Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லால் அங்கிள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லால் அங்கிள்..

கண்டியில் இருந்த தன் வீட்டில் லால் கட்டைக்காற்சட்டையும் அரைக்கை ரீ சேட்டும் போட்டு கதிரையில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்ச்சிப்பெட்டியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.அருகிலிருந்த சோபாவில் சஞ்சையும் துசியும் சதீஸும் எதுவும் பேசாது அமைதியாக தொலைக்காட்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்தனர்.மூவர் முகத்திலும் கவலையுடன் கூடிய அமைதி குடிகொண்டிருந்தது.தெரணை ரீவியில் செய்தியறிக்கையில் படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறந்த உடலை கைப்பற்றிவிட்டதாகக்கூறி ஒரு வீடியோவை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் பயத்துடன் உட்கார்ந்திருந்தாலும் பொடியங்கள் மூவர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது.லாலிற்க்குப் பயந்து லாலின் முன்னால் அவர்கள் யாரும் அரசியல் கதைப்பதில்லை.இயக்கம் சண்டையில் வெற்றிபெற்று ஆமிக்குப் பெரிய இழப்பென்றால் றூமைப்பூட்டி விட்டுத்தான் புழுகத்துடன் சம்பவத்தைப்பற்றி தாங்கள் அறிந்த செய்திகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வார்கள்.அண்மைக்காலமாக அப்படி மகிழக்கூடிய எந்தச் செய்திகளும் வராமையால் எல்லோர் முகங்களிலும் ஒருவித சோகம் அப்பியிருந்தது.இந்த நிலையில்தான் எல்லாம் முடிந்துவிட்டதாக பிரபாகரனின் உடலைக்காட்டி தெரணையில் செய்தி போய்க்கொண்டிருந்தது.தொடர்ந்த செய்தியில் விடுதலைப்புலிகளின் அத்தியாயம் முடிந்துவிட்டதாகவும் நாடு முழுவதும் எஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்களை சரணடையும்படியும் கைது செய்யப்பட்டால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் அவர்களைக்காட்டித்தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தல் போய்க்கொண்டிருந்தது.

***

லாலின் முழுப்பெயர் லால் பொல்கஸ்த்தெனிய.லால் ஆமிக் கப்டனாகப் பணியாற்றியவன்.அவன் வலது கையில் மணிக்கட்டுக்கும் உள்ளங்கைக்கும் இடையே குண்டுபட்ட தழும்பு பெரிய ஒரு பள்ளமாக இருந்தது.லால் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தின் எல்லாப்பகுதிகளிலும் பணியாற்றி இருந்தான்.ஆகாய கடல்வெளிச் சண்டை ஆனையிறவில் நடைபெற்றபோது லால் ஆனையிறவில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தான்.அப்பொழுது நடைபெற்ற சண்டை ஒன்றில்தான் லாலின் வலது கையில் குண்டுபட்டது.லால் பலாலியில் இருந்து ராணுவம் யாழ்ப்பாணத்திற்க்கு முன்னேறியபோது தான் எடுத்த படங்களை எல்லாம் இப்பொழுதும் பத்திரமாகச் சேகரித்துவைத்திருந்தான்.அவனிடம் நல்லூர்கோவில் வீதியில் ராணுவத்தினர் ராங்கியுடன் நுழைந்தபோது எடுத்தபடம்,அரியாலையில்,தனங்களப்பில்,வல்வெட்டித்துறையில்,ஆனையிறவில் என்று யாழ்ப்பாணத்தின் அநேகமான பகுதிகளில் எடுத்த படங்கள் இருந்தன.ஏனெனில் அவன் யாழ்ப்பணத்தின் ஏறக்குறைய அனைத்து இடங்களிலுமே பணியாற்றியிருந்தான்.அவனிடமிருந்த படங்களின் மூலம் யாழ்ப்பாணத்தின் அப்போதைய இடங்களை மீட்டிப்பார்க்கக்கூடியதாக இருந்தது.சஞ்சய் அடிக்கடி அந்தப்படங்களைக்கேட்டு வாங்கிப்பர்த்துக்கொள்வான்.பார்த்து முடியும்வரை எங்கும் போகாமல் கூடவே இருந்து அத்தனை படங்களையும் திருப்பி எடுத்துச்செல்வான் லால்.ஒரு படம்கூடத் தவறவிடமாட்டான்.லால் ஒரு தீவிர ஜக்கியதேசியக் கட்ச்சி ஆதரவாளன்.கண்டியில் கிட்டத்தட்ட முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் தீவிர ஜக்கியதேசியக்கட்ச்சி ஆதரவாளர்களாகவே இருந்தனர்.லாலிற்க்கு தமிழர்கள்மேல் மிகவும் அன்பு இருந்தது.அப்பாவித் தமிழர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்படும் செய்தி தொலைக்காட்ச்சியில் வரும்போதெல்லாம் அரசாங்கத்தை திட்டுவான்.கொட்டியாவை விட்டுவிட்டு அலுவல் நிமித்தம் வந்த அப்பாவியளைக் கைது செய்கிறார்கள் என்று ஏசுவான்.லாலின் வீடு மூன்று தளங்களைக் கொண்டிருந்தது.கீழ் தளத்தை ஒரு மலையகத் தமிழ்க்குடும்பத்திற்க்கு வாடகைக்கு விட்டிருந்தான்.இரண்டாவது தளத்திலேயே அவனிருந்தான்.அந்தத் தளத்தில் இருந்த ஒரு அறையை கண்டியில் படிக்கவரும் தமிழ் முஸ்லீம் மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தான்.அந்தத் தளத்தில் மாணவர்களை மட்டுமே வாடகைக்கு அமர்த்துவான்.இந்த இரண்டாவது தளத்திலேயே சிலவருடங்களாக துசி,சஞ்சய்,சதீஸ் மூவரும் வாடகைக்கு தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தனர்.மூவரையும் தனது பிள்ளைகள் போலவே நடத்தினான்.அவர்களில் யாராவது பொலீஸ் அல்லது ஆமியிடம் பிடிபட்டால் அடுத்த நிமிடம் லால் ஆஜராகி அவர்களை மீட்டுக்கொண்டுவருவான்.மூன்றாவது தளத்தை இந்தியாவில் இருந்து வந்த தமிழ் புடைவை வியாபாரிகளுக்கு வாடகைக்கு கொடுத்திருந்தான். லாலின் தற்போதைய மனைவி ஒரு மலையகத் தமிழ்ப்பெண்.லாலை அங்கிள் என்றும் லாலின் தமிழ் மனைவியை அன்ரி என்றுமே மூவரும் அழைப்பார்கள்.லால் ஆமியை விட்டு விலகியதற்கும் இரண்டாவது திருமணமாக தமிழ்ப்பெண் ஒருவரை மணம் முடித்ததிற்கும் சம்பந்தமிருந்தது.

