Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரம் வேண்டினேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை, மகிழ்வு, பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச் சிறை வாழ்க்கை போலத்தான். என்ன விரும்பிய உணவு, கணவனின் ஆதரவான விசாரணை, பெற்றோரின் தொடர் தொலைபேசி விசாரிப்புக்கள் என்று எத்தனை தான் இருந்தாலும் கணவன் அருகே இல்லையே என்னும் குறையும் பெரிதாகத்தான் தெரிந்தது.
 
இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவேன் என்று சுதாகரன் கூறினாலும் அவன் தன்னிடம் வந்து சேரும் வரை சுசீலாவுக்கு நின்மதி இருக்கப் போவதில்லை. யார் என்ன ஆறுதல் கூறினாலும் கணவன் அருகிருப்பதே பெரிய பலம். நோய் வாய்ப்பட்டிருக்கும் தந்தையை விட்டுவிட்டு வரமுடியாததால் தாய் இவளுடன் வந்த நிற்கவில்லை. என்னதான் வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பயம் எந்நேரமும் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை சுசீலாவால்.
 
ஒரு வருடங்களுக்கு முன்புவரை விரக்தியின் விளிம்பில் நின்று, யாரையும் பார்க்கப் பிடிக்காது, தொலைபேசியில் யார் அழைத்தாலும் பேசப்பிடிக்காது இருந்த எனக்கு இப்ப எல்லோருடனும் பேசவேண்டும் என்னும் ஆசையை நிறைவேற்ற முடியாது என் நிலை தடுக்கிறது. இரண்டு மாதங்களில் எல்லோரையும் வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்து வைத்து என் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். 
 
திருமணமாகி எட்டு வருடங்கள் அவள் பட்ட பாடு சொல்லி முடியாது. காண்பவர் எல்லாம் என்ன விசேடம் ஒன்றும் இல்லையா என்று அறிவற்றுக் கேட்கும் போது திடீரென மனதில் எழும் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்களுக்கு பதில் கூறியதை நினைக்க இப்ப சிரிப்பாக இருந்தது அவளுக்கு. இந்தச் சனங்கள் வாயை வச்சுக்கொண்டு பேசாமல் இருக்காமல் ஏனப்பா எங்கள் குடும்ப விசயங்களில் தலியிடுதுகள் என்று எரிச்சலுடன் இவள் கூறும்போதில், அதுதான் உலகமப்பா அவர்களை மாற்ற முடியாது என்று கணவன் கூறுவான். அதன் பின் அவள் பொது நிகழ்வுகளில், திருமண வீடுகளுக்குக் கூடச் செல்லாது வீட்டுக்குள்ளேயே ஒடுங்கப் பழகிவிட்டாள். ஏன் திருமணத்துக்கு வரவில்லை என்று யாராவது தொலைபேசியில் கேட்டாலும் ஏதாவது சாட்டுகள் கூறித் தப்பிக் கொண்டாள்.
 
எத்தனை வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டு, எத்தனை பேரிடம் தலை குனிந்து, எத்தனை தரம் இவளுக்கும் கணவனுக்கும் பரிசோதனை செய்து, எத்தனையோ ஊசிகள் மருந்துகள் ஏற்றி கிட்டத்தட்டச் சித்திரவதைதான். எல்லாவற்றையும் இருவரும் தாங்கினார்கள்தான். ஆனாலும் எந்தப் பயனும் அற்றுப் போய் வாழ்வில் பிடிப்பே அற்று இருவரும் இருந்தபோதுதான் அவள் ஆனந்த விகடனில் வந்திருந்த ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதை கணவனையும் வாசிக்கச் செய்து இருவரும் நீண்டநேரம் அதுபற்றிக் கலந்து கதைத்து ஒரு முடிவுக்கு வந்தனர். அடிமனதில் ஒளிந்துகொண்ட ஆசை மீண்டும் இருவருக்கும் விஸ்வரூபம் எடுக்க ஒருவரை ஒருவர் நீண்டநாளின் பின் நம்பிக்கையோடும் ஆசையோடும் பார்த்து மகிழ்ந்தனர்.


