Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலிப வயதுக் குறும்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கம். (வை.எம்.ஏச்.ஏ). 1911ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றும் பொலிவுடன் பிரகாசிக்கும் ஒரு சங்கம். திருநெல்வேலி பொதுச்சந்தைக்கு அருகாமையில் நூலகத்தையும் உள்ளடக்கிய இச்சங்கமானது இயல், இசை, நாடகத் துறைகளுடன் விளையாட்டுத் துறையிலும் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்கள் வளர்வதற்குப் பெரும்பணிகளைப் புரிந்துவருகிறது. ஊர்த்தொண்டு முதல் நல்லூர்க்கந்தன் திருவிழாவிற்கு தண்ணீர்ப்பந்தல் போடுவதும், சங்கமண்டபத்தில் நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் வரை நடாத்துவதும் வழமையானது. நிகழ்ச்சிகளைக் காணவரும் மக்கள் கூட்டம் அதிகமாகிவரவே, மண்டபத்தைப் பெரிதாக்கும் தேவையும் சங்கத்திற்கு ஏற்பட்டு, அதற்கு வேண்டிய பொருள்சேர்க்கும் பணியை அங்கத்தவர்களாகிய நாங்களும் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. எங்களுக்குத் தெரிந்த ஒரேவழி பிச்சாபாத்திரம் ஏந்துவதே. ஊர்மக்களிடம் பாத்திரம் ஏந்தத் தொடங்கினோம். பணமும் சேர்ந்தது. சேர்ந்த பணத்தை எண்ணிச் சரிபார்ப்பதற்கு நாங்கள் கூடியிருக்கும் வேளைகளில், பணம் தந்தவர்கள், தராதவர்களின் பல்வேறு முகபாவங்களையும் பிரதிபலித்துக் காட்டுவதில் நண்பன் ஆச்சி பெரும்கில்லாடி. அலட்சியப்பார்வை, இனியபாவம், பணத்திமிர், கடூரப்பார்வை, இயலாதகவலை, முடியாதவருத்தம், இப்படிப் பலரது முகபாவங்களை அவன் அபிநயித்துக் காட்டுவான். சிரிப்பலை கடல் அலைபோல் ஆரவாரிக்கும். எங்கள் ஊரில் வட்டிக்குப் பணம்கொடுத்து பெரும் பணம்சேர்த்துக் கொண்டவரும், சங்கத்தின் ஒரு அங்கத்தவருமான பெரும் புள்ளி பெரியதம்பு என்ற பெரியவரை அவன் அபிநயித்தபோது அவனது கண்களே கலங்கின. அத்தனை கேவலமாக அவரிடம் நாங்கள் அவமானப்பட்டதை நினைவுகூர்ந்தோம். ''தடிமாடுகள்போல உடம்பை வைத்துக்கொன்டு பிறரிடம் கைநீட்ட உங்களுக்கு வெட்கம் மானம் இல்லையா? உங்கள் உடம்புக்கு விறகு கொத்தலாம், தோட்டம் சாறலாம், மூட்டைகூடத் தூக்கி நிதி சேர்க்கலாம் அப்படிச் சேர்க்கும் நிதிதான் உண்மையான நிதிசேர்ப்பு'' என்று ஒரு செப்புக் காசும் தராது வேறு இழிவான வார்த்தைகளாலும் எங்களை அவமானப்படுத்தி அனுப்பிவைத்தார். அந்த அவமானத்தை நாங்கள் தாங்கியிருப்போம். ஆனால் அழகியும், சொர்ப்பன சுந்தரியுமாகிய அவரது ஒரே ஒரு மகள் வனிதா முன்னால் எங்களைக் கேவலப் படுத்தியதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவருக்கு ஏதாவது பாடம் புகட்ட வேண்டுமென்ற வெறி ஏற்பட்டது.
 
