழகத்தை நாடி வரும் சகோதர, சகோதரிகள் பல ஆயிரம் பேர். அப்படி 1990இல் யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாய் வந்த குடும்பத்தை சேர்ந்தவரான நந்தினி ஈரோடு மாவட்டம், அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.
 
  
மாணவி நந்தினி பிளஸ் 2 தேர்வில் 1170 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்திருந்தார். மேலும், அவர் 197.5 கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அதனால், எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்திருந்தார்.
 
ஆனால், தரவரிசைப் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. அதற்கான காரணமாக அவர் ஈழத்தமிழ் மாணவி என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 84ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த குழந்தைகளுக்கு மருத்துவத்தில் 20, பொறியியலில் 25, வேளாண்மை 10, பாலிடெக்னிக் 40, சட்டக் கல்லூரியில் 5 இடங்கள் என மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தது.
 
1993 ஆம் ஆண்டில் இந்த இட ஒதுக்கீடு சலுகை ரத்து செய்யப்பட்டது. இந் நிலையில் 1996 ஆம் ஆண்டில் இவ்விட ஒதுக்கீடு மீண்டும் அமல் படுத்தப் பட்டது.
 
தமிழ்நாட்டில் உள்ள 110 அகதிகள் முகாம்களை சேர்ந்த 687 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 604 தேர்ச்சி பெற்றனர்.
 
இவர்களில் 26 மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1996 இடஒதுக்கீட்டில் கவிஞர் காசி ஆனந்தன் மகள் மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளால் இவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த போதும் இப்போது மருத்துவ கல்வி மட்டும் எட்டா தூரத்தில் உள்ளது வருத்தமளிக்கிறது.
 
நான் மருத்துவரானால் உடல் ஊனமுற்று வாழ்கிற எம் மக்களை காப்பாற்றுவேன் என்ற பெருங் கனவோடு வாழ்ந்தார். அந்த கனவு நனவாகும் நிலையில் இல்லை. எத்தனையோ மாணவர்களுக்கு கல்வி கண்களை திறந்த நீங்கள் உங்கள் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வாயிலாக இந்த மாணவியின், நமது சகோதரியின் மருத்துவக் கனவை நிறைவேற்றினால் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றுகிற உயர்ந்த சேவையாக நாங்கள் எண்ணி மகிழ்வோம்.
 
உங்கள் கல்விக் கருணையால் நந்தினியின் கனவை நனவாக்குங்கள்!
 
நம்பிக்கையுடன்
 
வ.கெளதமன்
  • 2 weeks later...

ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!இலக்குவனார் திருவள்ளுவன் 22 சூன் 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்

Nanthini01

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள ஈழத்தமிழர்க்கான சிறப்பு முகாமில் உள்ள நந்தினி என்பவர் 12 ஆம்வகுப்பில் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கல்விக்கான தகைவுமதிப்பெண் (cut off mark) 197.50 பெற்றுள்ளார். கலந்தாய்விற்கு விண்ணப்பித்தும் இவருக்கு அழைப்பு வரவில்லை. மருத்துவக்கல்விஇயக்கக அதிகாரிகள் ”இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ‘இலங்கை அகதிகள் முகாமில்’ வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள். அடைக்கலமாக வந்தவர்களை நம் உயிரினும் மேலாகக் காக்க வேண்டும். இதற்கு நாம் சிலப்பதிகாரக் காப்பியத்தில் சான்று காணலாம். கௌந்தியடிகள் இடைச்சியர் தலைவி மாதரி என்பாரிடம் கோவலன், கண்ணகியை அடைக்கலமாக ஒப்படைக்கிறார். கோவலன் உயிர் பறிக்கப்பட்டான் என்று கேள்விப்பட்டவுடன் மாதரி, ”அடைக்கலப் பொருளை இழந்து கெட்டேன்” என அலறி, தீயுள் புகுந்து உயிரை விட்டாள். தமிழ்நெறிக்கு மாறாக நாம், காத்தோம்ப வேண்டிய ஈழத்தமிழர்களைப் படாதபாடு படுத்துகின்றோம்.

