Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டயரி-- வருடம் 1986

Featured Replies

ஒவ்வொரு வருடமும் வெய்யில் அடிக்க தொடங்க தோட்டம் ,பேஸ்மன்ட்,கராஜ் இந்த மூன்றிலும் எப்படியும் ஒருக்கா கை வைத்தே தீர வேண்டும்.குளிர்காலத்தில் வேண்டாதவற்றை அள்ளி கட்டி கராஜுக்குள் தள்ளிவிட்டு பின்னர் வெயில் வர அதை ஒருக்கா போய் கிளறி சுத்தம் செய்வதே ஒவ்வொரு வருடமும் பெரிய  வேலையாகி விட்டது.கடந்த ஞாயிறு நல்ல வெய்யில் அடிக்க மனுசியிட்ட நல்ல பெயர் எடுக்க அதிகாலையே எழும்பி கராஜில் கை வைத்துவிட்டேன்.

புல்லு வெட்டுறதை,சம்மர் டயர்களை,பார்பிக்கியு மெசினை வெளியில் எடுத்து சினோ வழிககிற மெசினை  உள்ளுக்க தள்ளிகொண்டு நிற்கும் பொது மேல் தட்டில் (பரண்) கட்டி வைத்து வருடக்கணக்காக கிடக்கும்பெட்டிகளை பார்க்கின்றேன் .எல்லா பெட்டிகளிலும் உள்ளுக்குள் என்ன இருக்கு என்று பெயர் எழுதி தள்ளிவைத்திருக்கு. (இப்படி ஒழுங்கா வேறு இருந்திருக்கின்றேன்)

தமிழ் படங்கள் ,ஆங்கிலப்படங்கள் ,ஆங்கில சிடிக்கள்,யுனிவேர்சல் உடுப்புகள் ,கிறிஸ்மஸ் சோடனைகள், காம்பிங் பொருட்கள் ,தமிழ் புத்தகங்கள் ,ஆங்கில புத்தகங்கள் இப்படியே போகுது. முக்கிய தமிழ் கதைப்புத்தகங்கள் எல்லாம் பேஸ்மெண்டில் இருக்கு இது என்ன என்று ஒருக்கா  கிண்டிப்பார்ப்பம் என்று தமிழ் புத்தக பெட்டியை கீழே இறக்குகின்றேன் . பழைய யாழ் இந்து கல்லூரி ஆண்டுவிழா மலர்கள் ஒரு தொகை பழைய தாயகம் இதழ்கள், பிரபல்யம் இல்லாத சில கவிதை தொகுப்புகள் அதற்குள் மடங்கிய படி மூலைக்குள் ஒரு பிரவுன் நிற டயரி. அட நான் தேடித்திரிந்தது. டயரியை எடுத்து பிரிக்கின்றேன்.

 “உதுக்குத்தான் விடிய கிளீனிங் என்று வெளில வந்தநீங்களோ  “ என்றபடி மனுசி டீ ஐ நீட்டிக்கொண்டு கேட்கின்றார் .”இல்லேப்பா கிளீன் பண்ணேக்க  உந்த பழைய டயரி அகப்பட்டது  ஒருக்கா வாசிப்பம் என்று பார்த்தன் அதற்குள்ள வந்திட்டீர்  ,உம்மைப் பற்றியும்,உம்மை முதன் நாள் சந்தித்த திகதியும் இதில் இருக்கு “

“உந்த டயரியை முதல் என்னட்டை தந்திட்டு வேலையே பாருங்கோ எல்லாம் முடிய உள்ளுக்க வாங்கோ டயரியை தாறன் “என்றபடி  மனுசி  டயரியை புடிங்கிக்கொண்டு வீட்டிற்குள் போய்விட்டார் .டயரி போனால் என்ன? அதில் இருக்கும் அத்தனை விடயங்களும் எனக்கு திகதி வாரியாக பாடம்.எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஆண்டு அது தான் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முருகா  இதையாவது  அர்ஜுன் அண்ணா  முமையாக எழுதி முடித்தால் நூற்றியெட்டு  தேங்காய் உடைக்கிறேன்  :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு நினைவு மீட்டல், அர்ஜுன்.

