Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் படைக்காத மனிதர்கள்! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் படைக்காத மனிதர்கள்! 

அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலாக வெளியிட்டார். "கடவுளின் சாயலாக மனிதன் ஒரே நாளில் படைக்கப் பட்டான், அதன் பிறகு கடவுள் மனிதனுக்குப் பயன்படும் வகையில் மற்றைய உயிரினங்களைப் படைத்தார். இவையெல்லாம் ஏழே நாட்களில் நடந்து முடிந்தன" என்று பைபிள் கூறுகிறது. இந்த பைபிள் நம்பிக்கை மீது விழுந்த முதல் பாரிய அடியாக டார்வினின் கூர்ப்புக் கொள்கை இருந்தது. 

டார்வினின் கூர்ப்புக் கொள்கையை, வேறும் சில விஞ்ஞானக் கருது கோள்கள், அவதானங்களோடு இணைத்துப் பார்த்தால் பின்வரும் உயிர்களின் பயணச் சுவடு தெரிகிறது: ஒரு ஒற்றைக் கல உயிரினமாக ஆதிக் கடலில் உருவான முதல் உயிர், பல கலங்களாக மாறி, பின் முள்ளந்தண்டு உருவாகி, நுரையீரல் வளர்ந்த போது, தரையில் ஊர்வனவாக மாறியது. இந்த ஊர்வன பின்னர் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் நிலை கொண்ட பாலூட்டிகளை உருவாக்கின. இந்தப் பாலூட்டிகளில் சில மரத்தில் தொங்கி திரிந்து வாழ ஆரம்பித்த போது  மந்திகள் உருவாகின. மந்திகளில் சில தொப்பென்று தரையில் விழுந்து அரைவாசி நிமிர்ந்த நிலையில் ஆதிப் புல் வெளிகளில் அலைந்து திரிய ஆரம்பித்த வேளையில் ஆதி மனிதர்கள் உருவானார்கள். இந்தப் பயணச் சுவட்டின் இன்றைய உச்சம், ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) எனப்படும் நாங்களாக இருக்கிறோம்.

ஒரு அறிவியல் கொள்கை மத நம்பிக்கையை அச்சுறுத்தும் போது நிகழும் எல்லாம், டார்வினின் கூர்ப்பியலுக்கும் நிகழ்ந்தன. ஆனால், கூர்ப்பு நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நிரூபிக்கும்  சான்றுகள் கடந்த 150 ஆண்டுகளில் ஏராளமாக வெளிவந்து விட்டன. உதாரணமாக மூளையை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன மனிதர்களான எங்களுடைய மூளையில் மூன்று பிரதானமான பகுதிகள் இருக்கின்றன. (மூளையைப் பல பகுதிகளாக வகைப் படுத்தலாம், நான் இங்கே குறிப்பிடும் வகைப் படுத்தல் கூர்ப்பியல் படிமுறையை எடுத்துக் காட்ட மட்டுமே என்பதைக் கவனிக்கவும்). எங்களிடம் இருக்கும் மூளையம் சார்ந்த  மூளைத்தண்டுப் பகுதியை "ஓணான் மூளை" என்று அழைக்கலாம். சுவாசம், இதயத் துடிப்பு, உடல் அசைவு என்பவற்றைக் கட்டுப் படுத்தும் இந்தப் பகுதி ஊர்வனவற்றிலேயே உருவான ஆதி மூளை என்பதால் இப்படி அழைக்கலாம். பிறகு "நாய் மூளை" என்று நாம் பட்டப் பெயர் கொண்டழைக்கத் தக்க பெருமூளைப் பகுதியும் எங்களிடம் உண்டு. ஸ்பெஷலாக விருத்தியான முன் மூளைப் படை (prefrontal cortex) எனப்படும் அதி விசேட பகுதி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு பகுதி. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய கணணிக்கு கட்டம் கட்டமாக RAM பொருத்தி அதனை செயற்றிறன் மிக்க கணணியாக மாற்றும் வேலை எங்கள் மூளையில் கூர்ப்பினால் செய்யப் பட்டிருக்கிறது. கூர்ப்பியல் சார்ந்த இந்த இலகுவான விளக்கத்தை அடிப்படை வாதக் கிறிஸ்தவர்கள் ஏற்க மறுத்து Intelligent Design எனும் தங்கள் கற்பனைக் கொள்கையொன்றை ஊக்குவிக்கிறார்கள். இன்ரெலிஜென்ட் டிசைன் கூர்ப்பினால் மனிதன் பெற்ற சிறப்புகளின் உரிமையை அப்படியே தங்கள் கடவுளின் கைவண்ணமாகச் சித்திரிக்கிற ஒரு நொண்டி முயற்சி. அமெரிக்காவின் சில தென் மானிலங்கள், தமது பாடசாலைகளில் கூர்ப்புக் கொள்கையின் "நன்மை தீமைகளை" ஆராயும் பாடங்கள் கற்பிக்கப் பட வேண்டுமென்று சட்டமியற்றியிருக்கின்றன. இதன் நீண்ட கால இலக்கு, மத நம்பிக்கையின் பால் பட்ட இன்ரெலிஜென்ற் டிசைன் ஒரு மாற்றுத் தியரியாக திணிக்கப் பட்டு குழந்தைகளை அதை ஏற்கச் செய்வதாக இருக்கிறது. 

