Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

2023-04-12 09:23:48
image

இலங்கையின்  மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டேஸ், பி.பி.சி. , வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார்.

கடந்த யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கான ஊடகப்பணியாற்றியவர் மாணிக்கவாசகம் அவர்கள்.

அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும்  தனேந்திராவின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 13.04.2023 அன்று 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து 9 மணிக்கு தட்சனாங்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீரகேசரி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
 

https://www.virakesari.lk/article/152704

  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல்: மாணிக்கவாசகம் -"இலங்கை தமிழ் ஊடகத்துறையில் ஒரு ஜாம்பவான்"

பொன்னையா மாணிக்கவாசகம்
 
படக்குறிப்பு,

பொன்னையா மாணிக்கவாசகம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அன்பரசன் எத்திராஜன்
  • பதவி,பிபிசி தெற்காசிய ஆசிரியர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு. அவருடன் பல காலம் பணி புரிந்த எங்களுக்கு நம்மிடையே அவர் இன்று இல்லை என்பது மிக துயரமான நிகழ்வு. அவருக்கு வயது 77.

இலங்கையின் இனப் போர் நடைபெற்ற போது, வவுனியா மற்றும் பிற தமிழ் பகுதிகளில் அச்சுறுத்தல், மிரட்டல், சிறைவாசம், இவற்றை கடந்து, உண்மையை பிபிசி வாயிலாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் காட்டிய முனைப்பு போற்றத்தக்கது.

தமிழ் பொதுமக்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள், ஆட்கடத்தல், திட்டமிட்ட கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிகழ்வுகளை நடுநிலையோடு அவர் செய்திகளாக தந்த விதம், ஊடக உலகில் பணிபுரிய விரும்பும் இளம் வயதினருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

பிபிசியின் தமிழ் சேவைக்கு மட்டுமல்லாது, ஆங்கில வானொலி, இணைய தளம் மற்றும் தொலைக்காட்சிக்கு செய்திகள் மற்றும் ஆய்வினை வழங்கியுள்ளார் மாணிக்கவாசகம். அவர் உயிருக்கு பலமுறை அச்சுறுத்தல் விடப்பட்ட போதிலும், அவற்றை பொருட்படுத்தாது அவர் செய்திகளை தந்தது அவரின் அசாத்திய துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு.

 

2001ஆம் ஆண்டு ஜனவரியில் நான் பிபிசியில் பணிபுரிய தொடங்கிய போது, ஒவ்வொரு நாளும் எங்களது முதல் வேலை, மாணிக்கவாசகம் அவர்களோடு தொடர்பு கொண்டு, அன்றைய இலங்கை நிகழ்வுகளை அறிந்து கொள்வதுதான். அவருடைய தொலை பேசி எண் எங்களுக்கு மனப்பாடம்.

புதிதாக பணியில் சேர்ந்த என்னை போன்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு அவர் இலங்கை நிகழ்வுகளையும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொறுமையாக விளக்குவார்.

குறிப்பிட்ட செய்தியை எங்களுக்கு தெரிவிப்பதற்கு முன், அவற்றை சேகரிக்கவும் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும் பல மணி நேரம் செலவிட்டிருப்பார்.

அந்த கால கட்டத்தில் கிளிநொச்சி உட்பட வன்னி பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் விடுதலை புலிகள் வசம் இருந்தன. அந்த இடங்களுக்கு சென்று வர சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

தமிழ் பத்திரிகையாளர்கள் பெருபாலானோரை 'விடுதலை புலிகள் ஆதரவாளர்கள்' என ராணுவம் சந்தேகித்த காலம் அது. ஒரு முறை விடுதலை புலிகள் பகுதிக்கு சென்று வந்த பின் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும், கண்காணிப்பும் இருக்கும். இதையெல்லாம் தாண்டி மாணிக்கவாசம் அவர்கள் செய்தி தந்த விதம் அவரின் நெஞ்சுறுதிக்கு எடுத்துக்காட்டு.

