Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் என் ஈழமும் 14: செஞ்சோலை படுகொலையில் என் தங்கை ஒருத்தி

Featured Replies

Senjolai.jpg

ஈழத்தை நோக்கிய என் பயணங்களில் மறக்க முடியாதது இறுதியாக நான் என் மண்ணை தொட்டது 2005ஆம் ஆண்டு தான். எப்போதுமே ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் கிடைக்கும் கவனிப்பு அதிகம் தானே. முதல் பயணம் என்னை நானே அறிய முதல் நடந்தது. இறுதி பயணம் நானே என்னை மறக்கும் அளவிற்கு இன்று வரை கொண்டு சென்றுவிட்டது. பல காரணங்களில் ஒன்றை இப்பகுதியில் பார்க்கலாம்.

என் அப்பப்பாவின் நாட்டு பற்று தான் எங்கள் குடும்பமே தாய் நாட்டை நேசிக்க காரணமாக இருந்தது என்பது என் கருத்து.

வெளிநாடுகளில் வாழ சந்தர்ப்பம் கிடைத்த போதும், வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என அறிந்த போதும்; “நீங்கெல்லாம் போய்ட்டு வாங்கோ, நான் என் மண்ணை விட்டு வர மாட்டேன்” என சொல்லி, இறுதிவரை தன் வார்த்தையை காப்பாற்றினார்.

ஊரில் இருந்த அப்பப்பா, அப்பாச்சியை பார்ப்பதற்காக தான் எங்களுடைய அதிகமான பயணங்கள் அமையும். இல்லை எனில் எங்கள் குடும்பத்தில் ஒரு உயிர் சிங்கள அரசால் பறிக்கப்பட்டதும் அவசரமாக வரும் தொலைபேசிக்காக அமையும்.

2005 ஆம் ஆண்டு ஊருக்கு சென்ற போது எந்தவொரு பிரச்சனையும் இருக்கவில்லை. ஒரு மாதம் அப்பப்பாவுடன் நிம்மதியாக இருந்தேன், ஈழத்தில் இருக்கும் பல ஊர்களை சென்று பார்த்தேன், யார் என்றே தெரியாத பல உறவுகளை சந்தித்தேன். அப்படித்தான் அந்த தங்கையையும் சந்தித்தேன்.

எங்கள் ஊரில் இருந்த பகுதி சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் இருந்த காலமது. பாதுகாப்பு காரணத்திற்காக வன்னியை நோக்கி எம்மக்களில் பலர் இடம்பெயர்ந்திருந்தார்கள். அப்படி இடம்பெயர்ந்த உறவுகளை பார்க்கலாம் என வன்னிக்கு குடும்பமாக சென்றிருந்தோம். அப்பப்பாவின் ஏற்பாடு தான்; சொந்தங்கள் விட்டு போக கூடாதாம். அவர்களுடைய காலத்தோடு சொந்தக்காரங்க யார் என்று கேட்கும் நிலை வரக்கூடாதாம்.

அப்படி பல வருடங்களாகவே போரின் நிமித்தம் தொலைந்து போயிருந்த எங்கள் சொந்தக்காரங்க குடும்பம் இருக்கும் இடம் தெரிந்து சென்றிருந்தோம்.

வன்னிக்கு சென்று சற்றே நகர்ப்புறமாக இருக்கும் இடங்களை தாண்டி சென்று ஒரு குடும்பத்தை சந்தித்தோம். பெரிய குடும்பம்…நான் தமிழ் சினிமாவில் மட்டும் பார்த்த ஒரு கூட்டு குடும்பம். நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என ஏங்கிய குடும்பம். ஈழத்தில் நாட்டு பிரச்சனை இல்லை எனில் எங்கள் குடும்பமும் அப்படித்தான் வாழ்ந்திருக்கும். அவர்களுடன் தங்கியிருந்த ஒரு நாள் என் வாழ்வில் மறக்க முடியாது.

அவர்களிடம் மித மிஞ்சி இருந்தது அன்பு மட்டுமே. அன்பை தவிர அவர்களிடம் எதுவுமே அதிகமாக இருக்கவில்லை. உண்மையை சொன்னால், கொஞ்சம் கூட இருக்கவில்லை.

