Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயந்தாங்கொள்ளி

----------------------------

large.FourKittens.jpg

புலி ஒன்று ஒரு தடவையில் மூன்று குட்டிகளுக்கு மேல் ஈன்றாலும், அநேகமாக அவைகளில் ஒன்றே ஒன்று மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்கின்றார்கள். எந்தக் குட்டி தப்பிப் பிழைக்கப் போகின்றது என்பது கூட சில நாட்களிலேயே தெரிந்துவிடும். மூன்று குட்டிகளில் ஒன்று மிகத் துணிவானதாக இருக்கும், இன்னொன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும், மூன்றாவது குட்டி ஒன்று எச்சரிக்கையுடன் இருக்கும். துணிவானதும், எச்சரிக்கையானதுமான இரு குட்டிகளும் சேர்ந்தே இருக்கும். பயந்தாங்கொள்ளி ஒதுங்கிப் பதுங்கி தனியாக இருக்கும்.

பூனையும் புலியும் ஒரு விலங்காகவே இருந்திருக்கவேண்டும். பரிணாம வழியில் எங்கோ இரண்டு விலங்குகளாக பிரிந்து ஒன்று புலியாகவும், இன்னொன்று பூனையாகவும் மாறிவிட்டன. ஆனாலும் பதுங்கிப் பாய்வதும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரத்துக்கு நாக்கால் நீவி நீவி சுத்தம் செய்வதும் இரண்டு விலங்கிடமும் அப்படியே இன்னமும் இருக்கின்றது. பூனைக்கும் பொல்லாத கோபம் வருகின்றது. மியாவ் என்னும் வழமையான ஒரு மெல்லிய ஒலியை விட, அது இன்னொரு கடுமையான ஒலியை கோபத்தில் எழுப்புகின்றது. காட்டில் புலி சந்தோசமான தருணங்களில் மியாவ் போல மெலிதான ஒலி ஏதாவது எழுப்புகின்றதா என்று தெரியவில்லை.

வீட்டுக்கு வந்து போகும் கறுப்பு வெள்ளை பூனைக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக பல வகைச் சாப்பாடுகள் வாங்கி வைத்திருக்கின்றோம். அது ஒரு தெருப்பூனை. அது எங்கே படுக்கின்றது, என்ன செய்கின்றது என்று கூட எங்களுக்கு தெரியாது. சில நாட்களில் அதிகாலையிலே வாசலில் நிற்கும். அதன் உணவைக் கொடுத்தால் சாப்பிடும். பின்னர் போய்விடும். மதியம் வரும், பின்னேரத்திலும் சில நாட்களில் வரும். இன்னும் சில நாட்களில்  நன்றாக இருட்டும் வரை வீட்டின் பின்பக்கம் படுத்திருக்கும். இரண்டு வருடங்களின் பின், அதன் வாய் திறந்து மியாவ் என்று சொல்ல ஆரம்பித்தது. நன்றி என்று சொல்வதைப் போல அதன் மியாவ் இருப்பதில்லை. 'நீங்கள் நல்லா இருக்கிறீர்களா..............' என்று கேட்பது போலவே அதன் மியாவ் இருக்கின்றது. சில நாட்களில் ஒன்றும் சொல்லாது. அதன் பிரச்சனை அதற்கு என்று நினைத்துக்கொள்வேன். சேர்ந்தால் போல ஒரு மாதம் வரை வீட்டுப் பக்கம் வராமலும் இருந்துவிடும். அதன் கதை முடிந்து விட்டது போல, இனி இந்த மூட்டை மூட்டையாக கிடக்கும் பூனை உணவுகளை என்ன செய்வது என்று நினைக்க, ஒரு நாள் திடீரென்று வாசலில் வந்து நிற்கும்.

ஒரு நாள் நான்கு குட்டிகளை கூட்டிக் கொண்டு வந்து, அவைகளுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும் என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன். ஆனால் இது ஆண் பூனை. ஆண் விலங்குகள் பொதுவாக அவ்வளவு பொறுப்பாக நடப்பது இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கின்றன, ஆனால் பூனைகளில் இல்லை என்று நினைக்கின்றேன். ஆகவே நான்கு குட்டிகள் என்றும் வீட்டுப் பக்கம் வரப் போவதில்லை என்றே இருந்தேன்.

