Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tim Horton ம் எனது கனடாவும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக ஆயத்தப்படுத்தி ஆவலுடன் நாட்களை எண்ணிக் காத்திருந்த பயணம் அது. போவதென்று முடிவெடுத்து வேலைத்தளத்திலும் அனுமதிபெற்று, பிள்ளைகளை உசுப்பேத்தி, அவர்கள் நாள்தோறும் அந்த நாமத்தை உச்சரிக்க (எதுவென்று கேட்கிறீர்களா? அட நம்ம கண்டாவைத்தான் சொல்கிறேன்!) வைத்து விட்ட பயணம். 

பயணிக்கும் தேதியும் முற்றாகிவிட, சுமார் 4 மாதங்களுக்கு முன்னதாகவே விமானச் சீட்டுக்களையும் வாங்கிவிட்டோம். தென்கொரியாவின் தலைநகர் சியோலினூடாகப் பயணிக்கும் பயணம் அது. அதுவும் பயணச் சிட்டுக்களை மிகவும் குறைந்த செலவில் வாங்கிக் கொண்டதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. 

பயணச் சீட்டுக்கள் வாங்கிய நாளிலிருந்து அனைவரையும் கணடாக் "காய்ச்சல்" பற்றிக்கொள்ள அதுவே எங்கள் எல்லோருக்கும் தியானம் என்று ஆகிவிட்டது. 

பயணிக்கும் நாளுக்கான நேரம் நெருங்கி வந்துகொண்டிருந்தபொழுது, பேரிடியாக ஒரு செய்தி வந்திறங்கியது. அதுதான், தென்கொரியாவில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்த MERS எனும் உயிர்க்கொல்லி வைரஸ். மத்திய கிழக்கு சுவாச நோய் என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்தக் கொடிய உயிர்க்கொல்லியை தென்கொரியாவிலிருந்து மத்திய கிழக்கிற்குச் சென்ற பயணியொருவர் காவிக்கொண்டு நாடு திரும்பி பலருக்கும் அதை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு உயிரை விட, அவரிலிருந்து அதைப் பெற்றுக் கொண்டவர்களும் சிறிது சிறிதாக இறந்துபோக, எமக்கு பயம் பற்றிக் கொண்டது. அட, இன்னும் போவதற்கு 10 நாட்களே இருக்க, இப்படியொரு அநியாயமா என்று தலையைப் பிய்க்கத் தொடங்கினேன். அதுவரை மனம் முழுதும் ஏறியிருந்த கணடா மோகம் அப்போது முற்றாக வெளியேறிப் பயம் பற்றிக்கொண்டுவிட்டது.

நாட்கள் செல்லச் செல்ல தென்கொரியாவின் வைரஸ் விசுவ ரூபம் எடுக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நோயாளிகளாவது செத்துப் போக சடுதியாக இறந்தவர்களது எண்ணிக்கை ஒருவாரத்தில் 20 ஐத் தொட்டது. கடுமையான தூக்கத்தில் அதுவரை ஆழ்ந்திருந்த தென்கொரிய அரசு, அதிகாரிகளைக் குற்றம் சாட்டிக்கொண்டே, பாடசாலைகள், வைத்தியசாலைகள், கிராமங்கள் என்று திறந்திருந்த அனைத்தையும் பூட்டிக்கொண்டு எனது பயத்திற்கு இன்னும் வலுச் சேர்த்தது. 

இவற்றைப் பார்த்து கலங்கிப் போன எனக்கு மனைவியின் வாக்கே இறுதி வாக்காகியது. " உங்க போக வேண்டாம், வேற ஏர் லைனால போவம்" எண்டு சொல்லிவிட, நானும் பயணச் சிட்டு முகவரைத் தொடர்பு கொண்டேன். "வேறு ஏர் லையினுக்கு உங்களை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் இந்தப் பயணச் சீட்டை ரத்துச் செய்துவிட்டு புதிதாக இன்னொரு பயணச் சீட்டை வாங்குங்கள், இன்னொரு 4000 டாலர்கள் செலவாகும்" என்று அன்பாகச் சொன்னாள். வேறு வழியில்லை, தெரிந்துகொண்டே ஒரு உயிர்க்கொல்லி நோய்க்குள் மாட்டுப்படுவதைக் காட்டிலும் 4000 டாலர்களை மேலதிகமாக இழப்பது எவ்வளவோ மேல் என்று எண்ணிக்கொண்டே அவள் கேட்ட அந்த மேலதிகப் பணத்தை செலுத்திக் கொண்டேன். 

மறுபடியும் கண்டா மோகம் வந்து ஏறிக்கொண்டது.

பயணிக்கும் நாளும் வந்து சேர்ந்தது. அதுவரை காலமும் கட்டிக் கட்டி ஆயத்தப் படுத்தி வைத்திருந்த துணிமணிப் பெட்டிகளை, நண்பனின் வண்டிக்குள் அடைந்துகொண்டே, சிட்னி விமான நிலையம் நோகிப் பயணமானோம். 

நிலையத்தில் நண்பனுடன் இறுதி நேரக் காப்பி, சிற்றூண்டி என்று முடித்துவிட்டு அவனுக்கு டாடா காட்டியவாறே விமானத்தினுள் புகுந்துகொண்டோம். 

அமெரிக்காவில் இரண்டுமுறை விமானங்களை மாற்றி ஏறவேண்டிய நெடுமையான பயணம் அது. 

