Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்!


எனது பிறந்தநாள் சம்மர் பாடசாலை விடுமுறைக் காலத்தில் வருகின்றது. நான் பிறந்தநாள் அன்று வேலைக்கு விடுப்பு எடுத்து ரிலாக்ஸாக ஓய்வில் இருப்பதை ஒரு கொள்கையாகவே வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து விடாமல் வருடாவருடம் தொடர்வதால், பல மாதங்களுக்கு முன்னரே ஒருவார விடுமுறையை விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தேன். குளிர்காலம் எப்போதும் மப்பும் மழையும் காதுமடல்களை விறைக்கச் செய்யும் கடுங்குளிர்காற்றுமாக இருப்பதால்,  சம்மரில் பிரகாசிக்கும் வெயிலில் எங்காவது செல்ல மனம் ஏங்கும். பாடசாலை விடுமுறையில் வீட்டில் நிற்கும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க எனது இணையும் இதே வாரத்தில் விடுமுறை எடுத்திருந்தார்.

விடுமுறையைக் கழிக்க எங்கே போவது என்பதில் ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை. Humans are explorers என்று சொன்னாலும் பிள்ளைகளுக்கு தெரியாத இடங்கள் எல்லாம் போய் பார்க்கவேண்டும் என்பதில் ஆர்வம் கிடையாது.  வீட்டில் இருந்து பிளேஸ்ரேசனின் games விளையாடவும், cousins உடன் சேர்ந்து வெட்டியாகப் பொழுதைப் போக்கவும்தான் நாட்டம் அவர்களுக்கு. ஆனால் கனடாவுக்கு போவதென்றால் மட்டும் அங்கிருக்கும் cousins உடன் கும்மாளம் அடிக்கலாம் என்று எப்போதும் முன்னுக்கு நிற்பார்கள்! சம்மரில் விமான ரிக்கற் ஏறும் விலைக்கு அடிக்கடி அதிகம் செலவழித்து கனடா போகவும் மனம் ஒப்பவில்லை.

ஒருவார விடுமுறை என்பதால் நல்ல வெய்யில் கொளுத்தும் மால்ராவுக்குப் போகலாமா, சுவிற்சலாந்துக்கு காரில் போய்ச்சுற்றலாமா, உள்ளூர் வேல்ஸில் போய் செம்மறியாடு, மாட்டு மந்தைகளையும், பச்சைப்புல்வெளிகளையும் பொடிநடையில் பார்க்கலாமா என்றெல்லாம் விவாதித்து,  எகிறும் செலவையும், கடும்வெய்யில் அல்லது கடும் மழை வந்து குழப்பும் என்ற தயக்கத்திலும் நாலு நாட்கள் ஒல்லாந்து தேசம் மட்டும் போய் ஆம்ஸ்டர்டாம் நகருக்குள்ளால் ஓடும் கால்வாய்களையும், ரொட்டர்டாமுக்கு அண்மையிலுள்ள காற்றாலைகளையும் பார்த்து வரலாம் என்று தீர்மானித்தோம். பிள்ளைகளுடன் போவதால் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்குப் பகுதி விலக்கப்பட்ட வலயத்திற்குள் வந்துவிட்டது. ஆனாலும் பகலிலாவது ஒரு தடவை தனியே போய் எட்டிப்பார்க்கலாம் என்று மனம் குறுகுறுத்தது!

முதல்நாள் பிரகாசமான வெயில். ஆனால் சுட்டெரிக்கும் அளவிற்கு வெப்பம் இருக்கவில்லை. கால்வாய்களினூடான சுற்றுக்கு ரிக்கற்றை வாங்கிவிட்டு நேரம் வரும்வரை கால்வாய்கள் நிறைந்துள்ள தெருக்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டு திரிந்தோம். எமது படகுக்கான நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே வரிசைக்குப்போனால் எமக்கு முன்னர் ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினர் மாத்திரமே நின்றிருந்தனர். வந்த படகொன்றில் ரிக்கற்றைக் காட்டி ஏறி நகரின் அழகான பகுதிகளூடாக பயணித்துக்கொண்டிருந்தோம்.

large.1CD09EEB-318B-4C06-A187-8CA9EC9BCD69.jpeg.41b021bb5962131a4213e5ada228231f.jpeg

இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் நாஜிகளிடம் பிடிபடாமல் ஒளிந்திருந்த ஆன் ஃப்ராங் எனும் பதினான்கு வயது யூதச் சிறுமியின் டயறி எனும் நூலை 90 களில் படித்திருந்தேன். அவர் ஒளிந்திருந்த வீட்டினை தற்போது காட்சியகமாக்கியுள்ளனர். அதைப் பார்ப்பதும் எமது itinerary இல் இருந்தது. அதனருகே படகு வந்தபோது எமது ரிக்கற்றைக் காட்டி அங்கு வெளியேறி மீண்டும் பிற்பகலில் படகுப்பயணத்தைத் தொடரலாமா என்று கேட்டேன். ரிக்கற்றை வாங்கிப் பார்த்த படகோட்டி நாங்கள் பிழையான படகில் உள்ளதாகச் சொல்லி, எங்களை ஏறிய இடத்தில் திரும்பவும் விட்டுவிடுவதாகச் சொன்னார். அவர் சரியாக ரிக்கற்றைக் கவனிக்கவில்லை என்பதால் தன்னில்தான் தவறு என்று எங்களைத் தொடர்ந்தும் படகில் இருக்க அனுமதித்தார். அவரின் நல்லெண்ணத்தில் அந்த கால்வாய்ச் சுற்றுப் பயணம் எமக்கு இலவசமாகக் கிடைத்தது!

