Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறா வடு ! ஜனவரியில் வெளியாகும் எனது நாவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடையீர் வணக்கம்,

வரும் புத்தாண்டு ஜனவரியில் எனது நாவலான ஆறா வடு - தமிழினி பதிப்பக வெளியீடாக சென்னையில் வெளியாகிறது. கடந்த 2 வருடமாக பையப் பையவும் போன ஆறேழு மாதமாக ஓவர் ஸ்பீட்டிலும் அதனோடு மெனக்கெட்டிருந்தேன். அத்தருணத்தில் புத்தகத்தில் வராத முன்னுரை என்றொரு குறிப்பை பேஸ்புக்கில் சிறு சிறு குறிப்புக்களாக எழுதினேன். அவையாவன..

ஏ 9 பாதை வாகனங்களாலும், கிளிநொச்சி வான்பரப்பு ஹெலிகொப்டர்களாலும் நிறைந்திருந்தன. ஹெலியில் நோர்வேக்காரர்களும் யப்பான் ஆட்களும் அவ்வப்போது அன்ரன் பாலசிங்கமும் அடேல் அன்ரியும் வந்து இறங்கினார்கள். சில சமயங்களில் வெறுமனே வந்திறங்கும் ஹெலியில் கருணாம்மான் மட்டக்களப்பிற்குப் பறந்தார். சில இயக்கக்காரர்கள் கொழும்பில் அப்பலோ ஆஸ்பத்திரிக்கு போனதாகவும் பேசிக்கொண்டார்கள். அந்த ஆஸ்பத்திரியின் மேற் கூரையிலேயே ஹெலி இறங்கும் தளம் உள்ளதென்றும் அவர்கள் சொன்னார்கள் -ஆறாவடு நாவலில் இருந்து

த.பிரபாகரன் என்றொரு நண்பர் இருந்தார். (பின்னாட்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான அம்பலம் இதழின் ஆசிரியர்) நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது அவர் நான்காம் வகுப்பிலிருந்தார். அப்பொழுது நம்மிருவருக்கும் இடையில் ஒரு சவால் எழுந்தது. யார் அதிக பக்கங்களுடைய நாவலை எழுதுவது என்பதே அது..

ஒவ்வொரு காலையும் வகுப்புக்கள் ஆரம்பிக்க முன்பாக நாம் வீடுகளில் எழுதிய நாவலின் பிரதிகளை வைத்து அளந்து பார்த்து யார் பெரியவன் என்று அடி முடி அளந்து கொள்வோம். த.பிரபாகரன் பக்க அளவைக் கூட்டுவதற்காகவே குண்டு குண்டான எழுத்துக்களில் எழுதி வந்திருப்பார். அவரது பிரதியில் ஒரேயொரு வரி நினைவில் நிற்கிறது. ராஜன் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துவிட்டு பற்றைகளுக்கு பின்னே ஒளிந்து கொண்டான்.

நானோ குறுணிக் குறுணி எழுத்துக்களில் எழுதியிருந்தேன். நந்தி எழுதிய நம்பிக்கைகள் என்றொரு புத்தகத்தை எடுத்து வைத்து ஓர் அத்தியாயத்திற்கு இத்தனை பக்கங்கள் என்றெல்லாம் தீர்மானித்து தொடங்கினால் எதையெழுத முயற்சித்தாலும் அது ஒற்றைத் தாளில் முடிந்து போனது. அதனால் நாய் வள் வள் என குரைத்துக் கொண்டிருந்தது ஆட்காட்டிப் பறவையொன்று அவலமாயக் கத்தியபடி பறந்தது சுவரில் பல்லியொன்று சொச் சொச் என்றது என எவ்வளவோ இடையீடுகளைச் செய்து பார்த்தேன். ஒன்றும் தேறவில்லை.

இதற்கிடையில் புலமைப் பரிசில் முடிவுகள் வர நான் பாடசாலை மாறிக்கொண்டதோடு அந்த நாவல் முயற்சியை கைவிட வேண்டியதாய்ப் போனது. த.பிரபாகரன் என்ன செய்தாரோ தெரியவில்லை. அதன் பிறகு எனது புத்தக அடுக்குகளுக்கிடையே வைராக்கியம் எனத் தலைப்பிட்ட அந்த நாவலின் ? முடியாத பிரதிகள் கன காலத்திற்குக் கிடந்தன. அதற்குப் பிறகே சிறுகதைகளை எழுதிப்பழகத் தொடங்கினேன்.