3 விமானங்கள், 25 மிகநீண்ட மணித்தியாலங்களுக்குப் பிறகு பியர்ஸன் சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்த உலகின் தலைசிறந்த நாட்டின் டொரொன்டோ விமான நிலையத்தில் நாம் இறங்கியபோது சேர்ந்திருந்த களைப்பெல்லாம் நீங்கி மீண்டும் அந்தக் காய்ச்சல் பற்றிக் கொண்டது. அது ஒரு அற்புத உணர்வு. இதுவரை காலமும் போகவேண்டும் என்று நாம் ஏங்கியிருந்த தேசத்தில் நின்றுகொண்டிருக்கிறோம் எனும் உணர்வே எமக்குப் புத்துணர்ச்சி அளிக்க அவசர அவசரமாக எமது பொட்டணிகளை சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த அந்தச் சுங்க வட்ட ஓடுபாதையிலிருந்து சிரமப்பட்டு தூக்கியெடுத்து அருகிலிருந்த வண்டில்களில் எறிந்துகொண்டு வெளிப்பாதை நோக்கி நடக்கத் தொடங்கினோம். 

Edited by ragunathan

  • Replies 69
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கண்டா வந்து சேர்ந்துவிட்டோம் என்கிற உணர்வே எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்க, விமான நிலையத்தில் எம்மை வரவேற்கக் காத்திருந்த உறவுகளும், அவர்கள் எம்மை வரவேற்ற விதமும் சொற்களில் வடிக்க முடியாதவை. கைத்தாங்கல்கள், கட்டித் தழுவல்கள், ஒரு சில ஆனந்தக் கண்ணீர்கள், அவற்றுடன் கூடவே மலர்க் கொத்துக்கள்  என்று விமான நிலையத்தை அந்த நள்ளிரவில்க் கூட அமர்க்களப் படுத்தி விட்டார்கள். நாம் வரவேற்கப்பட்ட விதம் பார்த்த அங்கே வந்திருந்த வேறு பயணிகள், மற்றும் அவர்களை வரவேற்க வந்திருந்தவர்களுக்கு ஆச்சரியம். என்னதான் நடக்குது இங்கே என்று நினைத்திருப்பார்களோ என்னவோ, ஏதும் சொல்லாமலேயே சிறிய புன்முறுவலுடன் எமது அந்தச் சிறிய கூட்டத்தைக் கடந்து போனார்கள். 

"நீங்கள் நன்றாகவே மாறிவிட்டீர்கள், அடையாளமே தெரியவில்லை, கறுத்துவிட்டீர்கள், சிவத்துவிட்டீர்கள்...........இப்படிய பல விட்டடீர்களுக்குப் பிறகு எமது அமர்க்களம் ஓய்ந்துபோக எம்மை வரவேற்க வந்திருந்த மாமா முன்னே போக பின்னே எமது கூட்டம் மெதுவாக நகரத் தொடங்கியது. வந்திருந்த ராட்சத 'ட்ரக்குகளில்' (ஏனோ இங்கே இப்படித்தான் அழைக்கிறார்கள்) எமது பொட்டலங்களை ஆளாளுக்கு பங்கிட்டு தத்தமது வாகனங்களில் ஏற்றிக்கொள்ள  நாமும் ஆளாளாகப் பிரிந்து ஒவ்வொரு வாகனங்களில் ஏறிக்கொண்டோம். பழைய நினைவுகளை இரை மீட்டுக்கொண்டே மார்க்கம் - ஷெப்பேர்ட் சந்தி நோக்கி எமது அந்த நீண்ட வாகனத் தொடரணி நகரத் தொடங்கியது. 

 

நாம் கனடாவில் தங்கியிருப்பது எனது மனைவியின் அக்காவீட்டில்த்தான் என்று ஏற்கனவே ஏகமனதாக  முடிவுசெய்யப்பட்டு விட்டபடியினால், அங்கேயே அன்றிரவு போய் இறங்கினோம். அந்த நள்ளிரவில் அவ்வீடு முழுவதும் எமது சொந்தங்களால் நிறைந்து போயிருக்க மீண்டும் அந்த அமர்க்களம் களை கட்டத் தொடங்கியது. கிண்டல்கள், நினைவு மீட்டல்கள், மாற்றங்கள் என்று சம்பாஷணைகள் தொடர நேரம் போகத் தொடங்கியது. "களைச்சுப் போய் வந்திருக்குதுகள், விடுங்கோ சாப்பிட்டிட்டு படுக்கட்டும், நாளைக்கு வந்து மிச்சத்தை அலம்புங்கோ" என்று ஒரு மூலையிலிருந்து ஒருவர் சொல்லவும், மற்றவர்களும் அதை ஆமோதித்து விட்டு அன்றிரவைக்கு மட்டும் எம்மை விட்டுப் பிரிந்தார்கள். 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


கனடாவா/கணடாவா ? உள்குத்து எதுவும் இல்லாட்டி சரி :) 

எங்கட கம்பவாரியார் பாத்தா கனடாவாக இல்லாமல் இருந்தால் சந்தோசம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்குத்தும் இல்லை, வெளிக்குத்துமில்லை. கனடா என்பதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். திருத்தியமைக்கு நன்றி !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் எங்கள் கருத்துகளையும் சொல்லா நீங்கள் விரும்புவியலோ தெரியாது, நான் நினைகிறேன் Kanata என்ற பெயரில் இருந்துதான் Canada வந்தது. அந்த காலத்தில் சிடிசன்ஷிப் சோதினைக்கு படித்தது :). Kanata என்று ஒரு இடம், கனடாவின் IT hub, Ottawa கிட்ட இருக்கு. ஒரு 10-20 தமிழ் குடி இருக்கும் என்று நினைக்கிறன் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிமலை, தாராளமாக....உங்களின் கருத்துக்களும் எனது பயணத்திற்கு மெருகூட்டும் என்று ந்ம்புகிறேன்.