பல யோசனைகள் எழுந்து மடிந்தன. முடிவில் ஆச்சியின் அரிய யோசனையையே பின்பற்றுவதாக முடிவானது. ஒரு சனிக்கிழமை நூலகம் சாத்தியபின்பு மண்டபத்தில் கூடினோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொருட்கள் இருந்தன. நீத்துப்பூசனிக்காய், தேசிக்காய், வீபூதி, சந்தணம், குங்குமம், வெற்றிலை பாக்கு, தலைமயிர், செப்புத்தகடு, செப்புக்காசு எனக் கழிப்புக்குத் தேவையான சகலதும் இருந்தன. 11 மணியாகி ஊரடங்கி பூரண அமைதி நிலவியது. லேசான மழைத்தூறலுடன் தெருவிளக்குகளும் அன்று எரியாது எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கியது. குங்குமம் தடவி இரத்தச் சிவப்பாகிய பூசணியும், தேசிக்காயும் பூனைபோல் பதுங்கி முன்னேற, அதனை அடுத்து மற்றய பொருட்களும் பின்தொடர்ந்தன. பெரியதம்பி வீட்டை நெருங்குமுன், இடையே எங்கள் அரவம்கேட்டு குலைக்க முயன்ற நாய்களும் மழைத்தூற்றல் தாக்கத்தில் அடங்கிவிட்டன. அவரது வீடு சிறிய மாளிகைபோன்றது. தெருவிலிருந்து மூன்றுநான்கு படியேறி அடையக்கூடிய உயரமான முன் வாசல், வேல்போன்ற கம்பிக் கிறாதிகளாலான கதவையும் கொண்டது. கதவைத் தாங்கிய தூண்கள் மேலெழுந்து வில்போல் வளைந்து கதவின் வேல் நுனிக்கும் இடையே சற்று வெளியுடன், வேலைப்பாடுகளையும் கொண்டு விளங்கியது. முற்புறத்திலிருந்து நீண்டு உள்சென்ற கூரையுடன் கூடிய வாசல் உட்கதவின் முன்பாக உள்ள அகன்ற தாழ்வாரம்வரை சென்றடைந்திருந்தது. 
 
அன்று கும்மிருட்டு. எதற்கும் பாதுகாப்பாக அந்த வீட்டுத் தெருவின் மறுபுறமிருந்த மரத்தின் பின்னால் மறைந்திருந்து ஒவ்வொருவராக சென்று படியேறி கையில் உள்ளதைக் கதவின் மேலாக உள்ளே எறிந்துவிட்டு யாரும் பார்க்குமுன் நழுவிச் சென்றுவிட்டோம். மறுநாள் காலை சந்தையில் அதன் இயல்பான இரைச்சலுக்கு மேலாக ''பெரியதம்பி வீட்டிற்கு யாரோ செய்வினை செய்துவிட்டார்கள்'' என்ற செய்தியே மேலோங்கி ஒலித்தது. நானும் ஒன்றும் அறியாதவன்போல் பெரியதம்பு வீடுநோக்கிச் சென்றேன். சிறு கும்பல் தெருவையும் அடைத்து உள்ளே நடப்பதை ஒருவர் தோளுக்குமேலாக மற்றொருவர் தலையை நீட்டி எட்டி எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் சிலரும் எனக்குமுன்பாகவே அங்கு பிரசன்னமாகியிருந்தார்கள். உள்ளே மணிச்சத்தமும், ஐயர்மாரின் மந்திரங்களும் உரத்து முழங்கிக்கொண்டிருந்தன. அம்மன்கோவில், பிள்ளையார்கோவில், காளிகோவில் மற்றும் சில ஐயர்மார்களின் மந்திரங்களும் வானளாவ ஒலித்துக் கொண்டிருந்தது. 
 
சுடலையில் பிணமெரிக்கும் சுப்பன் மதில் சுவரோரமாக ஒரு மூட்டையுடன் கூனிக் குறுகிக் குந்தியிருந்தான். அச்சமயம் சனத்தை விலத்தி வெளியேவந்த பெரியதம்பு அவனிடம் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ''ஒரு துணுக்கும் விடாது எரித்துவிடு'' என்று கட்டளையிட்டார். கூழைக்கும்பிடு போட்ட சுப்பன் நோட்டுகளைப்பார்த்த சந்தோசத்தில் வாயெல்லாம் பல்லாக ஆகட்டும் சாமி என்றபடி ஓட்டமும் நடையுமாக மூட்டையுடன் சென்று மறைந்தான். மூட்டைக்குள் அப்படி என்னதான் இருக்கும் என்று நான் சொல்லித் தெரியவேண்டிதில்லை. நான் மெதுவாகச் சென்று நண்பர்களுடன் சேர்ந்துகொண்டேன். 
 