டார்வின் கூர்ப்பினால் தக்கன பிழைத்து சூழலுக்கு இயைபாக்கம் அடைந்து புதிய உயிரினங்கள் உருவாகின்றன என்று ஊகித்த போது "ஜீன்" என்ற ஐடியாவே உருவாகியிருக்கவில்லை. ஆனாலும், இயற்பியலில் ஐன்ஸ்ரைனின் கோட்பாடுகள் நவீன பௌதீகவியலாளர்களால் இன்றும் நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருப்பது போல, டார்வினின் கூர்ப்பியல் நூல் வெளியாகி சரியாக நூறு ஆண்டுகளில் பின்னர் டி.என்.ஏ (DNA) மூலக்கூறினை விஞ்ஞானிகள் வாட்சனும் கிறிக்கும் கண்டு பிடித்து, கூர்ப்பின் மூலக்கூற்று அடிப்படையை ஆரம்பித்து வைத்தனர். 

தற்போதைய கூர்ப்பை நிரூபிக்கும் ஆய்வுகள், வெளித்தோற்றங்களைத் தாண்டி, நேரடியாக டி.என்.ஏ மூலக் கூறுகளையே ஆய்வு செய்து பல தகவல்களை உறுதி செய்கின்றன. இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுதலாக இருந்ததும் அப்படியான ஒரு டி.என்.ஏ சார் கூர்ப்பியல் ஆய்வு தான்.

ரஷ்யாவுக்கும் மொங்கோலியாவுக்கும் இடையே இருக்கும் டெனிசோவா எனும் பனி உறைந்த குகையொன்றை மனித வரலாறு தொடர்பான ஆய்வாளர்கள் 1980 இல் இருந்து அகழ்வு செய்து ஆராய்ந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அங்கே கண்டெடுக்கப் பட்ட என்புத் துகள்கள், மற்றும் கல்லாயுதங்கள் என்பவற்றை அவை அங்கே படிமமாகிய காலக் கணிப்பீட்டோடு ஆய்வு செய்யப் பட்ட போது பல சுவாரசியமான , மனிதக் கூர்ப்பின் படிமுறைகளை உறுதி செய்யும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குகையில் கிடைத்த ஒரு என்பின் டி.என்.ஏயின் படி, ஹோமோ சேபியன்ஸுக்கு நெருக்கமான டெனிசோவியன்ஸ் என்ற ஆதிமனிதர்களும் அவர்களுக்கு முன்னைய ஆதி மனிதர்களான நியண்டதால் (Homo neanderthalensis) மனிதர்களும் இனப் பெருக்க ரீதியில் கலப்பில் ஈடு பட்டிருக்கிறார்கள் (அதான்பா, அந்தக் குஜால் மேட்டர்!) என்பது தெளிவாகியிருக்கிறது. இது, மனிதனின் கூர்ப்பில் மிகவும் முக்கியமான ஒரு கண்டு பிடிப்பு. ஏன்? கூர்ப்பு என்பதன் அடிப்படை "ஒரு இனம் கொஞ்சம் கொஞ்சமாக இன்னொரு இனமாக, இன்னொரு வேர்சனாக (version) மாறுவது" என்பதாகும். இந்தப் படிமுறை மாற்றத்தை மனிதனில் டி.என்.ஏ வடிவில் நிரூபித்திருக்கும் முதல் கண்டு பிடிப்பு இது. டெனிசோவியன்கள் எனப்படும் புதிய மனித இனமும், நியண்டதால் என்ற ஆதியான இனமும் கலந்து, உருவான சந்ததிகளில் நியண்டதாலின் இயல்புகள் புதிய வாழ் நிலைமைகளுக்கு ஏற்புடையவையாக இருக்காமையால், அந்த மனித இனம் அருக, டெனிசோவியன்கள் பெருக எங்கள் நவீன ஹோமோ சேபியன்ஸ் இனம் உருவாகியிருக்கிறது. இந்த டெனிசோவாக் குகைகளில் நடந்த இன்னுமொரு ஆய்வில், 50,000 வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கக் கூடிய நவீன ஹோமோ சேபியன்ஸ் இனத்துடன் தொடர்பான கல்லாயுதங்களும்  கண்டெடுக்கப் பட்டிருப்பது, இந்த ஊகத்திற்கு மேலதிக உறுதி சேர்க்கிறது. 