 

என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. சில விடயங்கள், மற்றவர்களுக்குப் புரியாத மாதிரிச் சில அடையாளங்களால் மட்டும், டயரியில் குறித்து வைத்திருப்பேன்!

 

பிரச்சனை என்னவென்றால், இப்போது என்னென்ன அடையாளங்களை, எவற்றைக் குறிக்கப் பாவித்தேன் என்று எனக்கே மறந்து போய் விட்டது! :o

  • கருத்துக்கள உறவுகள்

டயரியைப் பிடிங்கிக் படிக்கிறது எண்டதும் எனக்கு நினைவுக்கு வருகுது. இப்பிடி என்ர டயரியை ஒராள் பிடுங்கி ஒரு பக்கத்தின்ர ஒரு பதிவை மட்டும் பார்த்ததோட எனக்கு ஏழரைச் சனி அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிடிச்சது. அப்பாவைப் பார்த்து நாட்குறிப்பு எழுதப் பழகிக் கொண்ட நான் அன்றோடு நாட்குறிப்பு எழுதுவதை விட்டு விட்டேன்! (இதைக் கதையாக எழுதலாம், வாசிக்க நல்லா இருக்கும், ஆனா classified file . நான் போய் இருபது வருடங்களுக்குப் பிறகு தான் இதெல்லாம் பப்ளிக்கில விடலாம்!) :D

 

  • கருத்துக்கள உறவுகள்

டயரியைப் பிடிங்கிக் படிக்கிறது எண்டதும் எனக்கு நினைவுக்கு வருகுது. இப்பிடி என்ர டயரியை ஒராள் பிடுங்கி ஒரு பக்கத்தின்ர ஒரு பதிவை மட்டும் பார்த்ததோட எனக்கு ஏழரைச் சனி அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிடிச்சது. அப்பாவைப் பார்த்து நாட்குறிப்பு எழுதப் பழகிக் கொண்ட நான் அன்றோடு நாட்குறிப்பு எழுதுவதை விட்டு விட்டேன்! (இதைக் கதையாக எழுதலாம், வாசிக்க நல்லா இருக்கும், ஆனா classified file . நான் போய் இருபது வருடங்களுக்குப் பிறகு தான் இதெல்லாம் பப்ளிக்கில விடலாம்!) :D

வெரி லக்கி மான் இன்டீட்! :D

 

எனக்கு இருபது வருசமா, இன்னும் சனியன் நடந்து கொண்டிருக்குது!

 

இப்பவும், இடைக்கிடை தன்ர வசதியைப் பொறுந்துச் சனியன் வந்து போகுது! :o

 

உங்கடை கதையைத் தேவைக்கேற்ற மாதிரி, 'சென்சார்' பண்ணி வெளியால விடுங்கோ! :D

அப்ப ஒரு கதையை எழுதலாம் தானே அர்ஜுன் அண்ணா.

  • தொடங்கியவர்

.தொடரும் என போட மறந்துவிட்டேன் .

வருடம் தொடங்கும் போது எழுததொடங்கும் டயரி அநேகம் இடையில் நின்றுவிடும் .இந்தியாவில் இருக்கும் போது பல தேவைகள் இருந்ததால் (கணக்கு வழக்கு உட்பட)  டயரி தொடர்ந்து எழுதினேன் .

 

டயரிக்கதையை நாளை இணைத்துவிடுகின்றேன் .

டயரி கதை முடிய டயரியில் இருக்கும் பல விடயங்கள்  கட்டாயம் எழுதவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முக்கியமாக எதையோ எழுதியபடியால் தான் அதை அவசர அவசரமாக தேடினீர்கள்.எல்லாம் நினைவில் இருக்கும் என்றால் தேடி இருக்க மாட்டீர்கள்.