எங்களுக்கு அருகில் நின்ற சங்கக்டைச் சங்கரிடம் ஆச்சி பேச்சுக் கொடுத்தான். ''என்னண்ணை விசேடம்! பெரியதம்பி வீட்டிலை பெரியபூசை நடக்குது?'' ''அது ஒன்றுமில்லை தம்பியவை! பெரியதம்பு வட்டிதரவில்லை என்று யாரையோ மிரட்டியுள்ளார் போலத் தெரிகிறது, அந்தாள் பெரியதம்பு வீட்டுக்குச் செய்வினை செய்துபோட்டுதாம். அதுதான் யாரோ மந்திவாதியைக் கூப்பிட்டு செய்வினை அகற்றி, இப்போ ஐயர்மாரையும் கூப்பிட்டுக் கழிப்புக் கழிக்கிறாராம். வட்டிக்குக் கொடுத்தது ஆயிரம்தானாம். வட்டியையே எண்ணூறுக்கும் மேல் கொடுத்தவன் ஏதோ பிச்சனையால் இரண்டுமாதம் கட்டவில்லையாம். மிரட்டியிருக்கிறார். இப்போ இரண்டோ மூன்று ஆயிரத்துக்குமேல் செலவுவைச்சுவிட்டான் என்று பேசிக்கொள்ளுகினம் ராசா வேறொன்றும் எனக்குத் தெரியாது'' என்று அவர் சொல்லும்போதே அவரிடம் வெளிப்பட்ட நக்கல் சிரிப்பும்...! சந்தோசமும்...! இவரும் பெரியதம்புவிடம் வட்டி கட்டி வேதனைப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தியது. ஆனாலும் அவர் சொன்ன செய்தியானது எங்களை நெடும் பெருமூச்சுடன் அப்பாடா என்று அமைதிப்படுத்தினாலும், அங்குகண்ட காட்சி எங்களைப் பெரும் வேதனைக்குள்ளாக்கியது. 
 
பயப்பிராந்தியுடன் பேயறைந்ததுபோல் உறைந்துபோன பெரியதம்புவின் மகள் வனிதா முகத்தைக் காணச் சகிக்கவில்லை. பரிதாபம் மேலோங்கி எங்களை வதைத்தது. உண்மையை அவள் மட்டும் அறியக்கூடியதாகத் தெரிவித்து விடுவோமா என்ற யோசனையும் ஏற்பட்டது. அது ஆபத்து என்று கைவிட்டாலும், சிலநாட்களில் அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டதை உணர்ந்தோம். அவளுடைய சுந்தர வதனம் மீண்டும் பொலிந்ததோடு, எங்களைக் காணும்போது அவள் முகத்தில் தோன்றும் புன்னகையானது! குறும்புசெய்த பிள்ளையைக்கண்டு குதூகலமடையும் தாயின் முகத்தையும் ஒத்திருந்தது. ஆம் பெரியதம்பு எங்களைக் கேவலப்படுத்தி அனுப்பினாலும் வனிதா தன் தாய் தன்தையருக்குத் தெரியாமல் 500ரூபா சினேகிதி சிந்துவிடம் கொடுத்து அவள் அண்ணன் சங்கர் மூலமாக எங்கள் நிதிக்கு உதவிபுரிந்திருக்கிறாள். சங்கத்தின் அங்கத்தவனும் எங்கள் நண்பனுமான சங்கர் ஒரு முக்கிய காரியமாகக் கொழும்பு சென்றவன் திரும்பிவரத் தாமதமானதால் நிதிசேர்ப்பில் பங்கெடுக்க வரவில்லை. அவன் வந்த பிற்பாடுதான் வனிதாவின் உதவியும் தெரியவந்தது. வேதனை எங்களைக் கசக்கிப் பிழிந்தது. எங்கள் வேதனையைப் புரிந்தும், நடந்தவற்றை அறிந்த சங்கர் எள்ளும் கொள்ளுமாக வெடித்தான். அவனைச் சமாதானப்படுத்தப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. ஆனாலும் அவன் வனிதாவிடம் நடந்த சம்பவம் அனைத்தையும் சொல்லிவிட்டான். 
 