********************************************************************************************************************
 
கணவனுடன் இந்தியா வந்து அந்தப் பெரிய மருத்துவமனையில் எல்லா டெஸ்ட் உம் செய்து தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி, எல்லாம் சரியாக இருக்கிறது. அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம் என்றதும் இருவர் மனதிலும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமற் போனது. சுதாகரன் இன்னும் மூன்று வாரங்கள்தான் அவளுடன் நிற்கலாம். அதன் பின் அவன் வேலைக்குத் திரும்பவேண்டும். அந்த மருத்துவரிடமே ஆலோசனை கேட்டனர். எல்லாமாக எனக்கு நீங்கள்  மருத்துவச் செலவுக்கு மூன்று இலட்சம் தந்துவிட வேண்டும் . நீங்கள் இங்கே பக்கத்தில் தங்குவதற்கு நான் ஒழுங்கு செய்கிறேன். அது உங்கள் செலவு. ஒரு பெண்ணை வேண்டுமென்றால் சமைக்கவும் துணைக்கும் ஒழுங்கு செய்கிறேன் என்றுவிட்டார்.
 
பணம் என்ன பெரிதா?? பிள்ளை வரம் வேண்டி நொந்து நூலாகிப்போன எங்களுக்கு கடவுள் இப்பதான் ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். அதை எள்ளளவேனும் பிசக விடாது காப்பது எமது கடமை என்று இருவருமே எண்ணி அவர் கூறிய படியே செய்ய ஆயத்தமாயினர்.
 
அடுத்த வாரம் இருவருக்கும் மீண்டும்  விந்து, முட்டை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக மருந்துகள் ஏற்றப்பட்டுத் தயாராக்கி மூன்றாவது வாரம் இருவரிடமும் இருந்து விந்தும் முட்டையும் பெறப்பட்டு சோதனைக் குளாயில் செலுத்துவதாகக் கூறினார்கள். இவர்கள் இருவரும் வேண்டாத தெய்வம் இல்லை. முன்பு சுவிசிலும் இதுபோல் இரு தடவைகள் செய்ததுதான். ஆனாலும் சரிவரத்தான் இல்லை. இம்முறை சுசீலாவுக்கு ஏனோ அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மனம் முழுவதும் ஏற்படும் ஒரு எல்லையில்லா உணர்வை  அடக்கு என மனதுக்குக் கட்டளையிட்டுவிட்டுக் காத்திருந்தாள். 
 
பதினைந்து நாட்களின் பின்னர் சரிவரும் போல இருக்கு. இன்னும் பதினைந்து நாட்கள் பார்க்கவேண்டும் என்று வைத்தியர் கூறியதும் இன்னும் பதினைந்து நாட்களா என்று இருவருக்கும் ஒரு சலிப்பும் ஏற்பட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மெடிக்கல் லீவு கொடுத்துவிட்டு சுதாகரன் மனைவியுடனேயே நின்றான். இரண்டு வாரங்களின் பின்னர் உருவான கரு சுசீலாவுக்குச் செலுத்தப்பட்டது. வலிகளும் வேதனைகளும் கூட அவளது எதிர்பார்ப்புகளின் முன்னால் ஒன்றுமில்லாது போயின.
 
சுதாகரனுக்கும் இம்முறை எல்லாம் நன்றாக நடப்பதாக மனம் சொல்லியதில் நின்மதியாக மனைவியை விட்டுவிட்டு சுவிஸ் வந்துவிட்டான். முன்பே பலருடன் தொடர்புகள் விட்டுப் போனதில் மற்றவர்களின் கேள்விகள் கூட இன்றி நின்மதியானான் அவன். தன் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட அவனோ சுசீலாவோ இதுபற்றிக் கூறவே இல்லை.
 
நீங்கள் இரண்டு மாதங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான். இவள் தேவை இல்லாமல் வெளியே கூடச் செல்வதில்லை. இவள் தங்கியிருந்த விடுதி போன்ற ஒரு இடத்தில் இவளைப் போன்றே வெளிநாடுகளில் எல்லாம் இருந்து பல பெண்கள் குழந்தைக்காக வந்து காத்திருந்தனர். சிலருக்கு எத்தனை தடவைகள் முயன்றும் முடியாமல் திரும்பி ஏமாற்றம் சுமந்து அழுகையுடன் சென்றிருக்கின்றனர். அவர்கள் அழும்போது இவளுக்குக் கழிவிரக்கம் தோன்றும். தன்னால் முடிந்த ஆறுதலைக் கூறுவாள்.
 