***

லாலின் மூத்த மனைவி ஒரு சிங்களப்பெண்.லாலின் உறவுக்காறப் பெண்ணும்கூட.அவளை லால் காதலித்துத்தான் திருமணம் செய்திருந்தான்.அவள் மிகவும் அழகானவள்.ரீவி நடிகையைப்போல் இருப்பாள்.லால் திருமணம் செய்து கொஞ்ச நாளிலேயே பணி நிமித்தம் யாழ்ப்பாணம் போகவேண்டியிருந்தது.அவன் ஒவ்வொரு வருடமும் சில மாதங்களே வீட்டில் தங்கியிருக்கக்கூடியதாக இருக்கும்.மற்றைய நாட்களில் பணி நிமித்தம் யாழ்ப்பாணத்திலேயே தங்கி நிற்கவேண்டியிருந்தது.இந்தக்காலப்பகுதியிலேயே லாலின் சிங்கள மனைவிக்கும் பக்கத்து வீட்டு சிங்கள இளைஞ்ஞனுக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது.இதை ஊரில் இருந்த லாலின் நண்பர்கள் அவனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தனர்.முதலில் இதை நம்ப மறுத்தவன் பின்னர் அவனது சகோதரர்களும் உறுதிப்படுத்தியபொழுது பெருங்கோபத்தில் இருந்தான்.வீட்டிற்க்குப்போய் தனது துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக்கொல்ல முடிவெடுத்து லீவு கேட்டு விண்ணப்பித்திருந்தான்.இவன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்த நேரம் வடபகுதியில் மிகமோசமான யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.எல்லா இராணுவத்தினரது விடுமுறையும் இரத்துச்செய்யப்பட்டிருந்தது.இவனுக்கும் விடுமுறை கிடைக்கவில்லை.கடுப்பான லால் உடனடியாக தன் உடல் நிலைகாரணமாக ராணுவத்தை விட்டு விலகுவதாக கைக்காயத்திற்குரிய மெடிக்கலையும் இணைத்து விண்ணப்பக்கடிதம் அனுப்பியிருந்தான்.பலவருடங்களாக லால் இராணுவத்தில் இருக்கின்றமையாலும் அவனுடைய சிறந்த சேவையின் அடிப்படையிலும் அவனுக்கு ராணுவத்தில் இருந்து விலக அனுமதி கிடைத்தது.லால் இராணுவத்தை விட்டு விலகிய செய்தியை லாலின் சிங்கள மனைவி எப்படியோ அறிந்துவிட்டாள்.உடனடியாகவே தனது சிங்களக் காதலனுடன் கொழும்பில் எங்கோ தலைமறைவாகிவிட்டிருந்தாள் அவள்.வீட்டில் தனித்திருந்த லால் சமையலுக்கும் வீட்டுவேலைகளைக் கவனிக்கவும் மலையகத் தமிழ்ப்பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்தான்.பின்னாளில் அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டான்.