அப்பொழுது கதைகளை வெளிவிடுகிற சஞ்சிகைகளாக வெளிச்சம், சாளரம், ஈழநாதம் வெள்ளி மஞ்சரி ஆகியவை இருந்தன. இவற்றில் வெள்ளி மஞ்சரிதான் வாராவாரம் வெளியாகியது. எனது கதையொன்று வெளியாவதற்கான நிகழ்தகவு அங்குதான் அதிகமாயிருந்தது. உயிர்ப்பூ என்றொரு கதையை எழுதி (பின்னாளில் அது திரைப்படமானது. ஹி ஹி அந்தப் பெயரில் வேறு யாரோவின் கதை) மடித்து அஞ்சலுறையில் இட்டால், அப்பொழுதுதான் அந்தச் சந்தேகம் உருவானது. தபாற்காரன் இந்த அஞ்சலை உரிய இடத்தில் சேர்ப்பிப்பான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அதனால் நேரடியாகக் கொண்டு போய் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தாலும் தயக்கம் ஒட்டிக்கொண்டேயிருந்தது. ஈழநாதம் பணிமனை வைமன் வீதியில் (புதிய மகேந்திரா வீதி) இருந்தது. பொக்கற்றுக்குள் கதையை வைத்துக் கொண்டு இந்தப் பக்கம் போவதும் பிறகு அந்தப்பக்கம் போவதுமாக இரண்டு நாட்கள் கழிந்தன. உள்ளேயிருந்து பிக்கப்புகளிலும் மோட்டர் சைக்கிளிலும் வெளியேறுகிற யாராவது இயக்கக் காரர் அழைத்து என்ன தம்பி இந்தப்பக்கம் நோட்டம் விடுகிறீர் என்று கேட்டால் கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. (வேறு பயங்கள் வராத வயது அது) -

லவுட் ஸ்பீக்கரில் “இந்தியா..” என்று கத்தினார்கள். பின்னால் சனங்கள் சுரத்தில்லாமல் “வாழ்க” என்று கத்தினார்கள். பிறகு “பிரபாகரன்” என்று கத்தினார்கள். அதற்கும் சனங்கள் “வாழ்க” என்றே கத்தினார்கள். அப்பொழுது ஊர்வலம் சற்று சலசலத்தது. பிறகு லவுட் ஸ்பீக்கரில் “பிரபாகரன்” என்று கத்தி “ஒழிக” என்றும் அவர்களே எடுத்துக் கொடுத்தார்கள்.

பின்னால் நின்ற சனங்களுக்கு இந்திய இராணுவமா, பிரபாகரனா என்பதெல்லாம் கேட்கவில்லை. அவர்கள் தம்பாட்டுக்கு ஒரு ஒழுங்கில் “வாழ்க” என்றும் “ஒழிக” என்றும் கத்திக்கொண்டு வந்தார்கள். இதனால் சில வேளைகளில் பிரபாகரன் வாழவும் இந்தியா ஒழியவும் வேண்டியேற்பட்டது.-ஆறாவடு நாவலில் இருந்து

2

விசாரணையின் போது அவன் திரும்பத்திரும்ப ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான். “இந்தியாவின் கொட்டைமாதிரி கீழே கிடக்கிற ஐலன்டில இருந்து கொண்டு ஆட்டமாடா போடுறீங்க”

அவனின் விசாரணை வழிமுறைகளில் தீவிரம் மற்றும் மென்தீவிரம் என்று இரண்டு வகையிருந்தன. மென்தீவிரம் சிகரெட்டால் சுடுவதில் தொடங்கிய போது, தீவிரம் கொலையில் முடியலாம் என்று இவன் நம்பினான். அருகில் உட்கார்ந்து விசாரித்துக் கொண்டிக்கும் போதே, பதறாமல் கொள்ளாமல் தனது புகையும் சிகரெட்டின் நெருப்புத் தணலை அவன் இவர்களின் முதுகுத் தசைகளில் வைத்து அழுத்தினான். தோலின் மெல்லிய மயிர்கள் பொசுங்குகிற மணத்தை அப்பொழுது உணரமுடிந்தது. தொண்டை கிழியக் கத்தாமல் அந்த வலியைத் தாங்கமுடியாதிருந்தது.