1990இல் இலங்கையிலிருந்து வந்து இம்முகாமில் சேர்க்கப்பெற்ற இராசா, அல்லி மலர் ஆகியோர் 1995 இல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் மூன்று மக்களில் ஒருவர்தான் நந்தினி. எனவே, அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்ற முறையில் அனைத்து உரிமைகளும் பெறுவதற்கு உரியவர்.

1959 முதல் கடந்த 55 ஆண்டுகளாக இந்தியாவிற்குள் 150,000 திபேத்தியர்கள் அடைக்கலமாகக் குடிபுகுந்துள்ளனர். அவர்கள் முறையாகத் திரும்பும் வரை இந்தியாவில் எல்லா உதவிகளும் அளிப்பதாக நேரு உறுதியளித்ததற்கிணங்க அவர்களுக்கு எல்லா உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவர்களின் தலைவர் தலாய்லாமா, நிலப்புற அரசு ( government in exile) அமைக்க இமாச்சலப் பிரதேசத்தில் இடமும் இயங்க உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.அவர் இங்கிருந்தபடியே Tibetan Parliament in Exile tibet-central-administration03 Tibetan-Government-In-Exile-2 Tibetan-Government-In-Exile-1-நிலப்புறத் திபேத்திய அரசை நடத்துவதற்கு இந்தியா எல்லாவகையிலும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. தருமசாலாவில் நிலப்புறத் திபேத் அரசு இயங்கி அரசியல் நடவடிக்கைகளிலும் திபேத் மக்கள் முன்னேற்றத்திற்கான செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது.

1960இல் கருநாடக அரசாங்கம், 3000காணி (ஏக்கர்) நிலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு அளித்துள்ளது. இவ்வரசாங்கம் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் மாநிலத்தின் அன்சூர் அருகே உள்ள குருபுரா (Gurupura), கொள்ளேகல் அருகே உள்ள ஒடெரபால்ய (Oderapalya) வடக்குக் கன்னட மாவட்டத்தில் உள்ள முண்டகாடு (Mundgod) பிறபகுதிகளிலும் திபேத்தியர்கள் குடிபுகுந்து வாழ வழிவகைகள் செய்துள்ளன.

பிற மாநிலங்களும் திபேத்தியர் இயல்பான வாழ்வு வாழ உதவி வருகின்றன. இதில் குறிப்பிடத்தகந்தது, திபேத்தியருக்கான நிலப்புற அரசு அமைய உதவி வரும் இமாச்சலப்பிரதேசமாகும். இங்குள்ள பிர்(Bir) என்னும் பகுதியில் திபேத்தியர் குடியிருப்பு அமைத்துத் தந்துள்ளது. அது மட்டுமல்ல திபேத்தியர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியும் வருகிறது.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும் (IGMC, Shimla) இராசேந்திரபிரசாத்து மருத்துவக் கல்லூரியிலும் (Dr.RPGMC, Tanda) ஆண்டுதோறும் திபேத்திய மாணவர் ஒவ்வொருவருக்கு இமாச்சல அரசு இடம் அளிக்கிறது. ஆண்டுதோறும் மாணாக்கர்க்குக் கல்வி உதவியும் குறிப்பாக, 10 மாணாக்கர்க்குத் தொழிற்கல்வியில் படிக்க உதவியும் செய்து வரும் திபேத்தியர் மத்தியப் பணியாட்சி(Central Tibetan Administration) இவ்விருவரின் கல்விக்கும் உதவி வருகிறது.

திசம்பர் 22, 2010 இல் தில்லி உயர்நீதி மன்றம் நம்கயல் தோல்கர் என்பாருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சுக்கும் (Namgyal Dolkar v. Ministry of External Affairs) ஏற்பட்ட வழக்கில் வழங்கிய தீர்ப்பு ஒன்றின்படி, 26.01.1950 இற்குப் பின் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் – அவரது பெற்றோர் எந்நாட்டவராயினும் – பிறப்பால் இந்தியக் குடிமகனே. எனவே, அதற்கேற்ப முழு உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டாக வேண்டும். 1956 இற்கும் 1987இற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த 35,000 திபேத்தியர்கள் இதனால் பயனுற்றனர்.