இவளுடன் அந்த விடுதியில் இருந்த மற்றைய பெண்கள் நடக்காதே குனியாதே அது செய்யாதே என்று கூறுவதைக் கேட்க இவளுக்குப் பயமாகவும் இருக்கும். மாலையில் கணவன் கதைக்கும் போது தன் கணவனிடம் இவைகளைக் கூற அவனோ சனம் எல்லாம் சொல்லும். நீர் கவனமா இரும். என்ன எண்டாலும் வைத்தியரிடம் கேட்டு அவர் சொல்கிற படி நடவும் என்பான். இருந்தாலும் குழந்தை வளர வளர அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெற்றெடுக்க வேண்டுமே என்ற அவாவிலும் பயத்திலும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டும் நடக்கவாரம்பித்தாள். அதனால் நடைப் பயிற்சி இல்லாது உடல் ஊதியது.
 
மூன்றாம் மாதம் இவளைப் பரீட்சித்துவிட்டு இரட்டைப் பிள்ளைகள் உனக்கு என்றார். இவளுக்குச் சந்தோசத்தில் நெஞ்சை அடைத்து. சுதாகரனின் களிப்பைச் சொல்லி மாளாது. கடவுள் கருணை காட்டிவிட்டார். ஒன்றுமே இல்லாமல் இருந்த எமக்கு இரண்டா என கடவுளுக்குப் பலதடவைகள் நன்றி கூறிக் கொண்டான் அவன் .
 
 
********************************************************************************************************************
 
இன்னும் இரண்டு வாரங்கள்தான். சுதாகரனும் சுவிசிலிருந்து வந்துவிட்டான். சாதாரண பிரசவமாக இருக்காது என்று வைத்தியர் கூறிவிட்டார். சாதாரணமாகப் பிறக்கும் என்றாலும் கூடப் பணத்துக்காக வைத்தியர்கள் சத்திரசிகிச்சை செய்வது பற்றியும் கதை ஓடித்திரிந்ததுதான். ஆனாலும் அவர்களுக்கு இருந்த பயத்தில் குழந்தைகள் இரண்டும் சுகமாக வெளியே வந்தார் சரி என்ற நிலையில் மருத்துவர் கூறியதை எதிர்த்து ஒரு வார்த்தை கேட்கவே இல்லை.
 
அன்று அவளைப் பிரசவ அறையுள் அழைத்துக்கொண்டு சென்றபோது சுதாகரனும் தானும் வருகிறேன் என்று கூறினான். மருத்துவர் மறுத்துவிட்டார். இவனால் எதிர்த்தும் கதைக்க முடியவில்லை. உள்ள கடவுள்களை வேண்டியபடியே வெளியே காவல் இருந்தான்.
 
ஒரு மணி நேரத்தில் சத்திரசிகிச்சை முடிந்ததாகக் கூறி  அவனை உள்ளே அழைக்க மனம் முட்டிய மகிழ்வில் உள்ளே சென்றவன் தாய்க்குப் பக்கத்தில் பிள்ளைகளைக் காணாது மனதில் ஒரு திடுக்கிடலோடு தாதியைப் பார்த்து எங்கே பிள்ளைகள் என்றான்??? கால் கைகளில் நடுக்கம் பரவத் தொடங்கியது. மனைவி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். பிள்ளைகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கொண்டு வருவார்கள் என்று அவள் கூறியதும் மனது ஒருநிலைப்பட்டது. நெஞ்சுக்கூடு மீண்டும் தன் இடத்தில் அமர்ந்தது போன்ற நினைப்பு வர நின்மதிப் பெருமூச்சொன்று வெளிவந்தது.
 
சுசீலாவுக்கும் ஒருவாறு நினைவு திரும்ப பக்கத்தில் பார்த்துவிட்டு அவள் கண்களும் வேதனையை மீறி எங்கே குழந்தைகள் என்று கேட்டன. இவன் கண்கள் கூறிய சமாதானத்துடன் மட்டும் நின்றுவிடாது, இப்ப கொண்டு வருவினம் என்று அவளுக்குச் சொல்லிவிட்டு வெளியே சென்று தாதியிடம் மனைவி கண் விழித்துவிட்டார். பிள்ளைகளைத் தேடுகிறார். எப்ப கொண்டுவருகிறீர்கள் என்றான். நீங்கள் அறைக்குப் போங்கள் இப்ப கொண்டுவருவார்கள் என்றதும் இவன் சுசீலாவுக்கு அருகில் சென்று கொண்டு வருகிறார்கள் என்று கூறிவிட்டு அவளின் தலையைத் தடவி நெற்றியில் முத்தமிட்டு கை ஒன்றை எடுத்து ஆதரவாகத் தடவிக் கொடுத்தான்.
 