முதல்நாள் பொழுது சாயும் முன்னதாக மொத்த விசாரணையையும் தாடிக்காரன் முடித்துவிட்டான். ஒவ்வொரு விசாரணைக்குப் பிறகும் அவன் தன் மேசைக்குப் போயிருந்து மேசையில் தட தடவென்று தட்டினான். அவனது கதிரைக்குப் பின்புறத்தே சுவரில் பெரியதொரு இந்திய வரைபடம் ஒட்டப் பட்டிருந்தது. கீழே கொட்டை ஒரு பக்கம் வீங்கிப் போய்க் கிடந்ததை இவன் கண்டான்.

-ஆறாவடு நாவலில் இருந்து..

--

ஈழநாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும். காலை விடிய முதல் வாங்கினால் உடனடியாகத் திறந்து பார்ப்பதில்லை. வீட்டுக்கு வரும் நேரமளவிற்காயினும் எனது கதை பேப்பரில் வந்திருக்கும் என்ற கற்பனைகளால் நிறைந்திருப்பேன். ஆனால் ஈழநாதத்தில் ஒருபோதும் கதை வெளியாகவில்லை. இதற்கிடையில் ஈழநாடு - ஞாயிறுப்பதிப்பை ஆரம்பித்தது. இனி ஈழநாடுதான் என முடிவெடுத்த கொஞ்ச நாட்களிலேயே அதனையும் இயக்கம்தானாம் நடாத்துகிறது எனத் தெரியவந்தது. எனக்கு ச்சீயென்று போய்விட்டது. ஈழநாதத்தையும் இயக்கம்தானே நடாத்தியது.

அந்நாட்களில் இயக்கம் நடத்தாத சஞ்சிகைகள் என்றால் ஒன்று அறிவுக் களஞ்சியம். வரதர் நடாத்திக்கொண்டிருந்தார். அதில் கதைகள் எல்லாம் போட மாட்டார்கள். மற்றயது பொ.ஐங்கரநேசனின் நங்கூரம். அதில் வெளியாகிற கட்டுரைகள் ஒன்றுகூட விளங்காத அறிவியற் கட்டுரைகள்.

பெயரை அச்சில் பார்த்தாக வேண்டுமென்ற வெறி வரவரக் கூடிக்கொண்டு போனது. கதையை நம்பிப் பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அறிவுக்களஞ்சியம்தான் சரியான தெரிவு. அத்தை வீட்டில் கலைக்களஞ்சியம் என்ற பழைய தொகுப்பொன்று இருந்தது. அதில் வெந்நீரூற்றுக்கள் என்றொரு கட்டுரையைத் தெரிந்தெடுத்து பிரதிபண்ணினேன். அதில் நான் செய்த மாற்றங்கள் இரண்டேயிரண்டுதான். ஒன்று.. பீய்ச்சியடிக்கும் என்பதை பாய்ச்சியடிக்கும் என மாற்றியிருந்தேன். மற்றயைது இறுதி வரியாக இவ்வாறான வெந்நீரூற்றுக்கள் கன்னியாவிலும் காணப்டுகின்றன என முடித்திருந்தேன். மற்றும்படி முழுக்க முழுக்க கொப்பியடித்து ஆக்கம் சயந்தன் என அனுப்பினேன்.

அப்பொழுது அறிவுக் களஞ்சியம் பாடசாலைகளுக்கு வரும். பாடசாலை அதிபர்களை இதழின் காப்பாளர்கள் ஆக்கி - பாடசாலைக்குள்ளேயே இதழ்களை விற்றமையை வரதரின் மார்க்கெட்டிங் மெதேட் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த இதழின் இறுதிப்பக்கத்தில் வெந்நீரூற்றுக்கள் கட்டுரை ஒரு பக்கம் முழுவதும் வந்திருந்தது. குதிக்காத குறைதான்.. ஆனால்... அந்தோ பரிதாபம்.. கட்டுரையில் எழுதியவரின் பெயர் வெளியிடப்படவில்லை. வரதர் மறந்து போனார். வந்த ஆத்திரத்திற்கு அப்பொழுதே ஒரு தாளில் - இப்பிடியிப்பிடி இது பத்திரிகா தர்மத்திற்கு அழகில்லை. அதுவும் ஒரு மூத்த இதழாளர் இப்படிச் செய்திருக்கக் கூடாது. நான் மிகவும் மன வேதனை அடைகிறேன். என எழுதி அனுப்பினேன். அடுத்த இதழில் - அந்தக் கடிதமும் கீழே வரதரின் குறிப்பாக - மேற்குறித்த வெந்நீர் ஊற்றுக்கள் கட்டுரை எழுதியவர் இவர்தான். அவரது பெயரைக் கூறிப்பிடாமற் போனமைக்காக மனம் வருந்துகிறோம் - ஆசிரியர் எனக் குறிப்பிட்டும் இருந்தார்கள்.

