Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )

Featured Replies

முன்குறிப்பு:

பொருத்தமான படங்களை மேலதிகமாக இணைக்க முடியாத காரணத்தினால்,

பகுதி- 13 இல் இருந்து இந்த தனியான திரியில் கதை தொடர்கின்றது.

இக்கதையின் முன்னைய பகுதிகளினை வாசிப்பதற்கு தயவுசெய்து கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

[13]

'துவாரகா'...... இவனது நல்லதொரு சிநேகிதி. அவன் கொழும்பு வந்த காலத்திலிருந்துதான்...

அவனுக்கும் விமலுக்கும் துவாரகா அறிமுகமாகியிருந்தாள். அவளது துடுக்குத்தனமான பேச்சும் ,

சில வேளைகளில் 'ஆம்பிளைப் பெடியள்' போல அவள் செய்யும் குறும்புகளும்.... துவாரகாவை ஒரு "பெண் சிநேகிதி" என்று வேறுபடுத்தி நினைக்காத அளவுக்கு அவர்களுக்குள் ஒரு எண்ணத்தினை ஏற்படுத்தியிருந்தது.

"அடியே... நீ ஆம்பிளைப் பிள்ளையாய் பிறந்திருக்க வேண்டியனி.!!! தப்பித் தவறி... பெட்டையாய்ப் பிறந்திட்டாய்" என்று சொல்லுவான்.

கொஞ்சம் குண்டாக இருப்பாள். அதனாலோ என்னவோ நல்லா சாப்பிடுவாள். அவளது தாய் தந்தை இருவருமே வாய்பேச இயலாதவர்கள். ஒரே ஒரு அண்ணா. அவர் அப்பொழுது ஒரு பிரபலமான தனியார் தமிழ் வானொலியில் அறிவிப்பாளராக இருந்தார்.

அவளது தாய் எப்பொழுது அவனைப் பார்த்தாலும் "வீட்டுக்கு சாப்பிட வாங்கோ" என்று சைகையால் சொல்ல...

அவனுக்கு அது புரிந்திருக்குமா? என்ற சந்தேகத்தில்... "உன்னை நாளைக்கு லஞ்சுக்கு வரட்டாம் வீட்ட" என்பாள் துவாரகா.

அவளது குடும்பத்தில் அனைவரும் மிகவும் நட்போடு பழகுவார்கள்.

துவாரகாவும் அவனும் "டா , டீ " போட்டுத்தான் கதைப்பார்கள். அவர்களுக்குள் உண்மையான ஒரு நல்ல நட்பு இருந்தது.

இவனின் அஞ்சலி விசயம் எல்லாம் துவாரகாவுக்கு தெரியும். துவாரகா அஞ்சலியை போட்டோவில்தான் பார்த்திருக்கிறாள். ஒரு நாளைக்கு தங்களது வீட்டுக்கு நேரடியாக அஞ்சலியை கூட்டிக்கொண்டு வரச்சொல்லி அடிக்கடி அவனிடம் நச்சரித்துக்கொண்டிருப்பாள் துவாரகா.

ஆனால், இவனது அதிகமான வேலைப்பழுவில் அதனை மறந்திருந்தான்.

அஞ்சலி துவாரகாவை நேரில் கண்டதில்லை. போட்டோவில் கூட பார்த்ததில்லை.

ஒருதடவை 'துவாரகா' என்று ஒரு நல்ல சிநேகிதி இருப்பதாக அஞ்சலியிடம் கூறியிருக்கிறான். அதோடு சரி.

அன்று... ஏங்கேயோ போய்விட்டு வரும் வழியில்தான்... இவனது வேலையிடத்துக்கும் வந்திருந்தாள் துவாரகா.

பசியோடு வந்தவள்... அவனையும் தன்னோடு சாப்பிட வரச்சொல்லித்தான் அவனது சேர்ட்டைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது ரியூசன் முடிந்து அவனைப் பார்க்க வந்த அஞ்சலி...

அந்த சந்தர்ப்பத்தில்தான் உள்ளே நுழைந்தாள்.

துவாரகா அவனது சேர்ட்டை இழுத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும்... அவளின் முகம் சட்டென மாறி அந்த இடத்திலேயே... அப்படியே நின்றாள் அஞ்சலி.

Romantic+cute+look+kajal+agarwal+wallpapers+in+nan+mahan+alla+tamil+film+wallpapers.jpg

துவாரகா அஞ்சலியைக் கண்டதும்.... அது அஞ்சலிதான் என்பதை தெரிந்துகொண்டு சிரித்துக்கொண்டே... "ஹாய்" சொன்னாள்.

ஆனால் அஞ்சலி அவனிடம்... ரியூசன் முடிஞ்சுது. "நான் வீட்ட போறன்" என்று சொல்லிவிட்டு உடனேயே அங்கிருந்து வெளியேறினாள். ஒருநாளும்..... அவள் அப்படி நடந்துகொண்டதில்லை.

இவனுக்கு சரியான குழப்பம். "ஏன் அஞ்சலி இப்பிடிக் கோவித்துக் கொண்டு போறாள்" என.

அவனது செல்போனை எடுத்து அஞ்சலியின் நம்பருக்கு போன் பண்ணினான்...

அழைப்பை அவள் எடுக்கவில்லை... 'றிங்' போய்க்கொண்டிருந்தது.

"ஏதாவது பிரச்சினையாடா? ஏன்? என்ன பிரச்சினை?" என்று புரியாதவளாய் துவாரகா கேட்கவும்...

"ஒண்டுமில்லயடி! நீ சாப்பிட்டு... வீட்டை போ! பிறகு கதைக்கிறன்" என்றவன்...

மற்றவர்களிடம் வேலையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

சில நிமிடங்கள் இப்படியே கழிகிறது....

மீண்டும் அவளுக்கு போன் பண்ண முயற்சிக்கும் போது.... ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது அவனுக்கு.

அஞ்சலிதான் அனுப்பியிருந்தாள்.

பக்கத்தில் இருக்கும் சென்.லோரன்ஸ் சேர்ச்சிற்கு வரச்சொல்லியிருந்தாள்.

p10-fea.jpg

தேவாலயத்தின் கட்டடத்துக்கு வெளியே உட்காருவதற்கென புற்தரையில் கட்டப்பட்டிருந்த

சீமெந்துக் கட்டில் குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள் அஞ்சலி.

அவன் அவளுக்கு பக்கத்தில் போய் உட்கார்ந்து "அஞ்சு! என்ன ஆச்சுமா? ஏன்... இங்கை வந்து இருக்கிறாய்?

என்ன கோபம் உனக்கு? என்று கேட்கவும்,

தலையை நிமிர்த்தியவளின் கண்கள்... 'அவள் அழுதிருக்கின்றாள்' என்பதனை அவனுக்கு புரிய வைத்தது.

"யார் அந்தப் பிள்ளை?" என்று அஞ்சலி கேட்டாள்... மறுபக்கம் தலையைத் திருப்பி பார்த்தவாறே.

அதிலிருந்தே அவளது கோபத்தினை அவனால் உணர முடிந்தது.

kajal-crying-cute-150x150.jpg

அவள் துவாரகாவைத்தான் கேட்கிறாள் என்பதனை புரிந்து கொண்டவன்...

"அது துவாரகா.... அஞ்சு! உன்னிட்ட சொன்னனான்தானே ஒருநாள்... எனக்கொரு பிறண்ட் இருக்கிறாள் எண்டு. உன்னைப் பாக்கோணும் எண்டு நிறையத்தரம் கேட்டுக்கொண்டிருந்தவள்.நான்தான் வேலை பிஸியில மறந்து மறந்து போறது. நீ இப்பிடிப் பண்ணிப் போட்டியேமா!" என்று கொஞ்சம் கவலையுடன் சொல்லவும்,

"உடனே அஞ்சலி...... அவ உங்கட ஃபிறண்டா இருக்கலாம். ஆனா... உங்களை

தொட்டுத்தொட்டு கதைக்கிற உரிமை அவவுக்கு இல்ல!