பல வருடங்களின் முன் இங்கிருக்கும் ஒரு வார இறுதி திறந்த வெளிச் சந்தையில் ஒரு மாதுளம் கன்று வாங்கி வீட்டில் நட்டோம். அதை ஏசியன் மாதுளை என்று அவர்கள் சொன்னதாலேயே வாங்கினோம். அமெரிக்கன் மாதுளை கடும் சிவப்பு முத்துகள், அத்துடன் பெரும்பாலானவை பல்லைக் கூச வைக்கும் கூர்மையான புளிப்புச் சுவையும் கலந்தவை. பல்லுப் போனால் சொல்லும் போய்விடும் என்பது ஊரில், இங்கே பல்லுடன் சேர்த்து சொத்தும் போய்விடும். சொத்து ஏற்கனவே இல்லாவிட்டால் பல் வைத்தியம் பார்த்த கடன் ஒரு தலைமுறைக்கு நிற்கும். அதனால் எதுக்கு இந்த அமெரிக்கன் மாதுளை என்று அதை நாங்கள் வீட்டில் வைக்கவில்லை.

ஏசியன் மாதுளை ஏசியன் மாதுளை தான். ஊரில் இருக்கும் அதே மாதுளம் பழத்தின் இயல்புகள் தான். ஒரே ஒரு வித்தியாசம் மரத்தில் இருந்தது. மாதுளை மரம் ஒரு சின்ன ஆலமரம் போல பெரிதாக வளர்ந்து வந்தது. இங்கு எல்லாமே பெரிதாகவே இருக்கும், அதற்காக மாதுளை மரமுமா ஆல் போல வளர வேண்டும். அது வளர்ந்து பக்கத்து வீடு, பின் வீடு என்று இரு வீடுகளுக்குள்ளும் புகுந்து நின்றது. அந்த மனிதர்கள் அருமையானவர்கள். இதுவரை எதுவும் சொன்னதில்லை.

இந்த மாதுளை மரத்தின் கீழே ஒரு சின்ன கொட்டகை இருக்கின்றது. அதை முன்னர் பார்க்கும் போது பெரிய கொட்டகையாகத்தான் இருந்தது. ஆனால் மாதுளை பிரமாண்டமாக வளர்ந்த பின், கொட்டகை சிறியதாக தெரிய ஆரம்பித்தது. ஒரு நாள் காலை அந்தப் பக்கமாக போன பொழுது கொட்டகையின் கூரையில் சில அசைவுகள் தெரிந்தன. என்னுடைய உயரத்துக்கு கொட்டகைக் கூரையின் மேற்பகுதி முழுவதுமாகத் தெரியாது. ஏணி ஒன்றில் ஏறிப் பார்த்தால், அங்கே நான்கு பூனைக் குட்டிகள் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றன.

நான்கில் ஒரு குட்டி கறுப்பு வெள்ளை. ஆனால் எங்களின் கறுப்பு வெள்ளை இவ்வளவு பொறுப்பானவர் இல்லையே, இந்த நான்கும் எங்கேயிருந்து இங்கே வந்திருக்கும் என்று யோசனையாக இருந்தது. மண் நிறத்திலான வரிவரிப் பூனை ஒன்றும் வந்து போவதுண்டு. எங்களைக் கண்டவுடனேயே அது தலை தெறிக்க ஓடிவிடும். அது ஒரு பெண் பூனையாக இருக்கலாம். ஆனாலும் அதன் குட்டிகளை கொண்டு வந்து எங்கள் வீட்டில் விடும் அளவிற்கு அது எங்களை நம்புமா என்று தெரியவில்லை. நான்கு குட்டிகளில் இரண்டு வரிவரிப் பூனைக் குட்டிகளே.

பூனைக் குட்டிகள் ஏற்கனவே ஓரளவு வளர்ந்திருந்தன. ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. இரவிரவாக நித்திரை குழம்பிக் கொண்டேயிருந்தது. கூரையில் இருந்து அவை கீழே விழுந்து விடுமா, வேறு ஏதாவது விலங்கு ஒன்று வந்து இந்தக் குட்டிகளை பிடித்து விடுமா என்று பலப்பல யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன. எங்கோயோ பிறந்து இவ்வளவு நாட்களும் மிக ஆரோக்கியமாக ஒரு தாய்ப்பூனையால் மட்டும் வளர்க்கப்பட்ட அந்தக் குட்டிகள் இன்று என் கண்ணில்பட்டதால் என் கற்பனையில் பல ஆபத்துகளின் ஊடாக போய் வந்து கொண்டிருந்தன.

