Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்துக்கல்லூரி - சில நினைவுகள்.......

Featured Replies

kalaiyarasi595.jpg
 
யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் (கனடா) வருடந்தோறும் நடாத்தும் கலைவிழாவான கலையரசி 2014 நிகழ்வினையொட்டி வெளியான மலருக்காக எழுதிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கே. -
 
ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானதும், இனிமையானதுமான பருவம். எத்தனை வருடங்கள் சென்றாலும், மனதில் பசுமையாக இருக்கும் மாணவப்பருவமும், படித்த பாடசாலைகளும் எப்பொழுதுமே அழியாத கோலங்களாக நெஞ்சில் இருப்பவை. பாடசாலையில் மாணவர்கள் கல்வி மட்டும் கற்பதில்லை. கல்வியுடன் விளையாட்டு, வாழ்வின் சவால்களை எதிர்த்து நடைபோடும் ஆளுமையினையும் கூடவே பெறுகின்றார்கள். இதற்கு முக்கியமானவர்கள் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரையில் என் கல்வி எட்டாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்வது வரை யாழ் இந்துக் கல்லூரியிலேயே கழிந்தது. எப்பொழுதும் நெஞ்சில் உவகையினை ஏற்படுத்தும் யாழ் இந்துக் கல்லூரிக் காலம் பற்றி என் சிந்தையிலெழும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம்.
 
 யாழ் இந்துக் கல்லூரியும், ஈழத்துத் தமிழ் இலக்கியமும்.......
 
நான் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலகட்டத்தில் அங்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த இலக்கிய ஜாம்பவான்கள் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். சொக்கன், தேவன் (யாழ்ப்பாணம்) ஆகியோரைக் குறிப்பிடலாம். பண்டிதர் கணபதிப்பிள்ளை என்பவரும் அவ்வப்போது தமிழ்ப்பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததாக ஞாபகம். ஆனால் இவர்கள் யாரிடமும் எனக்குக் கல்வி கற்கச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதில்லை. ஆனால் இவர்களில் தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் 'மணிபல்லவம்' என்னிடம் இருந்தது.  ஆங்கில 'கிளாஸி'க்குகளிலொன்றான 'ரொபேர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்' எழுதிய 'புதையல் தீவு' (Treasure Island) நாவலின் தமிழாக்கமது.
 
யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற, ஆசிரியர்களாகக் கடமையாற்றிய மேலும் பலர் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகினுள் தடம் பதித்துள்ளார்கள். கலாநிதி க.கைலாசபதி, கவிஞர் இ.முருகையன், அறிஞர் அ.ந.கந்தசாமி (இவர் மகாஜனாக் கல்லூரியிலும், பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றவர்.)  செங்கை ஆழியான் (க.குணராசா) , செம்பியன் செல்வன், 'சங்கிலியம்' என்னும் காப்பியம் பாடிய கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை, ஆசிரியராகக் கடமையாற்றிய , ஈழத்துறைவன் என்று ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஏரம்பமூர்த்தி மாஸ்டர்  (இவர் ஆனந்தவிகடன் நடாத்திய நாடகப்போட்டியொன்றிலும் பாராட்டுப் பரிசு பெற்றவர்),  து.வைத்திலிங்கம், முனியப்பதாசன். ஐ.சாந்தன், நோயல் நடேசன், அங்கையன், சுதாராஜ், அராலியூர் நா.சுந்தரம்பிள்ளை, வ.ந.கிரிதரன், எனப் பட்டியல் நீளுகிறது.
 
புண்ணியலிங்கம் 'மாஸ்டர்'!
 
யாழ் இந்துக் கல்லூரி என்றதும் எனக்கு நினைவில் வரும் ஆசிரியர்களிலொருவர் புண்ணியலிங்கம் 'மாஸ்டர்'. இணுவில் பக்கமிருந்து வந்தவரென்று ஞாபகம். உயரமான ஆகிருதி. சிரித்த  முகமும், சந்தனப்பொட்டுமாகக் காட்சியளிப்பார். அவர் சிரிக்கும்போது வாயெல்லாம் பற்கள் தெரியும். விகடன் 'கார்ட்டூன்'களில் வருபவர்கள் சிரிப்பதுதான் ஞாபகத்துக்கு வரும். அவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் பௌதிகவியல் பாடம் எடுத்தவர். அந்த ஒரு வருடம்தான் அவரிடம் நான் பாடம் எடுத்திருக்கின்றேன். ஆனால் அவர் மறக்க முடியாத ஆசிரியர்களிலொருவராக என் நினைவில் பதிந்து விட்டதற்குக் காரணம் அவர் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறைதான். அவர் கற்பிக்கும்போது கற்பிக்கும் விடயங்களை நடைமுறையில் செய்து காட்டிக் கற்பிப்பதில் விருப்பமுள்ளவர்.
 
ஒருமுறை 'டைனமோ' எவ்விதம் வேலை செய்கிறதென்று காட்டுவதற்குத் தனது சைக்கிளை வகுப்பறைக்குக் கொண்டுவந்து 'டைனமோ' எவ்விதம் வேலை செய்கிறது என்பதைச் செய்து காட்டினார். சைக்கிள் டைனமோ எவ்விதம் சில்லின் இயக்கச் சக்தியை மின்சாரமாக மாற்றி, சைக்கிளுக்கு ஒளியை வழங்குகிறது என்பதை விளங்கப்படுத்தினார். மாணவர்களுக்குக் கற்பிக்கும் விடயம் நன்கு புரியவேண்டுமென்பதற்காக, தனது சைக்கிளைக் கொண்டுவந்து பாடம் நடத்திய ஆசிரியரை நினைக்கும் தருணங்களில் யாழ் இந்துக்கல்லூரியில் கழிந்த என் மாணவப் பருவத்தை நினைத்துக்கொள்வேன்.
 
சந்தியாப்பிள்ளை 'மாஸ்டர்'
 
