Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்ராசு மாமா என்கின்ற துரோகி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக்கு என அதை வித்துப்போட்டு கடனை அடைப்பார். வட்டி கட்ட மனிசியின்ரை சங்கிலி காப்பையும் விற்பார். ஆனா சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல அவர் வலைகளோடை காத்திருந்தார். “பொறு பொறு பிரேமதாசா எல்லாம் சரிப்பண்ணுவான்” “என்ன இருந்தாலும் சந்திரிக்கா ஒரு பொம்பிளை. அவள் எங்கடை கஸ்ரங்களைத் தீர்ப்பாள்” “ரணில் செய்வான்போலதான் கிடக்கு” என அவர் காலாகாலத்துக்கும் காத்திருந்தார். ஒரு கட்டத்தில் “உவங்கள் பூழல்மக்கள் ஒன்றும் புடுங்கமாட்டாங்கள். எங்கடை சொந்தக் கடலம்மா என்ற காலம் வராட்டி நாங்கள் உப்பிடியே கரையில கிடக்கவேண்டியதுதான். அவனவன் வந்து அள்ளிக்கொண்டு போகட்டும்” என்றார். கடலுக்கை இயக்கம் நேவியை அடிக்கிற நேரமெல்லாம் அவர் பேப்பரை ரண்டுமூன்று தடவை படிப்பார். சிலநேரம் சத்தம் போட்டும் படிப்பார்.

சின்ராசு மாமா கடலை ஒருபோதும் கடல் என்றது கிடையாது. கடலம்மா அல்லது அம்மா அல்லது சீதேவி இப்படித்தான் சொல்லுவார். அவரது வீடு கடலோரத்தில் இருக்கவில்லை. ஆனா வீட்டுக்கை எப்பவும் ஒரு கடல் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். “உந்த வலையளை வேறை எங்கயாவது கொண்டுபோய் பொத்தலாம் தானே” என்றால் அவர் சிரிப்பார். “எடேய்.. இதென்ன வலையில இருந்து வாற வாசம் எண்டு நினைக்கிறியே ? இது இந்த வீட்டின்ரை ஒரிஜினல் வாசம். இது கடலம்மா தந்த வீடு. கடலம்மா தன்ர மடியைச் சுரந்து சுரந்து தந்த செல்வத்தில கட்டின வீடு எண்டபடியால இந்த வாசம் எப்பவும் இருக்கும். இதில்லாட்டி எனக்கு நித்திரை வராது”

என்னை முதலில் கடலுக்குள் கொண்டுபோனவர் சின்ராசு மாமா. ஆழமொண்டும் இல்லை. கரை தெரிகிற தூரம்தான். கட்டுமரத்தில் களங்கண்ணி வலிக்க அவர் கூட்டிக்கொண்டு போனார். அது உலாஞ்சி உலாஞ்சிக்கொண்டு போனது. கடலுக்குள் இரண்டு பேர் குதித்து ஒவ்வொன்றாக வலைத்தடியைப்பிடுங்கி தடிகள் வலைகள் என்றெல்லாத்தையும் சுத்தி மரத்தில் ஏற்றினார்கள். வெள்ளி நிறத்தில் மீன்கள் துடித்துக்கொண்டிருந்தன. மரத்தில என்னைவிட்டு அவர்கள் கடலுக்கை இறங்கின நேரம் நான் கத்தத்தொடங்கியிருந்தேன். “நான் போப்போறன்.. கூட்டிக்கொண்டே விடுங்கோ..”

சின்ராசு மாமா கெக்கட்டம் போட்டுச் சிரிச்சார். “உன்ரை வயசில உசரப்போய் ஐஞ்சு நாள் கிடந்திட்டுவந்தனாங்கள். தெரியுமே.. ” பிறகு டக்கெண்டு அமைதியானார். “இப்ப.. இந்தா கரையைத்தடவிக்கொண்டு இருக்கிறம். இருந்துபார் ஒரு காலம் வருமடா..”

எனக்குக் கடல் பயமாயிருந்தது. கடலுக்கை சுழியெல்லாம் இருக்காம். அதுக்கை அம்பிட்டால்.. ஆளைச்சுழற்றியடித்து உள்ளை அமத்திப்போடுமாம். ஒருதரம் இதைச்சொல்லி “கடல் சனியன்” என்றபோது சின்ராசு மாமா ஓங்கியொரு குட்டு விட்டார். கடல் பரவாயில்லையென்று நான் நினைச்சன். “கடலம்மா ஆரையும் விழுங்கமாட்டாள்” என்றார் அவர். நீண்ட நெடுங்காலத்துக்குப்பிறகு 97 இல் வலைப்பாடு கிராமத்தில் இந்தியாக்கு வெளிக்கிட்ட நூற்றுஐம்பது பேரை கடலம்மா விழுங்கித்தள்ளியபோது நான் கரையில் நின்றேன். “சின்ராசு மாமா ஏன் பொய் சொன்னார்” என யோசித்துக்கொண்டு.