வனிதாவுக்கு உண்மை தெரிந்துவிட்ட பிற்பாடும்! கடன்வாங்கியவர்கள் வட்டிகொடுக்கத் தாமதமானால்! அவர்களின் சுக நலம் விசாரிப்பதோடு பெரியதம்பி நிறுத்திக்கொண்டதானது.... நடந்த சம்பவத்தை வனிதா எவருக்கும் தெரிவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. அழகு தேவதையாக அவளைக்கண்ட எங்கள் கண்கள், பின்பு அழகிய அம்பாளாகக் காணத்தொடங்கியது. 
 
 
பி.கு.
சிறிது கற்பனை கலந்த உண்மைச் சம்பவம் ஆனாலும் பெயர்கள் முழுவதும் கற்பனை.
 
  • கருத்துக்கள உறவுகள்

வாலிப வயதுக் குறும்பு அந்த மாதிரித்தான் இருக்கு. பல தசாப்தங்கள் கழிந்தாலும் "வனிதா" இன்னமும் நினைவில் இருந்து அழியவில்லை என்று தெரிகின்றது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வரி, பத்து வரிகளில்.... கருத்து எழுதும் பாஞ்ச்,
அருமையான நீண்ட பதிவையும்... எழுதுவாரா?
நன்றாக இருந்தது, உங்களது வாலிபக் குறும்பு.
நீங்கள்.. கூறிய இடங்கள், அநேகமானவை... எனக்குப் பரிச்சயமானவை என்ற படியால், ரசித்து வாசித்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

வாலிபக் குறும்பு  எறும்பு கடித்த மாதிரி நறுக்கென்டு  இருக்கு ! குறும்புகள் தொடரட்டும் பாஞ் !! :)

ஆனால் அழகியும், சொர்ப்பன சுந்தரியுமாகிய அவரது ஒரே ஒரு மகள் வனிதா முன்னால் எங்களைக் கேவலப் படுத்தியதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவருக்கு ஏதாவது பாடம் புகட்ட வேண்டுமென்ற வெறி ஏற்பட்டது. /////

 

இதுக்கு வெட்டி பொழி போட்டிருக்க வேணும் :lol: :lol:  .செய்வினையோடை பாஞ்சு நிப்பாட்டி போட்டியள் :D  இத்துடன் நில்லாது பாஞ்சு பல அனுபவக் கதைகளை எங்களுக்குத் தரவேண்டும் . உங்களுக்கு கதை சொல்கின்ற வித்தை இருக்கின்றது .  மேலும் பல கதைகளை பாஞ்சு தர எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அழகியும், சொர்ப்பன சுந்தரியுமாகிய அவரது ஒரே ஒரு மகள் வனிதா முன்னால் எங்களைக் கேவலப் படுத்தியதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவருக்கு ஏதாவது பாடம் புகட்ட வேண்டுமென்ற வெறி ஏற்பட்டது. /////

 

இதுக்கு வெட்டி பொழி போட்டிருக்க வேணும் :lol: :lol:  .செய்வினையோடை பாஞ்சு நிப்பாட்டி போட்டியள் :D  இத்துடன் நில்லாது பாஞ்சு பல அனுபவக் கதைகளை எங்களுக்குத் தரவேண்டும் . உங்களுக்கு கதை சொல்கின்ற வித்தை இருக்கின்றது .  மேலும் பல கதைகளை பாஞ்சு தர எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

 

நன்றி கோமகன்! பானையுள் உள்ளதுதான் அகப்பையில் வந்துள்ளது. சிறிது அதிகமாகப் பொங்க முயற்சிக்கிறேன் வயதும் போய்விட்டது. கடினம்தான்.. :lol:

மிக சுவாரஸ்யமாக இருந்தது பாஞ்ச்,

பாஞ்ச்சை அநேகமாக எனக்கு  தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு .சந்தைக்கு கொஞ்சம் தள்ளி ஜெயகுமார் (பொலிஸ்) வீடு .