 

  • தொடங்கியவர்

நுணா -புளொட்டில் நடந்த எனக்கு தெரிந்த விடயங்கள் சில எழுதவேண்டும் என்று இருந்தேன் .அதை ஒரு குறிப்பில் எழுதமுடியாது .திகதி தொட்டு அந்த நேரம் என்னத்தை எழுதினேன் என்பதும் மிக முக்கியம் .

 

முதலில் புதியதோர் உலகமும் தீப்பொறியும் பல விடயங்களை கொண்டு வந்தாலும் அவர்கள் 85 இறுதியில் விலத்திவிட்டார்கள்.

 

அதன் பின் நடந்தவற்றை   இனியோருவில் அசோக் கேள்வி- பதில் பகுதியில் எழுதியிருந்தாலும் அவை பெரும்பாலும் நாட்டில் நடந்த விடயங்கள் தான்.அதே கால கட்டத்தில் தமிழ் நாட்டில் நடந்தவை  எவராலும் எழுதப்படவில்லை .அவற்றை சற்று விபரமாக எழுத எனக்கு ஒரு விருப்பம் இருந்தது உண்மைதான் .

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள். வாசிக்க  என் போன்றோர் ஆவலாக உள்ளோம். சடுதியாக  முடிக்காமல் நேரம் எடுத்து எழுதுங்கள்.

 

அரசியலை மட்டும் எழுதாமல் உங்கடை - அண்ணியின் காதல் கதையையும் எழுதுங்கோ. கதை வாசிக்க ஆவல்  :D

  • தொடங்கியவர்

உந்த டயரியில் உள்ளதைவிட டயரியால் நான் பட்ட இஸ்டங்களும் கஷ்டங்களும் தான் மிக விசேசமானது .இயக்கத்தை விட்டு ஓடிவரும் போது என்னிடம் கையில் இருந்தது உந்த ஒரு டயரியும் எனது பாஸ்போட்டும்  மாத்திரம் தான். அண்ணருக்கு போன் அடித்து  தோமஸ் குக்கால் ஐநூறு பவுன்ஸ் எடுத்தாச்சு,அடுத்து என்ன என்று யோசிக்கும் போதுதான் முரளியின் நினைவு வந்தது. ஈரோசில் இருந்து விலகி பாண்டியன் லொட்சில் தங்கியிருக்கும் முரளி ஏதும்  உதவி என்றால் தன்னை கேட்க சொன்னது ஞாபகம் வருகின்றது.

.

இந்த இடத்தில் முரளியை பற்றியும் சிறிது சொல்லவேண்டும் .ஒரு நாள் கோடம்பாக்கத்தில் இருக்கும்  பாண்டியன் லோட்சை நான் மோட்டர் சயிக்கிளில் தாண்டும் போது முரளி போல ஒருவர் நடந்து போவதை கண்டேன். ஒரு லோக்கலான உடுப்பு, பாட்டா சிலுப்பருடன் இது முரளியாய் இராது இருந்தாலும்  கேட்டுவிடுவம் என்று முரளி என்று அழைத்தேன். திரும்பி ஒரு பார்வை பார்த்தார். முரளிக்கு என்னை வடிவாக தெரியாது முரளியின் தம்பிதான் யாழ் இந்துவில் எனது வகுப்பு நண்பன். A/L  இல் தான் முரளி யாழ் இந்து வந்து சேர்ந்தார் .அவரை அப்படி நினைவு வைத்திருப்பதற்கு காரணம் காய்ந்து போயிருக்கும்  மாணவர்கள் மத்தியில் வெள்ளைகாரனை போல உடுப்பும் தலையிழுப்பும் (மங்கி கட் ) வெகு பொலிஸ்டாக உலாவந்தார் .தம்பியார் எனது நல்ல நண்பன் ஆதலால் முரளியுடனும் இடைக்கிடை கதைத்திருந்தேன் .எனக்கு PURE MATHS கற்பிக்கும் ஆசிரியரின் மருமக்கள் என்பதால் முகம் அப்படியே நினைவில்  இருந்தது.