சந்தியாப்பிள்ளை 'மாஸ்;டரிடம்' ஒன்பதாவது வகுப்பில் தமிழ் படித்திருக்கின்றேன். இவர் தமிழ் ஆசிரியரல்லர். சாரணர் இயக்கம், விளையாட்டு இவைதாம் இவரது பிரதானமான துறைகள். பாடத்தைச் சுவையாகப் படிப்பிப்பதற்காக அவர் அவ்வப்போது சில குட்டிக்கதைகளைக் கூறுவதுண்டு. சில கதைகள் மாணவர்களின் வயதுக்கு மீறியவையாகவும் இருப்பதுண்டு. ஆனால் ஒருபோதுமே அவற்றை அவர் விரசமாகக் கூறுவதில்லை. வேடிக்கையை மையமாக வைத்தே அவற்றைக் கூறுவார். ஆனால் சந்தியாப்பிள்ளை 'மாஸ்டர்; என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது இவை அல்ல. இன்னுமொரு விடயம். அது: எங்களது வகுப்பு குமாரசாமி மண்டபத்துக்கு, கே.கே.எஸ்.வீதியிலிருந்து வரும் வீதியின் வடக்குப் பக்கத்திலிருந்தது. எங்கள் வகுப்பு யன்னல் வழியாக அவ்வீதியையும், அங்கு நடப்பவற்றையும் காணலாம். அவ்வப்போது அவ்வழியால் இறந்தவர்கள் சிலரது இறுதி ஊர்வலங்கள் செல்வதுண்டு. அவ்விதமான சந்தர்ப்பங்களில் சந்தியாப்பிள்ளை 'மாஸ்டர்' மாணவர்கள் அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, அவ்வழியால் இறுதி யாத்திரை செல்லும் அந்த மனிதருக்கு அஞ்சலி செய்ய வைப்பார். ஒருவரின் அந்திம யாத்திரைக்குச் சந்தியாப்பிள்ளை 'மாஸ்;டர்' காட்டிய அந்த மானுட நேயப்பண்பு எனக்கு அவ்வயதில் ஆச்சரியத்தை மூட்டியது. இன்றும்தான்.
 
யாழ் இந்துக்கல்லூரி: மேலும் சில நினைவுகள்.......
 
யாழ் இந்துக்கல்லூரி கல்விக்கும், விளையாட்டுக்கும் பெயர் போன கல்லூரிகளிலொன்று.  நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, யாழ் இந்துக் கல்லூரியின் கிரிக்கட் குழுவில் எங்களைக் கவர்ந்தவர்களாக சூரி, குகன் (பொன்னம்மான்) ஆகியோரையே நான் குறிப்பிடுவேன். இவர்களிருவரும் சொட்டுவதில்லை. பந்தை விளாசுவதில் (ர்வைவநசள) வல்லவர்கள். சில நேரங்களில் நின்று பிடிப்பார்கள்;. சில நேரங்களில் ஒரு சில விளாசல்களுடன் போய் விடுவார்கள். பந்து வீச்சாளர்களில் எனக்குப் பிடித்தவர்களாக நிருத்தானந்தனையும், வசந்தனையும் குறிப்பிடுவேன். சூரி சுழல் பந்து வீசுவதில் வல்லவர். ஹட்டன் நாஷனல் வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த சூரி பின்னர் யாழ்நகரில் இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலொன்றில் கொல்லப்பட்டதாகப் பின்னர் கேள்விப்பட்டேன். குகனின் அண்ணன் நரேன் (யோகி). யோகியின் கிரிக்கட் ஆட்டம் குகனைப் போல் விளாசுதல்லல்ல. நிதானமானது. ஆனால் நரேன் விளையாட்டில் பல சாதனைகளைச் செய்தவர். குண்டெறிதல், ஈட்டியெறிதல் மற்றும் இன்னுமொரு விளையாட்டு நீளம் பாய்தல் அல்லது உயரம் பாய்தல் ஆகியவற்றில், பல வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தை ஆற்றிய சாதனைகளை முறியடித்தவர். அவ்விதம் முறியடித்த நிகழ்வுகளை சிறுவனாக நின்று அவதானித்திருக்கின்றேன். நரேனுடைய தந்தையார் யோகரத்தினம் ஒரு நில அளவையாளர். தாயார் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை. எனது அம்மாவும் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியைகளிலொருவர்.  அம்மா யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பத்தில் சிறிது காலம் ஆசிரியையாகவும் இருந்திருக்கின்றாரென்று கூறியதாக ஞாபகம். அம்மாவின் திருமணத்துக்கு திருமதி யோகரத்தினம் பரிசாகக் கொடுத்திருந்த வெள்ளித்தட்டுகளும், வெள்ளிக் குவளைகளும் நான் நாட்டை விட்டுப் புறப்படும் வரையில் வீட்டிலிருந்தன. அவற்றில் வெள்ளித்தட்டொன்று இன்னும் என்னுடைய கடைசித் தங்கையிடம் உள்ளது.
 
துடுப்பெடுத்தாட்ட விளையாட்டில் 'சொட்டு'வதற்குப் பெயர் பெற்றவர் ரவீந்திரன் ( 'விட்டமின்' ) என்று அழைக்கப்பட்டவர். விளையாட்டை இழுத்தடித்து வெற்றி,  தோல்வி இல்லாமல் செய்ய வேண்டுமென்றால் இவரைத்தான் நம்பியிருப்பார்கள். இவர் பின்னர் யாழ் இந்துக் கல்லூரிக் கிரிக்கட் குழுவின் தலைவராகவுமிருந்தவர்.
 
அப்பொழுதெல்லாம் தெற்கிலிருந்து 'ரோயல் கல்லூரி' புனித தோமஸ் கல்லூரி போன்ற கல்லூரிகளிலிருந்து துடுப்பெடுத்தாட்டக் குழுக்கள் யாழ் இந்துக் கல்லூரிக்கு வந்து யாழ் இந்துவுடன் மோதுவது வழக்கம். அவ்விதம் எங்களது மாணவப் பருவத்தில் வந்த ஒருவர் பின்னர் இலங்கை அணி 'டெஸ்ட் மாட்ச்'சுகளில் விளையாடத் தொடங்கியபோது ஆடிப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களிலொருவர். அவர்: அர்ஜுனா ரணதுங்க.
 
ஒருமுறை யாழ் சென்ரல் கல்லூரி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் வந்திருந்த 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுடன், யாழ் பாடசாலைகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மோதியது ஞாபகத்திலுள்ளது. யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து சூரி யாழ் மாணவர் குழுவில் விளையாடினாரென்று நினைக்கின்றேன். பாகிஸ்தான் குழுவில் விளையாடிய மாணவர்களிலொருவர் பின்னர் பாகிஸ்தான் 'டெஸ்ட் மாட்ச்'சுகளில் விளையாடிய ஜாவிட் மியாண்டாட். ஆஸ்திரேலிய அணியில் மைக்கல் லாங் என்பவர் இரு தடவைகள் பந்தைப் பிடிக்கச் சந்தர்ப்பங்கள் கொடுத்து, அதிருஷ்ட்டவசமாகத் தப்பி 158 ஓட்டங்கள் எடுத்ததும் இன்னும் நினைவிலுள்ளது.
 
யாழ் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட விளையாட்டிலும் பெயர் பெற்றது. எங்கள் காலகட்டத்தில் எனக்குப் பிடித்த இருவர் கண்ணாடி ராஜேந்திரன், பாசையூரைச் சேர்ந்த விமலதாசன் (என்றுதான் நினைக்கின்றேன்). கண்ணாடி உதைப்பந்தாட்டக் குழுவின் முன்னிலை ஆட்டக்காரராக விளையாடுபவர். பந்து கிடைத்துவிட்டால் விரைவாக அதைக் கொண்டு சென்று 'கோல்' அடிப்பதில் வல்லவர். மகாஜனாக் கல்லூரியும் உதைப்பந்தாட்டத்திற்குப் பெயர்பெற்ற கல்லூரி. அக்காலகட்டத்தில் கண்ணாடியைப் போல் அங்கு விளையாடியவர் சிவானந்தராஜா ('முயல்' என்று அழைப்பார்கள்).
 