 

தமிழினி...உங்கள் கருத்துக்களும்தான் !

hahaha ... வர்ணனைகள் நன்றாக இருக்கிறது. தொடருங்கள் வாசிக்க மிக ஆவல் :)

Tim Horton, niagara falls, CN Tower, பாபு சாப்பாட்டுக்கடை,  ரா சுப்பர் சந்தை.... உறவிநர் வீட்டில் பாபுச் சாப்பாடு, .........

அதை விட உங்கள் பழைய பெட்டை .... 30 வருடத்துக்குப் பிறகு கண்ணீர் மல்க சந்திப்பு ..

:grin::grin:

Edited by மீனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடையிலை குறட்டை விடாமல் பயணகட்டுரை தொடரட்டும். :)

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு.... :innocent:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறுநாள் காலையிலேயே கூட்டம் கூடிவிட்டது அக்காவீட்டில். 

 

எமது கனடாப் பயணம் தொடங்குமுன்னமே அங்கே பார்க்கவேண்டிய இடங்களையெல்லாம் இணையத்தில் அலசோ அலசென்று அலசி எனது மனுசி அங்கிருக்கும் உறவினர்களுக்கு ஒரு நேர அட்டவணையே அனுப்பி வைத்து விட்டதால், எல்லாமே இயந்திரமயமாக அன்று காலையில் தொடங்கியது. 

 

"சரி, இண்டைக்கு அந்தோனியார் கோயிலுடன் எமது சுற்றிப்பார்த்தலைத் தொடங்குவோம்" என்று அக்கா கூறிவிடவும், ஒரு 10 அல்லது 12 பேரிருக்கும், குஞ்சு குருமான்களையும் இழுத்துக்கொண்டு வீட்டிற்குப் பின்னாலிருக்கும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தோம். பஸில் ஏறி டிரைவருக்குப் பக்கத்தில் உள்ள உண்டியலில் "Token" போட்டு இடம்பிடித்து அமர்ந்துகொண்டோம். அவுஸ்த்திரேலியா போலல்லாது, இங்கே பஸ்ஸில் பல இன மக்களையும் கண்டது ஆச்சரியமாக இருந்தது. தமிழர், சீனர், இந்தியர், மேற்கிந்தியக் கறுப்பர், சாட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு வெள்ளையர் என்று கனடாவின் பல்லினக் கலாச்சாரத்தை அந்த முதலாவது பஸ் பிரயாணமே பறை சாற்றியது. 

பஸ்ஸிலிருந்து இறங்கி Subway station க்குள் புகுந்து பிறகு இன்னொரு சப்வேக்குள் புகுந்து ஒருவாரறு அந்தோனியார் கோயிலை வந்தடையும்போது மதியம் 1 மணி. அங்கே  வந்தோம் என்றதுக்காக அந்தோனியாருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு, வயித்தை நிரப்ப ஒரு பீஸாக் கடைக்குள் நுழைந்தோம். செவ்வாய்க்கிழமை என்பதால் மலிவுப் பீஸா!!! ஆளாளுக்கு ஒரு பெரிய துண்டை தொண்டை வழியாக அவசரத்தில் வயிற்றுக்குள் இறக்கிவிட்டு " Honest Ed" அதாவது சாமானியர்கள் புடவை வாங்கும் உடுப்புக் கடைக்குள் எங்களை இழுத்துக் கொண்டு போனார்கள். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்கிருந்த உடுப்புக்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மனைவியோ ஏதோ திரவியத்தைக் கண்டதுபோல அந்த உடுப்புக் கடைக்குள் தொலைந்துபோனாள். வேறு வழியில்லை. "நீர் எடுத்துக்கொண்டு ஆறுதலா வீட்டுக்கு வாரும், நான் போறன் " என்று சொல்லிவிட்டு வர இது சிட்னியும் இல்லை. கடையை விட்டி வெளியே வந்துவிட்டால் வலம் எது இடம் எதுவென்று தெரியாத புது இடம். ஆகவே கம்மிக் கொண்டு இருந்துவிட்டேன். ஒருவாறு 5 அல்லது 6 மணித்தியாலத்துக்குப் பிறகு 2 பை நிறைந்த உடுப்புகளுடன் மனைவி அந்த உடுப்புக்கடையில் மீண்டும் தோன்றினாள். அப்பாடா, ஒருவாறு முடிஞ்சுது என்று நான் நினைத்திருக்க, "ஓருக்கா பொறுங்கோ, வரேக்க பாத்த செக்‌ஷனில இருந்த பாவாடையை எடுக்க மறந்திட்டன், எடுத்துக்கொண்டு வாறன்" என்று மனைவி மீண்டும் கிளம்பவும் அந்தக் கடை வைத்தவனை ஒரு வைது வைதுவிட்டேன். "கண்டறியாத கடை நடத்துறாங்கள், மனுசருக்கு வீட்டை போக வழியில்லாமல் கிடக்கு!". இப்படியே அன்றைய பொழுது Honest Ed உடன் போனது.