நாம் வாங்கிய ரிக்கற் சற்று விலைகூடிய கால்வாய்ச் சுற்றுலாவுக்கானது. எனவே மீண்டும் ரிக்கற் வாங்கிய இடத்திற்குப்போய் நாம் சுற்றித் திரிந்ததால் படகைத் தவறவிட்டுவிட்டோம்; அடுத்த படகில் இடம் இருந்தால் போகமுடியுமா என்று கவுண்டரில் இருந்த அழகான டச்சுப் பெண்ணிடம் கேட்டேன். இல்லை என்று கதைக்க ஆரம்பிக்கும்போதே, நாம் செலுத்திய விலை அதிகம் என்பதால் தயவு பண்ணுங்கள் என்று அப்பாவி வேடம் போட்டு அவளின் மனத்தை மாற்றி அடுத்த படகுப் பயணத்திற்கு அனுமதி வாங்கினேன். முன்னர் போன கால்வாய்களினூடாகப் போகாமல் நகரின் மிகவும் அழகான பகுதிகளினூடாக படகோட்டியின் நேர்முக வர்ணனையுடன் படகுச் சவாரி நன்றாகவே அமைந்தது. கொடுத்த பணத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியில் பயணம் திருப்தியாகவும் இருந்தது. 

இரண்டாவது நாள் ஜூலை 31. ஆடி அமாவாசை என்று அக்கா மெசஞ்சரில் தகவல் முன்னதாகவே அனுப்பியிருந்தார். எனவே, காலை உணவிற்கு பிள்ளைகளை இணையோடு அனுப்பிவிட்டு ஆறுதலாக குளித்து முழுகிப் போகத் தீர்மானித்தேன். சாமி, விரதம் என்று நம்பிக்கைகள் இல்லையென்பதால் திவசம் எல்லாம் கொடுப்பதில்லை. ஆனாலும் பெற்றோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதை மறுப்பதில்லையாகையால் அம்மாவுக்காக சித்திரைப் பெளர்ணமியிலும், அவரது திதி நாளான வைகாசி பெளர்ணமி அன்றும், அப்பாவுக்காக அவரது திதியன்றும், ஆடி அமாவாசையிலும் விரதம் இருப்பதும் மச்சம் சாப்பிடாமல் இருப்பதும் வழமை. எங்களூர் விரதப்படி தோய்ந்த பின்னர் ஒரு கப் சூடான தேநீர் அல்லது கோப்பி குடிக்கலாம். அதற்குப் பின்னர் நீர்க்கடன் செலுத்தி, உணவு படைத்த பின்னர்தான் சாப்பிடலாம். இடையில் எதுவும் குடிக்காமலும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும்.

கோப்பி குடிக்கலாம் என்று கீழே போனால் அங்கு ஹொட்டேல் பணியாளர்கள் ஆணும் பெண்ணும் இருவராக இணையுடன் ஃபோனைப் பார்த்தவாறு மிகவும் சீரியஸாக உரையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. இணை பதற்றமாக கதைத்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முன்னால் இருந்த பிள்ளைகளின் முகத்தில் பதற்றத்திற்கான எதுவித அறிகுறிகளும் இல்லை. அவர்கள் இருவரும் வெளியிடங்களையும் தங்கள் வீடுபோன்று பாதுகாப்பான இடம் என்று பொருட்களை கவனமாகப் பார்ப்பதில்லை என்பதால் மூத்தவனைப் பார்த்து ‘உனது ஃபோன் தொலைந்துவிட்டதா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அம்மாவின் handbag தான் களவுபோய்விட்டது. அதற்குள் அவரது ஃபோனும் இருந்ததால் அது எங்குள்ளது என்று எனது ஃபோனில் உள்ள Life360 app மூலம் track பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்’ என்று சாதாரணமாகச் சொன்னான். நிலைமையின் விபரீதம் உடனடியாகவே புரிந்தது.

- தொடரும்

 

தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளேன். 😊

1 hour ago, கிருபன் said:

சாமி, விரதம் என்று நம்பிக்கைகள் இல்லையென்பதால் திவசம் எல்லாம் கொடுப்பதில்லை. ஆனாலும் பெற்றோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதை மறுப்பதில்லையாகையால் அம்மாவுக்காக சித்திரைப் பெளர்ணமியிலும், அவரது திதி நாளான வைகாசி பெளர்ணமி அன்றும், அப்பாவுக்காக அவரது திதியன்றும், ஆடி அமாவாசையிலும் விரதம் இருப்பதும் மச்சம் சாப்பிடாமல் இருப்பதும் வழமை.

நீங்களும் விரதமிருப்பவர் என்பது நம்ப முடியவில்லை. 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

நீங்களும் விரதமிருப்பவர் என்பது நம்ப முடியவில்லை. 😊

தலைவர் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் முதல் வித்தாக விழுந்த லெப். சங்கரின் நினைவாக மாவீரர் நாளன்று எதுவும் உண்ணாமல் குடிக்காமல் இருப்பவர் என்று படித்திருக்கின்றேன். இது சமய நம்பிக்கை அல்ல.

இதுபோல பெற்றவர்களின் நினைவுக்காக உணவை ஒறுப்பது அவர்களின் தியாகங்களை மதிப்பதாகும். இதை எந்த சமயக் குழப்பமும் இல்லாமல்தான் செய்கின்றேன்😎

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இடம், அருமையான பதிவு.