விமலதாசன் எதிராளியிடமிருந்து பந்தினை வெட்டி, ஏய்த்து, சாதுரியத்துடன் (Dodge) விளையாடுவதில் வல்லவர். இவரிடம் பந்து கிடைத்துவிட்டால் அதனை அவர் விளையாடும் அழகு பார்ப்பதற்கு அற்புதமானது. அக்காலகட்டத்தில் அவரது ஆட்டத்தினை விரும்பி இரசிப்பேன்.
 
குழம்பிய சென்ரல் / யாழ் இந்து துடுப்பெடுத்தாட்டப் போட்டி!
 
அதிபர் சபாலிங்கம் என்றதும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம்: யாழ் இந்து /  சென்ரல் துடுப்பெடுத்தாட்டப் போட்டி. நான் குறிப்பிடும் போட்டி யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்ற போட்டி இடையில் குழம்பி, 'பிட்ச்' எல்லாம் எரிக்கப்பட்டது. அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். யாழ் இந்துக் கல்லூரியின் புகழ்பெற்ற 'கிரிக்கட் கீப்பராக' விளங்கிய புவிராஜசிங்கத்தின் வீட்டுப் பகுதியை அண்டிய எல்லையில் அதிபர் சபாலிங்கத்தின் மகன் உதயலிங்கத்தின் தலைமையில் மாணவர்களாகிய நாங்கள் இந்துக்கல்லூரிக்கு ஆதரவாகக்கோசம் எழுப்பிக்கொண்டிருந்தோம். அப்பொழுது சபாலிங்கம் அவர்கள் சென்ரல் கல்லூரி அதிபராக இருந்தவர். அன்று யாழ் இந்துவின் வேகப்பந்து வீச்சாளராகப் பந்துகளை எறிந்துகொண்டிருந்தவர் நிருத்தானந்தன். அந்தப் போட்டி இடையில் சண்டியன் கொட்டடி மணியம் புகுந்து குழப்பியதாக நினைவு. யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரும், எந்த நேரமும் யாழ் இந்துக் கல்லூரியைச் சுற்றி வளைய வந்துகொண்டிருப்பவருமான 'சீனி' யாழ் இந்துக்காக அன்று சன்னதமாடிக்கொண்டிருந்தார்.
 
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது தனது மகன் உதயலிங்கம் (உதயலிங்கம் யாழ் இந்து மாணவர்; லண்டனில் சைக்கிள் விபத்தொன்றில் பல வருடங்களுக்கு முன்னர் மரணித்து விட்டார்.) தலைமையில் யாழ் இந்து மாணவர்கள் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த சென்ரல் கல்லூரி அதிபரான சபாலிங்கம், போட்டி குழம்பியதும், உதயலிங்கத்தின் கன்னத்தில் இரண்டு தட்டு தட்டி இழுத்துக்கொண்டு சென்றதை கவனித்துக்கொண்டிருந்தேன்.
 
யாழ் இந்துக் கல்லூரி என்றதும் எனக்குக் கற்பித்த ஏனைய ஆசிரியர்கள் பலரின் நினைவுகளும் கூடவே தோன்றுவது வழக்கம். சோமசுந்தரம் மாஸ்டர், துரைராஜா மாஸ்டர், சிவஞானசுந்தரம் மாஸ்டர், ஆறுமுகசாமி மாஸ்டர், வேலும் மயிலும் மாஸ்டர், முத்துக்குமாரசாமி மாஸ்டர், மரியதாஸ் மாஸ்டர், குமாரசாமி மாஸ்டர், கருணாகரன் மாஸ்டர், மகேஸ்வரன் மாஸ்டர், மகேந்திரன் மாஸ்டர், சிவராஜா மாஸ்டர், சுந்தரதாஸ் மாஸ்டர்..... என்று கூறிக்கொண்டே போகலாம். வாகன விபத்தொன்றில் மரணித்த ஆய்வு கூட உதவியாளராகக் கடமையாற்றிய மலையகத்தைச் சேர்ந்த கணபதியையும் மறக்க முடியாது. மாணவர்களுக்கு மிகவும் ஒத்துழைத்த அவரது சிரித்த முகமும், நேர்த்தியாக வாரப்பட்ட தலைமுடியும் இன்னும் நினைவில் நிழலாடுகின்றன.
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் யாழ் இந்துவின்.. பழைய கோஸ்டி தான் கனக்கப் போல. நாங்க படிக்கிறப்போ.. குகதாசன்... பஞ்சர் எனும் பஞ்சலிங்கம்.. இவர்கள் தான் அதிபர்களாக இருந்தார்கள்.

 

நாங்கள் படிக்கிறப்போ.. சென்ரலோடு.. சென் ஜோன்ஸ் எல்லோரோடும் நல்லுறவே இருந்தது. யாரும் யாரையும்.. பெரிசு சிறுசின்னு நினைக்கிறதில்ல. பகைமை பாராட்டுவதில்லை.

 

குகதாசன் காலத்தில்.. கல்லூரி நிர்வாகத்தின் செயற்பாடு ஒன்றை எதிர்த்து பகிஸ்கரிப்பும்.. மாணவர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அது மிகவும் அமைதியாக எல்லோரும் பாராட்டும் படி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அன்றைய நேரத்தில் மாணவர்களின் ஒழுங்கான போராட்டத்தை.. விடுதலைப்புலிகள் கூட பாராட்டிச் சென்றமையை இங்கு நினைவு கூற முடியும்.

 

நாங்க படிக்கிறப்போ தான்.. யாழ் இந்துக் கல்லூரிக்குள் கூடிய அளவு பெண் ஆசிரியைகள் கல்வி கற்பிக்க ஆரம்பித்திருந்தார்கள். உயர்தர வகுப்பு ஆட்களுக்கும் மற்றும் சங்கீதம் படிப்பவர்களுக்கும் அவர்களே கல்வி கற்பித்தார்கள். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மலையக கணபதியை குறிப்பிட்ட அதேவேளை, சிங்களவரான, எமதருமை பண்டாவை, கொஸ்டல் சமையல்காரராக அங்கே தங்கி இருந்தோரை பாசத்துடன் பசியாற்றியவர், மறந்து விட்டார் போலும்?

அது சரி கண்டீன் 'போண்டா நடராஜா' ? எப்படி விடுபட்டார்.?

Edited by Nathamuni

பல பழைய நினைவுகளை கிளறிவிட்டது இந்த பதிவு . இதை எழுதியவர் பதிவுகள் இணையத்தள ஆசிரியர் வ.ந.கிரிதரன் .(எனது நண்பரும் கூட )

 

125 வருட யாழ் இந்து நிறைவுவிற்கு சில நினைவுகளை நாங்களும் மீட்டுப்பார்ப்போம் .