காலை பொழுது விடிந்தும் விடியாததுமாக பின்பக்கம் ஓடினேன். ஏணியில் ஏறி எட்டிப் பார்த்தேன். மண் நிற வரிவரி அம்மா அங்கே குட்டிகளுடன் படுத்திருந்தார். என்னை அது நன்றாகப் பார்த்தது. உடனேயே ஏணியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் அது அங்கே இல்லாத நேரங்களில் நான்கு குட்டிகளையும் நன்றாகப் பார்த்துக்கொண்டேன். எது துணிந்த குட்டி, எது பயந்தாக்கொள்ளி என்று அடையாளம் கண்டுகொண்டேன். பயந்தாங்கொள்ளிக் குட்டிக்கு வெளி உதவிகள் கிடைக்காவிட்டால் அது தப்பிப் பிழைப்பது கஷ்டம் என்று வாசித்தது மனைதில் வந்து கொண்டேயிருந்தது. 

அடுத்த நாள் காலை அவைகளை பார்த்து விட்டு, மதிய நேரம் மீண்டும் போனேன். மூன்று குட்டிகள் மட்டுமே கூரையில் நின்றன. ஒரு வரிவரிக் குட்டியைக் காணவில்லை. அது தான் பயந்தாங்கொள்ளிக் குட்டி. அய்யய்யோ............ நான் நினைத்தது நடந்து விட்டதோ என்று நன்றாகத் தேடினேன். கொட்டகையின் ஒரு பக்கத்துடன் ஒட்டி இருந்த மாதுளைக் கிளை ஒன்றுக்கு இடையில் அந்தக் குட்டி மாட்டுப்பட்டிருந்தது. கீழேயும் விழாமல், மேலேறி கூரைக்கும் போக முடியாமல் அது கிளைக்கும் கொட்டகை சுவருக்கும் இடையில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சின்ன அசைவு இருந்தது. அது உயிருடன் தான் இருக்கின்றது என்று தெரிந்தவுடன், வீட்டுக்குள் மீண்டும் ஓடினேன்.

'னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............'

'அதைப் பிடித்து விடுகிறது தானே................'

'நீங்கள் ஒருக்கால் வாங்கோ............'

மனைவி அவசரம் அவசரமாக வந்தார். அங்கே இருந்த ஒரு சின்ன துவாயை எடுத்துக் கொண்டு நான் அவர் பின்னால் அவசரமாக ஓடினேன். நான் இந்த மரக் கொப்பை இழுக்கின்றேன், நீங்கள் குட்டியை கீழு பிடித்து கூரைக்கு தள்ளி விடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். குட்டி துள்ளிப் பாய்ந்து கூரைக்கு ஓடியது. போன உயிர் வந்தது.

பயந்தாங்கொள்ளிகளுக்கு எப்போதும் ஒரு துணையும் உதவியும் தேவைப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. நல்ல இயற்கை ரசிகன். யாரோ வீட்டுப் பூனைக்கு உணவு வாங்கி வைத்து பராமரிக்கும் இளகிய (குழந்தை )மனசு .

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப வெள்ளை மனசுங்கூட, அப்படியே எழுத்து நடையில் நெளிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிலாமதி said:

நல்ல கதை. நல்ல இயற்கை ரசிகன். யாரோ வீட்டுப் பூனைக்கு உணவு வாங்கி வைத்து பராமரிக்கும் இளகிய (குழந்தை )மனசு .

14 hours ago, satan said:

ரொம்ப வெள்ளை மனசுங்கூட, அப்படியே எழுத்து நடையில் நெளிகிறது.

இளகிய மனது, வெள்ளை மனது என்பதை விட பயந்த மனது என்று சொல்வது தான் சரி போல.........🤣.

உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு பூனைக்குட்டியைக் கூட தூக்கி விட துணிவில்லாமல், மனைவியை துணையாகக் கூட்டிக் கொண்டு போனதை வேறு என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை............. அதுவும் ஓடும் போது கையில் ஒரு துவாயையும் எடுத்துக் கொண்டே ஓடினேன் பாருங்கள்........... அந்த நாலாவது பூனைக்குட்டியை விட நான் தான் ஒரு பயந்தாங்கொள்ளி...............🤣.

கொஞ்சம் வெளியே நின்று ஒவ்வொருவரும் எங்களை நாங்களே கவனித்து பார்த்தால் சரியான வேடிக்கையாக இருக்கும் போல...............

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பயத்திலும் உங்களிடம் இருந்தது " ஜீவகாருண்யம் " உயிர்களின் மீதான கரிசனை. துணைவியை அழைத்தது உங்களுக்கு எதும் ??? என்ற குடும்பத்தின் மீதான அக்கறை . என்றாலும் குட் சப்போர்ட்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2025 at 01:17, ரசோதரன் said:

கண்டவுடனேயே அது தலை தெறிக்க ஓடிவிடும். அது ஒரு பெண் பூனையாக இருக்கலாம்.

பெண் பூனைக்கும் உங்களைத் தெரிந்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

பூனை மிகவும் சுத்தமாக இருக்கும் என்பார்கள்.

கக்கா இருக்கும் போது மண்ணை விறாண்டி விட்டு இருக்கும்.

முடிந்தவுடன் மூடிவிட்டு போகும்.

இதுவே அமெரிக்க பூனைகள் எப்படி இருக்கும்?

பூனைகள் போடும் குட்டிகளில் ஒன்றைத் தின்னும் என்கிறார்கள்.

உண்மை பொய் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பூனை மிகவும் சுத்தமாக இருக்கும் என்பார்கள்.

கக்கா இருக்கும் போது மண்ணை விறாண்டி விட்டு இருக்கும்.

முடிந்தவுடன் மூடிவிட்டு போகும்.

இதுவே அமெரிக்க பூனைகள் எப்படி இருக்கும்?

பூனைகள் போடும் குட்டிகளில் ஒன்றைத் தின்னும் என்கிறார்கள்.

உண்மை பொய் தெரியவில்லை.

இங்கும் சுத்தமாகவே இருக்கின்றன, அண்ணா. இவை என் வீட்டுப் பூனைகள் இல்லை, ஆனால் வந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பாத்ரூமாக வேறு ஒரு அயல் வீட்டை உபயோகிக்கின்றன என்றே தெரிகின்றது...................🤣.

ஒரு குட்டியை சாப்பிட்டு விடும் என்பது உண்மையல்ல என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

பூனைகள் போடும் குட்டிகளில் ஒன்றைத் தின்னும் என்கிறார்கள்.

கடுவன் பூனைகளிடமிருந்து தாய்ப்பூனை தன் குட்டிகளை சிறிது காலம் கவனமாக பாதுகாக்கும்.

கடுவன் பூனை சிறு குட்டிகளை கடித்து தின்பது உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2025 at 09:17, ரசோதரன் said:

ஆனால் சின்ன அசைவு இருந்தது. அது உயிருடன் தான் இருக்கின்றது என்று தெரிந்தவுடன், வீட்டுக்குள் மீண்டும் ஓடினேன்.

நீங்கள் ஒர் தமிழ் "அனுரா"😂

அனுரா உங்கள் பல்கலைகழக சக தோழர் என்பது இந்த செயலில் இருந்து தெரிகிறது..😂

  • கருத்துக்கள உறவுகள்

ரசோதரன் எனக்கு ஒரு சந்தேகம்.

பயந்தாங்கொள்ளி என்பது யார்?

நான்கு கால் பூனையா?

இரண்டு கால் பூனையா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ரசோதரன் எனக்கு ஒரு சந்தேகம்.

பயந்தாங்கொள்ளி என்பது யார்?

நான்கு கால் பூனையா?

இரண்டு கால் பூனையா?

இந்த வசனத்தைப் பாருங்கோ ..விளங்கும்..

னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............'