நீங்களாவது பரவாயில்லை, விரதத்தோட சரி நான் ஒரு அரை ஏதீயிஸ்ட், முழு அக்னோஸ்டிக், ஆனா அப்பரின் திதிக்கு வருடாவருடம் ஐயரை கூப்பிட்டு பிண்டம் பிசையுறது 😂.

போனவர்களினதும், இருப்பவர்களினதும் நம்பிக்கையை விட எமது கொள்கை ஒன்றும் பெரிய மேட்டர் இல்லை.

இந்த சமயத்தில், என் குடும்பத்தாரின் நம்பிக்கை/பயத்தை வைத்து தட்சிணைக்கு மேலாக, வேட்டி முதல் செருப்பு, அகல் விளக்கு வரை ஐயர் அபேஸ் செய்வதும் அதுக்கு, பிதுருக்கு வழி காட்ட விளக்கு தேவை எனும் ரேஞ்சில் கதை கட்டுவதையும் பார்க்க பிதாமகன் சூர்யா பாத்திரம் கண்ணில் வந்து வந்து போகும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது. தொடருங்கள் கிருபன்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அருமையான இடம், அருமையான பதிவு.

நீங்களாவது பரவாயில்லை, விரதத்தோட சரி நான் ஒரு அரை ஏதீயிஸ்ட், முழு அக்னோஸ்டிக், ஆனா அப்பரின் திதிக்கு வருடாவருடம் ஐயரை கூப்பிட்டு பிண்டம் பிசையுறது 😂.

போனவர்களினதும், இருப்பவர்களினதும் நம்பிக்கையை விட எமது கொள்கை ஒன்றும் பெரிய மேட்டர் இல்லை.

இந்த சமயத்தில், என் குடும்பத்தாரின் நம்பிக்கை/பயத்தை வைத்து தட்சிணைக்கு மேலாக, வேட்டி முதல் செருப்பு, அகல் விளக்கு வரை ஐயர் அபேஸ் செய்வதும் அதுக்கு, பிதுருக்கு வழி காட்ட விளக்கு தேவை எனும் ரேஞ்சில் கதை கட்டுவதையும் பார்க்க பிதாமகன் சூர்யா பாத்திரம் கண்ணில் வந்து வந்து போகும் 😂

நானும் குடும்பத்தினரின் விருப்பங்களை மதிப்பதுண்டு, ஆனால் தங்கள் நம்பிக்கைகளை என்மேல் திணிக்கக்கூடாது என்று தெளிவாகச் சொல்லித்தான் வைத்திருக்கின்றேன்.😎

 

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பிக்கை ,மத நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் எல்லோரும் குடும்பத்தை சாட்டுறது...வெட்கமாயில்லை 🤔

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் - வந்தவர்களிடம் சொல்லித்தான் வைத்துள்ளேன். தந்தவர்களுக்கு சொல்ல முடியாது, சொன்னாலும் முடியாது 😂.

ரதி - நானும் கிருபனும் இங்கே கடவுள் நம்பிக்கை இல்லை என எழுதி விட்டு, வீட்டுக்கு போய் காவடியே ஆடினாலும் நீங்கள் என்ன கண்டுபிடிக்கவா போரியள். நாமே வலிய வந்து சொல்கிறோம் இதில் வெக்கம் என்ன வெக்கம்?

தவிரவும் உங்களுக்கு  அக்னொஸ்டிக் என்றால் என்ன ஏதீயிஸ்ட் என்றால் என்ன என்று விளங்கவில்லையோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

அக்னோஸ்டிக் என்றால் - கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு தெரியாது என பதில் சொல்பவர்.

அதே கேள்விக்கு - நிச்சயமாக இல்லை என பதில் சொபவர் ஏதீயிஸ்ட். நாத்திகர்.

நான் 1ம் வகை. 

கடவுள்/சூப்பர் கிரியேட்டர் இருக்கிறாரா இல்லையா என்பதில் எனக்கு குழப்பம் மட்டுமே மிச்சம்(இதுவரை).

ஆனால் மதங்கள்/விதிகள்/மறைகள்/சடங்குகள்/சம்பிரதாயங்கள் எல்லாமே மனிதனால் மட்டுமே ஆக்கப்பட்டவை என்பதை நான் 100 வீதம் நம்புகிறேன்.

Edited by goshan_che

10 hours ago, கிருபன் said:

ஆனாலும் பெற்றோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதை மறுப்பதில்லையாகையால் அம்மாவுக்காக சித்திரைப் பெளர்ணமியிலும், அவரது திதி நாளான வைகாசி பெளர்ணமி அன்றும், அப்பாவுக்காக அவரது திதியன்றும், ஆடி அமாவாசையிலும் விரதம் இருப்பதும் மச்சம் சாப்பிடாமல் இருப்பதும் வழமை.

உங்க நம்பிக்கை நீங்க உங்க பெற்றோர் மேல் வைச்சிருக்கும் உயர்ந்த மதிப்பை, பாசத்தை வெளிப்படுத்துகிறது.
ஏதாவதொரு நம்பிக்கை இருந்தா தான் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக இருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

ரதி - நானும் கிருபனும் இங்கே கடவுள் நம்பிக்கை இல்லை என எழுதி விட்டு, வீட்டுக்கு போய் காவடியே ஆடினாலும் நீங்கள் என்ன கண்டுபிடிக்கவா போரியள். நாமே வலிய வந்து சொல்கிறோம் இதில் வெக்கம் என்ன வெக்கம்?