அதோட... "வாடா! போடா!" எண்டு.. அவ உரிமையோட கூப்பிடுறா! அதை என்னால பாக்க முடியேல. அதுதான் தாங்கேலாமல் உடன வந்திட்டன்."

"அவ அப்பிடிப் பண்ணுறதும் ... உங்களை காதலிக்கிற நான் உங்களோட பழகிறதும் ஒரு மாதிரியாத்தானே இருக்கு. எனக்கு மட்டுந்தான் அந்த உரிமை இருக்கவேணும். சொறிடா....இப்பிடிக் கேக்கிறதுக்கு" என சொல்லிவிட்டு அழத்தொடங்கினாள்.

அவனை மிகவும் பாதிக்கிற ஒரேயொரு விடயம் அவளின் அந்த அழுகைதான்.

"சரிமா...சரி. இனிமேல் இப்பிடி நடக்காது. அழாதை ! ஆக்கள் பாக்கப் போயினம். கண்ணைத் துடைச்சிட்டு எழும்புமா....!" என்றவன் அவளது தலையில் தன் கையை வைத்து வருடியபோது அவள் கொஞ்சம் ஆறுதலடைந்தது போல தெரிந்தது.

"அஞ்சு...! நீ துவாரகாவோட பழகினதில்லத்தானே. அவள் சும்மாவே அப்பிடித்தான் கதைக்கிறவள். அவளோட பழகினாத்தான்...துவாரகாவைப்பற்றி உனக்கு கொஞ்சம் விளங்கும். அதுக்குப்பிறகு நீங்கள் ரெண்டுப்பேரும் நல்ல பிறண்ட்ஸ் ஆகீடுவியள்..." என்று சமாதானப்படுத்தவும்,

"அதெல்லாம் ஒண்டும் வேணாம்! உங்கட ஃபிறண்ட் ஆச்சு... நீங்களாச்சு! என்று சொன்னவள்... "ஆனா, இனிமேல் எனக்கு முன்னால இப்பிடி நடந்தா கதைக்க மாட்டன்..." என்று அவள் கண்கலங்கியபடி சொன்னபோதுதான், அந்த விடயம் அவளை எந்தளவு பாதித்திருக்கின்றது என்பதனை அவன் புரிந்து கொண்டான்.

ஆனாலும், துவாரகாவின் நல்ல நட்பினை, இப்படி.... தவறாக புரிந்து கொண்டு விட்டாளே அஞ்சலி!!! என்ற

மனவருத்தமும் இருந்தது.

துவாரகா உண்மையிலேயே ஒரு நல்ல நண்பியாக இருந்தாள். அவளது மனது குழந்தைத் தனமானது என்பதனை விட அவளிற்கு அடிக்கடி வரும் "வலிப்பு" நோயும் அவளின் மகிழ்ச்சியில் இவன் அக்கறையுள்ள நல்ல நண்பனாக இருப்பதற்கான காரணமாக இருந்தது.

சேர்ச்சிலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருக்கும்போது வாசலில் ஒரு ஐஸ்கிறீம் வண்டில் நிற்கவும், அதைப் பார்த்த அஞ்சலி... "டேய் எனக்கு ஒண்டு வாங்கிக்குடன்டா" என்று அவனது தோளை தன் தோளால் உரசியபடியே கேட்டபோதுதான்...

"அப்பாடா...! ஒரு மாதிரி இவள் 'கூல்' ஆயிட்டாள்" என்று நிம்மதியடைந்தான்.

K+1.jpg

அதை வாங்கிக் கொடுத்துவிட்டு... அங்கிருந்த மரத்தில் சாய்ந்து நின்றபடியே, அவள் அதனைக் குடிக்கும் அழகினை ரசித்துக்கொண்டிருந்தான்.

சில சம்பவங்களில்தான் பல தெளிவு பிறக்கும் என்பார்கள். அதன்படி..

அதன் பின்னர்..... துவாரகாவும் அஞ்சலியும் நண்பர்களாக மாறியது வேறுகதை.

அஞ்சலியும் அவனதும் காதலில் நடந்த "மிக மிக முக்கியமான" சம்பவம் ஒன்றில் துவாரகா கூடவே இருந்தாள், என்பதன் பின்னர்.... அஞ்சலிக்கு துவாரகா மீதுள்ள நட்பும் அன்பும் அதிகமானதும் நடந்திருந்தது.

அந்த மிக மிக முக்கியமான சம்பவம் அவர்கள் காதலில் நடந்தேறுவதற்கு முன்னர்...

2006 ஆம் ஆண்டில் இன்னும் சில முக்கியமான சம்பவங்களும் அவர்களின் வாழ்வில் நடந்திருந்தன.

ஏப்ரல் 2006

அவளுடைய உயர்தரப் பரீட்சைகளும் முடிந்து விட்டிருந்தன.

ஆனால் "தான் பரீட்சையை ஒழுங்காக எழுதவில்லை என கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள் அஞ்சலி.

அதனால்... மீண்டும் A/L பரீட்சை எடுக்கும் நோக்கில்... மீண்டும் ரியூஷன் போக ஆரம்பித்திருந்தாள்.

அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருவர்... அஞ்சலி படித்த பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கும் அஞ்சலியின் பெற்றோர் தெரிந்தவர்களாக இருந்தனர்.

ஆனால், இவன் அஞ்சலியை காதலித்துக் கொண்டிருந்ததையும் தனது சகோதரியிடம் சொல்லியிருந்தான்.

இவர்கள் காதலிக்கும் விஷயத்துக்கு அவனது சகோதரி தனது ஆதரவை தெரிவிக்காவிட்டாலும்... "என்னவோ பண்ணுடா! உன்ர இஷ்டம். நாளைக்கு... அந்தப் பிள்ளையைக் கைவிட்டிடாதை!" என்று மட்டும் சொல்லிப்போட்டு விட்டிட்டா.

திடீரென ஒரு நாள்...

அவனது சகோதரி போன் பண்ணி "டேய் தம்பி... நான் உன்னோட ஒரு முக்கியமான விஷயம் பற்றிக் கதைக்க வேணும். நேரம் இருக்கைக்குள்ள... ஒருக்கா வீட்டுக்கு வந்திட்டுப் போடா" என்று அவனை வரச்சொல்லியிருந்தா. இவனும் "சரி அக்கா.... இண்டைக்கு பின்னேரம்போல வாறன்" என்று சொல்லிவிட்டு...

அன்று பின்னேரமே... தன் அக்கா வீட்டுக்குச் சென்றவனுக்கு.....

ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது!!!

தொடரும்...

[14]

அவனது அக்கா வீடும் வெள்ளவத்தையில்தான் இருந்தது. முன்பெல்லாம்... அடிக்கடி போவான்.

இப்பொழுது, வேலை பிஸி பத்தாதெண்டு... காதல் வேற! அதனால, மாசத்தில ரெண்டுநாளோ... மூண்டுநாளோதான் செல்வான். அதுவும் அவனது அக்கா தனக்கு லீவு கிடைக்கைக்குள்ள சமைச்சிட்டுக் கூப்பிட்டாத்தான்.

"வழமையாக ஸ்பெஷலா ஏதாவது சமைச்சாத்தான் கோல் பண்ணிச் சாப்பிடக் கூப்பிடுவா.

ஆனா முக்கியமான விஷயம் கதைக்கோணும் எண்டுறாவே..!" என யோசித்தபடியே தன் அக்கா வீட்டுக்குள் நுழைகின்றான்.

அவன் உள்ளுக்குள் நுழையவும்...