புலிகளின் குரல் ஒரு இயக்க வானொலிதான். ஆனால் அதில்தான் முதலாவது எனது கவிதை வெளியானது. திலீபன் நினைவுநாட் கவிதை. 1996 ம் வருடம் ஒரு இரவும் மறுநாட் காலையும் அது ஒலிபரப்பானது. பெயர் அச்சில் வருகின்ற கிக் அதில் இல்லையாயினும் அப்பாடி என்றமாதிரியான ஒரு மனநிலை. (2003 என்று நினைக்கிறேன். நானும் சோமிதரனும் புலிகளின் குரலுக்குப் போயிருந்தோம். அப்பொழுது அவ் வானொலி தன்னை விஸ்தரித்த நேரம். நிறையச் சர்ச்சைகளில் சிக்கியிருந்தது. தமிழ்நாடுவரை அது ஒலிக்க இருப்பது குறித்து ஜெயலலிதா கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். நான் தினக்குரலில் அந்த வானொலியைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதற்காகவே போயிருந்தோம். அப்பொழுது 96 இல் ஒலிபரப்பான அந்தக் கவிதையைப் பெறமுடியுமா எனக் கேட்டேன். கணணி ஆவணப்படுத்தல்கள் எதுவும் இல்லாத நிலையில் தவபாலன் கொஞ்சக் கசெற்றுக்களைக் கொண்டுவந்து தந்தார். இவற்றில் ஒன்றில் உமது கவிதை இருக்குமென்றார். இருந்தது. 96 இற்கும் 2003 இற்கும் இடையில் அந்த வானொலி 9 இடப்பெயர்வுகளைச் சந்தித்திருந்தது. கவிதையை மறுபிரதி செய்த நான் அதனை ஒரு மாதத்தில் தொலைத்திருந்தேன் )

98 இல் நானெழுதிய கதையென நம்பக்கூடிய ஒன்றைத் தினக்குரல் வெளியிட்டது. அதன்பிறகு தினக்குரலில் தொடர்ச்சியாக எழுதத் தொடங்கினேன். நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள் எல்லோருக்கும் - நான் எழுதக் கூடியவன் என்று தெரிந்திருந்தது.

--------------------------------

இவன் தன்னையுமறியாமல் “பொறுப்பாளர்” என்று கூவினான். இவனது முன்னாள் பொறுப்பாளர், கைகள் பின்னால் கட்டப்பட்டு வெறும் ஜட்டியோடு தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தார். அவரை இந்தியாவுக்கு கூட்டிப்போயிருப்பார்கள் என்றுதான் இவன் நம்பியிருந்தான். “இந்திய வேசை மக்கள் நம்ப வைச்சுக் கழுத்தறுத்துப் போட்டாங்கள்” என்று விசாரணையின் இடைவேளையொன்றில் அவர் முனகியதாக, விசாரணையாளன் சிரித்துக் கொண்டு சொன்னான். பொறுப்பாளர் நிறைய இடங்களில் காயம் பட்டிருந்தார். அவருக்கு வயர்களாலோ அல்லது திருக்கை மீனின் வாலைக் கொண்டோ அடி விழுந்திருக்கலாம். உடலில் வரி வரியாகத் தழும்புகள் இருந்தன.

“ஆளைப்பாத்தா வரிப்புலி மாதிரி இருக்கென்ன..” என்றான் விசாரணையாளன். இவனில் புன்னகை கசிய முயற்சித்தது.

-ஆறாவடு நாவலில் இருந்து..