அப்ப அவர் அனலை தீவில வாடிபோட்டுத்தொழில் செய்த நேரம். என்னையும் அனலைதீவுக்கு கூட்டிக்கொண்டு போகச்சொல்லி நான் கேட்டேன். சின்ராசுமாமா என்னை கல்லுண்டாய் வெளியால கூட்டிக்கொண்டுபோனார். பொம்மை வெளி நாவாந்துறை கடல்களோரம் வந்து ரவுணுக்குள் ஏறி சுற்றிக்காட்டினார். “எட அனலைதீவு நல்லாத்தான் டெவலப் ஆகியிருக்கு. பிறகென்ன.. ” என்று நான் நினைத்தேன். இருந்தாலும் அனலைதீவுக்கு றோட்டு இருக்கா என்றது ஒரு டவுட் ஆகத்தான் இருந்தது. “மடையா காரைதீவுக்கே றோட்டிருக்கேக்கை அனலைதீவுக்கு இருக்காதா என்றார் அவர். அவர் சொன்னாச்சரி.

பிறகு எல்லாம் மாறியது. நேவியின்ரை கப்பல் கடலின்ரை அடியில அவ்வப்போது தெரியத்தொடங்கியது. இரவுகளில் கடலுக்கை வெடிச்சத்தங்கள் கேட்டன. எல்லா மீன்பிடி வள்ளங்களும் கரையில கவிண்டு கிடந்தன. நேவியை உச்சிப்போட்டு சிலர் போயிட்டு வந்தார்கள். அப்பிடிப்போன பரன் அண்ணா ஒருநாள் வராமலேயே போனார். ரண்டு மூண்டு நாள் கரையில சோறு தண்ணி இல்லாமல் அவரின்ரை மனிசி காத்திருந்தா பிள்ளைத்தாச்சி வயிற்றோடு..

சின்ராசுமாமா தன்ரை மூன்று வள்ளங்களையும் கொண்டு கிளாலிக்கு வெளிக்கிட்டார். “இனித் தொழில் சரிவராது. கிளாலி ஓட்டம் செய்வமெண்டு போறன்” என்றார் அவர். ஆனையிறவிலும் பூநகரியிலும் ஆமி இருக்க யாழ் குடாநாட்டுச் சனங்கள் கிளாலிக் கடலால வன்னிக்கும் வவுனியாக்கும் கொழும்புக்கும் போய்க்கொண்டிருந்தினம். அதுக்கையும் நேவிக்காரன் வந்து இடையில சனத்தை மறிச்சு வெட்டியும் சுட்டும் தன்ரை விளையாட்டைக்காட்டிக் கொண்டுதான் இருந்தான். சின்ராசு மாமாவின் மூன்று வள்ளங்களும் கிளாலிக் கடலில் இரவுகளில் ஓடின. ஒரு வள்ளத்தோடு மிச்ச இரண்டு வள்ளத்தையும் கயிற்றால் இணைத்து அவரே ஓட்டியாவும் இருந்தார். அந்தநேரம் அவரின்ரை பொக்கற்றுக்கை சிகரெட்டுகள் எட்டிப்பார்த்தன.

திடீரென்று ஒருநாள் சின்ராசு மாமா ஓடிவந்தார். “அவன் அங்கை கிளாலியெல்லாம் வந்து பிடிச்சிட்டான். வள்ளங்கள் கரையில நிக்குது. ” என்று பதைபதைத்தார். மூன்றோ நாலு நாளில் ஒபரேசன் யாழ்தேவியை புலிகள் முறியடித்து இராணுவத்தினரை விரட்டியடித்தனர் என்ற செய்தி வந்தபோது “கிளாலியும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். வள்ளங்களை இங்காலை கொண்டுவரும்” எனப் போனார். போனவர் 3 வள்ளங்களினதும் எரிந்த எலும்புக்கூடுகளைத்தான் கண்டார்.