பிரசித்தி பெற்ற மடு மாதா ஆலய தாக்குதல், கடற் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகள், மருத்துவ வசதி இன்றி மக்கள் பட்ட இன்னல்கள், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் சந்திக்கும் இன்னல்கள் போன்ற நிகழ்வுகளை தனி ஒரு செய்தியாளராக மாணிக்கவாசகம் பல வருடங்கள் தொடர்ந்து வெளிக்கொணர்ந்தார்.

இலங்கையின் வடக்கே நடைபெற்ற சில வன்முறை சம்பவங்களை அவர் செய்தியாக கொண்டு வந்தது சில அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு பிடிக்கவில்லை.

பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் சில தினங்கள் சிறையிலும் இருந்தார். மே 2009ல் போர் முடிந்த பின் இடம் பெயர்ந்தோரின் இன்னல்கள், ராணுவ ஆக்ரமிப்பு, சண்டையில் காணாமல் போனோர், சரணடைந்த கைதிகளின் நிலை என பலவேறு நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து செய்திகளை தந்தார்.

சிறையில் இருந்த இரு தமிழ்க் கைதிகளுடன் அவர் தொலை பேசியில் பேசியதற்காக 2013ல் பயங்கரவாத புலனாய்வு துறை அவரை நேரில் வருமாறு பணித்தது. இதற்கு உலக ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

2005ல் நானும் அவரும் கிளிநொச்சி சென்ற போது என்னுடைய பாதுகாப்பில் மிக கவனமாய் இருந்தார். பி பி சி பணிகளை அவர் முடித்த போதும், நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். சில வருடங்களுக்கு முன் கிளிநொச்சி, மன்னார் என பல இடங்களுக்கு சென்று போர் நடைபெற்ற போது அப்பகுதிகள் எவ்வாறு இருந்தன என்று நினைவுகூர்ந்தோம்.

கடைசியாக அவரை வவுனியாவில் அவரது இல்லத்தில் சந்தித்தது டிசம்பர் 2021. சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வந்தார். கோவிட் பெருந்தொற்று காலம் அது. அதுவே கடைசி சந்திப்பாக இருக்கும் என நினைக்கவில்லை.

மாணிக்கவாசகம் அவர்களிடம் இருந்து நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு எல்லாம் ஓர் அகல் விளக்காக, கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார். அவரது பத்திரிகை துறை தாண்டி அவரது மனித நேயம் போற்றத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார். யாராவது இலங்கையின் வடக்கு செல்ல வேண்டுமானால் அவரைத்தான் முதலில் தொடர்பு கொள்வோம். "நீங்கள் அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பார்.

சில வருடங்களுக்கு முன், உடல்நல குறை ஏற்படுவதற்கு முன் வரை, சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர். மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு எனலாம்.

https://www.bbc.com/tamil/articles/cn06n2drv58o

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்!

வடக்கு கிழக்கு போர் நிலவரங்களை காய்தல் உவத்தலில்லாமல் பி.பி.சி வழியாக உலகம் அறியச் செய்தவர். இவர் போன்ற ஊடகவியலாளர்கள் இப்போது தமிழூடகப் பரப்பில் அருகி வருகிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

போர்காலத்தில் வவுனியாவில் இருந்து மிகைப்படுத்தலின்றி.. செய்திகளை உடனுக்குடன் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்த ஒரு செய்தியாளர். 

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்காலத்தில் ஐயாவின் குரல் பலருக்கும் பரீட்சயமானது. ஆழ்ந்த இரங்கல்கள்; ஓம் சாந்தி! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்தோம் - கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்!

kugenApril 12, 2023
 
IMG-20230412-WA0000.jpg(வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்)


ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்துவிட்டோம். அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டல்கள் எதிர்கால ஊடகத்துறையினருக்கு உத்வேகத்தைக் கொடுக்கட்டும் என கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்  மறைந்த மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் அவர்களின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நம்மை விட்டு பிரிந்து கொடுத்திருக்கும் பாதிப்பு மிகத் துயரமானது.