மறுநாள் Toronto Down Town க்குப் போவது திட்டம். அதன்படி டொரொன்டோ நகர் மத்தியில் அமைந்திருந்த மிகவுயர்ந்த கட்டிடமான CN Tower பார்ப்பதற்கான எமது பயணம் தொடங்கியது. மீண்டும் அதே பஸ் பயணம்ன், மூன்று சப்வே ரயில்கள் என்று இரண்டு மணிநேர பயணத்தின் பின்னர் டொரொன்டோ நகர் மத்தியை அடைந்தோம். ஆகா, இதுவல்லோ நகரம் என்று வியந்துகொண்டேன். வானைமுட்டும் கண்ணாடிக் கோபுரங்கள், அந்தக் கோபுரங்களில் வெளிச்சம் பாய்ச்சிய காலை சூரியன். புற்றுக்குள் இருந்து புறப்பட்ட எறும்புகளாக டொரொன்டோ நகர் மக்கள், இவர்களுடன் கூடவே நகர்பார்க்கும் ஆவலுடன் இன்னும் 12 பேர்....ஆகா..அற்புதம்தான். 

நான் சிட்னியில் ஓரளவு இடங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் கனடா வித்தியாசமாக இருந்தது. எதிலும் ஒரு கவர்ச்சி, புதுமை, எழில்...என்னவென்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை..மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. நாம் சென்ற நேரம் Pan American Games நடந்துகொண்டிருந்ததால், டொரொன்டோ நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. தெருவெங்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான விளம்பரங்கள் சிரித்துக்கொண்டிருக்க, ஒரு முழுமையான கனவிற்குள் என்னை அழ்ழ்த்திவிட்டது அந்தத் டொரொன்டோ !

மனைவி சிட்னியிலிருந்து மினக்கெட்டுக் காவிக்கொண்டு வந்த கமராவில் படம் எடுக்கத் தொடங்கினாள். படம் எடுக்கத் தொடங்கிவிட்டால் அவளை நிறுத்த முடியாது. யார் சொல்லியும் கேட்கப் போவதில்லை. படம் எடுக்காவிட்டால் நாளை பேஸ்புக்கில் போடுவது எப்படி என்கிற நியாயமான கவலை அவளுக்கு ! இடங்களைப் படமெடுத்தால்ப் பரவாயில்லை, ஆனால் தன்னுடன் வந்திருந்தவர்களை அப்படி நில்லுங்கோ, இப்பிடி நில்லுங்கோ என்று ஒரு வதை வதைத்து அவள் எடுக்கும் படங்கள் இருக்கிறதே...........சொல்லி வேலையில்லை. ஆனால், முடியாது என்று சொல்லவும் முடியாது, வேறு வழியில்லாமல் நாங்களும், கூடவே வந்திருந்த உறவுகளும் செயற்கையாகப் பல்லைக் காட்டிக் கொண்டு கமராவுக்குப் போஸ் கொடுத்தோம். எங்கள் நிலையைக் கண்டு கமராவுக்கே அழுகை வந்திருக்கும். 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவாறு மனைவியையும் இழுத்துக்கொண்டு CN Tower கட்டிடத்தினுள் நுழைந்தோம். தமது உயமான , பெருமைமிக்க கட்டிடத்தை தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க கனடா அரசாங்கம் அந்தக் கட்டிட நுழை வாயிலில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.ஆகவே உள்ளே நுழைந்தவர்களை கடுமையாகச் சோதனை செய்துவிட்டு உள்ளே விட்டார்கள். விளங்கிக் கொள்ளவேண்டிய நடைமுறைதான். 

கட்டிடம் ஏறும் லிப்ட்டுக்குள் நுழையுமுன்னர் கூட்டமாகப் புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் தரப்பட்டது. அங்கும் மனைவி தனது புகைப்படம் எடுக்கும் வேலையக் காட்டத் தொடங்கினால். கூட்டமாக புகைப்படம் எடுக்கலாம் என்பதை தவறுதலாக விளங்கிக் கொண்டாளோ என்னவோ, குடும்பம் குடும்பமாக எடுப்போம் என்று அவள் கூறிவிட்டு ஆட்கள் பிரிக்கத் தொடங்க, அங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தவர், எமக்குப் பின்னால் புகைப்படம் எடுக்கக் காத்துக்கொண்டிருந்தவர் எல்லோருக்கும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. நிலமையைப் புரிந்துகொண்டு நானும், இன்னுமொரு உறவினரும் ஒருவாறு அவர்களைச் சமாதானப் படுத்த , எனது மனைவியை இழுத்துக்கொண்டு மற்றைய நிலைக்கு நகர்ந்தோம். 

குழுவாக எம்மை ஒரு லிப்டுக்குள் ஏற்றினார்கள். லிப்ட் நகரும்போதே, அந்தக் கட்டிடம் பற்றியும், அதன் மகத்துவம் பற்றியும் கூட வந்த லிப்ட் இயக்குனர் சொல்லிக்கொண்டு வந்தார். ஒருவாறு லிப்டுக்கு வெளியே வந்து கட்டிடத்தின் உச்சியிலிருந்து டொரொன்டோ நகரை முதன் முதலாக உயரத்திலிருந்து பார்த்தோம். 

அற்புதமான ஒரு காட்சி. ஏனைய கட்டிடங்களும், தொடர் மாடி வீடுகளும் மிகச் சிறிதாகத் தெரிய, நகரின் பெரும்பாலான பகுதிகளை அங்கிருந்து பார்க்க முடிந்தது. அங்கும் மனைவி புகைப்படம் எடுத்தாள். உச்சியின் ஒருபகுதியில் வெறும் கண்ணாடியால் மட்டும் தரை கட்டப்பட்டிருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் மிகவும் அருமையாகப் போய்க்கொண்டிருக்கின்றது!