அன்றிலிருந்து சின்ராசுமாமா ஒடுங்கிப்போனார். கரைவலை களங்கண்ணியென்று போறதையும் நிப்பாட்டினார். வருத்தங்களும் வந்து ஆளும் நல்லா கொட்டுண்டு போனார். “என்ரை சாம்பலை இந்தக்கடலுக்கை கொட்டுங்கோடா” என்றெல்லாம் புசத்தினார்.

பிறகு யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்சு கடலுக்கை நேவிட்டை காட்ட ஸ்பெசல் ஐடென்ரி காட் எல்லாம் கொடுத்து இத்தனை மணிக்குப்போய் இத்தனை மணிக்கு வா என்று நேரத்தைக் கட்டுப்படுத்தி தீடீரென்று போகாதையென்று நிறுத்தி கடலில வந்து மீனைப்பறித்து என எல்லாவற்றையும் நடாத்திக்காட்டியது. பிள்ளைகளுக்காகவும் கடனுக்காகவும் இதெல்லாத்தையும் கடப்பதாய் அவர் சொன்னார்.

0 0 0

சின்ராசுமாமா கதைத்தார். “இப்ப நான் சிகரெட்டெல்லோ பிடிக்கிறன்” என்றார் அவர். இப்ப கொஞ்ச நாளைக்கு முதல்லை கடல் தடையெல்லாம் விலத்தி மீன்கள் கொழும்புக்கு போகுதாம் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவரும் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். அவரது கடலம்மா திரும்பவும் தன் மடியைச் சுரக்கத்தொடங்கியிருப்பாள்.

ஆனால்…

ஆனால்.. அதெப்படி ஆமிக்காரன் கொடுத்த அனுமதியில் அவர் மகிழ்வுறுகிறார்.. ? அது பச்சைத் துரோகமாயிற்றே.. சுதந்திரத்தை விட சோறு முக்கியமாகி விட்டதா அவருக்கு..?

சின்ராசு மாமா இந்தக் கேள்விகளை எல்லாப்பக்கமிருந்தும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். உப்புச்சப்பில்லாமல் “சந்தோசம் ” என்றேன்.

“ஒண்டு சொல்லுறன்ரா.. என்ரை தொழிலைப்பாழாக்கி என்ரை வள்ளங்களை எரிச்சு என்னோடு கடலுக்கை வந்த சிநேகிதங்களை சுட்டு எல்லாத்தையும் செய்தவன்.. இண்டைக்கு சரி நீங்கள் எல்லாம் கடலுக்கை போகலாம் என்று விட சரி மாத்தையா என்றுவிட்டு போறதை விட வேறை மனசை அரிக்கிற கொடுமை இல்லை.. ஆனா.. நீ சொல்லு.. நான் வேறை என்ன செய்ய… ?

000 000

இந்தக்கதையின் கடைசிப்பந்திக்கு முன்பதாக இதை எழுதிய சயந்தனுக்கு ஒரு டவுட் வந்தது. இந்தக்கதையை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமா என அவர் யோசித்தார். அவருக்குத் தெரிய அவரின்ரை எந்த நண்பரோ.. அல்லது நண்பரின் மகளோ எந்தப் பத்திரிகையிலும் வேலை செய்யவில்லை. இந்தக்கதையை யாரும் ஒரு பொருட்டாகத்தன்னும் மதிப்பினம் என்று சயந்தனுக்குத் தோன்றவில்லை. அவர் தனக்குத் தெரிந்த ஒரு பேப்பருக்கும் தெரியாத ரண்டு இணையத்தளத்துக்கும் இந்தக்கதையை அனுப்புவது என்று முடிவு செய்தார்.

எழுத்தாளர் சயந்தன் மூன்று ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு கடிதம் எழுதினார். அன்புள்ள ஆசிரியருக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கதையையும் மற்றும் தனி இணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிற இதன் முடிவும் உங்களது பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் தயவுசெய்து பிரசுரிக்கவும் என்று கடிதங்களை எழுதினார். பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் என்றதை தனியே அடிக்கோடிட்டார் சயந்தன்.

ஆசிரியர் : ஒருபேப்பர்.

கதையின் முடிவு :

சின்ராசு மாமா சொன்னார். “தம்பி நான் பச்சைத் தமிழனடா.. உவை மயிராண்டியள் பெர்மிசன் தந்து.. நான் போய் கடலில இறங்கவோ.. ?உப்பிடியாப்பட்ட ஈனத்தொழில் எனக்கு வேண்டாமடா.. பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனையேன்” என்று சொன்ன மூன்றாவதோ நாலாவதோ வாரத்தில் சின்ராசு மாமா பட்டினியால் செத்துப்போனார்.