ஊடகத்துறை மீது  பேரார்வமும் மனத்துணிவும் கொண்டிருந்த பெருமனிதனை இழந்துவிட்டோம் என்று தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஈழநாடு, தி ஐலண்ட், ரொய்ட்டர், பிபிசி போன்ற ஊடகங்களின் செய்தியாளராக் கடமையாற்றி  இறுதி மூச்சுவரை வீரகேசரியின் ஊடகவியலாளராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

நீண்ட காலமாக மரணத்திற்கெதிராகப் போராடிக்கொண்டே தன்னுடைய வாழ்நாள் சாதனையாக கால அதிர்வுகள், வாழத்துடிக்கும் வன்னி, மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய மூன்று மூன்று  நூல்களையும் எழுதி நான்காவது நூலான, 

“நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்” என்ற நூலை நிறைவு நிலைக்குக் கொண்டுவந்திருந்தார். நான்காவது நூலின் நிறைவுக்கு முன்னர் அவர் மரணத்தை அணைத்துக் கொண்டார்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும் சிவராம்  ஞாபகார்த்த  மன்றமும் இணைந்து வெளியிடும் ‘தராக்கி ஈழத்தமிழ் ஊடக முன்னோடி’ நூலில் அவருடைய ‘ சிவராம்- தமிழ் ஊடகத்துறையினதும் அரசியலினதும் வரலாற்று நாயகன்’  என்ற சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார்.

76 வயதுடைய பொன்னையா மாணிக்கவாகசம், இலங்கையின் மூத்த ஊடகர் மட்டுமல்ல, தலை சிறந்த சமூக சிந்தனைவாதியும், இறுதி மூச்சு வரை, தற்துணிவுள்ள  பேனா முனை போராளியாகவும் திகழ்ந்தார்.

யுத்த காலங்களில் பிபிசி தமிழோசைக்காக அவர் வழங்கி வந்த செய்திகள், தமிழ் மக்கள் மத்தியில் இவருடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருந்தது. செய்திகளை நடுநிலை தன்மையோடு, உள்ளதை உள்ளதாகச் சொல்லி, யுத்த நிலைமையையும் தமிழ் மக்களின் அவலங்களையும் உலகுக்கு வெளிப்படுத்திய ஊடகவியலாளர்.

பல உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிச்சலோடும் சோரம் போகாமலும் செயல்பட்ட துணிச்சல் மிகு பேனா முனை போராளி அத்துடன் உண்மைகளை மீள மீள பல தடவைகள் உறுதிப்படுத்தி வெளியிடுகின்ற அவருடைய பாங்கு ஊடகத்துறையில் மிக முக்கியமானது.

செய்திகள் பல்வேறு பிரச்சினைகளைக் கொடுக்கக்கூடியவை என்ற வகையில் அவர் எழுதிய செய்திக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் விடுதலைக்குப் பின்பும் கூட இன்னமும் உத்வேகத்துடன் துணிச்சலோடு களத்தில் நின்று மக்கள் பணி செய்தார்.

ஓர் ஊடகவியலாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, மாணிக்கவாசகத்தை தவிர, வேறு யாரையும் நாம் முன்னுதாரணமாக கொள்ள முடியவில்லை.

அண்மையில் தான் வாழ்நாள் சாதனையாளராக இவர் கௌரவிக்கப்பட்டார். அந்த கௌரவம் சமூக அந்தஸ்தாகஇருந்தாலும், அவர் அதனை பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை.

மேடைகளில் பொன்னாடைகளை போர்த்தி, பெருமை பேசிக்கொள்ளும் நம்மவர் மத்தியில், ” சமூகப் பணிக்கு என்ன சாதனையாளர் விருது ” என்ற எண்ணங்கொண்டவராகவே அவர்இருந்தார்.

ஊடகம் என்பது மக்களுக்காக செய்யும் ஜனநாயகப் பணி; அந்த உன்னத பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்துவிட்டோம்.அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டல்கள் எதிர்கால ஊடகத்துறையினருக்கு உத்வேகத்தைக் கொடுக்கட்டும்.

அவரது பிரிவால் துயரத்திலிருக்கும் மனைவிக்கும்,மகளுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 

http://www.battinews.com/2023/04/blog-post_781.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஊடகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த பெருமகனை இழந்தோம்

போர்க்காலத்தில் இவரது செய்திகளைத் தேடி படித்துப்பார்த்துள்ளேன். சிறந்ததொரு ஊடகவியலாளர். அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.........!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.