 

நாதமுனி கேட்டதற்காக கன்ரீன் நடராஜாவை பற்றி ஒரு நினைவு -

யாழ் இந்து -வேம்படி மாணவர்கள் சேர்ந்து ரீகல்தியேட்டரில் The Trap என்ற ஒரு ஆங்கில படம் பார்த்தோம் .படத்தில் நாயகன் ஒரு பொறியில் அகப்பட்டு தண்ணீருக்கும் வழியில்லாமல் தவிப்பார் அப்போது அந்த வழியில் வந்த கதாநாயகி தன்னிடம் இருந்த பையை திறந்து நாயகன் வாயில் போத்தலை வைக்க அதற்குள்ளும் ஒரு துளி நீர் தான் இருந்தது .

தியேட்டரே எங்கும் சோகத்தில் ஒரே நிசப்தம் 

யாரோ ஒருவர் குரல் கொடுத்தார் "நடராசா ஒரு பிளேன்ரீ" இந்து மாணவர்கள் ஒரே சிரிப்பு. வேம்படி மாணவர்களுக்கு பகிடி விளங்கவில்லை அவர்களுக்கு நடராசா யார் என்று தெரியாது தானே . :icon_mrgreen:  

  • தொடங்கியவர்

அதிபர் சபாலிங்கம் கொடுத்த அந்த அடி 

 

அடாவடித்தனமான மாணவர்களுக்கு அதிபர் பயங்கரவாதியாக இருக்க வேண்டும்

 

எங்கள் பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவை இளைய சந்ததியிடம் கையளிக்கப்பட வேண்டும். 

 
அந்தக் கையளிப்பில் பிசகுநிலை ஏற்பட்டால் அதன் முடிபு இனத்தின் வீழ்ச்சியாக இருக்கும். 
 
எனவே சமகாலச் சவால்களுக்கு முகம் கொடுத்து தமிழினம் தனது பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி எங்கள் மாணவ சமூகத்தை வழிப்படுத்துவதாகும். 
 
எனினும் எங்கள் பாடசாலைக் கட்டமைப்பில் மாணவர்களை வழிப்படுத்தல் என்பது மிகப்பெரிய பலவீனத்தில் இருப்பதைக் காணமுடியும்.  
 
மாணவர்களைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமாக இருக்கக் கூடிய பாடசாலைக் கட்டமைப்பால் எதுவும் செய்து விட முடியாது என்பது சர்வ நிச்சயம்.
 
பாடசாலையில் ஏற்படுகின்ற மாணவர் பிறழ்வு பரிணாம வளர்ச்சியுடன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்விப் பீடங்களை நோக்கி நகர்த்தப்படுகின்றன.  
 
அங்கு மாணவ நிலைக் குழப்பங்கள் உச்சமடைய எங்கள் இனத்துவப் பண்பாடுகளும் அடையாளங்களும் அறுபட வாய்ப்பாகின்றது. 
 
எனவேதான் மாணவர்களுக்கான ஒழுக்க நெறிக் கோவை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவை மிக இறுக்கமாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இவ்விடத்தில் பிரஸ்தாபித்திருந்தோம். 
 
இது குறித்து கருத்து தெரிவித்தவர்களில் பலர், மாணவர்களைத் தண்டிப்பது நியாயமற்றது எனக் கூறியிருந்தனர். மாணவர்களை உடல், உள ரீதியாகப் பாதிக்க வைப்பது மகாகுற்றம் என்பதில் எம்மிடம் மாற்றுக் கருத்தில்லை. 
 
அதேநேரம் ஒரு மாணவனின் அடாவடித்தனத்தால் பல மாணவர்கள் நெறி பிறழ்வடையக் கூடிய சந்தர்ப்பம் உண்டெனில் குற்றம் இழைக்கும் மாணவனைப் பாதுகாக்க முற்படுவது எங்கள் மக்கள் சமூகத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரும் அநீதியாகும்.
 
எனவே, குற்றம் செய்கின்ற-பாடசாலையின் ஒழுங்கு கட்டுப்பாடுகளை மீறுகின்ற மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.  
 
இல்லையேல் நல்ல மாணவர்களையும் பழுதாக்குகின்ற பணியை மட்டுமே பாடசாலைகள்  செய்வதாக இருக்கும். 
 
யாழ்.மத்திய கல்லூரியின் அதிபராக இருந்த சபாலிங்கம் அவர்கள் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டார். 
 
அவருக்கு இந்துக் கல்லூரிச் சமூகம்  வரவேற்புவசாரம் நடத்தியது. இந்த நிகழ்வில் இந்துக் கல்லூரி மாணவர்களும்  கலந்து கொண்டனர். 
 
நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது ஒரு உயர்தர வகுப்பு மாணவன் ஆ... ஹு... ஹீ... ஹீ ... என்று பலமாகக் குரல் கொடுத்தான். நடந்தது அவ்வளவுதான். மேடையில் இருந்து இறங்கிய அதிபர் சபாலிங்கம் அந்த மாணவனைத் தேடிச்சென்று பளார் என்று ஓர் அறை கொடுத்தார்.
 
அதிபர் சபாலிங்கம் கொடுத்த அந்த அடி அவர் ஓய்வு பெறும் வரைக்கும் அதன் பின்னரும் யாழ். இந்துக் கல்லூரிக் கூட்டங்களில் மாணவர்கள் நிசப்தமாக  இருப் பதற்கு பேருதவி புரிந்தது.
 
அதிபர் பதவியை உத்தியோக பூர்வமாக  ஏற்பதற்கு முன்னதாக- வரவேற்பு விழாவில் அதிபர் சபாலிங்கம் ஒரு மாணவனுக்கு கொடுத்த அடி அவருக்கு பயங்கரவாதி என்ற பட்டத்தைச் சூட்டியது.
 
உலக நாடுகளில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற பயங்கரவாதி என்ற பெயரை முதல் முதலில் பெற்றுக் கொண்டவர் ஒரு அதிபர் என்பதும் அந்தப் பட்டத்தை மாணவர்களே வழங்கி இருந்தனர் என்பதும் இங்கு நோக்குதற்குரியது. 
 
இந்தச் சம்பவம் எதைக் குறிக்கிறது எனில், சில இடங்களில் அதிபர் ஆசிரியர்கள் அடங்காத சில மாணவர்களுக்கு பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்பதாகும்.
 
 
  • தொடங்கியவர்
வயதுகள் கடந்தாலும், இவர் யாழ் இந்துவின் வளையாத வரலாறு, உம்மை வணங்குகின்றது இந்த சிற்றாறு...
(அன்று முதல் இன்று வரை இந்து அன்னைக்காய் அர்பணிப்பான வாழ்க்கை. இசை ஆசிரியர் செல்லத்துரை மிஸ்.)
 