ஆசிரியர் தமிழரங்கம்

கதையின் முடிவு :

சின்ராசு மாமா ஓடிப்போய் குசினிக்கை ஒரு உலக்கையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினார். ஓடமுதல் அவர் சொன்னார். மீனவத் தோழர்களே.. நாம் நம்மைத்திரட்டி கூட்டுப்புரட்சியை ஏற்படுத்தி – அதனூடாக நமது கடலை நமக்காகப்பெறுவோம். நமது எதிரி ஆமிக்காரன் மட்டுமல்ல.. சம்மாட்டியாரும்தான்.” முதலில் எல்லோரும் சம்மாட்டியார் வீட்டுக்கு ஓடினார்கள். சம்மட்டியார் ஊரைவிட்டு ஓடிப்போயிருந்தார். பிறகு எல்லோரும் ராணுவ முகாமுக்கு ஓடினார்கள்.

ஆசிரியர் சத்தியக்கடதாசி

கதையின் முடிவு

சின்ராசு மாமா சொன்னார். “நானொரு உண்மையைச் சொல்லுறன் கேளுங்கோ . வெள்ளாளர் மீன்பிடிக்க கடலுக்கை போவதில்லை என்ற காரணத்தால தான் ஓம்.. அந்த ஒரு காரணத்தினால தான்.. இதுவரை காலமும் புலிகள் நாங்கள் சுதந்திரமா மீன்பிடிக்க ஒரு வழியைச் செய்து தரேல்ல. இப்ப ராணுவம் அதைச் செய்திருக்கு. அந்த ஒரு காரணத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். எங்கே எல்லோரும் பாடுங்கள்.. நமோ நமோ தாயே.. நம் சிறிலங்கா.. நல்லெழில் பூரணி.. நலங்கள் யாவும் நிறை மாமணி

http://sajeek.com/archives/397

ஊர் மொழியில் எழுதப் பட்டுள்ளது அழகாக இருக்கின்றது சஜீ... கதையை வாசிக்கும் போது கடலின் வாசம் மனசிற்குள் வந்து போனது எனக்கு. நல்ல அனுபவத் தொற்றலுக்குரிய மொழி

முடிவுகளில் நீங்கள் முதலில் எழுதிய முடிவுதான் யதார்த்தமானதாகவும் நல்லாவும் இருக்கு. அரசியல் கிண்டலுடன் தரப்பட்டு இருக்கும் மிகுதி 3 முடிவுகளும் உங்களுக்குள் இருக்கும் அரசியல் விமர்சகனை வெளியே காட்டுகின்றது.

நான் கடலை வைத்தும் அதில் காணாமல் போன என் நண்பனை வைத்தும் ஒரு சிறுகதையை வீட்டில் எழுத ஆரம்பித்து இருக்கும் நேரத்தில் அதே கடலை (கிளாலி) வைத்து நீங்களும் ஒரு கதை எழுதி இருப்பது ஆச்சரியமாக இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் நிழலி.

யதார்த்தம் எப்போதும் எந்த சித்தாந்தங்களுக்குள்ளும் கொள்கை முடிவுகளுக்குள்ளும் சிக்குப்பட்டு நிற்பதில்லை. அவரவர் தங்களுக்குத்தோதான முடிவுகளை விரும்பி பொருத்துவர். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கு சாத்திரி கொடுத்த முடிவு..

சின்ராசு மாமா சொன்னார் டேய் நானிப்ப சிகரற்ரெல்லோ பிடிக்கிறன்.. ஆனால் என்னமோ போடா சுருட்டு எண்டாலும் சரி பீடி எண்டாலும் சரி சிகரெற் எண்டாலும் சரி எதைப்பத்தினாலும் புகைதானடா வருகிது.. ஆனால் ஏதோ இப்ப கொஞ்சம் தொழில் நல்லாய் போய் கையிலை காசும் இருக்கிறபடியாலை காசை கூடுதலாய் கொடுத்து விலை கூடின புகையாய்விடுவம்..என்று சொல்லி விட்டு போனை வைத்ததும் ..சின்ராசு மாமா துரோகியாகிவிட்டாரென்று சயந்தனின் வயிறு புகைந்தது.... இது நல்லாயிருக்கா :wub:

உங்கள் கதை வடிவம் நன்றாக உள்ளது... யாழில் சில நல்ல எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது...

சின்ராசு மாமா என்கின்ற துரோகி....என்ற தலைப்பிற்கு நீங்கள் முடித்தவிதம் நிழலி அண்ணா சொன்னது போல யதார்த்தமாக இருக்கிறது... வரவேற்கத்தக்கதாகவும் இருக்கு...