சி.என். ரவரில் வரவேற்புப் பலகையில்.. உலகின் முதன் மொழியாம் தமிழும் இருப்பதாக அறிந்தேன்!

உங்கள் மனைவி படமேடுத்திருந்தால். இங்கே தயவு செய்து இணைத்து விடுங்கள்!

மற்றும் கனடாவின் 'லா சப்பல்' பகுதியைப் பற்றியும்... நம்மூர் நகைக் கடைகளைப் பற்றியும் எழுதுங்கள்!

 

அட அப்படியே நம்ம கடையும் எட்டி பார்த்திருக்கலாம் .Down Town இல் தான் .

நன்றாக இருக்கு தொடருங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கண்ணாடித் தரைமேல் நின்று பார்த்தால் கீழே 340 மீட்டர் ஆழத்தில் இருக்கும் அனைத்தும் தெரியும். ஆனால் கூடவே ஒரு பயமும் பற்றிக்கொள்ளும். கூடவே வந்தவர்கள் தயங்கினாலும் கூட அவர்களையும் ஒருவாறு இழுத்துக்கொண்டு கண்ணாடிமேல் நிற்கும்போது போதும் போதும் என்றாகிவிட்டது. ஏனென்று கேட்கிறீர்களா? ஏனென்றால், எமது தலைக்கு மேலே வைத்திருக்கும் கமராவினால் படம் எடுக்கும்போது கண்ணாடியூடாக அதள பாதாளத்தில் இருக்கும் அனைத்தும் எமது பின்ணணியில் தெரியும். அதற்குத்தான் இந்த ஏற்பாடெல்லாம். அந்தப் படப் பிடிப்பு முடிந்து ஒருவாறு வெளியே வந்தோம். 

அனைவருக்கும் களை. கொண்டுவந்த சாப்பாட்டை எல்லோரும் பகிர்ந்து உண்டோம். 

உணவு முடிந்தபின்னர், CN அருகிலிருக்கும் பழைய புகையிரத காட்சியகத்தில் எமது அன்றைய மாலைப் பொழுது கழிந்தது. எண்ணுக்கணக்கற்ற புகைப் படங்கள், பலவிதமான போஸ்கள்.............இப்படியே கழிந்தது அன்றைய மாலைப் பொழுது.

எல்லாம் முடிந்தவுடன், மீண்டும் அதே சப்வே ரயில்கள், ஒற்றைப் பஸ் சவாரி என்று இரவு 11 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்.

தொடர் மிகவும் அருமையாகப் போய்க்கொண்டிருக்கின்றது!

சி.என். ரவரில் வரவேற்புப் பலகையில்.. உலகின் முதன் மொழியாம் தமிழும் இருப்பதாக அறிந்தேன்!

உங்கள் மனைவி படமேடுத்திருந்தால். இங்கே தயவு செய்து இணைத்து விடுங்கள்!

மற்றும் கனடாவின் 'லா சப்பல்' பகுதியைப் பற்றியும்... நம்மூர் நகைக் கடைகளைப் பற்றியும் எழுதுங்கள்!

 

புங்கை,

 

தமிழில் வரவேற்பிருந்ததைக் கவனித்தேன். ஆனால் புகைப்படம் எடுத்ததாக நினைவில்லை. 

image.jpg

CN Tower ன் கண்ணாடியின் மேலிருந்து.....

கீழ்த்தளத்திலிருந்து அதன் தோற்றம்.....

20150625_082219_1.jpg

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20150625_083709_1.jpg

ஸி. என் டவர் அருகில்.....

இப்படியே, மியூசியம், சயன்ஸ் சென்டர் என்று பார்க்கக் கூடிய இடமெல்லாம் சுற்றிவந்தோம். 

இந்த அனைத்து பயணங்களிலும் எம்முடன் கூடவே வந்த இன்னொருவர் பற்றிக் கூறியே ஆகவேண்டும். அவர்தான் Tim Horton. கனடா வசிகளுக்கு இவர் மிகவும் பரீட்சயமானவர். தமிழர்கள் பலருக்கு இவருடனான சந்திப்பின்பிறகே அன்றைய நாள் பிறக்கின்றதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

அவர் வேறு யாருமல்ல, அனைவரும் பருகும் மிகவும் பிரபலமான கனடாவில் மட்டுமே உள்ள காப்பி !

அவரை அருந்திவிட்டால்ப் போதும், அன்றைய பொழுது நன்றாகத் தொடங்கும் என்று ஒரு ஐதீகம். "இதைக் குடிச்சியள் என்றால், பிறகு விடமாட்டியள், அடிமையாகிப் போயிடுவியள்" என்ற எச்சரிக்கையுடந்தான் எனக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். எனக்கென்னவோ பெரிதாக அதில் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு நாளைக்குக் குறைந்தது 3 அல்லது 4  ஆவது அருந்தியிருப்பேன். அவற்றில் எனக்குப் பிடித்தது ICE கப்பச்சீனோ. 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை நகர்த்திய விதமும், எழுத்து  நடையும்.... அழகு.
அதிலும்.... சாதாரண விடயத்தை கூட, நகைச்சுவையுடன் விபரித்த விதம், வாசிக்க... நன்றாக உள்ளது ரகு.animierte smilies computer pc notebook laptop

  • கருத்துக்கள உறவுகள்

என்னா அண்ணாத்தே இம்மூ....ட்டு தூரம் வந்துட்டு நம்ம சாதி சனத்த ஒரு எட்டு எட்டி பார்க்காம இருந்துட்டீன்களே !!