 

என்னை நான் ஒரு சிறு அறிமுகம் செய்ய முரளி அடையாளம் பிடித்துவிட்டார் .தான் பாண்டியன் லொட்சில் தங்கியிருப்பதாக கூறி என்னையும் அங்கு கூட்டிச்சென்றார் .அவருடன் இன்னுமொருவர் இருந்தார் அவர் தம்பாவின் இயக்கத்தில் இருந்ததாக சொன்னார் .முரளி தான் ஜெர்மனியில் இருந்து இரட்னசபாபதியுடன் ஈரோசிற்கு வந்தததாகவும் இப்போ விலத்தி இங்கு தங்கிநிற்பதாகவும் சொன்னார் .நானும் என்னைபற்றி சொன்னேன் .அப்போது அவர் கேட்ட முதல் கேள்வி “உமது பாஸ்போட் எங்கே” என்பதுதான். நான் சொன்னேன் “அது டெல்கியில் இருக்கு” என்று அப்போ அவர் சொன்னார் “இயக்கத்தில் இருப்பவர்கள் முதல் செய்யவவேண்டிய வேலை  பாஸ்போட் எடுப்பதுதான் .எப்ப எது நடக்கும் என சொல்லமுடியாது .எதற்கும் ஒரு இந்தியன் பாஸ்போட்டை என்றாலும் எடுத்து வைத்திரும் வேணுமென்றால் சொல்லும் எனக்கு தெரிந்த ஏஜன்சி இருக்கு ” என்றார் .நான் சிரித்துக்கொண்டு  “இனி நான் போவதென்றால் ஒன்று தமிழிழம் அல்லது மேலுலகம் அவை இரண்டிற்கும் பாஸ்போட் தேவையில்லை” என்றேன். அப்போ முரளியின் நண்பர் சொன்னார் புளொட்டில் இருக்கின்றபடியால் இரண்டாவது இடத்திற்கு தான் போகவேண்டிவரும் அண்ணை “என்று . பின்னர் இடைக்கிடை நேரம் கிடைக்கும் போது முரளியிடம் போவேன் .இரட்னசபாபதியும் இடைக்கிடை அங்குவருவார்.

முரளி அன்று சொன்னது சரியாகி இன்று முரளியிடமே பாஸ்போட்டிற்கு வந்து நிற்கின்றேன் .இரண்டு நாட்களில் பெல்ஜியம் உம்மை அனுப்பிவைக்கின்றேன் பின்னர் அங்கு போய் நீர் விரும்பிய இடத்திற்கு போகலாம் என்றார் .நான்  ஒழிந்து நிற்பது மண்ணடி என்ற இடத்தில்  அது கோடம்பாக்கத்தில் இருந்து அது சற்று தூரம் .லொட்சில் போன் இருப்பதால் வசதியாக இருந்தது .அடுத்தநாளே முரளி  பெல்ஜியம் வேண்டாம் ஒரு கிழமையில் லண்டனே அனுப்பிவைக்கின்றேன் என்றார் .அப்பாடி லண்டன் போனால் சற்று நிம்மதி மாதிரி இருந்தது .

 

முரளி அனைத்து ஆயத்தமும் செய்து நான் அடுத்த வாரமே சென்னை விமானநிலையத்தில் விமானம் ஏறுகின்றேன்.  பம்பாய் போய் அங்கிருந்து லண்டன் போகவேணும். என்னை பயணம் அனுப்ப பிரசாத்(அஜீவன்) வந்திருந்தார்.  சென்னையில் எதுவித பிரச்சனையுமின்றி பிளேன் ஏறியாச்சு பிளேன் மெல்ல மேலே எழ கண்ணால் கண்ணீர் கொட்டுகின்றது .எங்கட இந்த சனத்தை நம்பி போராட வந்தனே என்று, எனது நாட்டிற்கு  போகாமல் திரும்ப அந்த நரகத்திற்கா திரும்பி போகின்றேன் ? விடை கொடு தமிழகமே என்று கீழே பார்க்கின்றேன்.