அதுதானே! எல்லாத்தையும் கறுப்பு-வெள்ளையாகவே பார்த்துப் பழகிவிட்டது. இடையில் சாம்பலும் இருக்கலாம். சாம்பலிலும் 50 வகை  வர்ணங்களும் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா போனால் என்ன போனவர்களின் கதையைக் கேட்டால் என்ன

இரண்டுமே ஒரு சுகம்.
தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா போவதும் வருவதும் மகிழ்வான விடயம்
ஆனாலும் இதில் கிருபன்உறவுகளின்   திதி, கடன் என சில விடையங்களை எழுதியிருப்பதால் எனக்கு மகிழ்வான சுற்றுலாவாகத் தெரியவில்லை .

என் மனதில்  எங்கோ ஒரு மூலையில் உறங்கியிருக்கும்
ஒரு பெரிய ராட்ஷதன் மீண்டும் மீண்டும் வந்து என் மனதை புண்ணாக மாற்றி விடுகின்றான்  
நம்பிக்கையும் நம்முடன் இருப்பவர்களும் இருந்தவர்களும் தான் நம் வாழ்க்கையின் அடித்தளம்
அவர்களையும் நம்பிக்கையையும்  இழந்த பின்னர் வாழ்வது  கொடுமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்! - பாகம் 2

விடுமுறைக்கு ஆம்ஸ்டர்டாம் போவது பற்றி வேலையிடத்தில் உரையாடியபோது உடன் பணிபுரியும் மலையாளி தான் முன்னர் ஆம்ஸ்டர்டாமில் வேலை செய்ததாகச் சொன்னான். அங்கு பிக்பொக்கற் திருடர்கள் அதிகம் என்பதால், wallet , phone போன்றவற்றை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொன்னான். நெருக்கடி மிகுந்த இலண்டனிலும் திருடர்கள் அதிகம் என்பதால் wallet , phone எப்பவும் எனது ஜீன்ஸின் முன் பொக்கற்களிலேயே வைத்திருப்பேன். எப்பவும் timer interrupt மாதிரி கை தானாகவே ஒரு சீரான இடைவெளியில் பொக்கற்றுகளைத் தட்டிப் பார்த்துக்கொள்ளும். அத்துடன் எவரையும் உடலில் உரசுமாறு பயணிப்பதில்லை என்பதால் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் இணையையும் பிள்ளைகளையும் கூடியவரை பெறுமதியானவற்றைக் காவவேண்டாம் என்றும் கூட்டத்தில் கவனமாகவும் இருக்கச்சொல்லி இருந்தேன். நாங்கள் ஆம்ஸ்டர்டாம் சென்றல் ரயில் நிலையத்திற்கு அண்மையாக சற்று விலையான Double Tree Hilton ஹொட்டேலை தங்ககமாக ஏற்பாடு செய்ததால் எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தது.

.

இந்த இடத்தில் ஒருவரை ஒருவர் கவனிக்கும் GPS location tracking apps ஐப் பற்றியும் சொல்லவேண்டும். முன்னர் வேலையிடத்து நண்பன் ஒருவன் Life360 app குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் எங்கு நிற்கின்றார்கள் என்று பார்த்துக்கொள்ளவும், phone தொலைந்தால் கண்டுபிடிக்கவும் உதவும் என்று சொல்லியிருந்தான். அவனது நண்பனின் மனைவியின் ஃபோன் கடற்கரையில் தொலைந்தபோது Life360 app இன் உதவியுடன் track பண்ணி அருகில் இருந்த ஹொட்டேல் reception இல் யாரோ நல்லவர் கொடுத்திருந்ததால் இலகுவாக மீட்ட கதையைச் சொல்லியிருந்தான். 

அன்றே  Life360 app ஐ மூத்தவனினதும், இணையினதும், என்னுடைய ஐபோன்களில் டவுன்லோட் செய்து ஆளையாள் எங்கேயிருக்கின்றார்கள் என்று இடையிடையே கவனித்துக்கொள்வதுண்டு. மேலும் இந்த app battery life ஐயும் காட்டும். மூன்று நான்கு நாட்கள் போய் வந்த இடங்களையும், மாதாமாதம் பணம் செலுத்தினால் இன்னும் பல தகவல்களையும் தரும். ஆனாலும் இது ஒரு Big Brother கண்காணிப்பு போல சிலருக்கு படலாம். மேலதிகமாக Find iPhone app இல் எல்லா iOS devices களையும் track பண்ணுவதுண்டு. இந்த இரு அப்ஸின்  tracking accuracy இல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆயினும் mobile data ஐ off செய்துவிட்டால் Life360 app மூலம் கண்காணிக்கமுடியாது என்பது ஒரு குறைபாடே. சில நேரம் மூத்தவன் mobile data ஐ off செய்து கண்காணிக்க முடியாதவாறு செய்துமுள்ளான். Mobile data ஐ off பண்ணிலால் இளையவன் பாவிக்கும் data support இல்லாத Nokia brick phone க்கு மாற்றிவிடுவேன் என்று அவனை எச்சரித்திருந்தேன்.
.

என்னை ஹோட்டல் பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு எனது ஃபோனிலிருந்தும் உடனடியாக இணையின் ஐபோன் எங்கு இருக்கின்றது என்று Life360 app ஐத் திறந்து பார்த்தால் அதன் GPS புள்ளி ஹொட்டேலில் இருந்து ஒன்றிரண்டு கிலோ மீற்றர்கள் தூரத்தில் வாகனமொன்றின் வேகத்தில் விரைவாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. வேகத்தைப் பார்த்தால் இணையின் ஹாண்ட்பாக் காரில் அல்லது மோட்டார் பைக்கில் வந்த ஒருவரால்தான் அபகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியது. ஹாண்ட்பாக் அவ்வளவு விரைவில் கனதூரம் போய்க்கொண்டிருப்பதால், எடுத்தவர் தவறுதலாக எடுத்திருக்கமாட்டார்; இடம் வலம் தெரியாத ஆம்ஸ்டர்டாம் நகரில் அது திரும்பவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று மனம் துணுக்குற்று ஏற்கனவே வரண்டிருந்த தொண்டை மேலும் உலர்ந்தது.