நாம் பல இடங்களில் காண்பது போல, அறிவியல் ஆய்வு முயற்சிகள் கடினமானவை, நீண்ட முயற்சியை வேண்டுபவை. அந்த அறிவியல் வியர்வை சிந்தி வெளிக்கொண்டு வரும் எமது கதையை கடவுளின் பக்தர்கள் தங்கள் அடிப்படை வாதத்தை வளப்படுத்தப் பாவிப்பது இன்னும் தொடரும் என நம்பலாம். இந்த இறுதிக் கண்டு பிடிப்பு இன்ரெலிஜென்ற் டிசைன் காரர்களுக்கு எப்படி உதவப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

ஆதாரங்கள்:      

1. Dating of hominin discoveries at Denisova, Dennell, R. Nature, vol 565, 571–572 (2019).

2. Timing of archaic hominin occupation of Denisova Cave in southern Siberia, Nature, vol 565, 594–599 (2019) . 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்கள்!
தொடர்ந்தும் எழுதுஙகள், ஜஸ்டின்..!

அருமையான பதிவு. இவ்வாறான யாழுக்கென்றே படைக்கு ஆக்கம் தான் யாழை மெருகேற்றும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நியான்டர்தால் அழிந்தமைக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது... மற்ற இனங்களை விட நியாண்டர்தால் வலிமையானவர்கள்... அவர்களது வலிமையால் மற்ற இனங்களை தங்கள் சௌகரியத்திற்காக உணவு சுலபமாக கிடைக்கும் இடங்களை விட்டு விரட்டி அடித்தார்கள்... வலிமை குறைந்தவர்கள் வேறு வழியில்லாமல் வாழ்கையை ஓட்டுவதற்க்கு மூளையை உபையோகிக்கும் நிலைக்கு தள்ள பட்டார்கள், இடமும் பெயர்ந்தார்கள்... கடினமாக வேட்டை ஆடினார்கள், ஆயுதங்கள் பெருகின... அதே சமையம் நியான்டத்தார்கள் சுலபமாக கிடைக்கும் உணவுகளுக்காக தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டார்கள், உணவும் குறைந்து போயின...மாண்டும் போனார்கள்... இடம் பெயர்ந்த சில பல நியான்டர்த்தால் இனம் மூளை கூர்மையான மற்ற இனங்களிடம் தோற்றும் போனார்கள்...

Edited by மியாவ்

டார்வினின் கூர்ப்புக்கொள்கை பிழையானது என்று தற்போது அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு தடவை வாசித்தேன் ஒன்றுமே புரியவில்லை.நேரம் வரும் போது இன்னொரு முறை முயற்சி பண்ணுகிறேன்.

On 2/1/2019 at 1:14 PM, Justin said:

உதாரணமாக மூளையை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன மனிதர்களான எங்களுடைய மூளையில் மூன்று பிரதானமான பகுதிகள் இருக்கின்றன. (மூளையைப் பல பகுதிகளாக வகைப் படுத்தலாம், நான் இங்கே குறிப்பிடும் வகைப் படுத்தல் கூர்ப்பியல் படிமுறையை எடுத்துக் காட்ட மட்டுமே என்பதைக் கவனிக்கவும்). எங்களிடம் இருக்கும் மூளையம் சார்ந்த  மூளைத்தண்டுப் பகுதியை "ஓணான் மூளை" என்று அழைக்கலாம். சுவாசம், இதயத் துடிப்பு, உடல் அசைவு என்பவற்றைக் கட்டுப் படுத்தும் இந்தப் பகுதி ஊர்வனவற்றிலேயே உருவான ஆதி மூளை என்பதால் இப்படி அழைக்கலாம். பிறகு "நாய் மூளை" என்று நாம் பட்டப் பெயர் கொண்டழைக்கத் தக்க பெருமூளைப் பகுதியும் எங்களிடம் உண்டு. ஸ்பெஷலாக விருத்தியான முன் மூளைப் படை (prefrontal cortex) எனப்படும் அதி விசேட பகுதி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு பகுதி. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய கணணிக்கு கட்டம் கட்டமாக RAM பொருத்தி அதனை செயற்றிறன் மிக்க கணணியாக மாற்றும் வேலை எங்கள் மூளையில் கூர்ப்பினால் செய்யப் பட்டிருக்கிறது.  இன்னொரு இனமாக, இன்னொரு வேர்சனாக (version) மாறுவது" என்பதாகும். இந்தப் படிமுறை மாற்றத்தை மனிதனில் டி.என்.ஏ வடிவில் நிரூபித்திருக்கும் முதல் கண்டு பிடிப்பு இது. டெனிசோவியன்கள் எனப்படும் புதிய மனித இனமும், நியண்டதால் என்ற ஆதியான இனமும் கலந்து, உருவான சந்ததிகளில் நியண்டதாலின் இயல்புகள் புதிய வாழ் நிலைமைகளுக்கு ஏற்புடையவையாக இருக்காமையால், அந்த மனித இனம் அருக, டெனிசோவியன்கள் பெருக எங்கள் நவீன ஹோமோ சேபியன்ஸ் இனம் உருவாகியிருக்கிறது. 

தேடல்கள் எப்போதும் சுவாரசியமானவை. மனித குலத்தின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியும் மிகவும் சுவாரஸ்யமானது, கூடவே சிக்கலானது.

நல்லதோர் ஆய்வுக் கட்டுரையை அருமையாகத் தமிழில் தந்தமைக்கு நன்றி, ஜஸ்ரின். இவ்வாறான ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 😊

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுஙகள்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பயனுள்ள ஆக்கம் ஜஸ்ரின். 👍🏾

டார்வினின் கூர்ப்புக்கொள்கை பிழையானது என்று நிரூபிக்க பலர் முயன்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் ஏவாளுக்கு பொக்குள் இல்லை என்று சொல்வார்கள்!

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2019 at 11:19 AM, கிருபன் said:

நல்லதோர் பயனுள்ள ஆக்கம் ஜஸ்ரின். 👍🏾

டார்வினின் கூர்ப்புக்கொள்கை பிழையானது என்று நிரூபிக்க பலர் முயன்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் ஏவாளுக்கு பொக்குள் இல்லை என்று சொல்வார்கள்!

ஏவாளுக்கு மட்டுமா பொக்குள் இல்லை? விக்ரோறியாஸ் சீக்ரட் உள்ளாடை மொடலான கரோலினா குர்கோவாவுக்கும் தான் பொக்குள் இல்லை!😊 படம் இணைக்கப் பயமாக இருக்கு! 

  • கருத்துக்கள உறவுகள்

கிறீஸ்த்தவர்களின் பைபிளில் மிகவும் பழமையானது ஆதியாகமம். சொல்லப்பட்டிருக்கும் கதைகளில் பெரும்பாலானவை எழுதியவர்களால் ஊகிக்கப்பட்டவை அல்லது, இப்படித்தான் எல்லோரும் நம்பவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களை விஞ்ஞான ரீதியில் நிறுவுவதற்கு எந்த சான்றும் இல்லை. அதிலொன்றுதான் ஆதாமினதும் ஏவாளினதும் கதை. எனது கடவுள்கள் பற்றிய விளக்கத்தை இதற்குமேல் தொடர விரும்பவில்லை.

கூர்புக் கொள்கை பற்றி முன்னர் எனக்குத் தெளிவு இருக்கவில்லை. குரங்கலிலிருந்து மனிதன் வந்திருந்தால், குரங்குகள் இன்னும் ஏன் இருக்கின்றன என்பதே அந்தத் தெளிவின்மைக்குக் காரணம். ஆனால், இப்போது அதுபற்றி நன்கு விளங்கிவிட்டது. 