தும்புத்தடியுடன் நின்ற அவனுடைய அக்கா,

"ஆ வாடா வா! உன்னத்தான் பாத்துக்கொண்டு நிண்டனான். இப்பதான், வீட்டைக் கூட்டுவம் எண்டுபோட்டுக்... கூட்ட வெளிக்கிட்டனான். அதுக்குள்ள வந்திட்டாய். கொஞ்சம் பொறு.. ரீ போட்டுக்கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டு, தும்புத் தடியை கதவு மூலையில் வைத்துவிட்டு.....ரீயுடன் வந்து அமர்ந்த உடனேயே,

என்னக்கா... திடீரெண்டு கோல் பணி வரச்சொன்னனீங்கள்? என அவன் கேட்கவும்...

actor_vijay_koffee_with_anu_photos.jpg

"தம்பி... இப்பவும் அஞ்சலியோட கதைக்கிறனியோ?" சட்டென்று சம்மந்தம் இல்லாதமாதிரிக் கேட்டதும்,

இவனுக்கு " இப்ப இதை ஏன் இவ கேக்கிறா?" என விளங்கவில்லை.

"ஓமக்கா.... ஏன் கேக்கிறியள்?" என ஒரு ஆர்வத்துடன் கேட்டான்.

"ஒண்டுமில்லை நான் ஒரு விசயம் கேள்விப்பட்டன். அதைச் சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டனான்.

அஞ்சலி நல்ல பிள்ளையடா. அதுதான்... நீ லவ் பண்ணுறாய் எண்டு சொல்லைக்குள்ளையும் நான் ஒண்டும் சொல்லேல.

ஆனா, ரெண்டு மூண்டு நாளைக்கு முதல் அஞ்சலியின்ர அப்பாவை என்னோட படிப்பிக்கிற ரீச்சர் பாத்துக் கதைச்சிருக்கா.

அவ சும்மா அஞ்சலியைப் பத்தி விசாரிக்க... அஞ்சலியை வெளிநாட்டுக்கு அனுப்பி

படிப்பிக்கப் போறதாச் சொல்லி இருக்கிறார் அஞ்சலியின்ர அப்பா.

ஏன்.... எக்ஸாம் றிஷல்ட் வரட்டும். அதுக்குப் பிறகு அனுப்புங்கோவன் எண்டு அவ கேட்டதுக்கு,...

இல்ல ரீச்சர்... அவவுக்கு இங்க படிக்க சரிப்பட்டு வராது... எண்டு, ஏதேதோ சொல்லி இருக்கிறார்.

பிறகு நான் விசாரிச்ச விதத்தில... 'உங்கட விஷயம் அவருக்கு தெரிஞ்சிட்டுது' எண்டு தெரியவந்துது. அதைச் சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டனான்" என்று அவ சொல்லி முடிக்கும்போது...

தன் வாயில் கொண்டுபோன ரீயை அப்படியே திரும்பவும் டேபிளில் வைத்தவனின் தலையில்... பேரிடி விழுந்ததுபோல் இருந்தது.

சில வினாடிகள் எதுவும் பேசவில்லை

தன் வலது பக்கத்து நெற்றியினை விரல்களால் அழுத்திக்கொண்டிருந்தவனின் நிலைமை அறிந்த அவனது அக்கா...

"டேய் அஞ்சலியின்ர அப்பா ஒரு முடிவெடுத்திட்டா அதைத்தான் செய்து முடிப்பார். ரொம்ப நல்ல மனுஷன்தான். ஆனா தன்ர மகளின்ர விஷயம் எண்டு வரக்குள்ள யோசிப்பார்தானே! நீ ஒண்டுக்கும் யோசிக்காத. அதுசரி...

அஞ்சலி இதைப்பற்றி ஒண்டும் சொல்லேலையோ உனக்கு?" என்று அவ கேட்க,

"இல்லை அக்கா. நேத்துப் பின்னேரமும் பாத்தனான்...ஒண்டும் சொல்லேலை!!

இன்னும் அரை மணித்தியாலத்தில... அவளுக்கு கிளாஸ் முடிய சந்திக்கிறதெண்டு சொன்னவள். கதைச்சாக் கேக்கிறன்..." என்றவன்,

அவ கொடுத்த ரீயைக் குடிக்காமலேயே எழும்பினான்.

"தம்பி... ஒண்டுக்கும் யோசிக்காத. எல்லாம் நல்லபடி நடக்கும். எதுக்கும் ஒருக்கா அவளோடயும் கதை!" என்றா,

அவனுடைய அக்கா.

"ஓமக்கா... கதைக்கிறன். சரி நான் போட்டு... பிறகு வாறனக்கா!" என்று சொல்லிவிட்டு

தன் அக்காவின் வீட்டில் இருந்து வெளியாகியவனின் மனது உண்மையிலேயே கலங்கிப் போயிருந்தது.

kajal-agarwal-stills-06.jpg

அஞ்சலியைப் பார்க்கக் கிடைக்காத நாட்களில், சந்திக்க முடியாத தருணங்களில் அவன் படும்பாடு சொல்லி மாளாது.

அன்று முழுவதும் இருண்ட நாட்போல இருக்கும் அவனுக்கு. எந்த வேலையும் ஓடாது.

இன்றில்லாவிட்டால் நாளையாவது பார்க்கலாம்... என்று ஆறுதல்பட்டுக்கொண்டே அவளுடன் அன்று நேரங்கிடைக்கும் போதெல்லாம் போனில் கதைத்துக்கொண்டிருப்பான்.

அஞ்சலியும் "சொறிடா... என்னால இண்டைக்கு வர ஏலாமப் போச்சு.... சொறிடா! சொறிடா!" என

ஆயிரத்தெட்டு 'சொறி' சொல்லிக் கெஞ்சிக்கொண்டிருப்பாள்.

நிலைமை இப்படி இருக்க...

இவனுக்கு தன் அக்கா சொன்ன அந்த விடயம் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தாலும்... "அவளைப் பிரியப் போகின்றேனோ?" என்ற ஏக்கமே மேலோங்கியிருந்தது.

சரி... எதுக்கும் அஞ்சலி வந்ததும் விசாரிப்பம் என்று இருந்தவனுக்கு... அன்று அவளைப் பார்க்க முடியவில்லை.

"கிளாஸ் முடிஞ்ச கையோட அம்மா வந்து கூட்டிக்கொண்டு போய்ட்டா... சொறிடா...! நாளைக்குப் பாக்கிறன்" என்று அஞ்சலி அனுப்பியிருந்த மெசேஜை மட்டுமே பார்க்க முடிந்தது.

இவனுக்குள் குழப்பம் இன்னும் அதிகமாகியது.

"கொஞ்ச நாளா... அவளின்ர அம்மாதான் கூட்டிக்கொண்டு போக வாறா... அடிக்கடி! முன்பெல்லாம் அப்படி இல்லை. இடைக்கிடைதான் வருவா. இப்ப அவ அடிக்கடி வாறதுக்கும்... தன் அக்கா சொன்னதுக்கும் சம்மந்தம் இருக்கோணும்" என்று யோசித்தவன்...

தன் நண்பன் விமலுக்கு போன் எடுத்து... "எங்கடா நிக்கிறா?" என்று விசாரிக்கவும்,

"டேய் நான் உன்ர கடையடியிலதான் நிக்கிறன். நீ எங்க போயிட்டாய் இவ்வளவு நேரம்?" என்று திருப்பிக்கேட்டான் விமல்.

"டேய்.. நீ அப்பிடியே 'லிட்டில் ஏசியா' பஸ் ஹொல்டில நில்லு. நானும் வந்துகொண்டிருக்கிறன்... வந்து சொல்லுறன்" என்று அவன் சொன்ன ஒரு சில நிமிடங்களில் அவனும் விமலும் அங்கு சந்திக்கின்றார்கள்.

p-017484733.jpg

"என்ன விஷயம் மச்சான்? எங்க போயிருந்தனி இவ்வளவு நேரமும்?" என்று விமல் கேட்க...