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பயந்தாங்கொள்ளியாற்தான் மற்ற பயந்தாங்கொள்ளியை இனங்காண முடியும். நசிந்து தொங்கும் பூனைக்குட்டியை கண்டவுடனேயே ஓடிய ஆள் எப்படியான ஆள்? தூக்கிவிடவே பயம். அதுக்கு அந்தபெண் பூனையே பரவாயில்லை, அங்கேயே துணிந்து குட்டி போட்டு பாதுகாத்திருக்கிறது. அதற்குள் பயந்தாங் கொள்ளிகுட்டியெது என்கிற ஆராய்ச்சி வேறு. நல்லவேளை! இவர் கடுவன் பூனையின் கண்ணில் படவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அதுக்கு அந்தபெண் பூனையே பரவாயில்லை, .....

அந்தப் பக்கம் நல்ல துணிவாகத்தான் இருக்குது....... நாங்கள் தான் இப்படி ஆகிவிட்டோம்...... கல்யாணத்தின் பின்........🤣.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வீட்டுக்காரி இந்தப்பக்கம் வரமாட்டார், படிக்கமாட்டார் என்கிற துணிவுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

நீங்கள் ஒர் தமிழ் "அனுரா"😂

அனுரா உங்கள் பல்கலைகழக சக தோழர் என்பது இந்த செயலில் இருந்து தெரிகிறது..😂

இதற்காக ஒரு நோபல் பரிசை கேட்டுப் பார்ப்பமோ என்றும் ஒரு ஐடியா உள்ளுக்குள் வருகின்றது.........🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ரசோதரன் எனக்கு ஒரு சந்தேகம்.

பயந்தாங்கொள்ளி என்பது யார்?

நான்கு கால் பூனையா?

இரண்டு கால் பூனையா?

9 hours ago, alvayan said:

இந்த வசனத்தைப் பாருங்கோ ..விளங்கும்..

னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............'

🤣.........

கனடாவில் கார் ஓட்டிப் பாருங்கள்....... 'கமரா......... கமரா.........' என்று விடாமல் ஒரு பயம் காட்டுவார்கள் பாருங்கள்...... மன்னன் அலெக்ஸாண்டரே பயந்து போய் விடுவார்..........

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2025 at 00:58, குமாரசாமி said:

கடுவன் பூனை சிறு குட்டிகளை கடித்து தின்பது உண்மைதான்.

குழந்தை பெற்றபின் தாய்க்கு உடம்புதேற பத்தியக்கறி வைத்துக்கொடுப்பார்கள். அதுபோல குட்டிகள் ஈன்றபின் நாய் தான்போட்ட குட்டிகள் ஒன்றின் கால், காது, வால் போன்ற பகுதிகளில் ஒன்றைக் கடித்து தின்றுவிடுமாம். அதுதான் அந்த குட்டிகள் ஈன்ற நாய்க்குப் பத்தியக் கறி. அம்மா சொன்னது கேட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

🤣.........

கனடாவில் கார் ஓட்டிப் பாருங்கள்....... 'கமரா......... கமரா.........' என்று விடாமல் ஒரு பயம் காட்டுவார்கள் பாருங்கள்...... மன்னன் அலெக்ஸாண்டரே பயந்து போய் விடுவார்..........

நியூயோர்க் நகரத்தில் முழத்துக்கு முழம் கமரா.

வேகக் கட்டுப்பாடு 25 மைல்.40 கிலோ மீற்றர்.

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் 10 நாட்கள் மெதுவாக என் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன, இன்று தான் வாசித்தேன். அருமையான ஜீவ காருண்யக் கதை!

அமெரிக்காவில் உரிமையாளர் இல்லாத நாய்களைக் காண முடியாது, ஆனால் உரிமையாளரும், வீடும் இல்லாத பூனைகள் எல்லா நகரங்களிலும் காணலாம். எமது வீட்டுச் சுற்றாடலிலும் ஒரு கறுப்பு வெள்ளைப் பூனை இப்படிச் சுதந்திரமாக உலவுகிறது. அவருக்கு ஒரு நேர சூசிகையும் இருப்பதைக் காண்கிறோம். இரவு 7 மணிக்கு முன் வளவினால் நடந்து வளவின் இடது மூலைக்குப் போய் விட்டு, 8 மணியளவில் அதே பாதையால் திரும்பிச் செல்லும். முன் பக்கக் கமெரா இரவு 7 க்கும் 8 க்கும் அலேர்ட் கொடுத்தாலும் இப்போது மெனக்கெட்டுப் பார்ப்பதில்லை, "பூனை குறொஸ்ஸிங்" 😂 என்பது தெரிந்திருப்பதால்.