பனையோலையிலும் செம்மண்ணிலும் கட்டிய குடிசைகள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குடிசைகள். ஒரே ஒரு அறையையும், திண்ணைகளையும் மட்டும் கொண்டிருந்தன அக்குடிசைகள். சமையலறை ஒன்று தனியாக அனைவருக்கும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.

ஆண்கள் கூலி வேலை செய்து உழைத்து வருவது அன்றைக்கு மட்டும் அவர்களுக்கு உணவை தந்து கொண்டிருந்தது. வன்னி மண் தெய்வத்திற்கு சமம். அன்னபூரணி..கையால் உதறி விழும் விதை கூட மண்ணில் விழுந்து துளிர்விட்டு விடும். அப்படி பெண்கள் முயற்சியால் வளர்ந்திருந்த காய்கறிகள் தான் உணவாகி வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தது.

அவர்கள் வீட்டை கண்டுபிடித்து போனதே ஒரு சுவாரசியமான கதை. வீட்டை தேடி கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் வாகனத்தில் சென்றோம். அதன் பின்னர் பனைகள் மட்டுமே இருந்த இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டோம். நாங்கு திசைகளிலும் பனைமரங்கள். வீதியோ, வீதி பெயர்களோ இருக்கவில்லை. திரும்பி போக வேண்டியது தானா எனக்கும் நினைக்கும் வேளையில் தான் ஒரு சின்ன தங்கை தன் பள்ளி புத்தகங்களோடு வந்து கொண்டிருந்தார்.

எத்தனை நேரம் தான் பெரியவர்களில் கதையை கேட்பது. தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த தங்கையை கண்டதுமே அவரிடம் சென்று இடம் கேட்டேன். அமைதியாக புன்னகைத்து “எங்கட வீட்டை தான் வந்திருக்கியள்” என்று சொன்னார்.

“ஏன் ஆத்தா கொஞ்சம் முன்னாடியே வந்து பெரிசுங்க கதையிலே இருந்து என்னை காப்பாற்ற முடியலையா” என்பதை நான் என் மனதிற்குள் கேட்டதோடு நிறுத்திவிட்டேன். அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது.

அந்த பனம்காட்டில் ஒரு சின்ன பெண் பள்ளிப்புத்தகங்களோடு நடந்து வருகின்றாரே! இதை தான் எங்கப்பா “படிக்கிற பிள்ளை எங்கையிருந்தாலும் படிக்கும். படிக்காததுகள் ஒஸ்திரேலியாவில இருந்தாலும் படிக்காதுகள்” என்பாரே!

எங்கள் வீடு தான் என சொன்னவுடன், சரி எங்களுடன் வாகனத்தில் வாங்கோவன் என நாங்கள் கேட்டும் வாகனத்தில் ஏறவேயில்லை. என்ன தான் நாம் உறவென்று சொன்னாலும், புதியவர்கள் தானே.

“சரி நான் உங்களோட நடந்து வாறன். மற்றவையள் பின்னால காரில வரட்டும்” என சொல்லி தங்கையோடு நடந்தே அவர்கள் வீட்டிற்கு சென்ற அனுபவம் எனக்குண்டு.

அப்படி நடக்கும் போது தான் அவருக்கு படிப்பில் இருந்த ஆர்வத்தை அறிந்து கொண்டேன். தினமும் 1½ மணித்தியாலங்கள் நடந்து சென்று படிப்பதை அறிந்த போது எனக்கு என்ன சொல்வதென்றே தோன்றவில்லை. மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பின்னர் அவர்கள் வீட்டை அடைந்து, அவர்கள் வறுமையை பார்த்த பின்னர் அந்த ஆச்சர்யம் அதிகமாகிக் கொண்டே போனது.

அவர்கள் வீட்டை அடைந்த போது, எங்களுக்கு பெரிய வரவேற்று கிடைத்தது. அத்தனை அன்பான மனிதர்களை நான் வன்னியில் மட்டுமே கண்டுள்ளேன்.