"அக்கா வரச்சொல்லியிருந்தவடா, அதுதான் போனனான்... ஒரு சின்னப் பிரச்சினை" என்று அவன் இழுத்து முகத்தைத் தொங்கப்போடவுமே.... இவன் ஏதோ பிரச்சினையில் இருக்கிறான் என. விமலுக்கு விளங்கிவிட்டது...

"சரி வா!அப்பிடியே.. 'அமீன் நானா' கடைக்குள்ள போய் ஒரு பிலேன்ரீ குடிச்சுக்கொண்டு கதைப்பம்" என 'லிட்டில் ஏசியா பக்கத்திலிருந்த அந்த முஸ்லீம் சாப்பாட்டுக் கடைக்குள் அவனைக் கூட்டிக்கொண்டு சென்றான் விமல்.

சூடான பிலேன்ரீயோடு சிகரெட்டைப் பற்றவைத்தார்கள்.

"என்ன பிரச்சினை? ஏன் ஒரு மாதிரியா இருக்கிறாய்?" என விமல் தொடங்க,

"டேய் எங்கட விசயம் அஞ்சலி வீட்டுக்கு தெரிஞ்சுபோச்சு ! அக்கா சொன்னவ. அதோட... அஞ்சலியை வெளிநாட்டுக்கு அனுப்புறதுக்கும் அலுவல் நடக்குதாம். அதுதான்...

என அவன் இழுக்கவும்,

"எப்ப... எங்க... அனுப்பப் போயினமாம்?" என விமல் கொஞ்சம் அதிர்ச்சியுடன் கேட்டான் .

"எப்பயெண்டு தெரியேல.... அவுஸ்ரேலியா அல்லது லண்டனுக்கு... படிக்கிறதுக்காம் !" என்றான் அவன் 'தம்மை' இழுத்து ஊதியபடியே.

அவனது ரென்ஷனை புரிந்துகொண்ட விமல்,

"டேய் இதுக்கேன் யோசிக்கிறாய்....? லண்டன், அவுஸ்ரேலியாவுக்கு 'ஸ்ருடன்ற் வீஸா' எடுக்கிறது இப்ப கொஞ்சம்

கஸ்டம் மச்சான். அப்பிடிக் கிடைச்சாலும் அஞ்சலியும் அதுக்கு ஒத்துக்கொள்ள வேணும். கவலைப்படாத! என்று சொல்லவும்...

அதற்கு அவன் சொன்ன பதில்... விமலையும் கொஞ்சம் யோசிக்க வைத்தது.

ஆனால்... தனது தலையெழுத்தையே மாற்றப்போகின்ற விடயம் அதுவாகத்தான் இருக்கப்போகின்றது என்பதனை... அவன் அப்பொழுது அறிந்திருக்கவில்லை!!!

தொடரும்...

[15]

"அப்பிடிச் சொல்லாத விமல். அவளுக்கு விஸா கிடைச்சால்... படிக்கப் போகட்டும்.

அஞ்சலி அங்க படிக்கப் போனா எப்பிடியும் மூண்டுநாலு வருசம் எடுக்கும். அவள் அங்க படிச்சு முடிக்கும்வரைக்கும்...

அவளின்ர அப்பாவும் இதுகளைப்பத்தி ஒண்டும் யோசிக்கமாட்டார்.

அதுக்குள்ள நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருவன். அதுக்குப்பிறகு நானே போய் அவரோட கதைப்பன். எனக்குத்தான் படிக்க முடியாத சூழ்நிலை. அவளாவது நல்லாப் படிக்கட்டுமடா...!" என அவன் சொன்னதைக் கேட்டதும்,

விமலும் கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கினான்.

"சரி மச்சான்... ஆனா, உன்னால அவளை பிரிஞ்சிருக்க முடியுமோ ? ஒரு நாள் பாக்காட்டியும் என்னை நித்திரைகொள்ள விடாமல் புலம்பிக் கொண்டிருப்பாய்! எப்பிடி இருக்கப் போறியோ தெரியேல!எதுக்கும் அஞ்சலியோடயும் இதப்பற்றி கதை. அவளின்ர விருப்பத்தையும் ஒருக்காக் கேள்!" என்றான் விமல்.

"சரிடா... இன்னும் அவளின்ர தாய்தேப்பன் அவளிட்ட இதப்பற்றி ஒண்டும் கேக்கேல எண்டு நினைக்கிறன். ஏதாவது கேட்டிருந்தால் சொல்லியிருப்பாள். இண்டைக்கு தாய் வந்தபடியா பாக்கேலாமப் போச்சுது. நாளைக்கு வாறன் எண்டிருக்கிறாள்.பாப்பம்... என்று அவன் சொல்லிக்கொண்டே எழும்பவும் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

"டேய் இப்பிடியெல்லாம் வில்லங்கம் வருமெண்டு தெரிஞ்சுதான் நான் இன்னும் லவ் பண்ணாமல் இருக்கிறன். உனக்கு அண்டைக்கே சொன்னான்... நீ கேக்கேல. இப்ப பிரச்சினை ஸ்ரார்ட் ஆகீட்டுது. என்னென்ன நடக்கப் போகுதோ தெரியேல.

நல்லா யோசிச்சு முடிவெடு என்று சொல்லிவிட்டு... மச்சான் நான் வீட்ட போறன்.நாளைக்கும் வேலை... உடுப்புத் தோய்க்கோணும். நைட்டுக்கு வா ஆறுதலாக் கதைப்பம்" என்ற விமல் வீட்டுக்கு கிளம்பினான்.

அடுத்த நாள் மாலை... பின்னேரம் 5.00 மணி - அஞ்சலியுடன் அவன் - வெள்ளவத்தையிலுள்ள ஒரு இன்ரர்நெட் கபே....

எலியைப் பிடித்த பூனையைப்போல... அவனது கை கொம்பியூட்டர் மவுஸை பிடித்தபடி, எந்தவொரு பேஜையும் திறக்காமலேயே டெஸ்க்ரொப்பில் ரைட் கிளிக் பண்ணிப் பண்ணி றீஃபிரஸ் பண்ணிக்கொண்டே இருந்தது. வந்ததிலிருந்து இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவேயில்லை.

இவனுக்கு கோபம் எதுவுமில்லை என்றாலும்... அவனது அக்கா சொன்ன விடயமும், இவள் முதல்நாள் பார்க்க வராததும் மனதுக்குள் நெருடிக்கொண்டே இருந்தது. மனக் குழப்பத்தில் இருந்தவன் ... 'அவள் ஏதாவது சொல்லுவாள்' என காத்திருந்தவன் கொம்பியூடர் ஸ்கீரினையே பார்த்துக்கொண்டிருந்தான்.

எப்பவும் அவன் வந்த உடனேயே... கன்னத்திலோ எங்கேயோ முத்தம் வைக்காமல் உட்கார மாட்டான்.

ஆனால் இன்று அவனின் செயல்கள் எல்லாமே வித்தியாசமாய் இருப்பதனை உணர்ந்தாள் அஞ்சலி.

kajal-agarwal-lipkiss-photos-102.jpg

அவனது கையுக்குள் தன் கையைக் கோர்த்த அஞ்சலி... அப்படியே அவன் தோளில் சாய்ந்தபடி... "ஏன்டா ஒண்டுமே கதைக்காமல் இருக்கிறாய்? நேத்து நான் வரேல எண்டு கோபமோ? நான் என்னடா பண்ணுறது.. அம்மா வந்திட்டா. அதுதான்.... என்று செல்லமாக சிணுங்கிகொண்டே சொல்லியபடி அவனது முகத்தை பார்த்தாள்... அவன் ஏதாவது பேசுவான் என்ற ஏக்கத்தோடு.