தொடர்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சயந்தன். எப்படி வாங்கலாம் என்றும் அறியத்தாருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சயந்தன் கனடாவில் எங்கு பெறக்கூடியதாக இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சயந்தன்!

நீங்கள் கள உறவு என்பதில் மிகவும் பெருமையாக இருக்கின்றது!!!

வாழ்த்துக்கள், சயந்தன்!

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நீங்கள் உதாரணம். உங்கள் நாவல் வெளியீடு சிறப்புறு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களை முற்கூட்டியே அறிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன், நல்வாழ்த்துக்கள். கனடா/அமெரிக்கா பக்கம் எங்கு புத்தகம் கிடைக்கும் என சொன்னால் வாங்க வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தனுக்கு எங்கள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் புலிகளை வைத்து கதை எழுத வெளிக்கிட்டீர்கள் போல கிடக்குது என்டாலும் உங்கள் நூல் சிறப்பாக வெளி வர வாழ்த்துகள்...நானும் கட்டாயம் வாங்குவேன்

வாழ்த்துக்கள் சயந்தன்.. அறிவுக்களஞ்சியத்தில் உங்களைப்போலவே  நானும் முயட்சி செய்து எனது கட்டுரையும் ஒரு தரம் வந்திருக்கு :) என் காலத்திலேயே அங்கு இருந்து என்னை போலவே உணர்வு கொண்டவரின் எழுத்துக்களை வாசிக்க ஆவலாய் உள்ளேன்..god bless you..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சயந்தன்..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சயந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சயந்தன்..காத்திருக்கிறேன் வாசிக்க..

எங்கு வாங்கலாம் என்று குறிப்பிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே, தமிழ்நாட்டில் பரவலாக சகல இடங்களிலும் கிடைக்கும். வெளிநாட்டிற்கு தற்போதைக்கு இணையவழி மட்டுமே சாத்தியமென நினைக்கிறேன். உடுமலை.கொம் மற்றும்- கிழக்கு பதிப்பக இணையத்தளம் என்பவற்றில் கிடைக்கும். ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் எனது நாவலும் நாஞ்சில் நாடனின் ஒரு கட்டுரைத் தொகுதியும் வெளியிடப்படுகின்றன.

வாழ்த்துக்களோடு பாராட்டுக்களும்........... சயந்தன்!

என் தமிழக நண்பர்களிடம் தொடர்புகொண்டு நிச்சயம் வாங்கிப் படிக்கின்றேன்!

நன்றி! :)

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களுக்கு வணக்கம். நாவல் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஜனவரி சென்னையில் நடந்தது. ஆறாவடு குறித்து பகிரப்பட்ட கருத்துக்களை தொகுத்திருந்தேன். அவை

ஒரு நாவலிலேயே இதை சொல்லலாமா என தெரியவில்லை , இருந்தாலும் “இலக்கியம்” என்றால் அரசியல் அல்ல என்ற புரிதலுடன் எழுதும் ஈழ எழுத்தாளர்கள் என நான் வாசித்தவரையில் பிரியத்துடன் சொல்லக்கூடியவர்கள் இருவர் . அ.முத்துலிங்கமும் , சோபா ஷக்தியும் . ஈழ இலக்கியத்தின் இந்த தலைமுறை வரவு என நான் நம்புகிறேன் சயந்தனை – ஆறாவடு படித்தனன் மூலம் – . பெருநாவல் ஒன்று எழுதி அவர் அதை நிரூபிக்கக்கூடும்.

தமிழினி வெளியீடு என்ற கூடுதல் நம்பிக்கையுடன் சயந்தனின் ஆறாவடு நாவலை வாங்கினேன் , அங்கதமும் , மெலிதான விமர்சனமும் கொண்டு ஈழப்போர் , ஈழவாழ்க்கை , அகதியாவதற்கான போராட்டம் இவற்றுடன் விரிகிறது ஆறாவடு , செயற்கையான அரசியல் பிரச்சாரமோ , வலிந்து திணிக்கப்பட்ட எதுவுமோ இல்லாமல் இலக்கியப் படைப்பாக வந்திருக்கிறது ஷோபாவின் கொரில்லா படிக்கும்போது என்ன உணர்ந்தேனோ அதுவே ஆறாவடுவிலும் , என்ன – புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவரின் பார்வையில் இருக்கிறது .ஆனால் உண்மைக்கு பல முகங்கள்தானே ?