***

சஞ்சய் மிகவும் அமைதியானவன்.எந்நேரமும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பான்.அவனின் நடவடிக்கைகள் எப்பொழுதும் மர்மமானதாகவே இருக்கும்.அவன் தனது சொந்த இடம் யாழ்ப்பாணம் என்று சொல்லியிருந்தான்.ஆனால் அவனிடம் கொழும்பு முகவரியுடைய அடையாள அட்டை ஒன்றும் யாழ்ப்பாண முகவரியுடைய அடையாள அட்டை ஒன்றும் இருந்தது.சஞ்சய் நன்றாகச் சிங்களம் கதைப்பான்.கண்டியில் இருக்கும்போது திடீர் திடீரென்று காணாமல்ப் போவான் சஞ்சய். போகும்போது கொழும்பு போவதாக சொல்லிவிட்டுப்போவான்.கொழும்பில் தனக்கு கடையிருப்பதாகச் சொல்லியிருந்தான்.இரண்டுமாதம் கண்டியில் என்றால் ஒரு மாதம் கொழும்புக்குச் சென்றுவிடுவான்.லால் அவனை ஒரு இடத்தில் ஒழுங்காக இருந்து படிக்கும்படியும் இப்படி அலைந்து திரிவதால் அவனது படிப்புக் கெட்டுவிடப்போகிறதென்றும் அடிக்கடி அறிவுரை சொல்லுவான்.ஆனாலும் சஞ்சய் நிறுத்தாமல் கொழும்பு போய் வந்து கொண்டிருந்தான்.

***

துசி மன்னார்ப்பொடியன்.நன்றாகத்தண்ணியடிப்பான்.படிப்பு சுத்தமாக அவனுக்கு ஏறாது.இரண்டு வசனம் பாடமாக்க அவனுக்கு இரண்டு கிழமை எடுக்கும்.துசியின் புண்ணியத்தில் ரூமில் இருந்த மற்ற இருவருக்கும் யாழ்ப்பாண பலகாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டிருந்தன.மன்னாரில் இருந்து கொழும்புவரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.வவுனியாவில் இருந்து கண்டிக்கு நேரடி பஸ் இருந்தது.கிழமைக்கு ஒருமுறை துசியின் அம்மா மன்னாரில் இருந்து வவுனியாவிற்க்கு வந்து வவுனியாவில் இருந்து கண்டிபோகும் பஸ் டிறைவருக்கு பணம் கொடுத்து பார்சல் அனுப்பி விடுவார்.இவர்கள் மூவரும் கண்டி பஸ்ராண்டில் காவலிருந்து பார்சல் பைக்கற்றுடன் ரூமிற்க்கு வருவார்கள்.பார்சலுக்குள் வித விதமான சாப்பாடுகள் செய்து அனுப்பியிருப்பார் துசியின் அம்மா.இவர்களுடன் சேர்ந்து லாலும் பார்சலில் பங்கெடுத்துக்கொள்வான்.ஒருமுறை துசி நன்றாகத்தண்ணியடித்துவிட்டு நல்ல போதையில் வந்திருந்தான்.இரண்டாவது தளத்திற்க்கு வரும் படிக்கட்டை அவனால் ஏறமுடியாமல்போகவே கீழ்தளத்திலேயே படிக்கட்டுக்குப் பக்கத்தில் தூங்கிவிட்டான். நல்லவேளை வெளியே போயிருந்த சஞ்சய் திரும்பிவந்தபோது துசியைக்கண்டு கைத்தாங்கலாக மேலே கூட்டிவந்திருந்தான். லாலினதும் அன்ரியினதும் கண்ணில் படாமல் துசியை அழைத்துச்செல்ல மேற்கொண்ட சஞ்சயின் முயற்ச்சி பாதிதான் வெற்றியளித்திருந்தது.லால் காணவில்லை ஆனால் அன்ரி பார்த்துவிட்டார்.அன்று முழுவதும் அன்ரி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.துசி சத்தி எடுத்துக்கொண்டிருந்தான்.துசிக்கு தலையில் தேசிக்காய் தடவி முழுகவைத்து தூங்கவைத்திருந்தனர்.அடுத்தநாள் விடியத்தான் அன்ரியின் அர்ச்சனையுடன் துசி கண்விழித்தான்.அன்ரியின் காலில் விழாத குறையாக துசி மன்னிப்புக்கேட்டான்.இனிமேல் தான் குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தான்.அன்ரி நல்லவர்.லாலிடம் இதைப்பற்றிச் சொல்லவில்லை.இப்படித்தான் ஏடாகூடமாக ஏதாவது செய்து அடிக்கடி அன்ரியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருப்பான் துசி.