இவன் ஒன்றுமே பேசவில்லை. ஏதோ ஒரு பாட்டை 'பிளே' பண்ணியவன் ஹெட்போனை எடுத்து தன் தலையில் மாட்டுவதற்கு போகவும்...

"நான் உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிறன். நீங்கள் என்னடா எண்டால்... பாட்டுக் கேக்கப் போறியள் ! "என்று சொல்லிக்கொண்டே அதை பிடுங்கிக் கீழே வைத்தாள்.

"இன்னும் என்னில கோபமா... ஏன்டா?"... கெஞ்சினாள்.

அதுக்கும் அவன் மெளனமாக இருக்க.. அவனது நாடியைப் பிடித்து திருப்பியவள்...

தன் முகத்தை அவன் முகத்துக்கு நேரே கொண்டு வந்து அவனது கன்னத்தில் மிருதுவாக முத்தமிட்டுவிட்டு... "இப்பவும் கோபமாடா? என இயலாமையுடன் உதட்டைப் பிதுக்கியபடி கேட்டாள்.

அதற்குமேல் அவனால் மெளனம் காக்க முடியவில்லை.

"இல்லடா அஞ்சு ...! வேலையில கொஞ்சம் ரென்ஷன்.

அதுதான் யோசிச்சுக்கொண்டு இருக்கிறன் " என்று அவன் சொன்னது பொய்தான்!

"சரிடா... யோசிக்காத! என்ன பிரச்சினை எண்டாலும் சொல்லு. ஆனா என்னோட இப்பிடி இருக்காத பிளீஸ்டா" என்றாள் அஞ்சலி கொஞ்சம் கவலையோடு.

"எனக்கும் இப்ப கொஞ்சம் ரென்ஷனடா... ! உன்னிட்ட சொன்னா...

நீ கவலைப்படுவாய் எண்டு சொல்லேல. அப்பா..............." என்று அவள் ஆரம்பித்ததும்,

அவன் தன் கவனம் முழுவதையும் அவள் பக்கம் திருப்பினான்.

"அப்பா... என்னை லண்டனுக்குப் போய் படிக்கட்டாம் எண்டுறார். எனக்கு அங்கையெல்லாம் போக விருப்பமில்லை. உன்னை விட்டிட்டு என்னால இருக்கேலாது. முந்தனாத்து நைட்தான் சொன்னவர். அதோட... கொள்ளுப்பிடியில உள்ள பிரிட்டிஷ் இன்ஸ்ரியூட் ஒண்டுக்கு கிளாஸுக்கு போகவாம். விஸாவுக்கு அப்ளை பண்ணுற அலுவலை தான் பாக்கப்போறதாவும் சொல்லிட்டார். நான் என்ன பண்ணுறது எண்டே தெரியேலடா." சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கத் தொடங்கியிருந்தது.

"ஏன் அஞ்சு... அப்பா அவசரப்படுறார்? இன்னும் A/L எக்ஸாம் றிசல்டே வரேல. அதுக்குள்ள...." என்று அவன் சொல்லவும்...

"இல்ல... எனக்கு றிசல்ட் அவ்வளவு நல்லா வராது. அதுதான் எனக்கு என்ன பண்ணுறது எண்டு ஒண்டுமா விளங்கேல...! " என்றவள்,

"எனக்கு உன்னை விட்டிட்டு இருக்க ஏலாதுடா...!" என்று கலங்கியபடியே அவன் தோளில் மீண்டும் சாய்ந்துகொண்டாள்.

இவனுக்கு... இப்பொழுதுதான், பல விடயங்கள் புரிய ஆரம்பித்தது.

அவளது அப்பா எங்கள் காதல் விடயம் தனக்குத் தெரிந்தது மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை என்ற உண்மையை அறிந்துகொண்டான். அதைப்பற்றி அஞ்சுவிட்ட ஒண்டுமே சொல்லாமல்...

அவளை படிக்க அனுப்பிற சாட்டில... வெளிநாட்டுக்கு அனுப்பப் போயினம்! அவனுக்கு எல்லாமே புரிந்துவிட்டது என்றாலும்... அவளிடம் அவன் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை.

"சரிமா... பீல் பண்ணாத! பிறகு பாப்பம். இப்ப ஒண்டுக்கும் யோசிக்காத..!" என்று சொல்லிவிட்டு...

அவளுக்கு நேரமாகிவிட்டதை உணர்ந்து "அஞ்சு ரைம் ஆச்சு... வெளிக்கிடுவம்!" என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தவன், அவளது கண்கள் இன்னும் கலங்கியே இருப்பதையும் கவனிக்கத் தவறவில்லை.

"அஞ்சு......" என செல்லமாக அவளை அழைத்தவன்,

"என்ர செல்லமல்லோ... எழும்புங்கோ போவம்!" என அவளது தோளில் கையை வைத்தபடி எழுந்தவனின்

கையைப் பிடித்து இழுத்தாள் மீண்டும் தன் பக்கத்தில் அமரச்சொல்லி.

"என்னமா... என்னாச்சு?" என்றவனிடம்,

"இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் இருக்கிறியாடா...?"

என்று கெஞ்சலோடு கேட்டவள், அவன் உட்கார்ந்ததும்... மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

0.jpg

இப்பொழுது அவனது கண்ணோரத்திலும் ஈரம் கசிய ஆரம்பித்தாலும் அதை துடைத்துகொண்டான்...

அவளுக்குத் தெரியாமலேயே.

A/L பரீட்சை முடிவுகளும் வெளிவந்திருந்தது.

அஞ்சலியின் பெறுபேறுகள் அவ்வளவு நன்றாக வரவில்லை. அதை அவளும் எதிர்பார்த்ததுதான்.

அதன் விளைவு , அதன் பின் அவள் A/L வகுப்புக்களுக்கு செல்வதில்லை. அவளது தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க கொள்ளுப்பிட்டி, காலி வீதியோடிருந்த அந்த பிரிட்டிஷ் கல்வி நிறுவனத்திலேயே படிக்கச் சென்று வந்தாள்.

அவளது தாய் கூட்டிச்செல்ல வராத நாட்களில் அவளும் அவனும் பஸ்ஸிலேயே பேசிக்கொண்டு வருவார்கள்..

அப்படி வந்த ஒரு நாளில்தான்...

தன் தந்தை வீஸா விண்ணப்பத்தில் தன் கையெழுத்து வாங்கியதையும் அவனிடம் சொன்னாள் அஞ்சலி.

பஸ் பம்பலப்பிட்டியினூடே வெள்ளவத்தைப் பக்கமாக போய்க்கொண்டிருந்தது.

"அஞ்சு நான் உன்னோட கொஞ்சம் கதைக்கோணும். பம்பலப்பிட்டி பிளற்ஸுக்கு முன்னால இறங்குவம்" என்றதும்

அவளும் 'சரி' என்பதுபோல் மெளனமாய் அவன் கண்களைப் பார்த்தாள்.

இருவரும் அங்கு இறங்கி... கடற்கரை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போதே அவன் பேச ஆரம்பிக்கிறான்.

"அஞ்சு... உனக்கு லண்டனுக்குப் போய் படிக்க விருப்பமோ?" என அவன் ஆரம்பிக்கவும்...

"டேய்... எனக்கு உன்னை பிரிஞ்சு போக ஏலாது. நீயும் என்னோட வருவாயெண்டால் சொல்லு...நான் ரெடி.