கதவு திறக்கப்பட, இரண்டு தாதிகள் தொட்டில்களைத் தள்ளிவர, மனம் முழுவதும் மகிழ்வு பொங்க உடனே எழுந்த சுதாகரன் பக்கத்தில் சென்று பார்த்ததும் அதிர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்த்த சுசீலாவின் மனம் திடுக்கிட்டாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தாதியர் வெளியே சென்றதும் இருவரும் கேள்விக் குறியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிள்ளைகள் இரண்டும் பச்சைக் கண்களுடன் வெள்ளைக்காரக் குழந்தைகள் போல் இருந்தன.
 
மாறி வேற ஆட்களின் பிள்ளைகளைக் கொண்டுவந்துவிட்டனரோ என்ற பதைப்பில் வைத்தியரின் அறையைத் தேடி ஓடினான் சுதாகரன். இவன் கூறியவற்றைக் கேட்டபின் முகத்தில் எந்தவிதப் பதட்டமும் இல்லாமல், இப்பிடியான விசயங்களில ஒண்டு இரண்டு மாறி நடக்கிறதுதான். சொறி. பரிசோதனைக் குளாயுள் செலுத்தும்போது ஏதோ தவறு நேர்ந்துவிட்டது.
உங்களுக்கு பிள்ளைகளை வைத்திருக்க விருப்பம் இல்லை என்றால் கூறுங்கள். பிள்ளைக்காக எத்தனையோபேர் காத்திருக்கிறார்கள். நீங்கள் சம்மதித்தால் அவர்களுக்குக் கொடுப்போம் என்று கூறிவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருந்தாள் வைத்தியர்.
 
உடலும் மனமும் சோர்ந்துபோக வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு எழுந்து நடந்தவன் அறையுள் சென்றதும், மனைவி இரண்டு குழந்தைகளையும் இரு கைகளாலும் அணைத்தபடி முகமெங்கும் பூரிப்புடன் இருப்பதைக் கண்டு தானும் அவளருகில் சென்று பெண் குழந்தையைத் தன் கைகளில் வாரி எடுத்துக் கொண்டான்.
 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை எல்லாம் வரமா..???! என்ன கொடுமை..???! அதெல்லாம்.. இயற்கையில சாதாரணமா நடக்கிற விசயங்கள். எல்லா உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யும். அதை எல்லாம் வரமென்று சொல்லக் கூடாது. தலைப்பே.. இந்த நவீன யுகத்தில்.. ஒரு மாதிரியா இருக்குது. கதை..????! காலத்துக்கு ஏற்ப.. மாறுங்க ஆன்ரிமாரே..! :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்குது அக்கா. முடிவில் திருப்பம் எதிர்பாராதது. எழுத்து பிழைகளை கொஞ்சம் கவனிக்கவும்.

'எல்லாமாக எனக்கு நீங்கள் மூன்று மருத்துவச் செலவுக்குத் இலட்சம் தந்துவிட வேண்டும் .'

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை  விஞ்ஞான விந்தையா?  என எண்ண தோன்றுகிறது.   பிள்ளை இல்லாமல் வேதனைப் பட்டவர்களுக்கு  இது ஒருமகிழ்வு இது ஒரு ..உண்மைக்க தையாக  இருக்க கூடும்.தாய்மை ஒரு வரம் .உலகுக்கு  வந்த ஒன்றும் அறியாத் குழந்தைகள் அன்பும்பாசமும் ஊட்டி  வளர்க்க  பட வேண்டிய செல்வங்களே ...

 

ஊரிலும் மெலனி ன் குறைபாட்டால் சென் நிற முடி உள்ள சிறுவர்களை  பார்த்து இருக்கிறேன். ஊனமா  பிறந்த குழந்தைகளை   புறக்கணித்தா  விடுகிறார்கள். இல்லயே எல்லாம் இறைவன் தந்த வரம்.


நல்லா இருக்குது அக்கா. முடிவில் திருப்பம் எதிர்பாராதது. எழுத்து பிழைகளை கொஞ்சம் கவனிக்கவும்.

'எல்லாமாக எனக்கு நீங்கள் மூன்று மருத்துவச் செலவுக்குத் இலட்சம் தந்துவிட வேண்டும் .'