 

பாம்பாய் விமானநிலையம் .கையில் ஒரு சின்ன BAG மட்டுமே எனது உடமை  எதுவித LUGGAGE உம் இல்லை .அந்த பாக்கிற்குள்  உடுப்புகள் சிலவும் எனது டயரியும் இருக்கின்றது . இலங்கை பாஸ்போட்டை  கோட் போக்கேற்றுக்குள் மறைத்து வைத்திருந்தேன்.உடம்பை எல்லாம் அமத்தி செக் பண்ண மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கைதான் .கவுண்டரில் கிந்தி ,பஞ்சாபி போன்று இருப்பவர்களை எல்லாம் தவிர்த்து தமிழர் போலிருக்கும் ஒருவரின் லைனில் நிற்கின்றேன் .எனது முறை வர, ஆங்கிலத்தில் கேட்கின்றார் .

 

“லண்டனுக்கு ஏன் போகின்றீர்”

“வியாபாரம்”

“என்ன வியாபாரம்”

“புடவை வியாபாரம்”

“இந்தியாவில் எங்கு”   

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் எங்கு

தஞ்சாவூர்

நானும் தஞ்சாவூர் தான். அங்கு எந்த இடம்

ஒழிக்கஇடமில்லாமல் விதானை வீட்டிற்குள் ஒழித்திருக்கின்றேன் என்ற மாதிரியாகிவிட்டது.

“ஒரத்தநாடு”

“பயணம் இனிதாய் அமையட்டும்”  

 

என்று  பாஸ்போட்டில் ஒரு குத்து . அப்பாடி என்று விமானத்தில் ஏறினால் எழு எட்டு தமிழ் பெடியங்கள்  அங்கொன்றும் இங்கொன்றுமாக முழிசிக்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு சோடிகள்  மாத்திரம் அருகருகில் அமர்ந்து இருக்கின்றார்கள்.  பெண் ஆணின் தோழில் சாய்ந்தபடி அழுது கொண்டிருக்கின்றார். எனக்கு இனி என்ன நடக்கபோகின்றது என்பதை பற்றிய எதுவித பயமும், யோசனையும் எனக்கு அறவே இருக்கவில்லை .கடைசி இரண்டு கிழமையும் நடந்த நிகழ்வுகளில் இருந்து நான் வெளிவரவில்லை என நினைக்கின்றேன்.

 

விமானம் துபாயை தாண்டியதும் மெல்ல எழுந்து வாஸ்ரூமிற்குள் போய் இந்தியன் பாஸ்போட்டை எடுத்து வாஷ்பெசினிற்குள் தண்ணியில் ஊறபோட்டுவிட்டு சில நிமிடங்களின் பின் அதை எடுத்து  டாய்லெட்டுக்குள் போட்டு பிளஷ் பண்ணிவிட்டு ஒன்றும் தெரியாதமாதிரி வந்து இருக்கையில் இருந்துவிட்டேன் .

விமானம் கீத்ரோ விமான நிலையத்தை தரைதட்டுது .தமிழர்கள் முகங்களில் உள்ள கலக்கம் எல்லோருமே கிழித்துவிட்டு விட்டு அகதி அடிக்கபோகின்றார்கள்  என்பதை அப்படியே காட்டுகின்றது. பிரித்தானிய இமிகிறேசானில் லைனில் நிற்கின்றேன் எங்கிருந்தோ ஒரு தமிழ் பெடியன்  ஓடிவந்து எனக்குப்பின்னால் வந்து நிற்கின்றார் .நான் திரும்பி பார்க்க

 

“அண்ணை லண்டனில இருக்கின்றநீங்களோ”  

“இல்லை இப்பதான் போறன்”

“விசா இருக்கோ”

“இல்லை அகதி அடிக்க போறன்”

“நானும் அதுதான். நீங்கள் வெளியில போனால் நான் வந்ததை எனது உறவினருக்கு சொல்லிவிடுகோ” என்று ஒரு தொலைபேசி நம்பரை நீட்டியபடி

.“உங்களுக்கு யாரும் லண்டனில இருக்கினமோ”

“அண்ணையும் அக்காவும் இருக்கினம்”

“அதை சொல்லாதையுங்கோ ,அப்படிதான் எனது ஏஜன்சிகாரன் சொன்னவர் ,சொந்த சகோதரங்கள் இருந்தால் அகதி பணம் தரமாட்டார்களாம் .எனக்கு ஒருத்தரும் அப்படி இல்லை” .