நம்ம வூடு ... நீங்க இருந்த வூட்ல இருந்து தம்மா.. தூரம் தான்.
அப்டியே "பாபு" கடைல மட்டுன் ரால்ஸ் ஒண்ண கடிச்சு பூரா முடிக்கிறதுக்கு முன்னாலையும் நம்ம வூடு வந்துரும்.

அங்க தாண்ணே நம்ம ஜனங்க ஜக ஜோதியா கூட்டம் கூட்டமா திரி  வாய்ங்க.
தேவத மாதிரி பொண்ணுக, கூலிங்சு போட்ட ஆண்டீஸ், கிர்தா மீச வச்ச தம்பிக, தொப்பையோட நம்ம பிரண்ட்ஸ், பென்சு, பி.எம் டபுள்ல்யூ காரு,     

ஸ்பைஸ் லாண்டு, இரா சூப்ப்பர் மார்கெட்டு, லிங்கம் கூல் பாரு, ராமன் அப்லாயன்ஸ், பூரணி விளாசு, சுபாஸ் ஐஸ்க்ரீம், காசிப்புள்ள பண மாற்று, லாயரு, டாக்டரம்மா, அம்பிகா ஜுவலர்சு, ஆர்.கே டீ சலூனு, முருகன் புக் சாப்பு, எல்.சீ.பீ யோ (வைன் சாப்பு), போர்சூன் கம்புட்டேர்ஸ் ...

அடேங் கொய்யால ...ரயிலு பொட்டி மாதிரி அடுக்கடுக்கா நம்ம தமிழ் பிசினஸ், தமிழ் பிசினஸ், தமிழ் பிசினஸ்

அட போங்க பாஸ் நாம மீட்டு பண்ணி இருந்தா இளையராசா, எம்.எஸ் வீ.....  பத்தி நேரிய நேரம் பேசி இருக்கலாம் ....

அது சரி ஊருக்கு போய்ட்டியலா? இல்ல இன்னு ... அதே டவுண் டவுன சுத்தி சுத்தி  வந்துகினு... 

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி... இப்பூடி.... எழுதுறீங்க சசீ... முடியல.....m0118.gifm0127.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும், வெளியில் ஒரு வேலையாகப் போய்விட்டேன். மீதியை சிறிது நேரத்தில் எழுதுகிறேன்.

 

சசி, நான் கடந்த திங்கட்கிழமை சிட்னி வந்தடைந்தேன். ஆனால், இன்றுவரைக்கும் கனடா நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. முடிந்தால் அங்கே வந்துவிட ஆசை, ஆனால் அதை நான் தீர்மானிக்கமுடியாதென்பது வேதனை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நாம் பார்க்க நினைத்திருந்த மிக முக்கியமான இடங்களில் ஒன்று உலகப் புகழ்பெற்ற நயகரா நீர்வீழ்ச்சி.

 

எமதிடத்திலிருந்து ஒன்றரை மணிநேர பயணம் என்று சொன்னார்கள். ஆகவே சுமார் 25 பேர் வரையில் பயணத்திற்குத் தயாரானோம். 4 வாகனங்களில் எமது பெரிய குடும்பம் நயகரா வீழ்ச்சி நோக்கி நகரத் தொடங்கியது. 

தவறாமல் டிம் ஹோர்ட்டனில் நிறுத்தி பெரியவர்களுக்குக் காப்பியும் சிறுவர்களுக்கு டோநட், சாக்கிலெட்  ஸ்மூதியும் வாங்கிக் கொண்டோம். 

Freeway இல் ஏறியதும் வண்டிகள் பறக்கத் தொடங்கின. பாதையின் உயர் வேக எல்லை ஏதோ 110 தான், ஆனால் யாருமே அதைச் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அவரவர் தத்தமது வசதிக்கேற்றவாறு ஓடிக் கொண்டிருந்தனர். நான் அமர்ந்திருந்த மாமவின் வண்டி தன்பாட்டிற்கு 130 இல் ஓடிக்கொண்டிருக்க, ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்துக் கேட்டேன், "ஓவர் ஸ்பீடில போனால் பிடிக்க மாட்டங்களோ?". நிண்டால்ப் பிடிப்பாங்கள், பாத்து ஓடினால்ச் சரி. 110 எண்டாலும், ஒரு 125 வரை ஓடலாம், பெரிசாப் பிடிக்க மாட்டங்கள் என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தார். நான் சிட்னியை நினைத்துப் பார்த்தேன், 110 பத்தென்றால், நாங்கள் 105 இல் ஓடக் கூடப் பயப்படுவோம், இங்கே என்னடாவென்றால் 125 வரை பாத்து ஓடலாம் என்கிறார்களே என்று வியந்துகொண்டேன். 