வனிதா யார் எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லவும் . :icon_mrgreen:

திருநெல்வேலி வை எம் எச் உடன் பல தடவைகள் கிரிக்கேட் ,உதைபந்து விளையாடியிருக்கின்றோம் .செங்குந்தா மைதானம் தான் உங்கள் மைதானம் என்று நம்புகின்றேன் .AIR FORCE இல் வேலை செய்த ஒருவர் தான் அவர்களது கோச் ,நாங்கள் அவரை அலவாங்கு விழுங்கியவர் என்று அழைப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் அண்ணாவுக்கு, தெரியாத ஆட்களே... இல்லை.
இவர் ஊரிலை இருந்தாரா, இந்தியாவிலை இருந்தாரா, மால தீவுக்குப் போனாரா,

உண்மையில்... இவர் கனடாவில் வசிக்கின்றாரா... என்ற சந்தேகங்கள் வருவதுண்டு. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வயிரவரோட பிரச்சனை வந்தால், ஏனப்பா கோவிலுக்கே வெடி வைக்கிறீங்கள்? :o

 

மூலஸ்தானத்தில என்ன தெய்வம் இருக்கெண்டு முதல்ல பாக்க வேணாமா? :D

 

சரி, சரி............... கோவிக்காதையுங்கோ பாஞ்ச்! கதை அந்த மாதிரி!

 

தொடர்ந்து எழுதுங்கள்! :lol:


அர்ஜூன் அண்ணாவுக்கு, தெரியாத ஆட்களே... இல்லை.
இவர் ஊரிலை இருந்தாரா, இந்தியாவிலை இருந்தாரா, மால தீவுக்குப் போனாரா,

உண்மையில்... இவர் கனடாவில் வசிக்கின்றாரா... என்ற சந்தேகங்கள் வருவதுண்டு. :D  :lol:

 

இது பகிடியில்லை, தமிழ் சிறி!

 

அர்ஜுனுக்கு உங்களையும் தெரியும் எண்டு எனக்குத் தெரியும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

------

இது பகிடியில்லை, தமிழ் சிறி!

 

அர்ஜுனுக்கு உங்களையும் தெரியும் எண்டு எனக்குத் தெரியும்! :icon_idea:

 

எப்படி புங்கை... நீங்கள், நினைக்கிற மாதிரி நான் அவ்வளவு முட்டாளில்லை.

இலேசில் அவரால்... கண்டு பிடிக்க முடியாது. நீங்க விடுவதும்... ரீல் என்று, எனக்குத் தெரியும். :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி புங்கை... நீங்கள், நினைக்கிற மாதிரி நான் அவ்வளவு முட்டாளில்லை.

இலேசில் அவரால்... கண்டு பிடிக்க முடியாது. நீங்க விடுவதும்... ரீல் என்று, எனக்குத் தெரியும். :D

 

கனக்க யோசிக்காதீங்க, தமிழ் சிறி!

 

நீங்கள் G.Sc-3 தானே?  :o

 

புங்கை 'துரும்பை' ஒரு நாளும் பாவிக்காது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்....வாலிப குறும்பு நன்றாகவுள்ளது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக சுவாரஸ்யமாக இருந்தது பாஞ்ச்,

பாஞ்ச்சை அநேகமாக எனக்கு  தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு .சந்தைக்கு கொஞ்சம் தள்ளி ஜெயகுமார் (பொலிஸ்) வீடு .

வனிதா யார் எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லவும் . :icon_mrgreen:

திருநெல்வேலி வை எம் எச் உடன் பல தடவைகள் கிரிக்கேட் ,உதைபந்து விளையாடியிருக்கின்றோம் .செங்குந்தா மைதானம் தான் உங்கள் மைதானம் என்று நம்புகின்றேன் .AIR FORCE இல் வேலை செய்த ஒருவர் தான் அவர்களது கோச் ,நாங்கள் அவரை அலவாங்கு விழுங்கியவர் என்று அழைப்போம் .