10646932_319378338248666_159169694670083

முகநூல்

நடாவின் போண்டாவை ஆசிரியர் மாகாதேவா  ரசித்துச் சாப்பிடுவது மறக்க முடியாத ஒரு காட்சி.
 
எலியரும் மறக்க முடியாதவர்.
 
ஒரு முறை எலியர் வகுப்பைத்தாண்டும் போது ஒருவன் "மியாவ்" என்றான். போனவர் ரிவேசில் வந்து "யார்ரா அவன் ?"
 
  • கருத்துக்கள உறவுகள்

 

வயதுகள் கடந்தாலும், இவர் யாழ் இந்துவின் வளையாத வரலாறு, உம்மை வணங்குகின்றது இந்த சிற்றாறு...
(அன்று முதல் இன்று வரை இந்து அன்னைக்காய் அர்பணிப்பான வாழ்க்கை. இசை ஆசிரியர் செல்லத்துரை மிஸ்.)
 
10646932_319378338248666_159169694670083

முகநூல்

 

 

நான் ஆறாம் வகுப்பில் சங்கீதம் படிக்கும்போது மாணிக்கவாசகர் :rolleyes: என்று ஒரு ஆசிரியர் இருந்தவர். சில மாதங்களின் பின்னர் அவர் ஓய்வில் சென்றுவிட்டார்.அதன் பின்னர் இவா தான் எங்களுக்குச் சங்கீதம் படிப்பித்தவர்.கண்டிப்பு மிக்கவர். :(

எட்டாம் வகுப்புடன் சங்கீதம் சரிப்பட்டுவராது என்றுவிட்டுப் புவனேந்திரன் மாஸ்ரரிடம் சென்று அமைதியாக விவசாயம் பயின்றேன்.

எனக்குப் படிப்பித்த  ஆசான்கள்

தமிழ் மற்றும் சமயம்  குமாரசாமி ஆசிரியர்

சமூகக்கல்வி சந்தியாப்பிள்ளை ஆசிரியர்

பின்னர் கமலநாதன் ஆசிரியர்   

கணிதம் வி எஸ் சுப்ரமணியம் ( பிரத்தியேகமாகவும்)

விஞ்ஞானம்  புண்ணியலிங்கம் ஆசிரியர்

விவசாயம் புவனேந்திரன்

ஆங்கிலம் மகேந்திரன் ஆசிரியர்( மகன்( ர ) எங்கள் சமாந்தர வகுப்பு )

மரியதாஸ் ஆசிரியரிடம் அகப்படவில்லை என்று மிகவும் சந்தோசம். :o

துரையர் அவரை நாங்கள் அப்படித்தான் கூப்பிடுவோம்

நல்ல நண்பர். அவருடன் சேர்ந்து தம் அடித்த மாணவர்களும் உண்டு. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இந்துவில் இருக்கும் போது அதிபராக சபாரட்ணம் இருந்தார்.

பின்னர் குமாரசாமி காத்தர் சபாலிங்கம் என்று அடுத்தடுத்து வந்து போயினர்.கடைசியில் யார் இருந்தார்கள் என்று நினைவில் இல்லை.

ஆனால் மருந்துக்கும் பெண்கள் எவருமே இல்லை.

 

இவ்வளவு காலம் தாண்டி இப்போது தான் ஆசிரியைகளும் இப்பொது இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நடாவின் போண்டாவை ஆசிரியர் மாகாதேவா  ரசித்துச் சாப்பிடுவது மறக்க முடியாத ஒரு காட்சி.
 
எலியரும் மறக்க முடியாதவர்.
 
ஒரு முறை எலியர் வகுப்பைத்தாண்டும் போது ஒருவன் "மியாவ்" என்றான். போனவர் ரிவேசில் வந்து "யார்ரா அவன் ?"

 

  

ரிவேசிலை வந்த எலியர் குடுத்த மருந்திலை "மியாவ்" எண்டவர்ரை காது விண்கூவியிருக்குமே ?????  :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கால சில வாத்திமாரின்.. குறும்புகள்..

 

மக்கர்:  (அவருக்கு திக்கு வாயி. அவசரத்துக்கு ஒன்றும் சரியா வாயில வராது.)... டேய்  எல்லாரும் ஒண்டுக்கு வாங்கடா...  (அதாவது எல்லாரும் ஒன்றா சேர்ந்து நில்லுங்கள்.)

 

மகாதேவா: (இரசாயனவியலில்.. சூத்திரத்துக்கு பிராக்கட் போடல்லைனனா... ) எடேய்.. என்ன.. நீ... உள்ளுக்கு ஒன்றும் போடவில்லையோ... க்ஹி.. க்ஹி..க்ஹஈஈஈ (அவரின் இழுவைப் பேச்சும்.. கடைசில் விழும் பலத்த சிரிப்பும்.. பயம் கலந்த ஸ்பெசலாம்)

 

சோதிலிங்கம் - சோதி (இப்பவும் பெளதிகவியல் ஆசிரியராக இருக்கிறார்): (நாலு சம் சரியா செய்திட்டா... ).. எடே போர் ஏ காய்.. வா வந்து இதை போட்டில செய்... என்று உச்சிப் பப்பாவில ஒரேயடியா ஏத்திடுவார்.  (சோதி.. எங்களுக்கு வைச்ச பட்டப் பெயர்.. பாடசாலை அறிந்தது. அதை இங்கின எழுதினால்.. மிக இலகுவாக நாங்க யாரென்று யாழ் இந்துவின் எங்கள் கால ஆக்கள் கண்டுபிடிச்சிடுவினம். ஆதலால்.. ஆசை தோசை அப்பளம் வடை...)

 

சண் தயாளன்: டேய் டேய் கெதியா போய் போளப் போடடா.... (ஒவர் முடிஞ்சால் தானே.. போடலாம்.. அவரின் பேச்சில் மட்டுமல்ல.. செயலிலும் அவசரம்.)

 

கெமிஸ்ரி மிஸ் (பெயர் மறந்து போச்சு..): சூப்பர் பிகரு என்பதற்காகவே அடிக்கடி டவுட் கேட்பாங்களாம் பசங்க... மிஸ்ஸும்.. தாராளமா.. சொல்லிக் கொடுப்பாங்களாம்.. அதால அவாக்குப் பெயர்.. தாராள சுந்தரி.

 

சந்திரிக்கா.. சோப்.. மிஸ்: அந்த மிஸ்ஸுக்கு பெயர் சந்திரிக்கா.. அவாவை சந்திரிக்கா சோப் மிஸ் என்று தான் சொல்லுவாங்க... ஏன்னா.. கொஞ்சப் பேர்.. மிஸ்ஸுக்கு பந்தம் பிடிச்சே.. (அதை சோப்பு போடுறது என்று சொல்லுவாங்க)... மார்க்ஸ் வாங்கிடுவாங்கலாம்.