 

 

இது  சொல் இடம் மாறி இருக்கலாம் .எல்லாமாக மருத்தவ செலவுக்கு மூன்று லட்சம் தரவேண்டும்.  ..என வரும் சுமோ வின் எழுத்தில் ஊர் வழக்கும் இருக்கிறது ... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை எல்லாம் வரமா..???! என்ன கொடுமை..???! அதெல்லாம்.. இயற்கையில சாதாரணமா நடக்கிற விசயங்கள். எல்லா உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யும். அதை எல்லாம் வரமென்று சொல்லக் கூடாது. தலைப்பே.. இந்த நவீன யுகத்தில்.. ஒரு மாதிரியா இருக்குது. கதை..????! காலத்துக்கு ஏற்ப.. மாறுங்க ஆன்ரிமாரே..! :D  :lol:

 

நீங்கள் கட்டாயம் வந்து எழுதுவீர்கள். சோதனைக் குலைக் குழந்தை பற்றி விரிவாக விளக்கம் தருவீர்கள் என்றல்லவோ நினைத்தேன். நீங்கள் என்னவென்றால் ......இது இயல்பா நடந்த ஒரு உண்மைச் சம்ப்வத்தைத் தான் தந்துள்ளேன்.

 

நன்றாக உள்ளது சுமோக்கா...ஆனால் முடிவு தான் இதுவரை கேள்விபடாத விடயம். இந்தியாவில் இது நடக்காது என்று கூறுவதற்கும் இல்லை.

பிள்ளை எல்லாம் வரமா என்று நெடுக்ஸ் அண்ணா எள்ளி நகையாடுவது உண்மையில் மனவருத்தத்திற்குரியது :(.  அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் குழந்தை வரத்தின் அருமை பற்றி. நன்றிகள் சுமோக்கா..!

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த  சோகம்

இந்த நிலை  எவருக்கும் வரக்கூடாது

 

எனது நண்பர் ஒருவர் திருமணம் செய்து

20 வருடங்களாகியும் பிள்ளையில்லாது

பிரான்சில் அனைத்தும் செய்து பார்த்து

பின்னர் இந்தியா  சென்று அங்கும் பலமுறை அழிந்து

இறுதியாக  ஒன்று தங்கி

அதுவும் 5 மாதத்தில் பிரச்சினையாகி

அதை  வெளியில் எடுத்து

அதைப்படம் எடுத்து

பிள்ளை என  மகிழ

அதுவும் போய் விட்டது

அவர்கள் இந்தியாவிலிருந்த திரும்பியதும் பலர் போய் ஆறுதல் கூறினார்கள்

செத்தவீடு போல.........

ஆனால் என்னால் அவர்கனைச்சந்திக்கவே  முடியவில்லை.

என்ன  ஆறுதல் சொல்வது????

அத்துடன்  பெரும்  செலவு.................

 

இந்த நிகழ்வின் பின்தான் உண்மையில் எனக்கே  பிள்ளையின் அருமை  தெரிந்தது.. :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்த நெடுக்ஸ், முதல்வன்,நிலா அக்கா, தமிழினி, விசுகு அண்ணா ஆகியோருக்கு நன்றி.

உண்மையில் கடந்த வருடம் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு நீண்டகாலம் குழந்தை இன்றி இருக்கிறீர்கள். சோதனைக் குழாய்க் குழந்தை ஒன்றைப் பெற்று வளர்க்கலாமே என்று யோசனை கூறினேன். அப்போதுதான் அவர் தான் எத்தனையோ தடவைகள் முயன்று அதன் காரணமாக ஏற்பட்ட வழிகளைக் கூறி தயவுசெய்து இனிமேல் மற்றவர்களுக்கு யோசனை கூறாதீர்கள் என்றும் கூறினார். அதிலும் இந்தியா செல்லும் எம் பெண்களுக்கு பெண்ணின் முட்டை எடுக்கப்படாமலே அவர்களின் அல்லாத கருவும் வைத்து, அதைப்பற்றிய அறிவு அற்ற எம்மவர்கள் பலர் எந்தக் கேள்வியும் கேட்காது யாரோ இருவரின் குழந்தையைத் தாம் சுமந்து தமது என நம்பிக்கொண்டு வளர்க்கின்றனர் என்றும் கூறியபோது, பிள்ளைகள் இருப்பதனால் எமக்கு அதன் வலி தெரியவில்லை. இனிமேல் யாருக்கும் இந்தியா போகும்படி யோசனை கூறுவதில்லை எனவும் முடிவெடுத்தேன்.

 

இதை வாசித்தபின் இதுபற்றி பலர் விரிவாக எழுதுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் பெரிதாக ஒருவரும் எழுதாதது வேதனைக்குரியது.