முழுநாவலிலும் ஓடும் மெல்லிய அங்கதம் துயரத்திலும் கூடவே வருகிறது , கடைசிப்பகுதி திசை திரும்பி இதுவரை இருந்த யாதார்த்த நாவலாக இல்லாமல் குறியீட்டுத்தளத்தில் நுழைகிறதே என எண்ணினேன் , இல்லை , அது இன்னும் உச்சத்துக்கு கொண்டுபோகிறது நாவலை .

-அரங்கசாமி கே.வி

ஈழத் தமிழ் இலக்கியத்தில் சயந்தனின் ‘ஆறா வடு’ ஒரு முக்கியமான நாவல். அரசியலின் ஊடே அப்பாவிகளின் வாழ்வும், ஊழும் விளையாடும் அருமையான நாடகத் தருணம் இந்தப் புதினம். உணர்ச்சிப் போராட்டங்களிடையே தனித்து விடப்பட்ட தீவில் இருக்கும் அந்த மனிதர்களிடம் இந்திய ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனங்கள் முதல் முறையாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் மனிதர்கள் காலின்றி தவிப்பது , நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் வாழும் சனங்களின் போராட்டமான வாழ்வில் தப்பிக்க இருக்கும் அனைத்து வழிகளையும் அடைக்கும் அரசியலையும் அம்பலப் படுத்தும் புதினம். வீரச் சாவுகளின் அல்லது விபத்துகளில் மரணம் என்பதற்கான வேறுபாடுகள் என்ன என்பதை கேட்கிறது. மக்களிடம் இருந்து விடுதலை இயக்கங்கள் அந்நியப்படும் தருணத்தையும் அழகாகச் சொல்கிறது.

-இளங்கோ கல்லாணை

சயந்தனின் ‘ஆறாவடு’ நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் நாவலின் சிறப்புகள். முற்றுமுழுவதுமாக அரசியல் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட நாவல் ‘அரசியல் நீக்கம்’ செய்யப்பட்ட பிரதியாக இருப்பது சற்றே ஏமாற்றமாயிருந்தாலும் சயந்தனின் கதைசொல்லும் ஆற்றல் ஆறாவடுவை மிக முக்கியமான இலக்கியப் பிரதியாக்குகிறது

நாவலில் இலங்கை – இந்திய இராணுவங்கள், அரசுகள் புலிகள், ஈபிஆர்எல்எவ், பிரபாகரன், வரதராஜப்பெருமாள் என்று எல்லோருமே தைரியமாக விமர்சிக்கப்படுகிறார்கள் கிண்டல் செய்யப்படுகிறார்கள். அதிலும் முக்கியமாக நாவலின் முதன்மைப் பாத்திரமான விடுதலைப்புலி அமுதன் தன்னைத்தானே செய்துகொள்ளும் சுயகிண்டல்கள் எல்லாம் மிகவும் முக்கியமானவையே. இவற்றை சயந்தனின் காட்டமான விமர்சனங்களாக கொள்ளலாம். ஓர் எதிர் அரசியலை நாவல் முன்வைக்காமலிருப்பது என்னளவில் சற்று ஏமாற்றம். கண்டிப்பாக அவ்வாறான எதிர் அரசியல் இருக்கவேண்டும் என இலக்கிய நிபந்தனைகள் ஏதுமில்லை. ஆனால் என்னளவில் நான் அதை எதிர்பார்ப்பேன். அவ்வளவே. அதைத் தாண்டியும் ஆறாவடு இலக்கியமாக முக்கியமான பிரதியே. குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

-ஷோபா சக்தி

இப்ப தான் ‘ஆறாவடு ‘ படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாகப் படிக்கக் கூடியவாறு அமைந்துள்ளது.எதார்த்தமும் உண்மைகளும் துயரங்களும் மனச்சாட்சியுமாக புத்தகம் முழுவதும் நம் கதைகள்.அநாவசியமாக எச்சொல்லும் இல்லை. தொடர்பற்று எச்சம்பவமுமில்லை.அத்துடன் எழுத்துப்பிழை எதுவும் இடையூறு செய்ய இதிலில்லை.பாராட்டுகள் சயந்தன்.