 

சரி இவ்வளவும்.. போதும்.. பள்ளிக்கூடத்து.. வாத்திமாரை கிட்டலடிக்கிறியா.. நாயேன்னு அம்மா.. தப்பித்தவறி.. இதை பார்த்திட்ட.. பேசுவால்ல... அப்ப நாங்க வாறம். :lol::):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்புக்காக யாழ் இந்துவில் சேர்ந்தேன் .(தலைமை ஆசிரியர் திரு முத்துக் குமாரசாமி அவர்கள்).... (இப்ப நினைத்துப் பார்த்தால்) நான் எடுத்த மார்க்குக்கு என்னை இவர்கள் பாடசாலை வாசலுக்கே விட்டிருக்கக் கூடாது. ஆறாம் வகுப்பு. அப்போது  முன்னுக்கு புது ஆபீஸ் கிடையாது. அவ்விடத்தில் ஒரு பெரிய பிலாமரமும் , கீழே நீளமான கிடுகால் வேந்த ஒரு 10 /12 வகுப்புகள் வரையான கொட்டில்.

 

ஆறாம் வகுப்பு.

 

பிறின்சிப்பல் :  திரு சபாரட்னம் அவர்கள்.

வைஸ் பிறின்சிப்பல்லும் : இன்னொரு சபாரட்னம் அவர்கள். ரொம்ப ஸ்ரிக்ட். கீழே குப்பைகள் இருந்தால் அவரே எடுத்து தொட்டியில் போடுவார். அதனால் அவர் வரும்போது கண்ணில் தெரியும் கடதாசிகள் எல்லாத்தையும் நாங்களே பொறுக்கி விடுவம். பிறகு இவர்தான் கன காலம்  அதிபராக இருந்தார்.

 

அப்போது அங்கு இரண்டு ஆசிரியைகள் இருந்தனர்.

 

ஒருவர்  நளாயினி டீச்சர்..., மற்றவர் பெயர் ஞாபகம் வரவில்லை.  ரொம்ப நல்லவர்கள். ஆனால் அடிமட்டத்தால் புறங்கை மொழியில் அடிப்பது , கிள்ளுவது போன்ற தண்டனைகளுக்கும் குறைவில்லை.

 

கனகரட்னம் மாஸ்டர்: அற்புதமாக ஆங்கிலம் கற்பிப்பார். அப்பவே டேப் ரெக்கோடரில் ( பிலிம்ரோல் போல வீ பொசிசனில் ஓடும்) ஆங்கிலப் பாடங்களைப் பதிவு பண்ணி அதை வகுப்பில் போட்டு பாடம் எடுப்பார். பெரும்பாலும் ஹொஸ்டல் டைனிங் ஹாலில் தான் பாடம் நடக்கும். சிறிய ஆங்கிலக் கதைகளை வகுப்பிலேயே நாடகமாய் நடிக்க வேண்டும். வசனங்கள் புத்தகத்தைப் பார்த்து. அவரது ஒருகால் சிறிது ஊனம் .விசேசமாய் செய்த பாதனி அணிந்திருப்பார். prefact காரில் வருவார்.

 

கேவியம் மாஸ்டர்: இவரும் ஆங்கிலம்தான் அதிகம் எடுப்பார். இவரது வகுப்பில் கண்டிப்பாக எல்லோரும் தொப்பியும் அணிந்து டை யும் கட்ட வேண்டுமமில்லையென்றால் வகுப்பில் அனுமதி கிடையாது. அவரும் அந்தமாதிரி கெட்டப்பில்தான் வருவார். இதனால் கொஞ்சத் தொப்பியும், டை களும் அவர் போகும் வகுப்புகளுக்கெல்லாம் அவருக்கு முதலே போய் அட்டென்சன் ஆகிவிடும். அது தெரிந்தாலும் அதிகம் கண்டுகொள்ள மாட்டார். எப்படியாவது இந்தப் பொடியள் ஆங்கில நாகரீகத்தையும் கொஞ்சமாவது புரிந்து கொள்ளட்டும் என்ற நல்லெண்ணம்தான். கம்பிச் சில்லுகள் உள்ள ஒரு"  Z" மொடல் காரில்தான் வருவார்.

 

மகாதேவா மாஸ்டர். புவியியல் பாடம் எடுப்பவர். (பெட்டை மகாதேவா என்று சொல்லுவினம்.மன்னிக்கவும்.) ஒரு பீரியட் தொடங்கும் போதே உள்நுழைவார். நுழையும்போதே கையில் ஒரு பெரிய ஆங்கிலப் புத்தகத்துடன் அன்றைய பாடத்துக்கான "நோட்ஸை " சொல்லியபடியே ஆஜராவார். அவ்வளவு  வேகமாய் தமிழில் மொழிபெயர்த்து அடுத்த பீரியட் ஆசிரியர் வரும்வரை சொல்வதும் நிக்காது , அவரும் உக்காரமாட்டார். வாரத்தின் கடைசி பீரியட்டில் உங்களின் சந்தேகங்களை கேட்க முடியும்.

 

மகாதேவா மாஸ்டர். விளையாட்டுப் போட்டிகளில் இவர்தான் மைக் பிடித்து கொமன்ட்ரி பண்ணிக் கொண்டிருப்பார்.தரும் தன்டனை வித்தியாசமானது. வகுப்பில் குழப்படி விடும் பொடியலுக்கு பொக்கட்டில் கைவிட்டு ஒரே நுள்ளுத்தான். வலி உயிர் போய் வரும்.

 

ஜோஸேப் மாஸ்டர். இவர் மரவேலை ஆசிரியர். இவர் தரும் மதிப்பெண்களால் பலர் பார்டர் தாண்டி சித்தியடைந்துள்ளனர்.

 

பரமேஸ்வரா மாஸ்டர்:  வெரி ஸ்மார்ட். இராணுவத்தில் இருந்து வந்தவர் என நினைக்கின்றேன். மிக மிக சுத்தம் & ஒழுங்கு. இவர் வகுப்பில் கொம்பஸ் பென்சில், பேனை றேசர் கட்டர் எல்லாம் ஒழுங்காகவும் சுத்தமாயும் இருக்க வேண்டும். அப்படியே மேசயிலும் ஒவ்வொரு பொருளும் அததற்குரிய இடத்தில் இருக்க வேண்டும். தவறினால் பிரம்பால் அடிதான். இவர்தான் யாழ் இந்துவின் கடேற்சுகளுக்கு ஆசிரியராய் இருந்தவர். "டியத்தலாவை" க்கெல்லாம். ஸ்கவுட்ஸ் டூர் ஆகக் கூட்டிச் செல்வார்.

 

சோமர்:  வகுப்புக்குள் வரும்முன் நல்ல சென்ட் வாசனை வரும். அடிக்கடி ஸ்டைலாக மூக்கை உறிஞ்சிக் கொள்வார். குடியியல் எடுப்பார்.