உடனடியாக மண்ணில் இருந்து எடுத்த மரவள்ளிக்கிழங்கை இடித்து தந்தார்கள். சுடசுட தேத்தண்ணி போட்டு தந்தார்கள். இரவும் தங்கி செல்ல வேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனால் அவர்களின் நிலை எங்களை மாட்டோம் என சொல்ல வைத்துவிட்டது. அங்கு தங்கலாம் என மனம் சொல்ல, வேண்டாம் என புத்தி சொல்ல…..”அடுத்த முறை கட்டாயம் நிற்பம்” என்ற உறுதியோடு திரும்ப ஆயத்தமானோம்.

“யோசிக்காம படியுங்கோ. அம்மாட்ட எங்கட அட்ரஸ் குடுத்திருக்கம். என்னென்டாலும் கதையுங்கோ” என கூறி வாகனத்தில் ஏறி கையசைத்தேன். ஆரம்பத்தில் இருந்த அதே புன்னகையுடன் “போய்ட்டு வாங்கோக்கா” என கூறி வழி அனுப்பினார் அந்த தங்கை.

அன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு ஒரு பெரிய இடியாக இருந்தது அந்த செய்தி..

“ஆகஸ்ட் 14, 2006 - இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.போ.த உயர்தர கல்வி மாணவிகள் ஆவார்கள்.”

‘அய்யோ’ என நாம் அனைவரும் அலறிய நேரத்தில் தான் கொல்லப்பட்ட சில மாணவிகளின் படங்கள் வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். முதலாவது முறையாக வந்த படங்களை பார்த்த போது எனக்கு மூச்சு ஒரு தடவை நின்றது போல் ஒரு உணர்வு. படங்களில் சிரித்து கொண்டிருந்த அந்த பிஞ்சுகளில் ஒருத்தியாக அந்த தங்கை………!

படிக்க வேண்டும் என தினமும் 11/2 மணித்தியாலங்கள் நடந்த பிள்ளையை கொன்றதும் போதாது என, ‘நாம் அழித்தது புலிகள்’ என இராணுவம் சொல்ல. ‘அப்படித்தான் இருக்கும்’ என சில புல்லருவிகள் ஆமாம் போட…

அய்யோ நீங்கள் அழித்தது ஒரு பிஞ்சை….ஒன்றுமறியா ஒரு குழந்தையை….அமைதியான புன்னகைக்கு சொந்தக்காரியையடா கொலைகாரர்களே….

பல வருடங்களுக்கு பின்னர் நான் தேடி கண்டுபிடித்த என் சொந்ததை அழித்துவிட்டீர்களே பாவிகளே..

என் தங்கையுடன் பலியான அனைத்து குழந்தைகளுக்கும் இப்பத்திவை சமர்ப்பிக்கின்றேன்.

தூயா

படம் நன்றி: தமிழ்.நெற்

சொந்த உறவை பறிகொடுத்ததின் வலியை கூறும் பதிவு. என்று தான் இவற்றுக்கு முற்றுப்புள்ளியோ?

எவ்வளவு கனவுகளுடன் அந்த மாணவிகள் இருந்திருப்பார்கள்...

என்ன சொல்ல தூயா??? காலம் சிறந்த மருந்து காயத்தை ஆற்றும் என்பார்கள் ஆனால் ஈழ மக்கள் வாழ்வில் தொடரும் அவலங்கள் காயத்தை மேலும் குத்தி ரணமாக்குவதாகவே இருக்கிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனை தொலைத்து

சாதனை படைப்போம்

சத்தியமாய் சாத்தியமில்லை

அப்படி சொல்வது....

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வருடங்கள் பல ஆகி விட்டாலும் ஆகஸ்ட் 14 ல் எரிந்த செஞ்சோலை வளாகத்தில் நினைவும் அதில் கரைந்த தங்கைகளில் உயிர்களும் நினைவை விட்டகலாது.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று நாடில்லாவிட்டால் மிகுதிப் பேருக்கும் இப்படித் தான்.

எமக்காக ஒரு தேசத்தை உருவாக்குவோம்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையல்ல நிஜம் என்று

சொல்லும் கண்னீர் துளிகள்

சிறிது சுடத்தான் செய்தது.

கதையோட்டத்துடன் மனவோட்டத்தை ஒன்றவைக்கும்படியான பதிவு. பாராட்டுகள் தூயா.