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, எமக்கு முன்னால் எனது மனைவி போய்க்கொண்டிருந்த வண்டி திடீரென்று ஒரு Exit ஐ எடுக்க பின்னால் வந்த அனைத்து வண்டிகளும், அந்த வண்டியைப் பிந்தொடர்ந்து சென்றன. எங்கே போகிறார்கள் என்று எமக்குப் புரியவில்லை, ஆனால் கட்டிடங்களைப் பார்த்துவிட்டு, "கிங்ஸ்ரன் மோலுக்குப் போகிறார்கள் போல" என்று மாமா சொல்லவும் எனக்கு புரிந்துவிட்டது. ஆகா, மனைவி மறுபடியும் உடுப்பு வாங்கத் தொடங்கிவிட்டாள் போலிருக்கிறது என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

 

சரி, எல்லாரும் ஒரு ஓய்வெடுக்கலாம் என்று மாம கூறிவிட்டு, கிங்ஸ்ரன் மோலில் நிப்பாட்டினோம். இன்னும் ஒரு மணித்தியாலம் ஓட வேண்டும், ஆகவே கெதியாய் வாங்கிறதை வாங்கிக்கொண்டு வாருங்கோ என்று அவர் சொல்லவும் அங்கே நின்றிருந்த 25 சனமும் எந்தப் பக்கத்தால போனதென்று தெரியவில்லை, மாயமாய் மறைஞ்சுட்டுதள். இந்தாங்கோ, 100 டொலர், உங்களுக்கும் ஏதாச்சும் பாத்து வாங்குங்கோ என்று கைய்யில் காசைத் திணித்துவிட்டு மனைவி தனது shopping ஐத் தொடங்கினாள். "அப்பாடா, முதல்முறையாக, தான் வராமல் என்னை உடுப்பெடுக்க அனுப்புகிறாள், அதையெடுங்கோ, இதையெடுங்கோ, உந்த உடுப்பு உங்களுக்குச் சரியாய் இல்லை, கலர் கூடவாக் கிடக்கு, குறைவாக் கிடக்கு ' என்று வழமையாகக் கொடுக்கிற தொல்லையில்லாமல் நானே, எனக்கு, சுதந்திரமாக உடுப்பு வாங்கச் சந்தர்ப்பத்தை அந்த கிங்ஸ்ரன் மோல் ஏற்படுத்தித் தந்திருந்தது. ஆகவே மிகுந்த உற்சாகத்துடன் நானும் உடுப்பு வாங்கக் கிளம்பினேன். 

முதலில் டொமி ஹில்பிகருக்குள் நுழைந்தேன். அவுஸ்த்திரேலியாவுடன் ஒப்பிடும்போது மலிவான விலையில் இருந்ததாக எனக்குப் பட்டது. 20-25 பெறுமதியான அந்த டீ சேர்ட்டுக்கள் சிட்னிடயில் நிச்சயம் 60-65 ஆவது இருக்கும் என்று எனக்குள் நினைத்துக்கொண்டு சிலவற்றை வாங்கினேன். ஒரு 30 நிமிடத்தில் எனது உடுப்பு வாங்கும் படலம் முடிந்துவிட வாகனத்தை நோக்கி நடந்தேன். மாமா மட்டும் தனியே கை நிறையப் பைகளுடன் நின்றுகொண்டிருந்தார். 'நீங்களும் ஷொப்பிங் செய்திருக்கிறியள் போலக் கிடக்கு " என்று நான் கேட்கவும், அப்படியொன்றும் இல்லை, என்ர மனுசியும் பிள்ளைகளும் ஒரு ரவுண்ட் முடிஞ்சு மற்ற ரவுண்டுக்குப் போயிருக்கினம். இது அவயின்ர முதலாவது ரவுண்ட் ஷொப்பிங் என்று புன்னகைத்துக்கொண்டே கைய்யில் இருந்த பைகளைக் காண்பித்தார். 

நாங்கள் இருவரும் அப்படியே பேசிக்கொண்டிருக்க, மைத்துனரரும் வந்து சேரவே பேச்சு சுவாரசியமாகத் தொடர்ந்தது. "அதுசரி, ஒரு மணித்தியாலம் எண்டு சொன்னீங்கள் இப்ப ரெண்டு மணித்தியாலம் ஆகீட்டுது, ஆக்களைக் காணவில்லையே?" என்று நான் மாமாவைக் கேட்க, "நீர் இப்பத்தானே எங்களோடு ஷொப்பிங் வந்திருக்கிறீர், ஒரு மணித்தியாலம் எண்டு சொன்னால்த்தான் உவையள் 3 மணித்தியாலத்திலாவது ஒரு மாதிரி வந்து சேருவினம்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னதுபோலவே 3 மணித்தியாலத்தில் ஒருவாறு அனைவரும் தத்தமது வண்டிகளுக்கு வந்து சேர்ந்ததும், நயகரா நோக்கிய எமது பயணம் தொடர்ந்தது.

ஒரு மணிநேர ஓட்டத்தில் நீர்வீழ்ச்சியை அடைந்தோம். வாகனங்களை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு,  நீர்வீழ்ச்சியின் அலுவலகம் நோக்கி நடந்தோம். அலுவலகத்தில் நாம் போகவிருக்கும் நிகழ்வுகளுக்கான பற்றுச் சீட்டுக்களை வாங்கிக் கொண்டு, முதலாவது நிகழ்வான நயகரா நீர்வீழ்ச்சியின் அருகே சென்று பார்க்கும் படகில் ஏறிக்கொண்டோம். மழைக்குப் போடும் கோட்டுக்கள் போல பிளாஸ்ரிக்கில் செய்யப்பட்ட ரெயின் கோட்டுகளை அனைவரும் அணிந்துகொண்டு படகின் முன்பக்கத்தில் நின்றுகொண்டிருக்க, "நீங்கள் சிறிலங்காவோ?" என்று தூய தமிழில் ஒருவர் எங்களைப் பார்த்துக் கேட்டார். அவர் வேறு யாருமல்ல, அந்த படகின் காப்டன். தெல்லிப்பழையைச் சேர்ந்தவராம். கடந்த 30-35 வருடங்களாக கனடாவில் வசித்துவருகிறார். நாம் கூட்டமாகத் தமிழில் பேசியதைக் கண்டுவிட்டு தானும் வந்து பேசினார். "படகுப் பயணம் முடிந்தவுடன் எம்முடன் வந்து ஒரு போட்டோ எடுப்பீர்களா?" என்று எனது மனைவியின் வேண்டுதலை "அதுக்கென்ன,  தாராளமாக எடுக்கலாமே" என்று புன்முறுவலுடன் கூறிவிட்டு படகை எடுக்கப் போய் விட்டார். 