கூர்பென்பது அதன் மூலத்திலிருந்து இன்றுவரைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இருக்கும் ரெண்டு அல்லது மூன்று உயிரினங்களிலிருந்து உருவாகும் ஒரு புதிய உயிரினம் தனது மூதாதையர்களை அழித்துத்தான் உருவாகவேண்டிய தேவையில்லை என்பது தெளிவாகிறது. இதுவே மனிதர்களாகிய நாமும் சிம்பான்ஸிகளும் மச்சான்கள் எனும் விளக்கத்திற்குக் காரணம்.

இன்னுமொருமுறையில் விளங்கப்படுத்தினால், பூனைக்குடும்பத்தில் உள்ள வீட்டுப்பூனை, சிறுத்தை, புலி, சிங்கம் ஆகிய அனைத்துமே இன்று சமாந்தரமாக உயிர்வாழ்கின்றன என்பது. 

கல்வியறிவும், உலகறிவும் இல்லாத காலத்தில் மக்களுக்கு தாம்விரும்பும் ஒரு விடயத்தைக் கடவுள் எனும் நாமத்தைப் பாவித்துப், பயப்படுத்திப் புகட்டினார்கள். ஆனால், இன்று எதையுமே கேட்டு அறிந்து, புரிந்துகொள்ளுகிறோம். மதம் சொல்லும் விடயங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும், பொய்யென்று நிரூபிக்கப்படுவதும் தடுக்கமுடியாததாகிவிடுகிறது.

அப்படியானால், மதமும் கடவுளும் எதற்கு ? தெரியவில்லை, அப்படியொன்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அங்கலாய்க்கும், அறிவில்லாத மனத்திற்கு மட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ragunathan said:

கிறீஸ்த்தவர்களின் பைபிளில் மிகவும் பழமையானது ஆதியாகமம். சொல்லப்பட்டிருக்கும் கதைகளில் பெரும்பாலானவை எழுதியவர்களால் ஊகிக்கப்பட்டவை அல்லது, இப்படித்தான் எல்லோரும் நம்பவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களை விஞ்ஞான ரீதியில் நிறுவுவதற்கு எந்த சான்றும் இல்லை. அதிலொன்றுதான் ஆதாமினதும் ஏவாளினதும் கதை. எனது கடவுள்கள் பற்றிய விளக்கத்தை இதற்குமேல் தொடர விரும்பவில்லை.

கூர்புக் கொள்கை பற்றி முன்னர் எனக்குத் தெளிவு இருக்கவில்லை. குரங்கலிலிருந்து மனிதன் வந்திருந்தால், குரங்குகள் இன்னும் ஏன் இருக்கின்றன என்பதே அந்தத் தெளிவின்மைக்குக் காரணம். ஆனால், இப்போது அதுபற்றி நன்கு விளங்கிவிட்டது. 

கூர்பென்பது அதன் மூலத்திலிருந்து இன்றுவரைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இருக்கும் ரெண்டு அல்லது மூன்று உயிரினங்களிலிருந்து உருவாகும் ஒரு புதிய உயிரினம் தனது மூதாதையர்களை அழித்துத்தான் உருவாகவேண்டிய தேவையில்லை என்பது தெளிவாகிறது. இதுவே மனிதர்களாகிய நாமும் சிம்பான்ஸிகளும் மச்சான்கள் எனும் விளக்கத்திற்குக் காரணம்.

இன்னுமொருமுறையில் விளங்கப்படுத்தினால், பூனைக்குடும்பத்தில் உள்ள வீட்டுப்பூனை, சிறுத்தை, புலி, சிங்கம் ஆகிய அனைத்துமே இன்று சமாந்தரமாக உயிர்வாழ்கின்றன என்பது. 

கல்வியறிவும், உலகறிவும் இல்லாத காலத்தில் மக்களுக்கு தாம்விரும்பும் ஒரு விடயத்தைக் கடவுள் எனும் நாமத்தைப் பாவித்துப், பயப்படுத்திப் புகட்டினார்கள். ஆனால், இன்று எதையுமே கேட்டு அறிந்து, புரிந்துகொள்ளுகிறோம். மதம் சொல்லும் விடயங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும், பொய்யென்று நிரூபிக்கப்படுவதும் தடுக்கமுடியாததாகிவிடுகிறது.

அப்படியானால், மதமும் கடவுளும் எதற்கு ? தெரியவில்லை, அப்படியொன்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அங்கலாய்க்கும், அறிவில்லாத மனத்திற்கு மட்டும்.