 

மகேந்திரன் : (எலியர்) கணக்குபாடங்கள் எடுப்பார். ஜாலியாய் கிளாசும் நடத்துவார் அடியும் தருவார்.  பொதுவாக இவர்கள் இருவரும் மற்ற ஆசிரியர்கள் வராத வகுப்புகள் எல்லாம் எடுப்பார்கள்.

 

பொன்னம்பலம் மாஸ்டர்: தமிழும் தமிழ் இலக்கியமும் எடுப்பவர். கம்பராமாயணம் எடுத்தால் அற்புதமாய் இருக்கும்.

 

சிவராம லிங்கம் மாஸ்டர் :  கால் சுகவீனம். ஒருத்தர் அவரைச் சயிக்கிளில் கூட்டி வருவார் . தமிழ் , சரித்திரம் என்று எடுப்பார்.

 

நாகேஸ்: பெயர் ஞாபகம் ?... தோற்றம் நாகேஸ்போல. தமிழ், இலக்கியம் கணிதம் எடுப்பார்.

 

பி.எஸ். குமாரசாமி மாஸ்டர். வந்தாலே நடுங்குவம். கொஞ்சகாலம் ஹொஸ்டலையும் கவனித்தார்...!

 

இவர்களில் பலர் அந்த அயலைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டருக்குள் வசித்தவர்கள்.

 

இன்னும் பலர் விடுபட்டிருக்கினம் பார்ப்பம்....!!! :rolleyes::D :D :icon_idea:

 

 

 

 

 

 

 

 

Edited by suvy

  • தொடங்கியவர்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தமிழ் வித்தகர்
தமிழால் தன்மாணாக்கர் வாழ உரம் இட்டோன்
அன்பால் அரவணைத்து அவையில் தன்னேடு
சரியாசனமிருத்திய சான்றோன் சிவராமலிங்கம்
மறுக்க மறக்க முடியாத மகா உபாத்தியாயர்......
 
10678637_321572681362565_194825768209873
 
 
 
10672330_320121021507731_241269640658761
 
Mr.Sothilingam sir
 
முகநூல்
  • கருத்துக்கள உறவுகள்

-----

சிவஞான சுந்தரம் மாஸ்டர் என நினக்கின்றேன்:  கால் சுகவீனம். ஒருத்தர் அவரைச் சயிக்கிளில் கூட்டி வருவார் . தமிழ் , சரித்திரம் என்று எடுப்பார்.

------

 

சிவராமலிங்கம், மாஸ்டர் சுவி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் முதல் நாள்

நான் யாழ் இந்துவில் சேர்ந்த போது P .S குமாரசாமி அவர்கள் அதிபராக இருந்தார். இந்துவில் இடம் கிடைப்பது அரிது.பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் இடம் கிடைப்பதற்குத் தவம் இருப்பார்கள்.
இந்துவின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு அதி முக்கியம் கிடைத்தது. மற்றவர்கள் சிபாரிசின் அடிப்படையிலும் புலமைப் பரிசில் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவார்கள்.

எனது அண்ணன் ஏற்கனவே இந்துவில் படித்துக் கொண்டிருந்தவர்.
போக்குவரத்துப் பிரச்சனையால் ஹொஸ்டலில் தங்கிப் படித்தவர்.
சந்தியாப்பிள்ளை ஆசிரியர் பொறுப்பாக இருந்த காலம் அது.
சந்தியாப்பிள்ளை ஆசிரியரும் எனது தாயாரும் கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் ஒரே நேரத்தில் தங்கள் படிப்பை மேற்கொண்ட நேரத்தில் பழக்கமானவர்கள். இருந்தும் ஹொஸ்டல் அவருக்குப் பிடிக்காத படியால் இரண்டு வருடங்களில் பாடசாலை மாறிவிட்டார்.

இந்த நேரத்தில் எனக்கு அனுமதி கிடைத்தது.
என்னைப் பாடசாலையில் சேர்ப்பதற்கு என்னுடன் அன்று எனது அண்ணனே வந்திருந்தார்.
அதிபர் முதலில் கேட்ட கேள்வி "நீரும் அண்ணனை மாதிரித்தானோ" :o
அந்த நேரம் எனக்கு விளங்கவில்லை.அவர் கேட்டது நானும் விரைவில் பாடசாலையை விட்டு போய்விடுவேனா என்ற அர்த்தத்தில். :D
பின்னர் கிளாக்கர் அறையில் பதிவுகளை முடித்துவிட்டு வகுப்பிற்குப் போகும் நேரம் அண்ணன் சொன்னார் இன்றைக்கு  வகுப்பு வேண்டாம் புத்தகம் கொப்பி ஒன்றுமே உன்னிடம் இல்லை வா வீட்டை போவோம்.
சரி என்று வீட்டை போக பஸ் தரிப்பிடம்  நோக்கி நடந்தோம்.

அப்போது மனோகராத் தியேட்டரில் ஊருக்கு உழைப்பவன் படம் போய்க்கொண்டிருந்தது. சட்டென்று அண்ணை சொன்னார் பத்தரைக்கு முதல் சோ தொடங்கும்  வா படத்துக்குப் போவம். எப்படிப் போவது கையில் பஸிற்கு மட்டுமே பணம் இருந்தது. அவர் சொன்னார் பஸ்ஸிற்குப்  பிறகு பார்ப்பம் இப்ப படம். :D:lol:
சரியென்று இருவரும் படத்தைப் பார்த்தோம். படம் முடியத்தான் வீட்டை போகப் பணம் இல்லையென்ற பயம் பிடித்தது. :(

ஏதாவது லொறி அல்லது ட்ராக்டர் வரும் என்று  ஓட்டுமடம் சந்திக்கு நடைபோட்டம். எங்கள் நல்ல காலம் ஒரு லொறியை நிப்பாட்டி ஏறியாச்சுது. எங்கள் கேட்ட காலம் லாரிக்காரன் திடீரெண்டு சண்டிலிப்பாய்ச் சந்தியிலை வைத்து பாதையை மாத்திப் போட்டான். :D
பிறகென்ன ஒருமாதிரி எட்டுக்  கட்டை பொடி நடைதான். வீட்டை வர பள்ளிக்குட பஸ்ஸும் வந்து சேர்ந்த்தது.

யாழ் இந்துவில் முதல் நாள்

அப்போது மனோகராத் தியேட்டரில் ஊருக்கு உழைப்பவன் படம் போய்க்கொண்டிருந்தது. சட்டென்று அண்ணை சொன்னார் பத்தரைக்கு முதல் சோ தொடங்கும்  வா படத்துக்குப் போவம். எப்படிப் போவது கையில் பஸிற்கு மட்டுமே பணம் இருந்தது. அவர் சொன்னார் பஸ்ஸிற்குப்  பிறகு பார்ப்பம் இப்ப படம். :D:lol:

சரியென்று இருவரும் படத்தைப் பார்த்தோம். படம் முடியத்தான் வீட்டை போகப் பணம் இல்லையென்ற பயம் பிடித்தது. :(

 

 

பாடசாலையில் சேர்ந்த அன்றே படம் பார்த்த ஆள் நீங்களாக தான் இருப்பீர்கள் வாத்தியார் :o:D  அதுவும் யாழ் இந்துவில் :lol:

 

என்றாலும் அதுக்கு ஒரு தில் வேணும்.