முடிவு-1 தலைப்பிற்கு ஏற்றதாக தெரியவில்லை...

முடிவு-2 உங்கள் கதையின் நாயகனான சின்ராசு மாமாவின் சாதாரண குணாதிசியங்கள் அப்படி ஒரு முடிவை எடுக்க வைத்திருக்குமா?

முடிவு-3 சாதியை இழுத்து கதையை முடித்தால், பலதரப்பட்ட விமர்சங்களுக்கு முகம் குடுக்க வேண்டி வரும்.... கடைசியில் சயந்தன் என்கிற துரோகி என்று தான் முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து நடை மிக நன்றாக் இருக்கிறது .......மனிதன் ஒரு சமுதாய பிராணி. அவனை சுற்றியுள்ள காரணிகள் வெகுவாக் பாதிக்கிறது .நிலைத்து நிற்பதுவும் ....தடுமாறுவதும் அவரவர் குணாதிசயங்களை பொறுத்து. .....சந்தர்ப்பத்துக்கு ஏற்ப .....மாறு படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான கதை ஆனால் சில இடங்களில் காலக் கணிப்பு தடுமாற்றத்தைத் தருகின்றது. கதையுடன் இணைந்த முடிவே கதையுடன் இணைகிறது. காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கின்றது.இக்கதை கடந்த காலத்தில் ஆக்கிமிப்பு இராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தவுடன் யாழ்ப்பாணத்தில் மீனவர்களது மீன்பிடிப்பதற்கான அடையாள அட்டையை ஒட்டுக்குழுவும் இராணுவமும் பறித்து வைத்துவிட்டு அவர்களை ஊர்வலத்துக்கு வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தியது நினைவில் வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன், எழுத்தும் கலை உனக்கு வாய்த்திருக்கு. வேடிக்கைகள் வேண்டாம். அரசின் கொடுங்கொன்மைக்கு எதிரான எமது கோபத்தின் நலன்கள் மக்களுக்கும் அவர்கள் நலன்களிக்கு முன்னுரிமை கொடுப்பவர்கலுக்கு மட்டுமே. விடுதலை அமைபல்ல நமக்கு மக்களின் கனவுகள்தான் வேதம். மக்கள் ஏற்று ஆதரிக்கும் வகையில் செயல்படுகிற தருணங்களில் மட்டுமே விடுதலை அமைப்பு சாதகம். மக்களுக்கு துன்பம் செய்கிற தருணத்தில் அவர்களும் நமக்குப் பாதகம்தான். மக்களுக்குச் சாதகமான சத்தியம்தான் எழுத்தாளனின் தர்மம். வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தனின் எழுத்து நடை கதைகள் எல்லாமே சரியாக நன்றாக, ஒரு எழுத்தாளனை இனம் காட்டும் அதே வேளை, யாரையே எதையோ நோக்கி இந்த கதையின் கரு விரல் நீட்டுவதையும் என்னால் உணரமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு சொல்லுறன்ரா.. என்ரை தொழிலைப்பாழாக்கி என்ரை வள்ளங்களை எரிச்சு என்னோடு கடலுக்கை வந்த சிநேகிதங்களை சுட்டு எல்லாத்தையும் செய்தவன்.. இண்டைக்கு சரி நீங்கள் எல்லாம் கடலுக்கை போகலாம் என்று விட சரி மாத்தையா என்றுவிட்டு போறதை விட வேறை மனசை அரிக்கிற கொடுமை இல்லை.. ஆனா.. நீ சொல்லு.. நான் வேறை என்ன செய்ய… ?

ஈழத்தமிழர் முக்கால்வாசி பேரின் மனநிலை இப்படித்தான் இருக்கும் ...நல்ல தொரு கதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி நிலாமதி எழுஞாயிறு பறவைகள் புத்தன் சாத்திரியின் கருத்துக்களுக்கு நன்றி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வ.செ.ஐ ஜெயபாலன் அவர்களுக்கு. கருத்துக்களுக்கு நன்றி. அண்மையில் முகாமில் இருக்கும் கவிஞர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் புவியியல் அடிப்படையில் கணித்து அனுப்பிய அத்தனை கருத்துக்களும் கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்தும்.. கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என வருத்தமடைந்தார்..

சயந்தன், நல்லவேளை இதை புதினம் தமிழ்நெட்டுக்கு அனுப்பவில்லை!