-தர்மினி

ஈழத்தமிழர்கள் குறித்து வந்திருக்கும் பதிவுகளில் சயந்தனின் ‘ஆறாவடு’ நாவல் முக்கியமானதாய் இருக்கும் என நினைக்கிறேன்…நெருக்கடியான வாழ்க்கை, இலங்கை அரசியல் சூழல், புலம்பெயர்தலின் துயரம் எல்லாம் சேர்ந்து கனக்கச் செய்யும் நாவல்..

-பிரியா தம்பி

சயந்தனின் ‘ஆறா வடு’வாசித்தேன். ஈழத்தின் துயர்படிந்த வரலாற்றின் ஒரு பகுதியை அந்த நாவல் பேசுகிறது. வாசிக்க இயலாத அவலம் நிறைந்த சில பகுதிகளை மிகுந்த சிரமத்தோடு கடந்து செல்லவேண்டியிருந்தது. எழுத்தில் கடக்கவியலாத கொடுந்துயரை, யதார்த்தத்தில் எங்கள் மக்கள் எப்படித்தான் சகித்தனரோ…? சயந்தனின் நக்கல் நடையையும் மேவியிருந்தது கண்ணீர். இலங்கை அரசாங்கம், இந்தியப் படைகள், விடுதலைப் புலிகள், மாற்று (?) இயக்கங்கள் எல்லோரையும் விமர்சித்திருந்தார். முன்னரெனில், ‘ஆறா வடு’வை வேறு கண்களால் வாசித்திருப்பேன் என்று நினைத்தேன். நாவலின் கட்டமைப்பும் நகர்த்திச் சென்றவிதமும் ‘நாயக’னின் பிம்பம் இல்லாத பிரதான பாத்திரமும் எல்லாப் புனிதங்களையும் கோபமெழாதபடிக்கு நோகாமல் கிண்டலடித்த மொழியும் நாவலின் சிறப்புகள். சின்னப்பெடியன்-மகா கிண்டல்காரன்-முகநூல் நடுநிலையாளன் என்றெல்லாம் நினைத்திருந்த நினைப்பை, ‘அருமையான படைப்பாளி’என்று இனி மாற்றிக்கொள்ளவே வேண்டும்

-கவிஞர் தமிழ்நதி

மனதை கலங்கடிக்கும் எத்தனையோ நாவல்களை புனைவு என வகைப்படுத்தி எளிதில் கடந்து விட முடிந்தது.அவ்விதம் தப்பித்து கொள்ள வழியில்லாது செய்து விட்டது சயந்தனின் “ஆறா வடு”.

“நிழலை விலக்க முடியாதபோது

தோற்றுப் போன போர் வீரன்

பாதுகாப்பில்லாத வெளியில்

தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்

மூடியிருந்த கதவுகள் அவனை அச்சமடையச் செய்தன

திறந்திருந்த கதவுகளும் அபாயமாகவே தோன்றின …” – கருணாகரன்

-லேகா இராமசுப்ரமணியன்

அண்மையில் வெளியாகி இருக்கும் சயந்தனின் ஆறா வடு என்னும் நாவல் நம் காலத்தின் மிகச் சிறப்பான நாவல்களில் ஒன்றாக அமையப் போகிறது. நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.இந்த நாவலை மைக்கேல் ஒந்தாச்சியின் Cat’s Table உடன் சேர்த்துப் படிக்க வேண்டும். இரு நாவல்களும் வேறு கப்பல் பயணங்கள் பற்றியன மட்டுமல்ல, இரு வேறு அரசியலையும் பற்றியன. ஆனால் Cat’s Table க்குக் கிடைக்கிற பவிசும் கவனமும் ஆறா வடுவுக்கு இப்போது கிடைக்காது.யாராவது அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வரை/Just finished reading a brilliant novel in Tamil by Sayanthan-Aaraa vadu ( Unhealed wounds). It would be a wise literary exercise to compare this novel with Ondaatje’s Cat’s Table. Both talk about Ships but what a difference in depth, politics and sensitivity!!!!!