இமாச்சல அரசு திபேத்தியருக்கு உதவி வருகையில் தமிழக அரசு ஈழத்தமிழர்க்கு எல்லா வகையிலும் உதவ வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள் 20, அரசுசார் நிறுவனக் கல்லூரி 1, பல் மருத்துவம், சித்த மருத்துவம் முதலான பிற மருத்துவக் கல்லூரிகள் 7 ஆக 28 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இமாச்சலப்பிரதேச அரசைப் பின்பற்றித் தமிழக அரசு 28 கல்லூரிகளிலும் ஒவ்வோர் இடம் ஈழத்தமிழர்க்கு என ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசைப் பின்பற்றித் தனியாரும் ஒவ்வோர் ஈழத்தமிழ் மாணாக்கருக்கு இடம் அளிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

jayalalitha06

எதிலும் முன்மாதிரியாக இருக்க விரும்பும் தமிழக முதல்வர் இமாச்சலப்பிரதேச அரசைப் பின்பற்றியாவது இவ்வாறு நெறிப்படுத்தலாம் அல்லவா? மேலும், இவ்வாறு ஈழத்தமிழர்க்கு இடம் ஒதுக்குவது தமிழ்நாட்டரசிற்குப் புதியதன்று. தமிழ்நாட்டிலும் 2000 ஆம்ஆண்டுவரை மருத்துவப்படிப்பில் ஈழத்தமிழர்கள் இருபதின்மருக்கு இடம் வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

திபேத் தவிர, வங்காளத் தேசம், ஆப்கானித்தானம், பருமா எனப் பலநாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்துவந்தோர், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், இந்திய அரசு இவர்களுக்கு ஓர் அளவுகோல், ஈழத்தமிழர்களுக்கு ஓர் அளவுகோல் எனப்பாகுபாடு காட்டுகிறது.

திபேத்தியர்களுக்கு இலவசக் கல்விக்கான தனிப்பள்ளிகள், இலவச மருத்துவ வசதி, தனிப்பள்ளிகளில் பயில்வோருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கல் எனப் பல வகையிலும் உதவி வருகிறது. மத்தியத் திபேத்தியப் பள்ளிகள் 28, திபேத்தியச்சிறார் சிற்றூர்ப்பள்ளிகள் 18, திபேத்தியன் காப்பக நிறுவனப்(Tibetan Homes Foundation) பள்ளிகள் 3, சம்போத்தா திபேத்தியன்பள்ளிக் கழகத்தின் பள்ளிகள் 12, பனிஅரிமா நிறுவனப் (Snow Lion Foundation) பள்ளிகள் 12 எனக் கல்வித்துறை 73 திபேத்தியப் பள்ளிகளை நடத்துகிறது. (மழலைப்பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் இக்கணக்கில் அடங்கா.) 2,200 பேர் பணியாற்றும் இப்பள்ளிகளில் ஏறத்தாழ 24,000 மாணாக்கர் பயிலுகின்றனர். திபேத்தியர்கள் மருத்துவம், பொறியியல் படிக்கவும் உதவிவருகிறது.

eezham-camps05

(நன்றி வினவு)

ஆனால் தமிழ்நாட்டிலோ, அரசும் முறையாக உதவுவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தமிழ், தமிழர் நல அமைப்புகள், தனிப்பட்டோர், கலைத்துறையினர் என யாரும் ஈழத்தமிழர்களுக்கான சிறப்பு முகாம்களில் உதவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் பெறக்கூடிய உதவிகள் கிடைக்காமல் போவதும் இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

eezham-camps04 eezham-camps03 eezham-camps01 eezham-agitation02

வறுமை போன்ற எக்காரணங்களாலும் பிறநாடு புகாத, பதி எழு அறியாப் பண்பின் பழங்குடிச் சிறப்புடைய மக்கள் தமிழ் மக்கள். அதே நேரம், பிற நாட்டார் வருவதால், அரசிற்கு ஏற்படும் சுமையில் பங்கேற்பவர்கள் தமிழ் மக்கள்.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.(குறள் 733.) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

வந்தாரை வரவேற்கும் தமிழ் மக்கள், தங்கள் சொந்த இனத்தவரை வரவேற்காச் சூழலை அரசு உருவாக்கலாமா?