தாய்ப்பூனையோ, கடுவன் பூனையோ குட்டிகளைச் சாப்பிடுவது சாதாரணமாக/இயற்கையாக நிகழ்வதில்லை. நாய், பூனை , எலி போன்ற விலங்குகள் குட்டியீன்ற பதட்டத்தில் இருக்கும் போது சில சமயங்களில் இது (cannibalism) நிகழும். குட்டியீன்ற இந்த விலங்குகளை மனிதர்கள் கிட்ட நெருங்கி பதட்டத்தைக் கூட்டினால் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே தான், குட்டியீன்ற மாமிசமுண்ணி விலங்குகளை அதிகம் நெருங்கிச் சென்று பதட்டப் படுத்தாமல் விலகி நடந்து கொள்ள வேண்டும்.

பூனையைப் பற்றிப் பேசும் போது இன்னொரு ஆச்சரியமான விடயமும் மிருகவைத்தியப் பார்வையில் குறிப்பிடத்தக்கது: ஒரு வளர்ப்பு (domesticated) யானையைப் பரிசோதிக்க பக்கத்தில் அதன் பாகன் இருந்தால் ஒருவர் போதும். ஆனால், ஒரு வளர்ப்புப் பூனையைப் பரிசோதிக்க மூவர் தேவை: ஒருவர் முன் கால்களையும், தலையையும் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொருவர் பின்கால்களைத் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவர், மிருக வைத்தியர், பரிசோதிக்க வேண்டும். இல்லையேல், நகங்களை வெளியே நீட்டிய கால்களால், தாறுமாறாகக் கீறித் தள்ளி விடும்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

ஒருவர் முன் கால்களையும், தலையையும் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொருவர் பின்கால்களைத் துவாயினூடாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவர், மிருக வைத்தியர், பரிசோதிக்க வேண்டும். இல்லையேல், நகங்களை வெளியே நீட்டிய கால்களால், தாறுமாறாகக் கீறித் தள்ளி விடும்!

On 21/6/2025 at 09:17, ரசோதரன் said:

அங்கே இருந்த ஒரு சின்ன துவாயை எடுத்துக் கொண்டு நான் அவர் பின்னால் அவசரமாக ஓடினேன்.

மிருக வளர்ப்பில் கொஞ்சம் அனுபவம் தெரிகிறது!

இன்று தான் நேரம் கிடைத்தது ஆறுதலாக வாசிக்க.

உங்கள் எழுத்து நடை தனித்துவமானது. முதல் இரண்டு பந்திகளில் சொல்லப்பட்ட விடயங்களை தனித்து பார்க்கையிலும், மூன்றாம் பந்தியுடன் சேர்த்து பார்க்கையிலும் வெவ்வேறு வாசிப்பனுவங்களைத் தருகின்றது. மாதுளை பற்றிய விடயமும் அவ்வாறே.

எல்லாவற்றையும் சேர்த்து வாசிக்கும் போது நல்லதொரு கதையை அனுபவத்தை வாசித்த உணர்வு வருகின்றது.

---

எல்லாரும் ஒரு விதத்தில் பயந்தாங்கொள்ளிகள் தான். வாழ்க்கை முழுதும் ஏதோ ஒன்றிற்காக அஞ்சியபடியே தான் வாழ்கின்றோம். அறத்துக்கு, மற்றவர்களின் திட்டுக்கு, அரசுக்கு, அதன் சட்டங்களுக்கு, தெருவில் திடீரென அணையும் மின் விளக்குகளுக்கு, தனிமைக்கு, பெருங் கூட்டம் ஒன்றில் விடப்படுவதற்கு.. எல்லாவற்றையும் விட தவறு ஒன்று செய்து விட்டு, அதை மீட்டிப் பார்க்கும் போது மனசு கேட்கும் கேள்விகளுக்கு... என்று பயந்தபடிதான் வாழ்கின்றோம்.

மரணம் ஒன்று மட்டுமே பயமற்றது. எல்லா பயத்திலும் இருந்து விடுவிப்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.