-கவிஞர் சேரன்

சயந்தனின் ஆறாவடு நாவல் ஒரு படகுப்பயணத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டாலும் அது விரியும் காலம் இரண்டு சமாதானக் காலங்களுக்கு இடையிலானது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலிருந்து பிரபா-இரணில் ஒப்பந்தம் முறிவதற்கு சற்று முன்னரானது. இதுவரை அநேகமாய் வந்த அரசியல் புனைவுகளை எழுதியவர்களில் அநேகர் இயக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டவராயிருக்கும்போது இது எல்லா அதிகாரங்களுக்குமிடையில் அல்லாடும் ஒரு தனிமனிதரின்(சனத்தின்) இருப்பிலிருந்து எழுவதால் முக்கியமான பிரதியாகிவிடுகிறது. முக்கியமாய் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழநேர்ந்த நம் அனைவருக்கும் புலிகள்/இராணுவம் பற்றிய இவ்வாறான dynamic பார்வைகளிருக்குமே தவிர, rigidity யாய் எதுவுமே இருக்காது. இல்லாவிட்டால் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் மிக எளிதில் இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர் அந்த வாழ்வு நிலைக்குத் தகவமைத்துக் கொண்டிருக்க முடியாது. அடித்தளத்தில் மக்கள் தமக்கு எது வேண்டுமென நிதானமாய் யோசிக்கமுன்னரே Hierarchy முறையில் எல்லாமே மேலிருந்து பிரயோகிக்கப்படும்போது தப்புதல் அல்லது தக்கண பிழைத்தலுக்கு ஏற்ப மாறவேண்டியிருக்கும் என்பதே யதார்த்தம். முக்கியமாய் இயல்பான சூழ்நிலை என்பதே எப்படி என்பதே அறியாத போர்க்காலப் பதற்றங்களிடையே பிறந்த சயந்தனைப் போன்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவே இயல்பாய் நிகழ்வும் கூடியது.

அதை ஆறாவடு தெளிவாகப் பிரதிபலிப்பதால் நான் ஒருகாலத்தில் வாழ்ந்த வாழ்வை இன்னொருமுறை பார்ப்பதுபோல நெருக்கத்தைத் தந்திருந்தது. விமர்சனமாய் சில சம்பவங்கள் அதீத romanticized செய்யப்பட்டதையும், விடுபடலாய், யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி எந்தக் குறிப்பும் வராததையும் குறிப்பிடலாம். இந்திய இராணுவத்தின் காலம் பற்றிய விரிவாக எழுதப்பட்ட பிரதியில் முஸ்லிம்களின் வெளியேற்றம் குறிப்பிடாதது ஏனென்ற கேள்வி எழுதல் இயல்பானதே. மற்றுபடி 80களில் பிறந்த தலைமுறையிலிருந்து வெளிவருகின்ற நாவல்களில் இஃதொரு முக்கியமான நாவல் மட்டுமல்ல, அதன் பார்வைகள் முன்னைய தலைமுறையிலிருந்து பலவிடயங்களில் வேறுபட்டதாகவும் இருக்கும் என்பதற்கும் இந்நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும்.

-டிசே தமிழன்

தமிழினி வசந்தகுமாரின் வார்த்தைகள் பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டதாகவே சயந்தனின் “ஆறா வடு” நாவலை வாசித்து முடித்தபோது என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது பல்வேறு சிக்கல்கள், வேலைகள் என்பன குறுக்கீடு செய்து கொண்டிருந்தது. அதனையும் மீறி அரைவாசிக்கட்டத்தை நான் தாண்டியபோது மீதி அரைவாசியையும் உடனே படித்து முடித்துவிட வேண்டுமென்ற உந்துதலை அந்த நாவல் உண்மையாகவே அளித்தது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்தவை இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பணயம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் “நேரு ஐயா” என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உதாரணம். நாவலின் இறுதிப்பாகங்கள் தொடக்கத்தைவிடக் கூடுதல் கவனத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது என்று நான் எண்ணுகின்றேன். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்’ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் “ஆறா வடு” முக்கியமான ஒரு நாவல்.

-நடராஜா முரளிதரன்

நாவலை இந்தியா இலங்கை நாடுகளில் புத்தகக் கடைகளில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் கீழ்வரும் இணையங்களினுாடாகவும் பெற முடியும்.

வடலி

http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=172

உடுமலை

http://tinyurl.com/73ya45e

கிழக்கு

https://www.nhm.in/shop/100-00-0000-192-7.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.