***

சதீஸ் மட்டக்களப்பு பொடியன்.மட்டக்களப்பில் இயக்கம் பிளவுபட்டு பிரச்சனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுதான் அந்த ரூமிற்க்கு வந்திருந்தான்.மலை நாட்டில் எங்கேயோ ஒரு வீட்டில் தங்கியிருந்த மட்டக்களப்புப்பொடியளை கூட இருந்தவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டுப் போனதாக செய்திகள் வெளிவந்த சிலநாட்களிலேயே சதீஸ் அந்த ரூமிற்க்கு வந்திருந்தான்.துசிக்கு சதீஸ் வந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை.மட்டக்களப்பு பொடியளை சுட்ட செய்தியே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.பயத்தில் அவனுக்கு காய்ச்சல் வந்திருந்தது.தானோ வடக்கு சதீஸோ மட்டக்களப்பு.ஒருவேளை அவர்களின் ஆட்களோ..?என்னையும் பழிவாங்கும் முகமாகப் போட்டுவிடுவார்களோ..?இரவுகளில் பலபல கற்பனைகள் ஒட்டிக்கொண்டிருந்தன துசிக்கு.அந்தக் கிழமை முழுவதும் அவன் தூங்கவேயில்லை.தூங்குவதுபோல் பாசாங்கு செய்துகொண்டு போர்வைக்குள்ளால் சதீஸையே பார்த்துக்கொண்டிருப்பான்.அவனோ நிம்மதியாகக் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருப்பான்.அந்தக்கிழமை முழுவதும் துசி குழப்பத்திலேயே இருந்தான்.அந்தமாதம் பார்த்து சஞ்சய் வேறு கொழும்புக்கு போய்விட்டான்."மோடன் லாலுக்கு என்ன தெரியும்..?விசரன் இந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கேக்கையே ஒரு மட்டக்களப்புபொடியனை ரூமில போடுவான்?அவனுக்கென்ன மாதம் முடியக்காசுவரும் நானெல்லோ பயத்திலை செத்துக்கொண்டிருக்கிறன்" மனதிற்க்குள் திட்டிக்கொண்டான் துசி.அந்த மாதம் முடிய துசிக்கு சதீஸ்மேல் கொஞ்ச நம்பிகை வந்திருந்தது.ஒருமுறை சதீஸின் அம்மா வந்துபோனபோதுதான் துசிக்கு சதீஸின்மேல் முழு நம்பிக்கை வந்தது அவன் ஒரு பிரச்சனையுமில்லாத பொடியன் என்று.பின்னர் சதீஸும் அவர்களில் ஒருவன் ஆகிவிட்டிருந்தான்.

***

அன்றுமுழுவதும் தெரணை செய்தியைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தனர் எல்லோரும்.அன்ரி கோழிக்கறியுடன் சோறு சமைத்திருந்தார்.துசியைத்தவிர யாரும் சாப்பிடவில்லை.லாலும் சாப்பிடவில்லை.எல்லோரும் ஒருவித சோகத்துடன் இருந்தனர்.துசி மட்டும் அவசராவசரமாக சாப்பிட்டுவிட்டு எங்கோ போகத்தயாராகிக்கொண்டிருந்தான்.மாலை இரண்டு ஜீப் நிறைய பொலிஸாரும் சி.ஜ டியினரும் லாலின் வீட்டின் முன்னால் வந்திறங்கியிருந்தனர்.தொபுதொபுவென உள்நுழைந்த பொலிஸார் லாலினதும் சஞ்சயினதும் சதீஸினதும் கையில் விலங்குமாட்டி பொலிஸ்நிலையத்திற்க்கு இழுத்துச்சென்றனர்.லாலுக்கு குழப்பமாக இருந்தது.தான் ஒரு ஓய்வுபெற்ற ஆமிக்கப்டன் என்று சொல்லியும் பொலிஸார் எதையும் கேட்பதாக இல்லை.உன்னைப்போன்ற ஓய்வு பெற்ற ஆமிக்காரர்கள்தான் சிங்களப்புலியாகி புலிக்கு வேலை செய்தனியள் என்று முறாய்த்தபடி இழுத்துச்சென்றனர்.பொலிஸ் நிலையத்தில் துசி சாராய்ப்போத்தலுடனும் கையில் ஒரு பையுடனும் உட்கார்ந்திருந்தான்.இவர்களைக்கண்டதும் தலையைக் குனிந்துகொண்டான்.பின்னர் லாலை நீதிமன்றம் அழைத்துச்சென்றனர்.மற்றவர்களின் நிலை லாலுக்குத்தெரியவில்லை.நடந்த வழக்கில் கொட்டியாவை இவ்வளவுகாலமும் வீட்டில் வைத்திருந்ததிற்கும் ராணுவத்திற்க்கு தகவல் சொல்லாததிற்க்கும் சேர்த்து ஒரு ஓய்வுபெற்ற ராணுவ கப்டனாக இருந்தும் நாட்டிற்க்கு துரோகம் செய்ததற்க்காக லாலிற்க்கு ஜந்துவருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்.