மத்திய அரசு புலம் பெயர் மக்களிடையே தமிழர்க்கென ஓர் அளவு கோல் கொண்டு இரட்டை அளவுகோலைப்பயன்படுத்துகிறது. அதே நேரம், தமிழக அரசும் ஈழத்தமிழர்களிடையே இரட்டை அளவுகோலைப் பயன்படுத்தலாமா?.

தமிழ்ஈழ ஏற்பிற்கும் தமிழினப்படுகொலையாளிகள் தண்டிக்கப் படுவதற்கும் தமிழ் ஈழம் மலர்வதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் ஐ.நா.வை வலியுறுத்துவதற்கும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள், முதலான பல்வேறு முறைகளில் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா முனைப்பாக வலியுறுத்தி வருகிறார். இதனால் உலகத் தமிழர் உள்ளங்களிலும் மனித நேயர் மனங்களிலும் இடம் பெற்றுள்ளார்.

ஆனால், அவ்வாறு அமையும் தமிழ் ஈழத்தில் புலம் பெயர்ந்து இங்கு வந்த ஈழத்தமிழர்கள் நலமாக, வளமாக, நன்கு பயில்பவர்களாக, முறையாகக் கற்றவர்களாக, தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களாக மகிழ்ச்சியுடன் திரும்ப வேண்டுமல்லவா?

ஈழத் தமிழர்களை முகாம் என்ற பெயரிலான கொட்டடியில் அடைத்துவிட்டு, அவர்களின் நலன்நாடித் தீர்மானங்கள் இயற்றுவதில் என்ன பயன்? புலம் பெயர்ந்து குடிபுகுநர் எங்கும் செல்வதற்கும் படிப்பதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சியைக் குன்றச் செய்யலாமா?

கொலைகாரர்கள், கொலைகாரர்களை நடத்துவதுபோல், கெடுபிடி நடத்தி அவர்களைத் துன்புறுத்தலாமா?

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மனம் கலங்கி அவர்களை அல்லல்பட வைக்கலாமா?

இருகரம் நீட்டி வரவேற்கும் என நம்பிக்கையுடன் வந்த அவர்களை இன்னலுக்கு ஆளாக்கலாமா?

வாணாள் சிறைத்தண்டனைவாசிகள்போல் அவர்களை நடத்தி வாட வைக்கலாமா?

வாழ்விழந்து வந்தவர்களின் வாழ்க்கையைப் பறிக்கலாமா?

எனவே, தமிழக அரசு இரட்டை அளவுகோலைக் கை விட வேண்டும்.

புலம்பெயர்ந்து குடி புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியான அமைதியான வாழ்வு வாழ்வதற்குரிய எல்லா உதவிகளையும் ஆற்ற வேண்டும்.

ஈழத்தமிழர் கல்வி முன்னேற்ற வாரியம் அமைத்து அதன் மூலம் அனைத்து ஈழத்தமிழர்களும் எச்சிக்கலின்றியும் அனைத்துநிலைக் கல்வியிலும் சேரவும் தடங்கலின்றிப் படிக்கவும் உதவ வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ்ஈழ நிலப்புற அரசு அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வரசு ஈழத்தமிழர்களுக்கு ஆற்றும் உதவிகளைத் தடுக்கக் கூடாது.

தொண்டார்வ நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தனிப்பட்டோர் ஒல்லும் வகை உதவிட முன்வருவதை ஏற்க வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்பும் பொழுது நம்மை மதித்து மகிழ்ந்து செல்லும் வகையில் ஈழத்தமிழர்களை நம் குடிமக்களுக்கு இணையாக நடத்த வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் முதற்படியாக செல்வி நந்தினிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தந்து படிப்பதற்கு எல்லா உதவிகளும் செய்ய வேண்டும்.

மத்திய அரசைத் துணிந்து தட்டிக்கேட்கும் உங்களை விட்டால் வேறு யார் இவர்களைக்காக்கப் போகிறார்கள் என்பதை நினைந்து

ஈழத்தமிழர்களுக்கு நன்றே செய்க! இன்றே செய்க! இன்னே செய்க!

நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

http://www.akaramuthala.in/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.