வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
14 Mar 2026, 6:43 PM
கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஞானபீட அமைப்பு வைரமுத்துவுக்கு ஞான பீட விருதை இன்று அறிவித்துள்ளது.
சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் 1975-ல் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருதைவிட, தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடமாகவே கருதுகிறேன்” என்றார்.
கடந்த காலங்களில் ஞானபீட விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்துத் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, “தகுதியுள்ள படைப்புகள் இருந்தும் காலதாமதம் ஆனது வருத்தமளித்தாலும், இப்போது வழங்கப்பட்டிருப்பது நீதி நிலைநாட்டப்பட்டதாக உணர்கிறேன். இந்த விருது என் பேனாவுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே என் எழுத்துக்கள் இயங்கும்” என்றார்.
இந்நிலையில் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். ” தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது!
காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது!
தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே வைரமுத்து 7 முறை தேசிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதையும், மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://minnambalam.com/jnanpith-award-for-vairamuthu/
By
கிருபன் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.