***

சிறைக்கம்பிகளின் பின்னால் நின்றுகொண்டிருந்தான் லால்.பல செய்திகளுடன் லாலைப்பார்க்க வந்திருந்தார் அன்ரி.பணத்துக்கு ஆசைப்பட்டு எல்லோரையும் துசிதான் காட்டிக்கொடுத்திருந்தான்.துசி இப்பொழுது மன்னாரில் இன்னுமொரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறானாம்.சஞ்சய் இயக்கத்தின் ஒரு கொழும்பு முகவராம்.பலரைக் காட்டிக்கொடுத்ததுடன் பல இடங்களில் இருந்த இயக்கப்பணத்தையும் எடுத்துக்கொண்டு சுவிஸிற்க்குப்போய் அசைலமடித்திருக்கிறான்.சதீஸ் லால்தான் தங்களை எல்லாம் வைத்துப்பராமரித்ததாகவும் லாலிற்க்கும் இயக்கத்திற்க்கும் ஸ்றோங்க் தொடர்பு இருந்ததாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தான்.அவன் வாக்குமூலப்படியே லாலிற்க்கு ஜந்துவருடத் தண்டணை கிடைத்தது.சதீஸும் இப்ப சுவிசில் நிற்கிறான்.லால் மட்டும்தான் சிறைக்கம்பிக்குப் பின்னால் நிற்கிறானாம்.கேட்கக்கேட்க லாலுக்கு கடைசியாக தெரணை செய்தியில் பார்த்த காட்ச்சிகள் கண்முன் விரிந்தன.வீடியோவில் தெரிந்த பிரபாகரன் எழுந்து உட்காந்திருந்தார்.பிரபாகரன் உடலைச் சுற்றி நின்ற சிங்கள ராணுவத்தினர் மறைந்து தமிழர்களாக மாறியிருந்தனர்.சுற்றி நின்ற எல்லோரும் எப்படிக் குழிபறிக்கலாம் என்று சிந்திப்பதுபோல் இருந்தது லாலுக்கு.ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு சுயநலச்சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.பாவம் இவை எவற்றையும் சிந்திக்காது பிரபாகரன் முகத்தில் மட்டும் தமிழினத்தைப்பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது."நன்றிகெட்ட தமிழன்"லால் சிங்களத்தில் முணுமுணுத்தபடி தன் சிறைக்கூண்டை நோக்கி நடந்தான்..

(இந்த வார ஒரு பேப்பருக்காக எழுதியது..ஒருபேப்பருக்கு எழுதச்சொல்லி ஊக்குவித்த எனது வாத்தியார் சாத்திரி அண்ணைக்கு நன்றிகள்...)

Edited by சுபேஸ்

எப்பொழுது ஒருவன் ஒருநாணயத்தின் மறுபக்கத்தையும் பார்கவெளிக்கிடுகின்றானோ , அவனே உணர்சிகளுக்கு அபால்பட்டு உணர்வு ரீதியாகப் பக்குவப்பட்ட மனிதனாகின்றான் . அந்தவகையில் உங்களது இந்தக் கதை நகர்தப்பட்டாலும் , வாசிக்கும் பொழுது கற்பனை வறட்சி காணப்படுகின்றது . அதில் கொஞ்சம் கவனம் எடுங்கள் . எழுத எழுதத் தான் சொல்லாட்சி கூடும் . வாழ்த்துக்கள் :) :) :) .

Edited by komagan

தொடர்ந்தும் எழுதுங்கோ... நன்றாக இருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் இழுபட்ட மாதிரி இருக்கு மற்றும் படி நல்லாயிருக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன்...பத்திரிகைக்காக எழுதியதால் நான் நிறையவற்றை எழுதவில்லை..ஒருபக்கத்துள் அமையுமாறு கதை இருக்கவேண்டியிருந்ததால் சொல்லவந்ததை சுருக்கமாக சொல்லி முடித்துவிட்டேன்..யாழுக்கா எழுதியிருந்தால் இன்னும் எழுதி கதையை ஒரு கோட்டில் இணைத்திருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் பத்திரிகைகள் சஞ்சிகைகளிற்கு எழுதும் போது அவர்கள் ஒதுக்குகின்ற அளவு இட கட்டுப்பாடுகள் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். அதில் எங்கள் மனதில் நினைப்பதையெல்லாம் எழுதிவிட முடியாது. அதற்கு எழுத கொஞ்சம் முயற்சி செய்தால் போதும் அடுத்த எழுத்தில் கலக்குங்கள். உங்களிற்கான அறிமுகம் கொடுக்கப்பட்டுவிட்டது. இனி இங்கிலாந்தில் சுபேசிற்கு ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு எழுதவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமியில் இருந்த சிங்களவன் மட்டும் நல்லவன் நாட்டுக்காக போராட்டத்தில் பங்கு பற்றிய அனைத்துப் போராளிகளும் துரோகிகள்

சுபேஸ் நன்றாக எழுதிகிறீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்குமோ தெரியவில்லை, எழுதியதைத் திருப்பிப் திருப்பி வாசித்து, திருத்தி எழுத இன்னும் மெருகேறும். வாழ்த்துக்கள்.

ரதி, கொஞ்சம் "சிங்களவர்கள் எல்லாரும் கெட்டவர்கள்" என்பதிலிருந்து குறைந்த பட்சம் "எல்லாச் சிங்களவரும் கெட்டவர்கள் அல்ல" என்ற நிலைக்கு வாருங்கள். அதற்காக சிங்கள அரசாங்கமோ அல்லது சிங்கள வெறியரோ தமிழருக்குச் செய்த அட்டூழியங்களை மறக்க வேண்டும் என்பதல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகேட்ட சிங்களவனும் உண்டு ..நன்றி கேட்ட தமிழனும் உண்டு...

பொன்சேகாவுக்கு குழி பறித்த மகிந்தா அன் கோ வும் சிறிலங்காவிலதான் இருக்கினம்...