புதினம்:

"தற்போது சின்னராசு மாமாவை லண்டனில் உள்ள உறவினர்கள் தொடர்புகொள்ள முயற்சித்தபோது எந்த பலனும் கிடைக்கவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி சோதனைச்சாவடி ஒன்றில் இவரிடமிருந்த சிகரட்டுப் பெட்டியை இராணுவச் சிப்பாய் ஒருவர் பறிக்க முயன்றதாகவும், அதில் ஏற்றபட்ட தகறாறின் பின்னரே இவர் காணமல் போனதாகவும் அறியமுடிகிறது!

Tamilnet:

Later Mr. Sinnarasu Mama found dead 500m from a check point which is located in the Analai Tivu (ãΝæĹåì TîVü) junction. Also few Cigarette Boxes found in the close proximity of the area which is commonly used by SLA.

சயந்தனுக்கு உண்மையில கடலுக்கை இறங்கி பழக்கம் இருக்கிதோ? கதையை படிக்க நானும் கடலுக்கை சினராசு மாமாவோட இறங்கினமாதிரி அனுபவம் வருகிது.

யாழில ஊர்ப்புதினத்தில கருத்து எழுதுற ஒவ்வொருத்தரும் கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு கதை என்று இதை பிரேரணை செய்கின்றேன். :D

சாத்திரி அண்ணை, உங்கட புகைச்சலையும் உணரக்கூடியதாக இருக்கிது. சாணக்கியன் அண்ணாவிண்ட கதைமுடிவும் பொருத்தமானதாய்தான் இருக்கிது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வ.செ.ஐ ஜெயபாலன் அவர்களுக்கு. கருத்துக்களுக்கு நன்றி. அண்மையில் முகாமில் இருக்கும் கவிஞர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் புவியியல் அடிப்படையில் கணித்து அனுப்பிய அத்தனை கருத்துக்களும் கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்தும்.. கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என வருத்தமடைந்தார்..

கவிஞருக்கு என் அன்பை சொல்லுங்கள். கணிப்புகள் பற்றி பேசினால் கதறி அழவேண்டிவரும். ஜெயசு சிக்கலில் இருந்து மீழ உதவியதற்க்கு நன்றி சொன்னபோதும் பின்னர் யாரையும் கேட்க்க மறுத்துவிட்டார்கள். ஜெனீவா பேச்சில் பாலா அண்ணன்ரின் பேச்சைக் கேட்டிருந்தாலே நாங்கள் எல்லோரும் சேர்ந்து சரித்திரம் படைதிருக்கலாம் சயந்தன். நம் இனத்தின் வாழ்வு அங்கேயே கோணி விட்டது. அதன்பிறகு ஏமற்றமும் விரக்தியும் கோபமுமாக கைகளுவும் மனப்பாண்மையில் இருந்த எரிக் சோல்கைமுடன் நீண்ட நேரம் பேசினேன். அதுதொடர்பாக வந்த எனது பி பி சி பேட்டியின் பின்னர் அவர்கள் கொஞ்சம் வலமைக்கு வர உதவியது. புராணங்களில் வருகிற கடவுள்கள்கூட ஆலோசனை கேட்டிருக்கிறார்களே. ரசிகர் மன்ற மனப்பாண்மையுடன் உள்ள பலருக்கு இதுபற்றி பேசினால் பலருக்கு கோபம் வரும். மனதுக்குள் அழுது செத்துக்கொண்டிருக்கிறோம் சயந்தன்.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5076930.stm

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இல்லாமல் கெடூம் -

இது திருவள்ளுவர் ஈழத் தமிழர்கழுக்காகவே எழுதி வைத்த குறள். இதன் பொருளை முன்னரும் நம்மவர் உணரவில்லை. இப்பகூட உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

Edited by poet

யாழில ஊர்ப்புதினத்தில கருத்து எழுதுற ஒவ்வொருத்தரும் கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு கதை என்று இதை பிரேரணை செய்கின்றேன். :D

இப்ப கதையிலதான் எல்லோரும் கருத்து எழுதினம் ,ஊர்புதினத்தில கருத்து எழுதிறது குறைவு,காரணம் புலிகளின் தாக்குதல் இல்லை விசில் அடிக்க ஆட்களும்மில்லை ,புலி ரசிகர்கள் விசில் அடிச்சாத்தானே மற்ற ஆட்கள் கோபம் வந்து எதிர் விசில் அடிப்பினம் பக்கம் பக்கமா ஓடும்.