அதோட அப்பா படிக்க சொல்லுறது எக்கவுண்டிங். நான் ஆசைப்படுறது மெடிசின். எனக்கு இதில விருப்பமில்லை. ஆனா, அப்பாட்ட அதை எப்பிடி சொல்லுறதெண்டும் தெரியேல. றிசல்ட்ஸ் வேற குறைவா வந்திட்டுது. வீஸா கிடைச்சாத்தானே!அதுக்குப்பிறகு பாப்பம்" என்று அஞ்சலி கொஞ்சம் கவலையோடு சொல்லிவிட்டு,

"எனக்கெல்லாம் உவங்கள் ஈஸியா வீஸா குடுக்க மாட்டாங்கள்...! நீ கவலைப்படாதடா!! " என்றாள் குழந்தைபோல் சிரித்துக்கொண்டே.

அவளிடம் இவன் அதிகமாய் இரசிப்பதே அவளது அந்தக் குழந்தைத்தனமான சிரிப்பைத்தான். அவள் அப்படி சிரிக்கும்போது அவன் மெய்மறந்து அதில் லயித்திருப்பான்.

Kajal+Agarwal+Widescreen+(9).jpg

ஆனால் இன்று அவன் கொஞ்சம் சீரியஸாகவே இருந்தான்.

"வீஸா கிடைச்சால் போய்ப்படி அஞ்சு! லண்டனில படிச்சால் கொஞ்சம் மதிப்பு இருக்கும். நீ அங்கை படிச்சு முடிக்கிறதுக்கு எப்பிடியும் மூண்டுநாலு வருஷம் ஆகும். அதுக்குள்ள நானும் இங்க என்ர பிஸ்னஸில கொஞ்சம் செட்டில் ஆயிடுவன். அதுக்குப்பிறகு எல்லாம் நல்லபடி நடக்கும்.

எங்கட எதிர்கால வாழ்க்கைக்காக நாங்கள் ஒரு மூண்டு வருஷம் பிரிஞ்சு இருப்பம். பிரிஞ்சு இருக்கைக்குள்ளதான் அன்பு இன்னும் கூடும்" என அவன் ஏற்கனவே முடிவெடுத்திருந்த விடயத்தினை சொல்லிக்கொண்டே போகவும்...

அஞ்சலியின் முகம் கொஞ்சங்கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்தது.

Kajal-Agarwal-6.jpg

தொடரும்...

[16]

அவன் அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கையில் அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கோபமும் துக்கமும் கலந்து சிவந்த அவளின் முகம்... வெடித்தழுதுவிடும்போல் இருந்தது.

ஆனாலும் இவளிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவுடன்....

"அஞ்சு! எனக்கெல்லாம் நிறையப் படிக்கோணும் எண்டு ஆசை இருந்திச்சுது. ஆனா, என்ர கஷ்டத்தால

அது முடியாமல் போச்சுது. நீயாவது படிக்கோணும்.

வீஸா உனக்கு எப்பிடியும் கிடைக்கும்.... போய்ப் படி அஞ்சு!" என அவன் சொல்லவும்,

அவளால் அதற்குமேல் பேசாமல் இருக்க முடியவில்லை,

vlcsnap-2010-07-28-22h41m08s102.png

"இல்ல....! உங்களை விட்டிட்டு என்னால அங்கயெல்லாம் போய்ப் படிக்க ஏலாது.!! என்னைப் பிரிஞ்சு உன்னால இருக்க முடியுமோ சொல்லு !?

உன்னால இருக்கமுடியுமோ இல்லையோ.... என்னால முடியாதுடா!!! எனக்கு போக விருப்பமில்லை!!! அப்பாதான் சொல்லுறார் எண்டால், நீயும் அப்பிடித்தான் சொல்லுறாய்... " கலங்கத் தொடங்கினாள் அஞ்சலி.

அழுதுகொண்டிருந்தவளிடம்....

"அஞ்சு.... நான் அதுக்குச் சொல்லேல, நீயும் படிக்கோணும். நானும் ஒரு நல்ல நிலைக்கு வரவேணும்.

கொஞ்சநாள்தானே...!? டக்கெண்டு போயிடும். ஒரு மூண்டு வருஷம் பல்லைக் கடிச்சுக்கொண்டு இருப்பம்.

நீ படிச்சு முடிச்ச கையோட.... நானே உன்ர அப்பாவோட எங்கட விசயத்தைப் பற்றிக் கதைக்கிறன்" என அவன்

அவளை எவ்வளவு சமாதானப்படுத்தினாலும்...

அஞ்சலி சமாதானமாகிறதாக தெரியவில்லை.

"சரிமா... எதுக்கும் வீஸா வரட்டும், அதுக்குப்பிறகு பாப்பம்.

இப்ப நீ ரொம்ப யோசிக்காத அஞ்சு..." என்று அவன் சொல்லிக்கொண்டே நடக்கையில்,

கடற்கரையை நெருங்கியிருந்தார்கள்.

தண்டவாளத்தினை தாண்டிச்சென்று... உட்காருவதற்கு வசதியாக கடற்கரையோடு இருந்த ஒரு கல்லில் அமர்ந்தார்கள்.

sl43.jpg

கலங்கிய கண்களோடு இருந்தவள் ஒன்றுமே பேசாமல்... அவனது தோளில் சாய்ந்தபடி, கடலையே பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.

கடற்கரைக் காற்றில்... அவளது மென்மையான தலைமுடிகள் மட்டும்

அவனது முகத்தில் உரசி உரசி பேசிக்கொண்டிருந்தன

Surya.jpg

அவனுக்கு தெரியும்... அவளால் தன்னை பார்க்காமல் பேசாமல் இருக்க முடியாதென்று.

வீட்டில் அவள் அம்மாவோடு ஏதாவது சின்னதாக சண்டை பிடித்தால்கூட... அடுத்தநாள் வந்து அதைச்சொல்லி... அவன் நெஞ்சில் முகம்புதைத்து அழுதபின்னர்தான் அமைதியாகுவாள்.

எப்பவுமே அவனின் அணைப்புக்குள் இருக்க விரும்பும் செல்லத் தேவதை அவள்.

அவனாலும் அவளை பிரிந்து இருப்பதென்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாய்த்தான் இருந்தது.

கடலைப் பார்த்தபடி இப்படியே... சிந்தித்துக்கொண்டிருந்தவனுக்கு...

திடீரென்று அவள் அப்படிக் கேட்டது.... பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது!!!

"நாங்கள் ரெண்டுபேரும் றெஜிஸ்டர் பண்ணுவமா? " என்று கேட்டுவிட்டு அவன் முகத்தையே பார்த்தாள் அஞ்சலி தெளிவான முகத்தோடு.

"அஞ்சு........." - அவனால் சட்டென்று என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சில வினாடிகள் யோசித்தவன்,

"அஞ்சு... லூஸா உனக்கு? என் மேல நம்பிக்கை இல்லையா? நீ லண்டனுக்குப் போன உடன நான் உன்னை மறந்திடுவன் எண்டு நினைக்கிறியோ? நம்பிக்கை இல்லாமலா கேக்கிறாய்?" என கொஞ்சம் கோபமாகக் கேட்கவும்,

"அய்யோ... நான் அதுக்காண்டிக் கேக்கேல. ஏன் இப்பிடி நினைக்கிறியள்?

நீ இல்லாட்டில் நான் செத்திடுவன்ரா...!" சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள்.

கொஞ்ச நேரத்தில் கண்களைத் துடைத்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

"பிளீஸ்டா... எழுதுவம்! நாங்கள் எழுதினால் எங்களை யாருமே பிரிக்க ஏலாது. அதோட நீங்களும் என்னைப் பார்க்கிறதுக்கு லண்டனுக்கு வரலாம். நீ என்ர புருஷன் எண்ட நினைவோடயே நான் அந்த மூண்டு வருஷத்தை முடிச்சிடுவன்.!