ஹொட்டேல் பணியாளர்கள் போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளதாயும் அவர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எங்களை ஆசுவாசப்படுத்தினார்கள். எங்களை சமாதானப்படுத்த சில ஆறுதல் வார்த்தைகளோடு ஏதாவது குடிக்கின்றீர்களா என்று தொழில்முறைப் பரிவுடன் கேட்டார்கள். இணையின் ஃபோன் GPS புள்ளி நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு போலிஸ் விரைந்து வரவில்லையே என்று மனம் அந்தரித்தது.

“எப்படி தோளில் எப்பவும் தொங்கும் ஹாண்ட்பாக் களவு போனது?” என்று இணையிடம் கேட்டேன். பிள்ளைகள் இருவரும் மேசையில் காலை உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும் அவர்களை மேசையில் இருந்த ஹாண்ட்பாக்கைச் பார்க்கச் சொல்லிவிட்டு தான் உணவை எடுக்கச் சென்றதாகவும் சொன்னார். திரும்பிவந்து பார்த்தபோது ஹாண்ட்பாக்கைக் காணவில்லை. அதை யார் எடுத்தார்கள் என்றும் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றார். 

இளையவன் தங்களுக்கு அருகில் இன்னொருவர் உணவு உண்டுகொண்டு இருந்ததாகவும், அவர் எடுத்திருக்கலாம் எனவும் சொன்னான். பார்த்தாயா என்று கேட்டதற்கு தோள்களைக் குலுக்கி இல்லை என்றான். மூத்தவன் முன்னுக்கு இருந்தாலும் அவன் எப்போதும் ஃபோனையே நோண்டிக்கொண்டிருந்திருப்பான். அக்கம்பக்கத்தில் என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்திருக்கமாட்டான் என்பதால் நான் அவனிடம் எதுவுமே கேட்கவில்லை. பிள்ளைகள் இருவர் முகத்திலும் தாங்கள் ஹாண்ட்பாக் களவுபோனதற்கு பொறுப்பில்லை என்ற எண்ணம் தெளிவாகத் தெரிந்தது. அவர்களிடம் மேலும் கேட்பதற்கு எதுவுமில்லை என்பதால் இணையிடம் “உன்னுடைய பொருட்களை நீதானே பார்க்கவேண்டும். பிள்ளைகளை நம்பி பொது இடத்தில் விடலாமா?” என்று முறைத்தேன். இணையின் ஃபோன் GPS புள்ளி அப்போது பெரிய வீதியொன்றில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.

ஹொட்டேல் பணியாளர்கள் இருவரும் போலிஸ் receptionக்கு எந்த நேரத்திலும் வருவார்கள் என்று அங்கு அழைத்துச் சென்றார்கள். காலை உணவருந்திக்கொண்டிருக்கும் மற்றைய விருந்தினர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்று எங்களை receptionக்கு அனுப்புகின்றார்கள் எனத் தோன்றியது. நாங்கள் receptionக்கு போன சில வினாடிகளிலேயே போலீசார் அங்கே வந்தனர். எல்லா அவநம்பிக்கைகளும் உருகிவழிந்து ஹாண்ட்பாக் கிடைக்க வழி பிறந்த உணர்வு ஏற்பட்டது. உடனடியாகவே போலீசாரிடம் நடந்தவற்றை சுருக்கமாக ஹோட்டல் பணியாளர்கள் டச்சில் சொல்லி, எனது ஃபோனில் இணையின் ஃபோன் GPS புள்ளி நகர்வதைக் காட்டினர். நான் உடனடியாகவே தாமதிக்காமல் பறிகொடுத்த உணர்வையும் பதற்றத்தையும் ஒருசேர முகத்தில் காட்டி “இப்போதே போனால் ஹாண்ட்பாக்கை திரும்பவும் எடுத்துவிடலாம்” என்று பரபரத்தேன். களவு எடுத்தவன் ஃபோனை switch off பண்ணினால் தொடர்ந்தும் track பண்ணமுடியாது என்ற அவசரம் என்னிடம் இருந்தது.