 

நான் இவ்வளவு காலமும் யாழ் இந்து நல்ல ஸ்கூல் எண்டு நினைச்சேனுங்க நீங்க எல்லா அங்க படிச்சிருக்கிறீங்க அப்ப .........????


:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு காலமும் யாழ் இந்து நல்ல ஸ்கூல் எண்டு நினைச்சேனுங்க நீங்க எல்லா அங்க படிச்சிருக்கிறீங்க அப்ப .........????

:icon_mrgreen:

 

நீங்க சென்றலா?

நீங்க சென்றலா?

 

உண்மையான  யாழ் இந்து கேள்வி :o:D

ஏன் இப்படி என்பதுக்கு நேரம் கிடைக்கும்போது நான் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துப் பெடியள் காவாலி சேட்டை பெட்டையளோட விடுறது பிறகு சொல்லுறது மச்சான் டே சென்ட்ரலின்ட மானத்தை வாங்காம வாங்கோடா எண்டு! அதிலயும் தெரிஞ்ச ஒண்டு ரெண்டு பெட்டைகள் இருந்தால் அக்கா தங்கச்சிமாரிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்! சிலர் எங்கட காவாலித்தனத்தை ஏற்றுக் கொள்ளுவார்கள். எல்லாம் சென்ட்ரலின்ட புண்ணியம் தான்! :D

ஹஹா வாலி நான் இரண்டிலும் படித்தனான் :D

  • கருத்துக்கள உறவுகள்

 
10672330_320121021507731_241269640658761
 
Mr.Sothilingam sir
 
முகநூல்

 

 

சோதியர் அப்படியே இருக்கிறார். மாறவே இல்லை. மோட்டார் சைக்கிள் தான் மாறி இருக்குது. :)

 

சேர் உங்களை ஊரில சந்திக்கிறப்போ.. நீங்க தந்த பட்டப் பெயரை நிஜமாக்கிட்டு தான் வந்து சந்திக்கிறது என்றிருக்கிறம். காலம் அதுக்கு கைகொடுக்கும் என்று நம்புறம். :):icon_idea:

 

நன்றி பகிர்விற்கு ஆதவன்.

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பாத்தால் இஞ்சை "யாழ்கள இந்துக்கல்லூரி ஒன்றியம்" வந்தாலும் வரும் போலை கிடக்கு..... :D

 

எதுக்கும் நாமள் எட்டத்தை நிப்பம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதடுகளை E சொல்வது போல் அடிக்கடி விரித்து உடனடியாக U சொல்வது போல் பழக்க தோசமாக செய்த வாத்தியாருக்கு EU என்று பட்டம். அவருக்கு சோமசுந்தரம் என்று பெயர் என நினைவு.

நமசி (நமசிவாயம்) என்ற இரசாயணவியல் மாஸ்டர் இருந்தார்.

இடையிடையே படிப்பிக்கும் மூட் இராது. சத்தம் போடாமல் மெதுவா கதையுங்க, என்று சொல்லி, கைகளை பின்னால் கட்டியவாறு அங்கும் இங்கும் நடந்து திரிவார்.

யாராவது சத்தமாக கதைத்தால், அவரை மெதுவாக தோழில் தட்டி, 'சத்தமாக கதைத்தால், படிப்பிப்பேன்' என்பார். :D

மரியர் என்ற மரியதாஸ் மாஸ்டருக்கு, ஒருநாள் வீட்டில் ஏதோ பிரச்சனை போல. கொதியாய் இருந்தார்.

பாடசாலை வசதிக்கட்டனம் கட்டாத எல்லாம் வகுப்புக்கு வெளிய போ, பரீட்சைக்கான hall ticket தர ஏலாது என்று சொல்ல, 6, 7 பேர் வெளிய நின்றோம்.

அந்தப் பக்கத்தால, டாப்பு எடுத்துக் கொண்டு போன பீயோன் என்னடா விசயம் என்டு விசாரித்துக் கொண்டு போக, அப்பபத்தான் ரோட்டைக் கடந்து குமாரசாமி மண்டபப் பகுதியினுள் வந்த அதிபர் சபாலிங்கம், பெடியள் ஏன் வெளிய நிக்கிறாங்கள் என்று பீயோனிடம் விசாரித்து அங்கிருந்தே எம்மை வருமாரு கையை காட்டினார்.

நாமும் பயந்தவாறே அவரைத் தொடர்ந்து சென்ற போது, எதுவுமே கேளாது, ஒரு துண்டில், admit them into the class and give them the hall tickets என்று எழுதி கையொப்பம் இட்டு தந்து விட்டார்.

அதைக் கொண்டு வெற்றிவீரல்களாக வகுப்பினுள் நுழைய, ஆராடா உள்ள வரச் சொன்னது என்றவரிடம், துண்டு தரப்பட, மானப்பிரச்சனையாகி விட்டது அவருக்கு.

இது பிரின்சிப்பலின் கையொப்பம் இல்லை, வெளிய போய் நில்லுங்கடா, நாயளே என்று போட்டாரே ஒரு போடு.

நாம தான் நாதாரிகள் ஆச்சே, விடுவமா?. மெதுவாக நகர்ந்து அதிபரிடம் போய், இது உங்கட கையொப்பம் இல்லையாம் சேர்.... எண்ட, கோபத்தின் உச்சிக்குப் போன அதிபர், பீயோனைக் கூப்பிட்டு, 'என்ற கையொப்பம் தெரியாதவர்கள் இங்க படிப்பிக்க தேவையில்லை' எண்டு சொல்லி வா எண்டு சொல்லிவிட தலை தெறிக்க ஓடி வந்தார் மரியர்.

இல்ல சார், படிப்பிச்சுக் கொண்டிருந்த விசயம் முடியும் வரை கொஞ்ச நேரம் வெளிய நில்லுங்க எண்டதை பிழையாய் விளங்கி......

வாங்க தம்பிமார்.... எண்டு கூட்டிக் கொண்டு போய், வடிவேலு style ல்ல, அழாக்குறையாக, ஏண்டா, ஏன்..... என்றார். :D

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
Jaffna Hindu AL 89
இந்துவின் மைந்தராய் வாழ்ந்திடும் பெருமை உலகினில் கொடையடா.. உந்தன் தோளினில் சாய்ந்திட மீண்டும் ஒரு வரம் கிடைக்குமா.. உன்னால் தானே நாம் சாதனை செய்கிறோம்.. விண்ணில் கூட நம் கால் தடம் பதிக்கிறோம்....
 
10407371_345570962296070_497556375399233
 
முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.