"அஞ்சு... எங்கட கலியாணம் எண்டுறது... உங்கட அப்பா அம்மா, என்ர அம்மா எண்டு எல்லாரின்ர விருப்பத்தோடையும் நடக்கோணும் எண்டு ஆசைப்படுறன். நாளைக்கு ஒரு காலத்தில.... 'தன்ர மகளை சொல்லாமல் கொள்ளாமல் ரெஜிஸ்ரர் பண்ணினவன்' எண்டு உங்கட அப்ப அம்மா சொல்லலாம். ம்ம்ம ... " ஒரு பெருமூச்சு விட்டவன்...

06sl4.jpg

"இதப்பற்றி பிறகு யோசிப்பம். நேரம் போட்டுடுது அஞ்சு. வெளிக்கிடுவம்! " என்று சொன்னதும் அவள் இன்னும் முகத்தை சோகமாகவே வைத்துக்கொண்டிருந்தாள்.

"அஞ்சு இதப்பற்றி நான் யோசிக்கிறன், பிறகு கதைப்பம்" என்றவன்... அவள் எழும்ப முயலும்போது விழுந்துவிடுவதைப் போல் தடுமாறவும்... தனது கையால் அவளை தாங்கிப் பிடித்தான். அவளை அணைத்தபடியே நடந்தவன்... அவளை வீட்டிற்கு அருகில் கூட்டிச்சென்று விடுவதற்காக ஒரு ஓட்டோவைத் தேடினான்.

அவள் வீட்டிற்கு சற்றுத்தூரம் தள்ளி ஓட்டோவிலிருந்து இறங்கும்போது...

"அஞ்சு... " என அழைத்தவனின் கைகளை பற்றிப்பிடித்தவள் "நான் நட் போன் பண்ணுறன். ரேக் கேர். பாத்துப் போங்கோ" என்று சொல்லிவிட்டுச் சென்றவளை கனமான எண்ணங்களோடு பிரிந்தான்.

அன்றிரவு அவனது அறையில்...

விமலிடம் அவளுடன் பேசிய எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க...

இடையில் விமல் தன் வேலையைத் தொடங்கினான்.

"பிஸ்னஸோட ... திருப்பியும் இடைக்கிட கிளாஸ் குடுக்க வெளிக்கிடு மச்சான்.!

அஞ்சலி போனாப் பிறகு... தனியா இருந்தால், என்னை நித்திரைகொள்ள விடமாட்டாய்! உனக்கு ஆறுதல் சொல்லுறதிலயே என்ர நித்திரை போயிடும்...!" என வேண்டுமென்றே நக்கலடித்த விமலின் மேல் இவனுக்கு கடுப்பாகியது.

"டேய் நான் எவ்வளவு முக்கியமான விசயத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறன். உனக்கு இடைக்குள்ளால நக்கல் கேக்குது...." கோபத்துடன் சொன்னவன்,

"அடேய்... 'வீஸா கிடைச்சால் றெஜிஸ்ரர் பண்ணுவம்.... அப்பதான் UK போவாளாம்' எண்டுறாள்.. என்னடா பண்ணுறது...?" குழம்பிப்போய்க் கேட்டான் அவன்.

அதற்கு விமல்...

"பண்ணு....! யார் வேண்டாம் எண்டு சொன்னது?! எனக்கும் கலியாண பார்ட்டி கிடைச்சமாதிரி இருக்கும்!" என சிரித்தபடியே சொல்ல,

"டேய்...! உன்ர காலில விழுந்து கும்பிடுறன். தயவுசெய்து , நான் சீரியஸா கேக்கிறதுக்கு... கொஞ்சம் சீரியஸாக் கதை சொல்லு மச்சான். நானே ரென்ஷனில இருக்கிறன்... அதுக்குள்ள உனக்கு நக்கல் வேற..." சலித்துக்கொண்டான்.

அவனின் குழப்பத்தினை உணர்ந்த விமல்,

"இப்போதைக்கு இதப்பற்றி யோசிச்சுக் குழம்பாத மச்சான். முதல்ல... அவளுக்கு வீஸா கிடைக்குதா இல்லையாண்டு பாப்பம். அதுக்குப் பிறகு என்ன செய்யலாம் எண்டு முடிவெடுப்பம். இப்ப பேசாமல் படுடா! " என்று சொல்லிவிட்டு அந்த கும்பகர்ணன் படுத்துவிட்டான்.

சில பகல்களும் சில இரவுகளும் போட்டிபோட்டுக்கொண்டு... வழமைபோல் ஓடி மறைகின்றது.

அப்படி ஓடிக்கொண்டிருந்த ஒரு பகலில்...

அவர்களது காதலில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கான 'முதல் மணி' அடிக்கிறது.

அன்று தனது வேலைகளில் பிஸியாக இருந்தான். ஒலித்துக்கொண்டிருந்த தனது செல்போனை எடுத்துப் பார்த்ததும்.... அவனது முகம் மகிழ்ச்சியில் மலர்கிறது.

அஞ்சலியின் அழைப்புக்கள் வரும்போது தன் வேலைக் களைப்பெல்லாவற்றையும் மறந்து போவான் இவன்.

420180_372813469406969_106660206022298_1276757_483982557_n.jpg

அழைப்பை எடுத்தவனிடம் அவள் சொன்ன விடயத்தினை நினைத்து.... சந்தோசப்படுவதா அல்லது கவலைப்படுவதா

என்று தெரியாதவன்... "கொன்கிராட்ஸ் அஞ்சு... நல்ல விசயம்" என அவன் சொன்னபோது.... அவனது மனது உண்மையிலேயே கலங்கிப்போயிருந்தது.

"நான் இண்டைக்கு சந்திக்க வர ஏலாதுடா...! Sorry...! நாளைக்கு பாக்கிறன்.

நான் உங்களோட நிறையக் கதைக்கோணும்.

ஒண்டுக்கும் யோசிக்காதயுங்கோ. கவலைப்படாதையுங்கோ. நான் நைட் கதைக்கிறன். இப்ப வைக்கிறன்" என்று அவனின் உள்ளத்தை ஆழமாக புரிந்துகொண்டவள் என்பதைப்போல சொல்லிவிட்டு, போனை வைக்காமல் காத்திருந்தவளிடம்...

" Bye அஞ்சு.... Take Care! " என்று சொல்லிவிட்டு, போனை 'கட் ' பண்ணினான் அவன்.

தொடரும்...

இக்கதையின் தொடர்ச்சி பகுதி- 17 இல் இருந்து வாசிப்பதற்கு...

தயவுசெய்து கீழுள்ள இணைப்பில் அழுத்துங்கள்.

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17 )

Edited by கவிதை

ஆக ஒரு ஐஸ்கிறீமோடை டீல் ஓவர் எண்டு சொல்லுறியள் .

  • கருத்துக்கள உறவுகள்

அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பார்கள்

இங்கே ஐஸ்கிறீமா..

  • கருத்துக்கள உறவுகள்

அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பார்கள்

இங்கே ஐஸ்கிறீமா..

உதாவது பறவாயில்லை. :lol:

விரைவாக எழுதி முடியுங்கோ கவி! தொடர்ந்து வாசிக்க ஆவல்!

  • கருத்துக்கள உறவுகள்

அவளுடைய உயர்தரப் பரீட்சைகளும் முடிந்து விட்டிருந்தன.

ஆனால் "தான் பரீட்சையை ஒழுங்காக எழுதவில்லை என கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள் அஞ்சலி.

லவ்ஸ் வந்தால் வேறை என்ன நிலமை??!! :D

லவ்ஸ் வந்தால் வேறை என்ன நிலமை??!! :D

யூனிக்குப் போகும் வரையாவது உந்த அநியாயம் (லவ்) வரக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

K+1.jpg

கவிதை...இந்தப் படத்திலையே பாதிக் கதை சொல்லிப்போட்டியள்...விளங்குது பிறகென்ன நடந்திருக்கும் எண்டு... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் கவிதை, இப்பிடி பொறுத்த கட்டத்தில தொடரும் எண்டு போடுறது எல்லாம் கெட்ட பழக்கம் கண்டியலே. உந்த பெண் நட்புக்கள் பொல்லாத சாமான். இங்க யூனியில படிச்ச வெள்ளைப் பெட்டயள் எங்காவது வழி தெருவில கண்டால் வந்து தாற "ஹக்"...... மனிசி பக்கத்தில இல்லாததால எதோ சேதாரம் இல்லாமல் தப்பினன்.