வந்த இரு போலிசாரில் ஒருவன் நடுவயதினனாக சீனியராகவும், இளவயதினன் மற்றவனின் சொல்லைக்கேட்டு நடக்கும் ஜூனியராகவும் பட்டது. நடுவயதினன் எடுத்த எடுப்பிலேயே “ஹாண்ட்பாக்கில் பாஸ்போர்ட் இருந்ததா?” என்று கேட்டான். எப்போதும் போலிஸுக்கு உள்ளதை உள்ளபடியே சொல்லவேண்டுமாகையால் “அவை பத்திரமாக ரூம் லொக்கரில் இருக்கின்றன; ஆனால் கிரெடிட் கார்ட்ஸ், ஐபோன், மற்றும் சில பெறுமதியானவை ஹாண்ட்பாக்கில் இருந்தன” என்று இணையும் நானும் சேர்ந்தே பதிலளித்தோம். உரையாடலை மேலும் நீட்டாமல் முகத்தில் பதட்டத்தைக் மேலும் காட்டி “இப்பவே போகமுடியுமா?” என்று திரையில் நகரும் GPS புள்ளியைக் சுட்டிக்காட்டிக் கேட்டேன். இப்படியான களவுகளை அதிகம் பார்த்தாலும், ஹாண்ட்பாக்கை track பண்ணக்கூடிய live crime ஆக இருந்ததால் போலிஸாருக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. இளைய போலிஸ் காரைச் செலுத்த நான் பின்சீற்றிலும் நடுவயதுப் போலிஸ் முன்சீற்றிலுமாக ஹாண்ட்பாக்கையும் அதை எடுத்தவரையும் பிடிக்கவெளிக்கிட்டோம்.  Life360 app இல் எப்படி track பண்ணுவது என்று விரைவாக விளங்கப்படுத்தி எனது ஃபோனை நடுவயதினனிடம் கொடுத்தேன். அவனுக்கு Life360 app பரிச்சயமில்லாமல் இருந்தது அவன் track பண்ணச் சிரமப்படுவதில் புரிந்தது. மீண்டும் சில அடிப்படை zoom control களைக் காட்டி எனதும் இணையின் ஃபோன்களின் GPS locations ஐத் திரையில் கொண்டுவந்து நம்பிக்கையூட்டினேன்.  ஹாண்ட்பாக் பிரதான வீதியைவிட்டு உள்வீதிகளில் நகர்ந்துகொண்டிருந்தது. அந்த இடத்திற்குச் செல்ல இன்னும் பத்து நிமிடங்கள் எடுக்கும் என்றும் திரையில் காட்டியது.

போலீஸ்கார் மிக வேகமாக நீலவர்ண flashing lights, sirens உடன் சிவப்புச் சிக்னல்களில்கூட நிறுத்தாமல் போகும்; விரைவில் ஹாண்ட்பாக் திருடனைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற உடல் புல்லரித்தது. ஆனால் போலிஸ்கார் நீல வெளிச்சமோ, siren கூவலோ இல்லாமல் ராக்ஸி போவதுபோல சிவப்புச் சிக்னல்களுக்கெல்லாம் மரியாதை கொடுத்து மிதமான வேகத்தில் போனது. போலிஸ்காரர்கள் ஹாண்ட்பாக்கை மீட்டுத் தருவார்களா என்ற சந்தேகம் துளிர்விட்டது. காலையில் இருந்து எதுவுமே குடிக்காதது வேறு தொண்டையையும், நாவையும்  உலர்ந்து வறட்டி குரலும் கரகரத்தது. மெல்லிய குரலில் நடுவயதினனிடம் location update ஆகியிருக்கின்றதா என்று கேட்டேன். அவனும் திரையில் பார்த்து ஹாண்ட்பாக் இப்போது மெதுவாக உள்வீதியில் நகர்கின்றது. எடுத்தவர் சிலவேளை நடையில் போகலாம் என்றும் ஐந்து நிமிடங்களில் இடத்தை அண்மிக்கலாம் என்றும் சொல்லி மேலும் zoom பண்ணிக் காட்டினான். இணையின் ஃபோன் GPS புள்ளி நகரும் தெருவை நோக்கி இளவயதினன் போலிஸ்காரைச் செலுத்தினான்.

large.43792ED4-072A-4ACD-801A-7FF4406AE979.png.20e175af95a4931ab91433ac70fa871f.png

ஹொட்டேலில் இருந்து குடியிருப்புக்கு போகும் பாதைத் தடம்

போலிஸ்கார் இப்போது உள்வீதியில் ஒரு தொடர்மாடிக் குடியிருப்புப்பகுதிக்குள் வந்துவிட்டது. வசதிகுறைந்தவர்கள் வாழும் இடம் போலத் தோன்றினாலும், graffiti எதுவும் இல்லாமலும் தெருக்களில் எவரையும் மதிக்காமல் குழப்படிகள் செய்யும் சிறுவர்கள் நிற்காமலும் அமைதியான இடமாக இருந்தது. இலண்டன் குறைடனில் பாதுகாப்பில்லாத குற்றங்கள் மலிந்த இடங்கள் எல்லாம் பழக்கம் என்பதால் ஆம்ஸ்டர்டாம் புறநகர்க்குடியிருப்பு எதுவித அச்சவுணர்வையும் தரவில்லை. இணையின் ஐபோன் GPS புள்ளி இப்போது நகர்வதை முற்றாக நிறுத்திவிட்டது. அதன் இடத்தை சரியாகக் கணிக்கமுடியாததால் போலிஸ்கார் குடியிருப்புப் பகுதி குச்சுவீதிகளினூடாக பலமுறை சுற்றி, நிறுத்தி நிறுத்தி வட்டமிட்டுட்டுக்கொண்டிருந்தனர். இரு GPS புள்ளிகளும் நெருங்குவதும் விலகுவதுமாகப் போக்குக் காட்டின. இரு GPS புள்ளிகளும் 10 மீற்றர் தூர இடைவெளியில் அண்மித்த பின்னர் பொலிஸ்கார் நிறுத்தப்பட்டது. நடுவயதினன் zoom பண்ணப்பண்ண இரு GPS புள்ளிகளும் ஒரேயிடத்தில் நிலைகொள்ளாமல் மாறிக்கொண்டிருந்தன. இணையின் ஐபோன் GPS location இப்போது purple கலரில் இரண்டு மூன்று கட்டடங்களை உள்ளடக்கி பெரியவட்டமாக மாறியது. எனது ஃபோனும் அந்த வட்டத்திற்கு அண்மையாக வந்தாலும் ஓரிடத்தில் நிலைக்கவில்லை. துல்லியமாக இடத்தைக் காட்டமுடியாமல் GPS திணறினாலும் போலிஸார் இறங்கித் தேடுவார்கள் என்று நினைத்து ‘என்ன செய்யலாம்’  என்று அவர்களிடம் கேட்டேன். போலிஸை வழிநடத்துவதோ, அறிவுரை சொல்வதோ அவர்களின் தொழில்சார் அறிவைச் சரியாக மதிக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி ஹாண்ட்பாக்கை மீட்பதை பிசகுபடுத்திவிடும் என்று சில வார்த்தைகளிலேயே அளந்து உரையாடிக்கொண்டிருந்தேன். நானே இறங்கித் தேடவேண்டும் என்ற உந்துதலை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன். 