எதிர்காலம் பற்றிய பயத்தில் உருவாகியதே மதங்கள் எனக் கருதுகின்றேன்!

மழை, இடி, மின்னல் போன்றவற்றையும்...அதன் விளைவுகளான வெள்ளம், காட்டுத் தீ போன்றவற்றைக் கண்டு பயந்தவனுக்கு...ஒரு கடவுள் தேவைப்பட்டது!

இறப்பைக் கண்டு பயந்தவனுக்கும்.....ஒரு கடவுள் தேவைப்பட்டது!

மழையின்றி....விவசாயம் பொய்த்துப் போகும் போதும்...ஒரு கடவுள் தேவைப்பட்டார்!

சந்ததியில்லாமல் போகும் போதும்....ஒரு கடவுள் தேவைப்பட்டார்!

தனது இயலாமையை.....துன்பங்களைக் கேட்பதற்கும்....ஒரு கடவுள் தேவைப்பட்டார்!

தனது மனச்சாட்சி....தன்னை உறுத்தும் வேளைகளில்...அந்தப் பாரத்தைச் சுமக்கவும்...ஒரு கடவுள் தேவைப்பட்டார்!

இப்போது...பொருளாதாரத் தேவைகளுக்கும், பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கூடக் கடவுள் தேவைப்படுகிறார்!

சக மனிதனை....அழிப்பதற்கும்.....சுரண்டுவதற்கும்....கூட...ஒரு கடவுள் இப்போது.....தேவைப்படுகிறார்...!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இலகு நடையில் சுவாரசியமாக விளங்கத் தக்க வகையில்  எழுதியிருக்கிறீர்கள் ஜஸ்டின்,    வாழ்த்துக்கள்.  சம காலத்தில் நண்பன் ராஜ் சிவா எழுதும் ஆக்கங்களைப் படித்திருக்கிறீர்களா .

  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2019 at 10:21 PM, ரஞ்சித் said:

அப்படியானால், மதமும் கடவுளும் எதற்கு ? தெரியவில்லை, அப்படியொன்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அங்கலாய்க்கும், அறிவில்லாத மனத்திற்கு மட்டும்.

அண்மையில் ஒரு சமூகவியல் ஆய்வுக் கட்டுரை பார்த்தேன். "மதங்கள் வந்த பின்னர் மனித நாகரீகங்கள் வளர்ந்தனவா அல்லது மனித நாகரீகங்கள் வளர்ந்ததால் மதங்கள் உருவாகினவா?" என்று கடந்த 10,000 ஆண்டுகளின் தொல்லியல் தரவுகளை வைத்து ஒரு ஆய்வு செய்திருந்தனர். ஆய்வு முடிவின் படி, சிக்கலான மனித சமூக அமைப்புகள் உருவான பின்னரே மதங்கள் உருவானதாகத் தெரிகிறது. எனவே, அரசியல் யாப்பு, சட்டம் போல மதமும் ஒரு கடிவாளம் போடும் ஏற்பாடு போலத் தெரிகிறது. யாப்புகள், சட்டங்கள் போலவே, மதங்களும் பிரிவினைகளை ஊக்குவிப்பது இதனால் தான் போலும்!

 

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை தொடர்ந்து எழுதப்போகிறீர்கள் என நினைக்கிறேன்.

ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

எமது இன்றைய மரபணுவில் 2% ஹோமோ செபியன்ஸ் நியண்டடாலியன்ஸ்சினது என்று எங்கோ வாசித்த நியாபகம்.

எம்மைவிட, உடல் வலுவும் மூளைகன அளவும்(?)  கூடிய இவர்கள் அழிந்து போய் நாம் தக்கண பிழைக்க எமது social skills and communication skills காரணம் என்கிறார் தனது Sapiens a brief history of human kind எனும் புத்தகத்தில் யுவல் நோவா ஹராரி.

சுருங்க சொல்லின் எமக்கு ஒரு culture ஐ உருவாக தெரிந்து இருந்ததால் நாம் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி ஒரு பொது நோக்கில் (அரசு, சாதி, மதம்) செயல்பட கூடியதாக இருந்ததாம். ஆனால் நியன்டடாலிஸ் 10-20 பேரை மட்டுமே சேர்க்கும் இயலுமை பெற்று இருந்தனராம்.

இதுவே நாம் தக்கன பிழைக்க ஒரு பெரும் காரணமாம்.

 

தொடருங்கள்.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.