கதையில துரோகி என்று வந்ததுதான் தாமதம் எல்லோரும் கதை பகுதியில நிக்கிறோம்.துரோகிக்கு வந்த மவுசு. :icon_idea::D:D

  • கருத்துக்கள உறவுகள்

கதையில துரோகி என்று வந்ததுதான் தாமதம் எல்லோரும் கதை பகுதியில நிக்கிறோம்.துரோகிக்கு வந்த மவுசு. :icon_idea::D:D

துரோகியென்ற சொல்லுக்கு மவுசு கூடவில்லை ஜில் தன் வலுவை அந்தச் சொல் இழந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையின் கடைசிப்பந்திக்கு முன்பதாக இதை எழுதிய சயந்தனுக்கு ஒரு டவுட் வந்தது. இந்தக்கதையை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமா என அவர் யோசித்தார். அவருக்குத் தெரிய அவரின்ரை எந்த நண்பரோ.. அல்லது நண்பரின் மகளோ எந்தப் பத்திரிகையிலும் வேலை செய்யவில்லை. இந்தக்கதையை யாரும் ஒரு பொருட்டாகத்தன்னும் மதிப்பினம் என்று சயந்தனுக்குத் தோன்றவில்லை. அவர் தனக்குத் தெரிந்த ஒரு பேப்பருக்கும் தெரியாத ரண்டு இணையத்தளத்துக்கும் இந்தக்கதையை அனுப்புவது என்று முடிவு செய்தார்.

எழுத்தாளர் சயந்தன் மூன்று ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு கடிதம் எழுதினார். அன்புள்ள ஆசிரியருக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கதையையும் மற்றும் தனி இணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிற இதன் முடிவும் உங்களது பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் தயவுசெய்து பிரசுரிக்கவும் என்று கடிதங்களை எழுதினார். பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் என்றதை தனியே அடிக்கோடிட்டார் சயந்தன்.

ஆசிரியர் : ஒருபேப்பர்.

கதையின் முடிவு :

சின்ராசு மாமா சொன்னார். “தம்பி நான் பச்சைத் தமிழனடா.. உவை மயிராண்டியள் பெர்மிசன் தந்து.. நான் போய் கடலில இறங்கவோ.. ?உப்பிடியாப்பட்ட ஈனத்தொழில் எனக்கு வேண்டாமடா.. பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனையேன்” என்று சொன்ன மூன்றாவதோ நாலாவதோ வாரத்தில் சின்ராசு மாமா பட்டினியால் செத்துப்போனார்.

ஆசிரியர் தமிழரங்கம்

கதையின் முடிவு :

http://sajeek.com/archives/397

சயந்தன் சின்னராசுமாமாவோடு வாழ்ந்த உணர்வை உங்கள் கதை முழுவதும் கதைசொல்லிச் செல்கிறது. சயந்தனின் கதைகளுக்குப் பின்னால் யாராவது ஒருவரின் அல்லது பலரின் வாழ்வு உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த வரிசையில் இதுவரையான கதைகளிலிருந்து மாறுபட்டு சின்னராசுமாமாவின் கதை கடல்வாழ்வோடு கலந்திருக்கிறது.

2000ம் ஆண்டு அறிமுகமான சயந்தன். உயிர்ப்பு சஞ்சிகையூடாகவும் சரி இணையவலையூடாகவும் சரி தனித்தவமான கருத்தும் எழுத்தும் கொண்டவன்.

தனித்துவமான சயந்தன் உயிர்ப்பில் சுதந்திரமான சயந்தன் சற்லைட்டு வைச்சு அவதானிக்கப்படுவதுதான் பாவமாயிருக்கு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (sayanthan @ Jul 22 2009, 12:22 PM) *

இந்தக்கதையின் கடைசிப்பந்திக்கு முன்பதாக இதை எழுதிய சயந்தனுக்கு ஒரு டவுட் வந்தது. இந்தக்கதையை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமா என அவர் யோசித்தார். அவருக்குத் தெரிய அவரின்ரை எந்த நண்பரோ.. அல்லது நண்பரின் மகளோ எந்தப் பத்திரிகையிலும் வேலை செய்யவில்லை. இந்தக்கதையை யாரும் ஒரு பொருட்டாகத்தன்னும் மதிப்பினம் என்று சயந்தனுக்குத் தோன்றவில்லை. அவர் தனக்குத் தெரிந்த ஒரு பேப்பருக்கும் தெரியாத ரண்டு இணையத்தளத்துக்கும் இந்தக்கதையை அனுப்புவது என்று முடிவு செய்தார்.