large.4524D86C-935D-4B90-8C4A-43D964C84C45.png.7cc01d2c664a3384574233810fe30a43.png

போலிஸ்கார் குடியிருப்பு குச்சுவீதிகளில் சுற்றிய தடங்கள்

நடுவயதினன் டச்சில் மற்றவனுடன் ஏதோ சில வினாடிகள் ஃபோனைக் காட்டிக் கதைத்தான். இளவயதினன் கீழ்ப்படிவுள்ள மாணவன்போல் எல்லாவற்றையும் ஆமோதித்தது அவர்கள் ஏதோ திட்டத்தை விவாதிப்பதுபோலப் பட்டது. என்னைக் காருக்குள் இருத்திவிட்டு இறங்கித் தேடப்போகின்றார்களாக்கும் என்று மனது சமாதானப்பட்டது. நடுவயதினன் பின்னால் திரும்பி என்னைப் பார்த்து “ஹாண்ட்பாக் நகரவில்லை. அது நகர்ந்தால்தான் இறங்கித்தேடமுடியும்” என்றான். மேலும் “GPS tracking துல்லியம் காணாது. நாங்கள் வீதியினருகே பார்க்கிங்கில் நின்றபோதும் GPS 20 மீற்றருக்கு அப்பால் கட்டடத்தில் நிற்பதுபோலக் காட்டுகின்றது. ஹாண்ட்பாக் வீடுகளுக்குள் இருந்தாலும் எந்தவீடு என்று தெரியாது. எல்லோருடைய வீடுகளையும் சந்தேகப்பட்டு தேடவும்முடியாது. அதற்கு அனுமதியும் இல்லை. எனவே ஹாண்ட்பாக் நகரும் மட்டும் பொறுப்போம்” என்றான். அவன் சொன்னது நியாயமாகப் பட்டாலும் இவ்வளவு அண்மையாக வந்துவிட்டு ஹாண்ட்பாக் இல்லாமல் திரும்பக்கூடாது என அந்தரப்பட்டு “இரண்டு GPS புள்ளிகளும் ஒரேயிடத்தில் வரும்வரை இறங்கி நடந்து பார்க்கலாமா?” என்று கேட்டேன். அதையும் அவர்கள் GPS துல்லியம் காணாது என்று தட்டிக் கழித்து GPS புள்ளி நகர்ந்தால்தான் அல்லது யாரும் சந்தேகமாக நடமாடினால்தான் தாங்கள் இறங்கமுடியும் என்றனர். இணையின் GPS புள்ளி நகராமல் last update: Now என்று தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தது. 5 அல்லது 10 மீற்றருக்குள் நின்றிருந்தும் இறங்கித் தேடமுடியாமல் போலிஸ்காருக்குள் இருந்தது மனதைக் குடைந்தது. காருக்குள்ளேயே இன்னும் 10 நிமிடங்கள் இருந்து நகராமல் purple வட்டத்திற்குள் நிலைத்து நிற்கும் இணையின் ஃபோன் GPS புள்ளியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். 

சீனியர் போலிஸ்காரர் GPS புள்ளி அசையாததால் இனியும் அங்கு சும்மா நிற்பதில் பிரயோசனமில்லை என்றான். என்னைத் திரும்பவும் ஹொட்டேலில் இறக்கிவிடப்போவதாகச் சொன்னார்கள். எனது நம்பிக்கைகள் எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்தன. ஹாண்ட்பாக் நகர்ந்தால் அவசர நம்பர் 112 க்கு அடித்தால் உடனடியாகப் போலிஸ் வரும். மீண்டும் தேடலாம் என்றார்கள். இவர்கள் இறங்கித் தேடாமலேயே தங்கள் அலுவலை முடிக்கின்றார்கள் என்று உள்ளே கறுவினேன். ஹாண்ட்பாக் மீளக்கிடைக்கும் என்ற நம்பிக்கை வடிந்து உடலும் உள்ளமும்  சோர்ந்தது. எனினும் அந்த இடத்தின் GPS location ஐ உடனடியாக Google map இல் பதிவு செய்தேன். ஹாண்ட்பாக்கை எடுக்கமுடியாத இயலாமையோடு கனத்திருந்த மனத்துடன் இருந்த என்னைச் சுமந்துகொண்டு போலிஸ்கார் மீண்டும் ஹொட்டேலை நோக்கி நகரத் தொடங்கியது.

- தொடரும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

போன இடத்தில் பேதியா?
ம் ஒரு படம் பார்க்கிற மாதிரியே இருக்கு.
தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

போன இடத்தில் பேதியா?
ம் ஒரு படம் பார்க்கிற மாதிரியே இருக்கு.
தொடருங்கள்.