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [14] ம் பகுதி [13] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

:)"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை" :(

ஆனால்... தனது தலையெழுத்தையே மாற்றப்போகின்ற விடயம் அதுவாகத்தான் இருக்கப்போகின்றது என்பதனை... அவன் அப்பொழுது அறிந்திருக்கவில்லை!!!

சனத்துக்கு பிறசர் ஏத்திறதே உம்மடை வேலையா போச்சு .

சனத்துக்கு பிறசர் ஏத்திறதே உம்மடை வேலையா போச்சு .

:lol: :lol: :lol:

கவி தொடருங்கள் கோவுக்கு பிறசர் கூடமுன்!

  • தொடங்கியவர்

ஆக ஒரு ஐஸ்கிறீமோடை டீல் ஓவர் எண்டு சொல்லுறியள் .

இதெல்லாம் ஒரு டீலா அண்ணை. இன்னும் நிறைய டீல் வரும் பாருங்கோ!

'றீல்' விடாமல் தொடர்ந்து போகும்....! தொடரும்...! :)

  • தொடங்கியவர்

ம்ம்ம் தொடருங்கோ :)

தொடர்கின்றேன்.... "அவன்" தன் காதலை தொடரும் வரை! :)

  • தொடங்கியவர்

அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பார்கள்

இங்கே ஐஸ்கிறீமா..

அழுத பிள்ளை பால் குடிக்குமோ ஐஸ்கிறீம் குடிக்குமோ...தெரியல! ஆனா, அழுகிற ஆம்பிளை விஷத்தைக் குடிக்க வைக்கிற ஆக்கள் இந்தப் பொம்பிளையள்! :):unsure:

  • தொடங்கியவர்

விரைவாக எழுதி முடியுங்கோ கவி! தொடர்ந்து வாசிக்க ஆவல்!

தொடர்ந்து எழுகின்றேன் அக்கா. :)

  • தொடங்கியவர்

கவிதை...இந்தப் படத்திலையே பாதிக் கதை சொல்லிப்போட்டியள்...விளங்குது பிறகென்ன நடந்திருக்கும் எண்டு... :icon_mrgreen:

இதுக்கு நான் இப்ப பதில் கருத்து சொல்ல முடியல சுபேஸ். முழுக்கதையும் அறிஞ்சாப்பிறகு சொல்லுறன். :rolleyes:

"உடனே அஞ்சலி...... அவ உங்கட ஃபிறண்டா இருக்கலாம். ஆனா... உங்களை

தொட்டுத்தொட்டு கதைக்கிற உரிமை அவவுக்கு இல்ல!

அதோட... "வாடா! போடா!" எண்டு.. அவ உரிமையோட கூப்பிடுறா! அதை என்னால பாக்க முடியேல. அதுதான் தாங்கேலாமல் உடன வந்திட்டன்."

"அவ அப்பிடிப் பண்ணுறதும் ... உங்களை காதலிக்கிற நான் உங்களோட பழகிறதும் ஒரு மாதிரியாத்தானே இருக்கு. எனக்கு மட்டுந்தான் அந்த உரிமை இருக்கவேணும். சொறிடா....இப்பிடிக் கேக்கிறதுக்கு" என சொல்லிவிட்டு அழத்தொடங்கினாள்.

அவனை மிகவும் பாதிக்கிற ஒரேயொரு விடயம் அவளின் அந்த அழுகைதான்.

பல பெண்கள் (எல்லாரையும் சொல்லேல்ல - யாழ் கள அக்காமார் என்னை அடிக்க வரவேண்டாம்) இப்படித்தான். உண்மையைப் புரிந்து கொள்ள மறுப்பார்கள்.

அழுகை என்பது அவர்களது ஆயுதம். அதைக் கையில் எடுத்தால் போச்சு, எல்லா ஆண்மக்களும் சரணடையவேண்டியது தான்! :lol: வேறு வழி? :D

கவிதை நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள். :) :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கவிதை சுவாரசியமாகப் போகிறது என்ன நடக்குமோ தெரியவில்லை :unsure:

பல பெண்கள் (எல்லாரையும் சொல்லேல்ல - யாழ் கள அக்காமார் என்னை அடிக்க வரவேண்டாம்) இப்படித்தான். உண்மையைப் புரிந்து கொள்ள மறுப்பார்கள்.

அழுகை என்பது அவர்களது ஆயுதம். அதைக் கையில் எடுத்தால் போச்சு, எல்லா ஆண்மக்களும் சரணடையவேண்டியது தான்! :lol: வேறு வழி? :D

கவிதை நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள். :) :)

இது தெரியாதா ஈஸ் பெண்களது மிக சிறந்த,முக்கியமான ஆயுதம் கண்ணீர் :lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மற்றவர்களின் பிரச்சனைக்குள் தலைப் போடுவது அறவே பிடிப்பதில்லை,அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. ஆனால் இது ஒரு சிறுகதைப் பகுதி என்றதால் கேக்கிறேன்...ஒவ்வொரு பாகம் எழுதுவதற்கும் ஏன் இரண்டு நாள்,மூன்று நாட்கள் என்று இடைவெளி விடுகிறீர்கள்..சரி ஏதோ தங்கள் விருப்பம்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மற்றவர்களின் பிரச்சனைக்குள் தலைப் போடுவது அறவே பிடிப்பதில்லை,அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. ஆனால் இது ஒரு சிறுகதைப் பகுதி என்றதால் கேக்கிறேன்...ஒவ்வொரு பாகம் எழுதுவதற்கும் ஏன் இரண்டு நாள்,மூன்று நாட்கள் என்று இடைவெளி விடுகிறீர்கள்..சரி ஏதோ தங்கள் விருப்பம்..

கெதியா எழுதினாலும் ஏன் எண்டு கேக்கிறீங்கள்..! :D இரண்டு நாள் இடைவெளி விட்டாலும் கேக்கிறீங்கள்..! :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

Athu thanai boss y this idai veli?

Namma jaayiniyah koba pada vaicha apuram naan aluthiduwan......

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [15] ம் பகுதி [13],[14] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

:)"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை" :(

  • தொடங்கியவர்

யோவ் கவிதை, இப்பிடி பொறுத்த கட்டத்தில தொடரும் எண்டு போடுறது எல்லாம் கெட்ட பழக்கம் கண்டியலே. உந்த பெண் நட்புக்கள் பொல்லாத சாமான். இங்க யூனியில படிச்ச வெள்ளைப் பெட்டயள் எங்காவது வழி தெருவில கண்டால் வந்து தாற "ஹக்"...... மனிசி பக்கத்தில இல்லாததால எதோ சேதாரம் இல்லாமல் தப்பினன்.

என்ன செய்யுறது தும்ஸ்.... காதல் எண்டு வந்திட்டால், இப்பிடித்தான் பொறுத்த கட்டத்தில "பொறுங்கோ" எண்டு சொல்லிட்டுப் போயிடும். கிடந்து தவிக்கிறவனுக்கு கோபமும் வரும். ஆனா... தவிக்க விடுறதில பொண்ணுங்களை மாதிரி யாராலையும் முடியாது கண்டியளோ!!! :rolleyes: :lol:

ஓ... அப்ப உங்களுக்கு மனிஷியிட்ட கொஞ்சம் பயம் எண்டு சொல்லுங்கோ.

5 செக்கன்ட்ஸ் ஹக்குக்காக.... அடி வாங்க ஏலாது அப்பு! :o:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.