 

இந்தக் கதையை நான் இப்பொழுது எழுதக் காரணம் எனக்குத் தெரிந்தவர்கள் இங்கு இருக்கின்றனர். நீண்ட காலமாகக் குழந்தை இல்லை என்று இந்தியா சென்று பெற்றுக்கொண்டு வந்தனர். கடந்த வாரம் ஒரு கலை நிகழ்ச்சியில் அந்தப் பிள்ளைகள் இருவரும் கர்நாடக சங்கீதம் பாடினர். அவர்களுக்கு இப்போ பதின் மூன்று வயது. உரிச்சு வச்சு வெள்ளைக்காரப் பிள்ளைகள் போலத்தான். அதிலும் பெடியன் இஸ்ரேலியர்கள் போல் இருந்தான். அதில் உதித்ததே இக்கதை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் இருந்தும் இந்தியாவிற்கு சென்று பிள்ளை பெற்றெடுத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். உண்மைக்கதைக்கு நன்றி சுமேரி...


பிள்ளை எல்லாம் வரமா..???! என்ன கொடுமை..???! அதெல்லாம்.. இயற்கையில சாதாரணமா நடக்கிற விசயங்கள். எல்லா உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யும். அதை எல்லாம் வரமென்று சொல்லக் கூடாது. தலைப்பே.. இந்த நவீன யுகத்தில்.. ஒரு மாதிரியா இருக்குது. கதை..????! காலத்துக்கு ஏற்ப.. மாறுங்க ஆன்ரிமாரே..! :D  :lol:

 
தலையிடியும் தனக்கு வந்தால்த்தான் தெரியுமெண்டு சொல்லுவினம்...... :(
 
பெரிய பெரிய டாக்குத்தர்மாரே ஏலாக்கட்டத்திலை இனி கடவுளை வேண்டுங்கோ எண்டுதான் சொல்லுறவை..... :)  :D
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கதை தந்தமைக்கு நன்றிகள் சுமே

  • கருத்துக்கள உறவுகள்

நான் சின்ன வயதாக இருக்கும்போது, இந்தியாவைப் பற்றி ஒரு 'கனவுப் பூமி' என்ற ஒரு எண்ணம் இருந்தது!

 

காலப்போக்கில் அந்தக் கனவு 'சின்னாபின்னமாக' சிதறுண்டு போனது!

 

ஒருவருக்குத் தெரியாமலே அவரது சிறுநீரகம் போன்ற அத்தியாவசியமான உறுப்புக்களை அகற்றிப் பணத்துக்காக விற்கும் 'பண்பாடு' இவர்களிடம் உள்ளது!

 

ஆபிரிக்க தேசத்துக் குழந்தைகளும், மக்களும் இவர்களது 'காலாவதியாகி விட்ட' மருந்துக்குளிசைகளால் உயிர் விட்ட கதைகள் ஏராளம்! இன்றும் தொடர்கின்றது.

 

எனக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்தால், போரினால் பாதிக்கப்பட்ட 'குழந்தைகளில்' ஒன்றை அல்லது இரண்டைத் தத்தெடுத்து வளர்த்திருப்பேன்.

 

எனது இரத்த உறவுகள் கூட அண்மையில் இப்படியான 'இரண்டு குழந்தைகளைத்' தத்தெடுத்திருக்கின்றன!

 

உலகப் பெயர்பெற்ற 'பில் கேட்ஸ்' கூட இவ்வாறு தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தையே !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமாரசாமி,புத்தன்,புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை எல்லாம் வரமா..???! என்ன கொடுமை..???! அதெல்லாம்.. இயற்கையில சாதாரணமா நடக்கிற விசயங்கள். எல்லா உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யும். அதை எல்லாம் வரமென்று சொல்லக் கூடாது. தலைப்பே.. இந்த நவீன யுகத்தில்.. ஒரு மாதிரியா இருக்குது. கதை..????! காலத்துக்கு ஏற்ப.. மாறுங்க ஆன்ரிமாரே..! :D  :lol:

 