 

ஐயையோ அர்யுன்! உங்களுக்கு என்னையும் பெரியதம்புவையும் தெரிந்துவிட்டதா?? அவர் இன்னமும் உயிரோடு இருந்து நடந்த சம்பவமும் தெரிந்துவிட்டால்.......! கோத்தபாய விட்டாலும் அந்தாள் என்னை ஊருக்குள் நுளையவிடாது. அதுசரி பொலிசு வீடு என்று குறிப்பிட்டிருந்தீர்கள் மதவடி வீட்டுப் பொலிசா...? புளியமரத்தடி வீட்டுப் பொலீசா?. வட்டிக்குக் கொடுப்பவர்கள் இன்னொன்று பிடிப்பதும் வழக்கம். இப்போது உங்களுக்கு ஒரு நூல் அகப்பட்டிருக்கலாம். :icon_idea::D :D

  • கருத்துக்கள உறவுகள்

 

ஐயையோ அர்யுன்! உங்களுக்கு என்னையும் பெரியதம்புவையும் தெரிந்துவிட்டதா?? அவர் இன்னமும் உயிரோடு இருந்து நடந்த சம்பவமும் தெரிந்துவிட்டால்.......! கோத்தபாய விட்டாலும் அந்தாள் என்னை ஊருக்குள் நுளையவிடாது. அதுசரி பொலிசு வீடு என்று குறிப்பிட்டிருந்தீர்கள் மதவடி வீட்டுப் பொலிசா...? புளியமரத்தடி வீட்டுப் பொலீசா?. வட்டிக்குக் கொடுப்பவர்கள் இன்னொன்று பிடிப்பதும் வழக்கம். இப்போது உங்களுக்கு ஒரு நூல் அகப்பட்டிருக்கலாம். :icon_idea::D :D

 

பகிர்வுக்கு நன்றி. 'நகையும்' பிடித்திருப்பார், பெரிய தம்பு
 
வாலிபக் குறும்புகள் மறக்க முடியாதவை.
 
இது நான் முன்னர் இட்ட ஒரு பதிவு

 

Posted 21 July 2013 - 06:54 PM

யாழ் இந்துவில் படித்த ஒரு நண்பருக்கு பெட்டை சுத்த, அவர் திட்டம் போட்டு, கிடுகு வண்டில் காரரிடம், அந்த வீட்டில் 600 கிடுகு இறக்குங்கோ. அம்மா கத்துவா, அவோ அப்படித்தான், சும்மா கத்துவா, உன்னை யாரு போடச் சொன்னது எண்டுவா . பொம்பிளைப் பிள்ளை இருக்கிற வீடு  எண்டு வேலி அடைக்க  அப்பா என்னட்ட தந்த காசு, பாங்கில எடுத்துக் கொண்டு ஓடி வாறன். நீங்க போடுங்கோ, எண்டு சொல்லிப் போட்டான்.
 
பெட்டையிண்ட அம்மா காளி மாதிரி நிக்க, இடுப்பில கையோட பெட்டை, தாய்க்குப் பக்கத்தில நிக்க, கிடுகு போட்டவர் தம்பி எல்லாம் விபரமா சொன்னவர், இப்ப வருவார் எண்டு, கூலா வெத்திலையப் போட்டுக் கொண்டு வேலி ஓரமா, குந்தி இருக்க, அடுத்த நாள் முதல் பெட்டைக்கு, 'பாவம் கிடுகுக் காரன். இறக்கச் சொல்லிப் போட்டு காசை குடுக்காமல்... இங்க பெரிய எடுப்பு' என்டு நக்கல் தொடங்கி விட்டுது.
 
'மச்சான், கிடுகுக் காசு எப்ப குடுப்பாய்' எண்டு வந்தது, போனது எல்லாம்  கேட்டுக் கேட்டு பெட்டைக்கு விசர் வராக் குறை.
 