 

கவுண்டர் வர எனது இலங்கை பாஸ்போட்டை எடுத்து நீட்டுகின்றேன் .அதில் பிரான்ஸ் ,நெதர்லாந்து ,பெல்ஜியம் ,இந்தியா எல்லாம் போன விசா குத்தியிருக்கு இங்கிலாந்து மாணவர் விசா காலாவதியாகி ஒருவருடத்திற்கு மேலாகிவிட்டது

.

அதிகாரி சொல்லுகின்றார்

“விசா முடிந்துவிட்டது”

“அப்பாவை சந்திக்க இந்தியா போனேன் ,அவரது சுகயீனம் காரணமாக உடன் திரும்பமுடியாமல் போய்விட்டது”

“எந்த பாஸ்போட்டில் பயணம் செய்தனீர் “

“இந்திய பாஸ்போட் “

“அது எங்க”

“எஜன்ட் வாங்கிக்கொண்டு போய்விட்டார் “

இந்த ஒரு கதையை எத்தனை பேர்தான் சொல்லுவீர்கள் என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு

“விரும்பினால்  அகதிக்கு விண்ணப்பிக்கலாம்.”  என்றபடியே ஒரு விண்ணப்பத்தை நீட்டினார் .

 

சுயஅடையாளத்தை பற்றிய ஒரு விண்ணப்ப பத்திரம் அது .நிரப்பிவிட்டு கொடுக்க ஒரு அறையை காட்டி அங்கே போகச்சொன்னார் .அந்த அறையில் என்னுடன் வந்த அனைத்து தமிழர்களும் அதைவிட பல வேற்றுஇனத்தவர்களும் இருந்தார்கள் .அந்த தமிழ் பெண் அப்போதும் அழுதுகொண்டே இருந்தார் .

 

சில மணிநேரத்தில் ஒரு அதிகாரி வந்து விமான நிலைய தங்குமிடத்தில் இடப்பற்றாகுறை காரணமாக இன்று இரவு உங்கள் எல்லோரையும் ஒரு கொட்டேலுக்கு கொண்டுசெல்கின்றோம் .நாளை விசாரணை தொடரும் என்றார் .வரிசையாக எல்லோரும் வெளியில் வந்து ஒரு பஸ்ஸில் ஏறி கொட்டேலை அடைந்து உள்ளே போக டி வி ,பத்திரிகை நிருபர்கள் எம்முடன் வந்த சிலரை  கேள்விகளும் கேட்டு படமும் எடுத்துக்கொண்டிருந்தார்கள் .

 

லண்டன் அழகாக அமைதியாக விடிகின்றது.காலை பத்துமணியளவில் அனைவரையும் திரும்ப பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு விமானநிலையத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்திற்கு கொண்டு போய்  ஒவ்வொருவராக விசாரணைக்கு கூட்டிக்கொண்டு போகின்றார்கள் .எனது முறை வர எழுந்துசெல்கின்றேன் .

 

கண்ணாடி போட்ட ஒரு பிரிட்டிஸ் அதிகாரி கையை குலுக்கிவிட்டு உண்மையை மட்டும் சொன்னால் தனது விசாரணைக்கு வசதியாக இருக்கும் என்கின்றார். அதை அந்த அதிகாரி சொன்ன விதத்தில் முதன்முறையாக உடம்பு குளிர்ந்து மனதில் ஒருவித பயம் ஏற்படுகின்றது.எதை சொல்லலாம் எதைவிடலாம் என மனது ஊஞ்சலாய் ஆடுது .