எப்பவும் கண்ணுக்குள் எண்ணெய்விட்டுக் கவனமாக இல்லாவிட்டால் பேதிதான். 🙁

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாஸ் பயணக் கட்டுரை எண்டுட்டு க்ரைம் நாவல் எழுதுறீங்க! செமயாக போகிறது ( பையன்களுடனா சம்பாசணைகள் மற்றும் வர்ணணைகள் தூள்).

முன்பு தினமுரசில் அற்புதன் எழுதும் தொடருக்கு ஏங்குவதை போல, அடுத்த பாகத்தை வேண்டி ஏங்குது மனது.

ஆனால் ஜிபிஎஸ் குறித்து போலீசார் சொன்னது சரியாகவே படுகிறது. Multi storied கட்டிடங்களில் கண்டு பிடிப்பது முடியாத காரியம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

சில நேரம் மூத்தவன் mobile data ஐ off செய்து கண்காணிக்க முடியாதவாறு செய்துமுள்ளான்.

அப்பர் ஆத்தையின் புத்திதானே பிள்ளைகளுக்கு வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அப்பர் ஆத்தையின் புத்திதானே பிள்ளைகளுக்கு வரும்.

😂🤣

சிலசயயம் வேலை முடிந்து நண்பர் எவருடனும் pupக்குப் போகவேண்டி இருந்தால், வெளிக்கிடும்போது data ஐ off பண்ணிவிடுவதுண்டு; அது வேலையில் overtime மாதிரியும் காட்டியிருக்கின்றது.😬

7 hours ago, goshan_che said:

ஆனால் ஜிபிஎஸ் குறித்து போலீசார் சொன்னது சரியாகவே படுகிறது. Multi storied கட்டிடங்களில் கண்டு பிடிப்பது முடியாத காரியம். 

முன்னரைவிட இப்போது பரவாயில்லை. GPS துணையுடன் network base station களில் இருந்தும் தூரத்தைக் கணித்து location ஐ சரியாக கணிக்கமுடியும். ஆனால் direct line of sight இல்லாவிட்டால் கொஞ்சம் கடினம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே திரிலாகத்தான் இருக்கின்றது.இங்கே பிள்ளைகளின் அவதானங்களும் மிகக் குறைவுதான்,தொடருங்கள்......!   😥

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சிலசயயம் வேலை முடிந்து நண்பர் எவருடனும் pupக்குப் போகவேண்டி இருந்தால், வெளிக்கிடும்போது data ஐ off பண்ணிவிடுவதுண்டு; அது வேலையில் overtime மாதிரியும் காட்டியிருக்கின்றது.😬

அது எப்படி கிருபன் ?
பப்புக்கு போயிட்டு வீட்டுக்குத் தானே போகணும்?
வேலையால் வாறவரையும் பப்பால் வாறவரையும் கண்டுபிடிக்க இயலாதா என்ன?
ம் பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தது மாதிரி ஒருத்தருக்கும் தெரியாது என்று நினைப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அது எப்படி கிருபன் ?
பப்புக்கு போயிட்டு வீட்டுக்குத் தானே போகணும்?
வேலையால் வாறவரையும் பப்பால் வாறவரையும் கண்டுபிடிக்க இயலாதா என்ன?
ம் பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தது மாதிரி ஒருத்தருக்கும் தெரியாது என்று நினைப்பு.

 வீட்டுக்குப் போன பின்னர் உண்மை தெரிந்தால் சமாளிக்கலாம் 😁

ஆனால் பப்பிலிருக்கும்போதே யாரோட இருக்கிறாய் என்று கோல் வருவதை முற்கூட்டியே தவிர்ப்பது நல்லதுதானே😎😬

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் எங்கை கிருபன் அண்ணா

On 8/19/2019 at 1:28 AM, கிருபன் said:

😂🤣

சிலசயயம் வேலை முடிந்து நண்பர் எவருடனும் pupக்குப் போகவேண்டி இருந்தால், வெளிக்கிடும்போது data ஐ off பண்ணிவிடுவதுண்டு; அது வேலையில் overtime மாதிரியும் காட்டியிருக்கின்றது.😬

 

கிருபன் அண்ணா உங்கள் இணைக்கு தெரிந்தவர்கள் யாழில் இருக்கின்றார்கள் அவர்கள் போட்டுகொடுக்கலாம் என்பதை எப்படி மறந்தீர்கள்? :):)

எத்தனை தடவை பார்த்தாலும் நெதர்லாண்ட்  அழகு கொள்ளை அழகு!! 

பயண அனுபவம் நல்ல சுவார்சியமாக இருக்கின்றது தொடருங்கள் கிருபன் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

மிச்சம் எங்கை கிருபன் அண்ணா

நாளைக்கு பதியலாம் என்று நினைக்கின்றேன்😀

31 minutes ago, தமிழினி said:

கிருபன் அண்ணா உங்கள் இணைக்கு தெரிந்தவர்கள் யாழில் இருக்கின்றார்கள் அவர்கள் போட்டுகொடுக்கலாம் என்பதை எப்படி மறந்தீர்கள்? :):)

எத்தனை தடவை பார்த்தாலும் நெதர்லாண்ட்  அழகு கொள்ளை அழகு!! 

பயண அனுபவம் நல்ல சுவார்சியமாக இருக்கின்றது தொடருங்கள் கிருபன் அண்ணா.

யாழ் களத்தில் இருப்பவர்கள் போட்டுக்கொடுத்து பிடிபடும் அளவிற்கு இல்லை! ஏற்கனவே பிடிபட்டாயிற்று😂🤣

இன்னொரு பகுதிதான். நாளைக்கு நேரம் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்😆

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.