******
 
மதில்ல இருந்து தம்மடிக்க, வந்த ஆமிக்காரர், ஜீப்பினை நிறுத்தி நாலு சாத்து சாத்தி திரத்த, தடவிக் கொண்டு வர, எதிர வந்த, லோக்கல் சங்கக் கடை மேனேஜர், 'தம்பியல், ஆமிக் காரர் அடிக்கிறாங்களாம், மெயின் ரோட்டுப் பக்கம் போகாதீங்கோ' என்று வெறுப்பேத்த..... அதுதான் நம்ம யாழ்ப்பாணம்.
 
இப்ப வரப் போறார் அர்ஜுன் அண்ணர்: யார் பொட்டை என்ற விபரங்களோட....

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு

அது ஒரு கனாக்காலம்...

 

 

 

Edited by விசுகு

செம கடியா கதை சொன்னியள் அண்ணே தொடருங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் சரியான குழப்படிதான் போல. எழுதியது அருமை பாஞ்ச்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ஒரு குட்டிக் கதை எழுதி உறவுகளின் குட்டுகள் வந்து விழுமோ..? என்ற தயக்கத்தில் குனிந்திருந்த என் தலையை நிமிரவைத்த கிருபன், தமிழ் சிறி. சுவி, கோமகன், அர்ச்சுன், புங்கையூரான், புத்தன், நாதமுனி, விசுகு, அஞ்சரன், சுமேரியர் அனைவருக்கும் என் நன்றிகள் பல!!. ஆனால் எனக்கு உந்த யாழ்ப்பாண எல்லைச்சண்டை கண்டு ஏற்பட்ட வெறுப்பினால், என் எழுத்துக்கு முற்றும்தரிப்பு, பொழிபோடுதல், செய்வினை, தீவினை வைத்து எல்லை வகுப்பது போன்றவற்றை விட்டுவிட்டன். இப்ப விரும்பினாலும் அது வருவதில்லை. தயைசெய்து இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். :rolleyes::huh:

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இக்கதைதான் நான் வாசித்த பாஞ் அவர்களின் முதல் படைப்பு. தேர்ச்சி பெற்ற படைப்பாளி போல அழகாக வாசகர்களைக் கவரும்படி எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு(க்)கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக்கதைதான் நான் வாசித்த பாஞ் அவர்களின் முதல் படைப்பு. தேர்ச்சி பெற்ற படைப்பாளி போல அழகாக வாசகர்களைக் கவரும்படி எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு(க்)கள்.

 

நீங்கள் வாசித்த எனது முதல்படைப்பு மட்டுமல்ல, என் வாழ்நாளில் நான் படைத்த முதல்படைப்பும் இதுதான். மன அழுத்தம் தீர்ப்பதற்கு வழிதெரியாது யாழ்களம் வந்தேன். அது எனக்கு அழுத்தத்தையும் குறைத்துக் குட்டி எழுத்தாளனாகவும் ஆக்கிவிட்டது. யாழுக்கு என் நன்றிகள் பல!!!. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாசித்த எனது முதல்படைப்பு மட்டுமல்ல, என் வாழ்நாளில் நான் படைத்த முதல்படைப்பும் இதுதான். மன அழுத்தம் தீர்ப்பதற்கு வழிதெரியாது யாழ்களம் வந்தேன். அது எனக்கு அழுத்தத்தையும் குறைத்துக் குட்டி எழுத்தாளனாகவும் ஆக்கிவிட்டது. யாழுக்கு என் நன்றிகள் பல!!!. :rolleyes:

 

 

தொடர்ந்து உங்களிடம் இருந்து படைப்புக்கள் வரவேண்டும். எல்லாப் படைப்புக்களையும் ஒன்று சேர்த்து பிற்காலத்தில் ஒரு புத்தகமாக நீங்கள் வெளியிடவேண்டும். அந்தப்ப் புத்தகவிழாவுக்கு நான் வராவிட்டாலும் இப்பொழுதே வாழ்த்து(க்)களைத் தெரிவிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.