பச்சை பொய்யை சொல்லவா என நினைக்கையில் எனது பிரவுண் டயரி BAG இல் வைத்த ஞாபகம் வருகின்றது. கோதாரிக்கு ஆங்கிலத்தில் வேறு எழுதியிருந்தேன் .எனக்கு மட்டும் விளங்க கூடியதாய் கிறுக்கலாய் தான் எழுதிவந்தேன் இருந்தாலும் ஓரளவு ஊகித்துவிடுவார்கள் ,பல தொலைபேசி இலக்கங்கள் வேறு அதில் இருக்கு. எனவே ஐம்பதற்கு ஐம்பது என முடிவெடுத்துவிட்டன்.

 

(தொடரும்)     

 

 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள். வாசிக்க  என் போன்றோர் ஆவலாக உள்ளோம். சடுதியாக  முடிக்காமல் நேரம் எடுத்து எழுதுங்கள்.

 

இதை நான் வழி மொழிகிறேன் அர்ஜீன் அண்ணா

ம்................தொடருங்கள்!. அந்தப் பெண் ஏன் அழுதார் என்று தெரிந்தால் அதையும் எழுதுங்கோ  :D

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆவலாக

அதேநேரம் வரிக்கு வரி மிகுந்த அவதானத்துடன் படித்து வருகின்றேன்.

 

தொடருங்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க ஆர்வமாய் இருக்கின்றோம் ! எழுதுங்கள் தொடர்ந்து !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஒரு புலம் பெயர்ந்த போராளியின் கதை ...புளட்டாக "

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலுடன்..............

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க ஆவலாகத்தான் உள்ளது.

86 இல் அகதிக் கோரிக்கை கேட்டவர்களை ஹோட்டலில் விட்டிருக்கின்றார்கள். இப்போது detention centre இல் விடுகின்றார்கள். எவ்வளவு வித்தியாசம்!

எழுதுங்கள். வாசிக்க  :D  ஆவலாக உள்ளோம் :D

 

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க ஆவலாகத்தான் உள்ளது.

86 இல் அகதிக் கோரிக்கை கேட்டவர்களை ஹோட்டலில் விட்டிருக்கின்றார்கள். இப்போது detention centre இல் விடுகின்றார்கள். எவ்வளவு வித்தியாசம்!

 

 

அன்று அவர்கள் வீடுகளில் இருந்தார்கள்

இன்று அவர்களே வீதிகளில்தான் இருக்கிறார்கள்....... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்த இடத்தில் நிப்பாட்டிவிட்டீர்கள்..! தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன் ஐயா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பாத்தால்  நான் தேங்காய் வேண்டுறது நல்லது போல இருக்கு  :(

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டயறி

தொலைந்து விட்டதா???? :(

  • தொடங்கியவர்

அதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் எழுதி முடித்து இரண்டு கிழமைக்கு மேலாகிவிட்டது .(லப்டாப் இல் இருக்கு அது அத்தானின் கடையில் இருக்கு ).

குடும்பத்தில் ஒரு இழப்பு.மனைவியின் அண்ணர் காலமாகினார் .அவர்களின் வீட்டிலேயே ஜெர்மனி,லண்டனால் வந்த உறவினர்களுடன் நேரத்தை செலவழித்துவிட்டேன்.

லண்டனில் இருந்து வந்த ஒரு உறவினர் (மனைவி பக்கம் ) பழைய மகாஜனா பிரபல கிரிக்கேட் ,உதைபந்தாட்ட விளையாட்டு வீரர் விஜயசிங்கம்.இவர் சாண்டோ சின்ன தேவரின் உதவி டைரக்ரராக  இருபத்திஇரண்டு வருடங்கள் இருந்தவர்.இப்போ வயது போயிருந்தாலும் தனது சினிமா அனுபங்களை மிக சுவாரஸ்யமாக எம்முடன் பகிர்ந்துகொண்டார் .குறிப்பாகக எம் ஜி ஆர் ,ரஜனி பற்றிய அனுபவங்கள் .அவர் கூட நாலு ஐந்து படங்கள் டைரக்ட் பண்ணி இருக்கின்றார் ,நடித்து வேறு இருக்கின்றார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.