மருத்துவம் சார்ந்ததுறையில் இருந்து கொண்டே இப்படி எழுதி இருக்கிறீங்களே..இது உங்களுக்கே நல்லா இருக்கா...கதைச்சு பிரியோசனம் இல்லை விடுங்க...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் யாயினி. நான் நெடுக்கர் விளக்கம் தருவார் என்று எண்ணினேன். வரவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்போ பிள்ளை இல்லாதவர்கள் இந்தியா சென்று இரண்டு பிள்ளைகளுடன் வருவது சகஜம். வசதிகள் இருந்தும் பலவருடம் குழந்தை இல்லாதவர்களுக்குத்தான் அதன் வேதனை புரியும். அதுவும் தன் மூலமாக / தன் மனைவிமூலமாக குழந்தைகள் கிடைக்குமெனில் அதை ஏன் தவற விட வேண்டும். தப்பில்லை. ஆனால் வைத்தியர்கள் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு சேலைக்கு சட்டைத்துணி எடுப்பது என்டாலே ஆயிரம் கடை ஏறி இறங்குபவர்களுக்கு ,  தம்பதியினருக்கு பொருத்தமான கருவைப் பொருத்த வேண்டும்...! :mellow:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயங்கள் பற்றி மக்களுக்குச் சரியான தெளிவு இல்லைமையினாலேயே வைத்தியர்கள் இப்படிச் செய்வது. நன்றி அண்ணா வரவுக்கு.

இந்த கதையில் நிகழ்ந்ததுபோலவே ஜேர்மனியில் ஒரு தமிழ் குடும்பத்திற்கு நிகழ்ந்தது. அவர்கள் சிங்கப்பூரில் இந்த மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொண்டார்கள். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அதிலே ஒன்று உடலமைப்பில் சீனாகாரன் மாதிரி. மற்றது பெற்றோரைப் போன்ற உடலமைப்பு. இது பல வருடங்களுக்கு முன் பார்த்தது. தற்போது இருவரும் இளைஞர்களாக வளர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

கதைக்கு பாராட்டுகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவம் சார்ந்ததுறையில் இருந்து கொண்டே இப்படி எழுதி இருக்கிறீங்களே..இது உங்களுக்கே நல்லா இருக்கா...கதைச்சு பிரியோசனம் இல்லை விடுங்க...

 

 

மருத்துவ அறிவியலில்.. பிள்ளை உருவாக்குவது.. பிள்ளைப் பெறுவது எல்லாம் வரம் என்று சொல்லிக் கொள்வதில்லை. natural biological process என்று தான் கொள்கிறார்கள். IVF கூட அதியம் இல்லை. அதிலும்.. 10 சிசுக்களை உருவாக்கினா.. 6 கடாசிட்டு.. 4 தான் உள்ள வைக்கிறாங்க. இல்ல சேமிப்பில.. வைக்கிறாங்க. மருத்துவ அறிவியலில் பார்த்தா.. உலகில் மிக சீப்பான விடயமா இது இப்ப இருக்குது. இதை வரமுன்னு என்னால ஏற்றுக் கொள்ள முடியல்ல..! அதுகும் உலக சனத்தொகை 7 பில்லியனை எட்டிக் கொண்டிருக்கிற நிலையில்... இதுக்கு விளக்கம் வேற தரணுமா..????! எத்தனையோ பிறந்த குழந்தைகள் உணவின்றி.. ஆதரவின்றி சாகுதுங்க.. வன்னியில் நாளைக்கு 7 தற்கொலை.. இந்த மரணங்களை ஏன் வரங்களின் சாவுன்னு ஒருத்தரும் பார்க்கிறீங்கல்ல..???! :icon_idea:

மருத்துவ அறிவியலில்.. பிள்ளை உருவாக்குவது.. பிள்ளைப் பெறுவது எல்லாம் வரம் என்று சொல்லிக் கொள்வதில்லை. natural biological process என்று தான் கொள்கிறார்கள். IVF கூட அதியம் இல்லை. அதிலும்.. 10 சிசுக்களை உருவாக்கினா.. 6 கடாசிட்டு.. 4 தான் உள்ள வைக்கிறாங்க. இல்ல சேமிப்பில.. வைக்கிறாங்க. மருத்துவ அறிவியலில் பார்த்தா.. உலகில் மிக சீப்பான விடயமா இது இப்ப இருக்குது. இதை வரமுன்னு என்னால ஏற்றுக் கொள்ள முடியல்ல..! அதுகும் உலக சனத்தொகை 7 பில்லியனை எட்டிக் கொண்டிருக்கிற நிலையில்... இதுக்கு விளக்கம் வேற தரணுமா..????! எத்தனையோ பிறந்த குழந்தைகள் உணவின்றி.. ஆதரவின்றி சாகுதுங்க.. வன்னியில் நாளைக்கு 7 தற்கொலை.. இந்த மரணங்களை ஏன் வரங்களின் சாவுன்னு ஒருத்தரும் பார்க்கிறீங்கல்ல..???! :icon_idea:

 

சார்.. நாங்க உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கும் விளக்கம் வேறு... அதாவது பெற்றோரின் முட்டையில் இருந்தும் கருவில் இருந்தும் உருவாக்கப்படும் சிசுவில் உருவாகும் குழந்தையானது ஏன் பெற்றோரின் உருவ அமைப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல் வேற்று நாட்டவரின் உருவ அமைப்பில் உள்ளது...  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சார்.. நாங்க உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கும் விளக்கம் வேறு... அதாவது பெற்றோரின் முட்டையில் இருந்தும் கருவில் இருந்தும் உருவாக்கப்படும் சிசுவில் உருவாகும் குழந்தையானது ஏன் பெற்றோரின் உருவ அமைப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல் வேற்று நாட்டவரின் உருவ அமைப்பில் உள்ளது...  :rolleyes:

 

ஒரே பெற்றோருக்கு பிறந்த பிள்ளை என்றாலும் 100% பெற்றோர் போல தோன்றாது காரணம்.. பெற்றோரின் முட்டையும்.. ஆண் அணுவும்.. பெற்றோரின் இயல்பில் இருந்து வேறுபட்டவை.

 

ஆனால்.. இன்னொரு நாட்டினர் மாதிரி இருக்க வாய்ப்புக் குறைவு.

 

அப்படி அமைய உள்ள ஒரு சில வாய்ப்புக்களில்.. IVF சிகிச்சையின் போது ஆணின் விந்தும்.. முட்டையும் பொறுக்கி எடுக்கப்பட்டு.. அதாவது சேகரிக்கப்பட்டு உறைநிலையில் வைத்து பராமரிக்கப்பட்டு.. கருக்கட்டலுக்கு பாவிக்கப்படுவது உண்டு. இப்படி சேமிக்கும் இடத்தில்.. மாதிரிகள் மாறுப்பட்டால்.. உருவாகும்.. குழந்தையும் உருவத்தில்.. மாறுப்படலாம்.

 

அதுமட்டுமன்றி.. கருக்கட்டிய முட்டைகளையும்.. பின்னொரு தேவைக்காக சேமித்து வைப்பார்கள். அப்போதும்.. மாதிரிகள்.. மாறுப்பட வாய்ப்புள்ளது.

 

அது இன்றி.. சிலர்.. வேறு பெண்களின் முட்டையை அல்லது வேறு ஆண்களின் ஆண் அணுக்களை பாவிக்கக் கோருவார்கள். அல்லது மருத்துவரின் பரிந்துரையின் கீழ் அப்படிச் செய்வார்கள். அப்படி அடுத்தவரின் ஆண் அணு அல்லது முட்டையை பெற்று IVF முறையில் குழந்தை பெற்றுக் கொண்டால்.. அங்கும் தோற்ற அளவில் பல பாரியமாற்றங்களுக்கு இடமுண்டு.

 

சில விடயங்கள்.. வைத்தியருக்கும்.. பெற்றோருக்கும் என்று ரகசியமானது என்பதால்.. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு விசித்திரமாக அதே நம்மவர்களுக்கு சந்தேகமாக அமையலாம். இதெல்லாம் உயிரியல் மருத்துவத்தில் சகஜம். சாதாரணம். வேற்று நாட்டவரின் குழந்தையைப் பெற்றால்.. ஜீன் pool... நீள வாய்ப்புள்ளது. :icon_idea::)

விளக்கத்திற்கு மிகவும் நன்றி!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கூறியதுபோல் அவர்களுடன் கலந்தாலோசித்தே மற்றவரின் முட்டையையோ அணுவையோ வைத்தாலும் கூற ஆரம்பத்தில் செய்பவர்கள் பிள்ளை ஒன்று உருவானால் காணும் என நினைப்பார்களே அன்றி இப்படிச் சிக்கல்கள் வரலாம் என்று சிந்தித்துப் பார்க்காதவர்களாகவும் இருந்திருக்கலாம். அனுபவத்தின் பின் தான் எல்லாமே மூளைக்கு உறைக்கும்.

  • 2 weeks later...

கதைக்கு வாழ்த்துக்கள் சுமேரியர் . இது விடயமாக நானும் ஒரு பதிவை சமூக சாளரத்தில் எழுதியிருந்தேன் . இது பற்றி மேலும் கதைக்கப்பட வேண்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி கோமகன். நான் இன்னும் நிறையக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர் பார்த்தேன். எனக்கு ஏமாற்றம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.