சுபேஸ் கதைக்கு நன்றிகள்.....மினிசு ஒக்கம ஏவாகே தமாய்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபோஸ் பகிர்வுக்கு, நல்லா எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள். என்னுடைய கருத்தும் நான் பழகிய பல சிங்களவர்கள் நல்லவர்களே ஒரு சிலரை தவிர

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், நல்ல கரு. கோர்வையாக வரவில்லை என்று நினைக்கின்றேன். செழுமையாக எழுத உங்களால் முடியும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதானே. எனவே உங்கள் கதைகளை திருத்தி எழுதினால் எதிர்காலத்தில் நல்லதோர் தொகுப்பைக் கொண்டுவரமுடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் எழுதுங்கோ... நன்றாக இருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் இழுபட்ட மாதிரி இருக்கு மற்றும் படி நல்லாயிருக்கு.....

நன்றி தர்மராஜ்..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்  பத்திரிகைகள் சஞ்சிகைகளிற்கு எழுதும் போது அவர்கள் ஒதுக்குகின்ற  அளவு இட கட்டுப்பாடுகள் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். அதில் எங்கள் மனதில்   நினைப்பதையெல்லாம் எழுதிவிட  முடியாது. அதற்கு எழுத  கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்  அடுத்த எழுத்தில் கலக்குங்கள். உங்களிற்கான  அறிமுகம்  கொடுக்கப்பட்டுவிட்டது. இனி இங்கிலாந்தில்  சுபேசிற்கு ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு  எழுதவேணும்.

நன்றி வாத்தியார்..கட்டாயம் செய்கிறேன்...

சுபேஸ் நன்றாக எழுதிகிறீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்குமோ தெரியவில்லை, எழுதியதைத் திருப்பிப் திருப்பி வாசித்து, திருத்தி  எழுத இன்னும் மெருகேறும். வாழ்த்துக்கள்.

ரதி,  கொஞ்சம் "சிங்களவர்கள்  எல்லாரும் கெட்டவர்கள்"  என்பதிலிருந்து குறைந்த பட்சம் "எல்லாச் சிங்களவரும் கெட்டவர்கள் அல்ல" என்ற நிலைக்கு வாருங்கள். அதற்காக சிங்கள அரசாங்கமோ அல்லது சிங்கள வெறியரோ தமிழருக்குச் செய்த அட்டூழியங்களை மறக்க வேண்டும் என்பதல்ல .

நன்றி கறுவல்..நிச்சயமாக..அடுத்ததவார இணைப்பை பாருங்கள்...

நன்றிகேட்ட சிங்களவனும் உண்டு ..நன்றி கேட்ட தமிழனும்  உண்டு...

பொன்சேகாவுக்கு குழி பறித்த மகிந்தா அன் கோ வும் சிறிலங்காவிலதான் இருக்கினம்...

சுபேஸ் கதைக்கு நன்றிகள்.....மினிசு  ஒக்கம ஏவாகே தமாய்...

நன்றி புத்தன்.. :)

நன்றி சுபோஸ் பகிர்வுக்கு, நல்லா எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள். என்னுடைய கருத்தும் நான் பழகிய பல சிங்களவர்கள் நல்லவர்களே ஒரு சிலரை தவிர

நன்றி உடையார் கருத்துப்பகிர்விற்க்கு...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்,  நல்ல கரு. கோர்வையாக வரவில்லை என்று நினைக்கின்றேன். செழுமையாக எழுத உங்களால் முடியும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதானே. எனவே உங்கள் கதைகளை திருத்தி எழுதினால் எதிர்காலத்தில் நல்லதோர் தொகுப்பைக் கொண்டுவரமுடியும்.

நன்றி கிருபன் அண்ணா..நிச்சயம் செய்கிறேன்..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமியில் இருந்த சிங்களவன் மட்டும் நல்லவன் நாட்டுக்காக போராட்டத்தில் பங்கு பற்றிய அனைத்துப் போராளிகளும் துரோகிகள்

ரதி ஏன் அந்தக்கோணத்தில் பார்க்கிறீர்கள்..போராட்டத்தை காலங்காலமாக எதிர்ப்பதையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் இருக்கிறது..அவர்களை நாம் கருத்தில் எடுக்கத்தேவையே இல்லை...மற்றையவர்கள் கண்ணைமூடிக்கொண்டு தமிழர் போராட்டத்தின் பிழையான பக்கங்களை சிந்திக்காது ஆதரித்தவர்கள் ஆதரிப்பவர்கள்...இவர்கள்தான் பாவம்..மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கும் என்று கனவுகண்டவாறு நிகழ்காலத்தை கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்..இன்னமும் எமக்குள் இருந்த இருண்ட பக்கம்களை ஆராய அவர்கள் தயாராக இல்லை..மீண்டும் ஒருபோதும் முளைவிடப்போகாத..மாண்டவர்கள் திரும்பிவரப்போகாத உதிரமும் உயிரும் கொடுத்து வளர்த்த போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சில மனிதர்களின் அறிக்கைகளை நம்பி தம் பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் அந்தமனிதர்களுக்கு சரியான விடயங்களை எடுத்துச்செல்லவேண்டும் என்ற விருப்பு தன் சமூகத்தைப்பற்றி அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பிலேயே எழும் ஒன்று.எல்லாவற்றையும் ஆராய்ந்து சரிபிழைகளை சிந்தித்துப்பார்க்கும் மனிதர்களின் பக்கம் நான் நிற்கவிரும்புகிறேன்..இல்லாவிட்டால் அது என் இனத்துக்கு நான் தெரிந்து கொண்டு செய்யும் துரோகம்..இதற்கு இந்த எதிர்ப்பு எழுந்தால் என் ஆருயிர் நண்பன், சாள்ஸ் அன்ரனியின் தோளோடுதோள் நின்றவன் பல்லாயிரம் தடைகளைத்தாண்டி இங்கு வந்து நிற்கிறான்..தலைவரின் வீட்டிற்க்குள் வளர்ந்த கோழிக்குஞ்சு.."ஒருபோராட்ட அமைப்பின் தலைவரின் மகனாகவும் சாள்ஸ் அன்ரனி எனும் போராளியாகவும் ஒரு மாவீரனின் பாதத்தடங்கள்" என்ற பெயரில் அவனின் அனுபவங்களை உள்ளிருந்து ஒரு பார்வையாக ஒரு பேப்பருக்காக சாட்ச்சியுடன் எழுத உள்ளேன்...கடைசிநாட்களில் கண்கண்டதுபோல் கதை அவிட்டுவிட்ட பலரின் முகத்திரையை சாட்ச்சியுடன் கிழிக்கும் அந்த பதிவு..