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு கனத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு கனத்து விட்டது.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மணம் 2008 விருதுகளில் தூயாவின் இவ்வாக்கம் 'பிரிவு: ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்' பகுதியில் 2ம் இடத்தைப் பெற்றிருக்கிறது. பாராட்டுக்கள் தூயா.

அத்துடன் யாழ்கள உறுப்பினர் வினவு அவர்களில் ஆக்கங்கள்

பிரிவு: பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள் -சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் ! (1ம் இடம்)

பிரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள் சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!(1ம் இடம்) பாராட்டுக்கள் வினவு.

பரிசுபெற்றவர்களையும் அவர்களின் ஆக்கங்களையும் பார்வையிட

http://awards2008.tamilmanam.net/polls/?p=33

  • கருத்துக்கள உறவுகள்

“ஆகஸ்ட் 14, 2006 - இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.போ.த உயர்தர கல்வி மாணவிகள் ஆவார்கள்.”

‘அய்யோ’ என நாம் அனைவரும் அலறிய நேரத்தில் தான் கொல்லப்பட்ட சில மாணவிகளின் படங்கள் வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். முதலாவது முறையாக வந்த படங்களை பார்த்த போது எனக்கு மூச்சு ஒரு தடவை நின்றது போல் ஒரு உணர்வு. படங்களில் சிரித்து கொண்டிருந்த அந்த பிஞ்சுகளில் ஒருத்தியாக அந்த தங்கை………!

படிக்க வேண்டும் என தினமும் 11/2 மணித்தியாலங்கள் நடந்த பிள்ளையை கொன்றதும் போதாது என, ‘நாம் அழித்தது புலிகள்’ என இராணுவம் சொல்ல. ‘அப்படித்தான் இருக்கும்’ என சில புல்லருவிகள் ஆமாம் போட…

தூயா உண்மைக்கதை என்னையும் ஒரு கணம் பழைய நினைவுக்கு கொண்டு சென்று விட்டது.

நான் அந்தச் சம்பவம் நடந்தபோது ஊரில் இல்லை வெளியூரில் இருந்தேன்.

அந்த குண்டு வீச்சில் என்னிடம் க.பொ.த.உயர் தரத்தில் கல்வி கற்ற 13 மாணவிகள் கொல்லப்பட்ட போது என் மனம் அப்படியே சிதைந்து விட்டது.

விசுவமடுவில் என்னிடம் கற்ற அந்த இளம் சிட்டுக்கள் என்ன பாவம் செய்ததுகள் மனதால் கூட பிறருக்கு ஒரு துரோகமும் நினைக்காத அந்த புன்னகைக்குரிய பிஞ்சுகளின் நிழற் படங்கள் இப்போது கூட என் நெங்சில் படமாக ஓடுகின்றது.

"சேர்... சேர்" என்று அவர்கள் கூப்பிடும் அந்த இனிமையான ஓசையை நான் அன்று இழந்தேன். அதை நினைத்தால் இன்னும் என் மனம் கனக்கிறது.

தூயா உங்கள் பதிவு ஒரு கணம் எங்கள் கண்களை கலங்க வைத்து விட்டது. என்ன செய்ய பாவிகள் நடத்துகின்றார்கள் ?

மனதை கனக்க வைத்த உண்மைக்கதை

மறக்க நினைத்தாலும் மறந்து போகாத சோக நிகழ்வு அது.

  • தொடங்கியவர்
:icon_idea: எதையும் எழுத முடியவில்லை..
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமையுடன் செஞ்சோலைப் படுகொலை முடிவடைந்து 3 வருடங்களாகி விட்டது. அதில் தப்பியவர்களில் இப்பொழுது இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியாது. இவ்வருடத்தில் அவர்களிலில் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். காயப்பட்டிருக்கலாம் அல்லது சிறிலங்கா வன்னித் தடுப்புமுகாம்களில் இருக்கலாம் அல்லது வதை முகாம்களில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தும் இருக்கலாம்.