எழுத்தாளர் சயந்தன் மூன்று ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு கடிதம் எழுதினார். அன்புள்ள ஆசிரியருக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கதையையும் மற்றும் தனி இணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிற இதன் முடிவும் உங்களது பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் தயவுசெய்து பிரசுரிக்கவும் என்று கடிதங்களை எழுதினார். பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் என்றதை தனியே அடிக்கோடிட்டார் சயந்தன்.

ஆசிரியர் : ஒருபேப்பர்.

கதையின் முடிவு :

சின்ராசு மாமா சொன்னார். “தம்பி நான் பச்சைத் தமிழனடா.. உவை மயிராண்டியள் பெர்மிசன் தந்து.. நான் போய் கடலில இறங்கவோ.. ?உப்பிடியாப்பட்ட ஈனத்தொழில் எனக்கு வேண்டாமடா.. பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனையேன்” என்று சொன்ன மூன்றாவதோ நாலாவதோ வாரத்தில் சின்ராசு மாமா பட்டினியால் செத்துப்போனார்.

ஒரு பேப்பர் பொறுப்பாசிரியரின் முடிவு:- சின்னராசுமாமாவுக்கு லண்டனிலிருந்து போன தொலைபசியழைப்பு. மாமா நீங்கள் கவரிமான் உவங்களிட்டை பெர்மிஷன் வாங்கி மீன்பிடிச்சா நான் ஒரு பேப்பராலையே உங்களை அடிப்பேன். பூச்சிமருந்து வேணுமெண்டா நான் எனது கூட்டமைப்பு பாராளுமன்ற நட்பிடம் கொடுத்தனுப்புகிறேன். நீங்கள் வீரமாய்ச் சாகவேணும். கவரிமானாய் சின்னராசுமாமாவின் உயிர் போனதாய் பொறுப்பாய் தலைப்புச் செய்திபோடுவேன். இல்லாட்டி நீங்கள் ஒருதருக்கும் தெரியாமல் செத்துப்போவியள்.

சின்ராசுமாமா யோசிக்கத் தொடங்கினார். பொறுப்பாசிரியரிடமிருந்து தப்பிக்கவும் முடியாமல் அவரது சட்லைட்கள் எல்லாம் சின்னராசுமாமாவின் தலைக்கு மேலால் சுற்றிக்கொண்டிருந்தது. பொறுப்பாசிரியரின் நட்பின் இறுக்கங்கள் பொலிடோல் போத்தலுடன் வாசலில் வந்து நின்றனர்......மாமாவின் முடிவுக்காக பொறுப்பாசிரியர் தொலைபேசியில் காத்துக்கொண்டிருந்தார்..... :icon_idea:

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன் சற்லைட்டு வைச்சு அவதானிக்கப்படுவதுதான் பாவமாயிருக்கு

சுவிசில கிரிமினல்களின் உடலில சிப் வைத்து அவர்களின் நடமாட்டம் அவதானிக்கப்படுவது வழமையாம். சனம் அப்பிடியெல்லோ ஏதோ என நினைக்கப்போகிறார்கள்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம்.

கதை வடிவம்.

அனைத்தும் அழகு.

எனக்குக் கடல் பயமாயிருந்தது. கடலுக்கை சுழியெல்லாம் இருக்காம். அதுக்கை அம்பிட்டால்.. ஆளைச்சுழற்றியடித்து உள்ளை அமத்திப்போடுமாம்.

இப்படிச்சொல்லி சொல்லியே பலரை நீச்சல் பழக விடாமல் ஆக்கிவிட்டார்க்ள்.

இப்படிச்சொல்லி சொல்லியே பலரை நீச்சல் பழக விடாமல் ஆக்கிவிட்டார்க்ள்.

ஸ்விம்மிங் பூல்லில் சுழியும் இல்லை ஒண்டும் இல்லை, நீச்சல் பழக்கமே...

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் படைத்திருக்கிறீர்கள். அதிலும் 3 ஊடகங்களில் எப்படி முடிவு வந்தால் வெளியிடுவார்கள் என்பது மிகவும் நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட ஆக்கம் நல்லாத்தான் இருக்குது, ஆனா அந்த மூண்டு பத்திரிகைக்காரங்கட முடிவு தான் கொஞ்சம் கண்ணைக்கட்டுது

அதாவது எங்கட ஈழத்தமிழ் வசன நடையில இருக்குது.

உண்மையைச் சொல்லப்போனா கடலின்ர மணம் இன்னும் மணக்குது

வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.