சுபேஸ் உங்களது இக்கருத்துக்கு ஒரு பச்சை.

லால் போல பலர் எமது விடுதலைக்காக விடுதலைப்போராட்டத்திற்காக உள்ளேயிருக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த அரச செல்வாக்கை மாத வருமானத்தை எல்லாவற்றையும் எங்கள் மாவீரர்களுக்காகவும் மக்களுக்காகவும் விட்டுவிட்டு (சிங்களப்புலிகளாக) பலர் சிறையில் இருக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் நம்பி உதவியவர்களை குப்பியோடு குகைக்குள் திரிந்த சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவர்கள் கம்பியெண்ணுகிறார்கள்.

எங்கள் இனத்துக்காக சிறையிருக்கும் சிங்கள முஸ்லீம் இனத்தவர்களை இக்கதையூடு நன்றியுடன் நினைவுகொள்வோம்.

புலிகள் அழிந்தது எதிர்களால் என்பதை விட துரோகிகளால் தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்... ஒரு கதைக்கு புலிகளில் 100 பேர் இருந்தால் அதில் 10 பேர் ஆமியோடு சேர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள் என வைத்தால் மிச்ச 90 பேர் ஒழுங்காகத் தான் போராடினவர்கள்,உயிரைக் கொடுத்தார்கள்,உள்ளுக்குள் இருக்கிறார்கள் அவர்களையும் சேர்த்து அல்லவா நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள்?...உங்கள் கதையில் வந்த 3 பேரில் ஒருவர் கூடவா உண்மையாக நாட்டுக்காக உழைத்தவர் இல்லை?...இருவர் துரோகியகாக இருந்தாலும் ஒருவரையாவது தேசியத்தில் பற்றுள்ளவராக காட்டி இருக்கலாமே?...உங்கட கதையை வாசித்தால் போராடப் போன அத்தனை போராளிகளும் துரோகி என்ட மாதிரித் தான் இருக்குது

மாவீரனின் பாதத் தடங்களை எழுதுங்கள் வரவேற்கிறேன்...உண்மையை, உண்மையாக எழுதுங்கள்...போராட்டத்தின் பின் பல பேர் தாங்கள் கடைசி யுத்தத்தில் நின்டனான் என பல வித கதைகளை எழுதுகிறார்கள் அதில் ஒரு சிலர் தான் உண்மையை,கண்ணால் கண்ட‌தை எழுதுகிறார்கள் அதில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள் என நம்புகிறேன்

சுபேஸ்! நல்ல கருப்பொருள் ஒன்றினை தொட்டிருக்கின்றீர்கள். எம் போராட்டத்துக்காக உதவிய மற்றும் அதன் மேல் நல் அபிப்பிராயம் கொண்டிருந்த வேற்றினத்து மக்களையும் நினைவுகூர்வதாய் இருந்தது தங்களின் கதை! நல்லா இருந்திச்சு! :)

இருந்தாலும்......சொல்லவந்த விடயத்தினை கொஞ்சம் சுத்தவிட்டு சொல்லியிருக்கின்றீர்கள்!ஆனாலும் எழுத்து நடை நல்லாத்தான் இருக்கு! வாழ்த்துக்கள் சுபேஸ்! :)

உங்களுடைய மாவீரன்.சாள்ஸ் அன்ரனி தொடர்பான ஆக்கத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

பின்குறிப்பு: உங்கட வாத்தி(ரி)யார்! தரமான ஆள்தான்!! :rolleyes: "பாவாம் ச..பா...ஷ்" என்று நிறையச் சொல்லித் தருவார். :lol:

தொடருங்கோ............. பல பேப்பருக்கும்!

சுபேஸ் நல்ல கதை இருப்பினும் சில குழப்பங்கள் வாசிக்கும் போது.

இன்னொருவருக்காக நீங்கள் கதை எழுத முடியாது.விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தொடருங்கள்.