படகு மெதுவாக அந்தப் பாரிய நீர்வீழ்ச்சி நோக்கி நகரத் தொடங்கியது. பேரிரைச்சலுடன்  அந்த நீர்வீழ்ச்சி விழுவதைக் கேட்டபோது, பல ஜெட் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்தால் எப்படியிருக்குமோ, அதைப்போல இருந்தது. நீர்வீழ்ச்சியை நெருங்க நெருங்க நீர்வீழ்ச்சி கீழே விழுந்து பட்டுத் தெறித்த நீர்த்துளிகள் முகத்தில் அறையத் தொடங்கின. அதேபோல, விழுந்துகொண்டிருந்த நீர்வீழ்ச்சியினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய அலைகள் படகை அப்படியும் இப்படியுமாக ஆட்டியபடி இருக்க படகு நீர்வீழ்ச்சியிலிருந்து ஒரு 100 மீற்றர் தூரத்தில் நின்றுவிட்டது. கமராக்கள் நீர்வீழ்ச்சியை அருகேயிருந்து சுட்டுத்தள்ள, மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க, அந்த உணர்வே மனதிற்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. ஒரு சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்த படகு மெதுவாகத் திரும்பத் தொடங்கியது. அப்படியே அமெரிக்க எல்லையிலிருந்து வீழ்ந்துகொண்டிருந்த இன்னுமொரு சற்றுச் சிறுத்த நீர்வீழ்ச்சியை அருகில் நின்று காட்டி விட்டு, படகு மெதுவாக தனது இடம் நோக்கி அசைந்தபடி வந்து சேர்ந்தது. தான் உறுதியளித்தவாறே, படகின் காப்டனும் எங்க்ளுடன் நிண்ரு சில புகைப் படங்களை எடுத்துக்கொண்டார். எனது மனைவியின் மகிழ்சிக்கு அளவேயில்லை.

20150629_054523.jpg

20150629_044758.jpg

Edited by ragunathan

அழகான வர்ணனையுடன் சுவாரிசியமாக  பயணக்கட்டுரை  .....நிச்சயம் பலருக்கு கனடாவிற்கு சுற்றுலா வரவேண்டும் என எண்ணத்தோன்றும் :)

தொடருங்கள் ரகு அண்ணா!

உள்குத்தும் இல்லை, வெளிக்குத்துமில்லை. கனடா என்பதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். திருத்தியமைக்கு நன்றி !

ஹஹ பலமான உள் குத்து இருக்கு என்றுதான் நானும் நினைத்தேன் இப்படி கவித்து விட்டீர்களே ரகு:shocked: :grin:

மன்னிக்க வேண்டும், வெளியில் ஒரு வேலையாகப் போய்விட்டேன். மீதியை சிறிது நேரத்தில் எழுதுகிறேன்.

 

சசி, நான் கடந்த திங்கட்கிழமை சிட்னி வந்தடைந்தேன். ஆனால், இன்றுவரைக்கும் கனடா நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. முடிந்தால் அங்கே வந்துவிட ஆசை, ஆனால் அதை நான் தீர்மானிக்கமுடியாதென்பது வேதனை. 

கடந்த திங்கள்தானே வந்தீர்கள் ரகு , இன்னும் ஒரு மாதம் நினைவுகள் பசுமையாக இருக்கும். அதன் பிறகு கேட்டால் கனடாவா யார் சொன்னது சிட்னிதான் திறம் என்பீர்கள். எல்லாம் சொந்த அனுபவம்தான்   :)

 

அழகான வர்ணனையுடன் கூடிய சுவாரசியமான பயண கட்டுரைக்கு நன்றி தொடருங்கள்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான் பார்த்தேன் ரகு...

வாழ்த்துக்கள் பயணத்துக்கும் பயணக்கட்டுரைக்கும்..

நானும் போன போது எழுதத்தொடங்கி  இடையில் விட்டது இப்பவும் குத்துது..

ஆனால் நான் எழுதாமல் விட்டவற்றையும் சேர்த்து நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி  தருகிறது..

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ரகு, அந்த Tim Horton னுக்குத்தான்  பச்சை, பயணம் எல்லாம் அப்புறம்...! :)

செலவுக்கு மனிசி டொலரை போட்டுட்டுப் போச்சுது என்ற இடம் வரும்போது அப்படியே புல்லரிச்சுது...! வீட்டுக்கு வீடு வாசற்படி..ம்!

  • கருத்துக்கள உறவுகள்

ரகு Tim Horton னுடன் நிற்காமல் அமெரிக்கா வந்து ஒரு தடவை Dunkin Donut இலும் சுவை பாருங்கள் .
அப்போது என்னையும் கூப்பிடுங்கள் ஒரு ஓரமாக நின்று கோப்பி குடித்து விட்டு போகிறேன்.

எனது தொலைபேசி இலக்கம் இன்னமும் வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
இல்லாவிட்டால்  eelapirean@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தரவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.