கீழே உள்ள இணைப்பில் பாடும் இச்சிறுமியும் உயிரோடு இருக்கிறரா தெரியாது?. 2005ல் அமெரிக்காவில் இருந்து வன்னிக்கு சென்றவர்களினால் எடுக்கப்பட்ட காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்

உணையாகவே மிகச் சிறந்த படைப்பாளியின் உயிர்ப்பும் உண்மை உணர்வும் உங்களிடம் இருக்கு. உங்க்ள் தொடரில் இதை மட்டும்தான் பார்த்தேன். நிறைய எழுதுங்கள். நல் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமையுடன் செஞ்சோலைப் படுகொலை முடிவடைந்து 3 வருடங்களாகி விட்டது. அதில் தப்பியவர்களில் இப்பொழுது இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியாது. இவ்வருடத்தில் அவர்களிலில் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். காயப்பட்டிருக்கலாம் அல்லது சிறிலங்கா வன்னித் தடுப்புமுகாம்களில் இருக்கலாம் அல்லது வதை முகாம்களில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தும் இருக்கலாம்.

கீழே உள்ள இணைப்பில் பாடும் இச்சிறுமியும் உயிரோடு இருக்கிறரா தெரியாது?. 2005ல் அமெரிக்காவில் இருந்து வன்னிக்கு சென்றவர்களினால் எடுக்கப்பட்ட காணொளி.

">

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலையில் இருந்த பிள்ளைகளில் 129பிள்ளைகள் வவுனியாவிலுள்ள ஆதரவற்றோர் இல்லமொன்றில் பராமரிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான வசதிகள் ஓரளவுக்குத்தான் உள்ளது. இவர்களுக்கான தேவைகள் பாடசாலைச் சீருடைகள் முதல் காலணிகள் மற்றும் பல வசதிகள் குறைவாகவே உள்ளது.

இவர்கள் பற்றி புலத்தில் கையில் காசோடு இருக்கும் பலரிடம் கதைத்தபோது பிள்ளைகளின் விபரங்களை எடுங்கோ நாங்கள் அவர்களைத் தோழில் தாங்குவோம் என்றார்கள் அவர்களின் விபரங்கள் யாவும் கொடுத்து 6கிழமையாகிறது இன்னும் எந்தவித பதிலும் இல்லை. இடையில் அந்தச் சிறுமிகளுக்கு பாடசாலைச் சீருடைக்கான 250மீற்றர் வெள்ளைத் துணியாவது வாங்க உதவி செய்யுங்கள் என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள். தங்களின் பணிகளும் கவனமும் முகாமில் வாடும் மக்களைப்பற்றியதாம் இப்போது அவர்களுக்காக பலஇடங்களால் முயற்சிசெய்வதாகவும் இந்தப்பிள்ளைகளை பொறுப்பெடுத்தவர்கள் அவர்களை பராமரிக்கட்டும் என்றார்கள்.

இதோ ஒரு பிள்ளையை நான் செலவு செய்கிறேன் அதோ அடுத்த பிள்ளையை கவனிக்கிறேன் என்ற பலர் கதையுடன் மட்டும் தான் காரியமாற்றுகிறார்கள். எல்லாம் ஓம் பங்கணா என்று வந்ததும் தொடர்புகளை தூரவைத்துக் கொண்டு தேசியம் பேசுவதில் கவனமாக உள்ளார்கள்.

இந்த லட்சணத்தில் செஞ்சோலை பிள்ளைகளின் நினைவைப் பாட்டிலும் எழுத்திலும் தான் நம்மால் தரிசிக்க முடிகிறது. இந்தப்பிள்ளைகளைச் சந்தித்து வருபவர்கள் சொல்லும் கதைகள் நாமெல்லாம் இன்னும் மனிதர்களாக உலவுவதற்கான தகுதியுள்ளதா என எண்ணத் தோன்றுகிறது.

பெற்றோர்களைப் பிரிந்த வயதுகுறைந்த சிறுவர்கள், சிறுமிகளை சில சிங்களவர்களிடம் பாராமரிக்க சிறிலங்கா அரசு அனுப்பி இருப்பதாக அப்பிள்ளைகளின் உறவினர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். அப்பிள்ளைகளை அடிமைகளாக சிங்களவர்கள் நடாத்தப்படுவதை கொடுமைகள் நடந்து கொண்டும் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.