அதைவிட முக்கியம் எழுதப்போவதை முற்கொண்டு சொல்லாமல் விடுவதே நல்லது எதிர்பார்ப்பு அதிகம் இருக்காது.

பொய்யாக கனவுலகில் நாம் வாழ்ந்தது காணும் என நினைக்கின்றேன்.

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபாஸ் உங்கள் கதைக்கரு அருமை. பல லால்களால் தான் புலிகளில் பல தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தன என்றால் மிகையல்ல.அதே நேரம் எமது இனம் சாணேறினால் முழம் சறுக்க காரணம் துரோக கும்பல்கள் என்பதில் 100% நம்பிக்கை கொண்டவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் உங்களது இக்கருத்துக்கு ஒரு பச்சை.

லால் போல பலர் எமது விடுதலைக்காக விடுதலைப்போராட்டத்திற்காக உள்ளேயிருக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த அரச செல்வாக்கை மாத வருமானத்தை எல்லாவற்றையும் எங்கள் மாவீரர்களுக்காகவும் மக்களுக்காகவும் விட்டுவிட்டு (சிங்களப்புலிகளாக) பலர் சிறையில் இருக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் நம்பி உதவியவர்களை குப்பியோடு குகைக்குள் திரிந்த சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவர்கள் கம்பியெண்ணுகிறார்கள்.

எங்கள் இனத்துக்காக சிறையிருக்கும் சிங்கள முஸ்லீம் இனத்தவர்களை இக்கதையூடு நன்றியுடன் நினைவுகொள்வோம்.

உண்மை சாந்தி அக்கா..அவர்கள் என்றுமே நன்றியுடன் நினைவு கூரப்படவேண்டியவர்கள்..நன்றி அக்கா உங்கள் கருத்துப்பகிர்விற்க்கு...

சுபேஸ்! நல்ல கருப்பொருள் ஒன்றினை தொட்டிருக்கின்றீர்கள். எம் போராட்டத்துக்காக உதவிய மற்றும்  அதன் மேல் நல் அபிப்பிராயம் கொண்டிருந்த வேற்றினத்து மக்களையும் நினைவுகூர்வதாய் இருந்தது தங்களின் கதை! நல்லா இருந்திச்சு! :)

இருந்தாலும்......சொல்லவந்த விடயத்தினை கொஞ்சம் சுத்தவிட்டு சொல்லியிருக்கின்றீர்கள்!ஆனாலும் எழுத்து நடை நல்லாத்தான் இருக்கு! வாழ்த்துக்கள் சுபேஸ்! :)

உங்களுடைய மாவீரன்.சாள்ஸ் அன்ரனி தொடர்பான ஆக்கத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

பின்குறிப்பு: உங்கட வாத்தி(ரி)யார்! தரமான ஆள்தான்!! :rolleyes:  "பாவாம் ச..பா...ஷ்" என்று நிறையச் சொல்லித் தருவார். :lol:

தொடருங்கோ............. பல பேப்பருக்கும்!

நன்றி கவிதை கருத்துபகிர்விற்க்கு...

சுபேஸ் நல்ல கதை இருப்பினும் சில குழப்பங்கள் வாசிக்கும் போது.

இன்னொருவருக்காக நீங்கள் கதை எழுத முடியாது.விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தொடருங்கள்.

அதைவிட முக்கியம் எழுதப்போவதை முற்கொண்டு சொல்லாமல் விடுவதே நல்லது எதிர்பார்ப்பு அதிகம் இருக்காது.

பொய்யாக கனவுலகில் நாம் வாழ்ந்தது காணும் என நினைக்கின்றேன்.

தொடருங்கள்.

நன்றி அர்ஜுன் கருத்துப்பகிர்விற்க்கு...

சுபாஸ் உங்கள் கதைக்கரு அருமை. பல லால்களால் தான் புலிகளில் பல தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தன என்றால் மிகையல்ல.அதே நேரம் எமது இனம் சாணேறினால் முழம் சறுக்க காரணம் துரோக கும்பல்கள் என்பதில் 100% நம்பிக்கை கொண்டவன்.

நன்றி நுணாவிலான் கருத்துப்பகிர்விற்க்கு...

நல்ல ஆக்கம் சுபேஸ். உங்களின் எழுத்துக்கு ஒரு முகவரி கிடைத்துள்ளது. அதை காப்பாற்றிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இளையவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் சாத்திரிக்கு பாராட்டுகள்.

நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் அண்ணே மீண்டும் மீண்டும் எழுதுங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம் சுபேஸ். உங்களின் எழுத்துக்கு ஒரு முகவரி கிடைத்துள்ளது. அதை காப்பாற்றிக் கொள்வீர்கள்   என்று நம்புகிறேன்.  உங்களின் அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இளையவர்களுக்கு  ஆதரவுக்கரம்  நீட்டும் சாத்திரிக்கு பாராட்டுகள்.

நன்றி அண்ணா...சாத்திரி அண்ணை பலரை வெளிச்சம்போட்டுக்காட்டி அறிமுகப்படுத்தியவர்...பலருக்கு முகவரி கொடுத்தவர்...

நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் அண்ணே மீண்டும் மீண்டும் எழுதுங்கள் .

நன்றி இளங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.